இரட்சிப்பு

இரட்சிக்கிற தேவனுடைய கிருபை
ஆசிரியர்: G.பிபு
தமிழாக்கம்: தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்
வாசிப்பதற்கான நேரம்: 15 நிமிடங்கள்

 இரட்சிப்பு தேவனுடைய ஈவு

எபேசியர் 2:8-10 வரையிலான வசனங்களை நம்மில் பலரால் மனப்பாடமாகவே கூற முடியும்:

"கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு; ஒருவரும் பெருமைபாராட்டாதபடிக்கு இது கிரியைகளினால் உண்டானதல்ல; ஏனெனில், நற்கிரியைகளைச் செய்கிறதற்கு நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்டிக்கப்பட்டு, தேவனுடைய செய்கையாயிருக்கிறோம்; அவைகளில் நாம் நடக்கும்படி அவர் முன்னதாக அவைகளை ஆயத்தம்பண்ணியிருக்கிறார்."

இந்த வசனப்பகுதியில் உள்ள முக்கிய கருப்பொருள் 'இரட்சிக்கிற தேவனுடைய கிருபை' என்பதேயாகும். எனவே, தேவனுடைய கிருபையின் மீது சற்று கவனம் செலுத்தி, இந்தக் கிருபையைக் குறித்த சில கருத்துக்களை உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

உலகத்திலுள்ள மற்ற எல்லா மதங்களிலிருந்தும் கிறிஸ்தவத்தை வேறுபடுத்துவது பிதாவாகிய தேவனுடைய இந்த மாபெரும் கிருபைதான். மற்ற எல்லா மதங்களும், சொல்லுவது: உங்களை நீங்களே இரட்சித்துக்கொள்வதற்கு நீங்கள் ஏதாவது செய்ய வேண்டும் என்றும், அந்த காரியங்களை நீங்கள் செய்வதன் மூலமே இரட்சிப்பைப் பெற முடியும் என்றும் போதிக்கின்றன. ஆனால், மனிதன் தன் இரட்சிப்பிற்காக எதையும் செய்ய முடியாது என்றும், ஆகையால்தான் மனிதன் இரட்சிக்கபடுவதற்கு தேவனே எல்லாவற்றையும் செய்தார் என்று கிறிஸ்தவம் (பரிசுத்த வேதாகமம்) மட்டுமே போதிக்கிறது.

தேவனுடைய கிருபையைக் குறித்து முழுமையாகச் சொல்லி முடிப்பது சாத்தியமல்ல; அது மிகப்பெரியதொரு தலைப்பு. ஆனாலும், தேவன் நம்மீது காண்பித்த இந்த மகா பெரிய இரக்கத்திற்காக நாம் நன்றியுள்ளவர்களாக இருப்பதற்கு, நம் மனதில் நிலைநிறுத்திக் கொள்ள வேண்டிய சில காரியங்கள் உள்ளன. எனவே, தேவனுடைய கிருபையைக் குறித்து இன்று மூன்று முக்கிய குறிப்புகளை உங்களுக்கு முன்பாக வைக்க விரும்புகிறேன்.

  1. இது இலவசமான கிருபை

முதலாவது குறிப்பு என்னவென்றால், நம்மை இரட்சிக்கும் இந்தக் கிருபை 'இலவசமான கிருபை' ஆகும். 'இது தேவனுடைய ஈவு' என்ற வார்த்தைகளில் வெளிப்படுத்தப்படுகிறது. ஈவு (அல்லது பரிசு) என்பது நீங்கள் சம்பாதிப்பது அல்ல. அது நீங்கள் எந்தவொரு முயற்சியும் செய்து அடையும் சாதனையுமல்ல. அது இலவசமாகக் கொடுக்கப்படுவது; அதனால்தான் அது ஈவு என்று அழைக்கப்படுகிறது. அப்படியில்லையென்றால், அது ஒரு பலனாகவோ அல்லது வெகுமதியாகவோ இருந்திருக்கும், அல்லது உங்கள் தகுதியினால் நீங்கள் பெற்ற ஒன்றாக இருந்திருக்கும். ஆனால் இது தேவனுடைய கிருபையினால் கொடுக்கப்படுகிற ஈவு.

நீங்கள் அதற்காக உழைக்காதபடியினால் இது ஒரு இலவசமான கிருபையாக இருக்கிறது. எபேசியர் 9-ஆம் வசனம் அதையே கூறுகிறது: "ஒருவரும் பெருமைபாராட்டாதபடிக்கு இது கிரியைகளினால் உண்டானதல்ல". ரோமர் 11:6-ல் அப்போஸ்தலனாகிய பவுல் இதைப்பற்றி மிகவும் தெளிவாகக் கூறுகிறார்: "கிருபையினாலேயென்றால் அது கிரியைகளினாலுண்டானதல்ல; அப்படியல்லாவிட்டால் கிருபையானது கிருபையல்லவே. கிரியைகளினாலேயென்றால் அது கிருபையாயிராது; அப்படியல்லாவிட்டால் கிரியையானது கிரியையல்லவே." கிரியைகளும் கிருபையும் அதாவது (மனிதனுடைய பிரயாசத்தினாலும்), (இலவசமான ஈவினாலும் கொடுப்பது) ஒன்றுக்கொன்று முரண்பட்டவை என்று அப்போஸ்தலனாகிய பவுல் கூறுகிறார். இரட்சிப்பு கிருபையினாலே வருமானால் அது கிரியைகளினாலே வரமுடியாது; அது கிரியைகளினாலே வருமானால் அது கிருபையினால் வரமுடியாது. நீங்கள் தேவனுடைய கிருபையினாலே இரட்சிக்கப்பட்டிருப்பதால், உங்களுடைய கிரியைகள் எதுவும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை. ஆகையால் இது நீங்கள் உங்கள் தகுதியினாலோ அல்லது உழைப்பினாலோ பெற்ற ஒன்றல்ல, இது ஒரு இலவசமான கிருபை.

இதைப் பற்றி நீங்கள் எவ்வளவு அதிகமாகச் சிந்திக்கிறீர்களோ, அவ்வளவு தெளிவாக வேதாகமம் இதை நமக்கு விளக்குகிறது. நீங்கள் கிரியைகளினாலே இரட்சிக்கப்படவில்லை என்பது உங்களுக்குத் தெரியும், ஏனென்றால் உங்கள் இரட்சிப்பிற்காக நீங்கள் உழைப்பதற்கு எந்த வழியும் உங்களுக்கு இருக்கவில்லை. மீண்டும் எபேசியர் 2-ஆம் அதிகாரத்தின் ஆரம்ப வசனத்திற்கு வந்தீர்கள் என்றால், "அக்கிரமங்களினாலும் பாவங்களினாலும் மரித்தவர்களாயிருந்த உங்களை உயிர்ப்பித்தார்" என்று அந்த வசனம் சொல்லுகிறது. தேவன் நம்மை கிறிஸ்து இயேசுவுக்குள் உயிர்ப்பிப்பதற்கு முன்பாக நாம் எப்படி இருந்தோம்? நாம் மரித்தவர்களாக இருந்தோம்.

மரித்தவர்கள் வேலை செய்வார்களா? மரித்த எவராவது வேலை செய்வது சாத்தியமா, அது அவர்கள் சக்திக்கு உட்பட்டதா? ஒருவன் வேலை செய்கிறான் என்றால், அவனை மரித்தவன் என்று சொல்ல முடியுமா? ஒருவன் மரித்துவிட்டான் என்ற உண்மையே, அவனால் வேலை செய்ய முடியாது என்பதைக் குறிக்கிறது. இங்கு மரணம் என்பது ஒரு அடையாளமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது, ஏனென்றால் இது தேவனை விட்டுப் பிரிக்கப்பட்ட நிலை என்பதான ஆவிக்குரிய மரணத்தைப் பற்றிப் பேசுகிறது. நாம் தேவனை விட்டுப் பிரிக்கப்பட்டிருந்தோம் என்றால், ஜீவனை விட்டு நாம் பிரிக்கப்பட்டிருந்தோம் என்று அர்த்தம். ஜீவனின் ஒரே ஊற்று தேவன் மட்டுமே; தேவனுக்கு வெளியே மரணம் மட்டுமே உள்ளது.

எனவே, தன்னைத்தானே தேவனோடு ஒப்புரவாக்கிக் கொள்ளவும், தன் சொந்த முயற்சியில் மீண்டும் ஜீவனைப் பெற்றுக்கொள்ளவும் எந்த மனிதனுக்கும் அதிகாரம் இல்லை. அதனால்தான் இது மரணம் என்று சொல்லப்படுகிறது; இதை நம் சொந்த முயற்சியில் செய்வது நமக்குச் சாத்தியமற்றது.

பரிசுத்த வேதாகமத்தின் இன்னும் பல பகுதிகளில் இது திரும்பத் திரும்பப் போதிக்கப்படுகிறது. யோவான் 6:44-ல் இயேசு, "என்னை அனுப்பின பிதா ஒருவனை இழுத்துக்கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான்" என்று கூறுகிறார். இயேசு கிறிஸ்து இங்கே மிகத் தெளிவான ஒரு அறிவிப்பைச் செய்கிறார். "ஒருவனும் வரமாட்டான்" என்பது அறுதியான உண்மை.

ஆனால் நாம் வரவில்லையா? சுவிசேஷத்திற்குச் செவிகொடுத்த நாம் அனைவரும் கிறிஸ்துவினிடத்தில் வரவில்லையா? நாம் வந்தோம் அல்லவா? ஆனால் நம்மால் வரமுடியாது என்றால், பிறகு எப்படி நம்மால் கிறிஸ்துவிடம் வர முடிந்தது? அதே வசனத்தில் இயேசு அந்தக் கேள்விக்குப் பதிலளிக்கிறார்: "என்னை அனுப்பின பிதா ஒருவனை இழுத்துக்கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான்."

ஆகையால், பிதாவின் இழுத்துக்கொள்ளுதல்தான் நாம் கிறிஸ்துவிடம் வரச் செய்தது. தமிழ் மொழிபெயர்ப்பில் இழுத்துக்கொள்ளுதல் என்ற வார்த்தை, தேவன் நம்மை கிறிஸ்துவிடம் 'இழுத்துக்' (கவர்கிறார்) என்று பொருள்படும் வகையில் உள்ளது. ஆனால் மூல மொழியின் அர்த்தம் அதுவல்ல. மூல கிரேக்க வார்த்தையான 'helkuo' (ஹெல்குவோ) என்பதன் உண்மையான அர்த்தம், ஒருவரைத் தன்பால் ஈர்ப்பதற்காக அல்லது இழுப்பதற்காக ஒரு பெரும் பலத்தையோ அல்லது சக்தியையோ பயன்படுத்துவதாகும். ஒரு கிணற்றிலிருந்து தண்ணீர் இறைக்கும்போதும் இதே வார்த்தைதான் பயன்படுத்தப்படுகிறது. கிணற்றில் இருந்து தண்ணீர் இறைக்கும்போது நாம் என்ன செய்வோம், தண்ணீரை இறைப்போம்? அல்லது, நீங்கள் உங்களது பலத்தையும் சக்தியையும் செலுத்துகிறீர்கள் அல்லவா. அதைப்போலவே தேவன் நம்மை இயேசு கிறிஸ்துவிடம் இழுக்கும்போதும் தமது வல்லமையைப் பயன்படுத்துகிறார்.

நீங்கள் சொல்லலாம், "இல்லை, தேவன் இதை எப்படிச் செய்ய முடியும்? அவர் மிகவும் மென்மையானவர், அவர் பலவந்தம் செய்யமாட்டார்" என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் தேவன் அப்படிச் செய்யவில்லை என்றால், நீங்கள் ஒருபோதும் கிறிஸ்துவிடம் வந்திருக்க மாட்டீர்கள் (மீட்படைய மாட்டீர்கள்) என்பது உங்களுக்குத் தெரியும். தண்ணீரில் மூழ்கித் தத்தளிக்கும் ஒருவரைக் காப்பாற்ற நீங்கள் பலத்தைப் பயன்படுத்த மாட்டீர்களா? அப்படிப் பயன்படுத்தும்போது அவர், "என்னை எப்படி நீங்கள் தண்ணீரிலிருந்து பலவந்தமாக இழுக்கலாம்? அதைச் செய்வதற்கு முன் நீங்கள் என் சம்மதத்தை கேட்டிருக்க வேண்டாமா?" என்று புகார் சொல்வாரா?

நித்தியத்தில், தேவன் உங்களை இரட்சிப்பதற்காகத் தமது வல்லமையையும் பலத்தையும் பயன்படுத்தியதற்காகவே நீங்கள் அவருக்கு மிகவும் நன்றியுள்ளவர்களாக இருப்பீர்கள். ஏனென்றால் நாம் நரக அக்கினி என்னும் ஆபத்தில் இருந்தோம். நாம் தேவனுடைய உக்கிர கோபாக்கினையின் கீழ் இருந்தோம். நாம் தேவனுக்குச் சத்துருக்களாக இருந்தோம். தேவன் நம்முடைய கலகத்தன்மையை மேற்கொண்டு நம்மைத் தம் வல்லமையால் இழுக்காமல் இருந்திருந்தால், சுவிசேஷத்தின் அழைப்புக்கு நாம் ஒருபோதும் கீழ்ப்படிந்திருக்க மாட்டோம்.

ஏனென்றால் நாம் பாவிகளாகவும், பக்தியற்றவர்களாகவும், தேவனுக்குச் எதிரிகளாகவும் இருந்தோம். அப்பொழுதுதான் இயேசு நமக்காக மரித்து, நம்மை ஒப்புரவாக்கச் சித்தங்கொண்டார் (ரோமர் 5:6-10). எனவே, தேவனிடம் வர நமக்குத் திறனில்லாமல் இருந்தது மட்டுமின்றி, தேவனிடம் வர வேண்டும் என்ற எண்ணத்திற்கு எதிராகவும், விருப்பமில்லாதவர்களாகவும், பகைவர்களாகவும் இருந்தோம். இதையெல்லாம் மீறி தேவன் நம்மை இரட்சிக்கச் சித்தங்கொண்டார். அதனால்தான் இது இலவசமான கிருபை என்று அழைக்கப்படுகிறது.

  1. இது சர்வ அதிகாரமுள்ள கிருபை

இரண்டாவது முக்கியமான குறிப்பு என்னவென்றால், நம்மை இரட்சித்த தேவனுடைய கிருபை 'சர்வ அதிகாரமுள்ள கிருபை' (இறையாண்மையுள்ள கிருபை) ஆகும். இது ஒரு பிரத்தியேகமான கிருபை. நான் ஏன் இதை சர்வ அதிகாரமுள்ள கிருபை என்று அழைக்கிறேன்? கிருபை இலவசமானது என்று நாம் கூறும்போது, அதற்காக நாம் எதையும் செலுத்தத் தேவையில்லை என்பதை மட்டுமே அது குறிக்கவில்லை. அது மனித கண்ணோட்டத்தில் உண்மையாக இருந்தாலும், அது மட்டுமே ஒரே கருத்து அல்ல.

தேவனுடைய கண்ணோட்டத்தில் பார்த்தாலும் ஒருவகையில் அது இலவசமானதுதான் (செலுத்துதல் என்ற அடிப்படையில் அல்ல). ஏனென்றால் தேவன் தமக்கு உண்டான எல்லாவற்றையும் செலுத்தினார்; நமக்காக இந்த இரட்சிப்பை விலைக்கு வாங்குவதற்காகத் தம்முடைய நேசகுமாரனின் ஜீவனையே விலையாகக் கொடுத்தார். எனவே தேவனுடைய தியாகத்தைப் பொறுத்தமட்டில் இது மிகவும் விலையேறப்பெற்ற கிருபையாகும்.

ஆனால் மற்றொரு கோணத்தில் பார்க்கும்போது, தேவனுடைய தரப்பிலிருந்தும் இது இலவசமான கிருபையே! ஏனென்றால் இந்தக் கிருபையை யாருக்கும் கொடுக்க வேண்டும் என்ற எந்தவொரு கட்டாயமும் தேவனுக்கு இருக்கவில்லை. "நீங்கள் எனக்கு இந்தக் கிருபையைத் தந்தே ஆகவேண்டும்" என்று எவரும் அவரை வற்புறுத்த முடியாது. தேவனுடைய கிருபையைக் கேட்பதற்கு உரிமையளிக்கும்படி எந்த மனிதனும் எந்தச் செயலையும் செய்துவிடவில்லை. அதைக் கொடுப்பதும் கொடுக்காதிருப்பதும் அவருடைய சித்தமே.

நம்முடைய இரட்சிப்புக்கு ஒரு ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற எந்தக் கட்டாயமும் தேவனுடைய தரப்பில் இருக்கவில்லை. நம்மைப் போன்ற பரிதாபமான பாவிகளை இரட்சிக்க வேண்டும் என்று அவர் தீர்மானித்தது முற்றிலும் அவருடைய சுய சித்தமே. எனவேதான் இது சர்வ அதிகாரமுள்ள கிருபையாகும். அவர் யாருக்குக் கிருபை அளிக்கச் சித்தமாயிருக்கிறாரோ அவர்களுக்குக் கிருபை அளிக்கவும், யாரிடமிருந்து அதைத் தடுத்து நிறுத்தச் சித்தமாயிருக்கிறாரோ அவர்களிடமிருந்து அதைத் தடுத்து நிறுத்துவதற்கு அதிகாரம் அவருக்கு உண்டு. ஏனென்றால் தேவனுடைய கிருபையின் மீது எவருக்கும் எந்த உரிமையும் இல்லை. கிருபை அளிக்கும் விஷயத்தில் தேவனுக்கு முழு உரிமையும், சர்வ அதிகாரமும் உள்ளது.

இரட்சிக்கும் கிருபையானது சிலருக்குக் கொடுக்கப்படுவதும், அதேசமயம் மற்றவர்களுக்குக் கொடுக்கப்படாமல் இருப்பதும் இந்த உண்மையை மிகவும் தெளிவாக நிரூபிக்கிறது.

எபேசியர் 1:3-6 வரையிலான வசனங்களில் நாம் வாசிக்கிறோம்: "தமக்குமுன்பாக நாம் அன்பில் பரிசுத்தமுள்ளவர்களும் குற்றமில்லாதவர்களுமாயிருப்பதற்கு, அவர் உலகத்தோற்றத்திற்குமுன்னே கிறிஸ்துவுக்குள் நம்மைத் தெரிந்துகொண்டபடியே, தமது தயவுள்ள சித்தத்தின்படியே, இயேசு கிறிஸ்துமூலமாய் நம்மைத் தமக்குச் சுவிகாரபுத்திரராகும்படி முன்குறித்து..." நாம் எப்போது இரட்சிக்கப்பட வேண்டும் என்று தேவன் தீர்மானித்தார்? உலகத் தோற்றத்திற்கு முன்னமே. ஆங்கில வேதாகமத்தில் வாசிக்கும்போது "தம்முடைய சுவிகாரபுத்திரராகும்படி நம்மை முன்குறித்தார்" என்று கூறுகிறது. முன்குறித்தல் என்பது வேதாகமத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கும் வார்த்தை. இது யாருக்கும் கொடுக்க வேண்டிய கட்டாயம் தேவனுக்கு இல்லை, ஆனாலும் அவர் அதைச் சிலருக்குக் கொடுக்கச் சித்தங்கொண்டார்.

ரோமர் 9-ஆம் அதிகாரத்தில் அப்போஸ்தலனாகிய பவுல் யாக்கோபு மற்றும் ஏசாவைப் பற்றிப் பேசுகையில்: "அந்தப் பிள்ளைகள் இன்னும் பிறக்கவுமில்லை, நல்வினை தீவினை ஒன்றும் செய்யவுமில்லை; அப்படி இருக்கையில், தேவனுடைய தெரிந்துகொள்ளுதலின்படியான தீர்மானம்... நிலைநிற்கும்படிக்கு: மூத்தவன் இளையவனுக்கு ஊழியஞ்செய்வான் என்று அவளுடனே சொல்லப்பட்டது. அப்படியே, யாக்கோபைச் சிநேகித்து, ஏசாவை வெறுத்தேன் என்றும் எழுதியிருக்கிறது." மேலும் 16-ஆம் வசனத்தில், "ஆகையால் விரும்புகிறவனாலுமல்ல, ஓடுகிறவனாலுமல்ல, இரங்குகிற தேவனாலேயே ஆகும்."

வீழ்ச்சியடைந்த ஆதாமின் சந்ததி முழுவதும் தேவனுடைய கண்களுக்கு முன்பாக நின்றபோது, அவர்கள் அனைவரையும் நியாயந்தீர்க்க தேவனுக்கு முழு உரிமையும் இருந்தது. அப்படிச் செய்வதன் மூலம் அவர் தமது நீதியை வெளிப்படுத்தியிருக்க முடியும். ஆனால் அவர் தமது அன்பையும் கிருபையையும் வெளிப்படுத்தவும் விரும்பினார். எனவே சிலரைத் தமது நீதிக்காகவும், மற்றவர்களைத் தமது கிருபைக்காகவும் அவர் ஒதுக்கிவைத்தார்.

இதிலுள்ள நியாயத்தை எவரும் கேள்வி கேட்க முடியாது, ஏனென்றால் நாம் அனைவருமே தேவனுடைய தண்டனைக்குப் பாத்திரமானவர்களே. அப்படிப்பட்டவர்களில் தேவன் தமது இலவசமான சர்வ அதிகார கிருபையினால் சிலரை இரட்சிக்கச் சித்தங்கொண்டார் என்றால், அது வெறும் இரக்கத்தினாலும் கிருபையினாலுமான செயலே தவிர, இதில் எந்த அநீதியும் இல்லை.

இப்போது உங்களை இரட்சித்த கிருபையைக் குறித்துச் சிந்தித்துப் பாருங்கள். இது நீங்கள் சம்பாதித்த ஒன்றல்ல. சொல்லப்போனால் இதற்கு நேர்மாறான தண்டனைக்கே நீங்கள் தகுதியானவர்கள். எபேசியர் 2:3 கூறுவது போல, "சுபாவத்தினாலே மற்றவர்களைப்போல நாமும் கோபாக்கினையின் பிள்ளைகளாயிருந்தோம்". சுவிசேஷத்தின் இந்த அழைப்பும், செவிகொடுப்பதற்கான இந்தக் கிருபையும் உங்களைத் தவிர்த்துப் பல்லாயிரக்கணக்கானோரைக் கடந்து சென்றிருக்கலாம், நீங்களும் அதைத் தவறவிட்டிருக்கலாம். அப்படி ஏன் செய்தார் என்று தேவனை நீங்களோ நானோ கேள்வி கேட்க முடியாது. அவர் உங்கள்மீது கிருபை கூர்ந்து நீங்கள் செவிகொடுக்கச் செய்தார். ஆகையால்தான் இது சர்வ அதிகாரமுள்ள கிருபையாகும்.

அப்போஸ்தலர் 13:48-ல் வாசிக்கிறோம்: "நித்தியஜீவனுக்கு நியமிக்கப்பட்டவர்கள் எவர்களோ அவர்கள் விசுவாசித்தார்கள்." விசுவாசித்தவர்கள் அனைவரும் நித்திய ஜீவனுக்கு நியமிக்கப்பட்டார்கள் என்று அது கூறவில்லை. எது முதலில் நடந்தது? அவர்கள் நித்திய ஜீவனுக்கு நியமிக்கப்பட்டார்கள், அதன் விளைவாக அவர்கள் விசுவாசித்தார்கள்.

இதற்கு நேர்மாறாக, யோவான் 10:26-ல் இயேசு கூறுகிறார்: "நீங்கள் என் மந்தையின் ஆடுகளாயிராதபடியினால் விசுவாசியாமலிருக்கிறீர்கள்". யாரையும் தன் ஆடுகளாகவோ அல்லது தன் மக்களாகவோ மாற்ற வேண்டிய கட்டாயம் தேவனுக்கு இருக்கவில்லை. அந்தக் கிருபையைக் காட்டாமல் அவர் அநேகரைக் கைவிட்டார், ஆனால் உங்களை அவர் கைவிடவில்லை. சுவிசேஷத்திற்கு உங்களால் செவிகொடுக்க முடிந்தது என்றால், மற்றவர்கள் அனுபவிக்க முடியாத அந்தப் பிரத்தியேகமான கிருபை உங்கள்மீது காட்டப்பட்டதாலேயே அது சாத்தியமானது.

தேவனிடம் வர வேண்டும் என்று உங்களுக்குள் இருக்கும் அந்த விருப்பமே நீங்கள் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் என்பதைக் காட்டுகிறது. நீங்கள் சுவிசேஷத்தின் அழைப்புக்குச் செவிகொடுத்து அவரிடம் வரும்போது, உங்களை வரச் செய்தது அவருடைய கிருபையே என்பதை நீங்கள் ஏற்றுக்கொண்டாக வேண்டும். ஏனென்றால் நீங்கள் செவிகொடுக்க வேறு எந்த வழியும் இல்லை.

  1. இது பரிசுத்தமான கிருபை

மூன்றாவதாக நாம் கவனிப்பது என்னவென்றால், உங்களை இரட்சித்த இந்தக் கிருபை ஒரு 'பரிசுத்தமான கிருபை' ஆகும்.

பலர் சொல்கிறார்கள், "தேவனுடைய சர்வ அதிகாரமே இரட்சிக்கிறது என்றால், நான் எப்படி வாழ்ந்தாலும் பரவாயில்லை, நான் எப்படியும் இரட்சிக்கப்படுவேன்." அவர்கள் தேவனுடைய கிருபையைக் காமவிகாரத்திற்கு ஏதுவாக மாற்றி, தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள முனைகிறார்கள். "நான் ஒருமுறை இரட்சிக்கப்பட்டால் என்றென்றைக்கும் இரட்சிக்கப்பட்டவன்தான், ஆகையால் நான் பிசாசைப் போலவும் வாழலாம்" என்று எண்ணுகிறார்கள். ஆனால் அது வேதாகமத்தில் நாம் காணும் தேவனுடைய கிருபையின் லட்சணம் அல்ல.

நாம் மீண்டும் எபேசியர் 2:10-ஐப் பார்க்கும்போது, "ஏனெனில், நற்கிரியைகளைச் செய்கிறதற்கு நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்டிக்கப்பட்டு, தேவனுடைய செய்கையாயிருக்கிறோம்; அவைகளில் நாம் நடக்கும்படி அவர் முன்னதாக அவைகளை ஆயத்தம்பண்ணியிருக்கிறார்" என்று வாசிக்கிறோம். தேவன் ஒருவரை இலவசமாக இரட்சித்தாலோ, அல்லது தமது சர்வ அதிகாரத்தின்படி இரட்சித்தாலோ, அவர் அவர்களைத் தங்கள் பழைய பாவ வாழ்க்கையிலேயே தொடர்ந்து வாழ அனுமதிக்கமாட்டார். தேவன் எந்த நோக்கத்திற்காக இரட்சித்தாரோ அதற்கென அவருக்கு ஒரு தீர்க்கமான திட்டமும் நோக்கமும் இருந்தது. நாம் அவருக்கு முன்பாகப் பரிசுத்தமுள்ளவர்களும் குற்றமில்லாதவர்களுமாய் இருப்பதற்காகவே அவர் தம்முடைய பிள்ளைகளாக நம்மைச் சுவிகாரம் செய்துகொண்டார்.

1பேதுரு 2:9-ல் நாம் வாசிக்கிறோம்: "நீங்களோ, உங்களை அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படிக்குத் தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும், அவருக்குச் சொந்தமான ஜனமாயும் இருக்கிறீர்கள்." உங்களை இரட்சித்த தேவனுடைய நற்குணங்களை நீங்கள் பிரதிபலிப்பதற்காகவே நீங்கள் இரட்சிக்கப்பட்டுள்ளீர்கள்.

ரோமர் 8:29,30-ல், "தேவன் எவர்களை முன்னறிந்தாரோ அவர்களைத் தமது குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாயிருப்பதற்கு முன்குறித்திருக்கிறார்" என்று கூறுகிறது. தேவன் நமக்கு அளித்த இரட்சிப்பினாலே நாம் இயேசு கிறிஸ்துவின் சாயலுக்கு ஒப்பானவர்களாக மாற வேண்டும் என்பதே அந்த இறுதி நோக்கமாகும்.

ஆகையால் எவர்களை முன்குறித்தாரோ அவர்களை அழைத்திருக்கிறார்; எவர்களை அழைத்தாரோ அவர்களை நீதிமான்களாக்கியிருக்கிறார்; எவர்களை நீதிமான்களாக்கினாரோ அவர்களை மகிமைப்படுத்தியுமிருக்கிறார். தேவனுடைய நோக்கங்களும் திட்டங்களும் ஒருபோதும் தோல்வியடையாது. ஆகையால் நீங்கள் தேவனுடைய கிருபையினால் இரட்சிக்கப்பட்டிருந்தால், தேவன் முன்னதாக ஆயத்தம்பண்ணிய நற்கிரியைகளைச் செய்வதில் பக்திவைராக்கியம் உள்ளவர்களாக இருப்பதற்காகவே இரட்சிக்கப்பட்டிருக்கிறீர்கள். அதுவே தேவன் நம்மை இரட்சித்த அந்தப் பரிசுத்தமான கிருபையாகும்.

முடிவுரை

ஆகவே, நாம் சத்தியத்தை அறிந்துகொள்ள வேண்டும்:

  • தேவனுடைய கிருபை இலவசமானது.
  • தேவனுடைய கிருபை சர்வ அதிகாரமுடையது.
  • தேவனுடைய கிருபை பரிசுத்தமானது.

நாம் இரட்சிக்கப்பட்டதை எண்ணி, எல்லா மகிமை தேவனுக்கே உரியது என்று உணர்ந்து, அவருக்குக் கீழ்ப்படிந்து, பாவத்தை வெறுத்து, அவருடைய பரிசுத்த கிருபைக்குப் பாத்திரவான்களாக வாழ நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம். தேவன் தமது வார்த்தையின் மூலமாக நம்மை ஆசீர்வதிப்பாராக.

 

கருத்துக்களை தெரிவிக்க

Security code
Refresh

 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

Join WhatsApp எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.