மரித்த ஆத்துமா ஆவிக்குரிய உயிர் பெறுவது எப்படி? அதற்கு எவ்விதத்தில் மட்டுமே உணர்வூட்டப்படுகிறது? நான் இவ்வளவு எழுதிய பிறகு, இதை உங்களுக்குச் சொல்லாவிட்டால் அது மிகவும் கொடுமையான செயலாகும். பயங்கரமான வனாந்தரத்துக்குள் உங்களை அழைத்துச் சென்று, தண்ணீரும் உணவும் கொடுக்காமல் அங்கேயே விட்டுவிட்டு வருவதற்கு ஒப்பாகும். செங்கடல் வரைக்கும் வழிநடத்திச் சென்று, பிறகு நீங்களே கடந்து செல்லுங்கள் எனச் சொல்லுவதற்கு ஒப்பாகும். பார்வோனைப் போலச் செங்கல் செய்யுங்கள் எனக் கட்டளையிட்டுவிட்டு, அதற்குத் தேவையான வைக்கோலைக் கொடுக்காமல் இருப்பதற்கு ஒப்பாகும். உங்களுடைய கைகளையும் கால்களையும் கட்டிப் போட்டுவிட்டு, "பந்தயப் பொருளைப் பெறும்படிக்கு ஓடுங்கள்" என்று கூறி, நல்ல போராட்டத்தை நீங்கள் போராட வேண்டுமென விரும்புவதற்கு ஒப்பாகும். நான் அந்த மாதிரி செய்ய மாட்டேன். நீங்கள் ஓடிச் சென்று அடைய வேண்டிய வாசலை நான் உங்களுக்குச் சுட்டிக் காண்பிக்கும் வரை உங்களை விடமாட்டேன். மரித்த ஆத்துமாக்களுக்காக முன்னேற்பாடாகச் செய்து வைக்கப்பட்டுள்ள அனைத்தையும் தேவனுடைய உதவியால் உங்கள் முன் வைக்கப் போகிறேன். இன்னும் சற்று நேரம் நான் கூறுவதைக் கவனமாகக் கேளுங்கள்; வேத வாக்கியங்களில் எழுதி வைக்கப்பட்டுள்ளவைகளை உங்களுக்கு எடுத்துக் காண்பிப்பேன்.
ஒன்று மாத்திரம் நிச்சயம்—இந்த மகத்தான மாற்றத்தை நமக்கு நாமே ஏற்படுத்திக்கொள்ள முடியாது; அது நம் கையில் இல்லை. அதைச் செய்வதற்கான சக்தியோ அதிகாரமோ நமக்குக் கிடையாது. பாவங்களை நம்மால் மாற்றிக்கொள்ள முடியலாம், ஆனால் நமது இருதயத்தை நம்மால் மாற்ற முடியாது. ஒருவேளை ஒரு புதிய வழியை நாம் கண்டுபிடிக்கலாம், ஆனால் புதிய சுபாவத்தை உருவாக்க முடியாது. நாம் கணிசமான சீர்திருத்தங்களையும் மாற்றங்களையும் நம் வாழ்வில் கொண்டுவரலாம்; வெளிப்படையாகத் தெரிகின்ற அநேக கெட்ட பழக்கங்களைத் தள்ளிப் போடலாம்; அநேக நல்ல கடமைகளைச் செய்யத் தொடங்கலாம். இருந்தாலும் நமக்குள்ளாக ஒரு புதிய நோக்கத்தை நம்மால் உருவாக்க முடியாது. ஒன்றுமில்லாமையிலிருந்து நம்மால் எதையும் உருவாக்க முடியாது. எத்தியோப்பியன் தன் தோலையும், சிவிங்கி தன் புள்ளிகளையும் மாற்ற முடியாது (எரேமியா 13:23); அதுபோலவே மரித்த நிலையிலிருக்கும் நமது ஆத்துமாவை உயிர்ப்பிக்க நம்மால் முடியாது.
"நல்ல கடமை ஒன்றைக்கூட மனித சுபாவத்தினால் செய்ய முடியாது. எந்த ஒரு நற்காரியத்தினால் நீங்கள் மோட்சம் செல்வீர்களென்று மனிதனிடம் கேட்டால் அவனால் ஒன்றைக்கூடச் சொல்ல முடியாது. லாசருவைக் கல்லறையிலிருந்து உயிர்ப்பித்தது போல, தேவன்தாமே அவனைப் பாவக்குழியிலிருந்து எழுப்பும் வரைக்கும், அவனால் தேவனுக்குப் பிரியமான எதையும் செய்ய முடியாது. அவன் ஒருவேளை ஒழுக்கமுள்ள செயல்களைச் செய்கிறவனாக இருக்கலாம்; ஆனால் மரித்த நிலையிலிருந்து உயிர்ப்பிக்கப்பட்டு, அறிவொளி பெற்ற மனிதன் நடப்பதைப் போல நடப்பது அவனுடைய சக்திக்கு அப்பாற்பட்டது." — அஷ்ஷரின் பிரசங்கங்களிலிருந்து.
"சாத்தானைச் சாத்தானால் விரட்ட முடியாதது போலவே, இயற்கை சுபாவத்தால் இயற்கை சுபாவத்தை அழித்துப் போட முடியாது." — தாமஸ் வாட்சன் (Thomas Watson), 1653.
இன்னொரு விஷயமும் அதே போலத் தெளிவாகத் தெரிகிறது. வேறு எந்த மனிதனும் இதை நமக்காகச் செய்ய முடியாது. தேவ ஊழியர்கள் நமக்குப் பிரசங்கிக்கலாம், நம்மோடு சேர்ந்து ஜெபிக்கலாம், ஞானஸ்நானம் செய்விக்கலாம், கர்த்தருடைய பந்தியில் பங்கெடுக்க அனுமதிக்கலாம், அப்பமும் திராட்சை இரசமும் நமக்குக் கொடுக்கலாம்; ஆனால் ஆவிக்குரிய ஜீவனை அவர்களால் நமக்கு அளிக்க முடியாது. ஒழுங்கீனமானவைகளை அவர்கள் ஒருவேளை ஒழுங்காக்கலாம்; வெளிப்படையாகத் தெரிகின்ற பாவங்களைக் கண்டித்துத் திருத்தலாம்; ஆனால் அதற்குமேல் ஆழமாக அவர்களால் செல்ல முடியாது. நமது இருதயத்தின் ஆழத்தில் மறைந்திருக்கிறவைகளை அவர்களால் காண முடியாது. பவுல் நட்டிருக்கலாம், அப்பொல்லோ நீர் பாய்ச்சியிருக்கலாம், ஆனால் விளையச் செய்கிறவர் தேவனல்லவா? (1 கொரிந்தியர் 3:6). யாரால் மரித்த ஆத்துமாவை உயிர்ப்பிக்க முடியும்? தேவனைத் தவிர வேறு யாராலும் அதைச் செய்ய முடியாது. ஆதாமின் நாசியில் ஜீவ சுவாசத்தை ஊதி உயிர்பெறச் செய்த தேவனால் மட்டுமே மரித்துப் போன நிலையிலுள்ள ஒரு பாவியை உயிருள்ள கிறிஸ்தவனாக்க முடியும். சிருஷ்டிப்பின் நாளிலே ஒன்றுமில்லாமையிலிருந்து இவ்வுலகத்தை வடிவமைத்தவரால் மாத்திரமே ஒரு மனிதனைப் புது சிருஷ்டியாக்க முடியும். "வெளிச்சம் உண்டாகக்கடவது" என்றார், வெளிச்சம் உண்டாயிற்று. அவ்விதமாக வெளிச்சத்தை உண்டாக்கியவரால் மாத்திரமே மனிதனுடைய இருதயத்தில் பிரகாசமுள்ள ஆவிக்குரிய வெளிச்சத்தை உண்டாக்க முடியும். மண்ணிலிருந்து மனிதனை உருவாக்கி, அவனுடைய சரீரத்திற்கு உயிர் கொடுத்தவரால் மாத்திரமே அவனுடைய ஆத்துமாவுக்கும் உயிர் கொடுக்க முடியும். பரிசுத்த ஆவியானவரின் மூலமாக இந்த விசேஷித்த பணியை நிறைவேற்றுகிறவர் அவரே; அதைச் செய்யும் வல்லமை உள்ளவரும் அவரே.
"ஒன்றுமில்லாமையிலிருந்து எதையாவது சிருஷ்டிப்பது என்பது எவ்வளவு பலமுள்ளவர்களாலும் முடியாத காரியம். மனிதர்களாலும் தேவதூதர்களாலும் ஒரு புல்லைக்கூட உருவாக்க முடியாது. இது தனது ஆளுகையின் தனித்துவமான சிறப்புரிமை என தேவன் சவால் விடுகிறார் (ஏசாயா 40:26). உலக மனிதனை மாற்றுவது என்பது மாபெரும் உலகத்தைச் சிருஷ்டிப்பதை விடவும் உயர்ந்தது என்று அகஸ்டின் நன்றாய்ச் சொல்லியிருக்கிறார்." — ஜார்ஜ் ஸ்வின்னோக் (George Swinnock), 1660.
நமது ஆவிக்குரிய வாழ்க்கைக்கும் நித்திய வாழ்க்கைக்கும் தேவையானவை எல்லாம் கிறிஸ்துவின் மகிமையான சுவிசேஷத்தில் அடங்கியிருக்கின்றன. நமது ஆண்டவராகிய இயேசு ஒரு முழுமையான இரட்சகர். அவரைத் தலையாகக் கொண்டுள்ள சரீரத்தில் செத்த அங்கம் எதுவுமில்லை. அவருடைய மக்களின் பாவம் மன்னிக்கப்பட்டு, அவர்கள் நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறார்கள். அது மாத்திரமல்லாமல், அவர்கள் உயிர்ப்பிக்கப்பட்டு அவரோடு இணைக்கப்பட்டிருக்கிறார்கள்; அவருடைய உயிர்த்தெழுதலில் பங்குள்ளவர்களாக ஆக்கப்பட்டிருக்கிறார்கள். ஆவியானவர் பாவிகளை அவரோடு இணைக்கிறார்; அந்த இணைப்பின் காரணமாக அவர்களை மரித்த நிலையிலிருந்து உயிரோடே எழுப்புகிறார். அவரை விசுவாசிக்கும் பாவிகள் அவருக்குள் வாழ்கிறார்கள். கிறிஸ்துவுக்கும் அவர்களுக்கும் இடையேயுள்ள ஐக்கியமே அவர்களுடைய உயிர்நாடியாக இருக்கிறது. அதைத் தொடங்கி வைத்து, செயல்பட வைக்கிற பணியைப் பரிசுத்த ஆவியானவர் நிறைவேற்றுகிறார். நமது ஆவிக்குரிய வாழ்க்கையின் ஜீவ ஊற்றாக நியமிக்கப்பட்டிருப்பவர் கிறிஸ்து; அதை நமது ஆத்துமாவுக்கு விளங்கச் செய்வதற்காக நியமிக்கப்பட்டிருப்பவர் பரிசுத்த ஆவியானவர்.
"பரிசுத்த ஆவியானவர் நம்மோடு தொடர்புகொண்டு, ஜீவ ஊற்றாகிய கிறிஸ்துவோடு நம்மை இணைக்கும்போது நாம் உயிர் பெறுகிறோம். அந்த நேரத்திலிருந்துதான் நாம் உயிர்பெறுவதாக எண்ண வேண்டும்." — ஜான் பிளேவல் (John Flavel).
"கிறிஸ்துவே எல்லா ஜீவனுக்கும் ஆதாரமாயிருக்கிறார்." — ரிச்சர்ட் சிப்ஸ் (Richard Sibbes), 1635.
உங்களுக்கும் ஜீவன் வேண்டுமானால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிடம் வாருங்கள்; அவர் உங்களைப் புறம்பே தள்ள மாட்டார். அவருக்கு விரோதமாகக் கலகம் பண்ணினவர்களுக்கும்கூட அவர் வரங்களை அருளுகிறவர். இறந்த மனிதனின் பிரேதம் எலிசாவின் எலும்புகளின் மீது பட்டபோது, அந்த மனுஷன் உயிரடைந்து தன் கால்களை ஊன்றி எழுந்திருந்தான் (2 இராஜாக்கள் 13:21). அதுபோல நீங்களும் உங்களுடைய விசுவாசமாகிய கரங்களைக் கொண்டு கர்த்தராகிய இயேசுவைத் தொட்ட உடனே தேவனுக்குள்ளாக உயிர் பெறுவீர்கள்; உங்களுடைய பாவங்கள் மன்னிக்கப்படும். இயேசுவிடம் வாருங்கள்; அப்போது உங்கள் ஆத்துமா பிழைக்கும்.
கடந்த காலத்தில் ஒருவனது வாழ்க்கை எவ்வளவு மோசமாயிருந்தாலும், அவனும்கூட ஒரு தீவிரமான கிறிஸ்தவனாக மாறக்கூடும் என்கிற நம்பிக்கையை நான் ஒருபோதும் இழக்க மாட்டேன். மரித்த நிலையிலிருந்து உயிர் பெறுவது என்பது எவ்வளவு பெரிய மாற்றம் என்பதை நான் அறிவேன். நம்மில் சிலருக்கும் மோட்சத்துக்கும் இடையில் மலையளவு வித்தியாசம் இருப்பது எனக்குத் தெரியும். மனித சுபாவத்தின்படி அவர்கள் இருதயமானது கடினப்பட்டதாகவும், தவறான அபிப்பிராயங்கள் நிறைந்ததாயும், துணிகரமான பாவங்களை உடையதாகவும் இருப்பதை நான் அறிவேன். ஆனால் ஒழுங்கின்மையும் வெறுமையுமானதிலிருந்துதான் இந்த அழகான, ஒழுங்கான உலகத்தை தேவன் உருவாக்கினார் என்பதையும் இச்சந்தர்ப்பத்தில் நான் நினைவுகூருகிறேன். கர்த்தராகிய இயேசுவின் சத்தம், நான்கு நாட்களாக மரித்த நிலையிலிருந்த லாசருவைச் சென்று அடைந்ததையும், அவனைக் கல்லறையிலிருந்து உயிரோடே எழுப்பி வெளியே கொண்டுவந்ததையும் நினைக்கிறேன். உலகத்தின் பல்வேறு தேசங்களிலும் தேவ ஆவியானவர் ஏற்படுத்தின அற்புதமான வெற்றிகளை நினைக்கிறேன். இவைகளெல்லாம் என் மனதில் இருப்பதால் நான் ஒருபோதும் நம்பிக்கை இழப்பதில்லை. ஆம்! நம்மோடு இருப்பவர்களில் சிலர் இப்போது பாவத்தினால் மரித்தவர்களாகக் காணப்பட்டாலும், வருங்காலத்தில் ஒருவேளை புது சிருஷ்டியாக உயிர்ப்பிக்கப்பட்டு, தேவனுக்கு முன்பாக ஒரு புதிய வாழ்க்கையை வாழத் தொடங்கலாம் என்கிற நம்பிக்கை இருக்கிறது.
ஏன் அப்படி நடக்காது? பரிசுத்த ஆவியானவர் இரக்கமும் அன்பும் நிறைந்தவர். எந்த மனிதனையும் அற்பமானவன் என்று அவர் புறக்கணித்துவிட மாட்டார். அவர் யாருடைய பாவங்களின் நிமித்தமாகவும் அவனை விட்டு விலகிச் சென்றுவிட மாட்டார். அவர் கொரிந்து சபையாரிடம் வந்து அவர்களை உயிர்ப்பிக்கும் அளவிற்கு அவர்களிடம் எந்த மேன்மையான குணங்களும் இல்லை. அவர்களைக் குறித்து பவுல் தமது நிருபத்தில், "வேசிமார்க்கத்தாரும், விக்கிரக ஆராதனைக்காரரும், விபசாரக்காரரும், சுயபுணர்ச்சிக்காரரும், ஆண்புணர்ச்சிக்காரரும், திருடரும், பொருளாசைக்காரரும், வெறியரும், உதாசினரும், கொள்ளைக்காரரும்... உங்களில் சிலர் இப்படிப்பட்டவர்களாயிருந்தீர்கள்; ஆயினும் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலும், நமது தேவனுடைய ஆவியினாலும் கழுவப்பட்டீர்கள், பரிசுத்தமாக்கப்பட்டீர்கள், நீதிமான்களாக்கப்பட்டீர்கள்" என்று குறிப்பிட்டுள்ளார் (1 கொரிந்தியர் 6:9-11).
பரிசுத்த ஆவியானவர் வந்து கொலோசெய மக்களைச் சந்திக்கும் அளவிற்கு அவர்களிடமும் எந்த நற்குணமும் காணப்படவில்லை. "விபசாரம், அசுத்தம், மோகம், துர்இச்சை, விக்கிரக ஆராதனையான பொருளாசை" இவைகளை அவர்கள் செய்துவந்தார்கள் என்று பவுல் கூறுகிறார். ஆனாலும் பரிசுத்த ஆவியானவர் அவர்களை உயிர்ப்பித்தார். அவர்கள் பழைய மனிதனையும் அவன் செய்கைகளையும் களைந்துபோட்டு, தன்னைச் சிருஷ்டித்தவருடைய சாயலுக்கொப்பாய்ப் பூரண அறிவடையும்படி புதிதாக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொள்ளும்படியாகப் பரிசுத்த ஆவியானவர் செய்திருக்கிறார் (கொலோசெயர் 3:5-10).
ஆவியானவர் மகதலேனா மரியாளிடம் வந்து அவள் ஆத்துமாவை உயிர்ப்பிப்பதற்கான தகுதி எதுவும் அவளிடத்தில் இல்லை. அவள் ஏழு பிசாசுகளால் பிடிக்கப்பட்டிருந்தாள். பாரம்பரியச் செய்தி உண்மையாயிருக்குமானால், அவள் ஒரு காலத்தில் இழிவானவளாகவும், அக்கிரமக்காரியாகவும் இருந்தாள் எனச் சொல்லுகிறார்கள். அவளையும்கூடப் பரிசுத்த ஆவியானவர் புது சிருஷ்டியாக மாற்றியிருக்கிறார். அவளுடைய பாவங்களிலிருந்து அவளை விடுவித்து, கிறிஸ்துவிடம் கொண்டுவந்தார். அவளை இயேசுவின் சிலுவையின் அருகில் கடைசிவரை நின்றவளாகவும், கல்லறைக்கு முதலாவது வந்தவளாகவும் ஆக்கினார்.
ஒரு ஆத்துமா கெட்டுப்போன நிலையில் இருக்கிறது என்பதற்காகப் பரிசுத்த ஆவியானவர் ஒருபோதும் அந்த மனிதனை விட்டு விலகிவிட மாட்டார். இதுவரைக்கும் அவர் அப்படிச் செய்ததில்லை, இனிமேலும் செய்ய மாட்டார். பாவம் நிறைந்த இருதயத்தைச் சுத்தப்படுத்தி, அதைத் தாம் வசிக்கும் ஆலயமாக ஆக்கிக்கொள்வது அவருடைய மகிமை. இனிமேலும்கூட அவர் நம்மிலுள்ள மோசமானவர்களை எடுத்துத் தமக்குரிய கிருபா பாத்திரங்களாக மாற்றலாம்.
ஏன் அப்படி நடக்கக் கூடாது? பரிசுத்த ஆவியானவர் சர்வ வல்லமை உடையவர். அவரால் கல்லான இருதயத்தைச் சதையான இருதயமாக மாற்ற முடியும். மோசமான கெட்ட பழக்கங்களை அவரால் உடைத்து அழிக்க முடியும்; கடினமான விஷயங்களை அவரால் எளிதாகச் செய்ய முடியும். கடினமான எதிர்ப்புகள் அவருக்கு முன்னால் பனியைப் போல உருகிவிடும். அவரால் வெண்கலக் கதவுகளை உடைத்து, தவறான அபிப்பிராயங்களாகிய தாழ்ப்பாள்களை முறித்துத் திறந்துவிட முடியும். எல்லாப் பள்ளங்களையும் நிரப்பி, கோணலானவைகளைச் சரிசெய்துவிட அவரால் முடியும். அடிக்கடி அவர் இவ்வாறு செய்திருக்கிறார்; இனிமேலும் செய்வார்.
"மக்களை உயிர்ப்பித்து, அவர்களைப் புத்தம் புதியவர்களாக மாற்றுகிற ஆற்றலை உடையவர் பரிசுத்த ஆவியானவர். அதனால் அவர்கள் முன்னர் இருந்தது போல இருப்பதில்லை." — ஹோமிலி (Homily).
கிறிஸ்தவத்தை வெகுவாக எதிர்க்கின்ற ஒரு யூதனைத் தெரிந்துகொண்டு, அந்த யூதனை முற்றிலுமாக மாற்றக்கூடிய வல்லமை உடையவர் அவர். உண்மையான விசுவாசிகளை உபத்திரவப்படுத்தின ஒரு யூதன், பரிசேயக் கருத்துக்களில் மிகுந்த பற்று உடைய மனிதன், சுவிசேஷத்திற்கு எதிராகத் தவறான அபிப்பிராயம் கொண்டிருந்த ஒரு மனிதன்—அப்பேர்ப்பட்ட ஒரு மனிதனை, ஒரு காலத்தில் தான் எதிர்த்த விசுவாசத்தையே பிரசங்கிக்கும் வல்லமையான பிரசங்கியாக மாறப்பண்ணுவது பரிசுத்த ஆவியானவரின் வல்லமை. அதை அவர் ஏற்கனவே செய்திருக்கிறார்; அப்படி மாற்றப்பட்ட மனிதன்தான் அப்போஸ்தலனாகிய பவுல்.
பரிசுத்த ஆவியானவரால் ஒரு ரோமன் கத்தோலிக்க மதகுருவை முற்றிலுமாக மாற்ற முடியும். ரோமன் கத்தோலிக்க மூடநம்பிக்கைகளில் வளர்க்கப்பட்டவர், சிறுவயது முதலே தவறான கோட்பாடுகளில் பயிற்றுவிக்கப்பட்டு போப்புக்குக் கீழ்ப்படியக் கற்றுக்கொடுக்கப்பட்டவர், தவறான கொள்கைகளில் ஊறிப்போனவர்—அப்படிப்பட்ட ஒருவரை, "விசுவாசத்தினால் மாத்திரமே நீதிமானாக முடியும்" என்று உலகத்தாரின் முன்பாகத் தெளிவாக அறிக்கையிட வைத்தவர் பரிசுத்த ஆவியானவர். மார்டின் லூத்தர் (Martin Luther) என்கிற மதகுருவைப் பரிசுத்த ஆவியானவர் இவ்வாறாக மாற்றினார்.
கல்வியோ, ஆதரவோ, பணமோ இல்லாத ஒரு ஏழை ஆங்கிலேய மனிதன்—உலோகப் பாத்திரங்களைப் பழுதுபார்க்கும் வேலை செய்பவர், ஒரு காலத்தில் தூஷித்தல் மற்றும் சபித்தல் ஆகியவற்றிற்குப் பெயர்போனவர்—அந்த மனிதனை மாற்றி, அப்போஸ்தலர்களின் காலத்திற்குப் பிறகு அதற்கு ஒப்பான நூல் வேறொன்றும் ஏற்படவில்லை எனும்படியான ஒரு புனிதமான நூலை எழுதும்படியாகச் செய்தவர் பரிசுத்த ஆவியானவர். 'மோட்சப் பிரயாணம்' (The Pilgrim's Progress) என்கிற நூலை எழுதின ஜான் பன்யன் (John Bunyan) என்பவரைத்தான் பரிசுத்த ஆவியானவர் இவ்விதமாக மாற்றியிருந்தார்.
உலகப்பிரகாரமாகவும் பாவத்திலும் மூழ்கியிருந்த, அடிமை வியாபாரம் செய்யும் கப்பலின் சீர்கெட்ட தலைவன் ஒருவனை வெற்றிகரமான சுவிசேஷ ஊழியனாகப் பரிசுத்த ஆவியானவரால் மாற்ற முடியும். அவர் பக்தி நிரம்பிய கடிதங்களை எழுதினார்; அவை பக்தி வாழ்க்கைக்கு உதவும் களஞ்சியங்களாக இருக்கின்றன. அநேக பக்திப் பாடல்களை இயற்றினார்; ஆங்கில மொழி தெரிந்த இடங்களிலெல்லாம் அவை இன்றும் பாடப்படுகின்றன. ஜான் நியூட்டன் (John Newton) என்கிற மனிதனைத்தான் ஆவியானவர் இவ்விதமாக மாற்றியிருந்தார்.
இவ்வாறெல்லாம் பரிசுத்த ஆவியானவர் செய்திருக்கிறார்; இதற்கு மேலும் செய்திருக்கிறார். எல்லாவற்றையும் விவரித்துக் கூற என்னால் முடியாது. ஆவியானவரின் கரம் குறுகினது அல்ல; அவருடைய வல்லமை குறையவில்லை. அவர் கர்த்தராகிய இயேசுவைப் போலவே நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார் (எபிரெயர் 13:8). இன்றும் அவர் அதிசயமானவைகளைச் செய்கிறார்; உலக முடிவு வரைக்கும் செய்வார்.
மீண்டும் சொல்கிறேன்: எந்த மனிதனுடைய ஆத்துமாவும் உயிர்ப்பிக்கப்படுவதைக் குறித்து நான் நம்பிக்கை இழந்துவிட மாட்டேன். அது உயிரடைவது மனிதனைப் பொறுத்ததாயிருக்குமானால் நான் நம்பிக்கை இழப்பேன்; ஏனெனில் சிலர் மிகவும் கடின இருதயமுள்ளவர்களாய்க் காணப்படுகிறார்கள். மனிதர் உயிர்ப்பிக்கப்படுவது தேவ ஊழியர்களைப் பொறுத்ததாயிருந்தாலும் எனக்கு நம்பிக்கை இருக்காது; ஏனெனில் மிகச் சிறந்த ஊழியரும்கூடக் குறைபாடுள்ளவரும் பெலவீனருமாய் இருக்கிறார்கள். ஆனால் பரிசுத்த ஆவியாகிய தேவன் ஆத்துமாக்களை உயிர்ப்பிக்கிறவராக இருக்கிறார் என்பதை நான் நினைக்கும்போது என்னால் நம்பிக்கை இழந்துவிட முடியாது. ஏனென்றால் அவரால் முடியாதது எதுவும் இல்லை என்பதை நான் நிச்சயமாக அறிந்திருக்கிறேன்.
இவ்வுலக வாழ்க்கையில் எனக்கு அறிமுகமானவர்களின் பட்டியலில், கடின மனதுடையவராயிருந்தவர் இளகிய மனமுடையவராக மாறினால் அதைக் குறித்து நான் ஆச்சரியப்பட மாட்டேன்; பெருமை நிறைந்த மனிதன் இயேசுவின் பாதத்தில் ஒரு குழந்தையைப் போல அமர்ந்தாலும் நான் ஆச்சரியம் கொள்ள மாட்டேன். அழிவின் பாதையாகிய விசாலமான வழியில் பயணம் செய்துகொண்டிருந்த அநேகரை, நான் மரித்துப் போன பிறகு, நியாயத்தீர்ப்பின் நாளிலே வலதுபுறமாக நிற்பவர்களின் வரிசையில் நிற்கக் கண்டால் நான் திடுக்கிட்டு, "என்ன? நீங்கள் எப்படி இங்கு வந்தீர்கள்?" என்று எண்ணி ஆச்சரியப்பட மாட்டேன். அவர்களிடம் சென்று, "மரித்தோரை உயிர்ப்பிக்கிறவரால் முடியாத காரியம் எதுவுமில்லை என்று நான் உங்களுடன் வசித்தபோதே சொன்னேன் அல்லவா!" என அவர்களிடம் ஞாபகப்படுத்துவேன்.
கிறிஸ்துவின் சபைக்கு உதவி செய்வதற்கு யாருக்காவது விருப்பம் இருக்கிறதா? அப்படியானால் பரிசுத்த ஆவியானவரின் கிருபை அதிகமாகப் பொழியப்பட வேண்டுமென ஜெபியுங்கள். ஆவியானவரால் மாத்திரமே பிரசங்கங்களுக்கு உயிரோட்டம் ஏற்படுத்த முடியும். அவரால் மாத்திரமே நல்ல புத்திமதிகளை வழங்க முடியும்; வல்லமையாகக் கடிந்துகொள்ளும் சக்தியைக் கொடுக்க முடியும்; பாவியின் இருதயத்தைச் சுற்றிலும் எழுப்பப்பட்டிருக்கும் மதில் சுவர்களை உடைத்தெறிய முடியும். சிறந்த பிரசங்கங்களையும் அருமையான புத்தகங்களையும் விட, பரிசுத்த ஆவியானவரின் பிரசன்னம்தான் இக்காலத்திற்கு மிகவும் அதிகமாகத் தேவை.
உங்களில் யாராவது தேவனை நோக்கி ஈர்க்கப்படுவதாகச் சிறிதளவாவது உணருகிறீர்களா? உங்களுடைய அழியாத ஆத்துமாவைக் குறித்துக் கொஞ்சமாவது அக்கறை கொள்கிறீர்களா? அப்படியானால் ஜீவனுள்ள நீரூற்றாகிய இயேசுவை நோக்கி விரைந்து ஓடிச் செல்லுங்கள்; அப்போது பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்வீர்கள் (யோவான் 7:39). பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக்கொள்வதற்காக உடனடியாக ஜெபிக்கத் தொடங்குங்கள். நம்பிக்கை இழந்துவிடாதீர்கள். "தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்குப் பரிசுத்த ஆவியைக் கொடுப்பதாக" பிதா வாக்குக் கொடுத்திருக்கிறார் (லூக்கா 11:13). அவருடைய பெயரே சத்திய ஆவியானவர் என்றும், ஜீவ ஆவி என்றும் இருக்கிறது. அவர் வந்து உங்களுக்கு ஒரு புதிய இருதயத்தைக் கொடுக்கும் வரைக்கும் விடாமல் அவரிடம் வேண்டுதல் செய்யுங்கள். "என்னையும் ஆசீர்வதியும் கர்த்தாவே! எனக்கு உணர்த்தி, என்னை உயிர்ப்பியும்" என்று அவரிடம் ஊக்கமாகக் கெஞ்சுங்கள்.





