திருச்சபை

கிறிஸ்துவின் மெய்யான திருச்சபை
ஆசிரியர்: ஜே. சி. ரைல்
வாசிப்பதற்கான நேரம்: 9 நிமிடங்கள்

"இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை" (மத்தேயு 16:18).

கல்லின்மேல் கட்டப்பட்ட சபையில் நீங்கள் இருக்கிறீர்களா? ஒரே மெய்யான திருச்சபையில் நீங்கள் அங்கத்தினராக இருக்கிறீர்களா? இவை மிகவும் முக்கியமான கேள்விகள். இங்கே நாம் கவனிக்க வேண்டிய ஐந்து அம்சங்கள் கூறப்பட்டுள்ளன:

  1. கட்டடம் – எனது சபை
  2. கட்டுகிறவர் – கிறிஸ்து
  3. அஸ்திவாரம் – இந்தக் கல்
  4. ஆபத்து – பாதாளத்தின் வாசல்கள்
  5. பாதுகாப்பு – அதை மேற்கொள்ளாது
  1. கட்டடம் இங்கே சபை என்பது ஒரு கட்டடத்தைக் குறிக்கவில்லை. கிழக்கத்திய திருச்சபையோ, ஆங்கில திருச்சபையோ, பாப்திஸ்து திருச்சபையோ, சகோதர திருச்சபையோ, ரோம திருச்சபையோ அல்ல. இயேசு "என் சபை" என்று கூறும்போது, கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவிலுள்ள எல்லா மெய்யான விசுவாசிகளையும், மனந்திரும்பிய பரிசுத்தவான்கள் எல்லாரையுமே குறிப்பிடுகிறார். மறுபடியும் பிறந்து, பாவத்திலிருந்து மனந்திரும்பி, பரிசுத்த ஆவியினால் பரிசுத்தமாக்கப்பட்ட அனைவரையும் அவர் குறிப்பிடுகிறார். மிகவும் ஆழமான இரக்கமும், மகாபெரிய வல்லமையும் கர்த்தராகிய இயேசுவில் ஒன்றிணைகின்றன! எனவே ஒவ்வொரு விசுவாசியும் நிச்சயமாக அவரை நம்பலாம்.

அ) நீங்கள் ஏழ்மையும் தேவையும் உள்ளவராக இருக்கிறீர்களா? இயேசுவும் அப்படித்தான் இருந்தார். அவர் இரவல் படகில் நின்று பிரசங்கித்தார்; இரவல் கழுதையின்மேல் எருசலேமுக்குச் சவாரி சென்றார்; அவரை இரவல் கல்லறையில்தான் அடக்கம் செய்தார்கள். நரிகளுக்குக் குழிகளும் ஆகாயத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் இருந்தன; அவருக்கோ, தலைசாய்க்க இடமிருக்கவில்லை. ஆ) நீங்கள் இவ்வுலகில் தனிமையாக இருக்கிறீர்களா? இயேசுவும் அப்படித்தான் இருந்தார். அவரைப் பின்பற்றிய சிலர் மீன்பிடிக்கிறவர்களாகவும், சமுதாயத்தால் புறக்கணிக்கப்பட்ட ஆயக்காரர்களாகவும், பாவிகளாகவும் இருந்தார்கள். இ) நீங்கள் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டு, தவறாக நடத்தப்பட்டு உபத்திரவப்படுகிறீர்களா? அவ்வாறுதான் இயேசுவும் நடத்தப்பட்டார். சமுதாயத்தால் தூக்கியெறியப்பட்டவர்கள், தீயவர்கள் ஆகியோரின் நண்பன் என்று அவர் கூறப்பட்டார். அவர் அதிகம் சாப்பிட்டு, அதிகம் குடிப்பவர் என்று அவரது எதிரிகள் சொன்னார்கள். அவர் பிசாசு பிடித்தவர் என்றும் பைத்தியக்காரன் என்றும் இகழப்பட்டார். அவர் தவறாகக் குற்றம்சாட்டப்பட்டு அநியாயமாக மரண தண்டனை விதிக்கப்பட்டார். ஈ) நீங்கள் சோதிக்கப்படுகிறீர்களா? இயேசுவும் சோதிக்கப்பட்டார். அவரது சோதனையைக் குறித்து மத்தேயு, மாற்கு, லூக்கா ஆகிய நற்செய்திகளில் நீங்கள் வாசிக்கலாம். பிசாசு தீய ஆலோசனைகளை உங்களுக்கு வழங்குவதை எப்போதாவது உணர்ந்து இருக்கிறீர்களா? இயேசுவும் அவ்வாறே சோதிக்கப்பட்டார். உ) மிகப்பெரிய மனப்போராட்டத்தை நீங்கள் எப்போதாவது அனுபவித்ததுண்டா? கடவுள் உங்களைக் கைவிட்டார் என்று நீங்கள் எப்போதாவது நினைத்ததுண்டா? இயேசுவும் அவ்வாறு நினைத்திருக்கிறார். அவர் கெத்செமனே தோட்டத்திலும் சிலுவையிலும் அனுபவித்த பாடுகளின் அளவை யாரால் சொல்ல முடியும்?

நமது இருதயத்தின் தேவைகளுக்கும் விருப்பங்களுக்கும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவைத் தவிர, மிகப்பொருத்தமான வேறொரு இரட்சகரைக் கண்டுபிடிப்பது இயலாத காரியம். இயேசுவைவிட அவரின் தாயாகிய மரியாளும் மற்ற பரிசுத்தவான்களும் நம்மைப்பற்றி அதிகம் அறிந்தவர்கள் என்ற கருத்துக்குச் செவிகொடுக்க வேண்டாம். கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் தன்மையைப்பற்றி வேதாகமம் என்ன போதிக்கிறது என்ற அறியாமையினாலேயே அவ்வாறு கூறப்படுகிறது. தேவமனிதனாகிய கர்த்தராகிய இயேசுவில் ஆறுதலைப் பெற்றுக்கொண்ட ஒரு மனிதனுக்கு, வேறு பரிசுத்தவான்களிடத்திலிருந்தோ, தேவதூதர்களிடத்திலிருந்தோ, கன்னி மரியாளிடத்திலிருந்தோ எந்த ஆறுதலும் தேவையில்லை.

  1. மெய்யான கிறிஸ்தவர்களது வாழ்விலும் விசுவாசத்தில் பெரிய பலவீனம் காணப்படலாம். புயல் வீசியபோது சீஷர்கள் நடந்துகொண்டதைவிட இதற்கு வேறு என்ன ஆதாரம் தேவை? "நாங்கள் மடிந்துபோகிறது உமக்குக் கவலையில்லையா?" என்று கூறி பயத்தினால் இயேசுவை எழுப்பினார்கள். அவர்கள் பொறுமையற்றவர்களாக இருந்தார்கள்; இயேசு எழும்வரை அவர்களால் பொறுத்திருக்க முடியவில்லை. அவர்கள் அவிசுவாசமுள்ளவர்களாக இருந்தார்கள் - இயேசு தங்களுடன் இருக்கும்போது தாங்கள் எப்படி மடிய முடியும் என அவர்கள் சிந்திக்கவில்லை. அவர்கள் நம்பிக்கையிழந்தார்கள் - "உமக்குக் கவலையில்லையா?" என்று கதறினார்கள்.

அவர்கள் பயப்பட்டிருக்க வேண்டியதில்லை. அவரது அன்பும் இரக்கமும் அவர்களுக்கு இதுவரை கிடைத்ததே இல்லையா? நாம் பயப்படும்போது ஞாபக சக்தியை இழந்துவிடுவோம்! பல கிறிஸ்தவர்கள் இப்படிப்பட்ட சூழ்நிலையில் இருந்திருப்பார்கள் என்று நான் அறிவேன். அவர்கள் கிறிஸ்துவை முழுவதுமாக நம்புவதாக நினைக்கிறார்கள். ஆனால் எதிர்பாராத சோதனை, பயம், சந்தேகம் வரும்போது அவநம்பிக்கை வெள்ளம்போல அவர்களைச் சூழ்ந்துவிடுகிறது.

இவ்வுலக வாழ்வில் யாருமே பரிபூரண கிறிஸ்தவர்களாக வாழ முடியாது என்பதுதான் உண்மை. விசுவாசிகளின் தகப்பனாகிய ஆபிரகாமே எகிப்தியருக்குப் பயந்ததினால் தனது மனைவியைச் சகோதரி என்று சொல்லச் சொன்னான். கோலியாத் என்னும் ராட்சதனை எதிர்கொள்ளத்தக்க விசுவாசமுள்ள தாவீது; சவுல் தன்னைக் கொலைசெய்யத் தேடினாலும் ஒருநாளில் இஸ்ரவேலுக்குத் தான் கடவுளால் ஏற்படுத்தப்பட்ட அரசனாவான் என்பதை விசுவாசித்தான். ஆனாலும் ஒரு சந்தர்ப்பத்தில் அவன் பயத்தினால் மேற்கொள்ளப்பட்டு, "நான் எந்த நாளிலாகிலும் ஒருநாள் சவுலின் கையினாலே மடிந்துபோவேன்" (1 சாமுவேல் 27:1) என்று அழுதான்.

எந்த விசுவாசியாவது எல்லாப் பிரச்சினையிலும் கிறிஸ்துவில் அசையாத அன்பும் நம்பிக்கையும் வைத்திருக்கக்கூடுமா? அப்படியானால் அது நல்லது! ஆனால் உங்கள் விசுவாசம் எப்போதாவது மெய்யான சோதனையைச் சந்தித்திருக்கிறதா என்று நான் கேட்க விரும்புகிறேன். சோதனையில்லாமல் உங்கள் பலவீனத்தை அறிந்துகொள்வது எளிதானது அல்ல. எசேக்கியாவின் பலவீனங்கள் என்ன என்பதைக் காட்ட அவனை கர்த்தர் அப்படியே விட்டுவிட வேண்டியிருந்தது (2 நாளாகமம் 32:31).

இளம் கிறிஸ்தவர்கள் தங்களில் இவ்வித காரியங்களைக் காணமுடியும் என்பதால் இந்த எச்சரிப்பை நான் கொடுக்க விரும்புகிறேன். தங்கள் பலவீனத்தைக் கண்ட அவர்கள் சோர்ந்துபோவதை நான் தடுக்க விரும்புகிறேன். இளம் விசுவாசிகள் மெய்யான விசுவாசத்தையும் கிருபையையும் பெற்றிருந்தாலும், சிலவேளைகளில் பயத்தையும் சந்தேகத்தையும் கொண்டிருப்பார்கள் என்பதை உணர வேண்டும். பேதுரு, யாக்கோபு, யோவான் ஆகியோர் மெய்யான சீஷர்களாக இருந்தாலும், பயமே இல்லாத அளவிற்கு அவர்கள் ஆவிக்குரியவர்களாகக் காணப்படவில்லை.

எல்லாவற்றிற்கும் மேலாக, கிறிஸ்தவர்கள் மற்ற விசுவாசிகளிடம் சிலவேளை காணப்படக்கூடிய பலவீனங்களை உணர்ந்துகொள்ள வேண்டும். சீக்கிரமாக யாரையும் நியாயந்தீர்த்துவிடாதீர்கள். தங்கத்திலே மாசுகள் கலந்திருப்பதால் அது மதிப்பற்றதாகிவிடுமா? இந்தப் படகிலே இருந்த சீஷர்கள், எல்லாவற்றையும் விட்டு கிறிஸ்துவைப் பின்பற்றியவர்கள்; அவரை விசுவாசித்தவர்கள்; அவரை நேசித்தவர்கள். ஒருவன் எல்லாவற்றையும் விட்டு கிறிஸ்துவைப் பின்பற்றினாலும் சிலவேளைகளில் பயத்தினாலும் சந்தேகத்தினாலும் மேற்கொள்ளப்படுவது சாத்தியமே.

  1. கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் வல்லமையை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும். இயேசு இருந்த படகின்மீது அலைகள் வந்து மோதின. சீஷர்கள் பயந்தார்கள். சிருஷ்டிகர் மட்டுமே செய்யக்கூடிய வல்லமையான அற்புதத்தை இயேசு செய்தார். உங்கள் வாழ்விலும் சிலவேளைகளில் நீங்கள் புயலைச் சந்திக்கலாம். அந்த நேரத்தில் இயேசுவின் வல்லமையைத் தெளிவாக அறிந்திருப்பது நல்லது. இரட்சகர் வல்லமையுள்ளவர் என்பதை ஒவ்வொரு விசுவாசியும் அறிந்திருக்க வேண்டும். மீட்பர் ராஜாதி ராஜாவும் கர்த்தாதி கர்த்தருமாக இருக்கிறார். இயேசுவின் வல்லமையைப் பற்றி இன்னும் அறிந்துகொள்ளுங்கள்:

அ) அவரது படைப்புகளில் அவரது வல்லமையைக் கற்றுக்கொள்ளுங்கள். "உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை" (யோவான் 1:3). சூரியன் முதல் பூமியிலுள்ள சிறிய புழுவரை அனைத்துமே அவரால் படைக்கப்பட்டன. அவர் கட்டளையிட அவை உருவாகின. இது மாபெரும் வல்லமையில்லையா? ஆ) அவரது பராமரிப்பின் செயல்களிலே அவரது வல்லமையைப்பற்றி கற்றுக்கொள்ளுங்கள். சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் எல்லாம் ஒரு பிழையற்ற ஒழுங்கில் இயங்குகின்றன. பருவ காலங்கள் எல்லாம் ஒன்றன்பின் ஒன்றாக கிரமத்துடன் வருகின்றன. எல்லாவற்றையும் தாங்குகிற அவராலேயே ராஜ்யங்கள் எழுகின்றன, வளருகின்றன, தேய்கின்றன, மறைகின்றன. இ) இயேசுகிறிஸ்துவினால் செய்யப்பட்ட அற்புதங்களில் அவரது வல்லமையைப் பாருங்கள். ஒரு வார்த்தையினாலே இறந்தவர்களை எழுப்பினார்; குருடருக்குப் பார்வை தந்தார்; செவிடரைக் கேட்கச் செய்தார்; ஊமையரைப் பேசச் செய்தார். எல்லாவற்றிற்கும் மேலாகப் பாவிகள் தேவனுடைய ராஜ்யத்தைக் காணவும் அதில் நுழையவும் செய்தார்! மறுபடியும் இந்த அத்தியாயத்தின் ஆரம்பத்திலுள்ள வேதபகுதியைப் பாருங்கள். உங்கள் இருதயம் எந்த வகையான பயத்தினாலும் கவலையினாலும் நிறைந்திருந்தாலும், உங்கள் இருதயத்தைப் பார்த்து "இரையாதே, அமைதலாயிரு" என்று சொல்லக்கூடியவராக இயேசு இருக்கிறார்.

நீங்களும் சீஷர்களைப் போல இயேசுவிடம் அமைதிக்காகக் கதறுகிறீர்களா? நீங்கள் கடவுளோடு சமாதானமாக இருந்தும் ஏழ்மை, வலி, முதுமை, அன்பானவரின் மரணம் ஆகியவற்றினால் உங்கள் இதயம் பாரமடைந்திருக்கிறதா? "இரையாதே, அமைதலாயிரு" என்று இயேசு உங்கள் இருதயத்திடம் சொல்லமுடியும். நீங்கள் கிறிஸ்துவின் வல்லமையைப் பற்றிய சரியான அறிவுடையவராக இருக்க வேண்டும். நீங்கள் எதைப் பற்றிச் சந்தேகப்பட்டாலும் கிறிஸ்துவின் வல்லமையைப்பற்றி மட்டும் சந்தேகிக்கக் கூடாது. "தம்மூலமாய் தேவனிடத்தில் சேருகிறவர்களை... முற்றுமுடிய இரட்சிக்க வல்லவராயுமிருக்கிறார்" (எபிரெயர் 7:25).

  1. விசுவாசிகளின் பலவீனங்களில் இயேசு அவர்களை எவ்வளவு பொறுமையாகக் கையாளுகிறார். பயந்த சீஷர்களிடம் நமது கர்த்தர் கோபத்துடன் பதிலளிக்கவில்லை. "ஏன் பயப்பட்டீர்கள்? உங்களுக்கு இன்னும் விசுவாசமில்லையா?" என்று கேட்டார். அவர்களைக் கடுமையாகக் கடிந்துகொள்ளாமல் இரண்டு சாதாரண கேள்விகளைக் கேட்டார். அவற்றிலிருந்து நமது கர்த்தரின் கருணையைக் கண்ணாரக் காண்கிறோம். சீஷர்களோடு நமது இரட்சகரின் நடத்தை முழுவதையும் நாம் கருத்துடன் கவனிக்க வேண்டும்.

எப்பொழுதுமே கர்த்தருடைய போதனைகளை சீஷர்கள் முழுவதும் புரிந்துகொண்டதாகத் தெரியவில்லை. அவர்களது எஜமானாகிய கிறிஸ்துவுக்கு என்ன நடக்கப்போகிறது என்பதை எளிமையான வார்த்தைகளினாலும் தெளிவான கூற்றுகளினாலும் எடுத்துக்கூறியும் அது அவர்கள் மனதில் பெரிய பாதிப்பை உண்டுபண்ணவில்லை. சிலவேளைகளில் தங்களில் யார் பெரியவன் என்பதற்காகத் தங்களுக்குள் சண்டை போட்டுக்கொண்டார்கள். ஒரு சந்தர்ப்பத்தில் இரண்டு சீஷர்கள், இயேசுவைப் புறக்கணித்த ஒரு கிராமத்தின் மீது வானத்திலிருந்து நெருப்பு வந்து அழிக்க விரும்பினார்கள். இயேசு கைதுசெய்யப்பட்டபோது அவர்களில் பெரும்பாலானவர்கள் ஓடிவிட்டார்கள். பேதுரு மூன்று முறை அவரை மறுதலித்தான்.

இவ்விதமான சீஷர்களின் நடக்கைகளை இயேசு எவ்வாறு எதிர்கொண்டார்? அவர்களை அவர் முட்டாள்கள் என்று கடிந்துகொள்ளவோ, கோழைகள் என்று புறக்கணிக்கவோ இல்லை. எப்போதுமே அவர்களை மென்மையாக நடத்தினார். அவர்களால் புரிந்துகொள்ளக்கூடிய காரியங்களைக் கொஞ்சம் கொஞ்சமாக அவர்களுக்குப் போதித்தார். அவரது போதனைகள் எப்போதும் இரக்கமும், ஆறுதலும், உணர்வுபூர்வமானதுமாக இருந்தன. கர்த்தராகிய இயேசு இரக்கமே உருவானவர் என்பதை முழு உலகமும் அறிந்துகொள்ள விரும்புகிறேன். தமது சீஷர்களில் பலமுள்ளவர்களைப் பராமரிப்பதைப்போலவே சிறியவர்களையும் பராமரிக்கிறார். எல்லா விசுவாசிகளையும் பிதா அவரிடம் கொடுத்திருக்கிறார். அவர்களது பலவீனங்கள் மத்தியிலும் அவர்களை அவர் பரலோகத்தில் பத்திரமாகக் கொண்டுபோய்ச் சேர்ப்பார்.

இந்த அத்தியாயத்தின் ஆரம்பத்தில் சொன்னதையே திரும்பச் சொல்லி முடிக்கிறேன். எனது வாசகர்கள் சுவிசேஷங்களுக்கும் இந்த அத்தியாயத்தின் ஐந்து பிரிவுகளுக்கும் அதிக கவனம் செலுத்த வேண்டும். ஒவ்வொருவரும் கிறிஸ்துவை அறியவேண்டும், நன்றாக அறிய வேண்டும். அவரால் நித்திய வாழ்வைப் பெற்றுக்கொள்ள வேண்டும். கிறிஸ்துவை அதிகமதிகமாக அறிந்துகொள்வதே பரிசுத்தம் ஆகும்.

 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

Join WhatsApp எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.