இந்தக் கட்டுரையில் இயேசுகிறிஸ்து தேவனா? அவர் எப்போதாவது தன்னைப் பற்றி “நான் தேவன்” என்று சொல்லிக்கொண்டரா? என்பதை வேத வசனங்களைக் கொண்டு விரிவாக ஆராய்வோம். தொடர்ந்து வாசிக்க...
இந்தக் கட்டுரையில் இயேசுகிறிஸ்து தேவனா? அவர் எப்போதாவது தன்னைப் பற்றி “நான் தேவன்” என்று சொல்லிக்கொண்டரா? என்பதை வேத வசனங்களைக் கொண்டு விரிவாக ஆராய்வோம்.
இந்த கேள்வியை சிலர் என்னிடம் கேட்டுள்ளனர் சகோதரரே! நீங்கள் சொல்வது எல்லாம் சரிதான் ஆனால், வேதத்தில் இயேசு கிறிஸ்துவை “தேவன்” என்று எங்காவது சொல்லப்பட்டுள்ளதா? பிதா தன்னிலும் பெரியவர் என்று இயேசுகிறிஸ்து சொன்னார், அப்படியிருக்க இயேசு கிறிஸ்துவை “தேவன்” என்று நாம் எப்படி நம்புவது?
இந்த காரியங்களைக் குறித்து நான் யோசித்தபோது, இயேசுகிறிஸ்து தேவன் அல்ல, என்ற முடிவுக்கு வரவில்லை, ஆனாலும் வேத வசனத்தின் படி இயேசுகிறிஸ்து தேவன் என்பதை விசுவாசிகளுக்குக் தெரியப் படுத்துவதற்காக வேதத்தை ஆராய்ந்து படித்தேன். என்னுடைய வேத ஆய்வில் நான் கற்றுக்கொண்டதை உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன். எனவே இதை நீங்கள் கவனமாகப் படித்தால், இந்த ஆய்வு உங்கள் ஆத்மீக வாழ்க்கைக்கு ஆசீர்வாதமாய் இருக்கும் என்று நம்புகிறேன்.
கிறிஸ்துவின் தேவத்துவத்திற்கான சாட்சிகள்...
இயேசுகிறிஸ்து தேவன் என்று நாம் நம்புகிறோம். ஆனால், இயேசுகிறிஸ்து தேவன் என்பதை நீங்கள் எப்படி நிரூபிக்க முடியும் என்று யாராவது உங்களிடம் கேள்வி எழுப்பினால் (குறிப்பாக வேதத்தின் அடிப்படையில் நீங்கள் எப்படி அவர்களுக்கு பதில் சொல்லமுடியும்), அல்லது நாம் அதைக்குறித்து தெளிவாக புரிந்துகொள்ள விரும்பினால், நாம் வேதவசனங்களை தெளிவாக ஆராய வேண்டும்.
இந்த கட்டுரையில் வேதத்திலிருந்து இயேசு கிறிஸ்துவின் தெய்வீகத் தன்மைக்கான ஆதாரங்களைப் பார்த்து அதை நிரூபிக்க முற்பாடுவோம்.
- பிதாவாகிய தேவனின் சாட்சி
- கிறிஸ்துவின் சாட்சி
- பழைய ஏற்பாட்டின் சான்றுகள்
- அப்போஸ்தலர்களின் சாட்சி
இந்த நான்கு சாட்சிகளின் & சான்றுகள் மூலம் இயேசுகிறிஸ்து தேவன் என்பதை நாம் மிக உறுதியாக நிரூபிக்க முடியும்.
- பிதாவாகிய தேவனின் சாட்சி...
முதலில் சில வேத வசனங்களைப் பார்ப்போம்:
“அன்றியும், வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி: இவர் என்னுடைய நேசகுமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன் என்று உரைத்தது.” (மத்தேயு 3:17)
"அன்றியும், நீர் என்னுடைய நேசகுமாரன், உம்மில் பிரியமாயிருக்கிறேன் என்று, வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாயிற்று. " (மாற்கு 1:11)
“இதோ, ஒளியுள்ள ஒரு மேகம் அவர்கள்மேல் நிழலிட்டது. இவர் என்னுடைய நேச குமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன், இவருக்குச் செவிகொடுங்கள் என்று அந்த மேகத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாயிற்று.” (மத்தேயு 17:5)
“இப்படி அவன் பேசுகையில், ஒரு மேகம் வந்து அவர்கள்மேல் நிழலிட்டது; அவர்கள் அந்த மேகத்துக்குள் பிரவேசிக்கையில் சீஷர்கள் பயந்தார்கள். அப்பொழுது: இவர் என்னுடைய நேசகுமாரன், இவருக்குச் செவிகொடுங்கள் என்று மேகத்திலிருந்து ஒரு சத்தமுண்டாயிற்று.” (லூக்கா 9:35)
முதல் இரண்டு வசனங்கள் இயேசு கிறிஸ்துவின் ஞானஸ்நானத்திற்குப் பிறகு பிதாவாகிய தேவன் சொன்ன வார்த்தைகள். அடுத்த இரண்டு வசனங்கள் மலையின் மீது இயேசுவைக் குறித்து பிதாவின் சாட்சி.
மலையின் மீது மோசே, எலியா மற்றும் இயேசுகிறிஸ்து இருந்தார்கள். அப்பொழுது பேதுரு: இங்கே மூன்று கூடாரங்களைக் கட்டி, இங்கே தங்குவோம் என்று சொன்னபோது, ஒரு மேகம் வந்து, அவர்களை சூழ்ந்ததுக் கொண்டது. அப்போது வானத்திலிருந்து இந்த வார்த்தைகளைக் கேட்டார்கள். இங்கே பிதாவாகிய தேவன் மோசே மற்றும் எலியாவை விட இயேசுவை பெரியவர் என்று சொல்லி, "இவர் என் நேசகுமாரன்" என்று கூறுகிறார்.
எபிரேயர் நிருபத்தின் முதல் அத்திகாரத்தில் இயேசுவைக் குறித்து பிதாவாகிய தேவன் என்ன சொல்கிறார் என்பதை நாம் கூர்ந்து கவனிப்போம்:
"எப்படியெனில், நீர் என்னுடைய குமாரன், இன்று நான் உம்மை ஜெநிப்பித்தேன் என்றும்; நான் அவருக்குப் பிதாவாயிருப்பேன், அவர் எனக்குக் குமாரனாயிருப்பார் என்றும், அவர் தூதர்களில் யாருக்காவது எப்போதாகிலும் சொன்னதுண்டா?" (எபிரேயர் 1:5)
பிதாவானவர் இயேசுகிறிஸ்து என்னுடைய குமாரன் என்றும், சொல்லி அவர் தேவதூதர்களை விட பெரியவர் என்றும் சாட்சியாளிக்கிறார், எனவே, "நான் அவருக்குப் பிதாவாயிருப்பேன், அவர் எனக்குக் குமாரனாயிருப்பார் என்றும், அவர் தூதர்களில் யாருக்காவது எப்போதாகிலும் சொன்னதுண்டா?” என்ற கேள்வியை எபிரேய நிருபத்தின் ஆசிரியர் இந்தக் கேள்வியைக் கேட்கிறார்.
“மேலும், தமது முதற்பேறானவரை உலகத்தில் பிரவேசிக்கச்செய்தபோது: தேவதூதர் யாவரும் அவரைத் தொழுதுகொள்ளக்கடவர்கள் என்றார்." (எபிரெயர் 1:6)
தேவதூதர்கள் இயேசு கிறிஸ்துவை தொழுதுக் கொள்ளவேண்டும் என்று பிதாவானவர் இங்கே சொல்லுகிறார். இங்கே மொழிபெயர்க்கப்பட்ட "தொழுது" என்ற வார்த்தை உண்மையில் வழிபாட்டுதல் என்ற அர்த்தத்தை தருகிறது.
“குமாரனை நோக்கி: தேவனே, உம்முடைய சிங்காசனம் என்றென்றைக்குமுள்ளது, உம்முடைய ராஜ்யத்தின் செங்கோல் நீதியுள்ள செங்கோலாயிருக்கிறது.” (எபிரெயர் 1:8)
இங்கே பிதாவாகிய தேவன் இயேசு கிறிஸ்துவை "தேவன்" என்று அழைக்கிறார். "தியோஸ்" என்ற கிரேக்க வார்த்தை இங்கே பயன்படுத்தப்பட்டுள்ளது, தியோஸ் என்றால் தேவன் என்று அர்த்தம். அது மட்டுமின்றி, பிதாவானவர் குமாரனைக் குறித்து "உம்முடைய சிங்காசனம் என்றென்றைக்குமுள்ளது” என்று சொல்லுகிறார். வேதத்தைக் குறித்து நமக்கு கொஞ்சமாவது புரிதல் இருந்தால் நாம் புரிந்துக்கொள்வது. தேவனின் சிம்மாசனத்தைத் தவிர வேறு எதுவும் நிரந்தரமாக நிற்பதில்லை என்பதையும், தேவன் சிங்காசனத்தில் இருக்கிறார் என்பதை நாம் அறிவோம்.
“கர்த்தாவே, நீர் ஆதியிலே பூமியை அஸ்திபாரப்படுத்தினீர்; வானங்கள் உம்முடைய கரத்தின் கிரியைகளாயிருக்கிறது; அவைகள் அழிந்துபோம்; நீரோ நிலைத்திருப்பீர்; அவைகளெல்லாம் வஸ்திரம்போலப் பழைமையாய்ப்போம்;” (எபிரேயர் 1:10,11)
இங்கும் பிதா குமாரனை "தேவனே" என்று அழைக்கிறார். "குரியோஸ்" என்ற இந்த கிரேக்க வார்த்தைக்கு பல அர்த்தங்களைக் கொண்டுள்ளது. குரியோஸ் என்றால் Sir சர், Mastor மாஸ்டர், Lord லார்ட், Owner ஓனர் என்று பொருள்படும். இந்த வார்த்தையை வேதத்தில் பலமுறை பயன்படுத்தப் பட்டுள்ளது. ஆனால் இதை பழைய ஏற்பாட்டில் YHWH “யாவே” என்ற வார்த்தைக்கு ஒத்த பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும், குமாரனே படைப்பாளர் (சிருஷ்டி கர்த்தர்) என்று பிதாவே சாட்சியாளிக்கிறார். இந்த படைப்பின் (சிருஷ்டியின்) மீது கிறிஸ்துவுக்கு அதிகாரம் உண்டு என்றும் அவர் சாட்சியாளிக்கிறார்.
“மேலும், நான் உம்முடைய சத்துருக்களை உமக்குப் பாதபடியாக்கிப் போடும்வரைக்கும் நீர் என்னுடைய வலதுபாரிசத்தில் உட்காரும் என்று தூதர்களில் யாருக்காவது எப்போதாகிலும் அவர் சொன்னதுண்டா?” (எபிரெயர் 1:12)
இயேசு கிறிஸ்துவை தம் வலது பாரிசத்தில் உட்காரும் படி பிதா கூறுவதை இங்கு காண்கிறோம். வலதுபாரிசத்தில் உட்காரும் என்று சொல்லுவதை நாம் தவறாக புரிந்துக் கொள்ளக்கூடாது, அங்கே இரண்டு நாற்காலிகள் உள்ளன என்றும், தந்தை ஒரு நாற்காலியில் அமர்ந்திருக்கிறார், குமாரன் ஒரு நாற்காலியில் அமர்ந்திருக்கிறார் என்று பொருள்ளல்ல.
வலதுபாரிசத்தில் உட்காரும் என்பது சம அதிகாரம் அல்லது அவருக்கு இவர் நிகரானவர் என்ற அர்த்தத்தை கொடுக்கிறது. எனவேதான் “நீர் என்னுடைய வலதுபாரிசத்தில் உட்காரும் என்று தூதர்களில் யாருக்காவது எப்போதாகிலும் அவர் சொன்னதுண்டா?” என்ற கேள்வியை இங்கு காண்கிறோம். தேவதூதர்கள் தேவனுக்கு சமமானவர்கள் அல்ல என்பதால், தேவதூதர்களை தமது வலது பாரிசத்தில் உட்காரச் சொன்னதில்லை. ஆனால், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கும் தமக்கு நிகரான அதிகாரம் உண்டு என்பதை பிதாவான தேவன் சாட்சியாளிக்கிறார்.
நாம் குறிப்பாக கவனிக்க வேண்டிய சத்தியங்கள் என்னவென்றால்:
- • தேவன் தனது படைப்பை (சிருஷ்டியை) ஆளும் அதிகாரத்தை மனிதனுக்கு வழங்கினார்.
- • தேவன் தம்முடைய வார்த்தைகளை மக்களுக்கு தெரிவிப்பதற்கு தீர்க்கதரிசிகளுக்கு அதிகாரம் கொடுத்தார்.
- • தேவன் தம்முடைய கட்டளைகளை செயல்ப்படுத்தும் அதிகாரத்தை தேவதூதர்களுக்குக் கொடுத்தார்.
- • ஆனால் குமாரனுக்கு பிதா கொடுத்த அதிகாரம் வழங்கப்பட்டதில்லை. கர்த்தராகிய இயேசுகிறிஸ்து இவ்விதமாக சொன்னார், "பிதாவே, உலகம் உண்டாகிறதற்கு முன்னே உம்மிடத்தில் எனக்கு உண்டாயிருந்த மகிமையினாலே இப்பொழுது நீர் என்னை உம்மிடத்திலே மகிமைப்படுத்தும்.” (யோவான் 17:5). “அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல், தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார்.” (பிலிப்பியர் 2:6,7). இயேசு கிறிஸ்து பாவிகளுக்காக இவ்வுலகிற்கு வந்தார். எனவே குமாரனுக்கு பிதா கொடுத்த அதிகாரம் முன்பு இருக்கிறது.
இந்த காரணங்களைப் பொறுத்து:
- • பிதா இயேசுவை "இவர் என் நேசக்குமாரன்" என்று அழைத்தார்.
- • பிதா இயேசுவை "தேவனே" என்று அழைத்தார்.
- • பிதா இயேசுவை தேவ தூதர்களை பணிந்துக் கொள்ள சொன்னார்
- • இயேசுவின் சிம்மாசனம் நித்தியமானது என்றும், அவரே படைப்பாளர் (சிருஷ்டியாளர்) என்றும், படைப்பின் மீது இயேசுவுக்கு அனைத்து அதிகாரமும் கொண்டவர் என்றும் பிதாவாகிய தேவன் சாட்சியாளிக்கிறார்.
- • இயேசுவை "அவரது வலது பாரிசத்தில்" உட்கார வைப்பதன் மூலம், தேவனுக்கு சமமான அதிகாரம் உண்டு என்பதை பிதாவாகிய தேவன் குறிப்பிடுகிறார்.
இயேசுவே தேவன் என்று பிதா மிகத் தெளிவாகச் சாட்சிக்கொடுத்தார் என்பதிலிருந்து நாம் அறியலாம். இயேசுகிறிஸ்து தேவன் என்பதை.
- 2. கிறிஸ்துவின் சாட்சி (அவருடைய சொந்த வார்த்தைகளில்)
- A) கிறிஸ்துவின் சாட்சி...
பிரதான ஆசாரியனுக்கு முன்பாக விசாரணைக்காக இயேசுகிறிஸ்து நிற்கும் காட்சியை நினைவுப் படுத்திக்கொண்டு சில வசனங்களைப் படிப்போம்:
“அப்பொழுது பிரதான ஆசாரியன் எழுந்து நடுவே நின்று, இயேசுவை நோக்கி: இவர்கள் உனக்கு விரோதமாய்ச் சொல்லுகிறதைக் குறித்து நீ ஒன்றும் சொல்லுகிறதில்லையா என்று கேட்டான். அவரோ ஒரு உத்தரவும் சொல்லாமல் பேசாதிருந்தார். மறுபடியும் பிரதான ஆசாரியன் அவரை நோக்கி: நீ ஸ்தோத்திரிக்கப்பட்ட தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்துதானா? என்று கேட்டான். அதற்கு இயேசு: நான் அவர்தான்; மனுஷகுமாரன் சர்வவல்லவரின் வலதுபாரிசத்தில் வீற்றிருப்பதையும், வானத்தின் மேகங்கள்மேல் வருவதையும் நீங்கள் காண்பீர்கள் என்றார். பிரதான ஆசாரியன் இதைக் கேட்டவுடனே, தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு: இனிச் சாட்சிகள் நமக்கு வேண்டியதென்ன? தேவதூஷணத்தைக் கேட்டீர்களே, உங்களுக்கு என்னமாய்த் தோன்றுகிறது என்றான். அதற்கு அவர்களெல்லாரும்: இவன் மரணத்துக்குப் பாத்திரனாயிருக்கிறான் என்று தீர்மானம்பண்ணினார்கள்.” (மாற்கு 14:60-64)
“விடியற்காலமானபோது ஜனத்தின் மூப்பரும் பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் கூடிவந்து, தங்கள் ஆலோசனைச் சங்கத்தில் அவரைக் கொண்டுவந்து நிறுத்தி: நீ கிறிஸ்துவா? அதை எங்களுக்குச் சொல் என்றார்கள். அதற்கு அவர்: நான் உங்களுக்குச் சொன்னாலும் நம்பமாட்டீர்கள். நான் உங்களிடத்தில் வினாவினாலும் எனக்கு மாறுத்தரம் சொல்லமாட்டீர்கள், என்னை விடுதலைபண்ணவுமாட்டீர்கள். இதுமுதல் மனுஷகுமாரன் சர்வவல்லமையுள்ள தேவனுடைய வலதுபாரிசத்தில் வீற்றிருப்பார் என்றார். அதற்கு அவர்களெல்லாரும்: அப்படியானால், நீ தேவனுடைய குமாரனா என்று கேட்டார்கள். அதற்கு அவர்: நீங்கள் சொல்லுகிறபடியே நான் அவர்தான் என்றார். அப்பொழுது அவர்கள்: இனி வேறு சாட்சி நமக்கு வேண்டுவதென்ன? நாமே இவனுடைய வாயினாலே கேட்டோமே என்றார்கள்.” (லூக்கா 22:67-71)
இந்த இரண்டு வசனப் பகுதிகளையும் பார்க்கும்போது, இயேசு தன்னைப் பற்றி சாட்சியாளிப்பதைக் காண்கிறோம். அவர் தேவனின் குமாரன் என்றும், தேவனின் வலது பக்கத்தில் அமர்ந்திருப்பார் என்றும் கூறினார்.
ஆனால், நீங்கள் என்னிடம் கேட்கலாம், வேதத்தில் பலர் தேவனின் குமாரர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள், ஆகையினால் இயேசுவை தேவன் என்று எப்படி நிரூபிக்க முடியும்?
ஆனால் இது தொடர்பாக மேலும் இரண்டு வசனப் பகுதிகளை வாசிப்போம்:
“நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம் என்றார். அப்பொழுது யூதர்கள் மறுபடியும் அவர்மேல் கல்லெறியும்படி, கல்லுகளை எடுத்துக்கொண்டார்கள். இயேசு அவர்களை நோக்கி: நான் என் பிதாவினாலே அநேக நற்கிரியைகளை உங்களுக்குக் காண்பித்தேன், அவைகளில் எந்தக் கிரியையினிமித்தம் என்மேல் கல்லெறிகிறீர்கள் என்றார். யூதர்கள் அவருக்குப் பிரதியுத்தரமாக: நற்கிரியையினிமித்தம் நாங்கள் உன்மேல் கல்லெறிகிறதில்லை; நீ மனுஷனாயிருக்க, உன்னைத் தேவன் என்று சொல்லி, இவ்விதமாகத் தேவதூஷணஞ் சொல்லுகிறபடியினால் உன்மேல் கல்லெறிகிறோம் என்றார்கள். இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: தேவர்களாயிருக்கிறீர்கள் என்று நான் சொன்னேன் என்பதாய் உங்கள் வேதத்தில் எழுதியிருக்கவில்லையா? தேவவசனத்தைப் பெற்றுக்கொண்டவர்களைத் தேவர்கள் என்று அவர் சொல்லியிருக்க, வேதவாக்கியமும் தவறாததாயிருக்க, பிதாவினால் பரிசுத்தமாக்கப்பட்டும், உலகத்தில் அனுப்பப்பட்டும் இருக்கிற நான் என்னைத் தேவனுடைய குமாரன் என்று சொன்னதினாலே தேவதூஷணஞ் சொன்னாய் என்று நீங்கள் சொல்லலாமா?” (யோவான் 10:30-35)
“இயேசு அவர்களை நோக்கி: என் பிதா இதுவரைக்கும் கிரியை செய்து வருகிறார், நானும் கிரியை செய்து வருகிறேன் என்றார். அவர் ஓய்வுநாள் கட்டளையை மீறினதுமல்லாமல், தேவனைத் தம்முடைய சொந்தப் பிதா என்றுஞ்சொல்லித் தம்மைத் தேவனுக்குச் சமமாக்கினபடியினாலே, யூதர்கள் அவரைக் கொலைசெய்யும்படி அதிகமாய் வகைதேடினார்கள்.” (யோவான் 5:17,18)
இந்த இரண்டு நிகழ்வுகளிலும், ஒரு காரியத்தை தெளிவாகக் காண்கிறோம். இயேசுகிறிஸ்து தான் யார் என்று சொன்னதை யூதர்கள் புரிந்துக் கொண்டார்கள் என்பதை நாம் மிகத் தெளிவாகக் காண்கிறோம். அதனால்தான், "தேவனைத் தம்முடைய சொந்தப் பிதா என்றுஞ்சொல்லித் தம்மைத் தேவனுக்குச் சமமாக்கிக் கொண்டார்.
ஏனென்றால், இயேசு கிறிஸ்துவின் சாட்சியானது அவர் "தேவனுக்கு சமமானவர்" என்று அர்த்தம் என்பதை யூதர்கள் தெளிவாகப் புரிந்துகொண்டனர், அதுதான் உண்மை.
மற்றொரு வசனப் பகுதியை பார்ப்போம்.
“சிங்காசனத்தின்மேல் வீற்றிருந்தவர்: இதோ, நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன் என்றார். பின்னும், அவர்: இந்த வசனங்கள் சத்தியமும் உண்மையுமானவைகள், இவைகளை எழுது என்றார். அன்றியும், அவர் என்னை நோக்கி: ஆயிற்று, நான் அல்பாவும் ஓமெகாவும், ஆதியும் அந்தமுமாயிருக்கிறேன். தாகமாயிருக்கிறவனுக்கு நான் ஜீவத்தண்ணீரூற்றில் இலவசமாய்க் கொடுப்பேன். ஜெயங்கொள்ளுகிறவன் எல்லாவற்றையும் சுதந்தரித்துக்கொள்ளுவான்; நான் அவன் தேவனாயிருப்பேன், அவன் என் குமாரனாயிருப்பான். (வெளிப்படுத்துதல் 21:5-7)
இந்த வசனத்தில் "நான் ஆல்பாவும் ஒமேகாவும்", ஆதாவது ஆதியும் அந்தமுமாயிருக்கிறேன் ஜெயங்கொள்பவரைப் பற்றி பேசுகையில், "நான் அவன் தேவனாயிருப்பேன், அவன் என் குமாரனாயிருப்பான்." என்று கூறுகிறது. ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து தன்னை தேவன் என்று தெளிவாக சொன்னார்.
இதன் அடிப்படையில்.
- • தான் தேவனின் குமாரன் என்றும், தான் தேவனின் வலது பாரிசத்தில் உட்காருவேன் என்றும் இயேசுகிறிஸ்துவே கூறினார்.
- • தேவன் அவருடைய பிதா, என்று சொன்னதினால் அவர் தன்னை தேவனுக்கு சமமாக ஆக்கினார். இவ்விதமாகவே (அவரது வார்த்தைகள் யூதர்களால் புரிந்து கொள்ளப்பட்டன, அதை கர்த்தராகிய இயேசு புறக்கணிக்கவில்லை)
- • நான் தேவன் என்று இயேசு கிறிஸ்துவே சுயாமாகவே கூறினார்.
- B) கிறிஸ்துவின் சாட்சி (அவரது செய்கையில்)
தேவனுக்கு மட்டுமே உரியதையும், தேவன் மட்டுமே செய்யக்கூடியதையும், இயேசு தம்முடைய செயல்களின் மூலம் தாம் தேவன் என்பதை நிரூபித்தார்.
அ. (ஆராதனையை) வழிபாட்டை ஏற்றுக்கொள்வது. (யோவான் 20:27,28)
“பின்பு அவர் தோமாவை நோக்கி: நீ உன் விரலை இங்கே நீட்டி, என் கைகளைப் பார், உன் கையை நீட்டி, என் விலாவிலே போடு, அவிசுவாசியாயிராமல் விசுவாசியாயிரு என்றார். தோமா அவருக்குப் பிரதியுத்தரமாக: என் ஆண்டவரே! என் தேவனே! என்றான்.”
தோமா அவரை "என் ஆண்டவரே, என் தேவனே" என்று இயேசுகிறிஸ்துவை (ஆராதனை) வணங்கினால், நீங்கள் அவ்வாறு சொல்லக்கூடாது, நீங்கள் தேவனை மட்டுமே (ஆராதிக்க வேண்டும்) வணங்க வேண்டும். அதன் பின் வருகிற வசனத்தில், “அதற்கு இயேசு: தோமாவே, நீ என்னைக் கண்டதினாலே விசுவாசித்தாய், காணாதிருந்தும் விசுவாசிக்கிறவர்கள் பாக்கியவான்கள் என்றார்.” ஆனால் தேவனை மட்டுமே (ஆராதிக்க வேண்டும்) வணங்க வேண்டும். என்ற தேவனின் கட்டளைக்கு கர்த்தராகிய இயேசுகிறிஸ்து மாறாக செயல்பட்டாரா? இல்லை, நாம் முன்பு பார்த்தது போல, பிதாவே குமாரனை (ஆராதிக்க சொன்னார்) வணங்க சொன்னார். குமாரனும் அந்த ஆராதனையை ஏற்றுக் கொண்டார். இதிலிருந்து நாம் புரிந்துக்கொள்வது, இயேசுவே தேவன் என்பது தெளிவாகிறது.
ஆ. பாவத்தை மன்னிப்பது. (மாற்கு 2:7,10)
“வேதபாரகரில் சிலர்: இவன் இப்படித் தேவதூஷணம் சொல்லுகிறதென்ன? தேவன் ஒருவரேயன்றிப் பாவங்களை மன்னிக்கத்தக்கவர் யார் என்று தங்கள் இருதயங்களில் சிந்தித்துக்கொண்டிருந்தார்கள். பூமியிலே பாவங்களை மன்னிக்க மனுஷகுமாரனுக்கு அதிகாரம் உண்டென்பதை நீங்கள் அறியவேண்டும் என்று சொல்லி,
தேவனைத் தவிர வேறு யாராலும் பாவங்களை மன்னிக்க முடியாது என்பதை யூதர்கள் மிகத் தெளிவாக அறிந்திருந்தனர், மேலும் அத்தகைய அதிகாரம் யாருக்கும் இல்லை என்று பழைய ஏற்பாடு கூறுகிறது. ஆனால் இயேசு தனக்கு பாவங்களை மன்னிக்கும் வல்லமை தனக்கு உண்டு என்பதை கூறுகிறார். இதின் நிமித்தம் அவர் நிச்சயமாக தேவன் என்று சொல்லலாம்.
இ. இயேசு தன்னில் பாவம் இல்லை என்று சவால் செய்வது. (யோவான் 8:45,46)
“நான் உங்களுக்குச் சத்தியத்தைச் சொல்லுகிறபடியினாலே நீங்கள் என்னை விசுவாசிக்கிறதில்லை. என்னிடத்தில் பாவம் உண்டென்று உங்களில் யார் என்னைக் குற்றப்படுத்தக்கூடும்? நான் சத்தியத்தைச் சொல்லியிருக்க, நீங்கள் ஏன் என்னை விசுவாசிக்கிறதில்லை."
இயேசுவின் வாழ்க்கையைப் பார்த்த யாரும் அவரிடத்தில் பாவம் இருகிறது. என்பதை நிரூபிக்க முடியவில்லை. அவர் பரிசுத்தமானவர், அவரில் எவ்வளவேனும் கறையோ கலங்கமோ இல்லை என்று வேதாகமம் சொல்கிறது.
“தேவதூதன் அவளுக்குப் பிரதியுத்தரமாக: பரிசுத்த ஆவி உன்மேல் வரும்; உன்னதமானவருடைய பலம் உன்மேல் நிழலிடும்; ஆதலால் உன்னிடத்தில் பிறக்கும் பரிசுத்தமுள்ளது தேவனுடைய குமாரன் என்னப்படும்.” (லூக்கா 1:35)
அவர் மனிதர்களின் பாவச் சுபாவத்துடன் பிறக்கவில்லை, ஆனால் அவருடைய வாழ்நாளில் பரிசுத்தமாக இருந்தார். அவரில் பாவம் இருக்கிறது என்றும், அவர் இந்த பாவத்தை செய்தார் என்றும் நிரூபிக்க யாரும் இல்லை, ஏனென்றால் அவர் பரிசுத்தமானவர்.
தேவனைத் தவிர யார் பரிசுத்தர்? இயேசுவின் பிறப்பு பரிசுத்தம், அவருடைய வாழ்க்கை பரிசுத்தம் இதைப் பார்த்தபோது அவருக்கு வைத்த பெயர் "இம்மானுவேல்" எவ்வளவு பொருத்தமானது. "தேவன் நம்மோடு இருகிறார்." இதுவும் இயேசு தேவன் என்பதை நிரூபிக்கிறது.
- பழைய ஏற்பாட்டின் சான்றுகள்...
புதிய ஏற்பாட்டுடன் ஒப்பிடும்போது பழைய ஏற்பாட்டில் உள்ள பல வார்த்தைகள் இயேசுகிறிஸ்து தேவன் என்பதைக் காட்டுகின்றன.
(பழைய ஏற்பாடு) யாத்திராகமம் 3:14,15
“அதற்குத் தேவன்: இருக்கிறவராக இருக்கிறேன் என்று மோசேயுடனே சொல்லி, இருக்கிறேன் என்பவர் என்னை உங்களிடத்துக்கு அனுப்பினார் என்று இஸ்ரவேல் புத்திரரோடே சொல்வாயாக என்றார்.
(புதிய ஏற்பாடு) யோவான் 8:58
“அதற்கு இயேசு: ஆபிரகாம் உண்டாகிறதற்கு முன்னமே நான் இருக்கிறேன் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.”
(பழைய ஏற்பாடு) சங்கீதம் 23:1
“கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார்; நான் தாழ்ச்சியடையேன்.”
(புதிய ஏற்பாடு) யோவான் 10:11
“நானே நல்ல மேய்ப்பன்: நல்ல மேய்ப்பன் ஆடுகளுக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிறான்.”
(பழைய ஏற்பாடு) சங்கீதம் 27:1
“கர்த்தர் என் வெளிச்சமும் என் இரட்சிப்புமானவர், யாருக்குப் பயப்படுவேன்? கர்த்தர் என் ஜீவனின் பெலனானவர், யாருக்கு அஞ்சுவேன்?”
(புதிய ஏற்பாடு) யோவான் 8:12
“மறுபடியும் இயேசு ஜனங்களை நோக்கி: நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன், என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவ ஒளியை அடைந்திருப்பான் என்றார்.”
(பழைய ஏற்பாடு) ஏசாயா 40:8
“புல் உலர்ந்து பூ உதிரும்; நமது தேவனுடைய வசனமோ என்றென்றைக்கும் நிற்கும் என்பதையே சொல் என்று உரைத்தது.”
(புதிய ஏற்பாடு) மத்தேயு 24:35
“வானமும் பூமியும் ஒழிந்துபோம், என் வார்த்தைகளோ ஒழிந்துபோவதில்லை.”
(பழைய ஏற்பாடு) ஏசாயா 48:12
“யாக்கோபே, நான் அழைத்திருக்கிற இஸ்ரவேலே, எனக்குச் செவிகொடு; நான் அவரே, நான் முந்தினவரும், நான் பிந்தினவருமாமே.”
(புதிய ஏற்பாடு) வெளிப்படுத்துதல் 1:18
“நான் முந்தினவரும் பிந்தினவரும், உயிருள்ளவருமாயிருக்கிறேன்; மரித்தேன், ஆனாலும், இதோ, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன்,”
பழைய ஏற்பாட்டில் கர்த்தராகிய தேவனைப் பற்றி என்னனென்ன வார்த்தைகள் சொல்லப்பட்டு இருக்கிறதோ, அதே வார்த்தைகள் புதிய ஏற்பாட்டிலும் இயேசு கிறிஸ்துவுக்கும் பலமுறை சொல்லப்பட்டது. இதிலிருந்து நாம் புரிந்துக்கொள்வது “கர்த்தர்” என்ற பெயர் இயேசு கிறிஸ்துவுக்கும் உண்டு என்பதை நாம் உணர வேண்டும். இவை இயேசுகிறிஸ்து தேவன் என்பதை நிரூபிக்கிறது. ஒருவேளை இயேசு தேவன் இல்லை என்றால், பிதாவாகிய தேவனுக்கு பயன்படுத்தப்பட்ட வார்த்தைகள் இயேசு கிறிஸ்துவுக்கும் பயன்படுத்தி தன்னுடைய மகிமையை ஏன் பகிர்ந்துக் கொள்ளவேண்டும்? என் மகிமையை யாருக்கும் கொடுக்க மாட்டேன், என்று பிதா சொல்லவில்லையா? அதே மகிமையை இயேசுவுக்கு கொடுக்கப்பட்டது என்றால் இயேசு தேவன் என்பதை இந்த காரியங்கள் உறுதி செய்கிறது.
- அப்போஸ்தலர்களின் சாட்சிகள்...
அப்போஸ்தலனாகிய யோவான், இயேசுவைப் பற்றி சாட்சியாளிக்கும் போது, "வார்த்தை தேவனாயிருந்தார்", "வார்த்தை மாம்சமாகி நமக்குள்ளே வாசம்பண்ணினார்," மற்றும் "இயேசு கிறிஸ்துவின் மூலமாக கிருபையும் சத்தியமும் உண்டானது" என்று கூறினார். இந்த வார்த்தையாகிய தேவன் இயேசுகிறிஸ்துவே என்று கூறுகிறார்.
அப்போஸ்தலன் பவுல் கூறுகிறார், “தேவத்துவத்தின் பரிபூரணமெல்லாம் சரீரப்பிரகாரமாக அவருக்குள் வாசமாயிருக்கிறது.” (கொலோசெயர் 2:9). மேலும் அப். பவுல் இயேசுவைப் பற்றி இந்த வார்த்தைகளைக் கூறினார், “அவர் அதரிசனமான தேவனுடைய தற்சுரூபமும், சர்வ சிருஷ்டிக்கும் முந்தின பேறுமானவர்.” (கொலோசெயர் 1:15) “அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல்,” - (பிலிப்பியர் 2:6)
எல்லா அப்போஸ்தலர்களும் இயேசுகிறிஸ்து தேவன் என்பதை உறுதியுடன் விசுவாசித்தார்கள். மேலும் அவருடைய தெய்வீகத்தை புரிந்துக் கொண்டனர். அதனால்தான் அவருக்காகத் தங்கள் உயிரைத் தியாகம் செய்தனர். இயேசுகிறிஸ்து தேவன் இல்லாவிட்டால், அவருடைய தெய்வீகம் ஒரு கற்பனை என்றால், அப்போஸ்தலர்கள் எல்லாம் ஏன் தங்கள் உயிரை கொடுத்தார்கள்?