“நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல்” (பிலிப்பியர் 4:6)
கவலை என்பது திருடுவது போலவே கட்டாயமாகத் தடைசெய்யப்பட வேண்டியதாகும். நாம் இதை கவனமாக சிந்திக்கையில், இது ஒரு சாதாரணமான பலவீனம் இல்லை என்பதை தெளிவாக உணர முடியும். கவலையின் பாவத்தன்மையை நாம் எவ்வளவு அதிகமாக உணர்கிறோமோ, அவ்வளவு விரைவாகவே அது தேவனை மிகவும் கனவீனப்படுத்துவதை உணர்ந்து, அதற்கெதிராய் நாம் போராடுவோம். பாவத்திற்கு விரோதமாய்ப் போராடுகிறதில் இரத்தஞ்சிந்தப்படத்தக்கதாக நீங்கள் இன்னும் எதிர்த்து நிற்கவில்லையே. (எபிரேயர் 12:4) நாம் இந்த பாவத்திற்கெதிராக எவ்வாறு போராடலாம்?
முதலாவது, இதன் வீரியத்தை ஆழமாக உணரும்படி பரிசுத்த ஆவியானவரிடம் முழு மனதோடு மன்றாட வேண்டும்.
இரண்டாவது, இந்த பொல்லாங்கிலிருந்து விடுதலை பெறுவதற்காக, விசேஷமான, ஊக்கமான ஜெபத்தை ஏறெடுக்க வேண்டும்.
மூன்றாவது, கவலையின் தொடக்கத்தை கவனித்து, மனதில் குழப்பம் தோன்றும் சமயத்திலும், விசுவாசமற்ற எண்ணங்கள் எழும்பும் வேளையிலும், தாமதமின்றி நம் இருதயத்தை தேவனிடம் ஒப்புக்கொடுத்து, அவற்றிலிருந்து விடுவிக்கும்படி அவரை வேண்டிக் கொள்ளவேண்டும்.
கவலைக்கு சிறந்த மருந்து என்பது தேவனின் நன்மைகளையும், வல்லமையையும், அவரே நமக்குப் போதுமானவராய் இருப்பதையும் அவ்வப்போது நம்முடைய சிந்தனையில் நினைவுப்படுத்துவதாகும். ஒரு பரிசுத்தவான், "கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கிறார்" என்று உறுதியாக உணரும்போது, "நான் தாழ்ச்சியடையேன்" என்ற முடிவுக்கு வரமுடியும். நமது வாயின் அறிக்கைக்குப் பின்னர் உடனடியாக வரும் வசனம்: நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள்" என்பதாகும். நாம் தேவனுக்கு முன்பாக சமர்ப்பிக்க முடியாத அளவுக்கு மிகப்பெரிதான காவலை என்பது ஒன்றுமில்லை, மிகச் சிறியதான கவலைமும் எதுவும் இல்லை. "ஸ்தோத்திரத்தோடே கூடிய" என்பதே மிகவும் முக்கியமானது, ஆனால் அதில்தான் நாம் பெரும்பாலும் தோல்வியடைகிறோம். இதன் பொருள், தேவனிடமிருந்து பதிலைப் பெறுவதற்கு முன்பே, அதற்காக அவருக்கு நன்றி செலுத்துவதாகும். இது, பிள்ளை தன் பிதாவின் கிருபையை உறுதியாய் எதிர்பார்க்கும் ஒரு குழந்தையின் நம்பிக்கையாகும்.
“ஆகையால் என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம் என்று உங்கள் ஜீவனுக்காகவும்; என்னத்தை உடுப்போம் என்று உங்கள் சரீரத்துக்காகவும் கவலைப்படாதிருங்கள் என்று, உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஆகாரத்தைப் பார்க்கிலும் ஜீவனும், உடையைப்பார்க்கிலும் சரீரமும் விசேஷித்தவைகள் அல்லவா? முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள்; அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும்”. (மத்தேயு 6:25, 33)