இன்றைய நாட்களில் அநேகர் தாங்கள் ஆவிக்குரியவர்கள் என்றும், உண்மையான கிறிஸ்தவர்கள்என்றும் காட்டிகொண்டும், வெளிப்பிரகாரமாக ஆடை அணிவதிலும், குறிப்பிட்ட சபைக்கு செல்வதில் தாங்கள் பெருமை பாராட்டிக்கொள்வதிலும், தொடர்ந்து வாசிக்க...
உண்மையான ஆவிக்குரியவன் யார்?
இன்றைய நாட்களில் அநேகர் தாங்கள் ஆவிக்குரியவர்கள் என்றும், உண்மையான கிறிஸ்தவர்கள் என்றும் காட்டிக்கொள்கிறார்கள். இவர்கள் வெளிப்புறமான ஆடைகள் அணிவதிலும், குறிப்பிட்ட சபைக்குச் செல்வதைப் பெருமையாகப் பாராட்டிக்கொள்வதிலும், ஆழ்ந்த சத்தியங்களைக் கேட்பதினால் தாங்கள் மற்றவர்களைவிடச் சிறந்தவர்கள் என்று சொல்லிக்கொள்வதிலும் நேரத்தை வீணடிக்கிறார்கள். ஆனால், வேதம் யாரை உண்மையில் "ஆவிக்குரியவர்கள்" என்றும் "கிறிஸ்தவர்கள்" என்றும் அங்கீகரிக்கிறது என்று நாம் ஆராய்ந்து பார்ப்போம்.
பல ஆண்டுகள் சபைக்குச் சென்றும், கூட்டங்களில் கலந்துகொண்டும், சத்தியங்களை ஏன் கேட்கிறோம் என்றே தெரியாமல் அநேகர் ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.
"ஆவிக்குரியவன்" என்பதற்குரிய கிரேக்க வார்த்தை "நிமோடிக்கோஸ்" (Pneumatikos). இதன் பொருள், "தேவனுடைய ஆவியின் ஆளுகையில் இருப்பவன்" என்பதாகும்.
ஒரு ஆவிக்குரியவனின் அடையாளங்கள் இதோ:
1. எல்லாவற்றையும் நிதானித்து அறிவான் (1 கொரிந்தியர் 2:15)
"நிதானித்து" என்பதற்குரிய கிரேக்க வார்த்தை "அனாக்ரிநோ" (Anakrino). இதற்குப் பல அர்த்தங்கள் உண்டு:
-
ஜாக்கிரதையாய்ச் சோதனை செய்பவன்.
-
தனக்குத்தானே கேள்வி கேட்பவன்.
-
மதிப்பீடு செய்பவன்.
-
குறை சொல்பவனைச் சோதனை செய்பவன்.
-
சரியான தீர்மானங்களை எடுப்பவன்.
-
உணர்ச்சிவசப்படாதவன்.
-
நியாயத்தின் பக்கம் நிற்பவன்.
இந்த அர்த்தங்கள் ஒவ்வொன்றும் ஒரு செய்தியை நமக்கு உணர்த்துகின்றன. இன்றைய நாட்களில் அநேக கிறிஸ்தவர்கள், "பிடித்த முயலுக்கு மூன்றே கால்" என்பது போல, தாங்கள் விவாதத்தில் ஜெயிக்க வேண்டும் என்று இருக்கிறார்களே தவிர, மேற்சொன்னது போல் நிதானிப்பது இல்லை. நீங்கள் ஆவிக்குரியவர்கள் என்பதை இந்த நிதானிப்பதில் காட்டுங்கள்; நிதானித்து முடிவெடுங்கள்.
2. பலவானாய் இருப்பான் (அப் 1:8, 1 கொரி 4:20, 1 கொரி 3:2, ஏசாயா 2:3)
"பெலன்" என்பதற்குரிய கிரேக்க வார்த்தை "டுனாமீஸ்" (Dunamis). இது:
-
சாத்தானை மேற்கொள்ளக்கூடிய பெலன்.
-
பாவத்தை மேற்கொள்ளக்கூடிய பெலன்.
-
சகித்துக்கொள்ளக்கூடிய பெலன்.
சிலர் தங்களை ஆவிக்குரியவர்கள் என்று கூறிக்கொள்வார்கள்; தாங்கள் மற்றவர்களைவிடச் சத்தியத்தைச் சரியாகக் கடைப்பிடிக்கின்றோம் என்று காட்டிக்கொள்வார்கள்; மிகுந்த பரிசுத்தவான்கள் போல் பேசுவார்கள். ஆனால், யாராவது கொஞ்சம் சீண்டினால் மண்டையை உடைத்துவிடுவார்கள். அவர்களைப்போலக் கெட்ட வார்த்தை யாரும் பேச முடியாது. யானையைப் போலப் பிளிறுவார்கள். ஆனால், அவர்களுக்குச் சகித்துக்கொள்ளக்கூடிய பெலன் இருக்காது. அதிகாலையிலோ, மற்ற நேரங்களிலோ ஜெபிக்க மாட்டார்கள். நாம் ஆவிக்குரியவர்கள் என்பதைச் சகித்துக்கொள்வதில்தான் காட்ட வேண்டும்.
3. சுவிசேஷ ஊழியத்தைச் செய்வான் (1 கொரிந்தியர் 9:16)
ஆவிக்குரியவன் சுவிசேஷ ஊழியத்தை மிக இலகுவாக எண்ணமாட்டான். இதற்குத்தான் தேவன் நம்மை அழைத்திருக்கிறார். வீடு, பணம், வாகனம், உணவு, உடை மற்றும் சுகமான படுக்கைகள் என எல்லாவற்றையும் தேவன் நமக்குக் கொடுப்பது, நாம் எப்படியாவது ஒரு மனிதனுக்குச் சுவிசேஷம் அறிவித்து, அவனைப் பரலோகம் கொண்டுவர வேண்டும் என்பதற்காகவே.
வாழ்க்கையில் இவ்வளவு பிரசங்கங்கள் கேட்டும், பல ஆண்டுகள் சபைக்குச் சென்றும், கூட்டங்களுக்குச் சென்றும், ஒருவன்கூட உங்கள் மூலம் மனந்திரும்பவில்லையென்றால், நீங்கள் "ஆவிக்குரியவர்கள், கிறிஸ்தவர்கள், கர்த்தர் எங்களோடு இருக்கிறார்" என்று சொல்லிக்கொள்வது அர்த்தமற்றது. ஆழமாய் யோசித்துப் பாருங்கள். இத்தனை காரியங்களின் விளைவுகள் என்ன?
4. சாட்சியாக வாழ்வான் (அப்போஸ்தலர் 1:8)
இந்த வசனத்தில் வருகிற "சாட்சி" என்ற வார்த்தை, சபையில் "தலை வலித்தது, ஜெபித்தேன், சுகமானது" என்று ஞாயிற்றுக்கிழமை வழக்கமாகச் சொல்லுகின்ற சாட்சி அல்ல. இதற்குரிய கிரேக்க வார்த்தை "மார்ட்டியோ" (Martureo / Martys). அதாவது:
-
இரத்தசாட்சியாக வாழ்வது.
-
இரத்த சாட்சியாக மரிப்பது.
மரிப்பதைவிட இரத்தசாட்சியாக வாழ்வது கடினம். பவுல், "நான் அனுதினமும் சாகிறேன்" என்று கூறுகின்றார். ஆவிக்குரியவன் எந்தச் சூழ்நிலையிலும் சாட்சியை இழந்துபோக மாட்டான். தன்னுடைய வாழ்க்கையில் எல்லா உபத்திரவங்களையும் தாங்கி கிறிஸ்துவை வெளிப்படுத்துவான். இன்றைக்கு ஊழியம் அநேகருக்கு வயிற்றுப் பிழைப்பாகிவிட்டதினாலும், தேவனுடைய மன்னிப்பை எளிமையாக எடுத்துக்கொள்வதினாலும், சாட்சியில்லாத வாழ்க்கை அவர்களை மட்டுமல்ல, சாட்சியோடு வாழ்கிற மற்றவர்களையும் ஜனங்கள் தவறாகப் புரிந்துகொள்ள ஏதுவாகிறது. ஆவிக்குரியவன் என்றால், அவனுடைய சாட்சிதான் அவனை ஆவிக்குரியவன் என்று காட்டும். சாட்சியில்லாவிட்டால், 1000 ஆழமான பிரசங்கங்கள் செய்தாலும் தேவன் கிரியை செய்யமாட்டார் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.
5. தனக்கு தேவன் கொடுத்த தோட்டமாகிய சபையில் இருப்பான் (மத்தேயு 20:1)
"தோட்டம்" என்றால் "சபை" என்று அர்த்தம்; இது நமக்குத் தெரிந்த ஒன்றுதான்.
-
நாபோத்துக்கு ஒரு திராட்சத்தோட்டம் இருந்தது (1 ராஜாக்கள் 21:1).
-
சாலொமோனுக்கு ஒரு தோட்டம் இருந்தது (உன்னதப்பாட்டு 8:11).
-
என் நேசருக்கு ஒரு திராட்சத்தோட்டம் உண்டு (ஏசாயா 5:1).
-
இயேசுவுக்கு ஒரு தோட்டம் இருந்தது (யோவான் 18:1).
அதேபோல், ஒவ்வொரு விசுவாசிக்கும் ஒரு தோட்டம் (சபை) உண்டு. அதை ஜெபித்துத் தேர்வு செய்ய வேண்டும். அநேகர், "அதுவும் சபைதானே, அங்கும் பைபிளைத்தானே போதிக்கின்றார்கள், அங்கும் இயேசுவைத்தானே கும்பிடுகிறார்கள்" என்று சொல்வார்கள். ஆகவே, ஒவ்வொரு சபையாகச் சென்று, "மார்க்கம் தப்பி அலைகிற நட்சத்திரம்" என்று யூதா கூறுவது போல அலைந்து, பிறகு எந்தச் சபையும் சரியில்லை என்று அவர்கள் ஒரு சபையை தேவன் சொல்லாமலே ஆரம்பிப்பார்கள்.
100 சதவீதம் நல்ல சபையை எதிர்பார்ப்பவர்கள் உடனடியாகப் பரலோகம் செல்லலாம். ஆனால், 75 சதவீதம் நல்ல சபை எங்கு இருக்கிறது என்று தேடிக் கண்டுபிடியுங்கள். நாம் சபையை மாற்றுவது அல்ல, சபை நம்மை மாற்றுவதுதான் விஷயம்.
ஒருவர் சபையை விட்டு மாறிப்போக வேண்டுமென்றால் கீழ்க்கண்ட காரணங்களுக்காக மட்டுமே இருக்க வேண்டும்:
-
ஊழியன் (பாஸ்டர்) பெண்கள் விஷயத்தில் பாவத்தில் வீழ்ந்துவிட்டால்.
-
ஒரு பாஸ்டர் அளவுக்கு மீறித் தன் குடும்பத்திற்குச் சொத்து சேர்க்க ஆரம்பித்தால்.
-
பாஸ்டர் தவறான உபதேசத்தைப் போதித்தால்.
மற்றபடி சிறிய விஷயங்களுக்கெல்லாம் அல்லது சின்னப் பிரச்சனைகளுக்கெல்லாம் சபையை மாற்றுவது சரியல்ல. ஆகவே, ஆவிக்குரியவன் கர்த்தர் தன் வேலைக்கு அமர்த்தின தோட்டத்தில் (சபையில்) இருந்து வேலை செய்து கூலியைப் பெற்றுக்கொள்வான். விசுவாசிகளாகிய நாம் யாவரும் ஒருநாள் ஒரே இடத்தில், ஒரே மேய்ப்பனாகிய இயேசுவின் கீழ் இருக்கப் போகிறோம் என்பதை மறந்துவிட வேண்டாம்.