இரட்சிப்பு

பரலோகம் எந்த வகையில் ஒரு சிறந்த தேசமாக இருக்கிறது?
ஆசிரியர்: தாமஸ் வாட்சன்
தமிழாக்கம்: தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்
வாசிப்பதற்கான நேரம்: 8 நிமிடங்கள்

 பதில் 1: அந்த தேசத்தில் சிறந்த மகிழ்ச்சிகள் உள்ளன. பரலோகத்தில் ஜீவவிருட்சமும், பேரின்ப நதிகளும் உள்ளன. ஆச்சரியமான அழகும், அளவிட முடியாத ஐசுவரியமும் அங்கே உண்டு. தேவதூதர்களின் மகிழ்ச்சி அங்கே இருக்கிறது. அது முழுமையாக மலர்ந்த ஒரு சந்தோஷத்தின் மலர். அங்கே “நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய்” இருக்கிறது (எபேசியர் 3:20). அங்குள்ள மகிமை அளவிட முடியாதது; எந்த வார்த்தைகளாலும் அதை மிகைப்படுத்திச் சொல்ல முடியாது.

பதில் 2: அந்த தேசத்தில் ஒரு சிறந்த வீடு உள்ளது. (1) இது “கைவேலையல்லாத” வீடு (2 கொரிந்தியர் 5:1). உலகில் உள்ள சிறந்த வீடுகள் அனைத்தும் மனிதர்களால் கட்டப்பட்டவை. ஆனால் பரலோகத்தில் உள்ள வீடு மனிதர்களோ அல்லது தேவதூதர்களோ கட்ட முடியாத அளவுக்கு மிகச் சிறந்தது; தேவன் மட்டுமே அந்த மாளிகையைக் கட்ட முடியும். (2) இது பரலோகத்தில் உள்ள நித்திய வீடு. இது ஒரு தற்காலிக விடுதி அல்ல, அது ஒரு நிரந்தர மாளிகை. அது ஒருபோதும் பழுதுபார்க்கப்பட வேண்டிய அவசியம் இல்லாத வீடு. “ஞானமானது தன் வீட்டைக் கட்டி, தன் ஏழு தூண்களையும் செதுக்கி” (நீதிமொழிகள் 9:1), அது ஒருபோதும் அழியாது.

பதில் 3: அந்த தேசத்தில் சிறந்த ஏற்பாடுகள் உள்ளன. நம் பிதாவின் வீட்டில் போதுமான அப்பம் இருக்கிறது. பாலும் தேனும் ஓடுகிற கானான் தேசம், பரலோகத்திற்கு ஒரு நிழலாகவே இருந்தது. அங்கே ஒரு ராஜ விருந்து, வாசனை திரவியங்கள் கலந்த திராட்சைரசம் மற்றும் தேவதூதர்களின் உணவு ஆகியவை உள்ளன. நாம் வார்த்தைகளால் விவரிக்க முடியாத, ஏன் நினைத்துக்கூடப் பார்க்க முடியாத அளவுக்கு அபூர்வமான உணவுகளை அங்கே பரிமாறுகிறார்கள்.

பதில் 4: அந்த தேசத்தில் சிறந்த சமூகம் உள்ளது. அங்கே தேவன் என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்டவராக இருக்கிறார். அவருடைய முகத்தின் புன்னகை எவ்வளவு இனிமையாகவும், மெய்சிலிர்க்க வைப்பதாகவும் இருக்கும்! ராஜாவின் பிரசன்னமே அந்த இடத்தை ராஜசபையாக மாற்றுகிறது. அங்கே மகிமையான கேருபீன்கள் இருக்கிறார்கள். நாம் இப்போது வாழும் இந்த பூமியில், ஓநாய்களுக்கும் சர்ப்பங்களுக்கும் நடுவில் வாழ்கிறோம்; ஆனால் மேலான அந்த தேசத்தில், நாம் தேவதூதர்களுக்கு மத்தியில் வாழ்வோம்! அங்கே “பூரணராக்கப்பட்ட நீதிமான்களுடைய ஆவிகளிடத்திற்கும்” சேருவோம் (எபிரெயர் 12:23). பூமியில் தேவனுடைய பிள்ளைகள் பலவீனங்கள் உள்ளவர்களாகவே இருக்கிறார்கள்; அவர்கள் முகங்களில் குறைகளைக் காண்கிறோம், அவர்களிடத்தில் பெருமை, கோபம், மற்றவர்களை நியாயம் தீர்க்கும் குணம் போன்றவைகள் உள்ளன. ஆனால் பரலோக எருசலேமில், எவ்வித பாவத்தின் நிழலோ கறையோ இல்லாமல், ஒப்பிடமுடியாத அழகுடன் ராஜ வஸ்திரம் அணிந்தவர்களாக அவர்களை நாம் காண்போம்!

பதில் 5: சுவாசிக்கச் சிறந்த காற்று அந்த தேசத்தில் உள்ளது. நாம் நல்ல காற்றை சுவாசிக்க கிராமங்களை நோக்கிச் செல்கிறோம்; ஆனால் மிகச் சிறந்த காற்று அந்த மேலான தேசத்தில் மட்டுமே கிடைக்கும்: (1) இது மிகச் சரியான தட்பவெப்பம் கொண்ட காற்று; காலநிலை மிகவும் இதமாக இருக்கும். அங்கே நாம் குளிரால் உறையவும் மாட்டோம், வெப்பத்தால் சோர்ந்துபோகவும் மாட்டோம். (2) இது ஒரு பிரகாசமான காற்று; அங்கே ஒரு சிறந்த வெளிச்சம் பிரகாசிக்கிறது. நீதியின் சூரியன் தனது மகிமையான கதிர்களால் அந்த அடிவானத்தை ஒளிரச் செய்கிறார்: “ஆட்டுக்குட்டியானவரே அதின் விளக்கு” (வெளிப்படுத்தின விசேஷம் 21:23). (3) இது ஒரு தூய்மையான காற்று. துர்நாற்றம் வீசும் சதுப்பு நிலங்களை நாம் வாழத் தகுதியற்ற மோசமான இடமாகக் கருதுகிறோம். இந்த உலகம் பாவம் என்னும் நச்சு வாயுக்கள் எழும்பும் ஒரு சதுப்பு நிலம் போன்றது; அது ஆவிக்குரிய ரீதியில் நோய்களைத் தரும் மோசமான இடம். ஆனால் மேலான தேசத்தில், இந்த நச்சு வாயுக்கள் எதுவும் இல்லை—மாறாக, பரிசுத்தம் என்னும் இனிய நறுமணம் வீசுகிறது. கிறிஸ்துவிடமிருந்து வரும் வெள்ளைப்போளம் மற்றும் லவங்கப்பட்டை போன்ற மிகச் சிறந்த நறுமணம் அங்கே வீசுகிறது.

பதில் 6: அந்த தேசத்தில் சிறந்த பூமி உள்ளது. (1) அதன் உயரத்தின் காரணமாக அது சிறந்தது. தாழ்வாக இருக்கும் இந்தப் பூமி தரம் குறைந்தது; ஆனால் பரலோகத்திற்கு அருகிலிருக்கும் பகுதி அக்கினியைப் போல மிகவும் தூய்மையானது மற்றும் சிறந்தது. மேலான அந்த தேசம் மிக உயர்ந்த ஒரு தேசமாகும்; அது காணக்கூடிய எல்லாவற்றிற்கும் மேலாக உயர்ந்திருக்கிறது (சங்கீதம் 24:3). (2) அதன் செழிப்பினால் அது சிறந்தது; அது சிறப்பான விளைச்சலைக் கொடுக்கிறது. அந்த மேலான தேசம் உயர்ந்த பொருட்களை விளைவிக்கிறது. அங்கே பரலோக முத்துக்கள், ஆவிக்குரிய திராட்சைச்செடி, ஒழுகும் தேவ அன்பாகிய தேன்கூடு, ஜீவத்தண்ணீர் மற்றும் மறைவான மன்னா ஆகியவை உள்ளன. ஒருபோதும் அழுகிப்போகாத, வாடிவிடாத மலர்கள் அங்கே உண்டு. அறுவடை செய்து முடிக்க முடியாத விளைச்சல் அங்கே உண்டு; பரலோகத்தில் எப்போதும் அறுவடைக்காலமே, உழவு மற்றும் விதைக்கும் கடின உழைப்பு இல்லாமலேயே அந்தப் பூமி எல்லாவற்றையும் விளைவிக்கிறது. (3) எந்த ஆபத்தும் இல்லாததால் அது சிறந்தது. அங்கே முட்செடிகள் எதுவும் இல்லை. இந்த உலகம் பொல்லாத மனிதர்கள் வாழும் ஒரு வனாந்தரம், “அவர்களில் மிகவும் நல்லவன் முட்செடியைப்போலிருக்கிறான்” (மீகா 7:4). அவர்கள் தேவனுடைய பிள்ளைகளின் ஆவிக்குரிய சுதந்திரத்தைக் கிழித்துப் போடுகிறார்கள். ஆனால் மேலான தேசத்தில் ஒரு முட்செடியைக்கூடக் காண முடியாது; எல்லா முட்செடிகளும் சுட்டெரிக்கப்பட்டுவிட்டன. (4) அதன் சிறப்பான காட்சிக்காக அது சிறந்தது; ஒரு மனிதன் அங்கே காணும் எல்லாமே அவனுக்குச் சொந்தமானதே. ஒருவன் தன் சொந்த இடத்திலிருந்து எவ்வளவு தூரம் பார்க்க முடியுமோ, அதுவே மிகச் சிறந்த காட்சி என்று நான் கருதுகிறேன்.

பதில் 7: அந்த தேசத்தில் சிறந்த ஒற்றுமை உள்ளது. அங்கு வாழும் மக்கள் அனைவரும் அன்பினால் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளனர். வஞ்சகம் என்னும் விஷச்செடி அங்கே வளர்வதில்லை. பிரிவினையில்லாத நல்லிணக்கமும், பொறாமையில்லாத அன்பும் அங்கே இருக்கிறது. மேலான அந்த தேசத்தில், சாலொமோனின் தேவாலயத்தில் இருந்ததுபோல, எந்த சம்மட்டியின் சத்தமும் (சண்டையோ கூச்சலோ) கேட்கப்படுவதில்லை.

பதில் 8: அந்த தேசத்தில் சிறந்த வேலை உள்ளது. நாம் இங்கே இருக்கும்போது, நம் தேவைகளைக் குறித்து முறுமுறுத்துக்கொண்டும், நம் பாவங்களைக் குறித்து அழுதுகொண்டும் இருக்கிறோம்—ஆனால் அங்கே நாம் தேவனைத் துதித்துக்கொண்டே இருப்போம். பரதீசின் பறவைகள் அந்தப் பரலோகத் தேசத்தில் இருக்கும்போது எவ்வளவு அழகாகப் பாடும்! அங்கே விடிவெள்ளி நட்சத்திரங்கள் ஏகமாய்ப் பாடும், தேவனுடைய பரிசுத்தவான்கள் அனைவரும் ஆனந்தக் கெம்பீரமாய் ஆர்ப்பரிப்பார்கள்.

ஆஹா, இந்த மேலான தேசத்தைத் தவிர நாம் வேறெதை வாஞ்சிக்க வேண்டும்? கண்களைத் திறந்தவர்கள், அது எண்ணற்ற மடங்கு சிறந்தது என்பதைக் காண்பார்கள்! ஒரு பாமர மனிதன் ஒரு நட்சத்திரத்தைப் பார்க்கும்போது, அது அவனுக்கு ஒரு சிறிய வெள்ளிப் புள்ளிபோலத் தோன்றுகிறது—ஆனால் ஒரு வானியலாளர், நட்சத்திரத்தின் பரிமாணத்தை அளவிடும் கருவியைக் கொண்டிருப்பதால், அது பூமியை விடப் பல மடங்கு பெரியது என்பதை அறிவார். அதேபோல, ஒரு மாம்ச மனிதன் பரலோகத் தேசம் மிகவும் மகிமையானது என்று கேள்விப்படுகிறான்—ஆனால் அது வெகு தொலைவில் இருப்பதாக நினைக்கிறான். அவனிடம் ஆவிக்குரிய பகுத்தறியும் திறன் இல்லாததால், இந்த உலகமே அவன் கண்களுக்குப் பெரியதாகத் தெரிகிறது. ஆனால் பரலோகத்தை மதிப்பிடுவதற்கான விசுவாசம் என்னும் கருவியைக் கொண்ட ஆவிக்குரிய மக்கள், அதுவே மிகச் சிறந்த தேசம் என்று கூறுவார்கள்; அவர்கள் வாஞ்சை என்னும் பாய்மரங்களை விரித்து, அங்கே செல்ல விரைவார்கள்.

கருத்துக்களை தெரிவிக்க

Security code
Refresh

 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

Join WhatsApp எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.