முதல் பகுதியில் தேவனுடைய சித்தத்தை அறிந்துக்கொள்ளும் முக்கியமான இரகசியத்தை மிக தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக எழுதப்பட்டுள்ள இந்த இரண்டாம் பாகத்தைப் வாசிக்கும் முன், கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலம் "தேவனின் சித்தத்தைக் கண்டறிதல் பாகம் - 1" என்ற கட்டுரையைப் வாசிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தேவனின் சித்தத்தை கண்டறிதல் - பகுதி 1
என்னுடைய வாழ்வில் தேவனுடைய சித்தம் என்ன? இந்த கேள்வியால் பலர் குழப்பமடைந்துள்ளனர். இது ஒரு பெரிய மர்மமாகவும் & இரகசியமாகவும் அவர்களுக்கு தெரிகிறது. நான் எந்த பணியை செய்வது தேவனுடைய சித்தம்? அல்லது இப்போது செய்துவரும் பணியில் தொடருவது தேவனின் சித்தமா? நான் ஒரு குறிப்பிட்ட நபரை திருமணம் செய்வது தேவனின் சித்தமா? எனது குடும்பம் இப்பகுதியில் இருக்க வேண்டுமா அல்லது வெளியூர் செல்ல வேண்டுமா? இதுபோன்ற பல கேள்விகளில், தேவனுடைய சித்தத்தை அறிந்து அதற்கு மட்டுமே கீழ்ப்படிய வேண்டும் என்ற உண்மையான விருப்பத்துடன், தேவனின் சித்தத்தைக் கண்டறிய மனிதர்களால் உருவாக்கப்பட்ட பல தவறான வழிகளை அவர்கள் நாடுகிறார்கள். உதாரணமாக: சீட்டு போடுவது, தேவன் வாய்மொழியாக பேசுகிறாரா? என்பதை சுற்றியுள்ள சூழ்நிலைகளில் இருந்து கண்டறிதல். ஜெபம் செய்யும் போது, சமாதானத்தையும், நிம்மதியும் அனுபவித்தல், தேவனின் மென்மையான குரலைக் கேட்பது மற்றும் இதுப்போன்ற பல முறைகளை கையளுவாதால் 'இதுவே தேவனின் சித்தம்' என்ற முடிவுக்கு அவர்கள் வருகிறார்கள். ஆனால் அத்தகைய முறைகள் எதுவும் தேவனுடைய வார்த்தை நமக்கு கற்பிக்கப்படவில்லை. நம் அன்றாட வாழ்க்கையில் நாம் எடுக்கும் பல முடிவுகளில் எது தேவனுடைய சித்தம் என்பதை எப்படி அறிந்துக்கொள்வது?
இதுபோன்ற காரியங்களைப் பற்றி வேதத்தில் எதுவும் குறிப்பிடப்படாததால், நமக்கு தோன்றுகிறப்படி என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று சிலர் கூறுகிறார்கள். இவை கிறிஸ்துவில் நமக்குள்ள சுதந்திரம் என்கிறார்கள். உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எடுக்க வேண்டிய ஒவ்வொரு முடிவுகளிலும், 'இதுவே தேவனுடைய சித்தம் என்று வேதத்தில் எங்கும் எழுதப்படவில்லை என்பது உண்மைதான். கிறிஸ்துவில் நமக்கு விடுதலை & சுதந்திரம் உள்ளது. ஆனால் தேவனுடைய வார்த்தையின் வரம்புகளுக்குள் மட்டுமே நாம் நமது சுதந்திரத்தைப் பயன்படுத்த வேண்டும்.
தங்கம், வெள்ளி, பித்தளை போன்ற உலோகங்களால் எந்தப் பொருளையும் தயாரிக்கும் போது, முதலில் ஒரு அச்சு தயாரிக்கப்படும் போது, உருகிய உலோகத்தை அந்த அச்சுக்குள் ஊற்ற வேண்டும். நெருப்பு குழம்பாக இருக்கும் அது சூடு தணிந்த பிறகு அது கடினப்படுத்தப்பட்ட உலோகமாக அச்சிலிருந்து அகற்றப்படும் போது, அது அச்சு வடிவத்துடன் சரியாக ஒத்துப்போகிறது. அவ்வாறே, வேதத்தின் வடிவில் தேவனுடைய வார்த்தையின் வடிவத்தை தேவன் நமக்கு அருளியுள்ளார். அந்த அச்சு பல்வேறு கொள்கைகள் மற்றும் விதிகளுடன் செய்யப்படுகிறது. நீங்கள் உலோகம், மெழுகு அல்லது பிளாஸ்டிக் பயன்படுத்துகிறீர்களா என்பது உங்களுடைய விருப்பம், நீங்கள் அதை உருக்கி அந்த அச்சுக்குள் ஊற்றினால், அது அந்த அச்சு வடிவத்திற்கு வர வேண்டும். நீங்கள் அதற்கு ஏற்ற அத்தகைய பொருளை தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். ஆனால் கற்கள் மற்றும் மரம் போன்றவற்றை அச்சு வடிவில் உருக்க முடியாது, எனவே அத்தகைய பொருட்களை தேர்வு செய்யக்கூடாது. இங்கே உலோகம் மற்றும் மெழுகு ஆகியவை தேவனுடைய வார்த்தையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட விஷயங்கள், தேவ வார்த்தையின் விதிகளுக்கு இணங்கக்குடியவைகள். நாம் இதை செய்ய முடியும். கற்களும், மரமும் முரண்பாடான விஷயங்கள், வேத வார்த்தையின் விதிகளுக்கு இணங்காத விஷயங்கள். இதை நாம் செய்யக்கூடாது. நம்முடைய அன்றாட வாழ்க்கையில் நாம் எடுக்கும் ஒவ்வொரு தீர்மானத்திற்கும் தேவையான கொள்கைகளையும், விதிகளையும் தேவன் வேதத்தில் கொடுத்துள்ளார். அப்படியானால் அவைகளை எப்படி அறிவது? இது மிகவும் எளிமையானது. அதை சில உதாரணங்களுடன் உங்களுக்கு விளக்க முயற்சி செய்கிறேன்.
முதலாவதாக, உங்கள் தீர்மானத்தின் மூலம் ஆத்மீக ரீதியில் உங்களுக்குப் பயன் இருக்கிறதா?
"எல்லாவற்றையும் அநுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு, ஆகிலும் எல்லாம் தகுதியாயிராது; எல்லாவற்றையும் அநுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு, ஆகிலும் எல்லாம் பக்திவிருத்தியை உண்டாக்காது." (1 கொரிந்தியர் 10:23).
‘எல்லாம் தகுதியாயிராது’ என்ற வார்த்தைக்கு 'எல்லாம் நன்மைக்காக அல்ல, 'எல்லாம் நமக்கு ஆதாயம் தராது.’ என்ற அர்த்தம் வருகிறது. மேலும், ‘பக்திவிருத்தியை’ என்ற இந்த வார்த்தையின் அந்த சூழலை புரிந்துக் கொண்டால், அப். பவுல் ஆத்மீக நல்வாழ்வைப் பற்றி பேசுகிறார் என்பது நமக்கு புரியும். எனவே இந்த வசனத்தின்படி உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள். நீங்கள் எடுக்கும் இந்த முடிவு, நீங்கள் செய்ய விரும்பும் இந்த வேலை உங்கள் ஆத்மீக நல்வாழ்வின் வளர்ச்சிக்கு ஏதேனும் பயனளிக்குமா? அது உங்கள் ‘பக்திவிருத்தியை’ வளர்க்குமா? ஆத்மீக வளர்ச்சிக்கு இது உதவுமா? இல்லையெனில், அது உங்களுக்கு ஆத்மீக பாதிப்பை ஏற்படுத்தினால், அத்தகைய முடிவை எப்போதும் எடுக்கவே கூடாது.
இரண்டாவதாக, நீங்கள் எடுக்கும் இந்த முடிவு உங்களை எதற்காவது அடிமையாக்கிறதா?
“எல்லாவற்றையும் அநுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு, ஆகிலும் எல்லாம் தகுதியாயிராது; எல்லாவற்றையும் அநுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு, ஆகிலும் நான் ஒன்றிற்கும் அடிமைப்படமாட்டேன்.” (1 கொரிந்தியர் 6:12).
இந்த வசனத்தின் இரண்டாம் பகுதியில் அப். பவுல் கூறுகிறார் – “எல்லாவற்றையும் அநுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு, ஆகிலும் நான் ஒன்றிற்கும் அடிமைப்படமாட்டேன்.” நீங்கள் எடுக்கும் முடிவு அல்லது நீங்கள் செய்ய விரும்பும் ஒரு செயல் உங்களுக்கு அடிமையாக மாறும் சாத்தியம் இருந்தால், கவனமாக இருங்கள். நீங்கள் இயேசு கிறிஸ்துவுக்கு மட்டுமே அடிமையாக & கீழ்படிந்து இருக்கிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
மூன்றாவதாக, நீங்கள் எடுக்கும் இந்த முடிவு தேவனின் ஆலயத்தை தீட்டுப்படுத்துகிறதா?
"உங்கள் சரீரமானது நீங்கள் தேவனாலே பெற்றும் உங்களில் தங்கியும் இருக்கிற பரிசுத்த ஆவியினுடைய ஆலயமாயிருக்கிறதென்றும், நீங்கள் உங்களுடையவர்கள் அல்லவென்றும் அறியீர்களா? கிரயத்துக்குக் கொள்ளப்பட்டீர்களே; ஆகையால் தேவனுக்கு உடையவைகளாகிய உங்கள் சரீரத்தினாலும் உங்கள் ஆவியினாலும் தேவனை மகிமைப்படுத்துங்கள்." (1 கொரிந்தியர் 6:19,20).
இந்த சந்தர்ப்பத்தில் அப். பவுல் விபச்சாரத்தைப் பற்றி விசுவாசிகளை எச்சரிக்கையில், விபச்சாரம் செய்பவர் தனது சொந்த சரீரத்திற்கு எதிராக பாவம் செய்கிறார் என்று கூறுகிறார், மேலும் இந்த வசனங்களில் அவ்வாறு செய்வது எப்படி பாவம் என்பதை விளக்குகிறார்.
- உங்களுக்கு சரீரத்தை கொடுத்தவர் தேவன்.
- உங்கள் சரீரம் பரிசுத்த ஆவியின் ஆலயம்.
- நீங்கள் உங்களுடையவர்கள் அல்லவென்றும் கிரயத்துக்குக் கொள்ளப்பட்டீர்களே;
இந்த காரணங்களுக்காக உங்கள் சரீரத்தை நீங்கள் விரும்பியதைச் செய்ய முடியாது. தேவனை மகிமைப்படுத்த மட்டுமே உங்கள் சரீரம் உங்களுக்கு வழங்கப்பட்டது. உங்கள் சரீரத்திற்கு தீங்கு விளைவிக்கும் எதையும் நீங்கள் செய்ய கூடாது என்று அப். பவுல் கூறுகிறார். இதே காரியத்தை ரோமர் நிருபகளில் குறிப்பிடுகிறார். "நீங்கள் உங்கள் அவயவங்களை அநீதியின் ஆயுதங்களாகப் பாவத்திற்கு ஒப்புக்கொடாமல், உங்களை மரித்தோரிலிருந்து பிழைத்திருக்கிறவர்களாகத் தேவனுக்கு ஒப்புக்கொடுத்து, உங்கள் அவயவங்களை நீதிக்குரிய ஆயுதங்களாகத் தேவனுக்கு ஒப்புக்கொடுங்கள்.” (ரோமர் 6:13) நீங்கள் எடுக்கும் முடிவு எப்படிப்பட்டது அது உங்கள் சரீரதிற்குத் தீங்கு விளைவிக்கூடியதா? அல்லது உன் சரீரத்தின் அவயவங்களை அநீதியின் ஆயுதங்களாகப் பாவத்திற்கு ஒப்புக்கொடுக்கீர்களா? மாறாக உங்கள் சரீரங்களை நீதியின் ஆயுதங்களாகப் பயன்படுத்தி தேவனை மகிமைப் படுத்துகிறீர்களா? நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முடிவிலும், நீங்கள் செய்யும் பணியிலும் தேவனை கணம் பண்ணவேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
நான்காவதாக, நீங்கள் எடுக்கும் இந்த முடிவால் அது யாரையாவது அது புண்படுத்துகிறதா?
"போஜனமானது நம்மைத் தேவனுக்கு உகந்தவர்களாக்கமாட்டாது; என்னத்தினாலெனில், புசிப்பதினால் நமக்கு ஒரு மேன்மையுமில்லை, புசியாதிருப்பதினால் நமக்கு ஒரு குறைவுமில்லை. ஆகிலும் இதைக்குறித்து உங்களுக்கு உண்டாயிருக்கிற அதிகாரம் எவ்விதத்திலும் பலவீனருக்குத் தடுக்கலாகாதபடிக்குப் பாருங்கள்." (1 கொரிந்தியர் 8:8-9).
இது அன்பின் கொள்கை. அப். பவுல் ரோமர் நிருபத்தில் அன்பைப் பற்றி பேசுகிறார், மேலும் "அன்பானது பிறனுக்குப் பொல்லாங்கு செய்யாது; ஆதலால் அன்பு நியாயப்பிரமாணத்தின் நிறைவேறுதலாயிருக்கிறது." (ரோமர் 13:10). எந்த வகையிலாவது, நீங்கள் எடுக்கும் முடிவு அல்லது உங்களது செயல்பாடுகள் உன்னுடைய சக விசுவாசி தேவனைப் பின்பற்றுவதில் இடராக இருந்தால், அல்லது உன்னுடைய சக கிறிஸ்தவன் பாவத்தில் விழுவதற்கு காரணமாக இருந்தால், அத்தகைய செயலையோ முடிவையோ எடுக்க கூடாது. தேவைப்பட்டால், உங்களுடைய சுதந்திரம், உங்களுடைய மகிழ்ச்சி, உங்களுடைய விருப்பத்தை கூட நீங்கள் விட்டு கொடுக்கும் அளவுக்கு உங்கள் சக விசுவாசியை நேசிக்க வேண்டும். இந்த அணுகுமுறை இன்று ஏற்றுக்கொள்ள முடியாதது. யார் எப்படி போனாலும், யாருக்கு என்ன நடந்தாலும் அதைப்பற்றி எனக்கு கவலையில்லை. 'என் வாழ்க்கையும் என் விருப்பமும்' என்ற மனப்பான்மை இந்த காலத்தில் அதிகமாகக் காணப்படுகிறது. நான் செய்வது தவறாக இல்லாதபோது நான் விரும்பியதைச் செய்கிறேன் என்று பலர் கூறுகின்றனர். நீங்கள் செய்வது தவறில்லை என்றாலும், உங்களுடைய செயலால் சிலர் இடறினால் அதுவும் பாவம் தான்.
"இப்படிச் சகோதரருக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்து, பலவீனமுள்ள அவர்களுடைய மனச்சாட்சியைப் புண்படுத்துகிறதினாலே, நீங்கள் கிறிஸ்துவுக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்கிறீர்கள். ஆதலால் போஜனம் என் சகோதரனுக்கு இடறலுண்டாக்கினால், நான் என் சகோதரனுக்கு இடறலுண்டாக்காதபடிக்கு, என்றைக்கும் மாம்சம் புசியாதிருப்பேன்." (1 கொரிந்தியர் 8: 12,13).
எனவே உங்களுடைய செயல்பாட்டினால் உன் சகோதரனுக்கு எந்த இடறுப்பாடுகள் ஏற்படுத்தாமல் நீங்கள் பார்த்துக் கொள்ள வேண்டும்.
ஐந்தாவது, நீங்கள் எடுக்கும் இந்த முடிவால் சுவிசேஷத்திற்கு பங்களிக்குமா?
“நான் என் சுயபிரயோஜனத்தைத் தேடாமல், அநேகருடைய பிரயோஜனத்தைத் தேடி, அவர்கள் இரட்சிக்கப்படும்படிக்கு, எவ்விதத்திலும் எல்லாருக்கும் பிரியமாய் நடக்கிறதுபோல; நீங்களும் யூதருக்கும், கிரேக்கருக்கும், தேவனுடைய சபைக்கும் இடறலற்றவர்களாயிருங்கள்.” (1 கொரிந்தியர் 10:32-33).
இதை நீங்கள் உணர்ந்தாலும் உணராவிட்டாலும், உங்கள் நடத்தை, உங்கள் வாழ்க்கை, உங்கள் இரட்சகருக்கு நீங்கள் கொடுக்கும் சாட்சியாகும். இந்த உலகம் உங்களைத் தொடர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறது. இது உங்கள் சாட்சிக்கு சம்மந்தப்பட்ட காரியம். உங்கள் வாழ்க்கை தேவனைப் பற்றி உலகிற்கு என்னவென்று சாட்சியாளிக்கிறது? ஒவ்வொரு நாளும் நீங்கள் எடுக்கும் பல முடிவுகள் தேவனின் நாமத்தை இழிவுபடுத்தாமல், தேவனின் நாமத்தை உயர்த்துவாதாகவும் மற்றும் மகிமைப்படுத்தும் வகையில் உங்கள் சாட்சி இருப்பது நல்லது. இப்படிப்பட்ட சாட்சியின் மூலம் உங்களுடைய அயலார் கிறிஸ்துவிடம் வழி நடத்தப்படலாம். ஒரு நபர் இரட்சிக்கப் படுவதற்காகவும், ஒரு நபரை மகிழ்விப்பதற்காகவும், சுயநலத்தை நாடாமல், அவருடைய நன்மைக்காக அதற்கேற்ப முடிவுகளை எடுக்க வேண்டும். அத்தகைய வாழ்க்கையும், சாட்சியும் நற்செய்தி மேலோங்க உதவும். உங்கள் முடிவும் உங்கள் செயல்களும் ஒரே மாதிரியானதா என்பதை நீங்கள் சரிபார்க்க வேண்டும்.
ஆறாவது, நீங்கள் எடுக்கும் இந்த முடிவு உங்கள் மனசாட்சி சொல்வதற்கு விரோதமாகவும், மீறுகிறதாகவும் இருக்கிறதா?
"இவ்வாறு நான் கடவுளுக்கும் மனிதனுக்கும் முன்பாக எப்போதும் தெளிவான மனசாட்சியுடன் இருக்க என்னைப் பயிற்றுவிக்கிறேன்" (அப்போஸ்தலர் 14:24).
இந்த வசனத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது என்னவென்றால், 'எப்போதும் நமுடைய மனசாட்சிக்கு விரோதமாக எந்த முடிவையும் எடுக்காதீர்கள்.' உங்கள் மனசாட்சி உங்களை ஏதாவது ஒரு காரியத்தில் உங்களுக்கு இடையூறாக இருந்தால், அதைத் தொடராமல் இருப்பது நல்லது. நீங்கள் செய்வது சரியானது என்று உங்கள் மனசாட்சி உங்களுக்கு உறுதியை அளிக்காதவரை நீங்கள் அதைச் செய்யக்கூடாது. தேவனோடு உங்கள் உறவு எந்த வகையிலும் தடைபடாமல் இருக்க, தேவனுக்கு முன்பாக தெளிவான மனசாட்சியைக் கொண்டிருப்பது நல்லது. எனவே ஒவ்வொரு முறையும் உங்கள் மனசாட்சி உங்களை சரியான வழியில் வழிநடத்தும் என்று நினைக்காதீர்கள். நீங்கள் எப்பொழுதும் தேவனுடைய வார்த்தையை ஜெபத்துடன் சிந்தித்து & தியானித்துக் கொண்டிருந்தால், உங்கள் மனசாட்சிக்கு எது சரியான பாதை எது தவறான பாதை என்பதை உங்கள் மனசாட்சிக்கு கற்பிக்க முடியும், "கர்த்தருக்குப் பிரியமானது இன்னதென்று நீங்கள் சோதித்துப்பாருங்கள்." (எபேசியர் 5:10).
ஏழாவது, நீங்கள் எடுக்கும் இந்த முடிவு தேவனை மகிமைப்படுத்துகிறதா?
"ஆகையால், நீங்கள் புசித்தாலும், குடித்தாலும், எதைச் செய்தாலும், அனைத்தையும் தேவனுடைய மகிமைக்கென்று செய்யுங்கள்" (1 கொரிந்தியர் 10:31).
இந்த வசனம் இதுவரை தெரியப்படுத்திய அனைத்து விதிகளின் சுருக்கமாகவும், குறிக்கோளாகவும் உள்ளது. உணவு உண்ணும் காரியம் போன்ற எளிய காரியங்கள் உட்பட எல்லாவற்றிலும் நம்முடைய கர்த்தரும் இரட்சகருமான கிறிஸ்துவை மகிமைப்படுத்துவதே ஒவ்வொரு விசுவாசியின் இருதயத்தின் விருப்பமாகும். அல்லது இது இல்லை என்கிறீர்களா? நீங்கள் எடுக்கும் முடிவைப் பற்றி சிந்தியுங்கள். அது உன் தேவனை மகிமைப்படுத்துகிறதா? கனப்படுத்துகிறதா? இயேசுகிறிஸ்து செய்தது போல், "பூமியிலே நான் உம்மை மகிமைப்படுத்தினேன்; நான் செய்யும்படி நீர் எனக்கு நியமித்த கிரியையைச் செய்து முடித்தேன்." என்று நீங்கள் சொல்ல முடியுமா? (யோவான் 17:4)
முடிவு
உங்களுக்கு இந்த காரியத்தில் எந்தவித கேள்விகள் இருந்தாலும், இந்த விதிகள் மற்றும் கொள்கைகளின்படி, அவற்றை மீறாமல் முடிவுகளை எடுங்கள். ஆனால் இவை மட்டுமல்ல, வேதத்தில் இன்னும் பல விதிகள் உள்ளன. நாம் தினமும் வேதத்தை வாசித்து சிந்திக்கும்போது, இதுபோன்ற பல விதிகளை நாம் கற்றுக்கொள்கிறோம். நாம் அப்படிப்பட்ட ஒரு அச்சை உருவாக்கிக்கொள்ள வேண்டும். அந்த அச்சுக்கு பொருந்தக்கூடியவற்றை மட்டும் நாம் தேர்வு செய்ய வேண்டும். தேவனுடைய வசனத்திற்கு ஏற்றதும், வசனத்திற்கு உட்பட்டதும், வசனத்தின் விதிகளுக்கு இணங்குவதுமான முடிவுகளை மட்டுமே நாம் எடுக்க வேண்டும் அந்த வசனத்தின் வரம்புகளுக்குள் நீங்கள் கிறிஸ்துவில் உங்கள் சுதந்திரத்தைப் பயன்படுத்த வேண்டும். அதற்கு முரணான எதுவும் தேவனின் சித்தத்திற்கு எதிரானது என்று புரிந்துக்கொள்ள வேண்டும்.
கடைசியாக ஒறு காரியத்தை சொல்லி முடிக்கிறேன். ஒரு குறிப்பிட்ட விஷயத்தில் தேவனின் சித்தம் என்ன என்பதைத் தேடிக் கண்டுபிடித்து தெரிந்துகொள்வதில் பெரும்பாலும் பலர் தங்கள் நேரத்தை வீணடிக்கிறார்கள். தினசரி வேதத்தை வாசித்து சிந்தித்திப்பத்தின் மூலம் தேவன் தம் வார்த்தையின் மூலம் தெளிவாக வெளிப்படுத்திய காரியங்களைக் கற்றுக்கொள்வதிலும் நடைமுறைப்படுத்துவதிலும் கவனம் செலுத்த வேண்டும். வேதத்தின் ஆராய்ச்சியில் நேரத்தை வீணடிக்காமல் நீங்கள் கற்றுக்கொண்டதை நடைமுறைக்கு கொண்டு வர முயற்சிக்க வேண்டுமென்று உங்களுக்கு அழைப்பு விடுக்கிறேன். இந்த வார்த்தைகள் வாசகர்களின் ஆத்மிக வாழ்க்கைக்கு பயனளிக்க வேண்டுமென்றும் தேவனை மன்றாடுகிறேன்.