உண்மையான கிறிஸ்தவ வாழ்க்கை

வேதாகம அறிவும் கிறிஸ்தவ இலக்கியத்தின் முக்கியத்துவமும்
ஆசிரியர்: G.பிபு
தமிழாக்கம்: தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்
வாசிப்பதற்கான நேரம்: 9 நிமிடங்கள்

 இலக்கிய ஊழியத்தின் முக்கியத்துவம் என்ன? நாம் ஏன் கிறிஸ்தவப் புத்தகங்களை வாசிக்க வேண்டும்? வேதாகமத்தை மட்டும் வாசித்தால் போதாதா? என்ற கேள்விகள் நமக்குள் எழலாம். இப்புத்தகங்களை வேதாகமத்திற்கு இணையாக வாசிக்கிறோமா அல்லது வேதாகமத்திற்கு மாற்றாக வாசிக்கிறோமா? அல்லது வேதாகமத்தைப் புரிந்துகொள்ள உதவும் கருவிகளாக இவற்றைப் பயன்படுத்துகிறோமா? என்ற தெளிவு பல சகோதர சகோதரிகளுக்கு இல்லாத நிலை காணப்படுகிறது. ஆகையால், வேதத்தின்படி நாம் எப்படிப்பட்ட வேத அறிவைக் கொண்டிருக்க வேண்டும்? அதை ஏன் கொண்டிருக்க வேண்டும்? என்பது குறித்த சில காரியங்களைச் சுருக்கமாகத் தியானிப்போம்.

வேத அறிவின் அவசியம்

மத்தேயு நற்செய்தி 22:29-ல், இயேசு கிறிஸ்து சதுசேயர்களைப் பார்த்து, "நீங்கள் வேதவாக்கியங்களையும், தேவனுடைய வல்லமையையும் அறியாமல் தப்பறைகிறீர்கள்" என்று கூறுகிறார். சதுசேயர்கள் வேதத்தை நன்கு அறிந்த மத போதகர்கள் என்று தங்களைக் கருதிக்கொண்டவர்கள். ஆனால் கர்த்தர், அவர்கள் தவறாகப் புரிந்துகொண்டிருக்கிறார்கள் என்று சுட்டிக்காட்டுகிறார். தேவனுடைய வல்லமை வெளிப்படுத்தப்பட்ட வேதவாக்கியங்களைக் குறித்த உண்மையான புரிதல் அவர்களுக்கு இல்லாததே, அவர்களின் தப்பறைக்குக் காரணமாக அமைந்தது.

கிறிஸ்தவர்களாகிய நாம் தப்பறை செய்வதற்கும், தவறான வழிகளில் நடப்பதற்கும், தேவனைப் பற்றிய சரியான புரிதல் இல்லாமல் இருப்பதற்கும் அடிப்படையான காரணம் வேதவாக்கியங்களை அறியாமல் இருப்பதேயாகும். அநேகர் தங்களைக் கிறிஸ்தவர்கள் என்று சொல்லிக்கொண்டாலும், வேதத்திற்கு முரணான வாழ்க்கையை வாழ்வதற்கும், புறம்பான போதனைகளை நம்புவதற்கும் காரணம் இந்த அறியாமையே. எனவே, வேதவாக்கியங்களை அறிந்துகொள்வது கிறிஸ்தவ வாழ்க்கையின் அடித்தளமாகும்.

"நாம் எவ்வளவு தெரிந்து கொண்டோம் என்பது முக்கியமல்ல, எவ்வளவு கீழ்ப்படிகிறோம் என்பதே முக்கியம்" என்று அநேகர் கூறுவதுண்டு. அது உண்மைதான்; ஆனால், சத்தியத்தை அறிந்துகொள்ளாமல் அதற்குக் கீழ்ப்படிவது சாத்தியமா? கார் ஓட்ட வேண்டுமென்றால் முதலில் அதைக் கற்றுக்கொள்ள வேண்டும், அல்லவா? அதுபோலவே, கிறிஸ்தவ வாழ்க்கையில் கீழ்ப்படிதல் முக்கியம் என்றாலும், எதற்குக் கீழ்ப்படிய வேண்டும் என்று தெரிந்துகொள்ள வேதத்தை வாசித்துப் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.

அறிவா, அறியாமையா?

பழைய ஏற்பாட்டில் கர்த்தர், "என் ஜனங்கள் அறிவில்லாமையினால் சங்காரமாகிறார்கள்" (ஓசியா 4:6) என்று முறையிடுகிறார். தேவனுடைய ஜனங்கள் அழிந்துபோவதற்குக் காரணமே அறிவில்லாமைதான். எனவே, சத்தியத்தை நாம் அறிய வேண்டும் என்பதே தேவன் வேதத்தை அருளியதன் நோக்கமாகும்.

சிலர் 1 கொரிந்தியர் 8:1-ஐ மேற்கோள்காட்டி, "அறிவு இறுமாப்பை (பெருமையை) உண்டாக்கும், அன்போ பக்திவிருத்தியை உண்டாக்கும்; எனவே அறிவு தேவையில்லை" என்று வாதிடுவார்கள். ஆனால், பவுல் அங்கே அறிவைத் தடை செய்யவில்லை; மாறாக, அறிவை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்று முறைப்படுத்துகிறார். ஒருவரையொருவர் மேன்மைபாராட்டிக் கொள்வதற்காக அல்லாமல், சபையின் பக்திவிருத்தியைக் கருத்தில் கொண்டு அன்போடு அந்த அறிவைப் பயன்படுத்தும்படி எச்சரிக்கிறாரே தவிர, வேத அறிவு தேவையில்லை என்று அவர் கூறவில்லை.

இன்னும் சிலர், "அதிகமாகத் தெரிந்துகொண்டால் தேவனுக்கு அதிகமாகக் கணக்கு ஒப்புவிக்க வேண்டும், அறியாமை ஒரு வரம் (Ignorance is bliss), தெரியாமல் செய்தேன் என்று தப்பித்துக்கொள்ளலாம்" என்று எண்ணுகிறார்கள். லேவியராகமம் 5:17-ன் படி, அறியாமையினால் செய்த பாவங்களுக்காகவும் தேவன் பலி செலுத்தும்படி கட்டளையிட்டார். லூக்கா 12:47-48 வசனங்களில், எஜமானின் சித்தம் தெரிந்து செய்யாத ஊழியக்காரன் அநேக அடிகள் அடிக்கப்படுவான் என்றும், சித்தம் அறியாமல் செய்தவன் சில அடிகள் அடிக்கப்படுவான் என்றும் வாசிக்கிறோம். அறியாமையினால் தண்டனையிலிருந்து விலக்களிக்கப்படுவதில்லை. சத்தியத்தைத் தெரிந்துகொள்ள வேண்டிய பொறுப்பும், அதன்படி வாழவேண்டிய கடமையும் நமக்கு நிச்சயமாக உண்டு.

வேதத்தின் உண்மையான கருத்தைக் கிரகித்தல்

வேதத்தில் உள்ள வரலாற்று நிகழ்வுகளைச் மேலோட்டமாகத் தெரிந்துகொண்டால் மட்டும் போதாது. மத்தேயு 9:13-ல், வேதபாரகர்களையும் பரிசேயர்களையும் பார்த்து இயேசு, "பலியையல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன் என்பதின் கருத்து இன்னதென்று போய்க் கற்றுக்கொள்ளுங்கள்" என்றார். வேதம் அவர்களுக்குத் தெரிந்திருந்தாலும், அதன் உண்மையான கருத்தை (பொருளை) அவர்கள் அறியவில்லை. அதேபோல, மத்தேயு 24:15-ல், "வாசிக்கிறவன் சிந்திக்கக்கடவன் (கிரகிக்கக்கடவன்)" என்று இயேசு கூறுகிறார். வேதவாக்கியங்களை வாசிப்பவன், அதன் கருத்தைச் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டிய பொறுப்பைக் கொண்டுள்ளான்.

தேவன் தமது வார்த்தையை நமக்கு வெளிப்படுத்தியபோது, ஒரு திட்டவட்டமான நோக்கத்தோடு வெளிப்படுத்தியிருக்கிறார். "யாருக்கு எப்படிப் புரிய வேண்டுமோ அப்படி எடுத்துக்கொள்ளுங்கள்" என்று அவர் கொடுக்கவில்லை. யார் வாசித்தாலும், எந்தக் காலத்தில் வாசித்தாலும் வேத வசனத்தின் மையக்கருத்து ஒன்றுதான். அதை நமது தனிப்பட்ட வாழ்க்கைச் சூழ்நிலைகளுக்குப் பொருத்துவது (Application) வேண்டுமானால் மாறலாம்; ஆனால் அடிப்படை உபதேசம் மாறுவதில்லை. தேவன் உத்தேசித்த கருத்திலிருந்து விலகிச் செல்வது எதுவானாலும் அதுவே வேதப்புரட்டும் துர்ப்போதனையுமாகும். 2 பேதுரு 3:16-ல், கல்லாதவர்களும் உறுதியற்றவர்களும் வேதவாக்கியங்களைத் தங்கள் சுயநாசத்துக்கேதுவாகப் புரட்டுகிறார்கள் என்று பேதுரு எச்சரிக்கிறார்.

வேதத்தைப் புரிந்துகொள்ள தேவன் அருளிய கருவிகள்

சரியான புரிதலைப் பெற தேவன் நமக்கு மூன்று முக்கியக் கருவிகளை அருளியுள்ளார்:

  1. பரிசுத்த ஆவியானவரின் உதவி: ஜெபத்தின் மூலமாக பரிசுத்த ஆவியானவரைச் சார்ந்து வேதத்தை வாசிக்க வேண்டும். அவர் நம்மைச் சகல சத்தியத்திற்குள்ளும் நடத்துவார். ஆவியானவர் ஒருபோதும் வேதத்தின் அடிப்படை உபதேசத்திற்கு முரணான புதிய அல்லது விசித்திரமான கருத்துகளை வெளிப்படுத்தமாட்டார்.
  2. வேத உபதேசம் (சபையும் இலக்கியமும்): எபேசியர் 4:11-13-ன்படி, சபையின் பக்திவிருத்திக்காக தேவன் மேய்ப்பர்களையும் போதகர்களையும் நியமித்தார். இவர்கள் வாய்மொழியாகவோ அல்லது எழுத்துப்பூர்வமாகவோ (புத்தகங்கள் வாயிலாகவோ) சத்தியத்தைப் போதிப்பார்கள். தேவன் நியமித்த இந்த உபதேச ஊழியத்தின் ஒரு பகுதியே 'இலக்கிய ஊழியம்'. நல்ல கிறிஸ்தவப் புத்தகங்கள் வேதத்தை ஆழமாகப் புரிந்துகொள்ள உதவும் மிகச் சிறந்த கருவிகளாகும். "நான் வேதாகமத்தை மட்டுமே வாசிப்பேன், வேறு எந்தப் புத்தகத்தையும் வாசிக்கமாட்டேன்" என்று கூறுவது ஆவிக்குரிய முதிர்ச்சியல்ல, அது ஒருவிதமான பெருமையே. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த சீர்திருத்தப் போதகர்களின் எழுத்துக்கள், இன்றும் அநேகரை வேதத்தில் வேரூன்றச் செய்கின்றன.
  3. தனிப்பட்ட பிரயாசம்: பெரோயா சபையார் அப்போஸ்தலர்கள் போதித்ததைக் கவனமாகக் கேட்டதோடு நில்லாமல், "காரியங்கள் அப்படி இருக்கிறதா என்று தினந்தோறும் வேதவாக்கியங்களை ஆராய்ந்துபார்த்தார்கள்" (அப் 17:11). நமக்குப் போதிக்கப்படும் காரியங்கள் வேதத்தின்படிதான் இருக்கின்றனவா என்பதைப் பகுத்தறிய, நாமும் தனிப்பட்ட முறையில் வேதத்தை ஆராய்ந்து படிக்கப் பிரயாசப்பட வேண்டும்.

கீழ்ப்படிதலே இறுதி நோக்கம்

வேத அறிவைப் பெற்றுக்கொண்டால் மட்டும் போதுமா? யாக்கோபு 1:22 கூறுவதுபோல, "நீங்கள் உங்களை வஞ்சியாதபடிக்குத் திருவசனத்தைக் கேட்கிறவர்களாய் மாத்திரமல்ல, அதின்படி செய்கிறவர்களாயும் இருங்கள்." சாத்தானுக்கும் வேதம் நன்றாகத் தெரியும்; அதன் சரியான கருத்தும் அவனுக்குத் தெரியும். தேவன் ஒருவர் உண்டு என்று பிசாசுகளும் விசுவாசித்து நடுங்குகின்றன (யாக்கோபு 2:19). ஆனால் அவையெல்லாம் தேவனுக்குக் கீழ்ப்படிவதில்லை.

எல்லாவற்றையும் தெரிந்துகொண்டும் அதன்படி வாழாவிட்டால், 'நான் ஒரு கிறிஸ்தவன்' என்று சொல்லிக்கொள்பவன் அந்தகாரத்தின் நிலையிலேயே இருக்கிறான். யோவான் 8:47-ல், "தேவனால் உண்டானவன் தேவனுடைய வசனங்களைக் கேட்கிறான்" என்று இயேசு கூறுகிறார். தேவனுடைய வார்த்தைக்குத் தங்கள் வாழ்வில் இடமளிக்காதவர்கள் தேவனால் உண்டானவர்கள் அல்ல.

எனவே, வேதாகமத்தை வாசிப்பதன் இறுதி நோக்கம், தேவனை உள்ளபடியே அறிந்துகொள்வதும், நமது வாழ்க்கையை அவருடைய சத்தியத்திற்குக் கீழ்ப்படுத்துவதுமே ஆகும். நமது வாழ்வின் அர்த்தம் என்ன? உயரிய நோக்கம் என்ன? இவையெல்லாவற்றையும் வேதத்தின் மூலமாக மட்டுமே கண்டறிய முடியும். அப்படிப்பட்ட வேதத்தின் மீது நாம் ஆழ்ந்த அர்ப்பணிப்பைக் கொண்டிருக்க வேண்டும். நாம் கேட்கிற, வாசிக்கிற வார்த்தைகளை வெறும் செய்தியாகக் கடந்துபோகாமல், ஒவ்வொரு நாளும் அதன் வெளிச்சத்தில் நம்மை நாமே ஆராய்ந்து திருத்திக்கொள்ளவும், தேவனுக்குப் பிரியமான வழியில் நடக்கவும் தேவன் தாமே நமக்குக் கிருபை அருளுவாராக. ஆமென்.

 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

Join WhatsApp எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.