நற்செய்தி

மாபெரும் பாவிகளுக்கான மன்னிப்பு
ஆசிரியர்: ஜான் ஃபிளேவல் 1627–1691
தமிழாக்கம்: தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்
வாசிப்பதற்கான நேரம்: 6 நிமிடங்கள்

 

“ஜான் ஃபிளேவல்” அவர்களுடைய எழுத்திலிருந்து தொகுக்கப்பட்டது.

கிறிஸ்து மரித்தாரா? அவர் சிலுவையில் கோரமான முறையில், வேதனையுடன், அவமானத்தையும், சாபத்தையும் தாங்கியவராய் சாபமான நிலையில் தொங்கினவராய்ப் பாடுகளை சகித்து மரித்தாரா? அப்படியானால் தேவனிடமிருந்து மன்னிப்பும் திரளான மீட்பும் மிகப்பெரிய பாவிக்கும் உண்டு என்பது நிச்சயம். அதை விசுவாசத்தின் வழியாக இயேசுவின் சிலுவை இரத்தின் உபயோகத்தால் தங்கள் குற்றமுள்ள ஆத்துமாக்களுக்கு மீட்பைப் பெறுகிறார்கள். “குமாரனாகிய அவருக்குள் அவருடைய இரத்தத்தினாலே, பாவமன்னிப்பாகிய மீட்பு நமக்கு உண்டாயிருக்கிறது” என்கிறார் அப்போஸ்தலனாகிய பவுல் (கொலோசெயர் 1:14). “அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி நம்மைச் சுத்திகரிக்கும்” (1 யோவான் 1:7). இரண்டு காரியங்கள் இதைத் தெளிவு படுத்த வல்லது.

      முதலாவது, சிலுவையில் சிந்தப்பட்ட இந்த இரத்தத்தால் மனிதனுடைய மிகப்பெரிய பாவங்களுக்கான மன்னிப்பைப் பெறும் வல்லமை உடையதாய் இருக்கிறது.

      இரண்டாவதாக, இதன் வல்லமை விசுவாசிக்கும் பாவிகள் அனைவருக்கும் பலன் தரும் விதத்தில் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

      இந்த இரண்டு குறிப்புகளும் எவ்வளவு தெளிவாய் வேதத்தில் தோன்றுகின்றன?

முதலாவதாக, பாவப் பிரயாச்சித்தம் செய்ய சிலுவையில் சிந்தப்பட்ட இரத்தத்திற்கு இருக்கும் போதுமான வல்லமை மற்றும் இந்த இரத்தம் மிகப் பெரிய பாவங்களையும் கழுவி சுத்திகரிக்கும் வல்லமையைப் பார்ப்போம். இது மிகவும் வெளிப்படையானது. ஏனெனில் இந்த இரத்தம் விலையேறப்பெற்றது என அழைக்கப்படுகிறது. “நீங்கள்… அழிவுள்ள வஸ்துக்களாகிய வெள்ளியினாலும் பொன்னினாலும் மீட்கப்படாமல்... கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தினாலே மீட்கப்பட்டீர்கள் என்று அறிந்திருக்கிறீர்களே?” (1 பேதுரு 1:18–19). இந்த இரத்தம் விலையேறப்பெற்றது, ஏனெனில் இது இன்னாருடன் தொடர்புடையது என்பதால். “இவர் என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்ட சர்வத்திற்கும் மேலான தேவன்” (ரோமர் 9:5). ஆகவேதான் இது தேவனுடைய இரத்தம் என அழைக்கப்படுகிறது (அப்போஸ்தலர் 20:28). ஆதலால் இது இராஜரீகம் நிறைந்த அதிபதியின் இரத்தமாகிறது. ஆம், அதன் மேன்மை மற்றும் அதன் வலிமையின் காரணமாக, இந்த இரத்தம் படைக்கப்பட்ட எந்த மனித நரம்புகளிலும் பாயும் இரத்தத்தை விடச் சிறந்த ஒன்று. இந்த உலகம் முழுவதிலும் இருக்கும் எல்லா மனிதர்களின் இரத்தத்தை விட இது விலையேறப்பெற்றது. ஒரு சாதாரண நதியின் தண்ணீருக்கும், தங்க ஆற்றில் இருந்து எடுக்கப்படும் தண்ணீரின் ஒரு துளிக்கும் உள்ள வித்தியாசம் போன்றது இது. இதன் விலைமதிப்பில் மேன்மையான தன்மையின் விளைவாக இது மனிதனை தேவனுடன் ஒப்புரவாக்கும் அளவிற்கான திருப்தியை தேவனில் ஏற்படுத்துகிறது. “அவர் சிலுவையில் சிந்தின இரத்தத்தினாலே சமாதானத்தை உண்டாக்கி, பூலோகத்தில் உள்ளவைகள் பரலோகத்தில் உள்ளவைகள் யாவையும் அவர் மூலமாய் தமக்கு ஒப்புரவாக்கிக்கொள்ளவும் அவருக்குப் பிரியமாயிற்று” என்று எழுதுகிறார் பவுல் (கொலோசெயர் 1:20). இந்தப் பூமியில் இருப்பவர்களுக்கு மீட்பைத் தரும் இதே இரத்தம் தான் பரலோகத்தில் வசிப்பவர்களுக்கும் உறுதியைத் தந்திருக்கிறது. இந்த இரத்தத்தின் வல்லமையால் குற்ற உணர்ச்சி என்பது, சூரியனின் வெளிச்சத்திற்கு முன்பாக அகன்று போகும் இருளைப் போல, மறைந்து சுருங்கிப்போகும்படி செய்கிறது. குற்ற உணர்ச்சியால் மிரண்டு போய் இருக்கும் ஆத்துமாவுடன் நேரடியாக இடைபட்டு, ஆபேலின் இரத்தம் பேசினதைவிட மேன்மையானவைகளைப் பேசும்படியாக இந்த இரத்தத்தின் ஒவ்வொரு துளிக்கும் பேசும் திறன் இருக்கிறது. ( எபிரெயர் 12:24). இது நம்மை நமது எல்லாத் தீமையினின்றும் அகற்றுவதுடன், நமது அமைதல் இல்லாத குற்ற மனசாட்சியையும் குற்றந்தீர தெளிக்கப்பட்டவர்களாய் மாற்றுகிறது (எபிரேயர் 10:22). தேவனைத் திருப்திப்படுத்தப் போதுமான வலிமை இந்த இரத்தத்திற்கு இருப்பது போல, நமது மனசாட்சியையும் அழுக்கற கழுவப் போதுமான வலிமை இதற்கு இருக்கிறது.

மனசாட்சி அதன் திருப்திக்கு மேலாக எதையும் எதிர்பார்க்க முடியாது. அதைவிடக் குறைய இருக்கும் தரத்தையும் அது ஏற்றுக்கொள்ளாது. அது போலவே தேவன் தமது திருப்திக்கானதை தேவன் பெற்றுக்கொண்ட பின்னர், நமது மனசாட்சி குற்ற மனதுடன் இருக்க வேண்டியதில்லை. இந்த இரத்தம் தேவனையும் நமது மனசாட்சியையும் திருப்தி அடையச் செய்ய வல்லதாய் இருக்கிறது.

இரண்டாவதாக, தேவனைத் திருப்திப்படுத்துவதற்குத் தேவையான வல்லமை இந்த இரத்தத்திற்கு இருப்பதுபோல, மிகப்பெரிய குற்றத்தில் இருந்து மனசாட்சியைத் திருப்திப்படுத்தும் வல்லமை இதற்கு இருப்பதால், இந்த வல்லமையின் பயனால் விசுவாசிக்கும் பாவிகள் பயன்பெறும்படியான வகையில் தேவன் இதை உருவாக்கி வைத்திருக்கிறார். எந்த வித சந்தேகத்திற்கும் இடம் இல்லாமல் எவ்வளவு பெரிய பாவத்திற்கும் பிரயாச்சித்தம் செய்யும் விதத்தில் இந்த இரத்தம் சிந்தப்பட்டது. “மோசேயின் நியாயப்பிரமாணத்தினாலே நீங்கள் எவைகளினின்று விடுதலையாகி நீதிமான்களாக்கப்படக்கூடாதிருந்ததோ, விசுவாசிக்கிறவன் எவனும் அவைகளினின்று இவராலே விடுதலையாகி நீதிமானாக்கப்படுகிறான்” நடபடிகள் புத்தகத்தில் சொல்லப்பட்டிருப்பது போல (அப்போஸ்தலர் 13:39) இந்த இரத்தம் விசுவாசிக்கிறவர்களின் பயனுக்காக வைக்கப்பட்டிருக்கிறது.

விசுவாசிகளின் பாவப்பிராயச்சித்தம் என்பதே மிகப்பெரிய நோக்கமாய் இருக்கிறது என்பதை பழைய ஏற்பாடு காலத்தில் வாழ்ந்த இஸ்ரவேலரின் பலி செலுத்துதல் முறை வழியாக நிழலாட்டமாய் சொல்லப்பட்டிருக்கிறது. இந்த எதிர்பார்ப்பு இயேசு கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தம் சிந்தப்பட்டதால் நிஜமானது. இந்த அடையாளமான இரத்தம் சிந்துதல் (பலி செலுத்துதலின் அடையாளம்) மன்னிப்பைக் குறித்த தேவனுடைய நோக்கத்தை வெளிப்படுத்துகிறது. பலி மிருகத்தின் தலையின் மேல் பலி செலுத்த வருகிறவர்கள் கைகளை வைக்கும் செயல் அவர்கள் விசுவாசிக்க வேண்டிய முறைகளையும் எடுத்தியம்புகிறது. இதன் வழியாக சிந்தப்பட்ட இரத்தம் அவர்களுக்காக பயன்படுத்தப்பட்டதுபோல, இன்றளவும் மிகச் சிறப்பான வழியில் நமக்கும் பயன்படுகிறது. மன்னிப்பின் நோக்கம் இல்லாதிருந்தால், எந்த பலியும் ஏற்படுத்தப்பட்டு இருக்க வாய்ப்பு இல்லை.

மேலும் இயேசுவால் சிந்தப்பட்ட இரத்தம் நம் பாவங்களுக்கான கடன்களை நம் இடத்தில் இருந்து அகற்றி நம்மை விடுதலையாக்கி இருக்கிறது என்கிற அச்சாரத்தை நமக்குத் தருகிறது. நாம் இனிக் குற்றவாளிகள் அல்ல (எபிரெயர் 7:22). தேவன் தம்முடைய குமாரனின் இரத்தத்தைப் பாவப்பிராயச் சித்தபலியாக ஏற்றுக்கொண்ட பின்னும், அதை விசுவாசிகள் நிறைவேற்ற வேண்டும் என்று எதிர்பார்ப்பாரா? அதற்கு வாய்ப்பே இல்லை. “தேவன் தெரிந்துகொண்வர்கள் மேல் குற்றம் சாட்டுகிறவன் யார்? தேவனே அவர்களை நீதிமான்களாக்குகிறவர். ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறவன் யார்? கிறிஸ்துவே மரித்தவர் அவரே எழுந்தும் இருக்கிறவர் அவரே தேவனுடைய வலது பாரிசத்திலும் இருக்கிறவர் நமக்காக வேண்டுதல் செய்கிறவரும் அவரே” என்கிறார் அப்போஸ்தலனாகிய பவுல் (ரோமர் 8:33–34). பாவமன்னிப்பிற்கு விசுவாசமும் மனமாற்றமும் அவசியம் என்று சொல்லப்படுவது ஏன்? தேவன் தம்முடைய வார்த்தை எங்கிலும் பாவிகளை மனந்திரும்பி இந்த இரத்தத்தை விசுவாசிக்க அழைப்பு விடுப்பது ஏன்? பாவமன்னிப்பின் வாக்கை ஏற்கும்படியாக திரளான வாக்குத்தத்தங்களையும் தந்திருப்பதும் ஏன்? இவ்வாறு செய்ய மறுக்கும் அவிசுவாசிகள் மற்றும் கிறிஸ்துவின் இரத்தத்தை உதாசீனம் செய்யும் மனந்திரும்பாத மக்கள் மேல் ஆக்கினைத் தீர்ப்பு உண்டாகும் என்பதையும் அவர் பிரகடனம் செய்வதும் ஏன்? நான் இதையெல்லாம் சொல்வதன் காரணம் எவ்வளவு பெரிய பாவிக்கும் மன்னிப்பு இருக்கிறது என்பதன் நிச்சயத்தையும், விசுவாசம் உள்ள ஒவ்வொரு பாவியையும் அவர் பரிபூரணமாக மன்னிக்கிறவர் என்பது தானே அல்லாமல் வேறு என்னவாக இருக்க முடியும்? இது எத்தனை ஆச்சரியமான சத்தம்! சமாதானத்தையும், மன்னிப்பையும், கிருபை மற்றும் நம்மை ஏற்றுக்கொள்வதையும் வெளிப்படுத்தும் எவ்வளவு மேன்மையான சத்தம் அது. இது சிலுவையில் இருந்து சிந்தப்படும் இயேசுவின் இரத்தத்தின் மேன்மையான சத்தமே!

பாவமுள்ள ஒரு நபரால் தன் மீது உள்ள எல்லா குற்றத்தையும் சுமந்து கொண்டு தேவனுடைய நீதிக்கு முன்பாக நிற்க முடியாது என்பது போல, மன்னிக்கப்பட்ட விசுவாசியின் மிகப்பெரிய குற்ற உணர்ச்சியாலும் வரும் நடுக்கமும் பயமுள்ள மனசாட்சியாலும் கிறிஸ்துவின் அதிக வல்லமையுள்ள இரத்தத்திற்கு முன்பாக நின்று மேற்கொள்ள முடியாது.   

அன்பு வாசகரே, வேதம் உங்களுக்கு உறுதியான நம்பிக்கையைத் தருகிறது. நீங்கள் எப்படி இருந்திருந்தாலும், எந்த நிலையில் இருந்தாலும், இரத்தாம்பரம் போல உங்கள் பாவம் சிவப்பாய் இருந்தாலும் இந்த இரத்தத்தினால் நீங்கள் கழுவப்பட்டீர்கள் (நீங்கள் கிறிஸ்துவை விசுவாசித்தால்). “முன்னே நான் தூஷிக்கிறவனும், துன்பப்படுத்துகிறவனும், கொடுமை செய்கிறவனுமாயிருந்தேன். அப்படியிருந்தும் ... நான் இரக்கம் பெற்றேன்” (1 தீமோத்தேயு 1:13) என்கிறார் பவுல். ஆனால் பவுலின் உதாரணம் மிக அரிதான உதாரணம். பவுலைப் போல இன்னொருவர் இந்தக் கிருபையை அடைந்திருக்க வாய்ப்பில்லை என்று நீங்கள் எதிர் வாதம் வைக்கலாம். பவுலைப் போல நீங்களும் விசுவாசித்தால், அப்படி ஒரு கேள்வியே எழும்பத் தேவை இல்லை! ஏனெனில், “நித்திய ஜீவனை அடையும்படி இனிமேல் இயேசு கிறிஸ்துவினிடத்தில் விசுவாசமாயிருப்பவர்களுக்குத் திருஷ்டாந்தம் உண்டாகும்பொருட்டுப் பிரதான பாவியாகிய என்னிடத்தில் அவர் எல்லா நீடிய பொறுமையையும் காண்பிக்கும்படிக்கு இரக்கம்பெற்றேன்” என்று எழுதுகிறார் (1 தீமோத்தேயு 1:16). ஆகவே பவுலைப் போலவே நாமும் இந்த இரக்கத்தைப் பெற முடியும்.

இயேசுவின் இரத்தத்தைச் சிந்துவதில் தங்கள் பங்கு இருந்தவர்கள் கூட அவர்களின் பாவ மன்னிப்பிற்காக இதே இரத்தத்தினால் பலன் பெற்றார்கள் (அப்போஸ்தலர் 2:36). அவிசுவாசம் மற்றும் இருதயக் கடினம் (மனந்திரும்ப மறுத்தல்) ஆகியவற்றைத் தவிர, இந்த இரத்தத்தின் ஆசீர்வாதங்களைப் பெறுவதில் உங்கள் ஆத்துமாக்களுக்குத் தடையாக வேறு எதுவும் இருக்க முடியாது.

 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.