வேதாகமத்தின் தேவனுக்கு எதிராக வைக்கப்பட்ட விமர்சனங்களில், அவர் இஸ்ரவேலர்கள் மூலமாக கானானியர்களை அழித்து அவர்களின் தேசத்தை ஆக்கிரமிக்கும்படி செய்தார் என்பது ஒரு பெரிய குற்றச்சாட்டு. (யாத்திராகமம் 23:24), (எண்ணாகமம் 33:51-53), (உபாகமம் 7:16, 20:16), (யோசுவா 6:21, 10:40). ஆகிய இந்த வசனங்களை மேற்கோள் காட்டுவார்கள். தொடர்ந்து வாசிக்க...
வேதாகமத்தின் தேவனுக்கு எதிராக வைக்கப்பட்ட விமர்சனங்களில், அவர் இஸ்ரவேலர்கள் மூலமாக கானானியர்களை அழித்து அவர்களின் தேசத்தை ஆக்கிரமிக்கும்படி செய்தார் என்பது ஒரு பெரிய குற்றச்சாட்டு. (யாத்திராகமம் 23:24), (எண்ணாகமம் 33:51-53), (உபாகமம் 7:16, 20:16), (யோசுவா 6:21, 10:40). ஆகிய இந்த வசனங்களை மேற்கோள் காட்டுவார்கள். குறிப்பாக மனித நேயவாதிகள் என்று அழைக்கப்படும் குழுவால் இந்த விமர்சனம் செய்யப்படுகிறது. இந்தக் குழுவைக் குறித்து நான் சிந்திக்கும் போதெல்லாம் எனக்கு வியப்பாக தான் இருக்கும், ஏனென்றால் அவர்களுக்கென்று எந்தவித குறிக்கோள் இருக்காது. மனிதநேயவாதிகளில் யாரை முன் ஆதாரமாக எடுத்துக்கொள்வது ஹிட்லரையா? அல்லது அன்னை தெரசாவையா? என்ற கேள்விக்கு அவர்களிடம் பதில் இல்லை. குழந்தைகள் உட்பட லட்சக்கணக்கான மக்களை ஹிட்லர் கொன்று குவித்தார், அதற்கு நேர்மாறாக அன்னை தெரசா லட்சக்கணக்கான மக்களுக்கு சிறந்த சேவையை செய்தார். ஆனால் இந்த இருவருமே மனிதநேயவாதிகள் தான். ஒருவேளை அன்னை தெரசாவையே உதாரணமாக எடுத்துக் கொண்டால், எந்த அடிப்படையில் அன்னை தெரிசா பின்பற்றுவது சரியானது என்று சொல்வார்கள்? மனித நேயங்களைப் பற்றி பேசுபவர்களுக்கு அவற்றைப் பற்றி எப்படித் தெரியும்? ஹிட்லரும் ஒரு மனிதானே? அவரது மதிப்புகளை ஏன் பின்பற்றக்கூடாது? சொல்லப்போனால் உலகிற்கு மனித நேயங்களைப் பற்றி பரிசுத்த வேதாகமமே போதித்தது. வேதத்தில் எழுதப்பட்ட வார்த்தைகளுடன், அவற்றைப் பின்பற்றி, உலகம் எங்கிலும் உள்ள மிஷனரிகள் செய்த மாபெரும் சேவைகள் மற்றும் போராட்டங்களும் இந்த மனித நேயத்திற்கு அடிப்படையாக உள்ளது. வேதத்திலுள்ள சில மனிதநேய விழுமியங்களைத் திருடி, அதே வேதத்தின் மீது குற்றம் சாட்டுவது மனித நேயவாதிகளின் தாழ்ந்த மனப்பான்மைக்கு நல்ல சான்றாக இருக்கிறது.
இன்று உலகம் பாவத்தால் மூழ்கி இருப்பதற்கு மனித சுதந்திரக் கோட்பாடு என்று சொல்லப்படுகிற இந்த மனித நேயவாதிகளின் மகத்தான பணியே! நான் மனித சுதந்திரத்தை மதிக்கிறேன், ஏனென்றால் வேதாகமம் அதை தெளிவாகக் போதிக்கிறது, ஆனால் இவர்கள் கொண்டு வரும் சுதந்திரக் கோட்பாடு என்பது ஒழுக்கத்தின் கட்டுப்பாட்டுக்குள் இருக்காது. உதாரணமாக: ஓரினச்சேர்க்கை, கருக்கலைப்பு, விபச்சாரம், மிருகத்தோடு புணருதால் இவையெல்லாம் தற்போது சட்டத்திற்கு இவர்கள் கொண்டு வந்த சுதந்திரக் கோட்பாட்டின் விளைவு.
இனி நாம் கானானியர்களைப் பற்றிய விஷயத்தில் வேதத்தின் தேவனுக்கு எதிரான விமர்சனத்திற்கு வருவோம்; உண்மையாக சொல்லப்போனால், இஸ்ரவேலர்கள் கானானியர்களின் தேசத்தை ஆக்கிரமிக்கவில்லை, அது ஆபிரகாமிற்கு 400 ஆண்டுகளுக்கு முன்பே தேவனால் வாக்குறுதி அளிக்கப்பட்ட நிலத்தை அவர்கள் கைப்பற்றினர். இந்த விஷயம் ஆபிரகாமுக்கு தேவன் செய்துக்கொடுத்த பிரமாணத்தினால் நமக்குத் தெளிவாகிறது.
ஆதியாகமம் 15:18-21 “அந்நாளிலே கர்த்தர் ஆபிராமோடே உடன்படிக்கைபண்ணி, எகிப்தின் நதிதுவக்கி ஐபிராத்து நதி என்னும் பெரிய நதிமட்டுமுள்ளதும், கேனியரும், கெனிசியரும், கத்மோனியரும், ஏத்தியரும், பெரிசியரும், ரெப்பாயீமியரும், எமோரியரும், கானானியரும், கிர்காசியரும், எபூசியரும் என்பவர்கள் இருக்கிறதுமான இந்தத் தேசத்தை உன் சந்ததிக்குக் கொடுத்தேன் என்றார்.”
தேவன் ஆபிரகாமை கானானுக்குக் கொண்டுவந்ததே, அவருடைய சந்ததியினருக்கு நிலத்தை சுதந்தரமாகக் கொடுப்பதற்காக “கர்த்தர் ஆபிராமை நோக்கி: நீ உன் தேசத்தையும், உன் இனத்தையும், உன் தகப்பனுடைய வீட்டையும் விட்டுப் புறப்பட்டு, நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்துக்குப் போ. நான் உன்னைப் பெரிய ஜாதியாக்கி, உன்னை ஆசீர்வதித்து, உன் பேரைப் பெருமைப்படுத்துவேன்; நீ ஆசீர்வாதமாய் இருப்பாய்.” (ஆதியாகமம் 12:1,2). எனவே இஸ்ரவேலர்கள் செய்ததை ஆக்கிரமிப்பு என்று சொல்லமுடியாது. வேதத்தின் படி சகலமும் தேவனுடையதாக இருக்கும்போது. “இதோ, வானங்களும் வானாதிவானங்களும், பூமியும் அதிலுள்ள யாவும், உன் தேவனாகிய கர்த்தருடையவைகள்.” (உபாகமம் 10:14) அவர் விரும்பும் மக்களுக்கு அந்த நிலத்தை கொடுப்பது அவருடைய விரும்ப்பம் அல்லவா! (அதற்கு நியாயமான காரணங்கள் உள்ளன).
அதன் ஒரு பகுதியாக, வேதாகமத்தின் தேவன் கானானியர்களை அழித்து, அந்த நிலத்தை இஸ்ரவேலர்களுக்கு பகிர்ந்தளித்தது மட்டுமல்லாமல், ஓரியர்களைத் துரத்திவிட்டு, தேவன் "வெறுத்த" ஏசாவின் சந்ததியினருக்கு நிலத்தை கொடுத்தார். “அப்படியே, யாக்கோபைச் சிநேகித்து, ஏசாவை வெறுத்தேன் என்றும் எழுதியிருக்கிறது.” (ரோமர் 9:13) (உபாகமம் 2:5) “அவர்களோடே போர்செய்யவேண்டாம்; அவர்கள் தேசத்திலே ஒரு அடி நிலமும் உங்களுக்குக் கொடேன்; சேயீர் மலைநாட்டை ஏசாவுக்குச் சுதந்தரமாகக் கொடுத்திருக்கிறேன்.” (உபாகமம் 2:21,22) “கர்த்தரோ சேயீரில் குடியிருந்த ஏசாவின் புத்திரருக்கு முன்பாக ஓரியரை அழிக்க, அவர்கள் அந்த ஜனங்களைத் துரத்திவிட்டு, அவர்கள் இருந்த ஸ்தானத்தில் இந்நாள்வரைக்கும் குடியிருக்கிறதுபோலவும், கப்தோரிலிருந்து புறப்பட்ட கப்தோரியர் ஆசேரீம் தொடங்கி ஆசாமட்டும் குடியிருந்த ஆவியரை அழித்து, அவர்கள் இருந்த ஸ்தானத்திலே குடியேறினது போலவும்,”
சபிக்கப்பட்ட லோத்தின் சந்ததியாராகிய அம்மோனியர்களுக்கும் மோவாபியர்களுக்கும் தேவன் அவ்வாறே செய்தார்.
உபாகமம் 2:18-21 “நீ ஆர் பட்டணம் இருக்கிற மோவாபின் எல்லையை இன்றைக்குக் கடந்து, அம்மோன் புத்திரருக்கு எதிராகச் சேரப்போகிறாய்; நீ அவர்களை வருத்தப்படுத்தவும் அவர்களோடே போர்செய்யவும் வேண்டாம்; அம்மோன் புத்திரரின் தேசத்தில் ஒன்றும் உனக்குச் சுதந்தரமாகக் கொடேன்; அதை லோத் புத்திரருக்குச் சுதந்தரமாகக் கொடுத்திருக்கிறேன். அதுவும் இராட்சதருடைய தேசமாக எண்ணப்பட்டது; முற்காலத்தில் இராட்சதர் அதிலே குடியிருந்தார்கள், அம்மோனியர் அவர்களைச் சம்சூமியர் என்று சொல்லுகிறார்கள். அவர்கள் திரளானவர்களும் ஏனாக்கியரைப்போல நெடியவர்களுமான பலத்த ஜனங்களாயிருந்தார்கள்; கர்த்தரோ சேயீரில் குடியிருந்த ஏசாவின் புத்திரருக்கு முன்பாக ஓரியரை அழிக்க, அவர்கள் அந்த ஜனங்களைத் துரத்திவிட்டு, அவர்கள் இருந்த ஸ்தானத்தில் இந்நாள்வரைக்கும் குடியிருக்கிறதுபோலவும்,”
எனவே தேவன் இஸ்ரவேலர்களுக்கு ஆதரவாகவும் கானானியர்களுக்கு விரோதமாகவும் அவர்களுடைய நிலத்தை அவர்களுக்குப் பங்கிடவில்லை. ஏனென்றால், ஏற்கனவே சிலர் வசித்து வந்த பிரதேசங்களை, தேவனுடைய மக்கள் அல்லாத ஏசாவின் பிள்ளைகளுக்கும் (வெறுக்கப்பட்டவர்கள்) மற்றும் சபிக்கப்பட்ட லோத்தின் பிள்ளைகளுக்கும் தேவன் நிலப்பகுதியை ஏற்கனவே பகிர்ந்து அளித்திருந்தார். "அதற்கு முக்கிய காரணம் அங்கு வாழ்ந்த பழங்கால மக்களின் பாவம்". அதனால்தான் அங்கே அவர்களை விரட்டி மற்றவர்களை குடியமர்தினார். பூமியைப் படைத்த தேவனுக்கு இது நியாயமானது.
எரேமியா 27:5,6 “நான் பூமியையும் மனுஷனையும் பூமியின்மேலுள்ள மிருகஜீவன்களையும் என் மகா பலத்தினாலும் ஓங்கிய என் புயத்தினாலும் உண்டாக்கினேன்; எனக்கு இஷ்டமானவனுக்கு அதைக் கொடுக்கிறேன். இப்பொழுதும் நான் இந்தத் தேசங்களையெல்லாம் என் ஊழியக்காரனாகிய நேபுகாத்நேச்சார் என்கிற பாபிலோன் ராஜாவின் கையிலே கொடுத்தேன்; அவனுக்கு ஊழியஞ்செய்யும்படி வெளியின் மிருகஜீவன்களையும் கொடுத்தேன்.”
சங்கீதம் 9:5 “ஜாதிகளைக் கடிந்துகொண்டு, துன்மார்க்கரை அழித்து, அவர்கள் நாமத்தை என்றென்றைக்கும் இல்லாதபடி குலைத்துப்போட்டீர்.”
வேதத்தில் எழுதப்பட்ட வரலாற்றின் அடிப்படையில் அவர்களுடைய விமர்சனங்களை வைப்பவர்கள், அதே வேதத்தில் சொல்லப்பட்ட விளக்கங்களின் அடிப்படையில் பதிலளிக்கும் போது ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்.
நான் மேலே சொன்னது போல், இஸ்ரவேலர் கானானியரகளை அழித்து, அவர்களின் நிலத்தை உடைமையாக்கி கொண்டது, ஆபிரகாமுக்கு தேவன் அளித்த வாக்குறுதியின் காரணமாக மட்டுமல்ல, கானானியர்களின் பயங்கரமான பாவங்களின் காரணமாக அவர்கள் மீது வந்த தேவனின் தீர்ப்பு காரணமாகும்.
உபாகமம் 9:4-6 “உன் தேவனாகிய கர்த்தர் அவர்களை உனக்கு முன்பாகத் துரத்துகையில், நீ உன் இருதயத்திலே: என் நீதியினிமித்தம் இந்த தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்ளும்படி கர்த்தர் என்னை அழைத்துவந்தார் என்று சொல்லாயாக; அந்த ஜாதிகளுடைய ஆகாமியத்தினிமித்தமே கர்த்தர் அவர்களை உனக்கு முன்பாகத் துரத்திவிடுகிறார். உன் நீதியினிமித்தமும் உன் இருதயத்தினுடைய உத்தமத்தினிமித்தமும் நீ அவர்கள் தேசத்தைச் சுதந்தரிக்கும்படி பிரவேசிப்பதில்லை; அந்த ஜாதிகளுடைய ஆகாமியத்தினிமித்தமாகவும், ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு என்னும் உன் பிதாக்களுக்குக் கர்த்தர் ஆணையிட்டுச் சொன்ன வார்த்தையை நிறைவேற்றும்படியாகவும், உன் தேவனாகிய கர்த்தர் அவர்களை உனக்கு முன்பாகத் துரத்திவிடுகிறார்.
இப்படியாக, தேவன் இஸ்ரவேலர்களுக்குக் கானான் தேசத்தை கொடுத்ததற்கு காரணம். ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோருக்கு செய்த வாக்குறுதியும், கானான் தேசத்தில் வாழும் மக்களின் அக்கிரமமும், முக்கியக் காரணம். தேவன் முதலில் ஆபிரகாமை ஏற்படுத்தி, கானான் தேசத்திற்கு வரவழைத்த காரணமே கானானில் உள்ள மக்களுக்கு தேவனுடைய தீர்ப்பை அறிவிக்கவும், அடுத்த ஆபிரகாமின் சந்ததியினரை அங்கு நிலை நிறுத்தவும் அவர்களை கானானுக்கு அழைத்து வந்தார். அதனால்தான் தேவன் இஸ்ரவேலரை எகிப்திலிருந்து விடுவித்து கானான் தேசத்திற்குக் கொண்டுவந்தபோது, அவர்களை கர்த்தருடைய "சேனைகள்" (இராணுவம்) என்று குறிப்பிடப்பட்டது.
யாத்திராகமம் 12:41 "நானூற்றுமுப்பது வருஷம் முடிந்த அன்றைத்தினமே கர்த்தருடைய சேனைகள் எல்லாம் எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்டது." சொல்லப்போனால் கானானியர்கள் மீதான தேவனின் தீர்ப்புக்கான காரணத்தை அறிய, அவர்கள் கடைப்பிடித்த கலாச்சாரத்தைப் பற்றி முதலில் நாம் தெரிந்துக் கொள்ளவேண்டும். ஏனென்றால், இந்த மனிதநேயவாதிகள் அடிக்கடி வேதாகமத்தின் தேவன் கானானியர்களின் கலாச்சாரத்தை அழித்தார்" என்று கூறுகிறார்கள். ஆதாலால் தான் அவர்களின் கலாச்சாரம் எவ்விதமாய் இருந்தது. அவர்களின் விசயத்தில் இந்த மனிதநேயவாதிகள் ஏன் வேதனைப்படுகிறார்கள் என்பதை விளக்கமாக பார்ப்போம்.
முறைக்கெட்ட பாலியல் உறவுகள்:
லேவியராகமம் 18:6-17-வது வசனத்தை நாம் பார்க்கும்போது, தேவன் பாலுறவு குறித்து சில கட்டுப்பாடுகளை விதிக்கிறார். அதில், தாயுடன் அதாவது (சொந்த தாய் அல்லது தந்தையின் மற்ற மனைவி), சகோதரி, பேத்தி, அத்தை, தந்தை வழி பாட்டி, பெரியம்மா, சித்தி, சகோதரி, மாமியார், மருமகள் போன்ற யாருடனும் உடலுறவு கொள்ளவோ அல்லது வாரிசுகளை திருமணம் செய்யவோ கூடாது என விளக்கமளித்துள்ளார். இவையெல்லாம் சொல்லி முடிந்ததும் என்ன சொல்லுகிறார் பாருங்கள்.
லேவியராகமம் 18:24,25 "இவைகளில் ஒன்றினாலும் உங்களைத் தீட்டுப்படுத்தாதிருங்கள்; நான் உங்கள் முன்னின்று துரத்திவிடுகிற ஜாதிகள் இவைகளெல்லாவற்றினாலும் தங்களைத் தீட்டுப்படுத்தியிருக்கிறார்கள்; தேசமும் தீட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. ஆகையால் அதின் அக்கிரமத்தை விசாரிப்பேன்; தேசம் தன் குடிகளைக் கக்கிப்போடும்."
இந்த வசனங்களின்படி; கானான் தேசத்தில் உள்ள மக்கள் அம்மா - மகன், தந்தை – மகள், அண்ணன் - தங்கை இதுப்போன்ற உறவு முறைகளை கூட பொருட்படுத்தாமல் உடலுறவு கொண்டிருந்தனர். மற்றவர்களுடன் பாலுறவில் இடுப்பட்டிருந்ததை மிகவும் கேவலமான செயல் என்பதை தேவன் இஸ்ரவேலர்களுக்கு தெரியப்படுத்தி, நீங்கள் மிக கவனமாக இருக்கும்படி தேவன் கூறினார்.
லேவியராகமம் 18:3-5 "நீங்கள் குடியிருந்த எகிப்துதேசத்தாருடைய செய்கையின்படி செய்யாமலும், நான் உங்களை அழைத்துப்போகிற கானான் தேசத்தாருடைய செய்கையின்படி செய்யாமலும், அவர்களுடைய முறைமைகளின்படி நடவாமலும், என்னுடைய நியாயங்களின்படி செய்து, என்னுடைய கட்டளைகளைக் கைக்கொண்டு நடவுங்கள்; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர். ஆகையால் என் கட்டளைகளையும் என் நியாயங்களையும் கைக்கொள்ளக்கடவீர்கள்; அவைகளின்படி செய்கிறவன் எவனும் அவைகளால் பிழைப்பான்; நான் கர்த்தர்."
கானானியர்களை அநியாயமாகக் கொன்றதாகக் குற்றம் சாட்டும் மனிதநேயவாதிகள் அவர்கள் செய்யும் பாலியல் உறவுகளை நியாயப்படுத்துகிறார்களா? ஓ! மன்னிக்கவும், நான் மறந்துவிட்டேன், மனிதநேயவாதிகளுக்கு அது ஒரு குற்றம் என கருதுவதற்கு எந்தவித அளவுகோலும் அவர்களுக்கு இல்லை! எனவே தான் அவர்களது பார்வையில், இருவருக்கும் சம்மதம் இருந்தால் போதும், யார் வேண்டுமென்றாலும் யாருடனும் பாலுறவு வைத்துக் கொள்ளலாம், அது அம்மா - மகன் என்ற உறவாக இருந்தாலும் கூட, ஏனெனில் அது மனித உரிமை அல்லது மனித சுதந்திரம். ஆனால் மனசாட்சியின் மூலமாகவும், வேதத்தின் மூலமாகவும் தேவன் போதித்த ஒழுக்க தராதரங்களைக் கொண்டவர்கள் இத்தகைய பாலுறவுச் செயல்களை சகித்துக் கொள்ளவே மாட்டார்கள். அவர்கள் இந்த காரியத்தை படு மோசமானதாகக் கருதுவார்கள். ஒருவேளை நான் சட்டங்களை இயற்றுமிடத்தில் இருந்து, இதுபோன்ற செயல்களைச் செய்பவர்கள் என்னிடம் வந்தால், அந்த இருவரையும் சட்டப்படி எப்படி தண்டிக்கப்பட வேண்டுமோ அப்படி தண்டிப்பேன்.
மிருக புணர்ச்சி:
லேவியராகமம் 18:22-25 “பெண்ணோடு சம்யோகம் பண்ணுகிறதுபோல ஆணோடே சம்யோகம் பண்ணவேண்டாம்; அது அருவருப்பானது. யாதொரு மிருகத்தோடும் நீ புணர்ச்சிசெய்து, அதினாலே உன்னைத் தீட்டுப்படுத்த வேண்டாம்; ஸ்திரீயானவள் மிருகத்தோடே புணரும்படி அதற்கு முன்பாக நிற்கலாகாது; அது அருவருப்பான தாறுமாறு. இவைகளில் ஒன்றினாலும் உங்களைத் தீட்டுப்படுத்தாதிருங்கள்; நான் உங்கள் முன்னின்று துரத்திவிடுகிற ஜாதிகள் இவைகளெல்லாவற்றினாலும் தங்களைத் தீட்டுப்படுத்தியிருக்கிறார்கள்; தேசமும் தீட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. ஆகையால் அதின் அக்கிரமத்தை விசாரிப்பேன்; தேசம் தன் குடிகளைக் கக்கிப்போடும். இந்த அருவருப்புகளையெல்லாம் உங்களுக்குமுன் இருந்த அந்தத் தேசத்தின் மனிதர் செய்ததினாலே தேசம் தீட்டாயிற்று.”
லேவியராகமம் 20:15-23 “ஒருவன் மிருகத்தோடே புணர்ந்தால், அவன் கொலை செய்யப்படக்கடவன்; அந்த மிருகத்தையும் கொல்லக்கடவீர்கள். ஒரு ஸ்திரீ யாதொரு மிருகத்தோடே சேர்ந்து சயனித்தால், அந்த ஸ்திரீயையும் அந்த மிருகத்தையும் கொல்லக்கடவாய்; இருஜீவனும் கொலைசெய்யப்பட வேண்டும்; அவைகளின் இரத்தப்பழி அவைகளின்மேல் இருப்பதாக. ஒருவன் தன் தகப்பனுக்காவது தன் தாய்க்காவது குமாரத்தியாயிருக்கிற தன் சகோதரியைச் சேர்த்துக்கொண்டு, அவன் அவளுடைய நிர்வாணத்தையும், அவள் அவனுடைய நிர்வாணத்தையும் பார்த்தால், அது பாதகம்; அவர்கள் தங்கள் ஜனங்களின் கண்களுக்கு முன்பாக அறுப்புண்டு போகக்கடவர்கள்; அவன் தன் சகோதரியை நிர்வாணப்படுத்தினான்; அவன் தன் அக்கிரமத்தைச் சுமப்பான். ஒருவன் சூதக ஸ்திரீயோடே சயனித்து, அவளை நிர்வாணமாக்கினால், அவன் அவளுடைய உதிர ஊற்றைத் திறந்து, அவளும் தன் உதிர ஊற்றை வெளிப்படுத்தினபடியால், இருவரும் தங்கள் ஜனத்தில் இராதபடிக்கு அறுப்புண்டுபோகவேண்டும். உன் தாயினுடைய சகோதரியையும் உன் தகப்பனுடைய சகோதரியையும் நிர்வாணமாக்காயாக, அப்படிப்பட்டவன் தன் நெருங்கிய இனத்தை அவமானமாக்கினான்; அவர்கள் தங்கள் அக்கிரமத்தைச் சுமப்பார்கள். ஒருவன் தன் தகப்பனின் சகோதரனுடைய மனைவியோடே சயனித்தால், அவன் தன் தகப்பனின் சகோதரனை நிர்வாணமாக்கினான்; அவர்கள் தங்கள் பாவத்தைச் சுமப்பார்கள், சந்தானமில்லாமல் சாவார்கள். ஒருவன் தன் சகோதரன் மனைவியை விவாகம்பண்ணினால், அது அசுத்தம்; தன் சகோதரனை நிர்வாணமாக்கினான், அவர்கள் சந்தானமற்றிருப்பார்கள். ஆகையால் நீங்கள் குடியிருப்பதற்காக நான் உங்களைக் கொண்டுபோகிற தேசம் உங்களைக் கக்கிப்போடாதபடிக்கு, நீங்கள் என் கட்டளைகள் யாவையும் என்னுடைய நியாயங்கள் யாவையும் கைக்கொண்டு நடவுங்கள். நான் உங்களுக்கு முன்பாகத் துரத்திவிடுகிற ஜனத்தினுடைய வழிபாடுகளில் நடவாதிருங்கள்; அவர்கள் இப்படிப்பட்ட காரியங்களையெல்லாம் செய்தபடியால் நான் அவர்களை அரோசித்தேன்.”
இந்தச் சந்தர்ப்பகளிலிருந்து, நாம் புரிந்துக்கொள்வது கானானிய மக்கள் மிருக புணர்ச்சி செய்கிற கலாச்சாரம் கொண்டவர்கள். ஒரு கட்டுப்பாடு இல்லாமல் தங்கள் விருப்பப்படி உடலுறவு கொண்டிருக்கும் பழக்கம் இருந்தது. அது மட்டுமா? மிருக புணர்ச்சியும் செய்கிறார்கள். அந்த கானானிய மக்களின் வாழ்வைப்பற்றி தேசத்தைப்பற்றி அவர்களுடைய கடவுள்களைப்பற்றி ஆராய்ந்த சில வரலாற்று ஆசிரியர்களின் விளக்கம் என்னவென்றால், அது அவர்களின் தெய்வீக பக்தின் ஒரு பகுதியாக இருந்தது. (பாலியல் உறவுகள் உட்பட). இத்தகைய நடவடிக்கைகள் மனிதநேயவாதிகளுக்கு இது ஒரு மனித உரிமை & சுதந்திரம் போல் தோன்றலாம், ஆனால் தேவனுக்கும் அவருடைய மக்களுக்கும் இந்த காரியங்கள் மிகவும் கேவலமானதாக தோன்றும். அதனால்தான் மிருக புணர்ச்சியைப் பற்றி "இது தீவிரமானது" என்று எழுதப்பட்டுள்ளது.
ஓரினச்சேர்க்கை:
லேவியராகமம் 20:13,23 “ஒருவன் பெண்ணோடே சம்யோகம் பண்ணுகிறதுபோல ஆணோடே சம்யோகம்பண்ணினால், அருவருப்பான காரியம் செய்த அவ்விருவரும் கொலைசெய்யப்படக்கடவர்கள்; அவர்கள் இரத்தப்பழி அவர்கள்மேல் இருப்பதாக. நான் உங்களுக்கு முன்பாகத் துரத்திவிடுகிற ஜனத்தினுடைய வழிபாடுகளில் நடவாதிருங்கள்; அவர்கள் இப்படிப்பட்ட காரியங்களையெல்லாம் செய்தபடியால் நான் அவர்களை அரோசித்தேன்.”
பாருங்கள்! இந்த கானானியர்கள் முறைகெட்ட விபச்சார பாலுறவு மற்றும் மிருக புணர்ச்சிடன் நின்றுவிடாமல், ஓரினச்சேர்க்கையிலும் ஈடுபட்டார்கள். இன்று சில நாடுகளில் இந்த கொடூரமான ஓரினச்சேர்க்கை சட்டப்பூர்வமாக வந்ததிற்குக் காரணம் மனிதநேயவாதிகளின் போராட்டம் தான் அல்லது அவர்கள் கொண்டுவந்த சுதந்திரக் கோட்பாடுகள். ஏனெனில் இது மனிதநேயவாதிகளுக்கும், பல வேதாகம விமர்சகர்களுக்கும் இது விரும்புமான செயல். அதனால்தான் அப்படிப்பட்ட காரியங்களை செய்கிறவர்களான சோதோம் மக்களையும், கானான் மக்களையும் அழித்தார். இதன் காரணமாகவே அவர்கள் வேதாகமத்தின் தேவன் மீதும் அவருடைய பிள்ளைகள் மீதும் அவர்கள் கோபமாக இருக்கிறார்கள், ஏனென்றால்
1பேதுரு 4:4,5 “அந்தத் துன்மார்க்க உளையிலே அவர்களோடேகூட நீங்கள் விழாமலிருக்கிறதினாலே அவர்கள் ஆச்சரியப்பட்டு, உங்களைத் தூஷிக்கிறார்கள். உயிரோடிருக்கிறவர்களுக்கும் மரித்தோர்களுக்கும் நியாயத்தீர்ப்புக்கொடுக்க ஆயத்தமாயிருக்கிறவருக்கு அவர்கள் கணக்கொப்புவிப்பார்கள்.”
ரோமர் 1:26-28 “இதினிமித்தம் தேவன் அவர்களை இழிவான இச்சைரோகங்களுக்கு ஒப்புக்கொடுத்தார்; அந்தப்படியே அவர்களுடைய பெண்கள் சுபாவ அநுபோகத்தைச் சுபாவத்துக்கு விரோதமான அநுபோகமாக மாற்றினார்கள். அப்படியே ஆண்களும் பெண்களைச் சுபாவப்படி அநுபவியாமல், ஒருவர்மேலொருவர் விரகதாபத்தினாலே பொங்கி, ஆணோடே ஆண் அவலட்சணமானதை நடப்பித்து, தங்கள் தப்பிதத்திற்குத் தகுதியான பலனைத் தங்களுக்குள் அடைந்தார்கள். தேவனை அறியும் அறிவைப் பற்றிக்கொண்டிருக்க அவர்களுக்கு மனதில்லாதிருந்தபடியால், தகாதவைகளைச் செய்யும்படி, தேவன் அவர்களைக் கேடான சிந்தைக்கு ஒப்புக்கொடுத்தார்.”
கொடுமை:
லேவியராகமம் 19:13,33 “பிறனை ஒடுக்காமலும் கொள்ளையிடாமலும் இருப்பாயாக; கூலிக்காரனுடைய கூலி விடியற்காலம்மட்டும் உன்னிடத்தில் இருக்கலாகாது. யாதொரு அந்நியன் உங்கள் தேசத்தில் உங்களோடே தங்கினால், அவனைச் சிறுமைப்படுத்தவேண்டாம்”.
மேற்கூறிய நிகழ்வுகளைப் போலவே, கானானியர்களும் இதேப் போன்ற வன்முறைப் போக்கைக் கொண்டுள்ளனர், எனவே தேவன் அந்த விஷயத்திலும் இஸ்ரவேலர்களை எச்சரிக்கிறார்.
சிசுவை பலிக்கொடுத்தல்:
லேவியராகமம் 18:21-25 “நீ உன் சந்ததியில் யாரையாகிலும் மோளேகுக்கென்று தீக்கடக்கும்படி இடங்கொடாதே; உன் தேவனுடைய நாமத்தைப் பரிசுத்தக் குலைச்சலாக்காதே; நான் கர்த்தர். பெண்ணோடு சம்யோகம் பண்ணுகிறதுபோல ஆணோடே சம்யோகம் பண்ணவேண்டாம்; அது அருவருப்பானது. யாதொரு மிருகத்தோடும் நீ புணர்ச்சிசெய்து, அதினாலே உன்னைத் தீட்டுப்படுத்த வேண்டாம்; ஸ்திரீயானவள் மிருகத்தோடே புணரும்படி அதற்கு முன்பாக நிற்கலாகாது; அது அருவருப்பான தாறுமாறு. இவைகளில் ஒன்றினாலும் உங்களைத் தீட்டுப்படுத்தாதிருங்கள்; நான் உங்கள் முன்னின்று துரத்திவிடுகிற ஜாதிகள் இவைகளெல்லாவற்றினாலும் தங்களைத் தீட்டுப்படுத்தியிருக்கிறார்கள்; தேசமும் தீட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. ஆகையால் அதின் அக்கிரமத்தை விசாரிப்பேன்; தேசம் தன் குடிகளைக் கக்கிப்போடும். இந்த அருவருப்புகளையெல்லாம் உங்களுக்குமுன் இருந்த அந்தத் தேசத்தின் மனிதர் செய்ததினாலே தேசம் தீட்டாயிற்று.”
உபாகமம் 12:31 “உன் தேவனாகிய கர்த்தருக்கு அப்படிச் செய்யாயாக; கர்த்தர் வெறுக்கிற அருவருப்பான யாவையும் அவர்கள் தங்கள் தேவர்களுக்குச் செய்து, தங்கள் குமாரரையும் தங்கள் குமாரத்திகளையும் தங்கள் தேவர்களுக்கு அக்கினியிலே சுட்டெரித்தார்களே.”
இந்த வசனங்களின் படி; கானானியர்கள் அவர்களின் சொந்த குழந்தைகளை தங்களுடைய தேவர்களுக்கு பலியிட்டனர். இதுவரை பார்த்த அனைத்து சந்தர்ப்பங்களை கருத்தில் கொண்டு இப்போது சொல்லுங்கள், இப்படிப்பட்டவர்களை இஸ்ரவேலர்கள் கொன்றது நியாயமா? அல்லது குற்றமா? நாங்கள் மனிதநேயவாதிகள், மனித உரிமைகளுக்காகப் போராடுகிறோம் என்று பெருமிதம் கொள்வர்களே சற்று சிறு பிள்ளைகளுக்காகவும் சிந்தியுங்கள். கடந்த காலத்தில் மதவெறியோடு ஒருவன் இந்த ஆதாரங்களை எல்லாம் புறக்கணித்துவிட்டு, நாயை அடித்துக்கொல்ல வேண்டுமேன்றால் பைத்தியக்கார நாய் என்று முத்திரை குத்தியது போல், மோசேயும் இந்த கானானியர்களின் மீது ஒரு பொய்யான குற்றச்சாட்டை சுமத்தி கொன்றுவிட்டார் என்று கூறினார், "மோசே எழுதிய வரலாற்றின் அடிப்படையில், "வேதாகமத்தின் தேவன் கானானியர்களைக் கொன்றார், என்று சொல்லுபவர்களுக்கு அதே மோசே எழுதிய வார்த்தைகளை பொய்யாக சித்தரிப்பது வேதாகம விமர்சகர்களின் தந்திரத்திற்கு நல்ல அடித்தளம்".
பச்சிளம் பிள்ளைகளை பலியிடும் கானானிய கலாச்சாரத்தைப் பற்றிய பல ஆதாரங்களை தொல்லியல் ஆய்வின் முடிவுகள் வேதாகமத்திற்கு, அடுத்த ஆதாரங்களாக உள்ளது. உதாரணமாக; "பாலஸ்தீன அகழ்வாராய்ச்சித் துறையின்" இயக்குநராகப் பணிபுரிந்த "ராபர்ட் அலெக்சாண்டர் ஸ்டீவர்ட் மக்கலிஸ்டர்" என்பவர் (1870-1950), கானானிய இனங்ககளில் ஒரு பிரிவான அமோரியர்கள் வாழ்ந்த “கெசர்” என்ற பகுதியில் அகழ்வாராய்ச்சி செய்தார். இது ஒரு உயரமான மலைபிரதேசம், அங்கு எமோரியர்கள் வாழ்ந்ததாக வேதாகமாம் சொல்லுகிறது. (யாத்திராகமம் 13:29), (யோசுவா 10:6) ஆங்கில வேதாகமத்தில் தெளிவாக உள்ளது). அங்கு அகழ்வாராய்ச்சி செய்த அந்த நபர், 12 விதமான விக்கிரக தேவர்களின் தூண்களைக் கண்டுபிடித்தார், அவற்றின் கீழ் அவர் தோண்டியபோது, பல ஜாடிகள் (பானைகள்) கிடைத்தன. அவை திறக்கப்பட்டபோது, ஒரு வாரத்திற்கும் குறைவான பச்சிளம் பிள்ளைகளின் உடல்கள் (எலும்புகள்) அதில் வைக்கப்பட்டன. மேலும், அந்தக் கைக்குழந்தைகளை முதலில் தீயில் எரிக்கப்பட்டு, இறந்த உடல்களை, மீண்டும் நெருப்பிலிருந்து வெளியே எடுத்து அந்த ஜாடிகளில் வைத்து, அவர்களின் தேவர்களின் தூணுகளுக்கு அடுத்துள்ள கல் கதவு வழியாக அடியில் உள்ள குகைக்குள் கொண்டு வைத்தனர். இந்த விஷயங்கள் அனைத்தும் அவரது "Bible Side Light” என்ற புத்தகத்தில் "அமோரியரின் அக்கிரமம்" என்ற அத்தியாயத்திலும் "கேசர் அகழ்வாராய்ச்சி" என்ற புத்தகத்திலும் விளக்கப்பட்டுள்ளன.
https://biblicalarchaeology.org.uk/pdf/e-books/macalister_r-a-s/bible-side-lights_macalister.pdf
https://onlinebooks.library.upenn.edu/webbin/book/lookupid?key=olbp22606
அங்கு கண்டுபிடிக்கப்பட்ட எலும்புகளில் பெரும்பாலானவை ஒரு வாரத்திற்கும் குறைவான பச்சிளம் குழந்தைகளின் எலும்புகள் தான். அந்த எலும்புகளில் சில தகன பலியாக செலுத்தப்பட்டு, இறந்த பிறகு, உடலை வெளியே எடுத்து ஒரு குடுவையில் புதைத்தனர், மற்றவைகள் தலையை துண்டிக்கப்பட்டு வைத்தவை, அப்படி கண்டெடுக்கப்பட்ட ஒரு இளம் பெண்ணின் உடலை (எலும்புகளை) ஆய்வு செய்தபோது, அந்த உடலை இரண்டாக வெட்டப்பட்டது என்று கண்டறிந்தார்கள். மற்றொரு இளம்பெண்ணை தலை துண்டிக்கப்பட்டு புதைக்கப்பட்டிருந்தது, மற்றொரு இளம்பெண்ணின் கைகள் வெட்டப்பட்ட நிலையில் புதைக்கப்பட்திருந்தது. இந்த மூவரும் இளம் பெண்கள். அங்குள்ள அவர்களின் தேவர்களின் தூண்களுக்கு அருகில் கிடைத்த எலும்புகளில், இந்த மூன்று எலும்புகள் மட்டுமே இளம் பெண்களுடையது. மற்ற அனைவரும் ஒரு வாரத்திற்கும் குறைவான குழந்தைகளுடையது. இவை அனைத்தையும் அகழ்வாராய்ச்சி செய்த "Robert Alexander Stewart Macalister" என்பவர்; கானானியர்கள் & அமோரியர்கள் குழந்தைகளை ஏதோ ஒருமுறை பலி கொடுக்கும் பழக்கம் உடையவர்கள் அல்ல. அவர்களுக்கு முதல் குழந்தை பிறந்தாலே அதை அவர்கள் “மொளேகு” தெய்வத்திற்கு பலி என்றும், இது “அஷ்டரோத்” தெய்வத்திற்கு பலி என்றும், இது பயலு தெய்வத்திற்கு பலி என்றும் இப்படி அவர்களின் ஒவ்வொரு கடவுளுக்கும் ஒவ்வொரு விதத்தில் பலியிடுவார்கள்.
உதாரணமாக: மொளேகு தெய்வத்திற்கு தகனபலி செலுத்தி, பாதி எரிந்த அந்த சடலத்தை வெளியே எடுத்து ஒரு குடுவையில் வைத்து, அந்த தெய்வத்தின் தூணின் கீழ் புதைக்கவேண்டும். கானானியர்களிடையே குழந்தைகளின் பலி இவ்வளவு மோசமாக இருந்தது. அங்குள்ள பாறைகளில் செதுக்கப்பட்ட அவர்களின் தெய்வங்களின் உருவங்கள் குழந்தைகளின் மண்டை ஓடுகளில் நிற்கும் வகையில் சித்தரிக்கப்பட்டுள்ளன. இதற்கு இடையில் அவர்களின் தேவர்களுக்கு அடிமைகளையும் பலியிட்டனர், ஒருவேளை அங்கு கிடைத்த சிறுமிகளின் எலும்புகள் அந்த அடிமைகளின் எலும்புகளாக இருக்கலாம். தொல்பொருள் "ஷூமேக்கர்" என்ற ஆராய்ச்சியாளர் அங்கு அகழ்வாராய்ச்சி செய்து இந்த விஷயங்களை உறுதிப்படுத்தினார். எனவே கானானியர்கள் தங்கள் தெய்வங்களின் பெயரில் குழந்தைகளைப் பலியிட்டார்கள் என்பதற்கு வேதாகமம் மட்டும் அல்ல, வெளியில் பதிவு செய்யப்பட்ட மறுக்க முடியாத வரலாற்று சான்றுகள் உள்ளன. (யாத்திராகமம் 23:24) “நீ அவர்களுடைய தேவர்களைப் பணிந்துகொள்ளாமலும், சேவியாமலும், அவர்கள் செய்கைகளின்படி செய்யாமலும், அவர்களை நிர்மூலம்பண்ணி, அவர்களுடைய சிலைகளை உடைத்துப்போடுவாயாக.” இப்படிப்பட்ட மோசமான கலாச்சாரம் கொண்ட மக்களை அழிப்பதும், அந்த சிலைகளை உடைக்கச் சொல்வதும் எப்படி குற்றமாகும்? மனிதநேயவாதிகள் & வேதாகம விமர்சகர்கள் இதற்கு கட்டாயம் பதில் சொல்லவேண்டும்.
ஏசாயா 57:3-5 "நாள் பார்க்கிறவளின் பிள்ளைகளே, விபசாரனுக்கும் வேசிக்கும் பிறந்த சந்ததியாரே, நீங்கள் இங்கே கிட்டிவாருங்கள். நீங்கள் யாரைப் பரியாசம்பண்ணுகிறீர்கள்? யாருக்கு விரோதமாய் வாயைத் திறந்து, நாக்கை நீட்டுகிறீர்கள்? நீங்கள் துரோகம்பண்ணுகிற பிள்ளைகளும், கள்ளச் சந்ததியாருமல்லவோ? நீங்கள் பச்சையான சகல மரத்தின்கீழும், விக்கிரக தேவர்களோடே மோகாக்கினியில் வெந்து, பள்ளத்தாக்குகளிலே கன்மலை வெடிப்புகளின் கீழ்ப் பிள்ளைகளைக் கொன்றுபோடுகிறவர்கள்."
கானனியர்களைக் குறித்து நான் இதுவரை விவரித்தவை மட்டுமல்லாமல், இன்னும் மிக மோசமான காரியங்களையும் நடப்பித்தார்கள்.
உபாகமம் 18:9-14 "உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கும் தேசத்தில் நீ போய்ச் சேரும்போது, அந்த ஜாதிகள் செய்யும் அருவருப்புகளின்படி செய்யக் கற்றுக்கொள்ளவேண்டாம். தன் மகனையாவது தன் மகளையாவது தீக்கடக்கப்பண்ணுகிறவனும், குறிசொல்லுகிறவனும், நாள் பார்க்கிறவனும், அஞ்சனம்பார்க்கிறவனும், சூனியக்காரனும், மந்திரவாதியும், சன்னதக்காரனும், மாயவித்தைக்காரனும், செத்தவர்களிடத்தில் குறிகேட்கிறவனும் உங்களுக்குள்ளே இருக்கவேண்டாம். இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவன் எவனும் கர்த்தருக்கு அருவருப்பானவன்; இப்படிப்பட்ட அருவருப்புகளின் நிமித்தம் உன் தேவனாகிய கர்த்தர் அவர்களை உன் முன்னின்று துரத்திவிடுகிறார். உன் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக நீ உத்தமனாயிருக்கக்கடவாய். நீ துரத்திவிடப்போகிற இந்த ஜாதிகள் நாள்பார்க்கிறவர்களுக்கும் குறிசொல்லுகிறவர்களுக்கும் செவிகொடுக்கிறார்கள்; நீ அப்படிச் செய்கிறதற்கு உன் தேவனாகிய கர்த்தர் உத்தரவுகொடார்”.
உபாகமம் 12:31 "உன் தேவனாகிய கர்த்தருக்கு அப்படிச் செய்யாயாக; கர்த்தர் வெறுக்கிற அருவருப்பான யாவையும் அவர்கள் தங்கள் தேவர்களுக்குச் செய்து தங்கள் குமாரரையும் தங்கள் குமாரத்திகளையும் தங்கள் தேவர்களுக்கு அக்கினியிலே சுட்டெரித்தார்களே."
இவ்விதமான காரியங்களை அவர்கள் செய்து வந்தும், தேவன் அவர்களுக்கு சுமார் 400 ஆண்டுகாலம் அவகாசம் கொடுத்தார். (ஏன் என்று இறுதியில் பார்ப்போம்).
ஆதியாகமம் 15:16 "நாலாம் தலைமுறையிலே அவர்கள் இவ்விடத்துக்குத் திரும்ப வருவார்கள்; ஏனென்றால் எமோரியருடைய அக்கிரமம் இன்னும் நிறைவாகவில்லை என்றார்." (தேவன் ஆபிரகாமிடம் சொன்னார்.) அந்த 400 ஆண்டுக்காலமும் தேவன் அவர்களை பலமுறை எச்சரித்து வந்தார்.
உபாகமம் 8:20 "உன் தேவனாகிய கர்த்தருடைய சத்தத்திற்கு நீங்கள் கீழ்ப்படியாமற்போவதினால், கர்த்தர் உங்களுக்கு முன்பாக அழித்த ஜாதிகளைப்போல நீங்களும் அழிவீர்கள்."
அந்த 400 ஆண்டுகள் கடந்து செல்லும் வரை தேவன் ஆபிரகாம், ஈசாக்கு மற்றும் யாக்கோபு இவர்களுக்கு சுதந்திரமாக கொடுக்கவில்லை, மேலும் இவர்களின் சந்ததியான இஸ்ரவேலர்களை கூட 215 ஆண்டுகள் எகிப்தில் அடிமைகளாக வைத்திருந்தார். எமோரியர்களின் (கானானியர்களின்) பாவம் பூரணப்படுத்தப்பட்டது. அதன் பின்னர் தேவன் இஸ்ரவேலர்களை தன்னுடைய படையாக கானான் தேசத்துக்குக் கொண்டு வந்து அவர்களை கொன்றார். இந்த இடத்தில் நாம் கவனிக்க வேண்டிய மற்றொரு காரியம் என்னவென்றால், தேவன் நினைத்தால் சோதோம் கொமோரா பட்டனங்களை அழித்ததைப் போல அவர்களையும் அழித்திருக்கலாம், ஆனால் அவ்வாறு செய்யாமல் இஸ்ரவேலர்களின் கைகளினாலே கொன்றது ஏன்? என்பதை பார்த்தால் அது இஸ்ரவேலர்களுக்கும் ஒரு எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்பதற்காக. எதிர்காலத்தில் இஸ்ரவேலர்களும் கானானியர்கள் செய்துவந்த காரியங்களை இவர்களும் செய்தால், தேவன் மற்ற இனங்களைக் கொண்டு இஸ்ரவேலர்களைக் கொன்றுவிடுவார்.
லேவியராகமம் 26:17 "நான் உங்களுக்கு விரோதமாக என் முகத்தைத் திருப்புவேன்; உங்கள் சத்துருக்களுக்கு முன்பாக முறிய அடிக்கப்படுவீர்கள்; உங்கள் பகைஞர் உங்களை ஆளுவார்கள்; துரத்துவார் இல்லாதிருந்தும் ஓடுவீர்கள்."
இஸ்ரவேலர்களின் வரலாற்றைப் பார்க்கும்போது அவர்களும் கானனியர்களைப் போல நடந்துக் கொண்டபோது தேவன் அவர்களை முன்பே எச்சரித்தப்படி மற்ற இனமக்களை எழும்ப பண்ணி அழித்தார். என்று வேதத்தில் தெளிவாக குறிப்பிட பட்டுள்ளது. (சங்கீதம் 106:370), (எரேமியா 7:31), (எசேக்கியேல் 16:20)
உபாகமம் 4:27 “கர்த்தர் உங்களைப் புறஜாதிகளுக்குள்ளே சிதற அடிப்பார்; கர்த்தர் உங்களைக் கொண்டுபோய் விடப்போகிற ஜாதிகளிடத்திலே கொஞ்ச ஜனங்களாய் மீந்திருப்பீர்கள்.”
ஏசாயா 10:5,6 “என் கோபத்தின் கோலாகிய அசீரியனுக்கு ஐயோ! அவன் கையிலிருக்கிறது என் சினத்தின் தண்டாயுதம். அவபக்தியான ஜனங்களுக்கு விரோதமாய் நான் அவனை அனுப்பி, எனக்குக் கோபமூட்டின ஜனத்தைக் கொள்ளையிடவும், சூறையாடவும், அதை வீதிகளின் சேற்றைப்போல் மிதித்துப்போடவும் அவனுக்குக் கட்டளைகொடுப்பேன்.”
ஏசாயா 46:11 “உராய்ஞ்சுகிற ஒரு பட்சியைக் கிழக்கிலிருந்தும், என் ஆலோசனையை நிறைவேற்றும் மனுஷனைத் தூரதேசத்திலிருந்தும் வரவழைக்கிறவராயிருக்கிறேன்; அதைச் சொன்னேன், அதை நிறைவேற்றுவேன்; அதைத் திட்டம்பண்ணினேன், அதைச் செய்து முடிப்பேன்.”
கடைசியாக இஸ்ரவேலர்கள் கானானியர்களுடன் போரிட்டபோது ஏன் தங்கள் குழந்தைகளை ஏன் கொன்றார்கள், என்று சிலர் கேள்வி எழுப்புகிறார்கள். மனிதன் பிறந்தது முதல், அவனது இயல்பு நிலை என்ன (பாவம்), அந்த மனிதன் எதிர்காலத்தில் எப்படி மாறுவான் என்பதையும் தேவன் அறிவார். எனவே அந்த கானானியர்களின் தேசத்தில் இறந்த குழந்தைகளைப் பற்றியும் அவ்வாறு தான் சிந்திக்க வேண்டும். இது போன்ற காரியங்களில் சிறிதளவு அறிவுடன் தேவன் மீது விமர்சனம் வைப்பார்கள், ஆனால் மாசுபடிந்த மனதுடைய அவர்களுக்கு குழந்தைகளின் மீது கருணை இருந்தால், அவர்களைப் பிறப்பித்த தேவன் அவர்கள் பட்சத்தில் எவ்வளவு நியாயமாக நடத்துவார் என்பதை உணர வேண்டும். தேவன் பாவத்தின் காரணமாக ஒரு முழு தேசத்தையும் அழிக்க நினைக்கும் போது, அந்த தேசத்தின் கைக்குழந்தைகள் உட்பட முழு தேசத்தையும் அழிக்கிறார், அந்த தேசம் இதுவரை செய்த பாவத்திற்காக தேவனது வெறுப்பையும், கோபத்தையும் காட்டுகிறது. அந்த இனத்தை உண்டாக்கியவர் என்ற முறையில் தேவன் அப்படிச் செய்வதுதான் சரியே.
ஆனால், இந்து மதவெறியரின் படி, ஒரு மனிதனின் மரணத்திற்கும், அவன் வாழ்வில் ஏற்படும் விபத்துகளுக்கும் காரணம் என்னவென்றால், அவர்கள் போனஜென்மத்தில் செய்த பாவங்களே. எனவே சிறு குழந்தைகள் கொல்லப்பட்டாலும் அது அவர்களின் பூர்வ காலத்தில் அவர்கள் செய்த பாவம்தான். அதற்காக அவர்கள் ஏன் கவலைப்படுகிறார்கள்? மேலும் நாத்திகர்கள் & மனிதநேயவாதிகளின் வாதத்தின்படி, மனிதன் சில இரசாயனங்கள் & மூலக்கூறுகளின் அமைப்பு மட்டுமே. எனவே மனிதனுக்கு எந்தவித சிறப்பும் இல்லை, அவனுக்கு எந்த விதியும் இல்லை. அப்படி இருக்கும்போது, ஒரு மனிதன் கொல்லப்பட்டால், அவனது உடலில் உள்ள ரசாயனங்கள் மற்றும் மூலக்கூறுகள் பூமியில் உள்ள ரசாயனங்கள் மற்றும் மூலக்கூறுகளுடன் கலந்துவிடும். இதல் அவர்களுக்கு என்ன பிரச்சனை என்ன? பார்த்திர்களா! அவர்கள் நம்பும் சித்தாந்தங்களும், மற்றும் அவர்களின் வாதங்களுமே அவர்களின் வாயை அடைக்கிவிட்டது என்பதை பாருங்கள்.
2தீமோத்தேயு 3:8,9 "யந்நேயும் யம்பிரேயும் மோசேக்கு எதிர்த்து நின்றதுபோல இவர்களும் சத்தியத்துக்கு எதிர்த்து நிற்கிறார்கள்; இவர்கள் துர்ப்புத்தியுள்ள மனுஷர்கள், விசுவாசவிஷயத்தில் பரீட்சைக்கு நில்லாதவர்கள். ஆனாலும், இவர்கள் அதிகமாய்ப் பலப்படுவதில்லை; அவ்விருவருடைய மதிகேடு எல்லாருக்கும் வெளிப்பட்டதுபோல, இவர்களுடைய மதிகேடும் வெளிப்படும்."
யாராக இருந்தாலும், ஒரு மனிதனைக் கொல்வதும் அல்லது சித்திரவதை செய்வதும் குற்றமென சொல்லுவதென்பதும் அந்த விசயத்தில் வருத்தபடுவதென்பதும், இறுதியில் அந்த மனிதனை சபிப்பதும் & நிந்திப்பதும் ஆகியவை சரிபார்க்க வேதாகமத்தின் பிரமானத்திடமே வர வேண்டும். ஏனென்றால், ஒரு மனிதன் ஏன் கொல்லப்படக்கூடாது, என்பதையும் அந்த மனிதன் ஏன் சித்திரவதை செய்யப்படக்கூடாது என்பதையும் வேதாகம் மட்டுமே விளக்குகிறது. மற்ற உயிரினங்களை விட மனிதனே தனித்துவமானவன் என்று வேதாகமம் சொல்கிறது.
ஆதியாகமம் 9:5,6 “உங்களுக்கு உயிராயிருக்கிற உங்கள் இரத்தத்திற்காகப் பழிவாங்குவேன்; சகல ஜீவஜந்துக்களிடத்திலும் மனுஷனிடத்திலும் பழிவாங்குவேன்; மனுஷனுடைய உயிருக்காக அவனவன் சகோதரனிடத்தில் பழிவாங்குவேன். மனுஷன் தேவசாயலில் உண்டாக்கப்பட்டபடியால், மனுஷனுடைய இரத்தத்தை எவன் சிந்துகிறானோ, அவனுடைய இரத்தம் மனுஷனாலே சிந்தப்படக்கடவது.” உங்கள் இரத்தத்தைக் குறித்து விசாரிப்பார்கள்; ஒவ்வொரு மிருகத்தையும் மனிதனையும் அது பற்றி விசாரிப்பார்;
சங்கீதம் 8:5-9 "நீர் அவனைத் தேவதூதரிலும் சற்றுச் சிறியவனாக்கினீர்; மகிமையினாலும் கனத்தினாலும் அவனை முடிசூட்டினீர். உம்முடைய கரத்தின் கிரியைகளின்மேல் நீர் அவனுக்கு ஆளுகை தந்து, ஆடுமாடுகளெல்லாவற்றையும், காட்டுமிருகங்களையும், ஆகாயத்துப் பறவைகளையும், சமுத்திரத்து மீன்களையும், கடல்களில் சஞ்சரிக்கிறவைகளையும் அவனுடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தினீர். எங்கள் ஆண்டவராகிய கர்த்தாவே, உம்முடைய நாமம் பூமியெங்கும் எவ்வளவு மேன்மையுள்ளதாயிருக்கிறது."
இந்த பிராமானத்தை நீங்கள் மீறினால், ஒரு ஆட்டைப் போல ஒரு மனிதனை வெட்டலாம். அது தவறு என்று எப்படி சொல்கிறீர்கள்? இத்தகைய செயல்கள் குற்றம் என்று கூறுவதற்கு சட்டத்திற்கு என்ன அதிகராம் உண்டு? அரசியலமைப்பு எந்த அளவீடு மூலம் உருவாக்கப்படுகிறது? இது தவறு, இது சரி என்ற முடிவுக்கு ஒரு மனிதன் எப்படி வருகிறான்? மனிதநேயவாதிகள் தலைகீழாக நின்று தண்ணிர் குடித்தாலும் என்னுடைய இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாது.
மற்றோன்றையும் கவனியுங்கள், வேதாகமத்தின் தேவன் கானானிய தேசத்து சிறுக்குழந்தைகளை கொன்றுவிடுகிறார் என்று வருத்தப்படும் இந்த மனிதநேயவாதிகள் “கருக்கலைப்பு” என்ற விஷயத்தில் மட்டும் அது "தாயின் உரிமை" என்று வாதிடுகிறார்கள். என்றால் இவர்களுக்கு சிறு பிள்ளைகளின் மீது வருத்தம் வேதாகமத்தின் தேவனைக் குறை கூறும்போது மட்டுமே! இது அர்த்தப்படுத்துகிறதா? எனவே, மனிதநேயவாதிகள் உண்மையிலேயே மனிதாபிமான உள்ளவர்களாக இருந்தால், கருவிலிருந்து பிறக்கும் குழந்தையின் உரிமைகளுக்காகவும், கருக்கலைப்புகளுக்கு எதிராக அவர்கள் போராட வேண்டும். அல்லது வேதாகமத்தின் வழியில் வராமல், உங்களுக்குப் பிடித்தமான காரியத்தில் (ஓரினச்சேர்க்கையில்) ஈடுபட்டு நாசமாகிவிடுங்கள். அப்படி செய்யாமல் உங்களுடைய வாதத்திற்காக வேதத்தின் தேவனை விமர்சிக்கத் துணியாதீர்கள். எங்கள் தேவன் எப்படிப்பட்டவர்களின் வாயையும் மூடுவதற்கு தேவையான அறிவை எங்களுக்கு ஏராளமாக அருளியுள்ளார். மனிதநேயவாதிகளுக்கு, தேவனின் தார்மீக பிரமாணத்தை உடைய எனது எச்சரிக்கை.
தேவன் என்று ஒருவர் இருக்கும் போது, அவருக்கென்று ஒரு சித்தம் இருக்கிறது. தேவன் அவருடைய சித்தத்தின்படி எல்லாவற்றையும் செய்கிறார். “தமது சித்தத்தின் ஆலோசனைக்குத்தக்கதாக எல்லாவற்றையும் நடப்பிக்கிற அவருடைய தீர்மானத்தின்படியே,” (எபேசியர் 1:12), “அவர் (தேவன்) தமது சித்தத்தின்படியே வானத்தின் சேனையையும் பூமியின் குடிகளையும் நடத்துகிறார்; அவருடைய கையைத் தடுத்து, அவரை நோக்கி: என்ன செய்கிறீரென்று சொல்லத்தக்கவன் ஒருவனும் இல்லை.” (தானியல் 4:35), “(தேவன்) தமக்குச் சித்தமான யாவையும் செய்கிறார்.” (சங்கீதம் 115:3). எனவே, கானானியர்கள் இப்படிப்பட்ட காரியங்களைச் செய்துகொண்டிருக்கும் போது, அவர்கள் மன மாற்றம் அடைவதற்கு அவர் ஏன் அவ்வளவு கால அவகாசம் கொடுத்தார்? எல்லோருக்கும் அதே மாதிரியான அவகாசம் தருகிறாரா? பிறப்பவர்கள் எப்படிப்பட்டவர்கள் என முன்பே அறிந்திருந்தும், தேவன் ஏன் தீயவர்களை பிறக்க வைக்கிறார்? போன்ற கேள்விகளுக்கு இடமில்லை, தேவனை குறை கூறுபவர்கள் அவருடைய நிலைக்குவந்து அவரை விமர்சிக்கவேண்டும். அல்லது தேவனே இல்லை என்று நிரூபிக்க வேண்டும். யாரவது ஒருவர் இப்படிப்பட்ட அந்த சாகசத்தைச் செய்ய முடிந்தால், இவ்வளவு அற்புதமான மற்றும் கற்பனைக்கு எட்டாத படைப்பு எப்படி உருவானது என்றும், இந்த படைப்பில் மனித அறிவுக்கு அப்பாற்பட்ட அற்புதமான வடிவமைப்புகள் இந்த படைப்பில் (உதாரணமாக, மனித உடல்) இறுதியில் மனிதர்களால் எவ்வாறு பெறப்பட்டன (எடுத்துக்காட்டாக, எல்லா நாடுகளிலும் கொலை செய்வது ஏன் குற்றமாகும், ஏன் எல்லாப் பகுதிகளிலும் பொய் சொல்வது தடைசெய்யப்பட்டுள்ளது) இதுப்போன்ற பல கேள்விகளுக்கும் மேலும் வேதாகமத்திற்கான வரலாறு மற்றும் தொல்பொருள் சான்றுகள் தொடர்பாக விளக்கம் அளிக்கப்பட வேண்டும்.
வேதகாமத்தின் தேவனுக்கு எதிரான வேறு சில குற்றச்சாட்டுகள் & விமர்சனங்களைப் பற்றி அறிய இந்தக் கட்டுரைகளைப் படியுங்கள்.
1. பெண்களுக்கு கற்பு சோதனை, வேதாகம தேவனின் பாகுபாடா?
2. வேதாகமத்தின் தேவனுக்கு பெண்களின் மீதான பாகுபாடு ஒரு உண்மையா? அல்லது குற்றச்சாட்டா?
3. மாற்றுத்திறனாளின் மீது வேதாகமத்தின் தேவன் காட்டும் பாகுபாடு உண்மையானதா?
4. கருக்கலைப்பு பெண்ணின் உரிமையா?