நற்செய்தி

ஆசிரியர்: ரோமேஷ் பிரகாஷ்பாலன்
தமிழாக்கம்: தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்
வாசிப்பதற்கான நேரம்: 10 நிமிடங்கள்

 உங்கள் பதில் மிகவும் முக்கியமானது. ஏனெனில் உங்களின் பதில் நித்தியத்திற்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்.

நீங்கள் கேட்கக்கூடிய மிக முக்கியமான இரண்டு கேள்விகள்: உண்மையாகவே தேவன் இருக்கிறாரா? அப்படி இருந்தால், யார் அந்த தேவன்? தவறான பதில்கள் நித்திய வேதனையை ஏற்படுத்தும், ஆனால் நான் சொல்லும் சரியான பதிலை நீங்கள் நம்பினால் அது நித்திய மகிழ்ச்சியை தரும். நாம் இந்த கேள்விகளுக்கான பதில்களை நிச்சயமாக கண்டுப்பிடிக்க முடியும், ஏனெனில் தேவன் நமக்கு சிந்திக்கும் திறனை அளித்துள்ளார், அவர் இருக்கிறார் என்பதற்கான ஆதாரங்களை உலகெங்கிலும் நிரப்பியுள்ளது, மேலும் முக்கியமாக, அவரது வேத வார்த்தையின் மூலமாக தம்மை தாமே வெளிப்படுத்தியுள்ளார். இது உங்கள் நித்திய நலனுக்காக முக்கியமான கேள்விகள் என்பதால், இந்த இரண்டு பெரிய கேள்விகளுக்கான பதில்களை நாம் ஆராய்வோம்.

முதல் கேள்வி:  தேவன் இருக்கிறாரா? (is there a god?)

நாத்திகம் (Atheism) என்பது "தேவன் இல்லை" என்று சொல்லும் ஒரு தத்துவம். ஆனால், தேவன் இல்லையென்றால், நீங்கள் எப்படி உண்டாக்கப்பட்டிர்கள்? நாத்திகர்கள் பல்வேறு பதில்களைக் கொடுக்கிறார்கள்: “பிரபஞ்சம் என்றென்றும் இருந்தது" (ஆனால் விஞ்ஞானம் இதை மறுக்கிறது – பிக் பேங் தியரி). "ஒன்றுமில்லாமல் தானாகத் தோன்றியது" (இது அறிவுக்கு விரோதம் – "ஒன்றும் இல்லை" இருந்து "ஏதோ ஒன்று" வர முடியாது). "மல்டிவர்ஸில் (பல பிரபஞ்சங்கள்) இருந்து வந்தது" (இதற்கு ஆதாரம் எதுவும் இல்லை). ஆனால் இந்த விளக்கங்கள் அனைத்தும் தர்க்க ரீதியாகவும், அறிவியல் ரீதியாகவும், தத்துவ ரீதியாகவும் தோல்வியடைகின்றன. அதனால்தான் வேதம் கூறுகிறது: “தேவன் இல்லை என்று மதிகெட்டவன் தன் இருதயத்தில் சொல்லிக் கொள்ளுகிறான்” (சங்கீதம் 14:1). இது ஒரு அவமதிப்பாகத் தோன்றலாம், ஆனால் இது ஒரு உண்மை. தேவனுக்கான அதிகாரபூர்வமான ஆதாரங்களைப் புறக்கணித்தால் மட்டுமே ஒருவர் நாத்திகராக இருக்க முடியும். தேவன் இருக்கிறார் என்பதை நிரூபிக்கும் சில தொடர்ந்த கேள்விகளை நாம் பரிசீலிக்கலாம்.

எல்லாவற்றையும் உருவாக்கியது யார்? நீங்கள் இருக்கிறீர்கள் என்பது தெளிவான உண்மை. அதுபோலவே, பிரபஞ்சமும் இருக்கிறது என்பது தெளிவாகவே தெரிகிறது. ஆனால் அது எங்கிருந்து வந்தது? பல விஞ்ஞானிகள் அனைத்தும் “பிக் பாங்” எனப்படும் ஒரு பெரும் வெடிப்பில் தொடங்கியதாகக் கூறுகிறார்கள். ஆனால் இந்த செய்தி மற்றொரு கேள்வியை எழுப்புகிறது: அந்த பிக் பாங் எப்படி நிகழ்ந்தது? நீங்கள் அறிந்திருப்பது போல, எல்லாவற்றிக்கும் ஒரு காரணம் இருக்கிறது. தானாக எதுவும் உண்டாகாது, அதை உருவாக்கிய ஏதோ ஒன்று இருக்க வேண்டும். எனவே, பிரபஞ்சத்திற்கும் ஒரு காரணம் இருக்கவேண்டும். அனைத்தும் தொடங்க, ஒரு காரணமில்லாத முதல் காரணம் இருக்க வேண்டும். 

அந்த முதல் காரணம் தேவனே! தேவனின் தனித்தன்மை என்னவென்றால், அவர் மட்டுமே உருவாக்கப்படாதவர். அவர் தம்மைப் பற்றி மோசேயிடம் கூறுகிறார்:  “நான் இருக்கிறவராக இருக்கிறேன்”  (யாத்திராகமம் 3:14). நித்தியமான, உருவாக்கப்படாத தேவன் அனைத்தையும் உருவாக்கினார்: "ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்" (ஆதியாகமம் 1:1). தேவன் என்பது ஆரம்பமோ முடிவோ இல்லாதவர் என்பதால், அப்படிப்பட்ட ஒரே ஒரு இருப்பு மட்டுமே இருக்க முடியும். இரண்டு நித்திய தேவர்கள் இருந்தால், அது தர்க்கரீதியாக சாத்தியமில்லை. அனைத்திற்கும் மூலமாக இருக்கக்கூடிய ஒரே காரணமில்லாத காரணம் இருக்க வேண்டும். இதுவே “ஒரே தேவன்” என்ற கருத்து. மோனோத்தெயிசம் (Monotheism) அதாவது, ஒரே தேவன் மட்டுமே இருக்க முடியும் என்பதற்கான உண்மை. 

ஏன் படைப்பு ஒரு அழகான வடிவமைப்பைக் காட்டுகிறது? வானத்தின் மகிமையிலிருந்து DNA -யின் நுணுக்கங்கள் வரை, பிரபஞ்சத்தை நிர்வகிக்கும் இயற்பியல் விதிகளிலிருந்து தர்க்கத்தின் அடிப்படை விதிகள் வரை, ஒரு சிருஷ்டிகரின் (Creator) இருக்கையை நிரூபிக்கும் ஆதாரங்கள் அளவிட முடியாதவை! வேதம் கூறுகிறது: “வானங்கள் தேவனுடைய மகிமையை வெளிப்படுத்துகிறது, ஆகாயவிரிவு அவருடைய கரங்களின் கிரியையை அறிவிக்கிறது” (சங்கீதம் 19:1). நகர ஒளிகளிலிருந்து விலகி, தொலைவில் ஒரு இரவை கழித்து வானத்தை நோக்கிப் பாருங்கள். பிரபஞ்சத்தின் அழகு உங்களை வியப்பில் ஆழ்த்தும். அந்த வியப்பு உங்களை ஒரு உண்மையை நோக்கி அழைத்துச் செல்லும்: உண்மையாவே படைத்தவர், படைப்பை விட மகிமைமிக்கவர். ஏனெனில், ஏதாவது ஒன்றை உருவாக்கும் ஒருவர், அவர் உருவாக்கியதை விட உயர்ந்தவர். படைப்பு என்பது ஒரு பிரசங்கம் போல இருக்கிறது. அது கூறுகிறது: “தேவன் இருக்கிறார்.” வேதம் மேலும் கூறுகிறது: “எப்படியென்றால், காணப்படாதவைகளாகிய அவருடைய நித்தியவல்லமை தேவத்துவம் என்பவைகள், உண்டாக்கப்பட்டிருக்கிறவைகளினாலே, உலகமுண்டானதுமுதற்கொண்டு, தெளிவாய்க்காணப்படும்; ஆதலால் அவர்கள் போக்குச்சொல்ல இடமில்லை” (ரோமர் 1:20). மாறாகச் சொல்வதானால், படைக்கப்பட்ட உலகம், படைப்பாளியை மறுப்பதற்கான எந்த காரணமும் இல்லை. 

நீதி (Morality) எங்கிருந்து வருகிறது? ஒவ்வொரு நாட்டிலும், நீதி மற்றும் நல்லொழுக்கம் பற்றிய ஒரு உணர்வு உள்ளது.  சில வேறுபாடுகள் இருந்தாலும், பெரும்பாலான ஒப்புமைகள் உள்ளன. சமூகங்கள் கொலை, திருட்டு, பொய்சாட்சியம் ஆகியவற்றுக்கு எதிரான சட்டங்களை கொண்டுள்ளன. உலகம் முழுவதும் மக்கள், “விபச்சாரம் தவறு” என்று கூறுகிறார்கள் ஏன்? ஏனெனில் படைப்பாளர் தனது நீதிச்சட்டத்தை மனிதனின் இதயத்தில் எழுதினார் மற்றும் நல்லது – தவறு என்பதை சாட்சியமாகக் கூறும் ஒரு மனச்சாட்சியை மனிதனுக்கு அளித்தார். நாம் தேவனின் நீதிச்சட்டத்தை மீறும்போது, வேதம் அதை “பாவம்” என அழைக்கிறது. (1 யோவான் 3:4) அப்போது, நம் மனச்சாட்சி நம்மை சஞ்சலப்படுத்துகிறது. வேதம் இதைப் பற்றி: “அவர்களுடைய மனச்சாட்சியும் கூடச் சாட்சியிடுகிறதினாலும், குற்றமுண்டு குற்றமில்லையென்று அவர்களுடைய சிந்தனைகள் ஒன்றையொன்று தீர்க்கிறதினாலும், நியாயப்பிரமாணத்திற்க்கேற்ற கிரியை தங்கள் இருதயங்களில் எழுதியிருக்கிறதென்று காண்பிக்கிறார்கள்” (ரோமர் 2:15). தேவன் இருக்கிறார் என்பதால்தான் நன்மை -தீமைக்கு ஒரு நிலையான அளவுகோல் இருக்கிறது. 

ஏன் எல்லா மனிதர்களும் ஒரு தேவனை அறிந்திருக்கிறார்கள்? உலகம் முழுவதும் மக்கள் தங்கள் தெய்வங்களை வழிபடுகிறார்கள், பிரார்த்தனை செய்கிறார்கள். இது ஒரு நடக்காத காரியம் அல்ல. மனிதனின் ஆன்மாவிலும், படைக்கப்பட்ட உலகத்திலும் தேவன் தான் இருக்கிறார் என்பதற்கான சாட்சிகளை கொடுத்திருக்கிறார். அதனால், அனைத்து மனிதர்களும் ஒரு உன்னத அந்தஸ்து (Supreme Being) இருக்கிறது என்பதை தங்களில் அறிந்திருக்கிறார்கள். இந்த அறிவுடன், நாம் அவருக்கு வழிபாடு, மரியாதை மற்றும் விசுவாசம் காட்ட வேண்டும் என்ற உணர்வும் வருகிறது. குறிப்பாக, நாம் மிகுந்த ஆபத்து அல்லது சிரமத்தில் இருக்கும் போது, இந்த உணர்வு மேலும் வலுப்பெறுகிறது. அதனால்தான் பழமொழி ஒன்று கூறுகிறது: “போர்குழிகளில் நாத்திகர்கள் யாரும் இல்லை”.

கடைசியாக, வாழ்க்கையின் நோக்கம் என்ன? நாத்திகவாதத்தின் முடிவை சிந்தியுங்கள்: நீங்கள் இறந்து விடுகிறீர்கள், பின்னர் எதுவும் இல்லை. மறுபிறவி இல்லை, தொடரும் சிந்தனையும் இல்லை — வெறும் பூஜ்யம். அப்படியானால், வாழ்க்கையே ஒரு நோக்கமற்றது என்று கேட்க வேண்டிய நிலை ஏற்படுகிறது! மனிதனின் சாதனைகள் மற்றும் நினைவுகள் அனைத்தும் மறைந்து போய்விடும். 

சமயசார்பற்ற விஞ்ஞானிகள் (secular scientists) கூறுவதுபோல், பிரபஞ்சம் "வெப்ப இறப்பில்" (heat death) முடியும் — ஒரு பெரும் சத்தத்துடன் அல்ல, மாறாக, மெதுவாக குளிர்ச்சியான வெறுமையில் கரைந்து போகும். நாஸ்திகவாதம் என்பது நம்பிக்கையற்ற ஒரு தத்துவம், இது விரக்திக்கு வழி வகுக்கிறது. இந்த தத்துவத்தை நிலைநிறுத்த முடியாதது மட்டுமல்ல, கடுமையான விளைவுகளையும் கொண்டுவருகிறது. தேவன் இல்லையென்றால், பின்வரும் உண்மைகள் ஏற்படும்:

வாழ்க்கைக்கு இறுதியான அர்த்தம் இல்லை.
நன்மை - தீமைக்கு நிலையான அளவுகோல் இல்லை.
மரணத்திற்கு அப்பால் எந்த நம்பிக்கையும் இல்லை.

இந்த உண்மைகள் ஒரு இருண்ட படத்தை வரைவதோடு மட்டுமல்லாமல், நாம் உண்மையாகவே அறிந்துள்ள சாட்சிகளுக்கும் முரணாக இருக்கின்றன. “தேவன் இருக்கிறாரா?” என்ற பெரிய முதல் கேள்விக்கு நாம் உறுதியுடன் “ஆம், ஒரு தேவன் இருக்கிறார்” என்று பதிலளிக்கலாம். இப்போது, இரண்டாவது பெரிய கேள்வியை சிந்திக்கலாம்:

முதல் கேள்வி: யார் அந்த தேவன்? (which god?)

இது மிகவும் முக்கியமான கேள்வி. தேவன் இருக்கிறார் என்பதை நம்புவது மட்டும் போதாது; அவர் யார் என்பதை அறிந்திருக்க வேண்டும். பல மதங்கள் உள்ளன, ஆனால் அவை ஒருவருக்கொருவர் முரணான கருத்துகளை முன்வைக்கின்றன. சிலர் கோடிக்கணக்கான தேவர்கள் உள்ளனர் என்கிறார்கள். மற்றவர்கள் எல்லாம் தெய்வீகமானவை என்றும், நீங்கள் கூட தேவனாக மாறலாம் என்றும் கூறுகிறார்கள்.

  உதாரணமாக இந்துமதத்தை எடுத்துக்கொள்ளுங்கள். இந்துமதம் அனைத்து மதப் பாதைகளும் தேவனை நோக்கிச் செல்கின்றன எனக் கூறுகிறது. ஆனால், இயேசு கூறினார்: “நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்” (யோவான் 14:6). மேலும், இந்துமதம் எல்லா பொருட்களும் தேவனின் ஒரு பகுதியாகவே இருக்கின்றன எனக் கூறுகிறது. அதனால், எதையும் வழிபடலாம். இந்தக் கோட்பாட்டை நிலைநிறுத்தத்துவதற்கு  உங்களையும் உட்பட அனைத்தையும் வழிபட வேண்டும்.

இதைவிட வேறுபட்டது கிறிஸ்தவம். கிறிஸ்தவம் தேவனுக்கும் அவரது படைப்புக்கும் இடையேயான தெளிவான வேறுபாட்டை வலியுறுத்துகிறது. நீங்கள் தெய்வீகமானவர் அல்ல. நீங்கள் பாவம் செய்கிறீர்கள். மேலும், தேவனுக்கே உரிய தனித்துவமான, பரிசுத்தமான, என்றென்றும் இருப்பவர் போன்ற பண்புகளை நீங்கள் கொண்டிருக்கவில்லை. நீங்கள் ஒரு தொடக்கத்துடன் பிறந்தவர்; நீங்கள் முடிவுள்ளவர்.

முரண்தன்மையற்ற விதியின் அடிப்படையில், கிறிஸ்தவமும் இந்து மதமும் இரண்டும் ஒரே நேரத்தில் உண்மையாக இருக்க முடியாது. இதேபோன்ற ஒரு பகுப்பாய்வை மற்ற மதங்களுடனும் செய்யலாம். இஸ்லாமும் யூத மதமும் தேவன் ஒருவரே என்றும், மனிதன் நற்செயல்களால் (works) மீட்படைகிறான் என்றும் போதிக்கின்றன. ஆனால் கிறிஸ்தவம் however, தேவன் ஒருவரே ஆனால் மூன்று ஆள்களாக (திரித்துவம்) உள்ளார் என்று போதிக்கிறது: பிதா, மகன் (இயேசு கிறிஸ்து), மற்றும் பரிசுத்த ஆவி. இந்த மூவரும் ஒரே சாராம்சம், சமமான அதிகாரம் மற்றும் மகிமை கொண்டவர்கள் (1 யோவான் 5:7). மேலும், கிறிஸ்தவம் மனிதன் கிருபையால் மட்டுமே (grace alone) இரட்சிக்கப்படுகிறான் (எபேசியர் 2:8–9) என்று போதிக்கிறது. எனவே, இஸ்லாம், யூத மதம், மற்றும் கிறிஸ்தவம் அனைத்தும் ஒரே நேரத்தில் சரியாக இருக்க முடியாது.

ஏன் இத்தனை முரண்பாடுகள்? ஒரே காரணம், இது சாத்தானின் திட்டம். அவன் மெய்யான தேவனின் மகிமையை குறைக்கும் நோக்கில் போலியான மதங்களை பரப்ப விரும்புகிறான். ஆனால் நம்மை மகிழ்விக்க, தேவன் நம்மிடம் தன்னை வெளிப்படுத்தியிருக்கிறார்.

வேதாகமம் உலகத்திற்கு தேவனை வெளிப்படுத்துகிறது. தேவன் மாபெரும் கிருபையால், வேதாகமத்தில் தன்னை வெளிப்படுத்தியுள்ளார் மற்றும் அதை எல்லா காலங்களிலும் பாதுகாப்பதாக வாக்குறுதியளித்துள்ளார். வேதம் அறுபத்து ஆறு புத்தகங்களை கொண்டது, அதனால் இது "புத்தகங்களின் புத்தகம்" என அழைக்கப்படுகிறது. வேதத்தின் தன்மைகள் இதை மற்ற எல்லா மத நூல்களையும் விட தனித்துவமானதாக காட்டுகின்றன. இது பரிசுத்த ஆவியால் ஊதப்பட்டதாகும்; பரிசுத்த ஆவி என்பது தேவன். தேவன் சுமார் நாற்பது நபர்களை 1,500 ஆண்டுகளாக ஊக்குவித்து, தன்னை மனிதனுக்கு வேதவசனத்தின் மூலமாக வெளிப்படுத்தினார்.

வேதத்தில், தேவன் தாம் யார் என்பதைவும், நம்மிடம் என்ன எதிர்பார்க்கிறார் என்பதையும் வெளிப்படுத்துகிறார். சிருஷ்டிப்பிலும், பாரமரிப்பிலும் அவர் எவ்வாறு செயல்படுகிறார் என்பதைக் காட்டுகிறார் (அவர் பிரபஞ்சத்தை எவ்வாறு நிர்வகிக்கிறார்). அவர் பரிசுத்தமானவர் என்று தன்னை வெளிப்படுத்துகிறார். மரணம் உலகில் எப்படி வந்தது, நாம் ஏன் துயரங்களை அனுபவிக்கிறோம், மனிதன் எவ்வளவு முயற்சி செய்தாலும் அவன் தொடும் எல்லாவற்றையும் குழப்பமாக்குகிறான் என்பதற்கான காரணத்தை விளக்குகிறார். காரணம், அனைவரும் பாவம் செய்துள்ளனர்; தேவனின் மகிமைக்கு குறைவாக உள்ளனர் (ரோமர் 3:23).

பாவத்தின் காரணமாக, தன் நீதியான இயல்பின் காரணமாக, பாவிகளை நித்திய தண்டனைக்கு தீர்ப்பு அளிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். அவர் நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே தீர்க்கதரிசனங்களை அறிவித்தார், அவற்றில் மிக முக்கியமானவை தேவனின் நேச குமரனின் வாழ்க்கை, மரணம், அடக்கம் மற்றும் உயிர்த்தெழுதல் பற்றியவையாகும்.

இயேசு கிறிஸ்து உலகத்திற்கு தேவனை வெளிப்படுத்துகிறார். தேவனாகிய பிதா, தேவனுடைய குமாரனாகிய இயேசுவை நாம் அறிந்துகொள்ள விரும்புகிறார். பாவிகளை இரட்சிக்கும் அன்போடு, அவர் பாவமில்லாதத் தன்னில் மனித இயல்பை ஏற்றுக்கொண்டார். வேதத்தில், இயேசு பாவிகளுக்குப் பதிலாக எவ்வாறு துன்புற்றார், மரணமடைந்தார், அவர்களின் பாவங்களுக்கு எவ்விதம் தன்னை பலியாக கொடுத்தார் என்பது விளக்கப்பட்டுளது.

வேதாகமம் தேவனின் அன்பையும் இரக்கத்தையும் வெளிப்படுத்துகிறது. அவர் தம்முடைய மக்களுக்கு அன்பை இவ்வாறு காட்டுகிறார்: “நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார்” (ரோமர் 5:8).
இயேசு சிலுவையிடப்பட்ட அந்தச் சிலுவையில், தேவகுமாரனின் மரணத்தில் தெய்வீக அன்பை நீங்கள் காண்பீர்கள்.

இயேசு கிறிஸ்துவின் மூலமாக நீங்கள் தேவனை அறிந்துகொள்ள முடியும், ஏனென்றால் அவரே தேவன். கிறிஸ்து பாவிகளுக்கு நித்திய ஜீவனை ஒரு பரிசாக விசுவாசத்தின் மூலம் வழங்க வந்தார்:  “கிருபையினாலே விசுவாசத்தைக்கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு; ஒருவரும் பெருமைபாராட்டாதபடிக்கு இது கிரியைகளினால் உண்டானதல்ல;” (எபேசியர் 2:8–9). அவர் இதை தான் நேசிக்கும் தன் மக்களை அவருடன் என்றென்றும் பரலோகத்தில் வாழ்வதற்காக செய்தார்.

தேவன் இந்த பரிசை தன்னுடைய ஒரே பேரான குமாரனாகிய  இயேசு மூலமாக உங்களுக்கு இலவசமாக வழங்குகிறார். தாழ்மையுடன் வேதத்தை திறந்து, பரிசுத்த ஆவி உங்கள் கண்களுக்கு தேவனை அவரது குமாரனின் மூலம் காட்டுமாறு ஜெபியுங்கள். இயேசு கிறிஸ்துவின் மேல் நம்பிக்கை வையுங்கள். இலவசமாய் நித்திய ஜீவனைப் பெறுங்கள். “இயேசு தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நீங்கள் விசுவாசிக்கும்படியாகவும், விசுவாசித்து அவருடைய நாமத்தினாலே நித்தியஜீவனை அடையும்படியாகவும், இவைகள் எழுதப்பட்டிருக்கிறது” (யோவான் 20:31).

(இந்த கட்டுரையின் ஆசிரியர்: போதகர் ரோமேஷ் பிரகாஷ்பாலன் அவர்கள் விர்ஜீனியாவின் ஃப்ரெடரிக்ஸ்பர்க் நகரில் உள்ள சியோன் பிரெஸ்பிடேரியன் சபையில் போதகராக பணியாற்றுகிறார். ஆசிரியரின் இணையதளத்தை பார்வையிட: https://www.grangepress.com/one-thing-needful/)

 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.