இரட்சிப்பு

நாம் அனுதினமும் உட்கொள்ள வேண்டிய 10 ஆவிக்குரிய சிந்தனைகள்
ஆசிரியர்: A. அருள்நேசன்
வாசிப்பதற்கான நேரம்: 3 நிமிடங்கள்

 1.பிதாவாகிய தேவன் நித்தியத்திலே என்னை முன்குறித்து தெரிந்து கொண்டார். எனவே தேவன் அழைத்த அழைப்பும் என்னுடைய இரட்சிப்பும் நிச்சயமானது.

2.பாவியாகியா எனக்காக கிறிஸ்து மரித்து அடக்கம் செய்யப்பட்டு மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார். இதன் மூலமாக கிறிஸ்துவின் அன்பையும், பாவத்தின் கொடூரத்தையும் உணர்ந்து கொள்கிறேன். இந்த உண்மை பாவத்தின் மீதான வெற்றியை எனக்கு தருகிறது.

3.இந்த உலக வாழ்க்கையில் நான் சரியாக வாழ்வதற்கு தேவன் பரிசுத்த ஆவியானவரை எனக்கு துணையாக கொடுத்திருக்கிறார். அவரை காயப்படுத்தாமல் கீழ்படிந்து வாழ்வதே என்னுடைய முதன்மையான நோக்கம்.

4.இந்த உலகத்தில் நான் ஒரு கைவிடப்பட்ட பாவி என்பதை உணருகிறேன். திரித்தவ தேவனின் உதவி இல்லையெனில் நான் நிச்சயமாக பாவத்தில் அழிந்து போய் இருந்திருப்பேன். அவர் என்னை பாவத்திலிருந்து காப்பாற்றியதற்காக தாழ்மையுள்ள இருதயத்தோடு அவருக்கு நன்றி செலுத்துகிறேன்.

5.தேவன் உன்னதங்களிலே சகல ஆசிர்வாதங்களிலும் என்னை ஆசீர்வதித்திருக்கிறார். அந்த அளவிட முடியாத கற்பனைக்கு எட்டாத ஆசீர்வாதங்கள் இன்று எனக்கு மறைபொருளாக இருந்தாலும் நித்தியத்தில் அவை எனக்கு சொந்தமே.

6.நான் தேவனின் கிருபையால் இலவசமாக பெற்ற இரட்சிப்பு கிறிஸ்துவில் சார்ந்து இருக்கிறது. அதை முடிவு வரை அவர் காப்பாற்றுவார் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. எனவே உலக சூழ்நிலைக்கு நான் அஞ்சுவதில்லை.

7.ஒவ்வொரு நாளும் நான் பரலோகத்தை நெருங்கி செல்கிறேன். பரலோகமே என்னுடைய வீடு என்பதால், நான் அந்த வீட்டிற்கு தகுதி உள்ளவனாய் இருக்கும்படி தேவையானவற்றை பயிற்சி செய்கிறேன்.

8.பரிசுத்த வேதமே என் வழிகாட்டி! இந்த உலகத்தில் வாழக்கூடிய நான் என்னுடைய வாழ்வில் எடுக்கும் ஒவ்வொரு முடிவுகளுக்கும் வேதத்தை சார்ந்தே நிற்பேன். வேதத்திற்கு விரோதமான எந்த ஒரு காரியத்தையும் நான் ஒரு நாளும் ஒருபோதும் செய்ய மாட்டேன்.

9.இந்த நாளில் எனக்கும், எனது குடும்பத்திற்கும், எனது திருச்சபைக்கும் எது நன்மை ஏற்படுத்துமோ அதையே வேதத்திற்குட்பட்டு நேர்மறையாக சிந்திப்பேன். மேலும் அதை செயல்படுத்துவேன். தேவன் எனக்கு கொடுத்திருக்கும் அதிகாரத்தை அன்பில்லாமல் யார் மீதும் (மனைவி, பிள்ளைகள், சகவிசுவாசிகள், நண்பர்கள், உடன் வேலையாட்கள்) திணிக்க மாட்டேன்.

10.எனது குடும்பத்திற்கும், திருச்சபைக்கும், இந்த சமுதாயத்திற்கும் இடலற்றவனாய் வாழ்வதற்கும், முன்னுதாரணமாய் வாழ்ந்து கிறிஸ்துவை காண்பிப்பதற்கும் முழு மனதோடு முயற்சி செய்வேன்.

நம்முடைய உடல் பலவீனங்களில் மருத்துவர் நமக்கு கொடுக்கும் மாத்திரைகள் எப்படி உடலுக்குள் சென்று எவ்வாறு செயல்படுகிறது என்று நமக்கு தெரியாது. ஆனால் நிச்சயமாக அவை நமக்கு சுகத்தை தருகிறது. அதுபோலவே வேதத்தில் இருக்கும் இந்த உண்மைகளை நம் அனுதினமும் சிந்திக்கும்போது அது நமக்கு ஆறுதலையும் மகிழ்ச்சியையும் வேதத்தின்படியான விசுவாச வாழ்க்கை வாழ்வதற்கான உந்துதலையும் தருகிறது. விசுவாசத்திற்கு அடிப்படையான இந்த உண்மைகளை நீங்கள் சுருக்கமாக புரிந்து கொள்ளும்படி 10 குறிப்புகளில் தந்திருக்கிறோம். இதை அனுதினமும் சிந்தித்துப் பாருங்கள். ஆவிக்குரியவர்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள். திரித்துவ தேவன் உங்களுக்கு உதவி செய்யட்டும்.

“எவர்களை முன்குறித்தாரோ அவர்களை அழைத்துமிருக்கிறார்; எவர்களை அழைத்தாரோ அவர்களை நீதிமான்களாக்கியுமிருக்கிறார்; எவர்களை நீதிமான்களாக்கினாரோ அவர்களை மகிமைப்படுத்தியுமிருக்கிறார். இவைகளைக்குறித்து நாம் என்ன சொல்லுவோம்? தேவன் நம்முடைய பட்சத்திலிருந்தால் நமக்கு விரோதமாயிருப்பவன் யார்?” (ரோமர் 8:30,31)

 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.