உண்மையான கிறிஸ்தவ வாழ்க்கை

ஆசிரியர்: போதகர் A.முரளி
தமிழாக்கம்: தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்
வாசிப்பதற்கான நேரம்: 20 நிமிடங்கள்

 ஆவிக்குரிய உண்மைகளை அறிய விடாமல் நம்மை மந்தப்படுத்தி, வஞ்சகத்தில் தொடர்ந்து வைத்திருப்பது இந்த உலகத்தின் தேவனான பிசாசினுடைய செயல். அவன் காரியங்களைத் தலைகீழாகப் புரட்டி வெளிப்புறத் தோற்றங்களால் தொடர்ந்து வஞ்சிக்கிறான். அவன் சந்தோஷத்தைப் பற்றியும், ஞானம் மற்றும் சுயாதீனம் பற்றியும் மக்களிடம் பொய்யாய் சொல்லுவான். பணம் நிறையப் பெற்று, செழிப்பாய் இருப்பவர்கள் உண்மையில் சந்தோஷமானவர்கள் என்று எப்பொதும் அனைவரிடமும் பொய் சொல்கிறான். வேதத்தின் பணி சாத்தானின் வஞ்சகத்திலிருந்து நம்மை விடுவிப்பது. வெளிப்புறமான பொருளாதார வசதி நிறைந்தவர்கள் சந்தோஷமானவர்கள் அல்ல, மாறாக ஆவியில் எளிமையுள்ளவர்கள், அழுகிறவர்கள், துன்புறுத்தப்படுகிறவர்கள், பரிசுத்தமுள்ளவர்கள் மற்றும் சாந்த குணம் உள்ளவர்களே உண்மையில் பாக்கியமானவர்கள் என்று வேதம் நமக்கு அறிவுறுத்துகிறது (மத்தேயு 5).

ஞானம் உள்ளவர்கள் ஏமாற்றுகிறவர்களாகவும், மோசடி செய்கிறவர்களாகவும் இருப்பவர்கள் மட்டுமே இந்த உலகத்தில் வெற்றியாளர்களாக இருக்கமுடியும் என்று சாத்தான் உலக ஞானத்தை குறித்துப் பொய் சொல்கிறான். உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்தினாலும் தன் ஜீவனை நஷ்டப்படுத்துகிறவர்கள் மிகப்பெரிய முட்டாள்கள் என்று வேதம் அறிவிக்கிறது. உண்மையில் ஞானம் உடையவர்கள் தங்கள் இரட்சிப்பிற்கு உரிய ஞானத்தைப் பெற்று, தேவனிடம் ஐசுவரியம் உள்ளவர்களும், இனிவரும் உலகத்தின்மேல் நோக்கமாய் இருப்பார்கள்.

அதைப் போலவே, எல்லா மக்களும் விரும்பும் சுயாதீனம் குறித்தும் பிசாசு பொய் சொல்கிறான். சுதந்தரம் என்றால் நாம் விரும்பும் எதையும் எந்தத் தடையும் இல்லாமல் செய்வது என நினைப்பதே உலகத்தின் மிகப்பெரிய வஞ்சகம். தேவனுடைய பிரமாணத்திற்குக் கீழ்ப்படிவது – அவருடன் நடப்பது, அவருடைய வசனத்தை வாசிப்பது மற்றும் ஜெபிப்பது – ஒரு சிறைச்சாலை போலவும் அடிமைத்தனம் போலவும் தோன்றுகிறது. நியமங்களை அல்லது ஒழுங்கைக் கடைபிடிப்பது... நம் பிள்ளைகள் சில வேளைகளில், “ஐயோ, ஒரே நிபந்தனை, கட்டளை, ஒழுக்கம்!” நொந்து கொள்கிறார்கள்! அவர்கள் எந்த ஒரு கட்டுப்பாடையும் வெறுக்கிறார்கள். அவை அவர்களைக் கட்டிப் போடும் சங்கிலி என்று நினைக்கிறார்கள். “நான் எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல், நான் விரும்புகிறது எப்போது செய்யப்போகிறேன்? நான் விரும்புவதை எந்தத் தடையும் இல்லாமல் எப்போது பேசப்போகிறேன்?” என்று அவர்கள் கேட்கிறார்கள். அவர்கள் ஒழுக்கத்தை பாரமாகக் காண்கிறார்கள். எந்த ஒரு கட்டுப்பாடையும் உடைத்து எறிந்துவிட நினைக்கிறார்கள். அது தான் உண்மையான விடுதலை என்று சாத்தான் அவர்களை நம்ப வைத்துள்ளான்.

நாம் செய்ய நினைக்கிற அனைத்தையும் செய்யும் அளவிற்குப் போதுமான பணம், நேரம், வசதிகள் மற்றும் ஆரோக்கியம் உடையவர்களாய் இருப்பதே சுயாதீனம் என்று நாமும் நினைக்கிறோம். இப்படித்தானே நம்மில் அதிகம் பேர் சிந்திக்கிறோம்? இந்த வழியில் நடந்தவர்கள் அதிகம் அதிகமாக அடிமைத்தனத்திற்கு உட்பட்டுவிட்டதை உணருகிறார்கள். இதை நன்றாக அறிந்து கொள்ளுங்கள்: தேவனுடைய பிரமாணத்தின் கட்டுப்பாடு அற்ற மாம்சீக சுயாதீனம் மிக மோசமான அடிமைத்தனம்.

இது மிகவும் மோசமான அடிமைத்தனம் என்பதை உணர்த்தும் ஐந்து காரணங்கள் இதோ.

  1. இது நம் சிற்றின்பங்களின் சிறைச்சாலை

 தேவன் தம்முடைய நியாயத்தீர்ப்பை நமக்குத் தருவதுதான் அதிகம் பயப்படத்தக்க, அபாயம் நிறைந்த மிகப்பெரிய தண்டனையாகும். அதிக பொறுமைக்குப் பின்னர் – மெய்யான சந்தோஷம் தேவனை மகிமைப்படுத்துவதும், அவரில் மகிழ்ந்து இருப்பதும் தான் என்று மீண்டும் மீண்டும் போதித்தும் - நாம் இந்தப் புத்திமதியை விட்டு நம்மைத் தூரப்படுத்தி உலகத்தை நோக்கி ஓடுகிறோம். நம்மைச் சரிப்படுத்தும் நோக்கில் தொடர்ந்து பொறுமையுடன் தேவன் செயல்பட்டும், நாம் கேட்க விரும்பாமல் அவருடைய எல்லைக்குறியை நாம் உடைக்க விரும்பும் பட்சத்தில், அவர் நம்மை நம்முடைய இச்சைகளுக்கு விட்டுக் கொடுத்து விடுகிறார். நாம் விரும்பியதைச் செய்யவும், அதன் விளைவாக எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் அந்த இச்சை நம்மை அழித்துப் போட விட்டு விடுகிறார்.

ரோமர் இரண்டாம் அதிகாரத்தில் சொல்லப்படுவதுபோல, தேவன் நம்மை நமது அசுத்தமான மனதிற்கும், நம் இருதயத்தின் இச்சைகளுக்கும் ஒப்புக் கொடுத்து விடுகிறார் என்று வாசிக்கிறோம். “ஆகையால், அவர்களை அவர்களுடைய இருதயத்தின் கடினத்திற்கு விட்டு விட்டேன். தங்கள் யோசனைகளின்படியே நடந்தார்கள்” என்று சங்கீதம் 81:12 சொல்லுகிறது. நம்முடைய மிருகத்தனமான இச்சைகளுக்குள் நடக்க விட்டு விடப்பட்டுள்ளோம். நம்முடைய இச்சைகள் எவ்வளவு மோசமான கொடுங்கோலன் என்பது நமக்குத் தெரியவில்லை. அவை நமக்காக சிறையை ஏற்படுத்தி, நம்மேல் பலவிதமான சங்கிலிகளைப் போட்டு, நம்மை பல்வேறு பாதைகளிலும் இழுத்துச் செல்கிறது. இந்த மாம்சத்துக்குரிய விடுதலை ஒரு நபரை தங்கள் சீர்கேடான இருதயத்தைப் பின்பற்றவும், அவருடைய சந்தோஷத்துக்கான உண்மையான வழியை அழித்துப்போடவும் செய்கிறது. தேவனில் மகிழ்ந்து அவருக்குக் கீழ்ப்படிவதே நம் மகிழ்ச்சிக்கான வழி.

மீன் தொட்டியில் இருக்கிற மீனானது தண்ணீரில் சந்தோஷமாக உலா வந்தாலும், உண்மையில் அது அடிமைத்தனத்தில் இருப்பதை அறியவில்லை. அதுபோலவே உலக மக்கள் தங்கள் உலக “விடுதலை”யினை அனுபவிக்கிறார்கள். அவர்கள் ஒரு ஆவிக்குரிய சிறைச்சாலையில் அடைபட்டு இருக்கிறார்கள். இது உண்மையும், பூரணமுமான அடிமைத்தனம். அவர்கள் மாயைத் தொடர்ந்து பிடித்துக்கொள்ளும்படி ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். அது உண்மையில் அவர்களை மகிழ்ச்சியாக்காது. அவர்கள் தங்களுக்குள் உள்ள ஒரு வெற்றிடத்துடனே வாழ்கிறார்கள். இதற்குக் காரணம் நாம் தேவனில் மகிழ்ந்து, அவருக்குக் கீழ்ப்படியும்போது மட்டுமே நாம் சந்தோஷமாக இருக்கும்படி நாம் உருவாக்கப்பட்டிருக்கிறோம். இன்பங்கள், மதிப்புகள், லாபங்கள், மற்றும் ஐசுவரியம் ஒரு போதும் உண்மையான சந்தோஷத்தைத் தர முடியாது. அவைகளை தேவனுடைய மகிமைக்காகத் தேடும்போது மட்டுமே நமக்கு உண்மையான மகிழ்ச்சி உண்டாகும்.  

தேவனுக்கு மகிமையைக் கொண்டு வர வேண்டும் என்கிற விருப்பத்துடன் நாடப்படும் மனது மற்றும் சரீரத்தின் இன்பம், மகிழ்ச்சி மற்றும் மனநிறைவு தான் நமக்குத் தேவையானவை. இவைகளை நாம் விரும்புவதன் நோக்கம் தேவனுக்கு மகிமையைக் கொண்டு வருவதற்காகவே இருக்க வேண்டியது. இவைகளை தேவ மகிமைக்குக் கீழ்ப்படுத்துவதுதான் நமது மாபெரும் முடிவிற்கான இலக்கு. அவை நம்மை ஈர்த்து, நமது விருப்பங்களுக்குள் நம்மை சிறைப்படுத்தும் பட்சத்தில், அவை நமது விக்கிரகங்களாக மாறுவதுடன், நாம் அவைகளின் அடிமைகளாகி விடுகிறோம். நாம் எந்தளவு அவைகளைச் சேவிக்கிறோமே, அந்தளவு நமது விடுதலையையும் இழக்கிறோம்.

  1. மாம்சத்துக்குரிய விடுதலை ஒழுங்கற்ற ஆத்துமாவை உருவாக்குகிறது

இந்தச் சுயாதீனம் நம் ஆத்துமாவில் ஒழுங்கற்ற தன்மையை உருவாக்கி நம்மை அடிமைத்தனத்திற்கு உட்படுத்தி விடுகிறது. ஆத்துமாவின் சரியான ஒழுங்கு மனதும், மனச்சாட்சியும் சரியானது என்ன என்பதை தீர்மானிப்பதில் இருக்கிறது. எது தேவனை மகிமைப்படுத்தி அதன் விளைவாக எனக்கு மகிழ்ச்சியைத் தரும் என்பதை நிதானிப்பதுதான் சரியான ஒழுங்கு. சிந்தை மற்றும் மனசாட்சி ஆகியவற்றால் ஆளப்படும் வகையில் மனிதன் படைக்கப்பட்டுள்ளான். இந்த மனசாட்சியே இருதயத்தில் சரியான உணர்வுகளை ஏற்படுத்தி, அந்த விருப்பங்களை சரீர அங்கங்களால் செயல்படத் தூண்டுகிறது. ஆனால் இங்கே பாவமுள்ள ‘சுயாதீனம்’ இந்த வரிசைக் கிரமத்தையே தலைகீழாக மாற்றி விடுகிறது. அந்த நபரையும் அடிமையாக்கப்பட்ட மிருகம் போலாக்கி விடுகிறது.

சரீரத்தில் தலை இருக்க வேண்டிய இடத்தில் கால்கள் இருந்தாலோ, கால்கள் இருக்க வேண்டிய இடத்தில் தலை இருந்தாலே எவ்வளவு ஒழுங்கில்லாமல் இருக்கும் அல்லவா? அது மாதிரியே உலக காரியங்களை தேவனுடைய மகிமைக்காக நாடாமல், சுய இச்சைகளை நிறைவேற்றும்படி தேடினால் ஆத்துமாவும் ஒழுங்கற்றுப் போய்விடும். இந்த அடிமைத்தனம் ஆண்டவர் ஏற்படுத்தி உள்ள ஒழுங்கில் மாறுதலை உண்டாக்கி விடுகிறது. வெளிப்புற இன்பங்கள் புலன்களில் தாக்கத்தை ஏற்படுத்தி, இருதயத்தில் பாதிப்பை வருவிப்பதால், அதன் அழுத்தம் மனதையும் மனசாட்சியையும் மேற்கொள்கிறது. மனமானது இந்தச் செயல் முட்டாள்தனமானது, சரியில்லாதது என்று உணர்ந்தாலும், அந்த மனிதன் அதைத் தொடரும்படி அவன் கண்கள் குருடாக்கப் படுகிறது. அவன் நெடுகவே அழிவில் வீழ்ந்து விடுகிறான். சிந்தனை ஆதிக்கம் செலுத்த வேண்டிய இடத்தில், இச்சை அரியனை போட்டு அமர்ந்து விடுகிறது.

  1. நாம் நமது இச்சைகளுக்கு அடிமைகளாகிறோம்

பாவத்தின் வலிமையையும் அதன் அகோரத்தையும் சிந்தித்துப் பாருங்கள். இது மனிதர் தங்களையும் தங்கள் செயல்களையும் கட்டுப்படுத்த உபயோகிக்கும் அனைத்துவிதமான உரிமை மற்றும் வலிமையை உரிந்து கொள்கிறது. அநேக நேரங்களில், அவர்கள் மாற விரும்பினாலும், சில பழக்கங்களை நிறுத்த விரும்பினாலும், அவர்களால் முடியாமற் போய் விடுகிறது. அடிமைத்தனத்தின் வல்லமை அவர்களை அழுத்தமாக இழுத்துக்கொண்டு அவர்களை அழித்து விடும் காரியங்களையே செய்ய வைத்து விடுகிறது. பாவம் அவர்களுக்குக் கட்டளை இடும்போது, அவர்கள் முடியாது என்று சொல்ல வழியே இல்லாமல் அதற்குக் கீழ்ப்படிகிற நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.

தங்கள் பாவத்தின் விளைவாக வருத்தப்படுகிறவர்கள் அல்லது குற்ற உணர்ச்சிக்கு உள்ளாகிறவர்களில் இந்த அடிமைத்தனம் வெளிப்படையாகத் தெரிகிறது. இந்த அடிமைத்தனத்தின் விளைவாக அவர்களுக்கு ஏற்பட்ட சரீர வியாதிகள், அசௌகரியங்கள், அவமானம் அல்லது இழப்பு போன்றவை அவர்களை வாட்டினாலும் அவர்களால் தங்கள் இச்சைகளை விட முடியவில்லை. ஆகவே, மிகுந்த வேதனையுடன், அவர்கள் அடிமைகளாகவே தொடர முடிவு எடுத்து விடுகிறார்கள். ரோமர் 7:14 இவ்வாறு சொல்கிறது, “நானே பாவத்திற்குக் கீழாக விற்கப்பட்டு, மாம்சத்துக்கு உரியவனாய் இருக்கிறேன்”. பொல்லாத இச்சைகள் தங்களை ஓட்டுகிறவர்களுக்கு அடங்காத குதிரைகளைப் போல அவர்களை அழிவிற்கு இழுத்துச் சென்று விடுகின்றன. “பலவிதமான இச்சைகளுக்கும் இன்பங்களுக்கும் அடிமைப்பட்டவர்களாய்” இருந்தோம் என்று பவுல் தீத்துவுக்கு எழுதுகிறார் (தீத்து 3:3). ஒரு மனிதன் தன் ஆசை இச்சைகளுக்குத் தன்னை ஒப்புக் கொடுக்கும் பட்சத்தில், அவன் அடிமையாகவே மாறி விடுகிறான். “மரணத்துக்கு ஏதுவான பாவத்துக்கானாலும், நீதிக்கு ஏதுவான கீழ்ப்படிதலுக்கானாலும், எதற்குக் கீழ்ப்படிகிறீர்களோ, அதற்கே கீழ்ப்படிகிற அடிமைகளாய் இருக்கிறீர்கள் என்று அறியீர்களா?” என்று கேட்கிறார் பவுல் (ரோமர்  6:16). ஆகவே செலுசியாவைச் சார்ந்த பாசில் என்கிற பரிசுத்தவான் மாம்சத்துக்கு உரிய மனிதனை அவன் தன் சொந்த இச்சைகள் மற்றும் சீர்கேடான விருப்பங்கள் என்னும் இரதங்களால் தரதரவென இழுக்கப்படும் அடிமையாகிறான் என்கிறார். அவனால் சரியாக உறங்க முடியாது, சரியாக சிந்திக்க இயலாது. சரியாக உணரவும் முடியாது. மனதில் நிதானம் இல்லாதவன் போல அவன் நடந்து கொள்கிறான்.

  1. இந்த அடிமைத்தனம் தொடர் செயல்பாடுகளால் அதிகம் ஆழமாகி விடுகிறது.

புாவம் மாற்ற முடியாத பழக்கமாகி விடுகிறது. நாம் எந்தளவுக்கு பாவம் செய்கிறோமோ, அவ்வளவு அதிகமாய் நாம் அதற்கு அடிமையாகிறோம். இது ஒரு ஆணியைப் போன்றது. அதின் மேல் அடி விழவிழ அது மரத்தை இன்னும் வழுவாகப் பிடித்துக் கொள்கிறது. இது சுகப்படுத்த முடியாத வியாதி போலாகி, இதில் தொடர்வதால் அதிகம் பாதிப்பையும் ஏற்படுத்துகிறாய்க் காணப்படுகிறது. நமக்கு எது சரி என்று தெரியும். ஆனால் பாவம் நம்மை முழுவதும் ஆக்கிரமித்து விட்டதால் நம்மால் சரியானதைச் செய்ய முடியாது. இதுதான் அடிமைத்தனத்தின் உச்ச பட்ச வடிவம் - நீங்கள் விரும்பியும் உங்களால் உங்களைக் காக்க முடியவில்லை என்கிற நிலமை! “எத்தியோப்பியன் தன் தோலையும், சிறுத்தை தன் புள்ளிகளையும் மாற்றக் கூடுமோ? கூடுமானால், தீமை செய்யப்பழகின நீங்களும் நன்மை செய்யக் கூடும்” என்கிறார் தீர்க்கதரிசியான எரேமியா (எரேமியா 13:23).

முதலில் ஒரு நபர் பாவத்திற்கு இசைந்து ஒரு பங்குதாரர் ஒப்பந்தம் போடுவது போல் துவங்குகிறார். அதற்குப் பின்னர் அவர் பாவத்தினால் மேற்கொள்ளப்பட்டு அடிமையாகிறார். “கர்த்தாவே, நான் அடிமையாய் இருக்கிறேன். நான் என் விருப்பத்தை என் எதிராளிக்குத் தந்து விட்டேன். அவன் அதை ஒரு சங்கிலியாக மாற்றி, என்னைக் கட்டி உம்மிடம் வராதபடி தடுத்து விடுகிறான். உமக்கு விரோதமாய்ப் பாவம் செய்வதைத் தவிர வேறு எதையும் என்னால் செய்ய முடியவில்லை”. இவ்வாறாக, நாம் சிறிது சிறிதாக அடிமைத்தனத்திற்கு உள்ளாகினோம்.

  1. அடிமைகளாய் நாம் எப்போதும் பயமும் திகிலும் உள்ள வாழ்க்கையே வாழ்கிறோம்.

பாவத்தில் வாழ்வது தொடர்ச்சியான பயத்தை வருவிக்கிறது. நாம் மரணத்தைக் குறித்தும், நியாயத்தீர்ப்பை நினைத்தும், நமது செயல்களின் விளைவுகளைப் பற்றியும் பயப்படுகிறோம். இந்தப் பயம் ஒரு கொடூரமான எஜமானனைப் போல இருந்து, நாம் மெய்யான சமாதானத்தை அனுபவிக்க முடியாமல் தடை செய்து கொண்டே இருக்கிறது. தொடர்ச்சியாக பயத்தில் வாழும் வாழ்க்கை சுயாதீனத்திற்கு எதிரான வாழ்க்கை தான்.

பாவியின் மடியில் தணிவாக எரிந்து கொண்டிருக்கும் அக்கினியானது சில வேளைகளில் பற்றி எரிந்து பயத்தையும் பெரும் திகிலையும் வருவித்து விடுகிறது. அவ்வாறு வாழ்பவன் மரணத்தைக் குறித்த செய்தியையோ, நரகம் அல்லது நியாயத்தீர்ப்பு குறித்த செய்தியையே நடுக்கம் இல்லாமல் கேட்க முடியாது. இதுபோன்ற காரியங்களைக் குறித்துச் சிந்திக்கவும் அவர்களுக்குத் தைரியம் இல்லை. அவர்கள் எப்போதுமே சிதைக்கப்பட்ட மனசாட்சியுடனும் பயத்துடனும் வாழ்கிறார்கள். வாழ்க்கையின் சிறிய நிகழ்வுகள் கூட – சிறிய பிரச்சனை, இடி, பூமி அதிர்ச்சி குறித்த செய்தி, யுத்த செய்தி அல்லது சில சரீரப் பிரச்சனைகள் - இவை அனைத்துமே அவர்களுடைய ஆத்துமாவில் கலக்கததையும் நடுக்கத்தையும் ஏற்படுத்தி விடுகிறது. இந்தக் கொடூரமான எஜமானன் அவர்களை எப்போதும் பயத்திலேயே வைத்திருக்கிறான்.

இதுவா சுயாதீனம்? இயேசு கிறிஸ்து இல்லாமல் வாழும் ஒவ்வொரு பாவியின் நிலையும் இதுதான். அவன் மிக மோசமான அடிமைத்தனத்தில் இருக்கிறான்: தன் பாவங்களுக்கும், இச்சைகளுக்கும், உலகத்திற்கும், சாத்தானுக்கும் அடிமையாக இருக்கிறான். அவன் எப்போதும் கட்டப்பட்டவனாய், மறைவான ஆபத்துக்களை எண்ணிக் கலங்குகிறான். ஆக, இதை நீங்கள் சுதந்தரமான, சந்தோஷமான வாழ்க்கை என்று அழைக்கிறீர்களா? நான் இதை பாவத்திற்கு அடிமையாக வாழும் சாபமான வாழ்க்கை என்று சொல்லுகிறேன்.

இது போன்ற பாவிக்கான ஒரே விடுதலை தன் அடிமைத்தனத்தை உணர்ந்து, பாவத்தில் இருந்து விடுதலையையை இயேசுவின் வழியாகப் பெறுவதில் மட்டுமே இருக்கிறது.

 
 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.