உண்மையான கிறிஸ்தவ வாழ்க்கை

தசமபாகம் இன்றைய கிறிஸ்தவர்களுக்கு இது பொருந்துமா?
ஆசிரியர்: வி.சாமுவேல்
தமிழாக்கம்: தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்
வாசிப்பதற்கான நேரம்: 12 நிமிடங்கள்

 வேதாகம வரலாற்றில் காணிக்கை என்பது ஆராதனையின் ஒரு முக்கிய அங்கமாகும். பழைய ஏற்பாட்டில் இது ஒரு சட்டமாக இருந்ததற்கும், புதிய ஏற்பாட்டில் அது கிருபையின் வெளிப்பாடாக இருப்பதற்கும் இடையே உள்ள ஆவிக்குரிய வேறுபாடுகளை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

பழைய ஏற்பாட்டில் தசமபாகம்

பழைய ஏற்பாட்டில் தசமபாகம் என்பது ஒரு தெளிவான சட்டபூர்வமான கட்டளை. இஸ்ரவேலர்கள் தங்கள் விளைச்சலிலும், மந்தையிலும் பத்தில் ஒரு பங்கை கர்த்தருக்குக் கொடுக்க வேண்டும் என்று தேவன் கட்டளையிட்டார் (லேவியராகமம் 27:30). லேவியர்களுக்கு நிலச்சுதந்தரம் இல்லாததால், அவர்களின் வாழ்வாதாரத்திற்காகவும் தேவாலயப் பணிக்காகவும் இது ஒதுக்கப்பட்டது (எண்ணாகமம் 18:21–24). இது ஆராதனைக்கு மட்டுமன்றி, ஏழைகள், விதவைகள் மற்றும் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களுக்காகவும் பயன்படுத்தப்பட்டது (உபாகமம் 14:22–29). அதாவது, பழைய ஏற்பாட்டில் தசமபாகம் என்பது ஆராதனைக்கு மட்டுமானதாக இல்லாமல், ஏழைகள், விதவைகள் மற்றும் சமூகத்தின் தேவைகளைச் சந்திக்கும் ஒரு முறையாகவும் இருந்தது.

புதிய ஏற்பாட்டு கண்ணோட்டம்

புதிய ஏற்பாட்டில் விசுவாசிகள் மோசேயின் நியாயப்பிரமாணச் சட்டத்திற்கு உட்பட்டவர்கள் அல்ல, மாறாகக் கிருபையின் பிரமாணத்திற்கு உட்பட்டவர்கள். இயேசு கிறிஸ்து தசமபாகத்தைப் பற்றிப் பேசியபோது (மத்தேயு 23:23), அவர் பரிசேயர்களின் மாயமாலத்தைக் கண்டிப்பதற்காகவே அதைக் குறிப்பிட்டார்; ஆனால் தசமபாகத்தைக் கிறிஸ்தவர்கள் மீது ஒரு விதியாக அவர் சுமத்தவில்லை.

புதிய ஏற்பாடு ‘10’ சதவீதத்தை ஒரு கட்டாயமாக்கவில்லை. ஆனால், "தேவன் கொடுத்த வளங்களை அவருடைய பணிக்காகப் பயன்படுத்தப்பட வேண்டும்" என்ற தார்மீகக் கொள்கை வலுவாகப் போதிக்கப்படுகிறது.

புதிய ஏற்பாட்டில் கொடுக்கும் முறை

புதிய ஏற்பாட்டுப் போதனையின்படி, "ஒவ்வொருவனும் விசனமாயுமல்ல, கட்டாயமாயுமல்ல, தன் இருதயத்தில் தீர்மானித்தபடியே கொடுக்கக்கடவன்; உற்சாகமாய்க் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார்" (2 கொரிந்தியர் 9:7). அவரவர் வருமானத்திற்கும், வசதிக்கும், திராணிக்கும் தக்கதாகக் கொடுக்க வேண்டும் (1 கொரிந்தியர் 16:2).

ஆதித்திருச்சபை தாராள குணம், இரக்கம் மற்றும் தியாகத்தின் அடிப்படையில் கொடுக்கும் முறையைப் பின்பற்றியது (அப்போஸ்தலர் 2:44–45; 4:32–35). இது பெரும்பாலும் பத்து சதவீத எல்லையைத் தாண்டியதாகவே இருந்தது. மாசிடோனியா சபையார் கொடிய வறுமையில் இருந்தபோதிலும், "தங்கள் திராணிக்கு மிஞ்சி" தாராளமாகக் கொடுத்தார்கள் (2 கொரிந்தியர் 8:1–4).

10 சதவீதம் ஒரு விதியா?

சதவீதம் கட்டாயமில்லை என்றாலும், தேவனுடைய பணிக்காகக் கொடுப்பது புதிய ஏற்பாட்டில் தெளிவான போதனையாகும். வருமானத்திற்கேற்ப, மகிழ்ச்சியுடனும் தாராளத்துடனும் கொடுப்பது ஒவ்வொரு கிறிஸ்தவனின் ஆவிக்குரிய பொறுப்பாகும். எனவே, 10 சதவீதம் என்பது ஒரு நல்ல தொடக்க நிலையாக இருக்கலாம்; ஆனால் இது ஒரு தனிப்பட்ட விசுவாசத்தின் முடிவு மட்டுமே. இது புதிய ஏற்பாட்டில் எங்கும் விதிக்கப்பட்ட வேதப்பூர்வமான கட்டளை அல்ல; இதை யார் மீதும் கட்டாயப்படுத்தக் கூடாது. ஆனால் தேவனுடைய பணிக்காகத் தாராளமாகக் கொடுப்பதே வேதம் போதிக்கும் முக்கிய கொள்கை.

தசமபாகத்தை நாம் எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

“…தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்கவேண்டும்” (எபிரெயர் 11:6).

தேவன் தம்முடைய மக்களை ஆசீர்வதிக்கப் பயன்படுத்தும் ஒரு வழியாகத் தசமபாகம் இருக்கிறது. ஆனால், இந்த ஆசீர்வாதம் என்பது பெரும்பாலும் 'செல்வச் செழிப்பு உபதேசம்' சொல்வது போன்ற "பணம் கொடுத்தால் இன்னும் அதிக பணம் வரும்" என்ற வியாபார ரீதியான ஆசீர்வாதம் அல்ல. மாறாக, இது தேவனோடுள்ள நெருக்கத்தை அதிகரிக்கச் செய்யும் ஆவிக்குரிய ஆசீர்வாதம்.

எபிரெயர் 11:6-ன் படி, கொடுப்பது என்பது தேவன் நம்முடைய தேவைகளைச் சந்திப்பார் என்ற விசுவாசத்தின் வெளிப்பாடு. "என்னிடமுள்ள ஒரு பகுதியை நான் தேவனுக்குக் கொடுத்தால், என்னுடைய மீதமுள்ள தேவைகளை அவர் சந்திப்பாரா?" என்ற சந்தேகம் வரும்போதுதான் விசுவாசம் செயல்படத் தொடங்குகிறது. நாம் கொடுக்கும்போது, நம்முடைய பாதுகாப்பு நம்மிடம் உள்ள பணத்தில் இல்லை, தேவனிடத்தில் இருக்கிறது என்பதைச் செயலில் காட்டுகிறோம்.

நாம் சம்பாதிக்கும் பணம் நம்முடையது என்று நினைக்கும்போது, அதில் 10 சதவீதம் கொடுப்பது ஒரு 'வரியாகவோ' அல்லது பெரிய 'தியாகமாகவோ' தோன்றும். ஆனால், 100 சதவீதமும் தேவனுடையது என்று உணரும்போது, மீதமுள்ள 90 சதவீதத்தை நாம் எப்படிச் செலவழிக்கிறோம் என்பதற்கும் தேவனிடம் கணக்கு ஒப்புவிக்க வேண்டும் என்ற பொறுப்புணர்வு வரும். தசமபாகம் என்பது, "முழுவதும் உமக்குச் சொந்தம்" என்பதை நாம் ஒப்புக்கொள்ளும் ஒரு அடையாளச் செயல்.

பழைய ஏற்பாட்டில் தசமபாகம் சட்டமாகக் கொடுக்கப்பட்டது. புதிய ஏற்பாட்டில் அது ஒரு ஆவிக்குரிய பயிற்சியாக மாறுகிறது. நம்முடைய இருதயம் பணத்தின் மீது ஒட்டிக்கொள்ளாமல் இருக்கவும், பொருளாசை என்னும் விக்கிரகாராதனையிலிருந்து நம்மைப் பாதுகாக்கவும் தேவன் நமக்குக் கொடுத்த ஒரு கருவிதான் காணிக்கை அளிப்பது. நாம் கொடுக்கும்போது, "பணம் என் எஜமான் அல்ல, தேவனே என் எஜமான்" என்று பிரகடனம் செய்கிறோம்.

ஒரு விசாரணைக்காரன் எஜமானின் சொத்தை எஜமானுக்குப் பிரியமான காரியங்களுக்காகவே பயன்படுத்துவான். நாம் கொடுக்கும் பணம் சரியான முறையில், வேதாகம அடிப்படையில் பயன்படுத்தப்படுகிறதா என்று கவனிப்பதும் ஒரு விசுவாசியின் கடமை.

நாம் யாருக்குக் கொடுக்க வேண்டும்? எப்படிப் பயன்படுத்த வேண்டும்?

தேவன் நமக்குக் கொடுத்த பொருளாதார வளங்களை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்ற கேள்வி இயல்பானது. இது குறித்துப் புதிய ஏற்பாடு பல தெளிவான வழிகாட்டுதல்களைத் தருகிறது. கீழே உள்ள பிரிவுகள் புதிய ஏற்பாட்டுப் போதனையின் அடிப்படையில் அமைந்துள்ளன.

1) உள்ளூர் சபையின் தேவைகளுக்கு

ஆதித்திருச்சபையில் விசுவாசிகள் தங்கள் ஆஸ்திகளையும் பணத்தையும் சபையின் தேவைகளுக்குப் பயன்படுத்தினர் (அப்போஸ்தலர் 2:44–45; 4:32–35). இன்றைய சூழ்நிலையில் உள்ளூர் சபை தேவைகள் பின்வருமாறு இருக்கலாம்:

  • சபையின் வாடகை, மின்சாரம், தண்ணீர் போன்ற பராமரிப்புச் செலவுகள்
  • வேதாகமப் பயிற்சி வகுப்புகள்
  • பிற நிர்வாக மற்றும் சேவைத் தேவைகள் இவை அனைத்தும் தேவனுடைய ஊழியத்தின் ஒரு பகுதியே.

2) போதகருக்கு

தேவனுடைய வார்த்தையைப் போதிக்கும் உள்ளூர் சபை போதகர்களின் பராமரிப்புச் செலவிற்கு சபையின் மூலமாக நம்முடைய பணம் சென்று சேர வேண்டும். தேவனுடைய வார்த்தையைப் போதிப்பவர்களுக்கு உதவுவது புதிய ஏற்பாட்டின் தெளிவான போதனை.

  • "சுவிசேஷத்தை அறிவிக்கிறவர்களுக்குச் சுவிசேஷத்தினாலே ஜீவனமுண்டாகவேண்டுமென்று..." — 1 கொரிந்தியர் 9:13–14
  • "திருவசனத்திலே உபதேசிக்கப்படுகிறவன் உபதேசிக்கிறவனுக்குச் சகல நன்மைகளிலும் பகிர்ந்துகொடுக்கக்கடவன்." — கலாத்தியர் 6:6
  • "திருவசனத்திலும் உபதேசத்திலும் பிரயாசப்படுகிற மூப்பர்களை இரட்டிப்பான கனத்திற்குப் பாத்திரராக எண்ணவேண்டும்." — 1 தீமோத்தேயு 5:17

அதாவது, இன்று உண்மையான சுவிசேஷத்தை விசுவாசத்துடன் போதித்து, முழுமையாகவோ அல்லது முக்கியமாகவோ சபையின் பராமரிப்பை நம்பி ஊழியம் செய்யும் தேவ ஊழியர்களைத் தாங்குவது கிறிஸ்தவர்களின் ஆவிக்குரிய பொறுப்பாகும்.

3) குறைவிலுள்ள பரிசுத்தவான்களுக்கு சபையின் மூலமாக உதவி செய்யப்பட வேண்டும்.

வேதத்தின்படி விசுவாசிகளுக்கு இடையிலான அன்பு வார்த்தைகளால் மட்டுமல்ல, செயல்களாலும் வெளிப்பட வேண்டும்.

  • "பரிசுத்தவான்களுடைய குறைவில் அவர்களுக்குப் பகிர்ந்துகொடுங்கள்" (ரோமர் 12:13).
  • "சரீர சம்பந்தமானவைகளில் அவர்களுக்கு உதவிசெய்ய கடனாளிகளாயிருக்கிறார்கள்" (ரோமர் 15:26–27; 1கொரிந்தியர் 16:1–3).
  • "தன் சகோதரனுக்குக் குறைச்சலுண்டென்று கண்டு, தன் இருதயத்தை அடைத்துக்கொள்ளுகிறவன்..." (1யோவான் 3:17).

ஆதித்திருச்சபையில் அவர்கள் தங்கள் ஆஸ்திகளை விற்று, ஒவ்வொருவருக்கும் தேவையான அளவுக்குப் பகிர்ந்தளித்தார்கள்; அதனால் அவர்களில் ஒருவனுக்கும் குறைவிருக்கவில்லை (அப்போஸ்தலர் 2:44–45; 4:32–35). இன்றைய சூழ்நிலையில், சபை சகோதரர்கள் நோய்வாய்ப்படுதல், வேலை இழப்பு, பொருளாதார நெருக்கடி, அவசர மருத்துவச் செலவுகள் போன்றவற்றை எதிர்கொள்ளும்போது அவர்களுக்கு சபை உதவுவதே வேதம் போதிக்கும் உண்மையான அன்பாகும்.

4) ஏழைகள், விதவைகள் மற்றும் அனாதைகளுக்கு சபையின் மூலமாக உதவி செய்யப்பட வேண்டும்.

இயேசு கிறிஸ்து ஏழைகள் மீது தனிப்பட்ட கரிசனையைக் காட்டினார். பவுல் அப்போஸ்தலர்களிடமிருந்து பெற்ற முக்கிய ஆலோசனை "தரித்திரரை நினைத்துக்கொள்ள வேண்டும்" (கலாத்தியர் 2:10) என்பதே.

  • "திக்கற்ற பிள்ளைகளும் விதவைகளும் படுகிற உபத்திரவத்திலே அவர்களை விசாரிக்கிறதே... பிதாவாகிய தேவனுக்குமுன்பாக மாசில்லாத சுத்தமான பக்தியாயிருக்கிறது." — யாக்கோபு 1:27

உண்மையிலேயே தேவையில் இருக்கும் விதவைகள், அனாதைகள், நோயாளிகள் மற்றும் கடுமையான கஷ்டத்தில் இருக்கும் குடும்பங்கள் நமது காணிக்கைக்குத் தகுதியானவர்கள்.

5) மிஷனரிகளுக்கு சுவிசேஷ விரிவாக்கத்திற்கு சபையின் மூலமாக உதவி செய்யப்பட வேண்டும்.

"உலகமெங்கும் போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்" (மாற்கு 16:15) என்று இயேசு கொடுத்த மாபெரும் கட்டளையைத் தொடருவது ஒவ்வொரு கிறிஸ்தவனின் கடமையாகும்.

  • "அனுப்பப்படாவிட்டால் எப்படிப் பிரசங்கிப்பார்கள்?" (ரோமர் 10:14–15)
  • "நாம் சத்தியத்திற்கு உடன்வேலையாட்களாகும்படிக்கு அப்படிப்பட்டவர்களைச் சேர்த்துக்கொள்ளக் கடனாளிகளாயிருக்கிறோம்." (3 யோவான் 5–8)

சுவிசேஷ ஊழியத்திற்காக பிலிப்பி சபை அளித்த பொருளாதார ஆதரவை பவுல் பாராட்டினார் (பிலிப்பியர் 4:15,16). எனவே, சுவிசேஷம் புதிய பகுதிகளைச் சென்றடையவும், மிஷனரி ஊழியம் விரிவடையவும் நமது பொருளாதார ஆதரவு மிகவும் அவசியம்.

குறிப்பு: பொதுவாக, நாம் ஆவிக்குரிய உணவைப் பெறும் நம்பிக்கையான, வேதப்பூர்வமான மற்றும் வெளிப்படைத்தன்மை கொண்ட உள்ளூர் சபை மூலமாகவே நமது காணிக்கைகள் செலுத்தப்படுவது புதிய ஏற்பாட்டுப் போதனைக்கு ஏற்றதாக இருக்கும். எனினும், விசேஷ தேவைகள் அல்லது சுவிசேஷ விரிவாக்கச் சூழ்நிலைகளில், சபையின் அறிவோடும் விவேகத்தோடும் மற்ற வேதப்பூர்வமான ஊழியங்களுக்கு உதவுவதும் வேதக் கொள்கைகளுக்கு முரணானது அல்ல.

நாம் யாருக்குக் கொடுக்கக் கூடாது? எப்படிப் பயன்படுத்தக் கூடாது?

வேதம் தாராளமாகக் கொடுக்கச் சொல்வதோடு மட்டுமன்றி, தவறான வழியில் கொடுத்துவிடாமல் எச்சரிக்கையாக இருக்கவும் போதிக்கிறது.

1) கள்ளப் போதகர்கள் மற்றும் தவறான சுவிசேஷகர்களுக்கு கொடுக்கக் கூடாது.

"நாங்கள் உங்களுக்குப் பிரசங்கித்த சுவிசேஷத்தையல்லாமல், வேறொரு சுவிசேஷத்தை ஒருவன் உங்களுக்குப் பிரசங்கித்தால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன்" (கலாத்தியர் 1:8–9) என்று பவுல் கடுமையாக எச்சரித்தார். உலக செல்வம், சுகம், புகழ் ஆகியவற்றை மட்டுமே வாக்குறுதியளிக்கும் 'செழிப்பு உபதேசம்' வேதத்தின் சுவிசேஷம் அல்ல. அதிகப்படியான காணிக்கைகளை வற்புறுத்துபவர்கள், ஏமாற்று வாக்குறுதிகள் மற்றும் கள்ளத் தீர்க்கதரிசனங்களை உரைக்கும் ஊழியங்களுக்கு நமது காணிக்கைகளைக் கொடுக்கக் கூடாது.

2) பண ஆசை கொண்ட தலைவர்களுக்கு கொடுக்கக் கூடாது.

புதிய ஏற்பாட்டில் சபைத்தலைவர்களுக்குப் பண ஆசை இல்லாதிருப்பது ஒரு முக்கிய தகுதியாகும்.

  • 1 தீமோத்தேயு 3:3 — திரவிய ஆசையற்றவனும்,
  • தீத்து 1:7, 11 — இழிவான ஆதாயத்தை இச்சிக்காதவனும்.

மேலும் வேதம் இவ்வாறு எச்சரிக்கிறது:

  • "பொருளாசையுடையவர்களாய், தந்திரமான வார்த்தைகளால் உங்களை ஆதாயமாக்கிக்கொள்வார்கள்" (2 பேதுரு 2:3).
  • "பிலேயாம் கூலிக்காகச் செய்த வஞ்சகத்திலே விரைந்தோடி..." (யூதா 1:11).
  • "தேவபக்தியை ஆதாயத்தொழிலென்று எண்ணுகிறவர்களுடைய..." (1 தீமோத்தேயு 6:5). பண ஆசையுடன், வெளிப்படைத்தன்மை இல்லாமல், பணத்தைத் தங்களின் தனிப்பட்ட ஆடம்பரங்களுக்குத் தவறாகப் பயன்படுத்தும் ஊழியர்களுக்கு நாம் காணிக்கைகளைக் கொடுக்கக் கூடாது.

3) கட்டாயப்படுத்தப்பட்ட அல்லது ஏமாற்றி காணிக்கை வாங்கும் நபர்களுக்கு கொடுக்கக் கூடாது.

"விசனமாயுமல்ல, கட்டாயமாயுமல்ல... உற்சாகமாய்க் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார்" (2கொரிந்தியர் 9:7). பயம், அழுத்தம், சாபத்தின் பயம் அல்லது ஆசீர்வாதங்களின் பெயரால் கொடுக்கப்படும் காணிக்கைகளை தேவன் விரும்புவதில்லை. அதேபோல, "இவ்வளவு கொடுத்தால், அவ்வளவு கிடைக்கும்" என்ற வாக்குறுதிகளுடன் வாங்கப்படும் காணிக்கைகள் ஏமாற்று வேலையாகும். தேவன் மனப்பூர்வமாகவும், மகிழ்ச்சியுடனும் கொடுக்கும் காணிக்கையையே விரும்புகிறார்.

4) குடும்பப் பொறுப்புகளைப் புறக்கணித்துக் கொடுப்பது

பெற்றோரைப் பராமரிப்பதைப் புறக்கணித்துவிட்டு, அதை 'தேவனுக்குக் காணிக்கை' (கொர்பான்) என்று கூறும் பாரம்பரியத்தை இயேசு கிறிஸ்து கண்டித்தார் (மாற்கு 7:11–13). வேதம் தெளிவாகச் சொல்கிறது:

  • "ஒருவன் தன் சொந்த ஜனங்களையும், விசேஷமாகத் தன் வீட்டாரையும் விசாரியாமற்போனால், அவன் விசுவாசத்தை மறுதலித்தவனும், அவிசுவாசியிலும் கெட்டவனுமாயிருப்பான்." (1தீமோத்தேயு 5:8) எனவே, குடும்பத் தேவைகள், குழந்தைகளின் கல்வி, பெற்றோரின் பராமரிப்பு ஆகியவற்றைப் புறக்கணித்துவிட்டுத் தேவாலயத்திற்குக் கொடுக்கும் காணிக்கைகள் சரியானவை அல்ல.

முக்கியமான ஆவிக்குரிய எச்சரிக்கை:

நமது காணிக்கைகள் தவறாகப் பயன்படுத்தப்படும் உள்ளூர் சபையில் அவற்றைக் கொடுக்கக் கூடாது. நம்பிக்கையாகவும், வேதப்பூர்வமாகவும், முழு வெளிப்படைத்தன்மையோடும் நிர்வகிக்கப்படும் உள்ளூர் சபையிலேயே நமது காணிக்கைகளைச் செலுத்தி, அந்தச் சபையிலேயே நாம் உறுப்பினர்களாக இருக்க வேண்டும். ஏனென்றால், நம்மிடம் ஒப்படைக்கப்பட்ட ஒவ்வொரு காசுக்கும், ஒவ்வொரு வளத்திற்கும் நாம் தேவனுக்கு முன்பாகக் கணக்கு ஒப்புவிக்க வேண்டியவர்களாக இருக்கிறோம் (ரோமர் 14:12). நமது காணிக்கை தேவனுடைய மகிமைக்காகவா அல்லது மனிதர்களின் சுயநலத்திற்காகவா என்பதை விசுவாசிகளாகிய நாம் கவனமாக ஆராய வேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளது.

முடிவுரை

பழைய ஏற்பாட்டின் சதவீத அடிப்படையிலான முறையிலிருந்து, புதிய ஏற்பாட்டின் கிருபையின் அடிப்படையிலான தாராள குணத்தை நோக்கி நாம் அழைக்கப்பட்டுள்ளோம். தேவன் சதவீதத்தை அல்ல — நமது இருதயத்தையே பார்க்கிறார்.

எனவே, இன்றைய கிறிஸ்தவர்களின் காணிக்கை விவேகத்துடன், பரிசுத்த ஆவியானவரின் வழிநடத்துதலுடன், சுவிசேஷ விரிவாக்கத்தைக் கருத்தில் கொண்டு, உண்மையான ஊழியர்களை ஆதரிப்பதற்காக, ஏழைகளை நினைவுகூர்ந்து, வெளிப்படைத்தன்மையுள்ள பணிகளுக்காக இருக்க வேண்டும். அதேபோல கள்ளப் போதனை, பண ஆசை கொண்ட ஊழியம், ஏமாற்று வேலை, ஆடம்பரம், வற்புறுத்தி பணம் பிடுங்கும் இடங்களில் நமது காணிக்கைகளை கொடுக்கக் கூடாது.

கொடுப்பது என்பது வெறும் பணம் அல்ல; அது ஒரு ஆராதனை. நமது காணிக்கை தேவனுடைய ராஜ்யத்தைக் கட்டியெழுப்ப வேண்டுமே தவிர, மனிதர்களின் ராஜ்யங்களை அல்ல.

 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.