உண்மையான கிறிஸ்தவ வாழ்க்கை

ஆசிரியர்: J.C. ரைல்
தமிழாக்கம்: மேஷாக்
வாசிப்பதற்கான நேரம்: 6 நிமிடங்கள்

 

What is the cost of being a true Christian

     என்னுடைய விளக்கத்தில் எந்தத் தவறும் இல்லாமல் இருக்கட்டும். ஒரு கிறிஸ்தவனின் ஆத்துமாவைக் காப்பாற்றுவதற்கு எவ்வளவு செலவாகும் என்பதை நான் ஆராயவில்லை. பிராயச்சித்தத்தை வழங்கி மனிதனை நரகத்திலிருந்து மீட்பதற்கு தேவனுடைய குமாரனின் இரத்தத்தைத் தவிர வேறு எதுவும் அதற்கு ஈடாகாது. என்பதை நான் நன்கு அறிவேன். நம்முடைய பாவ மீட்பிற்காக செலுத்தப்பட்ட விலை கல்வாரியில் இயேசு கிறிஸ்துவின் மரணத்தை விட எவ்வளவேனும் குறைவானது அல்ல. நாம் "ஒரு கிரயத்துக்கு (விலைக்கு) கொள்ளப்பட்டவர்கள்." (1 கொரிந்தியர் 6:20) "எல்லாரையும் மீட்கும் பொருளாகத் தம்மை ஒப்புக்கொடுத்த இயேசு கிறிஸ்து" (1 தீமோத்தேயு 2:6) ஆனால் இவை அனைத்தும் நம்முடைய கேள்விக்கு அப்பாற்பட்டது. நான் கருத்தில் கொள்ள விரும்பும் காரியம் முற்றிலும் வேறுபட்டது. ஒரு மனிதன் காக்கப்பட விரும்பினால் எதை கொடுக்கத் தயாராக இருக்க வேண்டும் என்பதுதான். கிறிஸ்துவைச் சேவிக்க விரும்பினால் ஒரு மனிதன் சமர்ப்பிக்க வேண்டிய தியாகத்தின் அளவு அது. இந்த அர்த்தத்தில்தான் நான் "அதற்கு என்ன செலவாகும்?" என்ற கேள்வியை எழுப்புகிறேன். மேலும் இது மிகவும் முக்கியமானது என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

ஒருவான் வெளிப்புற கிறிஸ்தவராக இருப்பதற்கு மிகக் குறைந்த செலவே செலவாகும் என்பதை நான் எளிதாக ஒப்புக்கொள்கிறேன். ஒரு மனிதன் ஞாயிற்றுக் கிழமைகளில் இரண்டு முறை திருச்சபைக்கு சென்று, அந்த வாரம் முழுவதும் ஒழுக்கமாக இருந்தால், தன்னைச் சுற்றியுள்ள ஆயிரக்கணக்கானோர், தன்னுடைய மதத்தில் செல்லும் அளவுக்கு அவரும் சென்றுள்ளார். இவை அனைத்தும் மலிவான மற்றும் எளிதான வேலை: இதில் சுய மறுப்பு அல்லது சுய தியாகம் இல்லை. இது இரட்சிக்கும் கிறிஸ்தவதவமாகவும், நாம் இறக்கும் போது நம்மை பரலோகத்திற்கு அழைத்துச் செல்வதாகவும் இருந்தால், வாழ்க்கை முறையின் விளக்கத்தை நாம் மாற்றி, ”பரலோகத்திற்கு போகும் வாசல் அகலமானதும், வழி விசாலமானதும்!" என்று எழுத வேண்டும்.

ஆனால் வேதாகமத்தின் தரத்தின்படி, ஒருவன் உண்மையான கிறிஸ்தவனாக இருப்பதற்கு ஏதோ ஒன்று செலவாகும். வெற்றிக்கொள்ள வேண்டிய எதிரிகள், போராட  வேண்டிய போர்கள், செய்யப்பட வேண்டிய தியாகங்கள். கைவிடப்பட வேண்டிய எகிப்து, கடந்து செல்ல வேண்டிய வனாந்தரம். சுமக்க வேண்டிய சிலுவை, ஓட வேண்டிய பந்தயம் என்பவை உள்ளன. மனந்திரும்புதல் என்பது ஒரு மனிதனை ஒரு நாற்காலியில் வைத்து, அவனை எளிதாக பரலோகத்திற்கு அழைத்துச் செல்வது அல்ல. இது ஒரு வலிமையான மோதலின் தொடக்கமாகும். அதில் வெற்றி பெறுவதற்கு அதிக செலவு ஆகும். எனவே "செலவை எண்ணுவது" என்பதன் சொல்ல முடியாத முக்கியத்துவம் இங்கு எழுகிறது.

ஒரு உண்மையான கிறிஸ்தவனாக இருப்பதற்கு என்ன செலவாகும் என்பதை துல்லியமாகவும் குறிப்பாகவும் காட்ட முயற்சிக்கிறேன். ஒரு மனிதன் கிறிஸ்துவுடன் சேவை செய்ய விரும்புகிறான், கிறிஸ்துவைப் பின்பற்றும்படி ஈர்க்கப்பட்டுகிறான் என்று வைத்துக்கொள்வோம். ஏதோ ஒரு துன்பம் அல்லது திடீர் மரணம் அல்லது ஒரு விழிப்புணர்வு பிரசங்கம் அவனது மனசாட்சியைத் தூண்டி, அவனது ஆத்துமாவின் மதிப்பையும், உண்மையான கிறிஸ்தவனாக இருக்க வேண்டும் என்ற விருப்பத்தையும் உணர வைத்துள்ளது என்று வைத்துக்கொள்வோம். சந்தேகத்திற்கு இடமின்றி, அவனை ஊக்குவிக்க எல்லாம் இருக்கிறது. அவனுடைய பாவங்கள் எவ்வளவு அதிகமாகவும் பெரியதாகவும் இருந்தாலும், அவை முற்றாக மன்னிக்கப்படலாம். எவ்வளவு குளிராகவும் கடினமாகவும் இருந்தாலும், அவனுடைய இதயம் முற்றிலும் மாற்றப்பட்டிருக்கலாம். கிறிஸ்துவும் பரிசுத்த ஆவியும், கருணையும், கிருபையும் அவனுக்காகத் தயாராக உள்ளன. ஆனாலும் அவன் செலுத்தப்படும் செலவை கணக்கிட வேண்டும். அவனுடைய மதம் அவனுக்கு என்ன செலவை கொடுக்கப் போகிறது என்பதை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

  1. மெய்யான கிறிஸ்தவம் ஒருவனின் சுயநீதியை விலையாக கொடுக்கும். அவன் எல்லா பெருமைகளையும், உயர்ந்த எண்ணங்களையும், தனது சொந்த நன்மையின் பெருமையையும் தூக்கி எறிய வேண்டும். இலவச கிருபையினாலும், மற்ற ஒருவரின் (கிறிஸ்துவின்) தகுதி மற்றும் நீதியினாலும் மட்டுமே இரட்சிக்கப்பட்ட ஒரு எளிய பாவியாக பரலோகத்திற்குச் செல்வதில் அவன் திருப்தி அடைய வேண்டும். அவன் தான் "காணாமல் போன ஆட்டைப் போல தவறு செய்து வழிதவறிச் சென்றுவிட்டேன்", "செய்ய வேண்டியதைச் செய்யாமல் விட்டு, தனக்குள் எந்த ஆரோக்கியமும் இல்லை" என்று ஜெப புத்தக வார்த்தைகளை உண்மையிலேயே உணர்ந்து சொல்ல வேண்டும். அவர் தனது சொந்த ஒழுக்கம், மரியாதை, ஜெபம், வேத வாசிப்பு, திருச்சபைக்குச் செல்வது மற்றும் சடங்குகளில் பங்கு பெறுதல் ஆகியவற்றில் உள்ள அனைத்து நம்பிக்கையையும் விட்டுவிடவும், இயேசு கிறிஸ்துவைத் தவிர வேறு எதிலும் நம்பிக்கை வைக்காமலிருக்க மனமுவந்தவனாக இருக்க வேண்டும்.
  2. மெய்யான கிறிஸ்தவம் ஒரு மனிதனின் பாவங்களை விலையாக கொடுக்கும். தேவனுடைய பார்வையில் தவறாக இருக்கும் ஒவ்வொரு பழக்கத்தையும் நடைமுறையையும் அவன் கைவிட முன் வந்தவனாக இருக்க வேண்டும். அவன் தன்னைச் சுற்றியுள்ள உலகம் என்ன சொன்னாலும் நினைத்தாலும் அதற்கு எதிராக தனது முகத்தை வைக்க வேண்டும். அதனுடன் சண்டையிட வேண்டும், அதிலிருந்து தன்னை முறித்துக் கொள்ள வேண்டும், அதனுடன் போராட வேண்டும், அதை சிலுவையில் அறைய வேண்டும், அதைக் கட்டுப்படுத்த அவன் உழைக்க வேண்டும். இதை அவன் நேர்மையாகவும் நியாயமாகவும் செய்ய வேண்டும். அவன் விரும்பும் எந்த சிறப்பு பாவத்துடனும் தனியான போர் நிறுத்தம் இருக்கக்கூடாது. அவன் எல்லா பாவங்களையும் தனது கொடிய எதிரிகளாகக் கருதி, ஒவ்வொரு பொய்யான வழியையும் வெறுக்க வேண்டும். சிறியதாக இருந்தாலும் சரி, பெரியதாக இருந்தாலும் சரி, வெளிப்படையாக இருந்தாலும் சரி. இரகசியமாக இருந்தாலும் சரி, அவனுடைய அனைத்து பாவங்களும் முழுமையாகக் கைவிடப்பட வேண்டும். அவை ஒவ்வொரு நாளும் அவனுடன் கடுமையாகப் போராடலாம், சில சமயங்களில் அவனை கிட்டத்தட்ட அடக்கிவிடலாம். ஆனால் அவன் ஒருபோதும் அவற்றிற்கு அடிபணியக்கூடாது. அவன் தனது பாவங்களுடன் ஒரு நிரந்தரப் போரைத் தொடர வேண்டும். "உங்கள் எல்லா துரோகங்களையும் உங்கள் மேல் இராதபடிக்கு விலக்கி". "உமது பாவங்களையும், அக்கிரமங்களையும் அகற்றிவிடும்." "தீமை செய்தலை விட்டு ஒயுங்கள்” என்று எழுதப்பட்டுள்ளது (எசேக்கியேல் 18:31) (தானியேல் 4:27) (ஏசாயா 1:16).

இது கடினமாகத் தெரிகிறது. எனக்கு ஆச்சரியமாக இல்லை. நம் பாவங்கள் பெரும்பாலும் நம் குழந்தைகளைப் போலவே நமக்கு மிகவும் பிரியமானவை: நாம் அவற்றை நேசிக்கிறோம். அவற்றைக் கட்டிப்பிடிக்கிறோம், அவற்றைப் பற்றிக்கொள்கிறோம், அவற்றில் மகிழ்ச்சியடைகிறோம். அவற்றைப் பிரிவது வலது கையை வெட்டுவது அல்லது வலது கண்ணைப் பிடுங்குவதை போன்றது. ஆனால் அது செய்யப்பட வேண்டும். பிரிவு வர வேண்டும். பொல்லாப்பு அவன் வாயிலே இனிமையாயிருப்பதால், அவன் அதைத் தன் நாவின்கீழ் அடக்கி. அதை விடாமல் பதனம்பண்ணி, தன் வாய்க்குள்ளே வைத்துக்கொண்டிருந்தாலும்," அவன் இரட்சிக்கப்பட விரும்பினால், அது விட்டுவிடப்பட வேண்டும் (யோபு 20:12, 13). அவனும் தேவனுக்கும் நண்பர்களாக இருக்க வேண்டுமென்றால், அவனும் பாவமும் சண்டையிட வேண்டும். கிறிஸ்து எந்த பாவிகளையும் ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறார். ஆனால் அவர்கள் தங்கள் பாவங்களில் ஒட்டிக்கொண்டிருந்தால் அவர் அவர்களை ஏற்றுக்கொள்ள மாட்டார்.

  1. மேலும், கிறிஸ்தவம் ஒரு மனிதனின் நிர்விசாரத்தின் (இலகுவான வாழ்க்கை) மீதான அன்பை விலையாக கொடுக்கும். பரலோகத்தை நோக்கி வெற்றிகரமான ஓட்டத்தை நடத்த விரும்பினால், அவன் வேதனைகளையும் சிரமங்களையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். எதிரியின் பகுதியில் உள்ள ஒரு சிப்பாயைப் போல, அவன் தினமும் விழிப்புடன் இருந்து தன்னை பாதுகாத்து நிற்க வேண்டும். ஒவ்வொரு மணி நேரமும், ஒவ்வொரு கூட்டத்திலும், ஒவ்வொரு இடத்திலும், பொதுவிலும், தனிமையிலும், அந்நியர்களிடையேயும். வீட்டிலும், அவன் தனது நடத்தையைக் மிக கவனமாக கவனத்தில் வேண்டும். அவன் தனது நேரம். தனது நாக்கு, தனது கோபம், தனது எண்ணங்கள், தனது கற்பனை, தனது நோக்கங்கள். வாழ்க்கையின் ஒவ்வொரு உறவிலும் தனது நடத்தை ஆகியவற்றில் கவனமாக இருக்க வேண்டும். அவன் தனது ஜெபங்கள், வேத வாசிப்பு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளைப் பயன்படுத்துதல் ஆகியவற்றில், அவற்றின் அனைத்து கிருபை சாதனங்களுடனும் விடாமுயற்சியுடன் அவன் இருக்க வேண்டும். இந்தக் காரியங்களில் பங்குபெறுவதால், அவன் பரிபூரணத்திலிருந்து வெகு தொலைவிலேயே இருப்பான் ஆனால் இவற்றை பாதுகாப்பாகப் புறக்கணிக்கக்கூடியவர்கள் என்று யாரும் இல்லை. "சோம்பேறியுடைய ஆத்துமா விரும்பியும் ஒன்றும் பெறாது: ஜாக்கிரதையுள்ளவர்களுடைய ஆத்துமாவோ புஷ்டியாகும்" (நீதிமொழிகள் 13:4).

இதுவும் கடினமாகத் தெரிகிறது. நமது மதத்தைப் பற்றிய "தொல்லையை” போல, நாம் இயல்பாகவே வெறுக்கும் எதுவும் இல்லை. நாம் பிரச்சனையை வெறுக்கிறோம். நாம் மற்றொரு கிறிஸ்தவத்தைக் கொண்டிருக்கவும், மேலும் மற்றவரின் மூலம் நல்லவராக இருக்கவும், மேலும் நமக்காக எல்லாம் செய்யப்படவும் வேண்டும் என்று நாம் ரகசியமாக விரும்புகிறோம். உழைப்பு தேவைப்படும் எதுவும் நம் இருதயத்துக்கு முற்றிலும் எதிரானது. ஆனால் ஆன்மா "வேதனைகள் இல்லாமல் எந்த ஆதாயத்தையும்" பெற முடியாது.

  1. இறுதியாக, உண்மையான கிறிஸ்தவம் ஒரு மனிதனுக்கு உலகத்தின் தயவை விலையாக கொடுக்கும். அவன் தேவனைப் பிரியப்படுத்துவதால், மனிதர்கள் தன்னைப் பற்றி மோசமாக நினைப்பதை அவன் ஏற்க வேண்டும். கேலி செய்யப்படுவதை, அவதூறு செய்யப்படுவதை. துன்புறுத்தப்படுவதை, வெறுக்கப்படுவதை அவன் விசித்திரமான காரியமாகக் கருதக்கூடாது. மதத்திலுள்ள தனது கருத்துகளும் நடைமுறைகளும் வெறுக்கப்பட்டு, அவமதிக்கப்படுவதைக் கண்டு அவன் ஆச்சரியப்படக்கூடாது. பலரால் அவன் ஒரு முட்டாளாக, ஒரு உணரச்சிவசமானவனாக மற்றும் ஒரு வெறியனாக எண்ணப்பட, தனது வார்த்தைகள் திரிபுபடுத்தப்பட்டு, தனது செயல்கள் தவறாக சித்தரிக்கப்பட அவன் அடிபணிய வேண்டும்.. உண்மையில், சிலர் அவனைப் பைத்தியம் என்று அழைத்தால் அவர் ஆச்சரியப்படக்கூடாது. எம் எஜமான் பின்வருமாறு கூறுகிறார். "ஊழியக்காரன் தன் எஜமானிலும் பெரியவனல்லவென்று நினைத்துக்கொள்ளுங்கள். நான் உங்களுக்குச் சொன்ன வார்த்தையை அவர்கள் என்னைத் துன்பப்படுத்தினதுண்டானால், உங்களையும் துன்பப்படுத்துவார்கள்: அவர்கள் என் வசனத்தைக் கைக்கொண்டதுண்டானால் உங்கள் வசனத்தையும் கைக்கொள்ளுவார்கள்." (யோவான் 15:20).

இதுவும் கடினமாகத் தெரிகிறது என்று நான் தைரியமாகக் கூறுகிறேன். அநீதியான கையாளுதல் மற்றும் பொய்யான குற்றச்சாட்டுகளை நாம் இயல்பாகவே விரும்பவில்லை, மேலும் காரணமின்றி குற்றம் சாட்டப்படுவது மிகவும் கடினமானது என்று நினைக்கிறோம். நம் அண்டை வீட்டாரின் நல்ல அபிப்பிராயத்தைப் பெற நாம் விரும்பவில்லை என்றால் நாம் சதை மற்றும் இரத்தமாக இருக்க முடியாது. எதிராகப் பேசப்படுவதும், கைவிடப்படுவதும், பொய் சொல்லப்படுவதும், தனியாக நிற்பதும் எப்போதும் விரும்பத்தகாதது. ஆனால் அதற்கு எந்த உதவியும் இல்லை. நம் எஜமான் குடித்த பாத்திரத்தை அவருடைய சீடர்கள் குடிக்க வேண்டும். அவர்கள் "மனுஷரால் அசட்டை பண்ணப்பட்டு புறக்கணிக்கப்பட வேண்டும் (ஏசாயா 53:3). அதை நம் கணக்கில் கடைசியாக வைப்போம். ஒரு கிறிஸ்தவராக இருப்பதற்கு, ஒரு மனிதனுக்கு உலகத்தின் தயவை இழக்கப்படும்.

இந்தப் பெரிய விலையின் எடையைக் கருத்தில் கொண்டும், நாம் நமது சுயநீதியையும், நமது பாவங்களையும், நமது சோம்பேறித்தனத்தையும், உலகத்தின் மீதான நமது அன்பையும் வைத்திருக்கலாம், ஆனாலும் இரட்சிக்கப்படலாம் என்று சொல்லத் துணிந்த மனிதன் உண்மையில் தைரியமானவனாக தான் இருக்க வேண்டும்!

மேலும், ஒரு உண்மையான கிறிஸ்தவராக இருப்பதற்கு அதிக செலவாகும் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால் ஆன்மாவைக் காப்பாற்றுவது இலாபமானதா என்று, எந்த விவேகமுள்ள ஆணோ பெண்ணோ சந்தேகிக்க முடியும்? கப்பல் மூழ்கும் அபாயத்தில் இருக்கும்போது, கப்பல் பணியாளர்கள் விலைமதிப்பற்ற சரக்குகளை கடலில் வீசுவதைப் பற்றி யோசிக்கவே மாட்டார்கள். ஒரு கை அல்லது கால் சேதமடைந்தால், உயிரைக் காப்பாற்றுவதற்காக ஒரு மனிதன் எந்தவொரு கடுமையான அறுவை சிகிச்சைக்கும், ஏன் துண்டிக்கப்படுவதற்கும் கூட உட்படுவான். நிச்சயமாக ஒரு கிறிஸ்தவன் தனக்கும் பரத்திற்கும் இடையில் நிற்கும் எதையும் விட்டுக்கொடுக்கத் தயாராக இருக்க வேண்டும். எதையும் விலையாக கொடுக்காத ஒரு மதம் எதற்கும் மதிப்பற்றது! சிலுவை இல்லாத ஒரு மலிவான கிறிஸ்தவம், இறுதியில் ஒரு பயனற்ற கிறிஸ்தவத்தை, கிரீடம் இல்லாமல் நிரூபிக்கும்.

கருத்துக்களை தெரிவிக்க

Security code
Refresh

 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.