நாம் சுயவெறுப்பை எவ்வாறு நடைமுறைப்படுத்தலாம் என்பதற்கான காரண காரியங்களை ஆராய்வோம். இவை சுயவெறுப்பு என்னும் கிறிஸ்தவக் கடமையை மனதார நிறைவேற்றுவதற்கு நம்மைத் தூண்டிவிடுவதற்கும், அதை விரைவுபடுத்துவதற்கு உதவிசெய்கிற அம்சங்களாகவும் இருக்கின்றன.
1.சுயவெறுப்பு என்னும் இந்தப் போதனையை நீங்கள் மனபூர்வமாகக் கடைப்பிடிப்பதற்காக நான் உங்களுக்குப் பரிந்துரைக்கும் முதல் அம்சம், நம்முடைய கர்த்தரும் ஆண்டவருமாகிய இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையை அடிக்கடி தியானம் செய்வதாகும். மாட்டுத் தொழுவத்தின் முன்னனையில் கிடத்தப்பட்டது தொடங்கி, அவருடைய சிலுவை மரணம் வரை அவரை உற்றுக் கவனியுங்கள்! அவர் எந்தெந்தக் காரியங்களில் சுயவெறுப்பின் வாழ்க்கையை நடத்தினார் என்பதைச் சோதித்துப் பாருங்கள்! அவர் குடித்த பாத்திரத்தில் நாம் குடிக்கவும், அவர் பெற்ற ஸ்நானத்தை நாம் பெறவும் வேண்டாமா? அல்லது நம்மை மன்னிப்பதற்கும் பாடுகளிலிருந்து நம்மைக் காப்பாற்றுவதற்கும் இயேசு கிறிஸ்து என்னவெல்லாம் செய்தார் என்பதையும் எவற்றையெல்லாம் சகித்தார் என்பதையும் நாம் நினைத்துப்பார்க்க வேண்டாமா? “கிறிஸ்துவும் உங்களுக்காகப் பாடுபட்டு, நீங்கள் தம்முடைய அடிச்சுவடுகளைத் தொடர்ந்துவரும்படி உங்களுக்கு மாதிரியைப் பின்வைத்துப்போனார்” (1 பேதுரு 2:21) என்று பேதுரு சொல்லியிருக்கிறபடியால், எந்த ஒரு நேர்மையான கிறிஸ்தவரும் இதிலிருந்து நான் விலக்கிக்கொள்கிறேன் என்று அதற்கு நியாயம் கற்பிக்க முடியாது. மோசேயின் நாற்காலியில் அமர்ந்திருந்து (மோசேயின் பிரமாணங்களைக் கடைப்பிடிக்கிறவர்கள்), தாங்கள் விரல்களினால்கூட எதையும் தொடாமல் இருந்து மற்றவர்களின் மீது முழுப்பாரத்தையும் சுமப்பவர்களைப் போல, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவும் தான் எதையும் சுமக்காமல் இருந்தும் நம்மீது எல்லாப் பாரங்களையும் சுமத்திருந்தால் கூட (உண்மையில் அவர் சுமத்தியது பாரமானத்தை அல்ல) நாம் ஏதாவது ஒரு கையில் கடினமாக இருக்கிறது என்று பாசாங்கு செய்து அதிலிருந்து தப்பிக்க வழியிருந்திருக்கும். ஆனால் அவ்வாறு இல்லாதபடிக்கு, அவர் முதலாவது எதை செய்தாரோ அதையே நமக்குக் கட்டளையிட்டிருக்கிறார். ஆகவே அவர் நடைமுறைப்படுத்திய சுயவெறுப்பை நாம் வேண்டாமென நிராகரித்துவிட முடியாது. அன்பான சீடர்களே, நீங்கள் யாராக இருந்தாலும், சுயவெறுப்புடன் பாடுகளைச் சகித்த நம்முடைய எஜமானரும் ஆண்டவருமாகிய இயேசு கிறிஸ்துவைக் காட்டிலும் மேலானவர்களாக இருக்க விரும்ப வேண்டாம். நீங்கள் கர்த்தரைப் போல சுயவெறுப்பை அனுபவிப்பதிலிருந்து ஒதுங்கிக்கொள்ள விரும்புவீர்களானால், பரலோக சிந்தையோடு பாடுகளைச் சந்தித்த அவருக்கு நீங்கள் உண்மையும் உத்தமமமுள்ள ஓர் ஊழியராக இருக்க முடியாது.
- நம்முடைய எஜமானாராகிய கர்த்தருடைய சிறந்த முன்மாதிரிக்கு அடுத்தபடியாக, நான் பரிந்துரைக்கும் முக்கியமான அம்சம், “விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாய் இருக்கிற இயேசுவை நோக்கி, தங்களுக்கு நியமிக்கப்பட்ட ஓட்டத்தில் பொறுமையோடே ஓடி முடித்த” (காண்க: எபிரேயர் 12:1) ஒரே மனதுடன் உன்னத வாழ்க்கை வாழ்ந்த அப்போஸ்தலர்கள், சிறப்பான ஐக்கியத்தைப் பேணிக்காத்த தீர்க்கதரிசிகள், தங்கள் உயிரையே பணயம் வைத்து ஊழியம் செய்த இரத்த சாட்சிகள் என்னும் பரலோக சேனைகள் ஆகியோரை அடிக்கடியாக நோக்கிப் பார்ப்பதாகும். இவர்கள் நல்ல போராட்டத்தைப் போராடி, தங்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குத்தங்களைப் பெற்று அனுபவிப்பதற்காக நமக்கு முன்னரே சென்றுவிட்டார்கள். இவர்கள் எவ்வளவு பரிசுத்தமானவர்களாகவும், எவ்வளவு சுயவெறுப்பு நிறைந்த வாழ்க்கையுடனும், எவ்வளவு குற்றமற்றவர்களாகவும் வாழ்ந்தார்கள் என்பதை அடிக்கடியாகக் கவனித்துப் பாருங்கள்! இவர்களுக்கு சுயவெறுப்பின் வாழ்க்கை அவசியமானதாக இருக்கும் பட்சத்தில் நமக்கும் அது மிகவும் அவசியமானதல்லவா? நாமும் அவர்களைப் போன்ற வாஞ்சையும் தாகமும் கொண்ட மனிதர்கள்தானே? அவர்கள் வாழ்ந்த அதே பொல்லாத உலகில்தானே நாமும் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்? அவர்களைப் பரிசுத்தப்படுத்தவும், அவர்களைப் ஆற்றித் தேற்றவும் இருந்த அதே நல்ல ஆவியானவர் நம்மிடத்திலும் இருக்கிறார் அல்லவா? அவர்களுக்கு அளிக்கப்பட்ட நித்திய சுதந்தரம் நமக்கு வழங்கப்பட்டுள்ளது அல்லவா? எனவே, அவர்களைப் போன்றே மாற்றத்தை விரும்புகிற சுபாவமும், அவர்களைப் போலவே நாமும் எதிர்த்து நிற்பதற்காக பொல்லாத உலகமும், அவர்களுக்கு உதவியைப் போலவே நமக்கும் உதவி செய்யக்கூடிய தூய ஆவியானவரும், அவர்களைப் போலவே இறுதியில் சுதந்ததிக்கப்போகிற நித்திய கிரீடமும் நமக்கும் இருக்கிறபடியால், அவர்களைப் போன்ற வாழ்க்கையை நாம் ஏன் வாழத் தீர்மானிக்கக் கூடாது?
- மூன்றாவதாக, நரகத்தின் வேதனைகளைப் பற்றி அடிக்கடி சிந்தித்துப் பாருங்கள். புழு சாவாமலும், அக்கினி அணையாமலும் இருக்கும் நரகத்தில் தள்ளப்படுவதைக் காட்டிலும், சுயவெறுப்புக்குத் தடையாயிருக்கிற அல்லது பாவத்தை உண்டுபண்ணுகிற வலது கையையாவது, காலையாவது வெட்டி எறிந்துவிட்டு, வலது கண்ணைப் பிடுங்கி எறிந்துவிட்டு, பரலோகத்தில் பங்குபெறுவது நல்லதோ என்று சிந்திந்துப் பாருங்கள்! (மாற்கு 9:44). மகா நாளின் நியாயத்தீர்ப்புக்கென்று நித்திய சங்கிலிகளினாலே கட்டி, அந்தகாரத்தில் அடைத்து வைக்கப்பட்டிருக்கிற ஆயிரக்கணக்கான மக்களின் வேதனைகளைக் குறித்துச் சிந்தித்துப் பாருங்கள்! நாம் காலத்திற்கேற்ப ஞானமாய் முடிவெடுத்து, நம்மை நாமே வெறுத்து, இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றாவிட்டால் நம்முடைய நிலையும் இதுபோன்ற நியாயத்தீர்ப்பின் நெருப்பில் இருக்கும் என்பதை எண்ணிப் பாருங்கள்! அவர்கள் இயேசு கிறிஸ்துவை கடினமான பாரத்தைச் சுமத்துகிற ஒரு எஜமானராகக் கருதினார்கள் என்பதில் இப்பாடுகளை அனுபவிக்கிறார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? இவ்வாறு நினைப்பதைக் காட்டிலும், அவர்கள் தங்கள் ஆத்துமாவில் உயிர்ப்பிக்கப்படாவிட்டால் அல்லது அவர்கள் கிறிஸ்துவின் நுகத்தை எளிதானதாக எடுத்துக்கொள்ளாவிட்டால் பத்தாயிரம் மடங்கு வேதனையை அடைய நேரிடும் என்று நீங்கள் நினைக்கவில்லையா? அவர்களுக்கு நேரிடுகிற இத்தகைய நிலையைக் குறித்து அவர்களைக் காட்டிலும் நம்மால் அதிகமாக வேதனைப்பட முடியுமா? நிச்சயமாக முடியாது. அவ்வாறெனில், உங்களையே வெறுத்து அவருடைய சிலுவையை எடுத்துக்கொள்ளுங்கள். இந்தச் சுயவெறுப்பை நம்மால் கைக்கொள்ள முடியாவிட்டால், “சபிக்கப்பட்டவர்களே, என்னை விட்டு, பிசாசுக்காகவும் அவன் தூதர்களுக்காகவும் ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற நித்திய அக்கினியிலே போங்கள்” (மத். 25:41) என்று ஆண்டவர் சொல்வதை நாம் எவ்வாறு தாங்கிக்கொள்ள முடியும்? ஆயினும் தேவனுடைய ராஜ்யத்தைக் குறித்துப் பிரசங்கிப்பவர்கள் தேவனுடைய கோபாக்கினைக்குப் பயந்து தங்களது கடமையை நிறைவேற்றும்படி நடிக்கிறவர்கள் அல்ல, மாறாக அவருடைய கயிறுகளால் கட்டுப்பட்டு அதனிமித்தமாகவே சுயவெறுப்பு எனும் தங்கள் கடமையை நிறைவேற்றுகிறவர்கள் என்றே நான் நம்புகிறேன்.
- இறுதி அம்சமாக, பரலோகத்தில் நாம் அனுபவிக்கப் போகிற மகிழ்ச்சிகளைப் பற்றி அடிக்கடி சிந்தித்துப் பாருங்கள்! பூமியில் வாழ்ந்தபோது, கர்த்தருடைய அழைப்புக்குக் கீழ்ப்படிந்து, தங்களது ஆசை இச்சைகளுக்கு மரித்து, சுயவெறுப்புடன் வாழ்ந்த அந்த ஆத்துமாக்கள் சொல்லி முடியாததும் மகிமையால் நிறைந்ததுமான மகிழ்ச்சியுடன் இப்பொழுது வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதைச் சிந்தித்துப்பாருங்கள். உங்கள் இருதயங்களை நித்திய பேரின்ப மாளிகைக்கு நேராக உயர்த்துங்கள்! ஸ்தேவானைப் போல வானங்கள் திறக்கப்படுவதையும், ஆயிரமாயிரமான பரிசுத்தர்களின் படைசூழ தேவனுடைய குமாரன் மகிமையின் சிங்காசனத்தில் வீற்றிருப்பதையும், அங்கே அவர்கள் நித்திய மகிழ்ச்சியால் ஆறுதல்படுத்தப்பட்டுக் கொண்டிருப்பதையும் விசுவாசக் கண்களால் காணுங்கள். அங்கே அவர்கள் அல்லேலூயா என்று நித்தியம் நித்தியமாய் பாடுவதையும், அவர்களுடைய வாயிலிருந்து வெற்றியின் கொண்டாட்டப் பாடல் தொனிப்பதையும் உங்கள் காதுகள் கேட்கட்டும். எனதருமைச் சகோதர சகோதரிகளே, இந்தப் பரலோக இசைக் குழுவில் சேர நீங்கள் விரும்பவில்லையா? இதையெல்லாம் சிந்திக்கும்போது உங்கள் இருதயங்கள் கொழுந்துவிட்டு எரியவில்லையா? மான்கள் நீரோடைகளைத் தேடி கதறுவதுபோல உங்கள் ஆத்துமாக்கள் இந்த ஆசீர்வதிக்கப்பட்ட பக்தர் குழாமுடன் இணைந்து துதிப்பதற்கு ஏங்கவில்லையா? அவ்வாறாயின் நீங்கள் அந்தப் பரிசுத்த மலைக்கு ஏறுவதற்கு பரலோக ஏணி உங்களுக்காக இறங்கிவருகிறது. நாம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து, சுயவெறுப்பு என்னும் தியாக வாழ்க்கைக்கு மனமுவந்து வாழுவோம்.
இங்கிலாந்து நாட்டின் க்ளோசெஸ்டர் என்னுமிடத்தில் பிறந்த ஜார்ஜ் வைட்ஃபீல்ட் (1714-1770) என்பார் ஆங்கிலிக்கன் போதகரும், புகழ்பெற்ற நற்செய்தியாளரும் ஆவார். பதினெட்டாம் நூற்றாண்டில் ஏற்பட்ட “கிறிஸ்தவ மறுமலர்ச்சியின் காலகட்டத்தில்” கர்த்தர் இவரைப் பெரிய அளவில் பயன்படுத்தினார்.
இந்தக் கட்டுரையானது 1832 -ம் ஆண்டில், பிஷ்ஷர், சன் மற்றும் ஜாக்சன் ஆகியோரால் வெளியிடப்பட்ட “சுயமறுப்பின் எல்லையும் அதன் நியாயமும்” என்ற சொற்பொழிவின் தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்டது.