திருச்சபை

பிரசங்கத்தின் மீது விமர்சனம்
ஆசிரியர்: D. யஸ்வந்த் குமார்.
தமிழாக்கம்: தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்
வாசிப்பதற்கான நேரம்: 15 நிமிடங்கள்

 "நீதிமான் என்னைக் குட்டட்டும், அது எனக்குத் தயவு; அவன் என்னைக் கண்டிக்கட்டும், அது என் தலைக்கு அருமையான தைலம்போலிருக்கும்..." (சங்கீதம் 141:5)

பிரசங்கித்தல் என்பது தேவன் நமக்கு அளித்துள்ள ஒரு புனிதமான பொறுப்பாகும். தேவனுடைய வார்த்தையைப் போதிப்பதன் மூலமாகவே திருச்சபை கட்டப்பட வேண்டும் என்பது தேவனுடைய நோக்கமாக இருக்கிறது. மரித்துப்போன இருதயங்களை விழிப்படையச் செய்வதற்கும், உயிருள்ளவர்களைப் பரிசுத்தப்படுத்துவதற்கும் தேவனுடைய வார்த்தையைப் போதிப்பதே தேவன் ஏற்படுத்திய சிறந்த வழியாகும். பிரசங்கித்தல் என்பது கர்த்தரை உண்மையுடன் அறிவிப்பதேயன்றி, மக்களை மகிழ்விப்பதற்காக நம்முடைய திறமைகளை வெளிப்படுத்துவது அல்ல. நாம் கர்த்தரை உண்மையுடன் அறிவித்து, கிறிஸ்துவை மகிமைப்படுத்தி, சுவிசேஷத்தை உயர்த்திப் பிடிக்கும் வேதவிளக்கப் பிரசங்கங்களைச் செய்பவர்களாக இருக்கலாம். இருப்பினும், அதற்கான முழு மகிமையும் தேவனுக்கே சேர வேண்டும். ஏனென்றால், உலகத்தின் மிகச்சிறந்த பிரசங்கியாரும் வீழ்ச்சியடைகிற சுபாவம் கொண்ட ஒரு சாதாரண, பலவீனமான மனிதனே. அப்படிப்பட்ட அற்பமான, பலவீனமான நம்மைத்தான் தேவன் இந்த மகத்தான பணிக்காகப் பயன்படுத்துகிறார். நம்மில் கடிந்துகொள்ளப்படுதலும் சீர்திருத்தப்படுதலும் அவசியமில்லாதவர்கள் எவரும் இல்லை. எனவே, நம்முடைய பிரசங்கங்களைக் குறித்து மனத்தாழ்மையுடன் இருந்து, ஆவியானவரால் நிரப்பப்பட்ட உண்மையான சகோதர சகோதரிகள் அல்லது சக மூப்பர்கள் செய்யும் ஆக்கபூர்வமான விமர்சனங்களை வரவேற்பதன் மூலம், முதலில் நம் ஆத்துமாவுக்கும், அதன்பின் திருச்சபை முழுமைக்கும் ஆவிக்குரிய பக்திவிருத்தி உண்டாகும். ஆக்கபூர்வமான விமர்சனத்தை வரவேற்பது பயனுள்ளதாக இருக்கும் என்று மட்டும் சொல்வது எனது நோக்கமல்ல; அது வேதப்பூர்வமானது, மற்றும் மிகவும் அவசியமானதும் ஆகும்.

நான் மிகவும் மதிக்கும் ஒரு தேவ ஊழியரின் பிரசங்கங்களை நேரடியாகக் கேட்கும் பாக்கியம் எனக்கு அடிக்கடி கிடைப்பதுண்டு. ஏறக்குறைய ஒவ்வொரு பிரசங்கத்திற்கும் பிறகு, அந்த ஊழியர் தம்முடன் நெருக்கமாக இருப்பவர்களிடம் குறிப்பிட்ட சில கேள்விகளைக் கேட்டு, தமது பிரசங்கத்தைக் குறித்த பின்னூட்டத்தைப் (feedback) பெற்றுக்கொள்வார். அந்த ஊழியரின் முன்மாதிரி, அவருடைய மனத்தாழ்மை, திருத்தப்படுவதை ஏற்றுக்கொள்ளும் விதம், கற்றுக்கொள்ள விரும்பும் மனப்பான்மை ஆகியவை எனது சபை வாழ்விலும் ஊழியத்திலும் அழியாத முத்திரையைப் பதித்துள்ளன. அதேபோல, நான் அந்த ஊழியரின் முன்னிலையில் பிரசங்கிக்கும்போதெல்லாம், அவர் அளிக்கும் பின்னூட்டத்தை ஏற்றுக்கொண்டதன் மூலம், கடந்த ஆண்டுகளில் நான் பிரசங்கிக்கும் விதத்தில் எதிர்பாராத பல நல்ல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அவரிடமிருந்து பல காரியங்களைக் கற்றுக்கொள்ள தேவன் எனக்குக் கிருபை பாராட்டினார்.

இந்தக் கட்டுரையில், ஆக்கபூர்வமான விமர்சனத்தினால் ஏற்படும் நன்மைகளைச் சுருக்கமாக உங்கள் முன் வைக்கிறேன். நீங்கள் அவற்றைப் படித்து, ஆக்கபூர்வமான விமர்சனங்களை வரவேற்பதில் ஊக்கமடைய வேண்டும் என்று உங்களுக்காக ஜெபிக்கிறேன்.

  1. ஆக்கபூர்வமான விமர்சனம் மனத்தாழ்மையையும், தேவனைச் சார்ந்திருப்பதையும் வளர்க்கிறது.

மனத்தாழ்மையை வளர்ப்பது என்பது ஆக்கபூர்வமான விமர்சனத்தின் மூலம் கிடைக்கும் முதல் மற்றும் மிகப்பெரிய நன்மையாகும். ஆவிக்குரிய வளர்ச்சிக்கு முக்கிய எதிரி பெருமையே. "தேவன் பெருமையுள்ளவர்களுக்கு எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார்" என்று வேதம் திரும்பத் திரும்ப எச்சரிக்கிறது (யாக்கோபு 4:6). மற்றவர்களின் கருத்துக்களை ஏற்றுக்கொள்ள முன்வருவது என்பது, 'நான் சொல்வதுதான் சத்தியம், அதை அனைவரும் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும்' என்ற மனப்பான்மை நம்மிடம் இல்லை என்பதை ஒப்புக்கொள்வதாகும். மூப்பர்கள் மத்தியில் அடிக்கடி பிரசங்கங்கள் மதிப்பாய்வு செய்யப்படுவதன் மூலம், மூப்பர்கள் கற்றுக்கொள்ளும் மனப்பான்மையை இழக்காமல் இருப்பார்கள். ஆக்கபூர்வமான விமர்சனத்தை நிராகரிக்கும் ஒரு போதகர், 'நான் கற்றுக்கொள்ள வேண்டியது வேறு எதுவுமில்லை' என்று சொல்லாமல் சொல்கிறார். சுவிசேஷத்தால் வடிவமைக்கப்பட்ட ஒரு தலைவர், கிறிஸ்துவைத் தவிர பரிபூரணமான பிரசங்கியார் வேறு யாருமில்லை என்பதை உணர்ந்து, சீர்திருத்தங்களை ஏற்றுக்கொள்வார். உங்கள் பணியை மதிப்பிடுவதில் இறுதி நியாயாதிபதி நீங்கள் அல்ல, தேவனே. ஆனால் தேவன் அந்தப் பணியைத் தம்முடைய மக்கள் மூலமாகவே அடிக்கடி செய்து வருகிறார்.

'கர்த்தர் சொல்லுகிறார்' என்று நின்று அறிவிக்கும் நாமே, முதலாவதாக அந்த வார்த்தையின் அதிகாரத்திற்கு நம்மை ஒப்புக்கொடுக்க வேண்டியவர்கள். நாம் செய்தியின் எஜமானர்கள் அல்ல, வெறும் உக்கிராணக்காரர்கள் (Stewards) மட்டுமே என்பதை ஆக்கபூர்வமான விமர்சனம் நமக்கு நினைவூட்டுகிறது.

சங்கீதக்காரன் வெளிப்படுத்திய ஒரு ஆழமான சத்தியம் என்னவென்றால், "பக்தியற்றவனை நோக்கி தேவன்: நீ என் பிரமாணங்களை எடுத்துரைக்கவும், என் உடன்படிக்கையை உன் வாயினால் சொல்லவும் உனக்கென்ன காரியம்? சிட்சையை (சீர்திருத்தத்தை) நீ பகைத்து, என் வார்த்தைகளை உனக்குப் பின்னாக எறிந்துவிடுகிறாய்" (சங்கீதம் 50:16,17). தேவனுடைய கட்டளைகளை விவரிப்பவர்களிலும், அவருடைய உடன்படிக்கையைப் பேசுபவர்களிலும் சிலரைப் பக்தியற்றவர்கள் என்று அழைக்கும் தேவன், அவர்களிடம் காணப்படும் ஒரு குணாதிசயத்தை இந்தச் சங்கீதத்தில் வெளிப்படுத்துகிறார். அவர்கள் சீர்திருத்தத்தை வெறுக்கிறார்களாம். சீர்திருத்தத்தை ஏற்றுக்கொள்ள மனமில்லாமலிருப்பது தனிப்பட்ட குணநலனில் உள்ள ஒரு சிறிய குறைபாடு மட்டுமல்ல; அது பக்தியற்ற தன்மையையும் கலகச் சிந்தையையும் குறிக்கிறது. தெய்வீகக் கண்டிப்பினை நிராகரிப்பது தங்களை ஆபத்தான நிலைக்குத் தள்ளும் என்பதை ஞானமுள்ள எந்தவொரு போதகரும் புரிந்துகொள்வார். ஒரு பிரசங்கியார் கிருபையில் வளர வேண்டுமென்றால், செதுக்கப்படுவதற்கும் சீர்திருத்தப்படுவதற்கும் தேவையான மனத்தாழ்மையை அவர் கொண்டிருக்க வேண்டும்.

  1. வேதப்பகுதியின் தெளிவை மேம்படுத்துகிறது.

சத்திய வசனத்தை நிதானமாய்ப் பகுத்துப் போதிக்க (2தீமோத்தேயு 2:15) பிரசங்கியார்கள் பிரயாசப்பட வேண்டும். மிகவும் உண்மையாக வேதவிளக்கப் பிரசங்கம் செய்யும் பிரசங்கியார் கூட, தங்களை அறியாமலேயே தேவையற்ற காரியங்களை அதிகமாகச் சொல்வது அல்லது அவசியமான காரியங்களை விளக்கமாகவும் தெளிவாகவும் சொல்லத் தவறுவது போன்ற தவறுகளைச் செய்யும் வாய்ப்புள்ளது. மற்றவர்கள் சுட்டிக்காட்டாவிட்டால், நாம் செய்யும் பல தவறுகளை நாமே ஒருபோதும் உணர முடியாது. நாம் வேதப்பகுதிக்கு அளித்த விளக்கம் சரியானதா, சமநிலையுடன் போதிகிறோமோ, தெளிவாக வெளிப்படுத்தினோமா என்பதை ஆக்கபூர்வமான விமர்சனத்தின் மூலம் பரிசோதித்துக்கொள்ளலாம். பல நேரங்களில் பிரசங்கத்திற்கு ஆயத்தமாகும்போது நம் மனதில் இருக்கும் தெளிவு, பிரசங்க மேடையில் நின்று பேசும்போது வெளிப்படுவதில்லை. உண்மையுள்ள ஒரு பிரசங்கியார், "நான் சொன்னது உங்களுக்குப் புரிந்ததா? நான் சத்தியத்தை உள்ளதை உள்ளபடியே உண்மையுடன் போதித்தேனா?" என்று சத்தியத்தை போதிக்கும் ஊழியத்திற்குக் கீழ்ப்படிந்திருக்கும் தமது சபை விசுவாசிகளைக் கேட்பார். ஒரு பிரசங்கியார் விசுவாசிகளுக்குச் செய்யக்கூடிய மிகப்பெரிய தீமை என்னவென்றால், அவர்கள் தங்களுக்குப் பொருத்திப் பார்க்கவும் பின்பற்றவும் முடியாத வகையில் சத்தியத்தைப் போதிப்பதே. மக்களுக்குப் புரியாமல் தடுக்கும் குழப்பங்கள் அல்லது தவறுகள் எவையேனும் நம் போதனையில் இருக்கிறதா என்பதை ஆக்கபூர்வமான விமர்சனத்தின் மூலம் கண்டறிந்து, அவற்றைச் சரிசெய்துகொள்ளலாம்.

அப்போஸ்தலர் 17:11-ல் உள்ள பெரோயா பட்டணத்தார், மனோவாஞ்சையாய் வசனத்தை ஏற்றுக்கொண்டு, பவுலும் சீலாவும் சொன்ன காரியங்கள் அப்படி இருக்கிறதா என்று வேதவாக்கியங்களைத் தினந்தோறும் ஆராய்ந்து பார்த்ததாலேயே நற்குணசாலிகள் என்று பாராட்டப்பட்டார்கள். போதிக்கப்பட்ட காரியங்களை ஆராய்ந்து பார்ப்பது மிகவும் மதிப்பிற்குரியது என்பதைப் பெரோயா பட்டணத்தாரின் முன்மாதிரி உறுதிப்படுத்துகிறது. நமது திருச்சபைகளில் பெரோயா பட்டணத்தாரைப் போல ஆர்வத்துடன் பிரசங்கங்களைக் கேட்பதை ஊக்குவிப்பது என்பது, விசுவாசிகளை வேதவாக்கியங்களின் வெளிச்சத்தில் நமது வார்த்தைகளைக் கவனமாகச் சோதித்துப் பார்க்கச் சொல்வதாகும்; அதேபோல், அவர்களுடைய கேள்விகளுக்குப் பதிலளிக்கவும், அவர்களுடைய கருத்துக்களைக் கேட்கவும் நாம் தயாராக இருக்கிறோம் என்பதைக் காட்டுவதாகும். பவுலும் சீலாவும் அவ்வாறு இருந்ததால்தான், "அவர்களில் (பெரோயா பட்டணத்தாரில்) அநேகரும், கனம்பொருந்திய கிரேக்க ஸ்திரீகளிலும் புருஷர்களிலும் அநேகரும் விசுவாசிகளானார்கள்" (அப்போஸ்தலர் 17:12). பவுலும் சீலாவும் ஞானமுள்ளவர்களைப் போலவே பெரோயா மக்களிடம் நடந்துகொண்டார்கள் என்பதைப் பின்வரும் வசனங்களைப் படித்தால் அறியலாம்: "பரியாசக்காரனைக் கண்டியாதே, அவன் உன்னைப் பகைப்பான்; ஞானமுள்ளவனைக் கடிந்துகொள், அவன் உன்னை நேசிப்பான்" (நீதிமொழிகள் 9:8). "பரியாசக்காரன் தன்னைக் கடிந்துகொள்ளுகிறவனை நேசிக்கமாட்டான்; அவன் ஞானிகளண்டைக்குப் போகவுமாட்டான்" (நீதிமொழிகள் 15:12). பவுலும் சீலாவும் பெரோயா மக்களைக் கடிந்துகொள்ளாமல், அவர்களுக்கு அன்புடன் ஊழியம் செய்தார்கள். நாமும் பவுல், சீலாவின் முன்மாதிரியைப் பின்பற்றி, நமது சபையில் உள்ள விசுவாசிகளைப் பெரோயா பட்டணத்தாரின் முன்மாதிரியைப் பின்பற்றும்படி ஊக்குவிப்பவர்களாக இருக்க வேண்டும். ஆக்கபூர்வமான விமர்சனத்தைக் கண்டு பயப்படும் பிரசங்கியார், தமது பிரசங்கத்தில் உள்ள குறைகள் எங்கே வெளிப்பட்டுவிடுமோ என்று பயப்படுகிறார். அப்படிப் பயப்படும் சில போதகர்கள், தமக்கு வேதப்பூர்வமான ஆலோசனைகளை வழங்கும் விசுவாசிகளைப் பார்த்து, "உனக்கு ஆவிக்குரிய பாடங்களைக் கற்றுக்கொடுத்த போதகருக்கே நீ கற்றுக்கொடுக்கப் பார்க்கிறாயா?", "உனக்குப் பிசாசு பிடித்திருக்கிறது" என்று கூறி அவர்களின் வாயை அடைக்க முற்படுகிறார்கள். தமக்கு ஒப்படைக்கப்பட்ட வார்த்தையின் ஊழியத்தை உண்மையுடன் செய்வதில் தாம் எங்கேனும் தவறிவிடுகிறோமா என்று தன்னைச் சரிபார்த்துக்கொள்ளும் வாய்ப்பாக அதைப் பார்க்காமல், தமது பெயருக்கும் புகழுக்கும் ஏதோ களங்கம் வந்துவிடும் என்று பயப்படும் போதகர், போதிக்கும் ஊழியத்தை உண்மையுடன் செய்வதைவிட தமது புகழையே அதிகம் நேசிக்கிறார் என்று அர்த்தம். நம்மில் எவரும் அப்படி இருக்கக் கூடாது என்று நமக்கு நாமே போதித்துக்கொள்வோம்.

  1. வெளிப்படுத்தும் விதம் மேம்படுகிறது.

சொல்லப்படும் செய்தி எவ்வளவு சிறந்ததாக இருந்தாலும், அது கேட்பவர் மீது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது அது வெளிப்படுத்தப்படும் விதத்தைப் பொறுத்தே அமைகிறது. ஆக்கபூர்வமான விமர்சனத்தின் மூலம், சில கவனச்சிதறலை ஏற்படுத்தும் பழக்கங்களை அடையாளம் கண்டு, அவற்றைக் குறித்த மாற்றங்களைச் செய்துகொள்ளலாம். உதாரணமாக, வேகமாகப் பேசுவது, மக்களை நேராகக் கண்களில் பார்க்காமல் இருப்பது, முழுப் பிரசங்கத்தையும் ஒரே தொனியில் சொல்வது, சில வார்த்தைகளைத் தேவையற்ற விதத்தில் திரும்பத் திரும்பப் பயன்படுத்துவது போன்றவை. ஆக்கபூர்வமான விமர்சனத்தின் மூலம் சத்தியத்தை வெளிப்படுத்தும் விதமும் மேம்படும் வாய்ப்புள்ளது.

  1. ஒருவருக்கொருவர் பக்திவிருத்தியை ஏற்படுத்துவதன் மூலம் உள்ளூர்ச் சபையும், சபை தலைமைத்துவமும் பலப்படுகிறது.

ஆக்கபூர்வமான விமர்சனத்தை வரவேற்கும் கலாச்சாரத்தை ஊக்குவிக்கும் சபைகளில் உள்ள விசுவாசிகள் ஒன்றாக இணைந்து வளருவார்கள். முழு இருதயத்துடன் ஐக்கியத்தில் மகிழ முடியும். அவர்களுக்குள் ஒற்றுமையும் அன்பும் பலப்படும். பிரசங்கியார்கள் தங்களை விமர்சிக்குமாறு கேட்கும்போது, அது அவர்களின் மனத்தாழ்மையையும் கற்றுக்கொள்ளும் சுபாவத்தையும் வெளிப்படுத்துகிறது. மேலும், விசுவாசிகளுக்குள் நாம் ஒருவருக்கொருவர் பொறுப்பாளிகள் என்ற உணர்வை ஏற்படுத்துகிறது. கண்ணியத்துடனும் மரியாதையுடனும் செய்யப்படும் ஆக்கபூர்வமான விமர்சனத்தின் மூலம் பிரசங்கியார்கள் கூர்மையாக்கப்படுகிறார்கள். "இரும்பை இரும்பு கூர்மையாக்கும்; அதுபோலவே ஒருவன் தன் சிநேகிதனுடைய முகத்தைக் கூர்மையாக்குகிறான்" (நீதிமொழிகள் 27:17).

  1. உபதேச ரீதியான சமநிலையின்மையைத் தவிர்க்க உதவுகிறது.

ஒவ்வொரு பிரசங்கியாருக்கும் சில விருப்பமான தலைப்புகள் இருக்கும். சில குறிப்பிட்ட காரியங்களைக் குறித்து அதிகமாகப் பிரசங்கிக்க விரும்பும் சுபாவம் பெரும்பாலும் அனைவரிடமும் இருக்கும். அப்படிச் செய்யும்போது, முக்கியமான மற்ற தலைப்புகளைப் புறக்கணிக்கும் அபாயம் உள்ளது. நீண்ட காலமாக அப்படியே தொடர்வதன் மூலம், தேவனுடைய முழு ஆலோசனையையும் சமநிலையுடன் போதிப்பது நடைபெறாமல் போகலாம். எல்லா வகையான ஊட்டச்சத்துகளும் உள்ள உணவை உட்கொள்ளாததால் ஒருவருக்கு எப்படி ஊட்டச்சத்துக் குறைபாடு ஏற்படுகிறதோ, அதேபோல தேவனுடைய வார்த்தையில் உள்ள முக்கியமான பல்வேறு அம்சங்களைப் போதிக்காவிட்டால் விசுவாசியும் பலவீனமடைவார். ஆக்கபூர்வமான விமர்சனம் உபதேச ரீதியான சமநிலையின்மையைத் தவிர்க்க உதவும் ஒரு கேடயமாகச் செயல்படுகிறது. நமது பிரசங்கங்கள் வேதப்பூர்வமான சமநிலையைக் கொண்டு, சுவிசேஷத்தை மையமாகக் கொண்டிருக்க உதவுகிறது.

குறிப்பு: ஆக்கபூர்வமான விமர்சனத்தின் ஒரு பகுதியாக வரும் கருத்துக்கள் அனைத்தும் வேதப்பூர்வமானவையாகவும் பயனுள்ளவையாகவும் இருக்காது என்பதை உணருவது முக்கியம். விமர்சனங்களை மதிப்பிடுவதில் போதகர் பகுத்தறியும் திறன் கொண்டிருக்க வேண்டும். தனிப்பட்ட விருப்பங்கள், மாறுபட்ட கலாச்சாரங்கள், வித்தியாசமான பின்னணிகள், முதிர்ச்சியின்மை போன்ற பல காரியங்கள் விமர்சிப்பவர்களின் சிந்தனையைப் பாதிக்கலாம். அவற்றையும் பிரசங்கியார் பகுத்தறிய வேண்டும். வார்த்தையினால் கட்டப்பட்டவர்களிடமிருந்து சீர்திருத்தத்தைப் பெறுவது அதிகப் பயனுள்ளதாக இருக்கும். சத்தியத்தை நேசிப்பவர்கள், ஆத்துமாக்களை ஆதாயப்படுத்துவது குறித்த பாரம் கொண்டவர்கள், போதிப்பது குறித்தும் அதன் பின்னணியில் நடைபெறும் ஆயத்தங்கள் குறித்தும் குறைந்தபட்ச புரிதல் உள்ளவர்கள் இத்தகையவர்களிடமிருந்து ஆலோசனைகளைப் பெறுவது சிறந்தது. ஒவ்வொரு கருத்துக்கும் சமமான மதிப்பளிக்க வேண்டிய அவசியமில்லை; அதேசமயம் எந்தக் கருத்தையும் முழுமையாக நிராகரிக்க வேண்டிய அவசியமும் இல்லை. அப்போஸ்தலனாகிய பவுல் அளித்த ஒரு எச்சரிக்கை இந்தச் சூழ்நிலையில் உதவியாக இருக்கும் "எல்லாவற்றையும் சோதித்துப்பார்த்து, நலமானதைப் பிடித்துக்கொள்ளுங்கள்" (1தெசலோனிக்கேயர் 5:21). ஜெபத்துடன் பகுத்தறிவதன் மூலம், கோதுமையையும் பதரையும் பிரிக்க முடியும்.

சில நடைமுறை ஆலோசனைகள்:

  • உங்கள் பிரசங்கங்களைத் தொடர்ந்து மதிப்பாய்வு செய்து, உங்களுக்கு ஆலோசனைகளும் வழிமுறைகளும் கூறும் திருச்சபை மூப்பர்கள் மற்றும் முதிர்ச்சியடைந்த விசுவாசிகளைக் கொண்ட ஒரு குழுவை அமைத்துக் கொள்ளுங்கள்.
  • அவர்களிடம் பின்னூட்டத்தைப் (கருத்து) பெறும்போது குறிப்பிட்ட கேள்விகளைக் கேளுங்கள். உதாரணமாக, "நான் பிரசங்கத்தின் மூலம் சொல்ல வந்த முக்கியக் கருத்துத் தெளிவாகப் புரிந்ததா?", "நான் சுட்டிக்காட்டிய நடைமுறைப் பயன்பாடுகள் பின்பற்றுவதற்கு ஏற்ற வகையில் இருந்தனவா?" போன்றவை.
  • உங்கள் பிரசங்கங்களை ஒலிப்பதிவு (Audio Record) செய்து நீங்களே கேளுங்கள். அப்படிக் கேட்பதை ஒரு பழக்கமாக மாற்றிக்கொள்ளுங்கள். உங்களை நீங்களே விமர்சித்துக்கொள்வதன் மூலமும் பல காரியங்களைக் கற்றுக்கொள்ளலாம்.
  • 'பிரசங்கத்தை விமர்சிப்பதா? அந்தப் பாவத்தைச் செய்யும் துணிச்சல் எவருக்கும் வரக்கூடாது' என்பது ஒரு சராசரி கிறிஸ்தவனின் கண்ணோட்டமாக இருக்கிறது. இந்தக் கண்ணோட்டம் மாற வேண்டும். ஆக்கபூர்வமான விமர்சனம் வேதப்பூர்வமானது என்பதை உங்கள் சபைக்குப் போதியுங்கள். அதன் முக்கியத்துவத்தையும், அதைச் செய்யும் விதத்தையும் கற்றுக்கொடுங்கள். விசுவாசிகள் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் தங்களின் சொந்தப் பக்திவிருத்திக்காகவே சபையாகக் கூடிவந்து, சத்திய உபதேசத்திற்குக் கீழ்ப்படிந்து அமர வேண்டும்; தங்கள் சொந்த ஆத்துமா வசன போதிப்பு ஊழியத்தின் மூலம் பயனடைய வேண்டும். இருப்பினும், தாங்கள் பெற்றுக்கொண்ட நன்மைகளையும், எடுத்த தீர்மானங்களையும், பிரசங்க மதிப்பாய்வுக்கென ஒதுக்கப்பட்ட குறிப்பிட்ட நேரத்தில் பிரசங்கியாரிடம் பகிர்ந்து அவரை உற்சாகப்படுத்த வேண்டும். அதன் பிறகு, பிரசங்கம் இன்னும் எப்படி இருந்தால் சிறப்பாகவும் தெளிவாகவும் இருந்திருக்கும் என்பதை, ஆக்கபூர்வமான விதத்தில் அன்புடன் தெரிவிக்க வேண்டும். இந்த முறையையும் வழிமுறையையும் உங்கள் உள்ளூர்ச் சபை விசுவாசிகளுக்குக் கற்றுக்கொடுங்கள்.

முடிவுரை:

 ஆக்கபூர்வமான விமர்சனத்தின் மூலம் நாம் விசுவாசிகளின் பார்வையில் தாழ்ந்துபோய்விடுவோம் என்று பயப்பட வேண்டிய அவசியமில்லை; அது நாம் அவர்களுக்குப் பொறுப்பாளர்களாக இருப்பதற்கான ஒரு வழியாகும். என் அன்பான சக ஊழியர்களே, தேவனுடைய மகிமைக்காகவும், திருச்சபையின் பக்திவிருத்திக்காகவும், நம்முடைய ஆத்துமாக்கள் முதிர்ச்சியடைவதற்காகவும், ஆக்கபூர்வமான விமர்சனத்தைத் தேவன் அளித்த ஒரு வரமாக ஏற்றுக்கொள்வோம். ஒருபுறம், தேவனுடைய வல்லமையின்றி எந்த நன்மையும் நடக்காது என்பதை அறிந்து, அவரையே சார்ந்து பிரசங்கிப்பதற்காகப் பிரசங்க மேடையில் நிற்கிறோம்; மறுபுறம், பிரசங்கத்திற்காக எவ்வளவு பிரயாசப்பட வேண்டுமோ அவ்வளவு பிரயாசப்பட்டு ஆயத்தமாகிறோம். அப்போஸ்தலனாகிய பவுல் இதே கருத்தைக் கொலோசெயர் 1:29-ல் அற்புதமாக வெளிப்படுத்தியுள்ளார்: "அதற்காக நான் எனக்குள் வல்லமையாய்க் கிரியை நடப்பிக்கிற அவருடைய பலத்தின்படி போராடிப் பிரயாசப்படுகிறேன்". பிரயாசப்படுவது பவுல்தான், ஆனால் காரியசித்தியை ஏற்படுத்துவது தேவனுடைய கிரியை நடப்பிக்கும் வல்லமையே. அந்தப் போராட்டத்தில், அந்தப் பிரயாசத்தில் ஒரு பகுதிதான், சக பிரசங்கியார்கள் மற்றும் முதிர்ச்சியடைந்த விசுவாசிகளிடமிருந்து ஆக்கபூர்வமான விமர்சனத்தை ஏற்றுக்கொள்வது. இந்த ஒழுக்கத்தைப் பழகிக்கொண்டு, அதன் மூலம் பயனடைய விரும்புபவர்களுக்கும், அந்தத் திசையில் பிரயாசப்படத் தீர்மானித்திருப்பவர்களுக்கும் தேவனுடைய கிருபை துணைநிற்பதாக!

 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

Join WhatsApp எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.