நற்செய்தி

அவரைக்காய் நிறைந்த பை
ஆசிரியர்: பெயர் அறியப்படாதவர்
தமிழாக்கம்: தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்
வாசிப்பதற்கான நேரம்: 3 நிமிடங்கள்

ஒரு கோடைக்காலத்து மாலை நேரத்தில், லண்டன் மாநகரின் தெருக்களில் ஓர் இளைஞன் சோர்வுற்ற உடலுடனும், சோகமான முகத்துடனும் சுற்றித் திரிந்துகொண்டிருந்தான். அந்த இளைஞனைப் பார்த்தால், துன்மார்க்கமாய் வாழ்ந்து பணத்தை வீணாகச் செலவழித்து, வெறுங்கையுடனும் பசியுடனும் இருப்பவனைப் போலக் காட்சியளித்தான். மறுநாள் காலையில் அந்த இளைஞன் “நியூயார்க்” நகரத்திற்குச் செல்ல வேண்டியிருந்தது. அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால், அவனுடைய நண்பன் ஒருவன், இன்று இரவு நடக்கவிருக்கும் சுவிசேஷக் கூட்டத்தில் நீ கலந்துகொண்டு தேவனுடைய செய்தியைக் கேட்க வேண்டும் என வருந்தி அழைத்தான். அதற்கு அவனும் சம்மதித்தான்.

அந்தச் சுவிசேஷக் கூட்டத்தில் மிகவும் பிரபலமான போதகர் ஒருவர் பேசிக்கொண்டிருந்தார். மக்கள் கூட்டம் மைதானம் முழுவதும் நிரம்பியிருந்தது. அந்த இளைஞர்கள் இருவரும் ஓரிடத்தில் அமர்ந்தனர். போதகர் பேசுவதை மிகக் கவனத்துடன் கேட்டுக்கொண்டிருந்தனர். அன்று அந்தப் போதகர் கொடுத்த செய்தியின் ஆதார வசனம்: “சாத்தானாலே நாம் மோசம்போகாதபடிக்கு அப்படிச் செய்தேன்; அவனுடைய தந்திரங்கள் நமக்குத் தெரியாதவைகள் அல்லவே.” (2 கொரிந்தியர் 2:11).

இந்த வசனத்தை வாசித்த உடனே, போதகர் ஓர் உதாரணத்தைச் சொன்னார்: "நான் ஒரு தெருவில் நடந்து கொண்டிருந்தபோது, ஒரு சுவாரஸ்யமான காட்சி என் கவனத்தை ஈர்த்தது. ஒரு பன்றிக் கூட்டம் வரிசையாகவும், சுறுசுறுப்பாகவும், வழி தவறாமலும் ஒரே நேர்கோட்டில் அந்தப் பன்றிகளை மேய்க்கும் மனிதனைப் பின்தொடர்ந்து சென்றது. பன்றிகளை ஒரு திசையில் வழிநடத்திச் செல்வது மிகவும் கடினம். மேய்ப்பவன் அவற்றை ஒரு பக்கம் நடத்தினால், மறுபக்கமாக ஓடுவதுதான் பன்றியின் இயல்பான குணம். ஆனால், அந்தப் பன்றி மேய்ப்பன் மட்டும் எந்தவிதச் சிரமமும் இல்லாமல் அவற்றை நேராக வழிநடத்திச் சென்றான். இந்தக் காட்சி என்னை மிகவும் கவர்ந்தது. நான் அவர்களைப் பின்தொடர்ந்தேன். அவை அவசர அவசரமாகத் தன்னுடைய கூடாரத்திற்குள் நுழைந்தபோது, உடனே கதவு மூடப்பட்டது.

நான் அந்தப் பன்றி மேய்ப்பன் வரும்வரை கூடாரத்திற்கு வெளியே காத்திருந்தேன். சிறிது நேரம் கழித்து அவன் வந்தான். நான் அவனைப் பார்த்து, 'நண்பனே, இவ்வளவு பெரிய பன்றிக் கூட்டத்தை உன்னால் எப்படி இவ்வளவு சுலபமாக வழிநடத்த முடிகிறது?' என்று கேட்டேன். அதற்கு அந்தப் பன்றி மேய்ப்பன் சத்தமாகச் சிரித்துக்கொண்டே, 'என் தோளில் இருக்கும் அவரைக்காய் நிறைந்த பையை நீர் பார்க்கவில்லையா? பன்றிகளுக்கு மிகவும் பிடித்த உணவு அவரைக்காய். நான் அவற்றை நடத்த வேண்டிய வழியில், அந்த அவரைக்காயை ஒவ்வொன்றாகப் போட்டுக்கொண்டு சென்றால் போதும்; எனக்கு எந்தவிதச் சிரமமும் இல்லாமல் என் பின்னே அந்தப் பன்றிக் கூட்டமும் வரும்' என்று பதிலளித்தான்."

அந்த உதாரணத்தை முடித்த போதகர், தன் முன்பாக அமர்ந்திருந்த மக்களைப் பார்த்து, தன்னுடைய குரலை உயர்த்தி, "இதைப்போலத்தான் உங்களில் சிலரைச் சாத்தான் சிறைப்பிடித்து, தன் விருப்பத்தின்படி நரகத்திற்கு அழைத்துச் செல்கிறான். பாவத்தின் பாதையில் உங்களை இழுத்துச் செல்ல, நீங்கள் எந்த வகையான அவரைக்காயை விரும்புவீர்கள் என்று சாத்தானுக்கு நன்றாகத் தெரியும். அவன் போடும் அவரைக்காயால் கவரப்பட்டு, நீங்கள் எங்கே செல்கிறீர்கள் என்பதையே மறந்து அவனைப் பின்தொடர்கிறீர்கள். அதன் விளைவு, நீங்கள் எதிர்பார்த்ததைச் சாப்பிடுவதற்குள் நரகத்திற்குள் தள்ளப்பட்டு, கதவு உங்களுக்குப் பின்னால் மூடப்படும். நீங்கள் நரகத்தில் வேதனையை அனுபவிப்பீர்கள்" என்று எச்சரித்தார்.

அந்தப் போதகரின் வார்த்தைகள் அந்த இளைஞனின் இருதயத்தில் கூர்மையான அம்பைப் போலப் பாய்ந்தன. 'ஐயோ! நானும் இத்தனை நாட்களாக அந்தப் பன்றியைப் போல ஏமாற்றப்பட்டுப் பாவத்திற்குள் தள்ளப்பட்டேனே! நான் எங்கே போகிறேன்? என் முடிவு என்னவாக இருக்கும்?' என்று தனக்குள்ளே கேட்டுக்கொண்டான்.

மறுநாளில் அவன் கப்பலில் ஏறி “நியூயார்க்” நகரத்திற்குப் புறப்பட்டான். சில நாட்களுக்குப் பிறகு இங்கிலாந்தில் உள்ள அவனது நண்பனுக்கு ஒரு கடிதம் வந்தது. அவன் அந்தக் கடிதத்தைத் திறந்து வாசித்தான். அதில் இவ்விதமாக இருந்தது: 'நண்பனே, நான் மனந்திரும்பித் தேவனை ஏற்றுக்கொண்டேன் என்று சொல்வதில் மகிழ்ச்சியடைகிறேன். நீயும் நானும் இறுதியாகக் கலந்துகொண்ட சுவிசேஷக் கூட்டத்தின் மூலமாக என் வாழ்க்கையில் மெய்யான தேவனை அறிந்துகொண்டேன். நல்லவேளை, அந்தப் போதகரின் செய்தியைக் கேட்க நீ என்னை அழைத்துச் சென்றதற்காக நான் தேவனுக்கு நன்றி செலுத்தித் துதிக்கிறேன்.'

அன்பான நண்பரே, உன் வாழ்வின் நிலை எப்படி இருக்கிறது? சாத்தான் உன்னைப் பாவம், மரணம் மற்றும் நரகத்திற்குத் தனது சோதனைகளால் கவர்ந்து இழுக்கிறான் என்பதை நீ புரிந்துகொள்கிறாயா?

  • “வாலிபனே! உன் இளமையிலே சந்தோஷப்படு, உன் வாலிப நாட்களிலே உன் இருதயம் உன்னைப் பூரிப்பாக்கட்டும்; உன் நெஞ்சின் வழிகளிலும், உன் கண்ணின் காட்சிகளிலும் நட; ஆனாலும் இவையெல்லாவற்றினிமித்தமும் தேவன் உன்னை நியாயத்திலே கொண்டுவந்து நிறுத்துவார் என்று அறி.” (பிரசங்கி 11:9).

  • “கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால்: நான் துன்மார்க்கனுடைய மரணத்தை விரும்பாமல், துன்மார்க்கன் தன் வழியை விட்டுத் திரும்பிப் பிழைப்பதையே விரும்புகிறேன் என்று என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்.” (எசேக்கியேல் 33:11).

  • "நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார்.” (ரோமர் 5:8).

  • "பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன்." (ரோமர் 6:23).

  • "பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார்." (1 தீமோத்தேயு 1:15).

நம்முடைய பாவங்களினால் நாம் பரிசுத்த தேவனுக்கு முன்பாக நிற்க முடியாது. தேவனிடம் பாவ மன்னிப்பைக் கேட்பவனே இரட்சிக்கப்படுகிறான். உன்னை நீ பாவி என்று உணர்ந்து பரிசுத்த தேவனிடம் வருவதற்கு இந்த வாய்ப்பை இன்றே பயன்படுத்திக்கொள். அதாவது, உங்கள் பாவங்களை இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவிடம் கொண்டு வாருங்கள். அவர் ஒருவர் மட்டுமே உன் பாவங்களை மன்னித்து உனக்கு நித்திய சமாதானத்தையும், நித்திய ஜீவனையும் தருபவர்.

  • "கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய்." (ரோமர் 10:9).

  • "அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனை பேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார்.” (யோவான் 1:12).

  • "கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள்" (அப்போஸ்தலர் 16:31).

 

 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.