நற்செய்தி

இதுவே சுவிசேஷம்
ஆசிரியர்: தம்மா ரெட்டி கிரண்
தமிழாக்கம்: தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்
வாசிப்பதற்கான நேரம்: 2 நிமிடங்கள்

தேவன் மனிதர்களை மிகவும் நேசிக்கிறார். ஆனால், மனிதன் பாவத்தினிமித்தம் தானாகவே அதிலிருந்து விடுபடவும், ஜீவனுள்ள தேவனை நெருங்கவும் முடியாதவனாய் இருக்கிறான். வேதம் சொல்கிறது, முதல் மனிதனான ஆதாமின் மூலம் மனிதர்களாகிய நாம் பாவ சுபாவத்தைப் பெற்றுள்ளோம்; மேலும், நாம் தனிப்பட்ட முறையிலும் தேவனின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படியாமல் தொடர்ந்து பாவம் செய்கிறவர்களாய் இருக்கிறோம்.

பாவத்தின் சம்பளம் மரணம். இது சரீரப் பிரகாரமான மரணம் மற்றும் ஆத்துமா ரீதியான மரணத்தைக் குறிக்கிறது. (ஆத்துமா ரீதியான மரணம் என்பது, மனிதன் எப்போதும் தேவனை நெருங்க முடியாமல் அவரை வெறுக்கிறவனாய் இருப்பதாகும்).

தேவன் எல்லையற்றவர், நித்தியமானவர், பரிசுத்தர், நல்லவர், இறையாண்மையுள்ளவர், சர்வ வல்லமையுள்ளவர், சர்வஞானியும், சர்வத்தையும் படைத்தவர், எங்கும் நிறைந்தவர் மற்றும் சுதந்திரமானவர் (தன்னிச்சையானவர்). இப்படியாக அவர் தம்முடைய எல்லா மேலான பண்புகளிலும் பரிபூரணமானவர். தேவன் இந்தப் படைப்பு அனைத்தையும் தமது மகிமை நிறைந்த வார்த்தையினால் உண்டாக்கினார்; மனிதனை மட்டும் தமது சொந்த சாயலில் படைத்தார்.

தேவன் இந்த படைப்பை மிகவும் சிறப்பானதாக உருவாக்கினார். ஆனால் மனிதன் தனது பாவத்தால், இந்தப் படைப்புகள் அனைத்தையும் தீமையினால் நிறைக்கிறான்.

தேவன் மனிதனின் வீழ்ச்சியடைந்த நிலையைக் கண்டு, அவனை வெறுக்காமல், அவன் மீது அன்பு கூர்ந்தார். ஆகையால், அவர் தமது குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை, ஒரு கன்னிகையினிடத்தில் பாவமற்ற மனிதனாக இவ்வுலகத்திற்கு அனுப்பினார். கர்த்தராகிய இயேசு கிறிஸ்து பாவம் நிறைந்த இந்த உலகத்தில் நீதியாக வாழ்ந்து, தேவனுடைய நியாயப்பிரமாணத்தை கைகொண்டு, பரிபூரணமாகக் கீழ்ப்படிந்து, நம்முடைய பாவத்திலிருந்து நம்மை இரட்சிக்க, நம்முடைய பட்சத்தில் தேவனுடைய நீதியை நிறைவேற்றினார். நம் பாவத்தினால் வரும் கோர தண்டனையைத் தாமே ஏற்றுக்கொண்டு மரித்து, அடக்கம் செய்யப்பட்டு, மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார். இதுவே சுவிசேஷம் என்னும் நற்செய்தி.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சொன்னார்: "நானே வழியும், சத்தியமும், ஜீவனுமாய் இருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்." ஆம், அவர் மூலமாகத் தவிர வேறு ஒருவராலும் பரிசுத்தமான தேவனிடத்தில் கிட்டிச் சேர முடியாது.

இந்த மகிமை நிறைந்த சுவிசேஷத்தை விசுவாசித்து, நம் பாவங்களை பரிசுத்தமான தேவனிடத்தில் அறிக்கையிட்டு, நம் பாவத்திற்காக அவரிடம் மன்றாடி மன்னிப்புக் கேட்கும் போது, அவர் நம்முடைய பாவங்களையெல்லாம் மன்னிக்கிறார். நாம் அவருடைய திருச்சபையில் சேர்க்கப்பட்டு, அவருடைய அனந்த கிருபையில் வளர்ந்தால், உலகத்தின் முடிவில் நாம் மகிமையான சரீரத்துடன் உயிர்த்தெழுப்பப்படுவோம். மேலும், நாம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைப் போல, மகிமை நிறைந்த தேவனுடைய சந்நிதியில் யுக யுகமாக இருப்போம். நம்முடைய கண்ணீரும், நம்முடைய துக்கமும் நீங்கும்; சாபமானது எதுவும் இனி இருக்காது; பாவமும் மரணமும் இனி எப்போதும் நமக்கு இல்லை.

கருத்துக்களை தெரிவிக்க

Security code
Refresh

 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.