நாம் பெற்றுக்கொண்ட இரட்சிப்புக்கும் வேதம் கட்டளையிடும் நற்கிரியைகளுக்கும் உள்ள தொடர்பைப் பற்றி பார்ப்போம். தொடர்ந்து வாசிக்க...
நாம் பெற்றுக்கொண்ட இரட்சிப்புக்கும் வேதம் கட்டளையிடும் நற்கிரியைகளுக்கும் உள்ள தொடர்பைப் பற்றி பார்ப்போம். இந்த அவதானிப்பை & ஆராய்ச்சியை 5 பிரிவுகளாகப் பிரித்துள்ளேன். இங்கு குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து கரியங்களையும் படித்த பிறகு, இரட்சிப்புக்கும் நற்செயல்களுக்கும் இடையே உள்ள சரியான (அதாவது) தொடர்பை நீங்கள் புரிந்துக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.
1) மனிதன் பாவத்தில் முற்றிலும் மரித்துவிட்டான்.
மனிதன் பாவத்தில் முற்றிலும் மறித்துவிட்டான். இதைக்குறித்து வேதம் போதிக்கும் சத்தியம் என்னவென்றால், மனிதன் ஒரு பாவி என்றும், பாவ சுபாவத்தோடு & பாவத்திலே தாய் அவனை கர்ப்பம் தரிக்கிறாள் என்பதே! ஆனால், இதற்கு நேர்மாறாக, பலர் மனிதன் பிறக்கும்போது நல்லவனாகவே பிறகிறான் என்றும், ஜென்ம பாவம் அவனுக்கு இல்லையென்றும், மனிதன் பாவத்தினால் முழுமையாக மரிக்கவில்லை, என்றும் போதிக்கிறார்கள்.
அப்படியானால் வேத சத்தியம் என்ன சொல்லுகிறது? மனிதன் உண்மையாகவே பாவத்தில் மரித்துவிட்டானா? அல்லது பாவம் அவனுக்குள் இருந்தாலும் அவன் இன்னும் சிறுதளவு உயிருடன் இருக்கிறாரா?
"மனுஷனுடைய அக்கிரமம் பூமியிலே பெருகினது என்றும், அவன் இருதயத்து நினைவுகளின் தோற்றமெல்லாம் நித்தமும் பொல்லாததே (Evil) என்றும், கர்த்தர் கண்டு," (ஆதியாகமம் 6:5)
இந்த வசனத்தில் இரண்டு வார்த்தைகளைக் கவனியுங்கள் 1, "நித்தமும்” & “Always” “இருதயத்து நினைவுகளின் தோற்றமெல்லாம்” & “Every Intention."
இந்த சந்தர்ப்பத்தில் தேவன் என்ன சொல்லுகிறார்? மனிதனுடைய எண்ணங்கள் சிறிதளவு மட்டுமே பொல்லாதது என்கிறாரா? அல்லது அனைத்துமே பொல்லாதது என்கிறாரா? இந்த பொல்லாத எண்ணம் சிறிது காலம் என்கிறாரா? அல்லது நித்தமும் பொல்லாதது என்கிறாரா? இதன் மூலம் மனிதனின் நிலையைக் குறித்து நம்மால் புரிந்துக்கொள்ள முடிகிறது, மனிதன் கொஞ்சம் நல்லவன், கொஞ்சம் கெட்டவன் அல்ல. கொஞ்சம் நீதிமான், கொஞ்சம் அநீதி செய்பவன் அல்ல, அவன் முற்றிலும் துன்மார்க்கன், அக்கிரமத்தை விரும்புபவன், பொல்லாத & பாவமுள்ள இதயம் கொண்டவன்.
ஒந்த வசனப்பகுதியிலிருந்து நீங்கள் ஒரு கேள்வியைக் கேட்கலாம், இந்த கருத்திற்கு நீங்கள் காட்டிய வசனம் நோவாவின் நாளில் இருந்த மக்களைப் பற்றியது அல்லவா, இது எப்படி அனைவருக்கும் பொருந்தும்? எனவே மனிதர்கள் அனைவரையும் பற்றி என்ன சொல்கிறது என்று பார்ப்போம்.
"ஆதலால் மனுபுத்திரரின் இருதயம் தீமையினால் நிறைந்திருக்கிறது; அவர்கள் உயிரோடிருக்கும் நாளளவும் அவர்கள் இருதயம் பைத்தியங்கொண்டிருந்து," (பிரசங்கி 9:3)
"அவர்கள் புத்தியில் அந்தகாரப்பட்டு, தங்கள் இருதயகடினத்தினால் தங்களில் இருக்கும் அறியாமையினாலே தேவனுடைய ஜீவனுக்கு அந்நியராயிருந்து; உணர்வில்லாதவர்களாய், சகலவித அசுத்தங்களையும் ஆவலோடே நடப்பிக்கும்படி, தங்களைக் காமவிகாரத்திற்கு ஒப்புக்கொடுத்திருக்கிறார்கள்." (எபேசியர் 4:18)
“சுத்தமுள்ளவர்களுக்குச் சகலமும் சுத்தமாயிருக்கும்; அசுத்தமுள்ளவர்களுக்கும் அவிசுவாசமுள்ளவர்களுக்கும் ஒன்றும் சுத்தமாயிராது; அவர்களுடைய புத்தியும் மனச்சாட்சியும் அசுத்தமாயிருக்கும்.” (தீத்து 1:15)
“தேவனை அறியும் அறிவைப் பற்றிக்கொண்டிருக்க அவர்களுக்கு மனதில்லாதிருந்தபடியால், தகாதவைகளைச் செய்யும்படி, தேவன் அவர்களைக் கேடான சிந்தைக்கு ஒப்புக்கொடுத்தார்.” (ரோமர் 1:28)
நாம் இந்த வசனத்திலிருந்து புரிந்துக்கொள்வது என்ன?
மனிதன் "தீமை நிறைந்தவன்" என்று சாலொமோன் கூறுகிறார்; மற்றும் "இருளுள்ள இருதயம்", "அசுத்தமான மனசாட்சி", "இதயத்தின் கடினத்தன்மை", "துர்குணம்" என்று அப்போஸ்தலனாகிய பவுல் கூறுகிறார்.
இயேசு, இவ்விதமாக சொன்னார்: அதற்கு நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? தேவன் ஒருவர் தவிர நல்லவன் ஒருவனும் இல்லையே; இவ்வாறு இயேசு கிறிஸ்து சொன்னதால் அவரை தேவனாக உணர்ந்து அவர்கள் 'நல்ல போதகர்' என்று சொல்லியிருக்கலாம். அல்லது இயேசு கிறிஸ்துவை மனித நேயத்தில் சிறந்தவர் என்று அவ்வாறு குறிப்பிட்டிருக்கலாம். ஆனால், கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தேவனும், நல்லவரும் என அவர்கள் தெரிந்துக் கொண்டார்கள்.
மிகத் தெளிவாக, ஆண்டவர் சொல்லுகிறார். இந்த உலகில் நல்லவர் என்று யாரும் இல்லை, தேவன் ஒருவரே நல்லவர் (இயேசு கிறிஸ்து மட்டுமே தேவன்) எல்லா மனிதர்களும் தீமை செய்கிறார்கள் தேவன் மனிதர்களின் பாவத்தின் நிமித்தம் நோவாவின் காலத்தில் அனைவரையும் அழித்த பிறகு கர்த்தர் இவ்விதமாக சொல்லுகிறார்.
"அப்பொழுது கர்த்தர்: இனி நான் மனுஷன் நிமித்தம் பூமியைச் சபிப்பதில்லை; மனுஷனுடைய இருதயத்தின் நினைவுகள் அவன் சிறுவயதுதொடங்கிப் பொல்லாததாயிருக்கிறது;” (ஆதியாகமம் 8:21)
தேவன் இங்கே சொல்வது என்னவென்றால், " மனுஷனுடைய இருதயத்தின் நினைவுகள் அவன் சிறுவயதுதொடங்கிப் பொல்லாததாயிருக்கிறது”
நோவாவின் காலத்திற்குப் பிறகு மனிதர்கள் நல்ல இருதயம் உள்ளவர்களாக மாறவில்லை (அதற்கு முன் நல்லவர்களாகவும் இல்லை) எல்லா காலங்களிலும், மனிதன் முற்றிலும் வீழ்ச்சியடைந்த நிலையிலும், பாவத்திற்கு அடிமைப்பட்டு, பாவத்தை மட்டுமே செய்கிறவனாக இருக்கிறான்.
2) மனிதன் தன்னுடைய இரட்சிப்பை சுயமாக சம்பாதிக்க முடியாது.
இப்படிப்பட்ட பொல்லாத பாவியாகவும், கடின இதயம் கொண்டவனாகவும், தீய எண்ணங்கள் கொண்டவன் எப்படி தேவனுக்கு முன் உத்தமனாக நிற்க முடியும்? இது மனித சக்திக்கும் மனித முயற்சிக்கும் எட்டாத காரியம்?
“எத்தியோப்பியன் தன் தோலையும், சிவிங்கி தன் புள்ளிகளையும் மாற்றக்கூடுமோ? கூடுமானால், தீமைசெய்யப் பழகின நீங்களும் நன்மைசெய்யக்கூடும்.” (எரேமியா 13:23)
"முதியோர் மொழிப்படியே, ஆகாதவர்களிடத்திலே ஆகாமியம் பிறக்கும்; ஆகையால் உம்முடைய பேரில் நான் கைபோடுவதில்லை.” (1 சாமுவேல் 24:13)
“எப்படியென்றால், மாம்சசிந்தை தேவனுக்கு விரோதமான பகை; அது தேவனுடைய நியாயப்பிரமாணத்துக்குக் கீழ்ப்படியாமலும், கீழ்ப்படியக்கூடாமலும் இருக்கிறது. மாம்சத்துக்குட்பட்டவர்கள் தேவனுக்குப் பிரியமாயிருக்கமாட்டார்கள்.” (ரோமர் 8:7,8)
மனிதன் தேவன் முன் உத்தமானாக நிற்க முடியுமா? அது சாத்தியமற்றது என்று வேதம் மிகவும் ஆணித்தனமாக சொல்லுகிறது.
எத்தியோப்பியன் தன்னுடைய தோலை மாற்றிக்கொள்ள முடியாது. சிவிங்கி தன் புள்ளிகளையும் மாற்றக்கொள்ள முடியாது. தீமைசெய்யப் பழகின மனிதன் நன்மைசெய்ய முடியாது. ஒரு பாவியால் தன் பாவ குணத்தை மாற்ற முடியாது. துன்மார்க்கன் துன்மார்க்கத்தை மட்டுமே செய்ய முடியும், மாமிசத்தை பின்பற்றுகிறவர்கள் மாம்சத்தின்படியே நடக்க முடியும்.
மனிதன் தன் இயல்பை மாற்றிக்கொள்ள முடியாது என்பதை இந்த கோட்பாடு மிகத் தெளிவாகச் சொல்கிறது. மனிதன் ஒரு பாவி, அவனால் தன் பாவ இயல்பை மாற்ற முடியாது, சரிரத்தை விட்டு தன் ஆத்தும விருப்பப்படி அவனுடைய முயற்சியினால் நடந்துக்கொள்ள முடியாது. அப்படியானால் மனிதன் ஒன்றுமே செய்யமுடியாதா? செய்ய முடிந்த முயற்சி எதுவும் இல்லையா? என்று நீங்கள் கேட்கலாம். வேதம் போதிக்கும் சத்தியத்தை மீண்டும் ஒருமுறை உங்களுக்கு சொல்லுகிறேன்.
மனிதனால் எதுவும் செய்ய முடியாதா? என்று நீங்கள் என்னிடம் கேட்கலாம். வேதத்தின் உண்மையை மீண்டும் சொல்கிறேன். -
“துன்மார்க்கருடைய பலி கர்த்தருக்கு அருவருப்பானது.” (நீதிமொழிகள் 15:8)
"நீதிமானுடைய மனம் பிரதியுத்தரம் சொல்ல யோசிக்கும்; துன்மார்க்கனுடைய வாயோ தீமைகளைக் கொப்பளிக்கும்." (நீதிமொழிகள் 15:28)
"துன்மார்க்கருக்குக் கர்த்தர் தூரமாயிருக்கிறார்; நீதிமான்களின் ஜெபத்தையோ கேட்கிறார்." (நீதிமொழிகள் 15:29)
"மூடனுக்கு ஞானம் எட்டாத உயரமாயிருக்கும்; அவன் நியாயஸ்தலத்தில் தன் வாயைத் திறவான். தீவினைசெய்ய உபாயஞ்செய்கிறவன் துஷ்டன் என்னப்படுவான். தீயநோக்கம் பாவமாம்; பரியாசக்காரன் மனுஷருக்கு அருவருப்பானவன். (நீதிமொழிகள் 24:7,8,9)
துன்மார்க்கருக்கு எதைச் செய்தாலும், அவர்கள் தேவனுக்கு முன்பாக அழுக்கான கந்தல் துணியை போன்றதாக இருக்கும், என்பதை இந்த வசனங்கள் நமக்குக் கூறுகின்றன. துன்மார்க்கரின் நலன் கூட பாவமானது என்று தேவன் சொல்லுகிறார். அதுமட்டுமல்லாமல், துன்மார்க்கரின் பாதை, அவர்களின் சிந்தனை மற்றும் வாழ்க்கை முறை, அவர்கள் செலுத்தும் பலிகள், அவர்களுடைய வாயின் வார்த்தைகள் மற்றும் அவர்களின் ஜெபங்கள் ஆகியவை தேவனுக்கு பிரியமில்லாதவை என்றும் கர்த்தரின் பார்வையில் அருவருப்பானவை என்றும் கூறப்படுகிறது. இதன் பொருள், மனிதன் தனது இயழ்பான நிலையில் (சரீர இயல்பு & பாவம்) தேவனின் பார்வையில் நீதிமான் என்று ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும், தேவனின் கிருபை மற்றும் விசுவாசம் என்ற பரிசு இல்லாமல் அவனால் எதுவும் செய்ய முடியாது. மனிதன் தன்னுடைய சொந்த முயற்சியால் இரட்சிப்பு அடைய முடியாது.
மற்றொரு வார்த்தையைப் புரிந்து கொள்வோம்:
"மாம்சத்துக்குட்பட்டவர்கள் தேவனுக்குப் பிரியமாயிருக்கமாட்டார்கள். தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், நீங்கள் மாம்சத்துக்குட்பட்டவர்களாயிராமல் ஆவிக்குட்பட்டவர்களாயிருப்பீர்கள்.” (ரோமர் 8:8,9)
"விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாதகாரியம்;" (எபிரெயர் 11:6)
மாம்சத்துக்கு உட்பட்டவர்கள் என்றால் தேவனின் ஆவி இல்லாதன் என்று பொருள். ஆத்துமாவின் இயல்பு சரீர இயல்பிலிருந்து வேறுபட்டது என்பதை இந்த வசனத்திலிருந்து நாம் காண்கிறோம். ஆனால் இங்கே நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால், சரீர இயல்புடையவர்கள் தேவனைப் பிரியப்படுத்த முடியாது, ஆவிக்குரிய இயல்பயை உடையவர் மட்டுமே தேவனைப் பிரியப்படுத்த முடியும், விசுவாசம் இல்லாமல் தேவனைப் பிரியப்படுத்த முடியாது.
இதிலிருந்து, விசுவாசம் என்பது ஆவிக்குரிய இயல்பயை உடையவர்களுக்கு மட்டுமே இருக்கிறது என்பதை நாம் அறிகிறோம். பாவ நிலையில் & பாவ சுபாவ நிலையில் உள்ள எந்த மனிதனுக்கும் விசுவாசம் சுயமாக வருவதில்லை, அது தேவனின் கிருபையின் வெளிப்பாடாகிய செயல்பாட்டினால் விசுவாசம் உருவாகிறது என்பதை பார்க்கிறோம். ஆகையால்தான் எந்த மனிதனும் தன்னுடைய இரட்சிப்பை அடைய முடியாது.
3) தேவனே இரட்சிப்பை வழங்குபவர்
'நானே இரட்சிப்பவர்' என்று தேவன் சொல்கிறார்.
“நான், நானே கர்த்தர்; என்னையல்லாமல் இரட்சகர் இல்லை. நானே அறிவித்து, இரட்சித்து, விளங்கப்பண்ணினேன்; உங்களில் இப்படிச் செய்யத்தக்க அந்நிய தேவன் இல்லை; நானே தேவன் என்பதற்கு நீங்கள் எனக்குச் சாட்சிகள் என்று கர்த்தர் சொல்லுகிறார். (ஏசாயா 43:11,12)
தேவனைத் தவிர வேறொரு இரட்சகர் இல்லை. இந்த சந்தர்ப்பத்தில் தேவன் இஸ்ரவேலர்களை எகிப்திலிருந்து விடுபட்டதை அவர்களுக்கு நினைவூட்டுகிறார். எகிப்திலிருந்து இஸ்ரவேலர்கள் தங்களை விடுவித்துக் கொள்ள அவர்களால் முடியாது. ஏறக்குறைய 400 ஆண்டுகள் அடிமைத்தனத்தில் இருந்தார்கள், அவர்கள் செய்ததெல்லாம் அவர்களை விடுவிக்குமாறு தேவனிடம் கூக்குரலிட்டு வேண்டியதுதான். இஸ்ரவேலர்களை எகிப்திலிருந்து விடுவித்த தேவன், தம்முடைய வலிமைமிக்கக் கரத்தால் அவர்களை விடுவித்தவரே உண்மையான மீட்பர்.
சரீர விடுதலை, அதாவது எகிப்திய சிறையிருப்பிலிருந்து விடுதலை, அவர்களின் சொந்த போராட்டத்தால் சம்பாதித்தது அல்ல, மேலும் ஆவிக்குறிய விடுதலை, அதாவது சாத்தானின் சிறையிருப்பிலிருந்து & அடிமைத் தனத்திலிருந்து மனிதன் எவ்வாறு தன்னைக் இரட்ச்சித்துக் கொள்ள முடியும்? தேவன் தம்முடைய வல்லமையுள்ள புயத்தால் சிறைபிடிக்கப் பட்டவர்களை சாத்தானிடம் மீட்டெடுக்கவில்லை என்றால், அவர்கள் என்றென்றும் அந்த அந்தகரத்திலே இருப்பார்கள்.
இந்த மாபெரும் இரட்சிப்பை தேவன் எவ்வாறு அளிக்கிறார் என்று பார்ப்போம்:
- A) அறிவிப்பாளர்களை அனுப்புதல்.
“அவரை விசுவாசியாதவர்கள் எப்படி அவரைத் தொழுதுகொள்ளுவார்கள்? அவரைக் குறித்துக் கேள்விப்படாதவர்கள் எப்படி விசுவாசிப்பார்கள்? பிரசங்கிக்கிறவன் இல்லாவிட்டால் எப்படிக் கேள்விப்படுவார்கள்? அனுப்பப்படாவிட்டால் எப்படிப் பிரசங்கிப்பார்கள்?" (ரோமர் 10:14,15)
தேவன் தம்முடைய சுவிசேஷத்தை அறிவப்பவர்களை அனுப்புகிறார். சுவிசேஷத்தைக் கேட்காமல் & கேள்விப்படாமல் யாரும் இரட்சிக்கப்பட முடியாது, மேலும் அறிவிக்காமல் (இயேசுவைப் பற்றி) யாரும் விசுவாசிக்க முடியாது.
- B) அந்த வார்த்தைகளை உணரத்தக்க இதயத்தைத் திறப்பது.
“அப்பொழுது தியத்தீரா ஊராளும் இரத்தாம்பரம் விற்கிறவளும் தேவனை வணங்குகிறவளுமாகிய லீதியாள் என்னும் பேருள்ள ஒரு ஸ்திரீ கேட்டுக்கொண்டிருந்தாள்; பவுல் சொல்லியவைகளைக் கவனிக்கும்படி கர்த்தர் அவள் இருதயத்தைத் திறந்தருளினார்.” (அப்போஸ்தலர் 16:14)
அப்போஸ்தலனாகிய பவுலின் வார்த்தைகளைப் உணரும் படியாக & பெற்றுக்கொள்ளும் படியாக லீதியாளின் மனக்கண்கள் திறக்கப்பட்டது போல, தேவனால் முன்குறித்த & தேர்ந்தெடுக்கப் பட்டவர்களின் இதயத்தைத் திறப்பார், அவர்களுக்குப் பிரசங்கிக்கப்படும் வார்த்தையை & சுவிசேஷத்தை கேட்கும் படி அவர்களுடைய இருதயத்தை தேவன் தயார் செய்வார்.
- C) இரட்சிப்புக்கான விசுவாசத்தின் பரிசை வழங்குதல்.
“கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு; ஒருவரும் பெருமைபாராட்டாதபடிக்கு இது கிரியைகளினால் உண்டானதல்ல;” (எபேசியர் 2:8,9)
இந்த வசனத்தில் பவுல் இரட்சிப்பைப் பற்றி பேசும்போது, அது செயல்பாடுகளினால் உண்டானது அல்ல என்று கூறுகிறார். கிரியைகளால் & செயல்பாடுகளினால் இரட்சிப்பு உண்டானது அல்ல என்றால், இரட்சிப்பின் ஆதாரமான விசுவாசம் கூட கிரியை அல்ல என்பதை நாம் புரிந்துக்கொள்ள வேண்டும். இரட்சிப்பு என்பது தேவனின் ஈவு என்றால், இரட்சிப்பின் ஆதாரமான விசுவாசமும் தேவன் அருளும் ஈவு தான். அதாவது, சுவிசேஷத்தைக் கேட்க வைத்த தேவன், அந்த சுவிசேஷத்தைப் புரிந்துகொள்ள நம்முடைய இருதயத்தைத் திறந்து, சுவிசேஷத்தின் சத்தியம் வாயிழாக, இயேசு கிறிஸ்துவின் மீது விசுவாசம் என்ற ஈவை நமக்குத் தந்தார்.
- D) அர்த்தமுள்ள மனமாற்றம் & மனந்திரும்புதலை வழங்குதல்.
“இவைகளை அவர்கள் கேட்டபொழுது அமர்ந்திருந்து: அப்படியானால் ஜீவனுக்கேதுவான மனந்திரும்புதலைத் தேவன் புறஜாதியாருக்கும் அருளிச்செய்தார் என்று சொல்லி, தேவனை மகிமைப்படுத்தினார்கள். (அப்போஸ்தலர் 11:18)
"(அவர்கள்) சத்தியத்தை அறியும்படி தேவன் அவர்களுக்கு மனந்திரும்புதலை அருளத்தக்கதாகவும்," (2 தீமோத்தேயு 2:24)
"அந்த நாட்களுக்குப்பின்பு நான் இஸ்ரவேல் குடும்பத்தாரோடே பண்ணும் உடன்படிக்கையாவது: என்னுடைய பிரமாணங்களை அவர்களுடைய மனதிலே வைத்து, அவர்களுடைய இருதயங்களில் அவைகளை எழுதுவேன்; நான் அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள்.” (எபிரெயர் 8:10)
இந்த வசனங்களிலிருந்து, நாம் மிக தெளிவாக பார்ப்பது மனிதனுடைய இதயத்தை மாற்றுபவர் தேவன், மனந்திரும்புதலுக்கு வழி நடத்துபவர் தேவன் என்றும், ஜீவ பாதைக்கு நம்முடைய இதய மாற்றத்தைத் தருபவர் தேவன் என்பதை நாம் மிகத் தெளிவாக அறிவோம்.
- E) நமக்குத் தேவையான அனைத்தையும் தேவனை அறிகிற தேவனே வழுங்குதல்.
"தேவனையும் நம்முடைய கர்த்தராகிய இயேசுவையும் அறிகிற அறிவினால் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் பெருகக்கடவது. தம்முடைய மகிமையினாலும் காருணியத்தினாலும் நம்மை அழைத்தவரை அறிகிற அறிவினாலே ஜீவனுக்கும் தேவபக்திக்கும் வேண்டிய யாவற்றையும், அவருடைய திவ்விய வல்லமையானது நமக்குத் தந்தருளினதுமன்றி,” (2 பேதுரு 1:2)
தேவன் நமக்குத் தேவையான அனைத்தையும் தருகிறார் என்று சொல்லும் போது தேவன் 'உலக வாழ்க்கைக்கும் தேவ பக்திக்கும்', தம்முடைய மக்களுக்கு எல்லாவற்றையும் தந்து ஆசீர்வதிக்கிறார். அதனால் தான், அப்போஸ்தலனாகிய பேதுரு, வாக்குதத்தங்களைக் குறித்து பேசும்போது "அவர் திவ்விய சுபாவத்துக்குப் பங்குள்ளவர்களாகும்பொருட்டு, மகா மேன்மையும் அருமையுமான வாக்குத்தத்தங்களும் அவைகளினாலே நமக்கு அளிக்கப்பட்டிருக்கிறது." என்று கூறுகிறார். நாம் இரட்சிக்கப்பட்ட பிறகு நம்மைப் பரிசுத்தப்படுத்துவதும் தேவனே.
4) புதிய வாழ்க்கைக்கும் நற்காரியங்களுக்கும் இடையே உள்ள தொடர்பு.
இந்த இரண்டிற்கும் உள்ள தொடர்பை இரண்டு விதமாகப் பார்ப்போம்.
- A) தேவனின் பார்வை.
தேவன் தம்முடைய மக்களுக்கு தாம் ஆயத்தம் செய்து வைத்த செயல்களை செய்யும் படியான கிருபையை அருளுகிறார். உறுதியாகவே, தேவன் அவர்களை (அவரது மக்களை) அந்த நற்கிரியைகளை செய்யும் படி வலியுறுத்துகிறார். இதிலிருந்து, நாம் அறிவது ஒரு உண்மையான விசுவாசி தேவன் ஏற்படுத்திய பாதையை விட்டு விலகுவது முடியாத காரியம்.
(பிலிப்பியர் 1:3,4) "சுவிசேஷம் உங்களுக்கு அறிவிக்கப்பட்ட நாள்முதல் இதுவரைக்கும் நீங்கள் அதற்கு உடன்பட்டவர்களானபடியால், நான் பண்ணுகிற ஒவ்வொரு விண்ணப்பத்திலும் உங்கள் அனைவருக்காகவும் எப்போதும் சந்தோஷத்தோடே விண்ணப்பம்பண்ணி, உங்களில் நற்கிரியையைத் தொடங்கினவர் அதை இயேசு கிறிஸ்துவின் நாள்பரியந்தம் முடிய நடத்திவருவாரென்று நம்பி, நான் உங்களை நினைக்கிறபொழுதெல்லாம் என் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன்."
அதனால்தான் பவுல் இவ்விதமாக கூறுகிறார், "உங்களில் நற்கிரியையைத் தொடங்கினவர் அதை இயேசு கிறிஸ்துவின் நாள்பரியந்தம் முடிய நடத்திவருவாரென்று நம்புகிறேன்.”
- B) மனித பொறுப்பு
இரட்சிப்பின் காரியத்தில் எல்லாமே தேவன் செய்தால் நான் செய்வதற்கு ஒன்றும் இல்லையா? என்று நீங்கள் கேட்கலாம், வேதத்தில் நீங்கள் விசுவாசிக்க வேண்டும் என்று சொல்லும்படியான வசனம் இல்லையா? நீங்களே மனந்திரும்ப வேண்டும் என்று இல்லையா? இவைகளையெல்லாம் செய்யும்படி என்று தேவனே நமக்குக் கட்டளையிடுகிறார். ஆனால், சகோதரரே! நீங்கள் சொல்லுவது அனைத்தும் தேவனே செய்கிறார் என்று சொல்கிறீர்கள்?
இங்கு நாம் புரிந்துக்கொள்ள வேண்டியது என்னவென்றால் நாம் விசுவாசிக்கவில்லை என்று நான் சொல்லவில்லை, அதேப்போல நாம் மனந்திரும்பவில்லை என்றும் நான் கூறவில்லை. விசுவாசிப்பது நாம் தான், நம் சொந்த விருப்பத்தோடு விசுவாசிக்கிறோம், அதேப்போல மனந்திரும்புகிறோம், நம்முடைய நிலையைக் கண்டு, நம்முடைய பாவத்தை உணர்ந்து, மனந்திரும்புகிறோம்.
நான் இங்கே குறிப்பிடும் முக்கியமான விஷயம் என்னவென்றால், தேவனின் ஈடுபாடு இல்லாமல், தேவன் முதல் அடியை எடுத்து வைக்காமல், தேவன் முதலில் நம்மை நேசிக்காமல், இவை அனைத்தையும் செய்வதற்கு நம்மால் முடியாது. ஆகவே இரட்சிப்பின் காரியத்தில் முதல் அடியை வைப்பது தேவனே! புதிய இருதயத்தை கொடுப்பதும் தேவனே! புரிதல் & உணரத்தக்க இருதயத்தை தருவதும் தேவனே! இவைகளுக்கு நாம் பதிலளிக்கிறோம், சத்தியத்தை அறிந்து விசுவாசிக்கிறோம், வருந்துகிறோம் & மனந்திரும்புகிறோம் ஆனால் இதற்கெல்லாம் ஆதாரம் தேவன், நாம் அல்ல. என்பதை நாம் உணரவேண்டும்.
தேவன் நம்மை ஆசீர்வதித்து புதிய வாழ்க்கை & இரட்சிப்பு கொடுத்த பிறகு, நமக்காக ஏற்படுத்தி வைத்த பாதையில் நாம் நடக்க வேண்டும். இயேசு கிறிஸ்துவைப் போல் நடக்க வேண்டும் என்று பொருள்.
“கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு; ஒருவரும் பெருமைபாராட்டாதபடிக்கு இது கிரியைகளினால் உண்டானதல்ல; ஏனெனில், நற்கிரியைகளைச் செய்கிறதற்கு நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்டிக்கப்பட்டு, தேவனுடைய செய்கையாயிருக்கிறோம்; அவைகளில் நாம் நடக்கும்படி அவர் முன்னதாக அவைகளை ஆயத்தம்பண்ணியிருக்கிறார்.” (எபேசியர் 2:8,9,10)
நாம் இரட்சிக்கப் பட்டிருப்பதால் (அதாவது, தேவனின் பார்வையில் நீதிமான்களாக ஆக்கப்பட்டாதால்), தேவன் நமக்காக ஆயத்தம் செய்துள்ள நற்செயல்களைச் செய்யவதற்கு நாம் தயாராக இருக்க வேண்டும்.
“அவர் நம்மைச் சகல அக்கிரமங்களினின்று மீட்டுக்கொண்டு, தமக்குரிய சொந்த ஜனங்களாகவும், நற்கிரியைகளைச் செய்யப் பக்திவைராக்கிய உள்ளவர்களாகவும் நம்மைச் சுத்திகரிக்கும்படி, நமக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார்.” (தீத்து 2:14)
இந்த வசனத்தை பார்த்தால், நற்காரியங்களை செய்வதற்கு தேவன் தனக்கானவர்களை இரட்சித்தார் என்று பார்க்கிறோம். என்றால் தேவன் இரட்சிக்கப் பட்டவர்கள் நற்காரியங்கள் செய்வதற்கு ஆர்வமாய் இருப்பார்கள்.
ஒரு சிறிய உதாரணம் தருகிறேன்:
ஒரு நபர் பட்ட படிப்பை முடித்தார் என்று வைத்துக்கொள்வோம். அந்த நபர் வேலைக்காக நேர்முகத் தேர்வுக்குப் போனால், அங்கே நீங்கள் பட்ட படிப்பை முடித்தீர்களா? என்று கேட்டால் அவர் முடித்துள்ளேன் என்று சொன்னாலும், அவர் உண்மையாகவே பட்ட படிப்பை முடித்தாரா? இல்லையா? சரிபார்க்க என்ன செய்யவேண்டும் அந்த நபரிடம் உள்ள சான்றிதழை பரிசோதிக்க வேண்டும்.
ஒருவர் தன் வாயால் சொன்ன வார்த்தைக்கான உறுதி என்பது அவர் காட்டும் ஆதாரத்தைப் பொறுத்தது. ஒருவேளை நான் பட்ட படிப்பை முடித்த சான்றிதழைக் காட்டவில்லை என்றால், நான் படித்து பட்டம் பெற்றதுப் போல் ஆகுமா?
அதே போல, ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கிறோம் என்று கூறுபவர்கள், அவர்களின் வார்த்தை உண்மையா? பொய்யா? என்பதைத் தீர்மானிக்க ஆதாரம் வேண்டுமல்லவா? இல்லையெனில், யார் உண்மையான விசுவாசி என்பதையும், யார் தவறான விசுவாசி என்பதையும் எப்படி அறிந்துகொள்ள முடியும். அதனால்தான் தேவனால் நான் இரட்சிக்கப்பட்டேன் அவருடைய தயவால் நான் விசுவாசித்தேன் என கூறுபவர்கள். தேவன் செய்ய சொன்ன செயல்களை அவர்கள் செய்யும்போது, அதுவே அவர்களின் இரட்சிப்பிற்கான ஆதாரமாக இருக்கிறது.
நீங்கள் உங்கள் சகோதரர்களை நேசிப்பதில்லை, தேவை உள்ளவர்களுக்கு உதவுவதில்லை, தேவனிடம் ஜெபிப்பதில்லை, தேவனுடைய வார்த்தைகளைக் கற்றுக்கொள்ள விரும்புவதில்லை, பிறருக்கு சுவிசேஷத்தை அறிவிப்பதில்லை, பாவத்திற்கு எதிராகப் போராடுவதில்லை. இந்த அடையாளங்கள் உன்னிடம் இல்லையென்றால் தேவனைப் பிரியப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் உன்னில் இல்லாதபோது, நான் இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கிறேன் என்று சொல்லுவது உண்மையா? பொய்யா?
5) நம்முடைய இரட்சிப்புக்கான பாதையாக நற்செயல்களை காட்டுகிறதா?
சில வேத வசனங்களை ஆராய்ச்சி செய்வோம்:
"ஆதலால், மனுஷன் நியாயப்பிரமாணத்தின் கிரியைகளில்லாமல் விசுவாசத்தினாலேயே நீதிமானாக்கப்படுகிறான் என்று தீர்க்கிறோம்." (ரோமர் 3:28)
“ஆதலால், மனுஷன் விசுவாசத்தினாலே மாத்திரமல்ல, கிரியைகளினாலேயும் நீதிமானாக்கப் படுகிறானென்று நீங்கள் காண்கிறீர்களே." (யாக்கோபு 2:24)
"அப்படியே விசுவாசமும் கிரியைகளில்லாதிருந்தால் தன்னிலேதானே செத்ததாயிருக்கும்." (யாக்கோபு 2:17)
ஆபிரகாம் விசுவாசத்தினாலே நீதிமானாக்கப்பட்டார் என்று அப்போஸ்தலனாகிய பவுல் கூறுவதுப்போல யாகோப்பும் இவ்விதமாக சொல்லுகிறார், (யாகோப்பு 2:21) நம்முடைய பிதாவாகிய ஆபிரகாம் தன் குமாரன் ஈசாக்கைப் பலிபீடத்தின்மேல் செலுத்தினபோது, கிரியைகளினாலே அல்லவோ நீதிமானாக்கப்பட்டான்?”
இங்கு நாம் பார்ப்பது முரண்பாடாகத் தோன்றினாலும், ஆனால் அவை முரண்பாடுகள் அல்ல. பவுல் நிருபங்களைப் பெற்றவர்கள் பெரும்பாலும் நியாயப்பிரமாணத்தால் நீதிமான்கள் ஆகிறார்கள் என்ற வாதத்தை கேட்ட படியினாலே, உண்மையான இரட்சிப்பு விசுவாசத்தினால் வருகிறது, நியாயப்பிரமாணம் மற்றும் செயல்களால் அல்ல என்று அப். பவுல் கூறுகிறரே தவிர நீங்கள் விசுவாசித்தால் போதும் நற்காரியங்கள் உங்கள் வாழ்க்கையில் இல்லாவிட்டாலும் பரவாயில்லை என்று சொல்லவில்லை.
அதேபோல், யாக்கோபு நிருபத்தைப் பெற்றவர்கள் விசுவாசம் போதுமானது, செயல்கள் தேவையில்லை என்ற எண்ணத்தில் இருந்தனர், எனவே உண்மையான இரட்சிப்பு என்பது விசுவாசத்தை அடிப்படையாகக் கொண்டது மற்றும் செயல்களால் அது நிரூபிக்கப்பட்டுள்ளது என்று யாக்கோபு கூறுகிறார்.
அதனால் தான் இவ்விதமாக சொன்னார்:
“நம்முடைய பிதாவாகிய ஆபிரகாம் தன் குமாரன் ஈசாக்கைப் பலிபீடத்தின்மேல் செலுத்தினபோது, கிரியைகளினாலே அல்லவோ நீதிமானாக்கப்பட்டான்? விசுவாசம் அவனுடைய கிரியைகளோடேகூட முயற்சிசெய்து, கிரியைகளினாலே விசுவாசம் பூரணப்பட்டதென்று காண்கிறாயே. அப்படியே ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான், அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது என்கிற வேதவாக்கியம் நிறைவேறிற்று; அவன் தேவனுடைய சிநேகிதனென்னப்பட்டான்.” (யாக்கோபு 2:21-23)
"கிறிஸ்து இயேசுவினிடத்தில் விருத்தசேதனமும் விருத்தசேதனமில்லாமையும் ஒன்றுக்கும் உதவாது, அன்பினால் கிரியை செய்கிற விசுவாசமே உதவும்." (கலாத்தியர் 5:6)