சாத்தான் ஒரு தொடக்ககாரன் அல்ல, ஆனால் போலியாக நடிப்பவன். பிதாவுக்கு ஒரே பேறான குமாரனான இயேசுக்கிறிஸ்து இருப்பதைப் போலவே சாத்தானுக்கும் "அழிவின் மகன்" உண்டு (2 தெசலோனிக்கியர் 2:3). பரிசுத்த திரித்துவம் இருப்பதைப் போல பிசாசானவனிலும் திரியேகம் உள்ளது. (வெளிப்படுத்தல் 20:10). நாம் "தேவனின் பிள்ளைகள்" குறித்து வாசிப்பது போல "பொல்லாதவரின் பிள்ளைகள்" குறித்தும் வாசிக்கிறோம். (மத்தேயு 13:38). தேவன் தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படி விருப்பத்தையும், செய்கையையும் உங்களில் உண்டாக்குகிறவராய் இருக்கிறது போல கீழ்ப்படியாமையின் பிள்ளைகளிடத்தில் கிரியை செய்கிற ஆவி சாத்தான் (எபேசியர் 2:2). "தேவத்துவத்தின் மர்மம்" (1 தீமோத்தேயு 3:16) இருப்பது போல "அக்கிரமத்தின் மர்மம்” (2 தெசலோனிக்கேயர் 2:7) உள்ளது. தேவன் தம் ஊழியர்களை "முத்திரையிட" தேவதூதர்களைப் பயன்படுத்துவதைப் போல (வெளிப்படுத்தல் 7:3), சாத்தான் தன்னை பின்பற்றுபவர்களின் நெற்றியில் முத்திரையிட தனது ஊழியர்களைப் பயன்படுத்துகிறான். (வெளிப்படுத்தல் 13:16). "தேவனுடைய ஆவியானவர் எல்லாவற்றையும், தேவனுடைய ஆழங்களையும் ஆராய்ந்திருக்கிறார்" (1 கொரி 2:10), சாத்தானும் தன்னுடைய "ஆழமான விஷயங்களை" வழங்குகிறான் (வெளிப்படுத்தல் 2:24). கிறிஸ்து அற்புதங்களைச் செய்ததுபோல், சாத்தானும் பொய்யான அற்புதங்களைச் செய்கிறான். (2 தெசலோனிக்கியர் 2:9). கிறிஸ்துவுக்கு சிங்காசனம் இருப்பதுபோல் சாத்தானுக்கும் ஒரு சிங்காசனம் உள்ளது (வெளிப்படுத்தல் 2:13). கிறிஸ்துவுக்கு அவரது திருச்சபை இருப்பதைப்போல் சாத்தானுக்கும் ஒரு "ஐக்கியம்" உள்ளது. (வெளிப்படுத்தல் 2:9). கிறிஸ்து உலகத்தின் ஒளி. அதுபோலவே சாத்தானும் "ஒளியின் தூதனுடைய வேஷத்தைத் தரித்துக்கொள்கிறான்" (2 கொரிந்தியர் 11:14). கிறிஸ்து அப்போஸ்தலர்களை நியமித்தது போல சாத்தானுக்கும் அப்போஸ்தலர்கள் உள்ளனர் (2 கொரிந்தியர் 11:13). இவை அனைத்தும் "சாத்தானின் சுவிசேஷத்தைப்" பற்றி நம்மை சிந்திக்கத் தூண்டுகிறது.
சாத்தான் பரம போலியானவன். ஆண்டவர் நல்ல விதைகளை விதைத்த அதே வயலில் பிசாசும் பரபரப்பாக வேலை செய்கிறான். அவன் கோதுமையைப்போல் தோற்றமளிக்கும் களைகளை விதைத்து கோதுமையின் வளர்ச்சியை தடுக்க முயல்கிறான். ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால், போலியான செயல்முறை மூலம் அவன் கிறிஸ்துவின் பணியை சீர்குழைப்பதே நோக்கமாகக் கொண்டுள்ளான். எனவே, கிறிஸ்துவுக்கு சுவிசேஷம் இருப்பதுபோல், சாத்தானுக்கும் ஒரு சுவிசேஷம் இருக்கிறது; சாத்தானின் சுவிசேஷம் கிறிஸ்துவின் சுவிசேஷத்தின் போல் தோற்றமளிப்பது. அது கிறிஸ்துவின் சுவிசேஷத்தை மிக நெருக்கமாய் ஒத்திருப்பதால் இரட்சிக்கப்படாத அநேகர் இதன் மூலம் ஏமாற்றப்படுகிறார்கள். இந்த சாத்தானின் சுவிசேஷத்தைப்பற்றி அப்போஸ்தலன் கலாத்தியரிடம் இவ்வாறு கூறுகிறார், கலாத்தியா 1:6,7 -ல் உங்களைக் கிறிஸ்துவின் கிருபையினாலே அழைத்தவரை நீங்கள் இவ்வளவு சீக்கிரமாய் விட்டு, வேறொரு சுவிசேஷத்திற்குத் திரும்புகிறதைப்பற்றி நான் ஆச்சரியப்படுகிறேன்: வேறொரு சுவிசேஷம் இல்லையே: சிலர் உங்களைக் கலகப்படுத்தி, கிறிஸ்துவினுடைய சுவிசேஷத்தைப் புரட்ட மனதாயிருக்கிறார்களேயல்லாமல் வேறல்ல.
இந்த பொய்யான சுவிசேஷம் அப்போஸ்தலர்களின் காலத்திலும் அறிவிக்கப்பட்டது. அதை பிரசங்கித்தவர்கள் மீது மிக மோசமான சாபம் விழுந்தது. மேலும் அப்போஸ்தலன், கலாத்தியர் 1:8-ல் நாங்கள் உங்களுக்குப் பிரசங்கித்த சுவிசேஷத்தையல்லாமல், நாங்களாவது, வானத்திலிருந்து வருகிற ஒரு தூதனாவது, வேறொரு சுவிசேஷத்தை உங்களுக்குப் பிரசங்கித்தால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன். என்று கூறுகிறார். தேவனின் உதவியால் நாம் இப்போது இந்த பொய்யான சுவிசேஷத்தை விளக்க அல்லது வெளிப்படையாக பேச முயற்சிப்போம்.
சாத்தானின் சுவிசேஷம் ஒரு புரட்சிகர கொள்கைகளின் அமைப்பும் அல்ல, அது ஒரு அராஜகவாதத் திட்டமும் அல்ல. இது போரையும் குழப்பத்தையும் வளர்க்காது, ஆனால் அதன் குறிக்கோள் ஒற்றுமையும் சமாதானமும். இது தாயை மகளுக்கு எதிராகவோ அல்லது தந்தையை மகனுக்கு எதிராகவோ தூண்டுவது இல்லை, ஆனால் சகோதரத்துவத்தை வளர்ப்பதின் மூலம் மனித இனத்தை ஒரு பெரிய "சகோதரத்துவமாகக்" கருதுகிறது. அது சுபாவமான மனிதனைக் கீழே இழுத்துச் செல்ல முற்படுவது இல்லை மாறாக, அவரை மேம்படுத்தவும், உயர்த்தவும் முயல்கிறது. இது கல்வி மற்றும் வளர்ச்சியை ஆதரிக்கிறது. மேலும் நமக்குள் இருக்கும் சிறந்ததை ஈர்க்கிறது. இந்த உலகத்தை கிறிஸ்து இல்லாதது உணரப்படாத மற்றும் தேவன் தேவைப்படாத அளவிற்கு ஒரு வசதியான மற்றும் இன்பகரமான வாழ்விடமாக உருவாக்குவதே இதன் நோக்கம். அது மனிதனை இவ்வுலகினால் அதிகம் ஆக்கிரமித்து வரப்போகும் உலகத்தைக்குறித்து சிந்திக்க நேரமோ ஆர்வமோ இல்லாமல் செய்ய முயல்கிறது. இது சுய தியாகம், தொண்டு மற்றும் தயவு ஆகிய கொள்கைகளைப் பரப்புகிறது. மேலும் பிறர் நன்மைக்காக வாழவும், அனைவரிடமும் கருணை காட்டவும் கற்றுக்கொடுக்கிறது. இது சரீர மனதை வலுவாகக் கவர்வதால் மக்களிடையே பிரபலமாக உள்ளது. ஏனென்றால் அடிப்படையில் மனிதன் ஒரு வீழ்ச்சியடைந்தவான், தேவனின் வாழ்க்கையிலிருந்து பிரிந்து, அக்கிரமங்கள் மற்றும் பாவங்களைச் செய்கிறான். அவனுடைய ஒரே நம்பிக்கை மீண்டும் பிறப்பதில் உள்ளது என்ற உண்மைகளை அது புறக்கணிக்கிறது.
கிறிஸ்துவின் சுவிசேஷத்திற்கு முரணாக, சாத்தானின் சுவிசேஷம் நமது கிரியைகளால் இரட்சிப்பை அடையலாம் என கற்பிக்கிறது. மனிதனின் நல்ல நடக்கையின் அடிப்படையில் தேவனின் நியாயத்தீர்ப்பு வருகிறது என்று மனிதனுக்கு போதிக்கிறது. "நன்மை செய், நலமாக வாழ்" என்பதே இதன் புனிதமான சொற்றொடர்; ஆனால் அது மாம்சத்தில் எந்த நன்மையும் இல்லை என்பதை அறியத் தவறிவிட்டது. இது ஒருவரின் குணத்தின் மூலம் இரட்சிப்பை அறிவிக்கிறது, அது தேவனின் சுவிசேஷமாகிய இரட்சிப்பின் கனி நற்குணம் என்ற வார்த்தையின் வரிசையை மாற்றுகிறது. இது பல்வேறு கிளைகளையும் அமைப்புகளையும் கொண்டுள்ளது. நிதானம், சீர்திருத்த இயக்கங்கள், "கிறிஸ்தவ சமூக கழகங்கள்", நெறிமுறை கலாச்சார அமைப்புகள், "அமைதி மாநாடுகள்" போன்றவை அனைத்தும் சாத்தானின் சுவிசேஷமாகிய செயல்கள் மூலம் இரட்சிப்பு என்பதை அறிவிப்பதில் (ஒருவேளை அறியாமலோ) பயன்படுத்தப்படுகின்றன. கிறிஸ்துவுக்குப் பதிலாக வாக்குத்தத்த அட்டை உள்ளது; தனிப்பட்ட மறுபிறப்புக்காக சமூக தூய்மை, மதக்கொள்கை மற்றும் தெய்வீகத்திற்காக அரசியல் மற்றும் தத்துவம் உள்ளது. கிறிஸ்து இயேசுவில் ஒரு புதிய படைப்பை உருவாக்குவதைவிட பழைய மனிதனை மேம்படுத்துவது மிகவும் நடைமுறைக்குரியதாக கருதப்படுகிறது; சமாதானத்தின் இளவரசர் திரும்ப வரப்போவதை உணராமல் உலகளாவிய சமாதானத்தை நாடுகிறார்கள்.
சாத்தானின் அப்போஸ்தலர்கள் மது பரிமாறுபவர் மற்றும் வெள்ளை அடிமை கடத்தல்காரர்கள் அல்ல, ஆனால் பெரும்பாலானவர்கள் போதகர்களாக நியமிக்கப்பட்டவர்கள். நமது நவீன பிரசங்க மேடைகளை ஆக்கிரமித்துள்ள ஆயிரக்கணக்கானோர் கிறிஸ்தவ நம்பிக்கையின் அடிப்படை உண்மைகள் போதிப்பதில்லை, அவர்கள் சத்தியத்திலிருந்து திசை திருப்பப்பட்டு கட்டுக்கதைகளை போதிக்கிறார்கள். பாவத்தின் மகத்துவத்தை பெரிதாக்கி, அதன் நித்திய விளைவுகளை முன் வைப்பதற்குப் பதிலாக, பாவம் என்பது வெறும் அறியாமை அல்லது நன்மை இல்லாதது என்று பாவத்தின் விளைவுகளை மிகக் குறைத்து அறிவிக்கிறார்கள். "வரப்போகும் கோபத்துக்கு தப்பிக்க" கேட்பவர்களை எச்சரிப்பதற்குப் பதிலாக தேவன் மிகவும் அன்பானவர் மற்றும் இரக்கமுள்ளவர் என்பதால் அவர் தமது படைப்பின் மீது கோபப்பட்டு அவர்களை நித்திய வேதனைக்கு உட்படுத்தமாட்டார் என்று கூறி தேவனை பொய்யனாக்குகிறார்கள். "இரத்தம் சிந்தாமல் பாவமன்னிப்பு இல்லை" என்று அறிவிப்பதற்குப் பதிலாக, அவர்கள் கிறிஸ்துவை ஒரு சிறந்த முன்மாதிரியாகக் காட்டி, "அவருடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றுங்கள்" என்று அறிவுறுத்துகிறார்கள். அவர்களைப்பற்றி சொல்ல வேண்டுமானால், ரோமர் 10:3-ல் “எப்படியென்றால், அவர்கள் தேவநீதியை அறியாமல், தங்கள் சுயநீதியை நிலைநிறுத்தத் தேடுகிறபடியால் தேவநீதிக்குக் கீழ்ப்படியாதிருக்கிறார்கள்.” அவர்களின் செய்தி மிகவும் நம்பத்தகுந்ததாக இருக்கலாம். அவர்களின் குறிக்கோள் மிகவும் பாராட்டத்தக்கதாகக் கூட தோன்றலாம். ஆனால் அவர்களைப்பற்றி இவ்வாறு வாசிக்கிறோம். (2 கொரிந்தியர் 11:13-15) “அப்படிப்பட்டவர்கள் கள்ள அப்போஸ்தலர்கள், கபடமுள்ள வேலையாட்கள், கிறிஸ்துவினுடைய அப்போஸ்தலரின் வேஷத்தைத் தரித்துக்கொண்டவர்களாயிருக்கிறார்கள். அது ஆச்சரியமல்ல, சாத்தானும் ஒளியின் தூதனுடைய வேஷத்தைத் தரித்துக்கொள்வானே. ஆகையால் அவனுடைய ஊழியக்காரரும் நீதியின் ஊழியக்காரருடைய வேஷத்தைத் தரித்துக்கொண்டால் அது ஆச்சரியமல்லவே; அவர்கள் முடிவு அவர்கள் கிரியைகளுக்குத்தக்கதாயிருக்கும்.”
இன்று நூற்றுக்கணக்கான சபைகளில் தேவனின் சத்தியத்தை நம்பிக்கையுடன் அறிவிக்கும் தலைவர்கள் மற்றும் அவரது இரட்சிப்பின் வழியை தெளிவாக விளக்கும் போதகர்கள் இல்லை என்ற உண்மையைத் தவிர, இந்த சபைகளில் இருக்கும் பெரும்பான்மையான மக்கள் தாங்களாகவே சத்தியத்தைக் கற்றுக்கொள்வது மிகவும் குறைவு என்ற உண்மையையும் நாம் எதிர்கொள்ள வேண்டும். குடும்ப கூடுகைகளிலும் தேவனுடைய வார்த்தை தினமும் வாசிக்கப்படுவதில்லை. இப்போது பெயரளவிலான கிறிஸ்தவர்களின் வீடுகளில் கூட வேதம் வாசிப்பது ஒரு கடந்த கால விஷயமாக கருதப்படுகிறது. வேதாகமம் பிரசங்க மேடையில் விளக்கப்படவில்லை மற்றும் சபையில் படிக்கப்படவில்லை. இந்த அவசர காலத்தின் கோரிக்கைகள் பல, அதில் தேவனை சந்திக்கத் தயாராகும் நேரமும் விருப்பமும் பலருக்கு இல்லை. எனவே, தேவ வார்த்தைகளைத் தாங்களே தேடிக்கொள்ள முடியாத அளவுக்கு சோம்பேறித்தனமாக இருக்கும் பெரும்பான்மையினர், அவர்களுக்காக ஆராய்ச்சி செய்ய பிரசங்கிகளின் தயவை பணம் செலுத்தி நாடுகிறார்கள்; ஆனால் அவர்களில் பலர் தேவ வார்த்தைக்குப் பதிலாக பொருளாதார மற்றும் சமூக விஷயங்களைப் பிரசங்கித்து இவர்களை ஏமாற்றுகிறார்கள்.
கிறிஸ்துவை மாம்சத்தில் வெளிப்பட்ட தேவனாக அல்ல, மாறாக ஒரு சிறந்த மனிதராக சித்தரிக்கிறது. (2 கொரிந்தியர் 4:3-4) இந்த வசனம் நமது தற்போதைய தலைப்பை விரிவாகக் கூறுகிறது. “எங்கள் சுவிசேஷம் மறைபொருளாயிருந்தால், கெட்டுப்போகிறவர்களுக்கே அது மறைபொருளாயிருக்கும். தேவனுடைய சாயலாயிருக்கிற கிறிஸ்துவின் மகிமையான சுவிசேஷத்தின் ஒளி, அவிசுவாசிகளாகிய அவர்களுக்குப் பிரகாசமாயிராதபடிக்கு, இப்பிரபஞ்சத்தின் தேவனானவன் அவர்களுடைய மனதைக் குருடாக்கினான்.” அவன் கிறிஸ்துவின் நற்செய்தியின் ஒளியை மறைப்பதன் மூலம் அவிசுவாசிகளின் மனதைக் குருடாக்குகிறான், மேலும் அவன் கிறிஸ்துவின் நற்செய்தியை மாற்றித் தனது சொந்த நற்செய்தியின் மூலம் இதைச் செய்கிறான். "உலகம் அனைத்தையும் மோசம் போக்குகிற பிசாசு மற்றும் சாத்தான்" (வெளிப்படுத்தல் 12:9) என்று அவர் குறிப்பிடுவது பொருத்தமானது. "மனிதனுக்குள் இருக்கும் சிறந்ததை" வெறுமனே ஈர்ப்பதாலும், "உன்னதமான வாழ்க்கையை நடத்துங்கள்” என்று வெறுமனே உபதேசிப்பதாலும் பல்வேறு கருத்துக்களைக் கொண்ட அனைத்து மக்களும் தங்கள் பொதுவான செய்தியை அறிவிப்பதற்காக உடன்படக்கூடிய ஒரு பொதுவான மேடை உருவாக்கப்படுகிறது.
(நீதிமொழிகள் 14:12) -ஐ மீண்டும் மேற்கோள் காட்டுகிறோம். “மனுஷனுக்குச் செம்மையாய்த் தோன்றுகிற வழி உண்டு; அதின் முடிவோ மரண வழிகள்.” நரகத்திற்கான பாதை நல்ல நோக்கத்துடன் அமைக்கப்பட்டது என்ற வாக்கியத்தில் ஓரளவு உண்மை இருக்கிறது. நல்ல எண்ணங்களுடனும், நேர்மையான தீர்மானங்களுடனும், உயர்ந்த இலட்சியங்களுடனும் வாழ்க்கையை போற்றியவர்கள் பலர் அக்கினிக் கடலிலே இருப்பார்கள்; தங்கள் பரிவர்த்தனைகளிலே நேர்மையாக இருந்தவர்கள், தங்கள் பரிவர்த்தனைகளில் நியாயமானவர்கள் மற்றும் அவர்களின் எல்லா வழிகளிலும் தொண்டு செய்தவர்கள்; தங்கள் உத்தமத்தில் தங்களை பெருமைப்படுத்திக் கொண்டவர்கள் ஆனால் தங்கள் சொந்த நீதியின் மூலம் தேவனுக்கு முன்பாகத் தங்களை நியாயப்படுத்த முயன்றவர்கள்; ஒழுக்கமுள்ள மனிதர்கள், கருணை மற்றும் பெருந்தன்மை கொண்ட மனிதர்கள், ஆனால் தங்களை ஒருபோதும் குற்றவாளிகளாகவோ, வழி தவறியவர்களாகவோ, நரகத்திற்கு தகுதியானவர்களாகவோ தங்களுக்கு ஒரு இரட்சகர் தேவை என்பதை உணராதவர்களாகவோ இருக்கிறார்கள். அத்தகைய வழி "சரியானதாகத் தோன்றும்". சரீர மனதிற்குத் தன்னைப் பாராட்டிக் கொள்ளும் வழியும், இன்று ஏமாற்றப்பட்ட பலருக்குத் தன்னைப் பரிந்துரைக்கும் வழியும் இதுவே. பிசாசின் மாயை என்பது நமது சொந்த கிரியைகளால் நாம் இரட்சிக்கப்படலாம், மேலும் நமது சொந்த செயல்களால் நியாயப்படுத்தப்படலாம்; அதே சமயம், தேவன் தம்முடைய வார்த்தையில் நமக்குச் சொல்லுகிறார். “கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்... எந்த மனிதனும் பெருமை பாராட்டாதபடிக்கு இது கிரியைகளினால் உண்டானதல்ல". மீண்டும், "நாம் செய்த நீதியின் கிரியைகளினிமித்தம் அவர் நம்மை இரட்சியாமல், தமது இரக்கத்தின்படியே நம்மை இரட்சித்தார்".
சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சாதாரண போதகர் மற்றும் ஆர்வமுள்ள "கிறிஸ்தவ ஊழியர்" ஒருவருடன் பழகினார். இந்த நண்பர் ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக பொது பிரசங்கத்திலும் மதப் பணிகளிலும் ஈடுபட்டிருந்தார், ஆனால் அவரின் சொல்திறன் மற்றும் பயன்படுத்திய சில சொற்றொடர்களிலிருந்து, எழுத்தாளருக்கு தமது நண்பர் (கிறிஸ்தவன்) "மறுபடியும் பிறந்த" மனிதனா என்ற சந்தேகம் எழுந்தது. நாங்கள் அவரிடம் விசாரிக்கத் தொடங்கிய போது, அவருக்கு வேதத்தைப் பற்றி சரியான புரிதல் இல்லை என்றும் பாவிகளுக்கான கிறிஸ்துவின் பணியைப் பற்றிய தெளிவற்ற புரிதல் அவருக்கு இருப்பதாக தெரிய வந்தது. சிறிது நேரம் இரட்சிப்பின் வழியை எளிமையாகவும், தனித்துவமற்ற முறையிலும் முன் வைத்து, அவர் இன்னும் இரட்சிக்கப்படாமல் இருந்தால், தேவன் அவருக்குத் தேவையான இரட்சகரை வெளிப்படுத்துவதில் மகிழ்ச்சி அடைவார் என்ற நம்பிக்கையில், அவருக்காக தேவனுடைய வார்த்தையைப் படிக்கும்படி அந்த நண்பரை ஊக்கப்படுத்தினேன்.
பல வருடங்களாக சுவிசேஷத்தைப் பிரசங்கித்துக் கொண்டிருந்தவர், ஒரு இரவில் எங்களிடம் வந்து, முந்தைய இரவில்தான் நான் கிறிஸ்துவைக் கண்டுகொண்டதாக ஒப்புக்கொண்டார், அது எங்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. அவர் (தனது சொந்த வார்த்தைகளைப் பயன்படுத்த) "கிறிஸ்துவின் கொள்கைகளை” முன் வைக்கிறார், ஆனால் சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவை அல்ல என்பதை அவர் ஒப்புக்கொண்டார். இந்த போதகரைப் போலவே ஆயிரக்கணக்கானோர் இருப்பதாக இந்த கட்டுரையின் ஆசிரியர் நம்புகிறார். அவர்கள் ஞாயிறு பள்ளியில் வளர்க்கப்பட்டு, இயேசு கிறிஸ்துவின் பிறப்பு, வாழ்க்கை மற்றும் போதனைகள் பற்றி கற்றுக்கொள்கிறார்கள், அவரது வரலாற்றுத் தன்மையை நம்புகிறார்கள், அவரது கட்டளைகளை நடைமுறைப்படுத்த விரக்தியுடன் முயற்சிப்பவர்கள், அதுவே அவர்களின் இரட்சிப்புக்குத் தேவையானது என்று நினைக்கிறார்கள். இந்த வகையினர் வளர்ந்த பின்பு அடிக்கடி வெளி உலகிற்குச் சென்று நாத்திகர்களின், சமய நம்பிக்கை இல்லாதவர்களின் தாக்குதல்களைச் சந்திக்கிறார்கள். அவர்கள் நாசரேத்தின் இயேசு என்ற நபர் ஒருபோதும் வாழவில்லை என்று கூறுகிறார்கள். ஆனால் ஆரம்ப நாட்களின் பதிவுகளை எளிதில் அழிக்க முடியாது. மேலும் அவர்கள் "இயேசு கிறிஸ்துவை நம்புகிறார்கள்" என்ற தங்கள் அறிவிப்பில் உறுதியாக இருக்கிறார்கள். இருப்பினும், அவர்களுடைய விசுவாசத்தை ஆராயும்போது, அவர்கள் இயேசு கிறிஸ்துவைப் பற்றி பல விஷயங்களை நம்பினாலும், அவர்கள் உண்மையில் அவரை நம்பவில்லை என்பது அடிக்கடி கண்டறியப்படுகிறது. அத்தகைய நபர் வாழ்ந்தார் என்று அவர்கள் தலையுடன் நம்புகிறார்கள் (மற்றும், அவர்கள் இந்த கற்பனையை நம்புவதால், அவர்கள் இரட்சிக்கப்பட்டதாக நம்புகிறார்கள்), ஆனால் அவர்கள் ஒருபோதும் அவருக்கு எதிரான தங்கள் போராயுதங்களைத் தூக்கி எறியவில்லை. அவருக்கு தங்களைத் தாங்களே ஒப்புக்கொடுக்கவில்லை, அல்லது உண்மையாகவே தங்கள் இருதயத்தோடு அவரை நம்பவில்லை.
"மரண வழிகள்" ஆகிய "மனுஷனுக்கு செம்மையாய்த் தோன்றுகிற" வழியின் இன்னொரு கட்டம் கிறிஸ்துவின் நபரைப் பற்றிய ஒரு மரபு வழி கோட்பாட்டை வெறுமனே ஏற்றுக்கொள்வது இதயம் அவரால் வெல்லப்படாமல், அவருக்காக அர்ப்பணிக்கப்பட்ட வாழ்க்கை இல்லாமல் இருப்பது. கிறிஸ்துவின் நபரின் யதார்தத்திற்கு வெறும் அறிவார்ந்த ஒப்புதல், மேலும் அது இன்னும் செல்லாது, இது "ஒரு மனிதனுக்கு செம்மையாய்த் தோன்றும்" வழியின் மற்றொரு கட்டமாகும். ஆனால் அதன் முடிவு "மரண வழிகள்" அல்லது வேறு விதமாகக் கூறினால், இது சாத்தானின் சுவிசேஷத்தின் மற்றொரு அம்சம்.
இப்போது, நீங்கள் எங்கே நிற்கிறீர்கள்? "செம்மையாய்த் தோன்றும்” மரணத்தின் பாதையில் இருக்கிறீர்களா? அல்லது ஜீவனுக்கு இட்டுச் செல்லும் இடுக்கமான பாதையில் இருக்கிறீர்களா? மரணத்திற்கு இட்டுச் செல்லும் விசாலமான பாதையை நீங்கள் உண்மையாகவே கைவிட்டீர்களா? கிறிஸ்துவின் அன்பு உங்கள் இருதயத்தில் அவருக்குப் விருப்பமில்லாத எல்லாவற்றின் மீதும் வெறுப்பையும் திகிலையும் உண்டாக்கி உள்ளதா? அவர் உங்களை "வழி நடத்த வேண்டும்" என்று நீங்கள் விரும்புகிறீர்களா? (லூக்கா 19:14). நீங்கள் தேவனால் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு அவருடைய நீதியையும் இரத்தத்தையும் முழுமையாக விசுவாசிக்கிறீர்களா?
ஞானஸ்நானம் அல்லது "திடப்படுத்துதல்" போன்ற வெளிப்புறமான தெய்வீக பக்தியில் நம்பிக்கை கொண்டவர்கள்; அதை மதிக்கத்தக்க அடையாளமாகக் கருதப்படுவதால் சமய நம்பிக்கை கொண்டவர்கள்; திருச்சபையில் கலந்து கொள்வது, நாகரீகமாக உள்ளதால் அங்கு செல்பவர்கள்; மேலும், சில மதப்பிரிவுகளுடன் ஒன்றுபடுவதால், அத்தகைய நடவடிக்கை தங்களை கிறிஸ்தவர்களாக மாற்ற உதவும் என்று கருதுபவர்கள், அவர்கள் "மரணத்தில் முடிவடையும்" வழியில் இருக்கிறார்கள் ஆத்மீக மற்றும் நித்திய மரணம். நமது நோக்கங்கள் எவ்வளவு தூய்மையாக இருந்தாலும், எவ்வளவு உன்னதமானதாக இருந்தாலும், நமது குறிக்கோள் எவ்வளவு நல்ல அர்த்தமுள்ளதாக இருந்தாலும், நமது முயற்சிகள் எவ்வளவு நேர்மையாக இருந்தாலும், நாம் தேவனுடைய குமாரனை விசுவாசிக்கும் வரை, தேவனும் நம்மை அவருடைய பிள்ளையாக ஏற்றுக்கொள்ள மாட்டார்.
சாத்தானுடைய சுவிசேஷத்தின் இன்னும் போலியான வடிவம், பிரசங்கிகளை கிறிஸ்துவின் பாவ நிவாரண பலியை வழங்குவதற்கு தூண்டுவதும், பின்னர் தேவன் அவர்களிடமிருந்து எதிர்பார்ப்பதெல்லாம் தம்முடைய குமாரனை "விசுவாசிப்பது மட்டுமே” என்று கேட்பவர்களிடம் கூறுவதுமாகும். இதன்மூலம் தங்கள் குற்றத்தை உணர்ந்து வருந்தாத ஆயிரக்கணக்கான ஆத்துமாக்கள் இரட்சிக்கப்பட்டதாக நினைத்து ஏமாற்றம் அடைகிறார்கள்.
ஆனால் கிறிஸ்து சொல்லுகிறார், லூக்கா 13:3-ல் நீங்கள் மனந்திரும்பாமற்போனால் எல்லாரும் அப்படியே கெட்டுப்போவீர்கள். "மனம்திரும்புதல்" என்பது பாவத்தை வெறுப்பதும், அதை நினைத்து வருத்தம் கொள்வதும், அதிலிருந்து திரும்புவதுமாகும். இது ஆவியானவர் தேவனுக்கு முன்பாக இதயத்தை நொறுக்கச் செய்வதன் விளைவாகும். உடைந்த இருதயத்தைத் தவிர வேறுயாரும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்க முடியாது.
மீண்டும், அவரைத் தங்கள் கர்த்தராக ஏற்றுக்கொள்ளாத ஆயிரக்கணக்கானோர் தங்கள் “தனிப்பட்ட இரட்சகராக" "கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டோம்" என்று நினைத்து ஏமாற்றப்படுகிறார்கள். தேவனுடைய குமாரன் தம் மக்களை அவர்களுடைய பாவத்தில் இரட்சிக்க வரவில்லை, மாறாக "அவர்களின் பாவங்களிலிருந்து" இரட்சிக்க வந்தார் (மத்தேயு 1:21). பாவங்களிலிருந்து இரட்சிக்கப்படுவது என்பது தேவனின் அதிகாரத்திற்கு எதிரான புறக்கணிப்பதிலிருந்தும், அவமதிப்பிலிருந்தும் இரட்சிக்கப்படுவது. அது சுய விருப்பம் மற்றும் சுய மகிழ்ச்சியின் போக்கைக் கைவிடுவதாகும், அது "நம் வழியைக் கைவிடுவது" (ஏசாயா 55:7). அது தேவனின் அதிகாரத்திற்கு சரணடைவது, அவருடைய ஆதிக்கத்திற்கு அடிபணிவது, அவரால் ஆளப்படுவதற்கு நம்மை ஒப்படைப்பது. கிறிஸ்துவின் "நுகத்தை" ஒருபோதும் தன்மீது சுமக்காதவர், உண்மையாகவும் மெய்யாகவும் விடா முயற்சியுடன் வாழ்கையின் அனைத்து விவரங்களிலும் அவரைப் பிரியப்படுத்த முயலாதவர் ஆனால் அவர் "கிறிஸ்துவின் முடிக்கப்பட்ட வேலையில் ஓய்வெடுக்கிறார்" என்று கருதுபவர் பிசாசால் ஏமாற்றப்பட்டவர்.
மத்தேயு 7-ம் அதிகாரத்தில், கிறிஸ்துவின் சுவிசேஷம் மற்றும் சாத்தானின் போலியான நற்செய்தியின் விளைவுகளைக் குறிக்கும் இரண்டு பகுதிகள் உள்ளது. முதலாவது, மத்தேயு 7:13-14 இடுக்கமான வாசல் வழியாய் உட்பிரவேசியுங்கள்; கேட்டுக்குப் போகிற வாசல் விரிவும், வழி விசாலமுமாயிருக்கிறது; அதின் வழியாய்ப் பிரவேசிக்கிறவர்கள் அநேகர். ஜீவனுக்குப் போகிற வாசல் இடுக்கமும், வழி நெருக்கமுமாயிருக்கிறது; அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர்.
இரண்டாவது, மத்தேயு 7:22-23-ல் அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள். அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை; அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்றுபோங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்.
அன்பான வாசகரே, கிறிஸ்துவின் பெயரால் ஊழியம் செய்வதும், அவருடைய பெயரில் பிரசங்கிப்பதும் கூட சாத்தியமே, உலகம் நம்மை அறிந்திருந்தாலும், திருச்சபை நம்மை அறிந்தாலும், இன்னும் கர்த்தருக்குத் தெரியவில்லை! நாம் உண்மையில் எங்கே இருக்கிறோம் என்பதைக் கண்டுபிடுப்பது எவ்வளவு அவசியம்; நம்மை நாமே சோதித்து, நாம் விசுவாசத்தில் இருக்கிறோமா என்று பார்க்க வேண்டும்; தேவனுடைய வார்த்தையின் மூலம் நம்மை ஆராய்ந்து, நமது நுட்பமான எதிரியால் நாம் ஏமாற்றப்படுகிறோமா என்று பார்ப்பதும்; நமது வீட்டை மணலில் கட்டுகிறோமா அல்லது அதை இயேசு கிறிஸ்து என்ற கற்பாறையில் கட்டுகிறோமா என்பதைக் கண்டறிய வேண்டும். பரிசுத்த ஆவியானவர் நம் இருதயங்களை ஆராய்ந்து, நம்முடைய விருப்பங்களை உடைத்து, தேவனுக்கு எதிரான நமது பகையை அழித்து, ஆழ்ந்த மற்றும் உண்மையான மனந்திரும்புதலை நம்மில் உருவாக்கி, உலகத்தின் பாவங்களை நீக்கும் தேவ ஆட்டுக்குட்டிக்கு நேராக நம் கவனத்தைத் திருப்புவாராக.