உண்மையான கிறிஸ்தவ வாழ்க்கை

துதியும்.., நன்றியும்..,
ஆசிரியர்: தூய்மைவாதிகள்
தமிழாக்கம்: A.அருள்நேசன்

16-ம் நூற்றாண்டுத் தூய்மைவாதிகளின் விண்ணப்பம்

துதியும் நன்றியும் (Praise and Thanksgiving)

என் தேவனே! உமக்குத் துதியும் ஸ்தோத்திரமும் உண்டாவதாக!

நீர் பேரழகுள்ளவர்; மகா பெரியவர்; எல்லாவற்றிலும் முதன்மையானவர். என் இருதயம் உம்மை வியந்து, ஆராதித்து, நேசிக்கிறது. என் சிறிய பாத்திரம் கொள்ளுமளவுக்கு நிரம்பி வழிகிறது; அதை முற்றிலுமாக, இடைவிடாமல் உமக்கு முன்பாக ஊற்ற விரும்புகிறேன்.

நான் உம்மை நினைக்கும்போதும், உம்மிடம் பேசும்போதும், பதினாயிரம் இன்பமான எண்ணங்கள் என்னில் தோன்றுகின்றன; பதினாயிரம் மகிழ்ச்சியின் ஊற்றுகள் திறக்கப்படுகின்றன. பதினாயிரம் புத்துணர்ச்சியூட்டும் சந்தோஷங்கள் என் இதயமெங்கும் பரவி, ஒவ்வொரு கணத்தையும் மகிழ்ச்சியால் நிரப்புகின்றன.

நீர் சிருஷ்டித்த என் ஆத்துமாவிற்காக உம்மைப் போற்றுகிறேன். அது பாவமான உலகமெனும் தரிசு நிலத்தில் வைக்கப்பட்டிருந்தாலும், அதை அலங்கரித்து, பரிசுத்தப்படுத்தியதற்காக உமக்கு நன்றி.

நீர் எனக்குக் கொடுத்த இந்தச் சரீரத்திற்காகவும், அதன் சுகத்தையும் பலத்தையும் பாதுகாத்து வருவதற்காகவும், உமது ஆசீர்வாதங்களை அனுபவிக்க நீர் தந்த உணர்வுகளுக்காகவும் நான் உம்மைத் துதிக்கிறேன். உமது கட்டளைகளை நிறைவேற்றும் என் கைகள், கண்கள் மற்றும் என் அவயவங்களின் சுதந்திரமான செயல்பாட்டிற்காக உமக்கு நன்றி.

எனது அன்றாடத் தேவைகளைச் சந்திக்கின்ற உமது மேன்மையான கிருபைக்காகவும், குறைவில்லாத பந்திக்காகவும், என் பாத்திரம் நிரம்பி வழிவதற்காவும், பசியாறவும், ருசிக்கவும் நீர் தந்த சுவைக்காகவும் உமக்கு நன்றி செலுத்துகிறேன்.

என் உறவினர்கள் மற்றும் நண்பர்களுடனான ஐக்கியத்திற்காகவும், பிறருக்கு ஊழியம் செய்யும் கிருபைக்காகவும், பிறருடைய துக்கங்களையும் தேவைகளையும் உணரும் இதயத்திற்காகவும், சக மனிதர்கள் மீது அக்கறை கொள்ளும் மனதிற்காகவும், சுற்றிலும் மகிழ்ச்சியைப் பரப்பும் வாய்ப்புகளுக்காகவும் நான் உம்மைப் போற்றுகிறேன்.

பரலோகப் பேரின்பத்தில் இருக்கும் என் அன்புக்குரியவர்களுக்காகவும், உம்மை முகமுகமாய்த் தரிசிக்கப்போகும் என் நம்பிக்கைகாகவும் உமக்கு நன்றி. வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவிற்கு நான் உம்மை நேசிக்கிறேன். என் தேவனே, இம்மையிலும் மறுமையிலும் (இக்காலத்திலும் நித்தியத்திலும்) உம் மீதான என் அன்பை இன்னும் அதிகமாக்குவீராக.

ஆமென்.


இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! — தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்.

 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.