நற்செய்தி

பொன்னையும் வெள்ளியையும் விட மேலானது, இயேசு கிறிஸ்துவின் மூலம் கிடைக்கும் சமாதானமும் விடுதலையும்
ஆசிரியர்: A. அருள்நேசன்
வாசிப்பதற்கான நேரம்: 3 நிமிடங்கள்

தினந்தோறும் பிரச்சனையோடு இருக்கும் ஒரு மனிதனை கற்பனை செய்து பாருங்கள். பரிசுத்த வேதத்தில் பிறவியிலேயே கால்கள் ஊனமான ஒரு மனிதனைப் பற்றிய சம்பவம் உள்ளது. அவன் நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக நடக்க முடியாதவனாய் இருந்தான். தேவாலயத்திற்குள் செல்லுகிறவர்களிடத்தில் பிச்சை கேட்பதற்காக, அவனுடைய நண்பர்கள் தினமும் அவனை தேவாலயத்தின் வாசலிலே உட்கார வைப்பார்கள். அவன் உயிர் பிழைப்பதற்காக மற்றவர்களிடம் பிச்சை கேட்டு வாழ்ந்து கொண்டிருந்தான்.

 

ஒரு நாள் இயேசுவின் சீடர்களாகிய பேதுருவும் யோவானும் அந்த வழியாகச் சென்றார்கள். அந்த மனிதன் தனக்கு ஏதாவது பணம் கிடைக்கும் என்று எதிர்பார்த்து அவர்களை நோக்கினான். அந்த நாளைக் கடத்துவதற்கு அவனுக்கு பணம் தேவைப்பட்டது. ஆனால் பேதுரு அவனை உற்றுப்பார்த்து, அவன் வாழ்க்கையை மாற்றும் வார்த்தைகளை அவனிடம் சொன்னார்:

"வெள்ளியும் பொன்னும் என்னிடத்திலில்லை; என்னிடத்திலுள்ளதை உனக்குத் தருகிறேன்; நசரேயனாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே நீ எழுந்து நட" (அப்போஸ்தலர் 3:6)

உடனே அவனுடைய கால்களும் கணுக்கால்களும் திடன் பெற்று அவன் எழுந்து நின்றது மட்டுமல்லாமல், குதித்தெழுந்து நடந்தான்! அவன் அவர்களுடனே தேவாலயத்திற்குள் பிரவேசித்து, நடந்து, குதித்து, தேவனைத் துதித்தான்.

இந்தக் உண்மைச் சரித்திரம் வெறும் சரீர சுகத்தைப் பற்றியது மட்டுமல்ல. இது நம்முடைய ஆவிக்குரிய நிலையை உணர்த்தும் ஒரு ஓப்புமை.

  1. அந்த முடவன் நம்மைப் போன்றவன்

அந்த மனிதனைப் போலவே, நாமும் நம்மால் சரிசெய்ய முடியாத ஒரு ஆவிக்குரிய நிலையுடன் பிறந்திருக்கிறோம். பாவம் கடவுளுடனான நம் உறவை "முடக்கியிருக்கிறது" என்று வேதாகமம் நமக்குச் சொல்லுகிறது. இந்த உலகத்தில் முதல் மனிதனான ஆதாமினுடைய மீறுதலினால் மனித இனத்தை பாவம் சூழ்ந்துக்கொண்டது. பாவம் நிறைந்த மனிதன் தன்னுடைய சொந்த முயற்சியினலோ நல்ல காரியங்களை செய்து அவன் வாழ்வதற்கு முயற்சிக்கலாம். அதெல்லாம் ஏமாற்றத்தில் மட்டுமே முடிகின்றது. நாமும் அந்த முடவனைப் போலவே உதவி அற்றவர்களாக இருக்கிறோம்.

நம்மை சுற்றி இருக்கும் சூழ்நிலைகளை பாருங்கள். உதாரணமாக நமது சமூகத்தில் மது எவ்வளவு பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது என்று பாருங்கள். இன்றைய இளைஞர்கள் 13-14 வயதிலே ஆரம்பித்து விடுகிறார்கள் என ஒரு அறிக்கை சொல்கிறது. இதன் மூலம் பெண்களுக்கும், குடும்பத்திற்கும், பிள்ளைகளுக்கும் எவ்வளவு பிரச்சனை. உழைக்காமல் இருப்பது, கடன் வாங்குவது, ஏமாற்றுவது, பொறுப்பில்லாமல் இருப்பது இப்படி எண்ணற்ற நம்முடைய அனுதின பிரச்சனையை நாம் பட்டியலிடலாம். 

ஒருவேளை நமக்கு எல்லாம் சரியாக இருந்தாலும் நம்முடைய ஆத்துமாவின் ஆழமான ஏக்கத்தைத் தணிக்க பெரும்பாலும் "பொன்னையும் வெள்ளியையும்" தேடுகிறோம். ஆனால் இவைகளில் எதுவும் உள்ளத்தில் இருக்கும் உடைந்த நிலையைச் சரிசெய்ய முடியாது. நம்மை படைத்த கடவுளிடம் நம்மை கொண்டு சேர்க்காது.

  1. கர்த்தராகிய இயேசுவின் மூலம் இந்த பிரச்சனையை சரி செய்ய முடியும்

இந்த அற்புதம் "நசரேயனாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே" நடந்தது.

உடைந்தவற்றைச் சீர்படுத்தக்கூடியவர் இயேசு மட்டுமே! அவர் நம்முடைய பாவங்களுக்காக சிலுவையில் மரித்து, நமக்கு புது வாழ்வைக் கொடுப்பதற்காக மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்தார். அவர் அந்த முடவனின் கால்களுக்கு எப்படிப் பெலனைக் கொடுத்தாரோ, அப்படியே நம்முடைய சோர்ந்துபோன ஆத்துமாக்களுக்கும் பெலனைக் கொடுக்கிறார். அவர் நம் கடந்த காலத்தை மன்னித்து, நமக்கு ஒரு எதிர்காலத்தைக் கொடுக்கிறார். 

பேதுரு அங்கு கூடியிருந்த கூட்டத்தாரிடம் கூறினார்:

"உங்கள் பாவங்கள் நிவிர்த்தி செய்யப்படும்பொருட்டு நீங்கள் மனந்திரும்பி குணப்படுங்கள்; கர்த்தருடைய சந்நிதானத்திலிருந்து இளைப்பாறுதலின் காலங்கள் வரும்." (அப்போஸ்தலர்3:19)

அவருடைய கரத்தைப் பற்றிக்கொள்வீர்களா?

பேதுரு தன் கையை நீட்டி அந்த மனிதனைத் தூக்கிவிட்டார். இன்று, இயேசு தம்முடைய கரத்தை உங்களை நோக்கி நீட்டுகிறார். அவர் உங்களுக்கு வெறும் "பொன்னையும் வெள்ளியையும்" அல்லது ஒரு தற்காலிகத் தீர்வை மட்டும் வழங்கவில்லை. அவர் உங்களுக்கு வழங்குவது:

  • முழுமையான மன்னிப்பு: உங்கள் பாவங்கள் அனைத்தும் கழுவப்படும்.
  • புதிய வாழ்வு: புதிய வாழ்க்கையை நோக்கி செல்வதற்கான வல்லமை.
  • நித்திய நம்பிக்கை: கடவுளோடு என்றென்றும் நிலைத்திருக்கும் உறவு.

நீங்கள் இன்னும் பிரச்சனையோடு இருக்க வேண்டிய அவசியமில்லை. கர்த்தருக்குள் இருக்கும் உண்மையான மகிழ்ச்சிக்குள் நீங்கள் பிரவேசிக்கலாம்.

கிறிஸ்துவை நோக்கி மன்றாடுவதற்கான ஜெபம்: "ஆண்டவராகிய இயேசுவே, அந்த வாசல் படியில் இருந்த முடவனைப் போலவே நானும் ஆவிக்குரிய ரீதியில் உடைந்துபோய், என்னை நானே காப்பாற்றிக்கொள்ள முடியாத நிலையில் இருக்கிறேன் என்பதை ஒத்துக்கொள்கிறேன். உலகப் பொருட்களில் திருப்தியைத் தேடினேன், ஆனால் அவை எனக்கு சமாதானம் இல்லை. நீர் என் பாவங்களுக்காக மரித்து உயிர்த்தெழுந்தீர் என்று நான் விசுவாசிக்கிறேன். என் இதயத்தைக் குணமாக்கி, என் பாவங்களை மன்னித்து, இன்று முதல் உம்மோடு நடக்க எனக்கு உதவும். இயேசுவின் நாமத்தில், ஆமென்."

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவில் நாங்கள் அனுபவிக்கும் மாபெரும் ஆசிர்வாதமான பாவமன்னிப்பையும் நன்மைகளையும் நீங்களும் அனுபவிக்க வேண்டுமென்று விரும்புகின்றோம். இந்த நல்ல ஆண்டவர் நீங்கள் எந்த சூழ்நிலையில் இருந்தாலும் உங்களை சரிபடுத்த வல்லவர். உங்களுக்கு நிச்சயம் சமாதானத்தையும் ஆறுதலையும் அளிப்பார். உங்களின், உங்கள் குடும்பத்தின், உங்கள் பிள்ளைகளின், நமது சமுதாயத்தின் நன்மைக்காக இன்றே அவரிடம் வாருங்கள். உங்களுக்கு சமாதானம் உண்டாகட்டும்.

 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.