அறிமுகம்
தேவனுடைய சித்தத்தின் படியான வாழ்வை வாழ்வதே ஒவ்வொரு உண்மையான கிறிஸ்தவனின் விருப்பமாக இருக்கவேண்டும். அவன் செய்யகூடிய அனைத்து காரியங்களும், அவன் எடுக்கும் ஒவ்வொரு முடிவும், அவனுடைய யோசனைகள் அனைத்தும் தேவனின் சித்தப்படி இருக்க வேண்டும் என்று அவன் மனதார விரும்புவான். தேவனுடைய சித்தத்திலே தனக்கு பாதுகாப்பு உள்ளது என்பதையும், தனது சுய புத்தியை நம்புவது மிகவும் ஆபத்தானது என்பதையும் அவன் நன்கு அறிவான்.
மேலும், "தேவனே, உம்முடைய சித்தத்தின்படி செய்ய, இதோ, வருகிறேன் என்று சொன்னார்." (எபிரேயர் 10:9) என்று சொல்லிய இயேசு கிறிஸ்துவினுடைய, மனதை உடையவனாய் இருப்பதால் "ஆயினும் என்னுடைய சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது" என்ற மனப்பான்மையைக் கொண்டிருபான். "உலகமும் அதின் இச்சையும் ஒழிந்துபோம்; தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான்." (1யோவான் 2:17), என்ற வார்த்தையின் மீது விசுவாசம் வைத்து “தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவன் எவனோ அவனே எனக்குச் சகோதரனும், எனக்குச் சகோதரியும், எனக்குத் தாயுமாய் இருக்கிறான் என்றார்.” (மாற்கு 3:35) வசனத்தில் இரட்சகர் சொல்லிய மேன்மையை மையமாகக் கொண்டு, (ரோமர் 12:2) “நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்.” என்ற கட்டளைக்கு கீழ்ப்படிதலுடன் உண்மையோடு ஜெபிப்பான் & முயற்சிப்பான்.
ஆனால், பொதுவாக எல்லோருக்கும் குழப்பமான ஒரு கேள்வி உண்டு. அது 'தேவனின் சித்தத்தை நான் எப்படி அறிந்துக் கொள்வது?' ஆம், இந்த கேள்வி மிகவும் முக்கியமானது, மிகவும் அவசியமானது. தேவனின் சித்தம் என்னவென்று தெரியாமல் அதை எப்படி நிறைவேற்றுவது? ஆகவே, தேவனுடைய சித்தத்தை எப்படிக் கண்டறிவது அது நமது கடமை, நமது முக்கியமான பொறுப்பு.
தேவனின் சித்தத்தை அறிந்துக் கொள்வதில் சில தவறான வழிமுறைகள்
தேவனின் சித்தத்தைக் அறிவதற்கான தேவையையும் பொறுப்பையும் உணரும்படியான மனசாட்சியைக் கொண்ட விசுவாசிகளிடமிருந்து உலக பிரகராமான ஆதாயம் பெறுவதற்காக பலர் தவறாக வழி நடத்தி ஏமாற்றுகிறார்கள். தேவன் எங்களுக்கு வெளிப்படுத்துவார்! நாங்கள் உங்கள் மீது கைவைத்து நாங்கள் ஜெபம் செய்வதினால் உங்களை குறித்து தேவனுடைய சித்தம் என்னவாக இருக்கிறதோ என்பதை நாங்கள் சொல்வோம். என்று இயேசுவின் பெயரால் முதலில் அவர்களின் சொத்துக்களையும் பின்னர் ஆன்மாக்களையும் கொள்ளையடிப்பவர்கள், எல்லா இடங்களிலும் மோசடி செய்பவர்கள் இருக்கிறார்கள். மேலும், விசுவாசிகள் தாங்களுடைய அறியாமையால் மற்றும் அவர்களுக்கு வேத அறிவு இல்லாமையாலும், வேத வசனத்தின் படியாக தேவனுடைய சித்தத்தை தேடாமல் வேறு விதத்தில் தேட முயற்சிக்கிறார்கள்.
சிலர் மனசாட்சியின் அவர்களுடைய அப்பாவித்தனம் அல்லது வேதத்தைப் பற்றிய புரிதல் இல்லாததால். சிலர் மனசாட்சியின் அழுத்தங்களை தேவனின் குரல் என்று கருதுகின்றனர், மற்றவர்கள் தேவனின் முன்னிலையில் தங்களை, ஒருமுகப் படுத்திக்கொண்டு ஜெபத்தின் போது மனதில் தோன்றும் எண்ணங்களை தேவன் நமக்கு சொல்லுகிறார் என்று கருதுகின்றனர். சீட்டு போட்டு தேவனின் சித்தத்தை உறுதி செய்து விடலாம் என்று சிலர் நினைகிறார்கள். வேதத்தை திறக்கும் போது கண்ணை மூடி எதோ ஒரு வசனத்தை தொட்டு அதுவே தேவனின் சித்தத்தின் வெளிப்படாக சிலர் தவறாக நினைக்கின்றனர். இவை அனைத்தும் மனிதன் தன்னுடைய சுய முயற்சியே தவிர தேவனுடைய வார்த்தையின் வெளிச்சத்தில் ஏற்றுக்கொள்ள தகுந்த போதுமான நடைமுறைகள் அல்ல. எனவே, இந்த வீனான முயற்சினால் தேவனின் சித்தத்தை அறிந்துக்கொண்டோம் என்ற மாயையில் தேவனின் சித்தத்திற்கு முரணானவற்றைப் பின்தொடரும் அபாயம் உள்ளது.
நாம் ஏதாவது ஒரு குரலையோ! அல்லது தரிசனத்தையோ! நம்பி அது தேவனின் வெளிப்பாடு என்று எற்றுக்கொண்டால், அது தேவனிடமிருந்து வந்ததா? அல்லது ஒளியின் தூதனாக ஏமாற்றும் சாத்தானிடமிருந்து வந்ததா? அல்லது அது நம் சொந்த மாயையிலிருந்து வந்ததா? என்று உறுதியாகக் கண்டறிய முடியுமா? மனசாட்சியில் ஏற்படும் ஒவ்வொரு அழுத்தமும் தேவனுடைய குரலாகக் எண்ணினால், அவ்வாறே புறஜாதிகளும் தங்கள் மனசாட்சிப்படி தங்கள் தெய்வளுக்கு காணிக்கை செலுத்தவும், பூஜைகளைச் செய்யவும், பல சடங்குகளை நிறைவேற்றவும் தள்ளப்படுகிறார்கள். இந்த சூழலில், மனசாட்சியின் அழுத்தங்கள் அனைத்தும் தேவனின் குரல் என்று சொல்ல முடியுமா?
ஜெபத்தின் போது எழும் எண்ணங்கள் தேவனின் எண்ணங்களாகக் கருதினால், ஜெபம் செய்யும்போது தான் எப்போதும் எழாத எண்ணங்கள் தோன்றும் என்பதை இதை வாசிக்கும் வாசகர்களுக்கு தெரியும் என்று நினைக்கிறேன். மேலும் அவை அனைத்தையும் தேவனின் எண்ணங்களாகக் கருதலாமா?
இன்றைக்கும் தேவனுடைய சித்தத்தை அறிய சீட்டு போடுதல் என்பதை தேவன் நியமிக்கப்பட்ட முறை என்றால், சீஷர்கள் மத்தேயுவை பன்னிரண்டாவதாக சீட்டு போட்டுத் தேர்ந்தெடுத்தாலும், அதன் பின்னர் களத்தில் தேவாலயத்தின் மூப்பர்களைத் தேர்ந்தெடுக்க தேவன் அதே முறையை ஏன் தொடரவில்லை? சீட்டு போட்டு தேவனே என்று சொல்வதை விட வேத வசன விதிமுறைகளின் அடிப்படையில் முடிவெடுப்பதே திருச்சபைக்கு தேவன் நியமித்த பாதை என்பதை வேத உபதேசம் நமக்கு கற்பிக்கவில்லையா?
வேதத்தைத் திறந்து அங்கே காணப்படும் வசனத்தின் மூலம் தேவன் பேசுகிறார் என்பதைப் பொறுத்தவரை, நாம் வேதத்தை அவ்விதமாக பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் தேவன் அவற்றை எழுதவில்லை, ஆனால் அவை முதலில் எழுதப்பட்ட பிரதிகள் நமக்கு மிக தெளிவாக சொல்லுகிறது. வேதாகமம் அதிகரங்களாக, வசனங்களாக, எண்களாக இல்லாமல் தொல்சுருள்களில் எழுதப்பட்ட பழமையான கையெழுத்துப் பிரதிகலே நமக்கு தெளிவாக சொல்லுகிறது. இன்று நாம் வேதத்தை திறக்கும் முறை தவறானது. அச்சு இயந்திரங்கள் மற்றும் காகிதங்களை அறிமுகப்படுத்திய பிறகுதான் தேவன் இந்த முறையை கொண்டுவந்தார். என்று ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று நினைக்கலாமா?
சிலர் தங்களின் அன்றாடப் பிரசங்கத்திலிருந்தும், தினந்தோறோம் வாசிக்கும் வேதப் பகுதியிலிருந்து தேவன் தம்முடைய சித்தத்தை வெளிப்படுத்துகிறார் என்று நினைப்பவர்களின் தவறும் இதுவே. வேத வசனத்தின் சந்தர்ப்ப சூழலை அவர்கள் புறக்கணித்து, அவர்களின் சூழ்நிலைகளுக்கு ஏற்ப வேத வாக்கியத்திற்கு புதிய அர்த்தங்களை இணைக்கவும் அது வழிவகுக்கிறது. அதேபோல, ஒரு நபர் அமெரிக்கா செல்வது தேவனின் விருப்பமா? அல்லது விருப்பமில்லையா? என்று ஜெபித்துக் கொண்டிருந்தபோது, ஏசாயா 11:14 -ம் வசனத்தில் தேவனுடைய சித்தத்தை வெளிப்படுத்துவதாம். "அவர்கள் இருவரும் ஏகமாய்க் கூடி மேற்கேயிருக்கிற பெலிஸ்தருடைய எல்லைகளின்மேல் பாய்ந்து," “பெலிஸ்தருடைய எல்லைகளின்மேல் பாய்ந்து” (ஆங்கிலத்தில் இறக்கைகளில் ஏறுவார்கள்) என்ற வார்த்தையின் படி, தான் விமானத்தில் ஏற வேண்டும் என்பது தேவனின் சித்தத்தை உணர்ந்தார், மேலும் "மேற்கு திசை என்று இருப்பதால் அமெரிக்கா செல்ல வேண்டும். என்பதாக உணர்ந்தாராம். வேத வசனத்தின் சூழல் எதுவாக இருந்தாலும் தேவன் என் நிலைமையை அறிந்து, அதற்கு தகுந்த வசனத்தில் ஆலோசனையை தருகிறார் என்பது இப்படிப்பட்டவர்களின் மாயை. இருப்பினும், இந்த வகையான சிந்தனையே வேத வசனத்தை தவறான விளக்கங்களை உருவாக்குவதற்கான அடித்தளம் என்பதை அவர்கள் மறந்துவிடுகிறார்கள். சூழ்நிலைகளுக்கு கேற்றதும், மனிதனுடைய உணர்வுகளுக்கு கேற்றதுமான அந்த முறை வேத வசனத்தோடு ஒத்துபோகது. அது மனிதனுடைய சுய உணர்வு தான். தாம் விரும்பியவருக்கு ஏற்ப வேத வார்த்தையை திரிக்கவும், விளக்கவும் தேவன் யாருக்கும் அதிகாரம் கொடுக்கவில்லை. இந்த வழிமுறையில் தேவனுடைய சித்தத்தை அறிய முடியும் என்று வேதத்தில் குறைந்தபட்சம் முன்னுரையாக கூட சொல்லவில்லை என்பதை மறந்துவிடாதீர்கள்.
இறுதியாக, பிலிப்பியர் 4:7 -ல் கூறப்பட்டுள்ள படி "அப்பொழுது, எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும்." என்று கூறப்பட்டுள்ளதை அடிப்படையாகக் கொண்டு, தேவனுடைய சித்தத்தை அறிந்துக்கொள்ளும் படியான ஒரு விசித்திரமான முறையைக் கண்டுபிடித்துள்ளனர். அது என்னவென்றால், ஒரு காரியத்தைக் குறித்து நீங்கள் ஜெபிக்கும்போது உங்களுடைய இருதயம் சமதனாமாக உணர்ந்தால், அது தேவனின் சித்தம், மாறாக சமாதனம் தரவில்லை என்றால், அது தேவனுடைய சித்தம் அல்ல என்பது அவர்களின் கருத்து. ஆனால், அந்த வசனத்தின் சூழல் தேவனின் சித்தத்தை அறிய வழிவகை செய்யவில்லை, அந்த வசனம் ஜெபத்தின் மூலம் தேவன் மீது பாரங்களைச் வைப்பதீன் மூலம் வரும் சமாதானத்தைப் பற்றி பேசுகிறது. அந்த வசனத்தை இன்னும் புரிந்துக்கொள்ள (6 & 7 வசனங்களை ஒன்றாக இணைத்துப் படியுங்கள்). “நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள். அப்பொழுது, எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும்.
இருப்பினும், இந்த "பதில்" தேவ சித்தத்துடன் இணைக்கப்பட்டுள்ளது என்று நினைப்பதில் உள்ள சிரமத்தை சுட்டிக்காட்டும் ஒரு உதாரணத்தை பார்ப்போம். கெத்செமனே காட்சியில் தெளிவாகக் காணப்படுகிறது. சிலுவையில் இயேசுவின் மரணம் தேவனின் சித்தமாக இருகிறது. (யோவான் 10:17,18). ஆயினும் அதற்குத் ஆயித்தமாகும் போது, “எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் என்று தேவன் கூறவில்லை. இதற்கு நேர்மாறாக, அவர் தம்முடைய சீஷர்களிடம், "அப்பொழுது, அவர்: என் ஆத்துமா மரணத்துக்கேதுவான துக்கங்கொண்டிருக்கிறது;" (மத்தேயு 26:38) என்று வாசிக்கிறோம். எல்லாவற்றிற்கும் மேலாக, அவர் என்ன செய்யப்போகிறார் என்பது தேவனுடைய சித்தம் அல்ல என்று நினைப்பது முரண்பாடாக இருக்கும். “என் சித்தத்தின்படியல்ல, என்னை அனுப்பினவருடைய சித்தத்தின்படி செய்யவே நான் வானத்திலிருந்திறங்கி வந்தேன்.” (யோவான் 6:38). எனவே நாம் எப்படி உணர்கிறோம் என்பது தேவனுடைய சித்தத்தின் குறிகாட்டியாக இருப்பதில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
தேவனின் சித்தத்தை உறுதிப்படுத்த மேலே குறிப்பிடப்பட்ட எந்த முறைகளையும் விட நம்பகமானதும் மற்றும் நிலையானதுமான மற்றொரு வழி உள்ளது. "அதிக உறுதியான தீர்க்கதரிசன வசனமும் நமக்கு உண்டு; பொழுது விடிந்து விடிவெள்ளி உங்கள் இருதயங்களில் உதிக்குமளவும் இருளுள்ள ஸ்தலத்தில் பிரகாசிக்கிற விளக்கைப்போன்ற அவ்வசனத்தைக் கவனித்திருப்பது நலமாயிருக்கும்.” (2பேதுரு 1:19) இந்த தீர்க்கதரிசன வார்த்தை பரிசுத்த வேதாகமம். இந்த வேதத்தில் வேறு எங்கும் இல்லாத வகையில் தேவன் தனது சித்தத்தை தெளிவாக வெளிப்படுத்தியுள்ளார்.
இருப்பினும், வேதத்தின் வசனங்களை லாட்டரி சீட்டு முறையில் தேர்ந்தெடுப்பதன் மூலம் தேவனுடைய சித்தத்தை அடையாளம் காண முடியாது, ஆனால் வேதத்தில் உள்ள போதனைகளை முறையாகவும், விரிவாகவும் புரிந்துக்கொண்டு, அந்த போதனைகளிலிருந்து எழும் கொள்கைகளை நம்முடைய வாழ்வின் எல்லா சூழ்நிலைகளிலும் அதை பயன்படுத்தினால், அவற்றை அடிப்படையாகக் கொண்டு, நாம் வாழ்க்கையின் ஒவ்வொரு திருப்பத்திலும் நாம் அவர்களை வழிகாட்டியாக எடுத்துக் கொண்டால், நிச்சயமாக நாம் தேவனின் சித்தப்படி நடக்கிறோம் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. வேதம் தேவனுடைய சித்தத்தின் வெளிப்பாடு எனவே வேதாகமத்தின் படியான வாழ்க்கை என்பது தேவ சித்தத்தின்படி வாழ்க்கை.
இதுவரை நன்றாக இருந்தது, ஆனால் வேதத்தில் ஒருவருடைய தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி எந்த அதிகாரமும் இல்லை! வேதத்தின் அடிப்படையில் எந்தக் கல்லூரியில் படிப்பது, எந்த வேலையை செய்வது, எந்தப் ஆண் & பெண்ணை திருமணம் செய்துகொள்வது போன்றவற்றைப் பற்றிய தனிப்பட்ட முடிவுகளை நான் வேதத்தின் அடிப்படையில் எப்படி எடுப்பது? இது மிக முக்கியமான கேள்வி. இதற்கு விடை காணும் முன் ஒரு விஷயத்தைக் குறித்து அறிந்து கொள்ளவது அவசியம். பலர் நினைப்பதுப் போல தேவன் என் மீது வைத்துள்ள அவரது சித்தத்தை எழுதி மறைத்துவிட்டார் என்றும், நான் அதைத் தேடி கண்டுபிடிக்க வேண்டும். என்ற சிந்தனை சரியானைதல்ல. தேவன், நான் என்ன செய்ய விரும்புகிறாரோ அதை அவர் என்னிடமிருந்து மறைத்தால் அதை நான் எப்படி நிறைவேற்ற முடியும்? அவர் ஒரு விஷயத்தை நம்மிடமிருந்து மறைத்துவிட்டால், அதை தேடி கண்டுபிடிப்பது யாரால் முடியும்? ஆகவே, நான் அவருடைய சித்தத்தை அறிந்துக்கொள்ளும் பாதையை அவர் நிச்சயமாக எனக்கு வைத்திருக்க வேண்டும். அந்த பாதையில் இருந்துதான் நாம் புரிந்துக்கொள்ள முடியும்.
தேவ சித்தத்தின் இரண்டு பகுதிகள்:
“மறைவானவைகள் நம்முடைய தேவனாகிய கர்த்தருக்கே உரியவைகள்; வெளிப்படுத்தப்பட்டவைகளோ, இந்த நியாயப்பிரமாணத்தின் வார்த்தைகளின்படியெல்லாம் செய்யும்படிக்கு, நமக்கும் நம்முடைய பிள்ளைகளுக்கும் என்றென்றைக்கும் உரியவைகள்.” (உபாகமம் 29:29). மேற்குறிப்பிட்ட வசனத்தின் அடிப்படையில் தேவனின் சித்தத்தை இரண்டு பகுதிகளாகப் பிரிக்கலாம்.
முதலாவது, தேவனின் இரகசிய சித்தம். அது தேவனுக்கு சொந்தமானது. அதை நிறைவேற்றுவது நமது பொறுப்பு அல்ல.
இரண்டாவது, வெளிப்படுத்தப்பட்ட தேவனுடைய சித்தம். அது அவருடைய வார்த்தையாகிய வேதத்தில் தெளிவாக வெளிப்படுத்தப்பட்டு நமக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
அதை நிறைவேற்றுவது நமது பொறுப்பு. இந்த இரண்டாம் பாகத்தை நாம் விட்டுவிட்டு, தேவனின் முதல் பகுதியைக் கண்டுபிடிக்க & அறிந்துக்கொள்ள நாம் முயற்சி செய்கிறோம். ஆனால் வெளிப்படுத்தப்பட்ட அவருடைய சித்தத்தைச் செய்வதில் நாம் விடா முயற்சியுடன் இல்லாவிட்டால், அவருடைய வெளிப்படுத்தப்படாத சித்தம் நமக்குத் தெரியவேண்டும் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்? எனவே முதலில் தேவனின் வெளிப்படுத்தப்பட்ட சித்தத்தை முறையாகப் அறிந்துக் கொள்ள முயற்சிப்போம்.
நமது தனிப்பட்ட விவகாரங்களில் தேவனுடைய சித்தத்தை அறிந்துக் கொள்ள முடிவதற்கான இரகசியத்தையும் இந்த ஆய்வு நமக்கு தெரியப்படுத்துகிறது. இதற்கு நான் கொடுக்கப் போகும் குறிப்புகள் எளிமையானதாகத் தோன்றினாலும், அது உங்களுக்குத் தெரிந்த விஷயங்களாக, இருந்தாலும் அவற்றைக் கவனத்துடன் வாசிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். ஏனென்றால், அவற்றை அடிப்படையாகக் கொண்டு நாம் நம்முடைய வாழ்வில் எடுக்கக்கூடிய முடிவு, நம்முடைய தனிப்பட்ட தீர்மானங்களில் தேவனுடைய சித்தத்தைக் கண்டறிவதற்கான துல்லியமான வழிகாட்டியாக நமக்கு இருக்கும். கல்வி, வேலை, திருமணம் போன்ற ஒவ்வொரு தனிப்பட்ட முடிவுகளையும் தேவனின் சித்தப்படி செய்வதற்கான பாதையை கண்டுபிடிக்கப் போகிறோம். எனவே இந்த கட்டுரையை விடா முயற்சியோடும், பொறுமையோடும், ஜெபத்தோடும், கவனத்தோடும் வாசியுங்கள்.
தேவனின் சித்தத்தை கண்டு அறிவதற்கான முக்கியமான கொள்கைகள்
- இரட்சிப்பைப் பற்றிய தேவனின் சித்தம்
"தாமதிக்கிறார் என்று சிலர் எண்ணுகிறபடி, கர்த்தர் தமது வாக்குத்தத்தத்தைக் குறித்துத் தாமதமாயிராமல்; ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்ப வேண்டுமென்று விரும்பி, நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார்." (2பேதுரு 3:9). பேதுரு, தனது நிருபத்தில் தேவன் தான் முன்குறித்தவர்களை குறித்து எழுதுகையில், (1பேதுரு 1:1,2), (2பேதுரு 3:12) ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்ப வேண்டுமென்று என்பதே தேவனின் சித்தம் என்பதை தெளிவுபடுத்துகிறார். தேவனின் இரட்சிப்பிற்கான இந்த சித்தத்திற்கு கீழ்படியாத எவரும் அவருடைய சித்தத்தை தங்கள் வாழ்க்கையில் ஒருபோதும் காண மாட்டார்கள். தேவனுடனான நம்முடைய நல்லுறவுக்கு முதல் படியே இரட்சிப்பு.
நீங்கள் மனந்திரும்பி, தேவனுடைய குமாரனை விசுவாசித்து, உங்கள் வாழ்க்கையை அவரிடம் ஒப்புக்கொடுக்காவிட்டால், 'எனக்கான தேவனின் சித்தம் என்னவென்று' நீங்கள் தேடுவது வீண். 'இதுவே எனது சித்தம்' என்று தேவன் தெளிவாக வெளிப்படுத்திய இந்த அடிப்படை விஷயத்திற்கு நீங்கள் கீழ்ப்படியவில்லை என்றால், மற்ற விஷயங்களில் அவருடைய சித்தம் என்ன என்று கேட்க எந்தவித தார்மீக உரிமையும் உங்களுக்கு இல்லை. எனவே, முதலாவது இரட்சிப்பின் ஆனந்தத்தை எவ்வாறு பெறுவது என்பதை முதலில் ஆராய்வது பொருத்தமானது. அன்பான வாசகரே, நீங்கள் இரட்சிக்கப்பட்ட தேவ பிள்ளையாக இருந்தால், தேவனுக்கு நன்றி. உங்கள் வாழ்க்கை தேவ சித்தபடியான வாழ்க்கை தான்.
- ஆவியில் நிறைந்திருப்பது தேவனின் சித்தம்
"ஆகையால், நீங்கள் மதியற்றவர்களாய் இராமல், கர்த்தருடைய சித்தம் இன்னதென்று உணர்ந்துகொள்ளுங்கள். துன்மார்க்கத்திற்கு ஏதுவான மதுபான வெறிகொள்ளாமல், ஆவியினால் நிறைந்து;" (எபேசியர் 5:17,18). தேவ சித்தத்தை அறியாதவர்களை இந்த வசனம் 'முட்டாள்கள்' என்கிறது. மேலும் இந்த வசனப் பகுதியில் தேவ சித்தம் என்று சொல்லப்பட்டது என்ன? நாம் ஆவியானவரால் நிரப்பப்பட வேண்டும் என்பதே இங்கு வெளிப்படுத்தப்பட்ட தேவனுடைய சித்தம். இது தேவ சித்தம் என்று முதலில் சொல்லப்படுவதற்கு, அதாவது தேவனின் இரட்சிப்பின் சித்தத்திற்கு கீழ்படிந்தவர்களுக்கு மட்டுமே இது சாத்தியம். ஏனென்றால், பரிசுத்த ஆவியானவர் இரட்சிக்கப்பட்டவர்களில் மட்டுமே வாசம் செய்வார். ஆனால் இரட்சிக்கப்பட்டவர்களும் ஆவியில் நிறைந்து வாழ வேண்டும் என்பதே தேவ சித்தம்.
இந்த வாக்கியத்திலிருந்தே அதன் அர்த்தம் நமக்கு தெளிவாகிறது. மதுபான வெறிகொள்ளாமல், ஆவியினால் நிறைந்துருக்க வேண்டும் என்று இங்கு அறிவுறுத்தப்படுகிறது. மதுபானத்தில் நிறைந்துள்ள ஒருவன் தன் கட்டுப்பாட்டை இழந்து அவன் உட்கொண்ட மதுவால் கட்டுப்படுத்தப் படுவான். ஆனால் இது தவறானது. எபேசியர்கள் கிறிஸ்துவுக்குள் இல்லாத போது, அவர்களின் மத சடங்கில், இப்படிக் குடித்துவிட்டு, தங்களின் சுயநினைவை இழந்து அவர்களின் தெய்வங்களுடன் தொடர்பு கொள்ளலாம் என்று நம்பினார்கள் என்று அவர்களுடைய வரலாறு நமக்கு சொல்கிறது. ஆனால் இந்த வசனத்தின் பொருள் என்னவென்றால், இப்போது இரட்சிக்கப்பட்டுள்ள எபேசியர்கள், முன்பு போல் மதுபானத்தால் கட்டுப்படுத்தப் படுவதற்கு தங்களைக் ஒப்புக்கொடுக்காமல், ஆவியால் நிறைந்தவர்களாக இருக்க வேண்டும், அதாவது, தங்களை வழிநடத்துபவர்களுக்கு ஒப்புக்கொடுக்க வேண்டும். பரிசுத்த ஆவியானவர் அவர்களை முழுமையாகக் கட்டுப்படுத்துவார். பாவத்தால் ஆத்துமாவை "துக்கப்படுத்தலாம்" “அன்றியும், நீங்கள் மீட்கப்படும் நாளுக்கென்று முத்திரையாகப் பெற்ற தேவனுடைய பரிசுத்த ஆவியைத் துக்கப்படுத்தாதிருங்கள்.” (எபேசியர் 4:30). “ஆவியை அவித்துப்போடாதிருங்கள்." (1தெசலோனிக்கேயர் 5:19). ஆவியைத் துக்கப்படுத்தாமல், ஆவியை அவித்துப்போடாமல் நாம் எப்போதும் பரிசுத்த ஆவியானவரின் கட்டுப்பாட்டில் & கீழ்படிதலில் வாழ வேண்டும் என்பதே தேவனின் சித்தம்.
அப்படியென்றால், பரிசுத்த ஆவியானவரால் கட்டுப்பாட்டில் & கீழ்படிதலில் நடப்பது என்றால் என்ன? அவர் நம்மை எவ்விதமாக நடத்துவார். இதற்கான பதில் மிகவும் எளிதனது. பரிசுத்த ஆவியானவர் வேதத்தின் ஆசிரியர். வேதம் அவருடைய மனதின் பிரதிபலிப்பாகும். எனவே வேதவசனங்களுக்கு கீழ்படிவது & கட்டுப்படுவது ஆவியானவருக்கு கட்டுப்படுத்தப்படுவதற்கு சமம். இது என்னுடைய சொந்த கருத்து அல்ல. வேதமே இந்த சத்தியத்தை தெளிவுபடுத்துகின்றன. இங்கே ஒரு சிறு விளக்கம் தேவை.
(எபேசியர் 5:18) வசனத்தில் கூறப்பட்டுள்ளபடி, “துன்மார்க்கத்திற்கு ஏதுவான மதுபான வெறிகொள்ளாமல், ஆவியினால் நிறைந்து;” ஆவியானவரால் நிரப்பப்பட்டதன் விளைவுகளின் பட்டியல் அதன் பின்வரும் வசனங்களில் காணப்படுகிறது. “சங்கீதங்களினாலும் கீர்த்தனைகளினாலும் ஞானப்பாட்டுகளினாலும் ஒருவருக்கொருவர் புத்திசொல்லிக்கொண்டு, உங்கள் இருதயத்தில் கர்த்தரைப் பாடிக் கீர்த்தனம்பண்ணி, ஒருவருக்கு ஒருவர் கீழ்ப்படிதல், திருச்சபையில் அன்பான நடத்தை, கணவன் மனைவி இடையே, அன்பான இணக்கம், பெற்றோர் மற்றும் குழந்தைகளிடையே ஒழுக்கமுறை, எஜமானர்கள் மற்றும் பணியாட்களிடையே நல்ல உறவை ஏற்படுத்துதல் இந்த பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள சில முக்கியமான விஷயங்கள் இவை.
இதேபோன்ற அடையாளங்கள் (கொலோசெயர் 3:16) வசனத்தில் நாம் காணும் பட்டியல் உள்ளது. ஆனால் ஒரு சிறிய வித்தியாசம் என்னவென்றால், எபேசியர் 5 – ம் அதிகாரத்தில் அது ஆவியானவரால் நிரப்பப்பட்டதின் விளைவாகக் குறிப்பிடப் பட்டிருக்கிறது. ஆனால், கொலோசெயர் 3 – ம் அதிகாரத்தில் அது கிறிஸ்துவின் வார்த்தை நம்மில் நிறைவாக இருப்பதின் விளைவாகக் குறிப்பிடப் பட்டுள்ளது. முடிவுகள் ஒரே மாதிரியாக இருக்கும்போது, புரிதலும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். எனவே வேதத்தை கவனமாக வாசிப்பத்தால், ஆவியானவரால் நிரப்பப்படுவதும், அதாவது பரிசுத்த ஆவியால் நாம் கட்டுப்படுத்தப் படுவதும், கிறிஸ்துவின் வார்த்தை நம்மில் நிறைவாக வாசமாயிருப்பதும், அதாவது நாம் வேத வசனத்தால் கட்டுப்படுத்தப் படுகிறோம் என்பதும் ஒன்றே என்பதை நமக்கு தெளிவாகிறது.
இவ்விதமாக ஆவியில் நிறைந்து வாழ்வதும், வேத வார்த்தையின் படி வாழ்வதே தேவனுடைய சித்தம். இந்த பாதையில் வாழாதவர்கள் தேவ சித்தத்தின் முக்கியத்திற்கு கீழ்படியவில்லை. எனவே, பிரியாமான வாசகரே! நீங்கள் இரட்சிக்கப்பட்டு, ஆவியானவருக்கு கீழ்படிந்த வாழ்க்கையை வாழ்கிறேன். என்று நேர்மையாகச் சொல்ல முடிந்தால் தேவனுக்கு நன்றி சொல்லுங்கள். உங்கள் வாழ்க்கை தேவனுடைய சித்தப்படியான வாழ்க்கை.
- பரிசுத்தத்தைப் பற்றிய தேவனுடைய சித்தம்.
“நீங்கள் பரிசுத்தமுள்ளவர்களாக வேண்டுமென்பதே தேவனுடைய சித்தமாயிருக்கிறது. அந்தப்படி, நீங்கள் வேசிமார்க்கத்துக்கு விலகியிருந்து, தேவனை அறியாத அஞ்ஞானிகளைப்போல மோக இச்சைக்குட்படாமல், உங்களில் அவனவன் தன் தன் சரீர பாண்டத்தைப் பரிசுத்தமாயும் கனமாயும் ஆண்டுகொள்ளும்படி அறிந்து:" (1தெசலோனிக்கேயர் 4:3-5). இரட்சிக்கப்பட்டு பரிசுத்த ஆவியின் வீடாக மாற்றப்பட்ட ஒரு நபரின் இதயத்தில் பரிசுத்தம் என்கிற நியமம் பொருத்தப்பட்டுள்ளது, எனவே அவன் தேவ சித்தத்தின் படி பரிசுத்தமாக்கப்பட முனைகிறான். அசுத்தத்தை வெறுக்காத ஒரு மனிதன் இன்னும் இரட்சிக்கப்படவில்லை என்றும், இன்னும் முன்நிலைமையில் இருக்கிறான் என்று சந்தேகிக்க எல்லா காரணங்களும் உள்ளன.
ஏனெனில் ஒவ்வொரு இரட்சிக்கப்பட்ட நபரும் பரிசுத்தமாக்கப் படுவதற்கான செயல்முறையை தனக்குள்ளே அவன் அனுபவிக்கிறான். அவன் இரட்சிக்கப் படும்போது அவருக்குக் கொடுக்கப்பட்ட புதிய இருதயம், நீதியை விரும்புகிறதும், அக்கிரமத்தை வெறுக்கிறதுமான இருதயம். அத்தகைய இதயம் இல்லாதவன் பரிசுத்தப்படுத்தும் தேவனின் இந்த சித்தத்திற்கு அடிபணிய அவனால் முடியாது. எனவே, அன்பான வாசகரே, நீங்கள் சரீர இச்சைகளுக்கு எதிராகப் போராடுகிறீர்கள் என்றும், தேவனின் பரிசுத்தத்திற்காக ஏங்குகிறீர்கள் என்று நேர்மையாகச் சொல்ல முடிந்தால், தேவனுக்கு நன்றி! உங்கள் வாழ்க்கை தேவ சித்தத்தின் படியான வாழ்க்கை.
- நமது வாழ்க்கையின் சாட்சிக்கான தேவனின் சித்தம்.
"நீங்கள் நன்மைசெய்கிறதினாலே புத்தியீன மனுஷருடைய அறியாமையை அடக்குவது தேவனுடைய சித்தமாயிருக்கிறது." (1 பேதுரு 2:15). இந்த வசனத்தில் “நன்மை செய்கிறதினாலே” என்று குறிப்பிடப்பட்டுள்ள தேவனின் சித்தம் மற்றவர்களுக்கு முன் நாம் நல்ல சாட்சியான வாழ்க்கையை குறிக்கிறது என்பது அந்த வசனத்திலிருந்து நாம் புரிந்துக்கொள்ள முடிகிறது. (1பேதுரு 2:12) முதல் அந்த அதிகராத்தின் இறுதி வரை படிக்கும்போது, நம்மை அவதூறாகப் பேசுபவர்களின் முன்பாக நல்ல நடத்தையும், அரசாங்கத்திற்கும், நம்முடைய உயர் அதிகாரிகளுக்கும் கீழ்ப்படிவதும், அனைவரையும் மதிப்பதும், நம்முடைய சகோதரர்களை நேசிப்பது போன்ற காரியங்களின் பட்டியலைக் காண்கிறோம். தேவனுக்குப் பயந்து, கிறிஸ்து காட்டிய நீடிய பொறுமையையும் மன்னிப்பையும் காட்டுதல் இவை அனைத்தும் 'சரியான நடத்தையில்' சேர்க்கப்பட்டுள்ளன, ஏனெனில் இது போன்ற சரியான நடத்தை உள்ளடக்கியது, அறியாமல் பேசும் முட்டாள்களின் வாயை மூடுவது தேவனின் சித்தம், அதாவது தேவனையும், அவருடைய பிள்ளைகளையும், கிறிஸ்துவின் சுவிசேஷத்தை தூஷிகிறவர்களை, நம்முடைய நற்சாட்சியால் அவர்களை வெல்வதும் அல்லது அவர்களை அவதுறாக பேசவிடாமல் செய்வது. புறஜாதியார் தேவனின் பெயரை அவமதிக்கச் செய்தால், நாம் தேவனின் இந்த சித்தத்திற்கு கீழ்ப்படியவில்லை என்று அர்த்தம்.
யார் என்ன சொன்னால் எனக்கு என்ன? இது என் வாழ்க்கை என் விருப்பம்போல் தான் வாழ்வேன் என்பவர்கள் இன்னும் தங்களுக்காக சுயநலமாக வாழ்கிறார்களே, தவிர அவர்கள் கிறிஸ்துவின் நாமத்திற்கு மகிமையான வாழ்க்கையை அவர்கள் வாழவில்லை. எனவே, அன்பான வாசகரே! ஒருவேளை உன் நல்ல நடத்தையைப் பார்த்து மற்றவர்கள் உன் தேவனைப் போற்றுவதற்கும், மகிமைப்படுத்துவதற்கும் அவர்கள் தூண்டப்பட்டால், தேவனுக்கு மகிமை உண்டாவதாக! உங்கள் வாழ்க்கை தேவனின் சித்தப்படியான வாழ்க்கை.
- நம்முடைய இருதய மனப்பான்மையைக் குறித்த தேவனுடைய சித்தம்.
"ஒருவனும் மற்றொருவன் செய்யும் தீமைக்குத் தீமைசெய்யாதபடி பாருங்கள்; உங்களுக்குள்ளும் மற்ற யாவருக்குள்ளும் எப்பொழுதும் நன்மைசெய்ய நாடுங்கள். எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள். இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள். எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரஞ் செய்யுங்கள்; அப்படிச் செய்வதே கிறிஸ்து இயேசுவுக்குள் உங்களைக் குறித்துத் தேவனுடைய சித்தமாயிருக்கிறது." (1தெசலோனிக்கேயர் 5:15-18).
சூழ்நிலைகளைப் பொருட்படுத்தாமல், எப்பொழுதும் தேவவனில் மகிழ்ச்சியடைவது, நாம் அவரில் மட்டுமே திருப்தி அடைகிறோம் என்றும், அவர் இருக்கும் போது வேறு எதையும் விரும்பவில்லை என்ற மனப்பான்மையை வெளிப்படுத்துகிறது. இடைவிடாமல் ஜெபிப்பது, நாம் நம்முடைய சுயத்தின் மீது ஆதாரப்படாமல், முழு மனதுடன் அவரை விசுவாசிப்பதையும், நம்முடைய எல்லா நடத்தையிலும், அவருடைய அதிகாரத்திற்கு அடிபணிவதையும் உறுதி செய்கிறது. (நீதிமொழிகள் 3:5,6). மற்றும் எல்லாவற்றிலும் நன்றி செலுத்துவதும், தேவனுடைய கையிலிருந்து வரும் அனைத்தும் நம்முடைய நன்மைக்காக கொடுக்கப்படுகிறது. என்ற விசுவாசத்தை வெளிப்படுத்துகிறது. அப்படிப்பட்ட இருதய மனப்பான்மை நமக்கு இருக்க வேண்டும் என்பது தேவனின் சித்தம். இதை உள்ளத்தில் தேவனுக்குக் கீழ்ப்படியாமல், தேவ சித்தத்திற்கு கீழ்ப்படியாதவன்.
எனவே, அன்பான வாசகரே! உங்கள் வாழ்க்கையில் இவற்றை உண்மையாக அனுபவிக்க முடிந்தால், தேவனுக்கு மகிமை உண்டாகட்டும்! உங்கள் வாழ்க்கை தேவ சித்தத்தின் படியான வாழ்க்கை.
பின்பு என்னைப் பற்றி என்ன?
“இதெல்லாம் சரி நன்றாக தான் இருக்கிறது, ஆனால் எனது தனிப்பட்ட முடிவுகளில் எனது கல்வி, எனது வேலை, எனது திருமணம் போன்றவற்றில் தேவனின் சித்தத்தை நான் எவ்வாறு கண்டறிவது என்பது பற்றி எதுவும் கூறவில்லையா? இவையெல்லாம் பொதுவாக எல்லோருக்கும் தெரிந்த விஷயங்கள் தானே? என்று நீங்கள் கேட்கலாம், அதை குறித்து பேசத்தான் வருகிறேன். தேவன் தம்முடைய வார்த்தையில் அவருடைய சித்தமாக வெளிப்படுத்திய ஐந்து முக்கிய குறிப்புகளை மேற்குறிப்பிட்டவை உள்ளன. பிரியாமான வாசகரே, மற்ற காரியங்களில் தேவனின் சித்தத்தை அறிய, முதலில் இந்த ஐந்து கொள்கைகளுக்கு உன்னை நீ நியாயமாக உங்களை சரிபார்த்துக் கொள்ளுங்கள்.
1) நீங்கள் உண்மையிலேயே இரட்சிக்கப்பட்டீர்களா?
2) ஆவிக்குரிய ரீதியில் உன் வாழ்க்கையை நீ வாழ்கிறதா? வேதத்தின்படியானதை மட்டும் ஏற்றுக்கொண்டு, வேதத்திற்கு முரணான அனைத்தையும் சமரசம் செய்யாமல் நிராகரிக்கும், இதயம் உங்களுக்கு இருக்கிறதா?
3) வேசித்தனம், காமம் மற்றும் அசுத்தமான அனைத்தையும் வெறுத்து, பரிசுத்தமான வாழ்க்கை வாழுகிறாயா?
4) மற்றவர்கள் முன்னிலையில் தேவனுக்கு மகிமையை சேர்க்கும் நற்சாட்சி உங்களிடம் உள்ளதா?
5) எல்லாச் சூழ்நிலைகளிலும் கர்த்தருக்குள் மகிழ்ந்து, இடைவிடாமல் ஜெபித்து, எல்லாவற்றிலும் தேவனுக்கு நன்றி செலுத்தும் மனப்பான்மை உங்களுக்கு இருக்கிறதா?
இவை அனைத்தும் உங்களில் உண்மையாக இருந்தால், உங்கள் ஆசைகள் உங்கள் சரீர மனத்தால் அல்ல, ஆனால் தேவனின் ஆவியால் கட்டுப்படுத்தப்படுகின்றன என்பதை சந்தேகத்திற்கு இடமின்றி சொல்லலாம். எனவே, இந்த ஐந்து காரியங்கள் உங்களில் உண்மையாக இருந்தால், உங்கள் தனிப்பட்ட முடிவில் நீங்கள் விரும்புவது தான் தேவனின் சித்தம். இது எங்கள் சொந்த யோசனை அல்ல. "கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு; அவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருள்செய்வார். உன் வழியைக் கர்த்தருக்கு ஒப்புவித்து, அவர்மேல் நம்பிக்கையாயிரு; அவரே காரியத்தை வாய்க்கப்பண்ணுவார்." (சங்கீதம் 37:4,5) என்று தேவனுடைய வார்த்தை தெளிவாக அறிவிக்கிறது. மேலே குறிப்பிட்டுள்ள ஐந்து கோட்பாடுகள் "கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு" என்ற வார்த்தையின் முழுமையான மற்றும் விரிவான விளக்கத்தை வழங்குகின்றன. இவைகளை உடையவானாக இருப்பவனே கர்த்தரில் உண்மையாகவே மனமகிழ்ச்சியாய் இருப்பான். ஆனால் இதைச் செய்பவர்களுக்கு & பின்பற்றுகிறவர்களுக்கு கிடைக்கும் தேவனுடைய வார்த்தை வாக்களிக்கும் ஆசீர்வாதம் என்ன? 'அவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருள்செய்வார், & நிறைவேற்றப்படும். இப்படியாக வாழ்பவரின் உள்ளத்தின் வேண்டுதல்கள் அனைத்தும் கண்டிப்பாக தேவ சித்தமே! என்பது இதன் பொருள். தேவன் ஏன் அவற்றை நிறைவேற்ற வேண்டும்?
கவனிக்கவும், யார் என்ன வேண்டினாலும் அதுவே! தேவ சித்தம் என்று நான் சொல்லவில்லை. சில நிபந்தனைகள் பொருந்தும். யாருடைய வாழ்வில் வேதத்தின் படியான ஐந்து கொள்கைகளை நான் காட்டியிருக்கிறேனோ, அவர்களுடைய வாழ்க்கையில் அனுபவரீதியாகவும், உண்மையாகவும், இருக்கிறதோ, அவர்களுடைய வேண்டுதல்கள் தேவனுடைய சித்தத்தின்படி இருக்கும் என்று நான் சொல்கிறேன்.
அன்புள்ள வாசகரே, 'தேவனின் சித்தத்தை நான் எவ்வாறு அறிவது’ என்ற கேள்விக்கு இதைவிட சிறந்த பதிலை எனக்கு கிடைக்கவில்லை, வேதாகமத்தில் தேவ சித்தமாக வெளிப்படுத்தப் பட்டுள்ள இந்தக் கொள்கைகளுக்கு நான் கீழ்ப்படிவதால், கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாய் இருக்கிறவனாக இருந்தால், என்னுடைய தனிப்பட்ட காரியங்களில், நான் என்ன படிக்க வேண்டும், என்ன வேலை செய்ய வேண்டும், யாரை திருமணம் செய்துக்கொள்ள வேண்டும், போன்றவற்றில் நான் கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாய் இருக்கிறேன். என்றால். என் இதயம் விரும்புவது & வேண்டுவது தேவ சித்தம். ஆதாலால் அவற்றை அவர் நிறைவேற்றுகிறார். மேலும், இனி தேவ சித்தத்தை அறிவதற்காக, யாரையோ தொடர்பு கொள்வதாலும், எதை எதையோ செய்வதை நிறுத்தி, தேவனின் முன்னிலையில் மண்டியிட்டு, வேதத்தின் படியான இந்த ஐந்து கொள்கைகளைப் பற்றி நம்மை நாமே ஆராய்ந்து பார்ப்பது பொருத்தமானது.
முடிக்கும் முன் ஒரு முக்கியமான எச்சரிக்கை!
இதுவரை, மேற்கூறியவற்றுடன் ஒரு முக்கியமான எச்சரிக்கையைச் சேர்க்க வேண்டியது அவசியம். 'நான் உண்மையாகவே இரட்சிக்கப்பட்டுள்ளேன். மேலே குறிப்பிட்டுள்ள வேதத்தின் படியான அனைத்து கொள்கைகளையும் என் வாழ்வில் அனுபவபூர்வமாக என்னால் பார்க்க முடிகிறது. 'கர்த்தரில் நான் மகிழ்ச்சியடைகிறேன்' என்று அவர்களை நினைத்து ஏமாற்றத்திற்கு ஆளான பல கிறிஸ்தவர்கள் உள்ளனர். தேவனுடைய சித்தத்தைக் கண்டறியும் இந்த முறை அத்தகையவர்கள் தங்கள் சொந்த ஆசைகளை & விருப்பங்களை நியாயப்படுத்த எளிதான வழியாக மாறும் அபாயம் உள்ளது. தேவ பிள்ளைகளின் பாதுகாப்பு மற்றும் உறுதிப்பாட்டிற்கான மேற் சொல்லப்பட்ட வார்த்தைகள், அவர்கள் மீண்டும் பிறந்ததாக & உண்மையாக இரட்சிக்கப்பட்டோம் என்ற மாயத்தில் வாழக்கூடியவர்கள் தங்கள் சுய விருப்பமான வாழ்க்கை சரியே என்ற எண்ணத்திற்கு இது வழிவகுக்க கூடாது. எனவே, இந்த எச்சரிக்கை மிக அவசியம்.
மேற்கூறிய நியமங்களை அனுபவித்த ஒரு நபரின் வேண்டுதல் எப்போதும் தேவனுடைய வார்த்தையின்படி தனது விருப்பங்களைக் கொண்டிருப்பான். எனவே, கர்த்தரில் மகிழ்ச்சியாக இருப்பவரின் இதயத்தின் ஆசைகள் & வேண்டுதல்கள் தேவ சித்தத்தின்படி என்பது எவ்வளவு உண்மையோ? அவருடைய வேண்டுதல்களின் குணாதிசயங்கள் அவர் கர்த்தரில் மனமகிழ்ச்சியாக இருக்கிறாரா? என்பதை தீர்மானிக்கிறது.
1) கர்த்தரில் மனமகிழ்ச்சியாக இருப்பவன் முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுவான். (மத்தேயு 6:33).
கர்த்தர் தம்முடைய இருதயத்தின் வேண்டுதல்களை நிறைவேற்றுகிறார் என்பது அவன் கர்த்தரில் மனமகிழ்ச்சியாக இருப்பதற்கு ஒரு காரணமல்ல. அது தான் முடிவு. தன் சொந்த ஆசைகளை & வேண்டுதல்களை திருப்திப்படுத்திக் கொள்வதற்கே கர்த்தரில் மனமகிழ்ச்சியாக இருப்பவன் சுயநலவாதி. கிறிஸ்துவோடு கூட எழுப்பப்பட்டவன் மேலே குறிப்பிடப் பட்டுள்ளவற்றைத் தேடுவான். “பால் யாங்கிச்சோ” போன்றவர்கள் தங்கள் இதயத்தின் ஆசைகளில் கவனம் செலுத்துபவர்கள் அதைப் பெற்றுக் கொள்வார்கள் என்று போதிக்கிறார்கள், ஆனால் தேவனின் வார்த்தை முதலில் அவருடைய இராஜ்யத்தையும் நீதியையும் தேட கற்றுக்கொடுக்கிறது, அதன் பிறகு நமக்கு தேவையான அனைத்தையும் தேவன் கொடுப்பார். என்று வேதம் போதிக்கிறது. தேவனை விட தனது இதயத்தின் ஆசைகளை நேசிப்பவனுக்கு தேவ சித்தத்தில் அக்கறை இருக்காது. கிறிஸ்துவை விட தங்களை அதிகமாக நேசிப்பவர்கள் அவருக்கு பாத்திரவான்கள் அல்ல என்பதை மறந்துவிடாதீர்கள்.
2) கர்த்தரில் மனமகிழ்ச்சியாக இருப்பவன் துன்மார்க்கருடைய ஆலோசனையில் நடக்க மாட்டான். (சங்கீதம் 1:1).
உதாரணமாக, தனது திருமணத்தில் முடிவெடுக்க வேண்டியிருக்கும் போது, இரட்சிக்க படாத உறவினர்களின் ஆலோசனையை பொருட்படுத்தாமல், மேலும் அந்த நபரின் பழைய இயல்பு அவரை எவ்வளவு தூண்டினாலும், "நான் இன்னும் மனுஷரைப் பிரியப்படுத்துகிறவனாயிருந்தால் நான் கிறிஸ்துவின் ஊழியக்காரனல்லவே." (கலாத்தியர் 1:10) என்ற வசனம் அவரைக் கடிந்துக்கொண்டு, தேவனுக்குப் பிரியமான முடிவை எடுக்கவும் அவரை வழிநடத்துகிறது. சாதி, வரதட்சணை போன்ற காரணங்களால் அவன் உலக மக்களைப் போல் நடந்து கொள்வதில்லை. ஒரு விசுவாசியுடன் இருக்க வேண்டும் என்ற அவரது இதயத்தின் விருப்பம், உலக சம்மந்தமான காரியங்கள் வேண்டாம் என்று சொல்லும் அளவுக்கு வலுவானது. நான் திருமணத்தை ஒரு உதாரணமாகக் குறிப்பிட்டேன், ஆனால் எல்லா காரியங்களிலும் தேவனின் பிள்ளைகள் தேவனுக்குப் பிரியமானதை விரும்புவார்கள், மற்றும் அவர் வெறுப்பதை அவர்களும் நிராகரிப்பார்கள். இந்த ஞானம் தேவ வசனத்தால் போதிக்கப்பட்டு அவர்கள் வழிநடத்தப் படுகிறார்கள். இந்த எண்ணம் இல்லாதவர்கள், தாங்கள் கர்த்தரில் மனமகிழ்ச்சியாக இருகிறோம், அல்லது அவர்களுடைய இருதயத்தின் வேண்டுதல்கள் அவருடைய சித்தத்தின் நியமத்தால் நிர்வகிக்கப்படுகிறது என்று நினைத்து தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்கிறார்கள்.
3) கர்த்தரில் மனமகிழ்ச்சியாக இருப்பவன் இந்த உலக நடத்தையின் படி நடக்க மாட்டான் (ரோமர் 12:2).
உதாரணமாக, சக கிறிஸ்தவர்கள் அரசாங்க வேலை வாய்ப்புக்காக போலி சான்றிதழ்களைப் பயன்படுத்துவதைப் பார்க்கும்போது, தவறான சம்பாத்தியம் தேவனிடமிருந்து வருவதில்லை. என்றும் அப்படிப்பட்ட பாவத்தில் அவர்கள் சாய்ந்துவிடாமல் நியாயமான வாய்ப்புக்காக தேவனை நோக்கி பார்ப்பான், ஏனென்றால் நான் தேவனின் பிள்ளை என்று எல்லா இடங்களிலும் சாட்சியாக இருப்பதால், அப்படிப்பட்ட தனது சக கிறிஸ்தவர்களுடன் அவர் ஒருபோதும் கைகோர்க்க மாட்டார், மேலும், SC சான்றிதழ்களின் பலன்களுக்காக மண்டல அலுவலகத்தில் மட்டுமே தங்களை இந்துக்கள் என்று கூறுகிறார்கள். "எகிப்தின் செல்வத்தை விட கிறிஸ்துவால் வரும் நிந்தையை பெரிய ஆசீர்வாதம்" என்று யாரும் அவனுக்கு போதிக்க தேவையில்லை. அவனுடைய மனப்பான்மை அதற்கு ஏற்ற விதமாக மாறும். அத்தகைய மனப்பான்மை இல்லாத இருதயம் இன்னும் துன்மார்க்கத்தின் பிடியில் உள்ளது என்பதில் சந்தேகமில்லை.
அன்புள்ள வாசகரே! தேவனுடைய வசனத்தின் எல்லைக்குள் மட்டுமே தன் சுதந்திரத்தைப் பயன்படுத்துபவனே கர்த்தரில் மனமகிழ்ச்சியாக இருப்பவன். என்பதை மறந்துவிடாதே. இந்த கொள்கை நம் வாழ்வில் தொடர்புடைய அனைத்து விஷயங்களிலும் பொருந்தும். ஒரு உண்மையான தேவ பிள்ளை தேவனின் சித்தத்தைக் கண்டடைவான். என்று சொல்வதை விட, அவனுடைய இதயத்தின் ஆசைகள் & வேண்டுதல்கள் தேவனின் சித்தப்படி இருக்கும் என்று கூறுவதே சிறந்தது. அதனால்தான் தேவன் அவற்றை நிறைவேற்றுகிறார். தேவன் தம்முடைய சித்தத்தின் எண்ணங்களை நம்முடைய இருதயங்களில் உண்டாக்கவும், அதை நிறைவேற்றும் வாழ்க்கையை நமக்கு தந்தருள்வாராக! ஆமென்...