உண்மையில் சொல்ல வேண்டுமானால் இது கிறிஸ்துவத்தை மட்டுமல்ல, முழு உலக வரலாற்றையும் புரட்டிப் போட்ட ஒரு நாள் என்று தான் சொல்ல வேண்டும். மார்ட்டின் லூத்தர் என்ற சாதாரண ரோமன் கத்தோலிக்க மதத்துறவி, ரோமன் கத்தோலிக்க மதத்தின் அதிகாரத்துக்கு எதிராக பொறுக்க முடியாமல் துணிச்சலோடு செய்த ஒரு செயல் பல நன்மைகளுக்கு வித்திட்டது. குறிப்பாக சொல்லவேண்டுமெனில் தனிநபர் உரிமை, சுதந்திரம், கல்வியின் பரவல், எழுத்தறிவு, மற்றும் அரசியல், பொருளாதார மாற்றம் போன்ற காரியங்களுக்கு லூத்தரின் இந்த செயல் தொடக்கமாக உந்துதலாக இருந்தது. இதினால் உலத்திற்கு என்ன நம்மை என்று சிந்திக்க போவதில்லை. அது நமக்கு எந்த பயனையும் கொடுக்காது.
மாறாக தேவனின் பராமரிக்கும் கிருபை தமிழ்நாட்டின் மூலை முடுக்கில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் பிறந்த பாவியும் ஏழையுமாயுமான என்னை சந்தித்ததற்கு ஆரம்ப கட்டமாக இருந்த ஒரு வரலாற்று நிகழ்வைப் பற்றி தெரிந்து கொள்ளப் போகிறோம். இதை உங்களோடு பகிர்ந்து கொள்வதற்காக இந்த நல்ல நாளில் நான் சந்தோஷப்படுகிறேன். நான் சொல்வது அனைத்தும் உண்மை என்பதை நான் முழு நிச்சயமாக நம்புகிறேன்.
நான் இப்போது உங்கள் மன எண்ணங்களை பதினாறாம் நூற்றாண்டுக்கு அழைத்துச் செல்கிறேன். இப்போது உங்களை அந்த கூட்டத்தோடு இணைத்துக் கொண்டவர்களாக கற்பனை செய்து கொள்ளுங்கள். தொடர்ந்து சிந்திப்போம்.
உண்மையில் அன்று என்னதான் நடந்தது?
மனிதர்கள் இரட்சிப்பை கண்டு கொள்வதற்காக இருந்த எளிமையான வழியை ரோமன் கத்தோலிக்க மதத்தின் சடங்குகளும், முறைமைகளும் குழப்பி வைத்திருந்தன. அன்று போப் என்று சொல்லப்பட்ட திருச்சபை தலைவர்கள் தங்கள் அதிகாரத்தை பயங்கரமாக துஷ்பிரயோகம் செய்தார்கள். அவர்களை மதத்தலைவர் என்று சொல்வதை விட ஒரு சக்தி வாய்ந்த அரசன் என்றே சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு அரசியலில் ஆதிக்கம் செலுத்தினர்கள். ரோமன் கத்தோலிக்க மதத்தின் சபை அதிகார பதவிகளை விலை கொடுத்து வாங்கப்பட்டன. வேதத்தை படிக்காத மனிதர்களும் பணத்தை கொடுத்து பெரும் பதவிகள் பெற்றனர். பல ஆயர்களும் குருக்களும் ஒழுக்கமற்ற வாழ்க்கை வாழ்ந்தனர். போப் ஆண்டவரை தேவனின் பிரதிநிதி என்றும், அவர் சொல்வதே இறுதி அதிகாரம் என்றும் பார்க்கப்பட்டது.
சாதாரண மக்கள் வேதத்தை படித்து புரிந்து கொள்வதற்காக எடுக்கப்பட்ட முயற்சிகளை எவ்வளவு அடக்க முடியுமோ அவ்வளவு அடக்கினார்கள். உண்மையைச் சொல்ல வேண்டுமெனில் நமக்கு கிடைத்திருக்கும் இந்த வேதப் புத்தகம் இரத்தத்தால் மொழிபெயர்க்கப்பட்டது என்று சொன்னால் அந்த வார்த்தை மிகையாகாது. இதைச் செய்த தேவனுக்கே மகிமையுண்டாகட்டும்.
இந்த சூழ்நிலையில் மார்ட்டின் லூத்தர் கத்தோலிக்க திருச்சபையின் சில நடைமுறைகள் வேதாகமத்தின் போதனைகளிலிருந்து விலகிச் செல்கின்றன என்பதை உறுதியாக நம்பினார். குறிப்பாக அவர் "பாவ மன்னிப்புச் சீட்டுகள்" விற்பதை எதிர்த்தார். இந்தச் சீட்டுகள் வாங்குவதற்கு ஒருவர் பணம் செலுத்துவதன் மூலம் தன்னுடைய அல்லது இறந்துபோன ஒருவருடைய பாவங்களுக்குக் கிடைத்த தண்டனையிலிருந்து அவர்கள் விடுபட முடியும் என்று ரோமன் கத்தோலிக்க திருச்சபை உறுதியளித்தன. இந்தச் சீட்டுகள் திருச்சபையின் புதிய கட்டுமானப் பணிகளுக்காக நிதி திரட்டப் பயன்படுத்தப்பட்டன. இந்த செயல் தேவனின் இலவச கிருபையால் கிறிஸ்துவின் மூலம் கிடைக்கக்கூடிய இரட்சிப்பை எந்த அளவிற்கு கொச்சைப்படுத்த முடியுமோ அந்த அளவிற்கு கொச்சைப் படுத்தியது. மேலும் இது மனந்திரும்புதல், பாவமன்னிப்பு மற்றும் கிருபை ஆகியவற்றின் உண்மையான அர்த்தத்தை குறைத்து மதிப்பிடுவதாக இருந்தது. இது அவருக்கு மனக்கசப்பை ஏற்படுத்தியது.
வேதத்திற்கு புறம்பான ரோமன் கத்தோலிக்க மதத்தின் இந்த அடாவடித்தனத்தை அவரால் பொறுத்து கொள்ள முடியாமல் பொங்கி எழுந்தார். நிச்சயமாக மரணம் வரும் என்று நினைத்தார். ஆனாலும் தன்னை அடைக்கி கொண்டிருக்க முடியாமல் அக்டோபர் 31, 1517 நாளில் ரோமன் கத்தோலிக்க மதத்தின் தவறான போதனைக்கு எதிராக தன்னுடைய 95 அறிக்கைகளை விட்டன்பர்க் கோட்டை தேவாலயத்து கதவில் ஆணியடிது மாட்டினர். தேவனே அவருக்கு இப்படியான தைரியத்தையும் நெஞ்சுரத்தையும் கொடுத்தார். லூத்தருக்கு முன்பு எத்தனையோ மக்கள் வேதத்தை மொழிபெயர்ப்பதற்காக கொடூரமாக கொல்லப்பட்டனர். ரோமன் கத்தோலிக்க மதத்திற்கு எதிராக பேசுபவர் அனைவரும் மரண தண்டனைக்கு உள்ளானார்கள்.
இந்த அறிக்கைகளின் மையக்கருத்து என்னவெனில் பாவ மன்னிப்புச் சீட்டு வாங்குவதாலோ அல்லது சடங்குகளாலோ அல்ல. விசுவாசத்தின் மூலமும் பாவத்திலிருந்து மனந்திரும்புவதன் மூலம் மட்டுமே ஒரு மனிதன் தேவனின் மன்னிப்பு பெற முடியும் என்பதே. இந்த கருத்துக்களின் மூலம் திருச்சபையுடன் விவாதித்துச் சீர்திருத்தம் கொண்டுவருவதுதான் லூதரின் நோக்கமாக இருந்தது. ஆனால் சர்வத்தையும் ஆண்டு நடத்துகிற தேவனின் திட்டம் வேறாக இருந்தது. ஏன் நிச்சயமாக லூத்தரே இப்படி நடக்கும் என்று சிந்தித்திருக்க மாட்டார்.
அச்சகத்தின் உதவியால், இந்த 95 அறிக்கைகள் லத்தீனிலிருந்து ஜெர்மன் மொழியில் வேகமாக மொழிபெயர்க்கப்பட்டு ஐரோப்பா முழுவதும் காட்டுத்தீ போலப் பரவியது. இந்த எளிய செயல் ஒரு சாதாரண மத விவாதமாகத் தொடங்கி, இறுதியில் புராட்டஸ்டன்ட் சீர்திருத்தம் என்ற ஒரு மாபெரும் இயக்கமாக மாறி உலகத்தின் வரலாறு, மதம் மற்றும் சமுதாயத்தின் போக்கையே நிரந்தரமாக மாற்றியமைத்தது.
சீர்திருத்தவாதிகளான மார்ட்டின் லூதர், ஜான் கால்வின் மற்றும் பலர் கத்தோலிக்க திருச்சபையின் போதனைகளிலிருந்து விலகி, கிறிஸ்தவ நம்பிக்கையின் முக்கிய அம்சங்களை மீண்டும் வேதாகமத்தின் அடிப்படையில் நிலைநிறுத்தினர். இந்தக் கொள்கைகள் பொதுவாக இலத்தீன் மொழியில் "ஐந்து சோலாக்கள்" (Five Solas) என்று அறியப்படுகின்றன. "சோலா" என்றால் "மட்டும்" அல்லது "தனியாக" என்று பொருள். இவைதான் புராட்டஸ்டன்ட் கிறிஸ்தவத்தின் அடித்தளமாகக் கருதப்படுகின்றன. இந்த ஐந்து கொள்கைகளும், இரட்சிப்பு எங்கிருந்து வருகிறது, அதன் அதிகாரம் என்ன, அதன் நோக்கம் என்ன என்பதைத் தெளிவாக வரையறுத்தன.
அவை வேதம் மட்டுமே! கிறிஸ்து மட்டுமே! கிருபை மட்டுமே! விசுவாசம் மட்டுமே! தேவனுடைய மகிமை மட்டுமே!
சுருக்கமாக சொன்னால்:
- விசுவாசம் மற்றும் நடைமுறை வாழ்க்கைக்கு வேதாகமம் மட்டுமே போதுமான, பிழையற்ற, இறுதியான அதிகாரமாகும். திருச்சபையின் மரபுகளோ, போப்பாண்டவரின் தனிப்பட்ட போதனைகளோ வேதத்திற்கு முரணாக விசுவாயை ஆளக்கூடாது.
- இயேசு கிறிஸ்து மட்டுமே தேவனுக்கும் மனிதர்களுக்கும் இடையில் உள்ள ஒரே மத்தியஸ்தர். மரியாளோ, இயேசுவின் சீடர்களோ அல்லது வேறு எந்த மனித அதிகாரத்தின் மத்தியஸ்தமும் தேவையில்லை. இரட்சிப்பு கிறிஸ்து செய்த சிலுவை பலியின் மூலமாக மட்டுமே கிடைக்கிறது.
- இரட்சிப்பு என்பது முழுக்க முழுக்க தேவனின் இலவசமான கிருபை. மனித முயற்சியாலோ, தகுதியாலோ அல்லாமல் தேவனின் இரக்கத்தால் மட்டுமே இது வழங்கப்படுகிறது. இரட்சிப்பை எந்த மனிதனும் சம்பாதிக்கவோ, விலைக்கு வாங்கவோ முடியாது. பாவ மன்னிப்புச் சீட்டுகள் மற்றும் பிற சடங்குகள் பயனற்றவை.
- கிறிஸ்துவின் மீது வைக்கும் விசுவாசத்தின் மூலம் மட்டுமே ஒருவர் நீதிமானாக்கப்பட்டு பாவத்திலிருந்து விடுவிக்கப்படுகிறார். இரட்சிப்பைப் பெறுவதற்கு நற்செயல்களோ, சடங்குகளோ, சடங்காச்சாரங்களோ தேவையில்லை. கிருபையினால் மட்டுமே இரட்சிப்பு; அதை கிறிஸ்துவின் மீது வைக்கும் விசுவாசத்தின் மூலம் மட்டுமே பெற்றுக் கொள்ள முடியும்.
- அனைத்தும் தேவனின் மகிமைக்காகவே செய்யப்பட வேண்டும். இரட்சிப்பின் முழுப் பணியும் தேவனால் செய்யப்பட்டதால், அதற்கான முழுப் பெருமையும் அவருக்கு மட்டுமே சொந்தமானது. எந்த ஒரு மனிதனுக்கோ, திருச்சபைக்கோ, மதகுருமாருக்கோ அல்ல, தேவனுக்கு மட்டுமே எல்லா மகிமையும் உரியது.
உண்மையை சொல்ல வேண்டுமெனில் இந்த போதனைகளே வேதத்தின் சத்தியங்களை சரியாக சமநிலைப்படுத்துகிறது. இந்த போதனைகளே எல்லாவற்றையும் படைத்த தேவனுக்கு முழு மகிமையையும் கொடுக்கிறது. பாவியாகிய மனிதன் கிறிஸ்துவின் மேலுள்ள விசுவாசத்தின் மூலமாக தாழ்மையோடும் உண்மையோடும் அவரிடம் வரும்போது அவர் அவனை மன்னித்து, அவனுக்கு மறுபிறப்பை அளித்து, அவனை புது சிஷ்டியாக மாற்றுகிறார். அவன் இப்போது தன் பாவ மன்னிக்கப்பட்டதின் உண்மையான சந்தோஷத்தை அறிந்து நன்றியோடு கர்த்தரை துதிக்கிறான். இதில் மனிதனல்ல தேவனுக்கே எல்லாவித மகிமையும் உண்டாகிறது.
பொதுவாக சீர்திருத்த தினம் எவ்வாறு கொண்டாடப்படுகிறது? இந்த உண்மையை உணர்ந்த மக்கள் திருச்சபையாக கூடி ஆண்டவருக்கு தங்களின் நன்றியை தெரிவிப்பார்கள். விசுவாசிகளோடு ஐக்கியப்பட்டு அந்த நாளை மகிழ்ச்சியாகக் கழிப்பார்கள். குறிப்பாக மார்ட்டின் லூத்தரின் “கர்த்தர்தான் எங்கள் துர்க்கமும்” ( A mighty fortress is our God) என்ற பாடல் பாடப்படும். (பாடல் தமிழில் கடைசியாக கொடுக்கப்பட்டு இருக்கிறது). மேலும் சீர்திருத்தத்தின் முக்கிய ஐந்து கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு பிரசங்கங்கள் செய்யப்படும்.
இந்த சீர்திருத்த தினத்தை நினைவு கூறும் நாங்கள் கால்வினிஸ்டுகளே, ஹைப்பர் கால்வினிஸ்டுள் அல்ல.
அநேகர் இன்று கால்வினிஸ்டுகளை தவறாக புரிந்து இருக்கிறார்கள். சர்வ வல்லமையுள்ள தேவனுடைய ஆளுகைக்கு தர வேண்டிய கணத்தையும் மகிமையும் கொடுத்து, மனிதனின் பொறுப்பையும் கடமையும் தொடர்ந்து சுட்டிக் காட்டும் நாங்கள் உண்மையில் சுவிஷேசம் அறிவிப்பதற்காக அதிகம் பிரயாசப்படுகிறோம். எல்லாமே தேவன் பார்த்துக்கொள்வார் என்று சொல்லி மனிதனின் பொறுப்பை தட்டிக் கழிக்கும் ஹைபர் கால்வினிஸ்டுள் நாங்கள் அல்ல. உண்மையை சொல்ல வேண்டுமெனில் நவீன மிஷினர்களின் தந்தை என்று கருதப்படும் வில்லியம் கேரி, அமெரிக்க இந்தியர்களுக்கு மிஷனரியாக சென்ற டேவிட் பிரைனெர்ட், பர்மாவிற்கு மிஷனரியாக சென்ற அடோனிராம் ஜட்சன் போன்றோர் இந்த போதனைகளை நம்பினவர்களே.
முடிவாக
இந்த சீர்திருத்த திருநாளில் இந்த செய்தியை கேட்ட நீங்கள் உங்களின் நிலையை சற்று சிந்தித்துப் பாருங்கள். உண்மையாகவே வேத வசனங்களில் வெளிப்படுத்தப்பட்டுள்ள சுவிசேஷம் உண்மையானது, எளிமையானது, பாவியாகிய மனிதனுக்கு சமாதானத்தை கொண்டு வரக்கூடியது. அன்று ரோமன் கத்தோலிக்க மதம் வேதத்தை மக்களின் கையில் கொண்டு சேர்ப்பதற்கு பல தடைகளை போட்டது. ஆனால் இன்று வேதம் நம்முடைய தாய்மொழியில் நாம் புரிந்து கொள்ளும் விதத்தில் இருந்த போதும், அதைப் படித்து அறிந்து உணர்ந்து கொள்ளும் ஞானம் நம்மிடம் இருந்த போதும் நாம் செய்து கொண்டிருப்பது என்ன? தேவையற்ற அநேக காரியங்களுக்கு அதிக நேரத்தையும் ஆலோசனையையும் செய்கிற நாம் உண்மையான சத்தியங்களை அறிந்து அதன்படி வாழ்வதற்கான வழிமுறைகளை எடுக்காமல் இருக்கிறது எவ்வளவு கொடுமை. இது சாத்தானின் வஞ்சகம். தமிழ் கிறிஸ்தவ சமுதாயம் எவ்வளவாக சீர் அழிந்து கொண்டிருக்கிறது. உணர்ச்சிகளுக்கும், இசைக்கும், சபை கூட்டம் என நடத்தப்படும் பொழுதுபோக்குகளுக்கும் எளிதாக மயங்கி வேதத்தை விட்டு விட்டது. ஏனோ தெரியவில்லை மூன்று வயது பிள்ளையை ஆரம்பக் கல்வியில் சேர்க்க மூன்று வருடமாக யோசிப்பவர்கள். நாம் ஆத்மீக காரியங்களில் மிகவும் அலட்சியமாக இருக்கிறார்கள். நாம் பயணிக்கிற கப்பலில் ஒரு பெரிய ஓட்டை இருக்கிறது. முடிவில் மரணம் நிச்சயம். இன்றைய உலகத்தின் பொழுதுபோக்குகளால் நாம் மயங்கி, அதை உணரக் கூட முடியாத ஒரு அவல நிலைமையில் இருக்கிறோம். மக்களே தயவு செய்து சிந்தியுங்கள். வேதத்தை வாசியுங்கள். நிச்சயமாக அன்று மாட்டின் லூத்தருக்கு தேவன் கொடுத்த தைரியத்தை உங்களுக்கும் கொடுப்பார். நீங்களும் மாற்றமடைவீர்கள், உங்களை சுற்றி இருகிற ஆவிக்குரியவர்களை விழிப்படைய செய்யுங்கள். தேவனுக்கு மட்டுமே மகிமை உண்டாகட்டும்.
A mighty fortress is our God
- கர்த்தர்தான் எங்கள் துர்க்கமும்
அரண் பலமுமாமே;
உண்டாம் இக்கட்டனைத்தயும்
கழிப்பர் அவர்தாமே.
பொல்லாங்கனின் சினம்
இப்போது மா விஷம்,
துஷ்டமுஞ் சூதையும்
அணிந்து உறுமும்,
நிகர் புவியில் இல்லை.
- எதற்கு நாங்கள் வல்லவர்?
இந் நீசர் சக்தியற்றோர்;
எங்களுக்காய் வேறொருவர்
போர் செய்வதற்கேற்பட்டோர்
யார்? இயேசுக் கிறிஸ்துதான்!
ஆ, இந்தப் பலவான்
எங்களின் ரட்சகர்,
சேனாபதி அவர்,
ஜெயிப்பார் அவர்தாமே.
- விழுங்க வரும் பேய்களால்
புவி நிரம்பினாலும்,
பயப்படோம்; கர்த்தாவினால்
எதிர்த்து நிற்க்க கூடும்.
இருளின் பிரபு
சீறினாலும், அது
வெல்லப்பட்டந்த பேய்,
தள்ளுண்கத் தீர்ந்ததே;
ஓர் சொல்லினால் முறியும்.
- பகைஞர் தெய்வ வார்த்தையை
பகைத்தும், அது நிற்கும்
கர்த்தர் சகாயர், அவர் கை
வரந் தந்தாதரிக்கும்.
மாற்றான்கள் யாவையும்
ஜீவனையே தானும்
வாங்கினாலும் கேடோ?
இராஜ்ஜியம் அல்லோ
எங்களுக்கே யிருக்கும்.