நற்செய்தி

பிரச்சனைகள் உண்டா?
ஆசிரியர்: ஆல்பர்ட் என். மார்டின்
தமிழாக்கம்: தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்
வாசிப்பதற்கான நேரம்: 9 நிமிடங்கள்

 பாவமே எல்லாவற்றிலும் மிகப்பெரிய பிரச்சனை; இயேசு கிறிஸ்துவிடம் அதற்கான தீர்வு உண்டு!

பிரச்சனைகள், பிரச்சனைகள், ஓயாத பிரச்சனைகள்! சில நேரங்களில் நம் வாழ்க்கை, ஒன்றன்பின் ஒன்றாகத் தொடரும் பிரச்சனைகளின் தொகுப்பாகவே தோன்றுகிறது. குடும்பத்தில் குழப்பங்கள், போதிய வருமானமின்மை, உடல்நலக் குறைவு, வேலை செய்யும் இடத்தில் நெருக்கடிகள் என நம் அனைவருக்கும் பிரச்சனைகள் உள்ளன. ஆனால், இவை எல்லாவற்றையும் விட மிகப் பயங்கரமான ஒரு பிரச்சனை உண்டு. வறுமையையோ வியாதியையோ விட, இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காணாமல் போவதுதான் மிகவும் பரிதாபகரமான நிலையாகும்.

அதுதான் ‘மோசமான குற்றப்பதிவு’ (பாவக் கணக்கு) மற்றும் ‘பொல்லாத இருதயம்’ என்ற இரட்டைப் பிரச்சனை. உலகத்திலுள்ள ஒவ்வொரு மனிதனுக்கும் இந்தப் பிரச்சனை இருப்பதாக தேவன் கூறுகிறார். வாழ்க்கையின் மற்ற பிரச்சனைகள் பெரியவைதான்; ஆனால், தேவனுடைய நியாயாசனத்திற்கு முன்பாக உங்களுக்கு எதிராக இருக்கும் பயங்கரமான குற்றப்பதிவைத் துடைப்பதும், உங்களுடைய இருதயத்தின் சீர்கேட்டை மாற்றுவதுமே எல்லாவற்றையும் விட மிக முக்கியமான காரியமாகும். உண்மையில், மோசமான குற்றப்பதிவு மற்றும் பொல்லாத இருதயம் ஆகிய இந்த இரட்டைப் பிரச்சனைக்கு நீங்கள் தீர்வு காணவில்லையென்றால், "நீங்கள் பிறவாதிருந்தீர்களானால் உங்களுக்கு நலமாயிருக்கும்" (மாற்கு 14:21) என்ற நிலையே ஏற்படும்.

1. மோசமான குற்றப்பதிவு

தேவனே ஒரு மனிதனுடைய பாவக் கணக்கைத் துடைத்திருந்தால் ஒழிய, பரலோகத்தில் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு மோசமான குற்றப்பதிவு உண்டு. "எல்லாரும் பாவத்திற்குட்பட்டவர்கள்" என்றும், "நீதிமான் ஒருவனாகிலும் இல்லை" என்றும் தேவன் தமது வார்த்தையில் திட்டவட்டமாகக் கூறியிருக்கிறார் (ரோமர் 3:9-10).

தேவனால் படைக்கப்பட்ட ஒரு சிருஷ்டியாகிய நீங்கள், அவருடைய இயற்கை விதிகளுக்குக் (உதாரணமாக: புவியீர்ப்பு விதிக்கு) கட்டுப்பட்டிருப்பது போலவே, நன்மை தீமை குறித்த அவருடைய தார்மீக நியாயப்பிரமாணத்திற்கும் கட்டுப்பட்டவர்களாக இருக்கிறீர்கள். தமது பத்துக் கற்பனைகளில் (யாத்திராகமம் 20:1-17) அவர் உங்களுக்குக் கட்டளையிட்டிருப்பதாவது: நீங்கள் எல்லாவற்றிற்கும் மேலாக அவரை நேசிக்க வேண்டும்; அவருக்கு முன்பாக வேறே தேவர்கள் உங்களுக்கு இருக்கக் கூடாது; அவர் நியமித்த வழியிலேயே அவரை ஆராதிக்க வேண்டும்; அவருடைய பரிசுத்த நாமத்தின்மீதும் அவருடைய வார்த்தையின்மீதும் பயபக்தியுள்ளவர்களாய் இருக்க வேண்டும்; அவர் நியமித்த ஓய்வுநாளைப் பரிசுத்தமாய் ஆசரிக்க வேண்டும்; அவர் ஏற்படுத்திய அதிகாரங்களை (பெற்றோர் மற்றும் மேலான அதிகாரங்களை) கனம் பண்ண வேண்டும்; கொலை செய்யாமலும் பிறரை வெறுக்காமலும் இருக்க வேண்டும்; விபசாரம் செய்யாமலும் இச்சிக்காமலும் இருக்க வேண்டும்; களவு செய்யக் கூடாது; பொய் சொல்லக் கூடாது; தேவன் தடைசெய்த எந்தவொரு காரியத்தையும் உங்கள் இருதயத்தில் ஆசைப்படவும் கூடாது.

அவருடைய ஆளுகைக்குக் கீழ் வாழ்வதை நாம் சுயமாகத் தேர்ந்தெடுக்கவில்லை என்றாலும், அவருக்குக் கணக்கு ஒப்புவிக்கக் கடமைப்பட்டவர்களாக இருக்கிறோம். அவர் தேவன்; நாம் அவருடைய சிருஷ்டிகள். தேவனால் உண்டாக்கப்பட்ட நீங்கள், அவருக்கு விரோதமாகப் பாவம் செய்திருக்கிறீர்கள்; உங்களுடைய பாவங்களுக்காக நித்திய ஆக்கினைத்தீர்ப்புக்கு (நரக தண்டனைக்கு) நீங்கள் தகுதியானவர்கள் என்று அவர் தீர்ப்பு எழுதியிருக்கிறார். இதுவே உங்களுடைய மாபெரும் பிரச்சனையின் முதல் பகுதி: தேவனுக்கு முன்பாக உங்களுக்கு ஒரு மோசமான குற்றப்பதிவு இருக்கிறது. அது நீதியான முறையில் துடைக்கப்படாவிட்டால், நியாயத்தீர்ப்பின் நாளில் தேவன் உங்களை ஆக்கினைக்குள்ளாகத் தீர்ப்பார்.

இன்னும் ஒன்று உண்டு: ஒரு பொல்லாத இருதயம்

பரலோகத்தில் உங்களுக்கு ஒரு மோசமான குற்றப்பதிவு இருப்பது மட்டுமல்லாமல், பூமியில் உங்களுக்கு ஒரு பொல்லாத இருதயமும் இருக்கிறது. எரேமியா 17:9 இவ்வாறு கூறுகிறது:

"இருதயமே எல்லாவற்றிலும் திருக்குள்ளதும் மகா கேடுள்ளதுமாயிருக்கிறது."

சகல தீமைகளுக்கும் ஊற்றுக்கண் மனிதனுடைய இருதயமே என்பதை இயேசு கிறிஸ்து மிகத் தெளிவாகப் போதித்தார். "மனுஷருடைய இருதயத்திற்குள்ளிருந்து பொல்லாத சிந்தனைகளும், விபசாரங்களும், வேசித்தனங்களும், கொலைபாதகங்களும்... புறப்பட்டு வரும்" (மாற்கு 7:21-23) என்று அவர் கூறினார். பாவம் உங்களைச் சுற்றியுள்ள சூழ்நிலையிலிருந்து வரவில்லை; உங்களுடைய பொல்லாத இருதயத்திலிருந்தே வருகிறது! பாவத்தை நேசிக்கிறதும், தேவனைப் பகைக்கிறதுமான இந்த இருதயம், தேவனுடைய நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்படியாமலும், கீழ்ப்படியக்கூடாமலும் இருக்கிறது (ரோமர் 8:7).

"நான் அவ்வளவு கெட்டவன் அல்ல!", "நான் ஒன்றும் அவ்வளவு மோசமான பாவி அல்ல" என்று நினைக்கும்படி நம்முடைய இருதயம் நம்மை வஞ்சிக்கலாம். ஆனால், இப்படி நம்மை நாமே நியாயப்படுத்த நினைப்பதே நமக்குள் ஒரு கேடுள்ள இருதயம் இருக்கிறது என்பதற்கான அத்தாட்சியாகும்.

ஆகவே, உங்களால் மாற்றவே முடியாத ஒரு மோசமான குற்றப்பதிவு பரலோகத்தில் இருப்பது மட்டுமல்லாமல், உங்களால் மாற்றவே முடியாத ஒரு பொல்லாத இருதயமும் பூமியில் உங்களுக்கு இருக்கிறது.

2. நற்செய்தி!

இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷம் என்பது, எண்ணற்ற பாவிகளின் மோசமான குற்றப்பதிவுகளைத் துடைத்துப்போடவும், அவர்களுடைய பொல்லாத இருதயங்களை மாற்றவும், தேவன் தமது குமாரனும் கர்த்தருமாகிய இயேசு கிறிஸ்து மூலமாகச் செய்து முடித்திருக்கும் மாபெரும் இரட்சிப்பின் நற்செய்தியாகும்.

இயேசு தாம் மரிப்பதற்குச் சற்று முன்பு, தம்முடைய சீஷர்களுடன் அருந்திய இராப்போஜனத்தின்போது, "இந்தப் பாத்திரம் உங்களுக்காகச் சிந்தப்படுகிற என் இரத்தத்தினாலாகிய புதிய உடன்படிக்கையாயிருக்கிறது" (லூக்கா 22:20) என்று கூறினார். ‘புதிய உடன்படிக்கை’ என்ற இந்த வார்த்தைகளில் தமது ஊழியத்தின் நோக்கத்தை அவர் வெளிப்படுத்துகிறார். கர்த்தராகிய இயேசு தமது மகிமையான வாழ்க்கையில் செய்த அனைத்தும் இந்தப் புதிய உடன்படிக்கையை நிலைநாட்டுவதிலேயே வந்து நிறைவடைந்தன. தேவனுடைய குமாரனாகிய அவர், தமது மகிமையைத் துறந்து தம்மைத்தாமே வெறுமையாக்கி, மெய்யான மனிதனாக இந்தப் பூமிக்கு வந்தார். பாவமே இல்லாத பரிசுத்த வாழ்க்கை வாழ்ந்தார். தம்முடைய ஜனங்களின் பாவங்களைச் சுமக்கும் பதிலாளியாக (பாவநிவாரண பலியாக) தம்மைத்தாமே மனப்பூர்வமாக மரணத்திற்கு ஒப்புக்கொடுத்தார். மூன்று நாட்களுக்குப் பிறகு, கல்லறையிலிருந்து அவர் மகிமையாய் உயிர்த்தெழுந்தார்.

இந்தப் புதிய உடன்படிக்கையில் தேவன் என்ன வாக்குத்தத்தம் செய்திருக்கிறார்? எரேமியா 31:31-34 வசனங்களில் உள்ள புதிய உடன்படிக்கையின் வாக்குத்தத்தத்தைக் கவனியுங்கள்:

"நான் ஏற்படுத்தப்போகிற உடன்படிக்கையாவது... நான் என் நியாயப்பிரமாணத்தை அவர்கள் உள்ளத்திலே வைத்து, அதை அவர்கள் இருதயத்திலே எழுதி, நான் அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள்... நான் அவர்கள் அக்கிரமத்தை மன்னித்து, அவர்கள் பாவங்களை இனி நினையாதிருப்பேன்."

இவ்வாறு, புதிய உடன்படிக்கையில் தேவன் தம்முடைய ஜனங்களின் நீதியுள்ள நியாயாதிபதியாகவும், அவர்களை நீதிமான்களாக்குகிறவராகவும் நின்று, அவர்களின் மோசமான குற்றப்பதிவை முற்றிலுமாகத் துடைத்துப்போடுகிறார். ஆத்துமாவின் மருத்துவராக, பாவ நோயால் பாதிக்கப்பட்ட அவர்களுடைய இருதயங்களை மாற்றிக் குணமாக்குகிறார். இதுவே சுவிசேஷம்! உங்களுடைய மிகப்பெரிய பிரச்சனைக்கான ஒரே தீர்வு இதுவே!

3. நான் திருந்தி ஒரு புதிய வாழ்க்கையைத் தொடங்க வேண்டுமா?

உங்களுடைய குற்றப்பதிவு இன்னும் மோசமாகிவிடக் கூடாது என்பதற்காக, இன்றிலிருந்து நீங்களே உங்கள் வாழ்க்கையைத் திருத்திக்கொள்ளத் தீர்மானிக்க வேண்டும் என்பது இதன் அர்த்தமல்ல. நிச்சயமாக இல்லை! அது சுவிசேஷச் செய்தியே அல்ல. ஒருவேளை இன்றிலிருந்து நீங்கள் உங்கள் வாழ்க்கையைச் சரிசெய்து, பரலோகப் பதிவேட்டில் இனி ஒரு சிறிய கறைகூடப் படியாமல் பார்த்துக்கொண்டாலும், கடந்த காலங்களில் நீங்கள் செய்த பாவங்களின் கணக்கு ஒரு மாபெரும் மலையைப் போல உங்களுக்கு எதிராக உயர்ந்து நின்று, ஆக்கினைத்தீர்ப்பின் இருண்ட நிழலை உங்கள்மேல் வீசிக்கொண்டேதான் இருக்கும்.

மேலும், "இன்றிலிருந்து நான் இயேசுவுக்காக வாழப் போகிறேன், அவரைப் பின்பற்றப் போகிறேன்" என்று தீர்மானம் எடுங்கள் என்பதும் சுவிசேஷச் செய்தி அல்ல. பொல்லாத இருதயத்தோடு இருக்கும் உங்களால் அப்படி விரும்பவும் முடியாது, வாழவும் முடியாது. அதுதான் இங்கே அடிப்படைப் பிரச்சனையே! உங்களுடைய பொல்லாத இருதயம் உங்களையே பிரியப்படுத்த நினைக்கிறதே தவிர, இயேசுவைப் பிரியப்படுத்த அல்ல. நீங்கள் இப்போது இருக்கும் நிலையிலேயே இயேசுவைப் பின்பற்ற முடியாது. நீங்கள் மனந்திரும்ப வேண்டும்; உள்ளான மனிதனில் மாற்றப்பட வேண்டும்; உங்களுக்கு ஒரு புதிய இருதயம் கொடுக்கப்பட வேண்டும்!

அதுமட்டுமல்ல, "இயேசுவைப் பற்றிய சில உண்மைகளை (அவர் பாவிகளுக்காகச் சிலுவையில் மரித்தார் என்பது போன்றவற்றை) வெறுமனே அறிவளவில் நம்பிவிட்டு, ஏதோ ஒரு ஜெபத்தைச் சொல்லிவிட்டால் எல்லாம் சரியாகிவிடும்" என்பதும் சுவிசேஷம் அல்ல. சுவிசேஷத்தின் அழைப்பு அதுவல்லவே அல்ல! அப்படியானால் சுவிசேஷச் செய்திதான் என்ன?

இயேசுவிடம் வாருங்கள்!

"இயேசுவிடம் வாருங்கள்" என்பதே சுவிசேஷத்தின் செய்தியாகும். அவரே புதிய உடன்படிக்கையின் மத்தியஸ்தர் (எபிரெயர் 12:24). நீங்கள் அவரிடம் வரும்போது, புதிய உடன்படிக்கையின் ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்வீர்கள். உங்களை இரட்சிக்கும்படி இயேசு கிறிஸ்துவை நோக்கிக் கூப்பிடுங்கள்; அவரையே உங்களுடைய ஒரே இரட்சகராக விசுவாசியுங்கள். நீங்கள் அவருக்கு விரோதமாகக் கலகம் செய்திருக்கிறீர்கள் என்பதையும், தேவனுடைய நியாயப்பிரமாணத்தை எண்ணற்ற முறை மீறியிருக்கிறீர்கள் என்பதையும், வேதாகமம் சொல்லுகிறபடியே நீங்கள் நரக ஆக்கினைக்குப் பாத்திரமான பாவி என்பதையும் அவரிடத்தில் அறிக்கை செய்யுங்கள். இயேசு கிறிஸ்துவின் சமூகத்தில், அவருடைய உருக்கமான இரக்கத்திற்கு உங்களை முற்றிலுமாக ஒப்புக்கொடுங்கள். தம்மை நோக்கிக் கூப்பிடுகிறவர்களுக்கு அவர் வாக்குத்தத்தம் செய்திருக்கிறபடியே, உங்களுடைய பாவங்களை மன்னித்து, உங்களுக்கு ஒரு புதிய இருதயத்தைத் தரும்படி அவரிடம் மன்றாடுங்கள்.

புதிய உடன்படிக்கையின் மத்தியஸ்தராகிய கிறிஸ்து ஒருவரே உங்களுடைய மாபெரும் பிரச்சனைக்கு ஒரே தீர்வு. உங்கள் வாழ்க்கையில் காணப்படும் இந்தப் பிரச்சனையைத் தேவன் தீர்த்துவிட்டாரா? இல்லையென்றால், இன்றே கிறிஸ்துவைத் தேடுங்கள். புதிய உடன்படிக்கையின் மத்தியஸ்தராகிய இயேசுவை நோக்கிக் கதறுங்கள். அவருடைய கிருபைக்காக மன்றாடுங்கள். தம்மை நோக்கிக் கூப்பிடுகிறவர்களின் சத்தத்தைக் கேட்டு அவர் நிச்சயமாகவே பதிலளிக்கிறார்!

மோசமான குற்றப்பதிவு மற்றும் பொல்லாத இருதயம் ஆகிய உங்களுடைய இந்த மாபெரும் இரட்டைப் பிரச்சனையைத் தேவன் தீர்த்த பிறகும், உலகில் நம் அனைவருக்கும் பொதுவாக இருக்கும் அன்றாடப் பிரச்சனைகள் மறைந்துவிடுவதில்லை. ஆனால், அவற்றை எதிர்கொள்ள நமக்கு மேலான ஒத்தாசை உண்டு. ஒருநாள் தேவன் சகலத்தையும் புதிதாக்குவார் என்ற அவருடைய வாக்குத்தத்தத்தின் நிச்சயமான நம்பிக்கை நமக்கு உண்டு. இப்போதும்கூட, இந்த வாழ்க்கையின் மிகப்பெரிய உபத்திரவங்களின் மத்தியிலும், அவர் தமது வார்த்தையினால் நம்மை வழிநடத்தி, தமது பரிசுத்த ஆவியானவரால் நம்மைப் பெலப்படுத்துகிறார். இன்றே இயேசுவிடம் வாருங்கள்!

 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

Join WhatsApp எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.