திருச்சபை

ஆசிரியர்: A. கருண்குமார்
தமிழாக்கம்: தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்
வாசிப்பதற்கான நேரம்: 6 நிமிடங்கள்

 

Things that the church should have

      எந்த ஒரு இடத்தையோ, பொருளையோ அழைக்கும் போது பெயர்வைத்து தான் அழைக்க வேண்டும், அந்த பெயர், அதற்கேற்ற பண்புகளைக் கொண்டிருக்க வேண்டும்.  உதாரணத்திற்கு,  கி. மு. 4000 ஆண்டுகளுக்கு முன்பு கிழக்கு ஐரோப்பாவில் ஒரு வித்தியாசமான பளபளப்பான உலோகத்தை கண்டுபிடித்து, அதற்கு தங்கம் என்று பெயரிடப்பட்டது. அதன்பிறகு உலகெங்கும் இதுபோன்ற உலோகம் எங்கு கிடைத்தாலும், அதற்கு தங்கம் என்ற பெயராலே அழைக்கப்பட்டது. அதுப்போல, தேவன் அப்போஸ்தலர்கள் மூலமாக ஒரு திருச்சபையை ஸ்தாபித்து “இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன்;” (மத்தேயு 16:18), அதை தேவனுடைய சபை என்று அழைத்தார். மனிதர்களை பாவத்திலிருந்து மீட்பதற்காக உலக தோற்றத்திற்கு முன்பே, தேவன் கிறிஸ்துவின் மூலம் ஒரு திட்டத்தை ஏற்படுத்தி சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பு இயேசுவின் மூலம் ஏற்படுத்திய அந்த திட்டத்தை நிறைவேற்றினார். அப்படியாக மீட்கப்பட்டவர்கள் தேவனை ஆராதிக்கவும், அவரைக் குறித்து சாட்சியாளிக்கவும், அவருடைய மகிமைக்காக தம்முடைய வாழ்க்கையை மாற்றிக்கொள்ளவும் ஒரு தெய்வீக மனித அமைப்பை தேவனே நியமித்துள்ளார். அதைத்தான் திருச்சபை என்று அழைக்கிறோம். முதன் முதலாக தொடங்கப்பட்ட திருச்சபையை பரிசுத்த வேதத்தில் அப்போஸ்தலர் இரண்டாம் அதிகாரத்தில் தெளிவாக பார்க்கிறோம். அப்படிப்பட்ட அமைப்பைக் கொண்டவர்களை உலகத்தில் வேறு எங்கு பார்த்தாலும் அவர்களை தேவனுடைய திருச்சபை என்று அழைக்கலாம்.

சபை என்றால் தேவனுடைய மக்கள் என்று பொருள்படுமே, தவிர ஒரு இடத்தையோ அல்லது, மற்றொன்றை குறிப்பதல்ல. அந்த ஆதி திருச்சபையின் குணாதிசயங்களை நாம் பார்த்து ஆராய்ந்தால் இன்றைய நாட்களில் தேவனின் திருச்சபைகள் என்று அழைக்கப்படும், சபைகள் அப்படிப்பட்ட குணாதிசயங்களைக் கொண்டிருக்கின்றனவா? அதெல்லாம் உண்மையான திருச்சபைகளா? என்பதை விசுவாசிகளாகிய நாம் தேவனுடைய வார்த்தையைக் கொண்டு ஆராய்ந்து, அத்தகைய திருச்சபைகளில் நாம் தொடரவேண்டும். இந்த கருத்தை நாம் சிந்திப்பதற்க்காக (அப்போஸ்தலர் 2:41-47) ஆகிய வசனங்களிலிருந்து சிந்திப்போம்.

  1. உண்மையும், உறுதியுமான விசுவாசிகள்

 (வசனம். 41): "அவனுடைய (பேதுரு) வார்த்தையைச் சந்தோஷமாய் ஏற்றுக்கொண்டவர்கள் ஞானஸ்நானம் பெற்றார்கள். அன்றையத்தினம் ஏறக்குறைய மூவாயிரம்பேர் சேர்த்துக்கொள்ளப்பட்டார்கள்."

 ஆதி திருச்சபையின் அங்கத்தினர்கள் அனைவரும் உண்மையான விசுவாசிகள். அதாவது அப்போஸ்தலர்கள் இயேசு கிறிஸ்துவைப் பற்றிய இரட்சிப்பின் சுவிசேஷத்தை அறிவித்தபோது, ​​அவர்கள் தங்களுடைய வாயினால் அறிவித்தது மட்டுமல்லாமல், தங்கள் இருதயத்தில் அவரை விசுவாசித்தார்கள். அவர்கள் எந்தச் சோதனைக்கும் ஆளாகாமல், பொருளாசையை எதிர்பார்க்காமல், மனமாற்றம் அடைந்து, அந்த சுவிசேஷ வார்த்தையை விசுவாசித்து, ஞானஸ்நானம் பெற்றுக்கொண்டு தங்கள் சாட்சியை உறுதிப்படுத்தி, அவருடைய சீஷர்களுடனே ஒரு சபையாக அவர்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். தேவனுடைய சபையில் சேர்த்துக் கொள்ளப்பட்ட நாளிலிருந்து, அவர்கள் மனமாற்றத்திற்குத் ஏற்ற கனிகளைத் தந்து, விசுவாச செயலினால் வளர்ந்து அவர்களுடைய பழைய வழிகளை திரும்பிப்பாரமல், தேவனுடைய பாதையையே அவர்கள் நோக்கி இருப்பதை இந்த வசனத்தில் நாம் தெளிவாகக் காணலாம். இன்றைய சமக்கால திருச்சபையில் உள்ளவர்கள் இதுப்போன்ற உறுதியோடு இருக்கிறார்களா? அல்லது இல்லையா? என்பதை நாம் தெளிவாகப் பார்க்க முடியும். ஒருவேளை இப்படிப்பட்ட விசுவாசிகள் இன்றைய திருச்சபையில் இருந்தால் தேவனுக்கே மகிமை உண்டாகட்டும். அது தேவனின் உண்மையான திருச்சபை என்பதற்கு ஒரு சான்றாக நாம் புரிந்து கொள்ளலாம். இல்லையெனில், திருச்சபையில் உள்ளவர்களை உண்மையான விசுவாசிகளாக மாற்றுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளவதற்கு தேவன் உதவிசெய்ய மன்றாடுவோம்.

  1. அவர்கள் அப்போஸ்தலர்களின் உபதேசத்தில் உறுதியாக இருந்தார்கள்.

 (வசனம். 42): "அவர்கள் அப்போஸ்தலருடைய உபதேசத்திலும், அந்நியோந்நியத்திலும், அப்பம் பிட்குதலிலும், ஜெபம்பண்ணுதலிலும் உறுதியாய்த் தரித்திருந்தார்கள்."

இயேசு கிறிஸ்துவால் நேரடியாக நியமிக்கப்பட்ட அப்போஸ்தலர்கள் போதித்த போதனையில் ஆதி திருச்சபை உறுதியாக இருந்தது. இது 'டிடேஸ்' (டிடாகே) என்றால் அப்போஸ்தலர்களின் போதனை என்று எழுதப்பட்டது. அப்போஸ்தலர்கள் இயேசு கிறிஸ்துவின் பிறப்பு, அவருடைய பரிசுத்த வாழ்க்கை, அவரது மரணம், அவரது உயிர்த்தெழுதல், அவர் பரலோகத்திற்கு எடுத்துக் கொள்ளப்படுதல் மற்றும் அவருடைய இரண்டாம் வருகையைப் பற்றி “வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. இயேசுகிறிஸ்து அவர்களுக்கு போதித்தவை, புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து, நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம்பண்ணுங்கள். (மத்தேயு 28:18-20), “எழுதியிருக்கிறபடி, கிறிஸ்து பாடுபடவும், மூன்றாம் நாளில் மரித்தோரிலிருந்தெழுந்திருக்கவும் வேண்டியதாயிருந்தது; அன்றியும் மனந்திரும்புதலும் பாவமன்னிப்பும் எருசலேம் தொடங்கிச் சகல தேசத்தாருக்கும் அவருடைய நாமத்தினாலே பிரசங்கிக்கப்படவும் வேண்டியது. நீங்கள் இவைகளுக்குச் சாட்சிகளாயிருக்கிறீர்கள்.” (லூக்கா 24:45-48), மற்றும் பழைய ஏற்பாட்டு வேத பகுதியிலிருந்து, இயேசு கிறிஸ்துயே காண்பித்து அவர்களுக்கு தெளிவாகக் போதித்தார்கள். அவர்களின் சொந்தமான அறிவையோ, ஞானத்தையோ, தத்துவங்களையோ, கட்டுக்கதைகளையோ அல்லாமல், மனித குலத்திற்கு மிக முக்கியமான தேவையாய் இருக்ககூடிய பரிசுத்த சுவிசேஷத்தை மட்டுமே பிரசங்கித்தார்கள். (1 கொரிந்தியர் 2:1), (2 பேதுரு 1:18). ஆகிய வசனங்களில் பார்க்கிறோம், எனவே அவர்கள் இந்த பரிசுத்தமான சுவிசேசத்தை உடையவர்களாக இருந்தார்கள். இன்றைய நமது திருச்சபைகளில் அப்படிப்பட்ட அப்போஸ்தலரின் போதனைகள் மட்டும்தான் போதிக்கபடுகிறதா? விசுவாசிகள் அதற்கு மட்டும் உறுதியாக இருக்கிர்களா? என்பதை தொடர்ந்து ஆரயலாம்!

  1. ஜெபம்பண்ணுதலிலும் உறுதியாய்த் தரித்திருந்தார்கள்.

 (வசனம். 42): "அவர்கள் அப்போஸ்தலருடைய உபதேசத்திலும், அந்நியோந்நியத்திலும், அப்பம் பிட்குதலிலும், ஜெபம்பண்ணுதலிலும் உறுதியாய்த் தரித்திருந்தார்கள்."

 அவர்கள் இடைவிடாமல் ஜெபம் செய்தார்கள், ஜெபம் என்பது தேவனுடன் உறவாடுவது என்றும், ஜெபம் செய்வதினால் தேவனோடு தொடர்புக்கொள்வது என்றும் அவர்கள் நன்கு அறிந்திருந்ததினால் ஜெபம் செய்வதில் உறுதியாய் இருந்தார்கள். (சங்கீதம் 145:18, 73:28). ஆகிய வசனங்களில் பார்க்கிறோம். பிதாக்கள் ஜெபத்தில் எவ்விதம் தொடர்ந்திருந்தார்களோ! இயேசுகிறிஸ்து எவ்வாறு ஜெபத்தில் முன்மாதிரியாக இருந்தார். என்பதையும் ஆதி திருச்சபையினர் அறிந்திருந்தார்கள். மற்றும் ஜெபத்தின் அவசியத்தை உணர்ந்து எல்லா சூழ்நிலைகளிலும், எல்லா நேரங்களிலும் ஜெபத்தில் தொடர்ந்தனர். (யோவான் 16:33). அனைத்து சபைகளும், உபத்திரவங்களிலும், அவமானங்களிலும், நிந்தைகளிலும், துன்புறுத்தல்களிலும், சிறைச்சாலைகளிலும், சந்தோஷங்களிலும், ஒவ்வொரு தேவைகளிலும், எல்லோரும் ஒரே ஆவியுடனும், ஒரே மனதுடனும், பரிசுத்த ஆவியால் வழிநடத்தப்பட்டு, வேத வசனத்தின் படியான ஜெபம் அவர்களிடம் இருந்தது. (மத்தேயு 18:20), (எபிரேயர் 7:19) அவர்களின் அனுபவத்தின்படி, ஜெபம் செய்வதை பின்வரும் அதிகராங்களில் நாம் பார்க்கமுடியும்.  (அப்போஸ்தலர் 12, 16). அவர்கள் தனிப்பட்ட ஜெபத்தின் மூலம் தேவனின் ஐக்கியத்தையும், சபையாக கூடி ஜெபிப்பத்தின் மூலம் தேவனின் வல்லமையை பெற்றுக்கொள்ள முடிந்தது. இன்றைய நாட்களில் நமது ஜெப வாழ்க்கை எப்படி இருக்கிறது? நம்முடைய ஜெபத்தின் முறையை ஆராய்ந்து கருத்தில் கொள்ளவேண்டுயது அவசியம்.

  1. அப்பம் பிட்குதலிலும் உறுதியாய்த் தரித்திருந்தார்கள்.

 (வசனம். 42): "அவர்கள் அப்போஸ்தலருடைய உபதேசத்திலும், அந்நியோந்நியத்திலும், அப்பம் பிட்குதலிலும், ஜெபம்பண்ணுதலிலும் உறுதியாய்த் தரித்திருந்தார்கள்."

கிறிஸ்தவ விசுவாசத்தில் இரண்டு உடன்படிக்கைகள் உள்ளன, அவை சபை ஒழுங்குகள் என்று அழைக்கப்படுகின்றன. அவை என்னவெனில்: கர்த்தருடைய இராப்போஜனம் மற்றும் ஞானஸ்நானம், திருச்சபையில் உறுப்பினராக சேர்க்கப்பட வேண்டுமேன்றால் கட்டாயம் ஆதி திருச்சபையைப் போலவே, அவர்கள் சுவிசேஷத்தினால் உணரப்பட்டு ஒவ்வொருவரும் மனந்திரும்புதல், மனமாற்றம் மற்றும் கிறிஸ்துவுக்குள் விசுவாசத்தின் மூலம் ஞானஸ்நானம் பெறவேண்டும். அவ்வாறு ஞானஸ்நானம் பெற்றவர்கள் திருச்சபையில் அங்கத்தவராக சேர்க்கப்பட்டு கர்த்தருடைய இராப்போஜனத்தில் கலந்துக் கொள்ளவேண்டும். இந்த நிகழ்வுகளில் கலந்துக்கொள்வது அவர்களின் தனிப்பட்ட ஆவிக்குரிய அனுபவம். ஒவ்வொரு விசுவாசியும் தன் பாவங்கலிருந்து மீட்பதற்காக தன் ஜீவனைக் கொடுத்த இயேசு கிறிஸ்துவை நினைவு கூரவேண்டும்.

“இது உங்களுக்காகக் கொடுக்கப்படுகிற என்னுடைய சரீரமாயிருக்கிறது; என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள் என்றார்.” (லூக்கா 22:19, மாற்கு 14:22).  ஒவ்வொரு விசுவாசியும் திருச்சபைகளில் கர்த்தருடைய இராப்போஜனத்தை அவருடைய இரண்டாம் வருகை வரையில் ஆயத்தத்தோடு கொண்டிருக்க வேண்டும். “கர்த்தராகிய இயேசு தாம் காட்டிக்கொடுக்கப்பட்ட அன்று இராத்திரியிலே அப்பத்தை எடுத்து, ஸ்தோத்திரம்பண்ணி, அதைப் பிட்டு: நீங்கள் வாங்கிப் புசியுங்கள், இது உங்களுக்காகப் பிட்கப்படுகிற என்னுடைய சரீரமாயிருக்கிறது; என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள் என்றார். போஜனம்பண்ணினபின்பு, அவர் அந்தப்படியே பாத்திரத்தையும் எடுத்து: இந்தப் பாத்திரம் என் இரத்தத்தினாலாகிய புதிய உடன்படிக்கையாயிருக்கிறது; நீங்கள் இதைப் பானம்பண்ணும்போதெல்லாம் என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள் என்றார். ஆகையால் நீங்கள் இந்த அப்பத்தைப் புசித்து, இந்தப் பாத்திரத்தில் பானம்பண்ணும்போதெல்லாம் கர்த்தர் வருமளவும் அவருடைய மரணத்தைத் தெரிவிக்கிறீர்கள்.  (1 கொரி 11:23-31).  இன்றைய திருச்சபைகளில் தங்கள் இரட்சகரை உண்மையாகவும், அர்த்தத்தோடு நினைவுகூரவும், அவைகளை நடைமுறைப்படுத்த முடிகிறதா? என்பதை நீங்களே யோசியுங்கள்!

  1. 5. ஐக்கியத்தில் உறுதியாக இருந்தார்கள்.

(வசனம். 42-47): "அவர்கள் அப்போஸ்தலருடைய உபதேசத்திலும், அந்நியோந்நியத்திலும், அப்பம் பிட்குதலிலும், ஜெபம்பண்ணுதலிலும் உறுதியாய்த் தரித்திருந்தார்கள்."

 சபை என்பது உலகத்திலிருந்தும், பாவத்திலிருந்தும், சாபத்திலிருந்தும் வேறுபிரித்து அழைக்கப்பட்டவர்களின் ஐக்கியம் என்று பொருள். இந்த ஐக்கியம் பூமியில் உள்ள வேறு எந்த ஐக்கியத்துக்கும் ஒப்பிட முடியாத ஒரு இனிமையான, அது ஓர் அற்புதமான ஐக்கியம். ஒப்பற்ற பரமபிதாவின் பிள்ளைகளின் ஐக்கியம், அவருடைய குணாதிசயங்களை நடைமுறைகளின் மூலம் காண்பிக்கும் ஐக்கியம். கலங்கமில்லாத தூய பக்தி, எல்லாவற்றையும் பொறுத்துக்கொள்ளும் நேர்மையான அன்பு, இன்பத்திலும், துன்பத்திலும் பின்தொடரும் தியாகமான அக்கறை, எந்தச் சூழ்நிலையிலும் பிரிவினையை நாடாத தூய்மையான ஒற்றுமை, பாலினம், நிறம், பிரதேசம், பொருளாதாரம் இதுப்போன்ற வேறுபாடுகள் இல்லாத முழுமையான சமத்துவம் கொண்ட ஐக்கியம். தன்னலமற்ற சகோதரத்துவத்தோடு கூடிய ஐக்கியம் அன்றைய ஆதி திருச்சபையில் இருந்தது. இன்றைய நம்முடைய சமகாலத்தில் இப்படிப்பட்ட வேறுபாடற்ற ஐக்கியம் இருக்கிறதா? என்பதை நீங்களே சிந்தியுங்கள்!

முடிவுரை

"நான் என் சபையைக் கட்டுவேன்" (மத்தேயு 16:18). கற்கலினால் மற்றும் இரும்பினால் கட்டப்பட்ட கட்டிடம் சபை அல்ல, மாறாக தேவனுடைய வார்த்தையின் மதிப்புகளைக் கொண்டே கட்டப்பட்ட திருச்சபையே உண்மையான சபை. ஆதி திருச்சபையே நமக்கு முன் மாதிரியான சபை. ஆதி திருச்சபையிடம் இருந்து கற்றுக்கொண்டு நாம் சிந்தித்த குணங்கள் இன்றைய நம்முடைய திருச்சபைகளில் இருக்கிறதா? அதை வேத வசனத்தோடு ஒப்பிட்டு ஆராயுங்கள். பரிசுத்த வேதாகமத்தில் திருச்சபையைக் குறித்து பல காரியங்கள் தெளிவாக எழுதப்பட்டுள்ளன. ஆனாலும் இந்த கட்டுரையில் நாம் சில அடிப்படையான விஷயங்களை மட்டுமே பார்த்துள்ளோம். வேதத்தை முழுமையாக வாசித்து ஒவ்வொரு தேவ ஊழியரும் திருச்சபைகளை போறுப்போடு, தேவனுடைய வார்த்தையின் படி கட்டவேண்டும். மனிதனை மட்டுமே “மனிதன்” என்று அழைக்கமுடியும், மனிதனைப் போல வேறு எதையும் மனிதன் என்று அழைக்க முடியாது. மற்றும் மனித உறுப்புகள் போன்றவைக் கொண்டதும், மனித குணாதிசயங்கள் கொண்ட உயிரினங்களும் உண்டு, அவைகளை “மனிதன்” என்று அழைக்க முடியாது. இந்த உதாரணம் திருச்சபைக்கும் பொருந்தும். அது ஒரு சபையாகத் தோன்றினாலும், அல்லது மற்ற பண்புகளைக் கொண்டிருந்தாலும் அதை தேவனின் உண்மையான திருச்சபை என்று அழைக்க முடியாது. தேவனுடைய வார்த்தையின்படியான ஆதி திருச்சபையின் அனைத்து பண்புகளையும் கொண்டிருக்க வேண்டும். உங்கள் திருச்சபை அவ்வாறு இருந்தால் தேவனுக்கு ஸ்தோத்திரம்! அப்படிப்பட்ட அற்புதமான ஐக்கியத்தில் இறுதிவரை தொடருங்கள், இல்லையெனில் அதுப்போன்ற ஐக்கியமாக மாறுவதற்கு தேவனிடம் மன்றாடுங்கள். திரித்துவ தேவனுடைய அன்பும், கிருபையும், ஐக்கியமும் உங்கள் அனைவரோடு இருப்பதாக!

கருத்துக்களை தெரிவிக்க

Security code
Refresh

 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.