உண்மையான கிறிஸ்தவ வாழ்க்கை

ஆசிரியர்: A.W. பிங்க்
தமிழாக்கம்: தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்
வாசிப்பதற்கான நேரம்: 16 நிமிடங்கள்
Blessed Man
"துன்மார்க்கருடைய ஆலோசனையில் நடவாமலும், பாவிகளுடைய வழியில் நில்லாமலும், பரியாசக்காரர் உட்காரும் இடத்தில் உட்காராமலும், கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான். அவன் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு, தன் காலத்தில் தன் கனியைத் தந்து, இலையுதிராதிருக்கிற மரத்தைப்போலிருப்பான். அவன் செய்வதெல்லாம் வாய்க்கும்" (சங்கீதம் 1:1-3). ஆசீர்வதமான இந்த சங்கீத புத்தகம் ஆசீர்வதிக்கப்பட்ட ஒருவரின் குணாதிசயங்களோடு துவங்குவது என்னை மிகவும் சிந்திக்க வைத்தது. இருப்பினும், மேலோட்டமாக ஆராயாமல் ஆழமாக சிந்திக்கையில், இந்த சங்கீதப் புத்தகத்தைத் துவங்குவதற்கு மிகவும் பொருத்தமான கருப்பொருளைக் கண்டுபிடிப்பது சாத்தியமில்லை என்பதை நாம் உணர்கிறோம். வாசகர்கள் பலருக்குத் தெரியும், "சங்கீதம்" என்பது தேவனைத் துதித்து பாடி ஆராதிப்பதை பற்றியது. ஆசீர்வதிக்கப் பட்டவர்கள் மட்டுமே தேவனை துதிக்க தகுதியானவர்கள். அப்படிப் பட்டவர்களின் துதிகள் மட்டுமே தேவனுக்கு ஏற்கத்தக்கவை. அதனால்தான் இந்த சங்கீத புத்தககத்தில் முக்கிய பொருளான "பாக்கியவான் & ஆசீர்வதிக்கப்பட்டவன்" என்று தொடங்குகிறது. மேலும் மத்தேயு 5:3,11) வசனங்களில் பயன்படுத்தப்பட்டதுப் போல, தற்போதைய சூழலிலும், "பாக்கியவான்" என்ற வார்த்தை இரண்டு அர்த்தங்களுடன் பயன்படுத்தப்படுகிறது. முதலாவது அர்த்தம் அவன் மீது தேவனின் கோபத்திற்கு மாறாக தேவனின் கருணை பொழியும், அதன் மூலமாக தேவனுக்குள் இருக்கும் ஆனந்தத்தை அவனும் அடைகிறான் என்ற அர்த்தம் இதில் உள்ளது. குறிப்பாக இங்கு "பாக்கியவான்கள்" என்று சொல்லாமல் "பாக்கியவான்" என ஒருமையில் பயன்படுத்தப்பட்டுள்ளதை, கவனமாக பாருங்கள். நடைமுறை வாழ்க்கையில் பரிசுத்தம் என்பது முற்றிலும் ஒரு நபருக்குறியது என்பதை இது நமக்கு தெளிவுபடுத்துகிறது. எந்தவொரு மனிதனின் துதிகளும், ஸ்தோத்திரங்களும் தேவன் ஏற்றுக்கொள்ளக்கூடியதை இந்த சங்கீதம் விவரிக்கிறது. இப்படிப்பட்ட சங்கீதங்களில் தொடங்குவது கவனமாக பார்க்க வேண்டிய விஷயம். இந்த முதல் மூன்று வசனங்களில், பரிசுத்த ஆவியானவர் நம்மை நாமே உண்மையுள்ளவர்களாக பார்த்துக் கொள்ளவும், தேவனின் ஆசீர்வாதத்தைப் பெறவும், அவரைத் துதிக்கும் தகுதியுள்ள ஒரு நபரைப் பற்றி நமக்கு இது விவரித்து காண்பிக்கிறது. மேலும் இந்த வசனத்தில் "பாக்கியவான்" என சொல்லப்படும் ஆசிர்வதிக்கப்பட்ட மனிதனின் முக்கியமான குணாதிசயங்களை மூன்று வார்த்தைகளில் பார்க்கலாம். முதல் வசனம் 'அவரது ஏற்பாடு', இரண்டாவது வசனம் அவரது 'வசன தியானம்', மூன்றாவது வசனம் 'அவரது வளமான வாழ்க்கை' என மூன்றாக பிரிக்கலம் அவைகளை ஒவ்வொன்றாக பார்க்கலாம்.

1. அவரது ஏற்பாடு:
"துன்மார்க்கருடைய ஆலோசனையில் நடவாமலும், பாவிகளுடைய வழியில் நில்லாமலும், பரியாசக்காரர் உட்காரும் இடத்தில் உட்காராமலும், இந்த வேத வசனங்கள் தேவபக்தி அற்றவர்களின் சீரழிவைக் காட்டுகின்றன என்று பல்வேறு விதமான கருத்துக்களை வேத வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். முதலில், துன்மார்க்கத்தில் நடப்பது; அதன் பிறகு, நிற்பது என்றால் அதில் மேலும் நிலைபெறுவது; முடிவில் அமர்வது என்றால் அதில் நிரந்தரமாக தங்குவது; இந்த வரிசை பிரகராமாக அந்த வசனத்தில் குறிப்பிடப்பட்டதாக வேத வல்லுநர்கள் கருத்து தெரிவித்தனர். சிந்தனை, வழி, உட்காருமிடம் ஆகியவையும் அதே வரிசையைக் கான்பிக்கிறது. மேலும், "துன்மார்க்கர்", "பாவிகள்" மற்றும் "பரியாசக்காரர்" என இவ்விதமாக குறிப்பிட்டதின் முறை மேற் சொல்லப்பட்ட கருத்தையே வெளிப்படுத்துகிறது என அவர்களுடைய விளக்கங்களை தெரிவித்தார்கள். ஆனால், இந்த விளக்கம் வசனத்தின் சூழலுக்கு பொருந்தாது என்பது எனது தனிப்பட்ட கருத்து. இந்த வசனத்தில் பரிசுத்த ஆவியானவர், ஒரு ஆசீர்வதிக்கப்பட்ட நபரின் மேன்மையான தன்மையை விவரிக்கிறாரே தவிர, துன்மார்க்கரின் சீரழிவைக் குறிப்பிடவில்லை. பரிசுத்த ஆவியானவர் "பாக்கியவான்" என்று ஆசீர்வதிக்கப்பட்ட நபரின் நடக்கையை நமது சிந்தனைக்கு கொண்டு வருகிறார் என்பதை நினைவில் கொள்க. பாக்கியவானின் நடை என்பது துன்மார்க்கரின் நடையிலிருந்து வேறுப்பட்டது. இது ஆவிக்குரிய சிந்தனைக்கு உதவும் மிக முக்கியமானதும், சுயபரிசோதனைக்கு உதவக்கூடிய ஆசீர்வாதமான சிந்தனையாகும், அன்பான வாசகரே! தனிமனித பரிசுத்தம் என்பது வேறு எங்கும் இல்லை, இங்கேதான் தொடங்குகிறது! உலகத்திலிருந்து நம்மைப் பிரித்து, பாவத்தின் பாதையிலிருந்து விலகி, அந்தத் தொலைதூர நாட்டிலிருந்து பின்வாங்காமல், தேவனோடு நடப்பதும், கிறிஸ்துவைப் பின்பற்றுவதும், அந்த சமதான பாதையில் நடப்பது என்பது முடியாத காரியம்.

துன்மார்க்கரின் எண்ணங்களைப் பின்பற்றாதவன் பாக்கியவான். இந்த எண்ணம் எவ்வாறு வெளிப்படுத்தப் படுகிறது என்பதைக் கவனியுங்கள். "வெளிப்படையாக துன்மார்க்கத்தில் மகிழ்ச்சி அடையாதவன்", பொல்லாதவைகளில் தங்கியிரதாவன் என்று இங்கு கூறப்படவில்லை, மாறாக, "துன்மார்க்கரின் ஆலோசனையில் நடக்காதவன்" என்று சொல்லப்பட்டுள்ளது. இது சுயபரிசோதனையை ஊக்குவிக்கும் வார்த்தை. இது ஒரு முக்கியமான காரியத்தைப் பற்றி நம்மை எச்சரிக்கிறது. "துன்மார்க்கர்கள்" விசுவாசிகளுக்கு யோசனை கொடுக்க எப்போதும் தயாராக இருப்பதை நாம் அடிக்கடி பார்க்கிறோம். அவர்கள் நம்முடைய நலன்களை விரும்புகிறவர்களாக நமக்கு காணப்படலாம். பக்திக்குரிய காரியத்தில் எல்லை மீற கூடாது என்று அவர்களுக்கு அறிவுறுத்தப் படுவார்கள். ஆனால் தேவன் அவர்களுடைய வாழ்வில் இல்லாததால், அவர்களுக்கு தேவபயம் இல்லை, எனவே அவர்களின் நடவடிக்கை அனைத்து சுய யோசனை மற்றும் சுயநலம் சார்ந்தவைகலாகவே உள்ளது. "பொது அறிவு" என்று கூறுவதன் மூலம் கட்டளையிடப்படுகின்றன. ஐயோ, இதில் கிறிஸ்தவர்கள் என்று சொல்லிக் கொள்பவர்களும் பலர் தங்கள் கிறிஸ்துவல்லாத உறவினர்களின் அறிவுரையின்படி தங்கள் வாழ்க்கையை ஒழுங்குபடுத்திக் கொள்கிறார்கள். அவர்களின் வியாபாரத்திலும், சமூகக் கடமைகளிலும், வீட்டு காரியங்களிலும், உணவு, உடை பழக்கங்களிலும், தங்களுடைய பிள்ளைகளை அனுப்பும் பள்ளிக்கூடத்தைத் தேர்ந்தெடுப்பதிலும்  தேவனை அறியாதவர்களின் சிந்தனையைப் பின்பற்றுவதை அடிக்கடி பார்க்கிறோம். ஆனால் ஒரு 'ஆசீர்வதிக்கப்பட்டவனின்' நிலை இதற்கு முற்றிலும் வேறுப்பட்டது. அவன் அவர்களின் சிந்தனையைப் பின்பற்ற பயப்படுவான். அவன் அதை வெறுத்து, "சாத்தானே நீ எனக்கு பின்னாக போ, என்னைப் புண்படுத்துகிறாய்; நீ மனிதர்களின் காரியங்களைப் பற்றி சிந்திக்கிறாயே தவிர நீ தேவனுடைய காரியங்களைப் பற்றி சிந்திக்கவில்லை" ஏன்? ஏனென்றால், தனக்கு வழிகாட்டுவதற்கு எல்லையற்ற சிறந்த மற்றொன்று உண்டு என்று தேவனின் கிருபை அவனுக்கு கற்றுக் கொடுத்தது. அவனுடைய ஒவ்வொரு தேவைக்கும் சூழ்நிலைக்கும் ஏற்றவாறு அவனுடைய பாதங்களுக்கு தீபமாகவும், அவனுடைய பாதைக்கு வெளிச்சமாகவும் இருக்கிற, தேவனுடைய ஞானத்தால் எழுதப்பட்ட தேவ வார்த்தைகள் அவனுக்குக் கொடுக்கப்பட்டது. பொல்லாத துன்மார்கரின் அலோசனையின் படி அல்லாமல் தேவனுடைய ஆரோக்கியமான உபதேசத்தின் படி நடக்க வேண்டும், என்பதே தேவனின் தீர்மானம். மனந்திரும்புதலின் சரியான விளக்கம் என்னவென்றால், இந்த பாவ உலகில் நீதியான பாதையைப் பின்பற்றுவதற்கான வழிகாட்டியாக நம்முடைய இதயத்தை தேவனுக்கு சமர்ப்பிக்க வேண்டும். இந்த உலகத்தில் இருந்து ஆசீர்வதிக்கப்பட்டவன் மூன்று விதமாக பிரித்து காட்டப்படுகிறான்.

முதலாவதாக, அவன் "துன்மார்க்கரின் எண்ணங்களில் நடப்பதில்லை" அதாவது அவன் இந்த உலகத்தைப் பின்பற்றுவதில்லை. ஏவாள், ஏரோதியாளின் மகள், போன்றவர்கள் துன்மார்க்கரின் எண்ணங்களைப் பின்பற்றியவர்களுக்கு எடுத்துக்காட்டுகள். மாறாக, போத்திபார் மனைவியின் அக்கிரமத்தை யோசேப்பு நிராகரித்ததும், கோலியாத்தை எதிர்கொள்ளவதற்கு மார்கவசத்தை அணிந்துக்கொள் என்ற சவுலின் அறிவுரையை தாவீது நிராகரித்ததும், தேவனை தூஷித்து ஜீவனை விடு என்று சொன்ன மனைவியின் வார்த்தைகளுக்கு யோபுவின் எதிர்ப்பும், துன்மார்க்கரின் எண்ணங்களைப் பின்பற்றாததற்கு எடுத்துக்காட்டுகள். இரண்டாவதாக, அவன் பாவிகளின் வழியில் நிற்பதில்லை. ஆசீர்வதிக்கப் பட்டவனின் தோழமை எவ்வாறானது என்பது இங்கே சொல்லப்பட்டிருக்கிறது. அவன் நீதிமான்களின் ஐக்கியத்தை நாடுவானே தவிர, பாவிகளின் ஐக்கியத்தை அல்ல. ஆபிரகாம் கல்தேயர்களின் நகரமான ஊர் என்ற பட்டணத்தை விட்டு வெளியேறியதும், மோசே எகிப்தின் செல்வ செழிப்புகளைக் கைவிட்டதும், ரூத் மோவாப் என்ற நாட்டை விட்டு நகோமியைப் பின்தொடர்ந்ததும் இதற்கு பிரபலமான எடுத்துக்காட்டுகள். மூன்றாவதாக, பரியாசக்காரர் உட்காரும் இடத்தில் அவன் உட்காருவதில்லை. இங்கு "உட்காருமிடம்" என்ற சொல் ஓய்வெடுப்பதை அல்லது ஈடுபடுவதைக் குறிக்கிறது. எனவே பரியாசக்காரர் என்றால் நித்திய ஓய்வு கொடுப்பவரான தேவனை இகழ்ந்து, தங்கள் பாவ வழிகளிலே ஓய்வை தேடுபவர்கள் என அர்த்தம். எனவே பரியாசக்காரர் உட்காருமிடத்தில் உட்காராமல் இருப்பது, ஆசீவதிக்கப் பட்டவனின் உலகத்தவர்கள் அனுபவிக்கும் இன்பங்களில் ஓய்வை நாடுவதில்லை என்று அர்த்தம். குறுகிய கால இன்பங்கள் அப்பேர்பட்டவனை திருப்திப்படுத்துவதில்லை. “உம் சந்நிதியில் பூரண ஆனந்தம் இருக்கிறது” என்று மரியாளைப் போல ஆண்டவரின் பாதத்தில் அமர ஆசைப்படுவான்.

2. அவருடைய வசன தியானம்:
ஆசீர்வதிக்கப்பட்டவனின் வாழ்க்கை வேத வசன தியானத்தால் முக்கியமாக நிரம்பியுள்ளது. கர்த்தருடைய வேதத்தில் பிரியப்படுகிறான். ஆவிக்குரிய காரியங்களை கேலி செய்பவர்கள் உலகம் சார்ந்தவைகளில் ஆனந்தப் படுக்கிறார்கள். ஆனால் ஆசீர்வதிக்கபட்டவனின் வாழ்க்கை இதற்கு முற்றிலும் எதிரானது. இந்த உலகம் கொடுக்க முடியாத தேவ வார்த்தையிலிருந்து அவன் தனது மகிழ்ச்சியைப் பெறுகிறான். தேவனுடைய வசனத்திற்கு இணையான வார்த்தையாக "கர்த்தருடைய வேதம்" என்ற வார்த்தையை தாவீது அடிக்கடி பயன்படுத்துவதை நாம் கவனிக்கிறோம் (சங்கீதம் 19 மற்றும் 119-ஐ பார்க்கவும்). கர்த்தருடைய வேதத்திற்கு அதிகாரம் கொடுப்பது தேவனுடைய சித்தம் என்பதை நமக்கு நினைவூட்டுகிறது. கர்த்தருடைய வேதத்தில் பிரியப்படுவது மறுபிறப்படைந்தவனின் உறுதியான பண்பு. "எப்படியென்றால், மாம்சசிந்தை தேவனுக்கு விரோதமான பகை; அது தேவனுடைய நியாயப்பிரமாணத்துக்குக் கீழ்ப்படியாமலும், கீழ்ப்படியக்கூடாமலும் இருக்கிறது. (ரோமர் 8:7). கர்த்தருடைய வேதத்தில் பிரியப்படுவது கிறிஸ்துவின் ஆவியை நாம் பெற்றுள்ளோம் என்பதற்கு உறுதியான சான்றாகும். ஏனென்றால், கிறிஸ்துவானவர் "என் தேவனே, உமக்குப் பிரியமானதைச் செய்ய விரும்புகிறேன்; உமது நியாயப்பிரமாணம் என் உள்ளத்திற்குள் இருக்கிறது என்று சொன்னேன் (சங்கீதம் 40:8). தேவனுடைய வார்த்தை ஆசீர்வதிக்கப்பட்டவனின் அனுதின அப்பம். அன்புள்ள சகோதரனே! உன்னுடைய வாழ்விலும் இது உண்மையாக இருக்கிறதா? மறுபிறப்பு அடையாதவர்கள் தங்களின் சுய திருப்தியில் மகிழ்ச்சி அடைகிறார்கள்; ஆனால் ஒரு உண்மையான கிறிஸ்தவன் தேவனை பிரியப்படுத்துவதில் மட்டுமே ஆனந்தப்படுவான். அவன் கர்த்தருடைய வேதத்தில் வெறுமனே மகிழ்ச்சியடைவான் என்று சொல்லப்படவில்லை, அவன் அதில் பிரியப்படுவான். "யெகோவாவின் சாட்சிகள், கிறிஸ்டெல்பியன்ஸ்" போன்ற பிற பிரிவுகள் ஆயிரக்கணக்கான நபர்கள் உட்பட சில வேதவசனங்களின் தீர்க்கதரிசனங்கள், உருவகங்கள், இரகசியங்கள், வாக்குறுதிகள் போன்றவற்றை நெருக்கமாகப் படிப்பதில் பிரியப்படுவார்கள். ஆயினும், அவற்றை எழுதியவரின் அதிகாரத்திற்கு கீழ்ப்படிவதில் அவர்கள் பிரியப்படுவதில்லை. மாறாக, அவர்கள் வேதத்தில் வெளிப்படுத்தப்பட்ட அவருடைய சித்தத்திற்கு கீழ்படிவதில் பிரியப்படுவதில்லை. ஆனால், ஆசீர்வதிக்கப்பட்ட மனிதன் தேவனுடைய வேதத்தில் மகிழ்ச்சி அடைகிறான். வேறு எங்கும் கிடைக்காத விதமாக பரிசுத்தமானதும், நிலையானதும், ஆவிக்குரிய மகிழ்ச்சி, சமதானம் மற்றும் நிறைவு தேவனுடைய வேதத்தில் கிடைக்கிறது. யோவான் கூறியது போல் "அவருடைய கற்பனைகள் பாரமானவைகளுமல்ல" (1 யோவான் 5:3) மற்றும் தாவீது அறிவித்தது போல் "அவைகளைக் கைக்கொள்ளுகிறதினால் மிகுந்த பலன் உண்டு." (சங்கீதம் 19:11) "கர்த்தருடைய வேதத்தில் இரவும் பகலும் பிரியப்படுவான்". ஒருவனுடைய பொக்கிஷம் எங்கே இருக்கிறதோ, அங்கே அவனுடைய இதயமும் இருக்கிறது. எனவே ஆசீர்வதிக்கப்பட்ட மனிதன் "பகலும் இரவும்" தேவனின் வசனத்தால் ஆக்கிரமிக்கப்படுகிறான்.
ஆனால் ஆடம்பரமான மனிதன் சிற்றின்பகளைப் பெற மட்டுமே நினைக்கிறான். அற்பமான விளையாட்டுகளில் மட்டுமே அக்கறை காட்டுகிறான். உலக செல்வம் மற்றும் புகழைப் பெறுவதற்காக மட்டுமே தனது ஆற்றல்கள் அனைத்தையும் செலவிடுகிறான். ஆனால் ஆசீர்வதிக்கப்பட்ட மனிதனின் உண்மையான விருப்பம் எல்லா நேரங்களிலும் எல்லாவற்றிலும் தேவனை பிரியப்படுத்தே குறிக்கோள். ஆகவே, தேவனுடைய சித்தத்தை அறிந்துக் கொள்வதற்கு அவன் தேவனுடைய பரிசுத்த வேதத்தை இரவும் பகலும் தியானிக்கிறான். இவ்வாறு அவன் வேதத்தின் ஒளியைப் பெற்று, அதன் இனிமையை அனுபவித்து, அதன் மூலம் ஊக்கம் பெறுகிறான். அவரது வார்த்தையின் திறன் ஆங்காங்கே இல்லை; இது படிப்படியாகவும் தொடர்ச்சியாகவும் நடக்கும். அவன் துன்பத்தில் மட்டுமல்ல, பலவீனமான இருளிலும், அவன் இளமை நாட்களில் மட்டுமல்ல, பலவீனமான முதுமை நாட்களிலும் கர்த்தருடைய வேதத்தில் பிரியப்படுவான். "உம்முடைய வார்த்தைகள் கிடைத்தவுடனே அவைகளை உட்கொண்டேன்; உம்முடைய வார்த்தைகள் எனக்குச் சந்தோஷமும், என் இருதயத்துக்கு மகிழ்ச்சியுமாயிருந்தது; சேனைகளின் தேவனாகிய கர்த்தாவே, உம்முடைய நாமம் எனக்குத் தரிக்கப்பட்டிருக்கிறது." (எரேமியா 15:16). "அவைகளை உட்கொண்டேன்" என்பதின் பொருள் என்ன என்றால் உள்வாங்கிக் கொள்வது. உணவு உண்ணும் போது மெல்லுவது எப்படியோ தேவனுடைய வார்த்தையை தியானிப்பதும் அப்படியே தேவனுடைய வார்த்தையை மனதில் திரும்பத் திரும்ப நினைத்து, அதை விசுவாசித்து உள்வாங்கும்போது அது நம்மில் செரிமாணமாகிறது. நம்முடைய மனது எதினால் ஆக்கிரமித்திருக்கிறதோ, நம்முடைய எண்ணங்களை எது ஈர்த்துள்ளதோ அதினாலே நாம் பிரியப்படுவொம். தனிமைக்கு இதுவே மிக சிறந்த மருந்து; (இவை பெரும்பாலும் கைபிரதி ஆசிரியரின் தனிப்பட்ட அனுபவம்) அது கர்த்தருடைய வேதத்தில் இரவும் பகலும் தியானிப்பதைக் குறிக்கிறது. ஆனால் உண்மையில் தியானிப்பது என்றால் கீழ்ப்படிதலே. "இந்த நியாயப்பிரமாண புஸ்தகம் உன் வாயைவிட்டுப் பிரியாதிருப்பதாக; இதில் எழுதியிருக்கிறவைகளின்படியெல்லாம் நீ செய்யக் கவனமாயிருக்கும்படி, இரவும் பகலும் அதைத் தியானித்துக்கொண்டிருப்பாயாக; அப்பொழுது நீ உன் வழியை வாய்க்கப்பண்ணுவாய், அப்பொழுது புத்திமானாயும் நடந்துகொள்ளுவாய்.” (யோசுவா. 1:8) "கர்த்தாவே, என் வார்த்தைகளுக்குச் செவிகொடும், என் தியானத்தைக் கவனியும். (சங்கீதம் 5:1) சங்கீதக்காரன் வேண்டுவதைப் போல உங்களால் செய்ய முடியுமா?

3. அவனுடைய பலன்தரும் வாழ்க்கை...
"அவன் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு, தன் காலத்தில் தன் கனியைத் தந்து, இலையுதிராதிருக்கிற மரத்தைப்போலிருப்பான். அவன் செய்வதெல்லாம் வாய்க்கும்". (சங்கீதம் 1:3). இங்கு ஆசீர்வதிக்கப்பட்டவனின் பயனுள்ள வாழ்க்கையைப் பற்றி இங்கே பார்க்கிறோம். இவை நடப்பதற்கு முன் என்ன செய்ய வேண்டும் என்பதை கவனமாக வாசியுங்கள். உலகத்துடன் உங்கள் உறவை முறித்துக்கொள்ளுதல்; அதன் சிந்தனைகளுக்கு இனங்காமல் இருப்பது, அதன் நடக்கையிலிருந்து விலகியிருப்பது; உலகத்தவர்களுடன் பழகாமல் இருப்பது, அதன் இன்பங்களுக்கு விலகிதல் தேவனின் வார்த்தைக்கு விருப்பத்துடன் கீழ்ப்படிவது.
இவையெல்லாம் முதலில் நிகழாமல் அவனால் பலன்தரும்படியான வாழ்க்கை அமைவது இயலாத காரியம். "இலையுதிராதிருக்கிற மரத்தைப்போலிருப்பான்" என்ற வார்த்தை பல வசனங்களில் காண்கிறோம். தேவனுடைய பிள்ளைக்கும் மரத்திற்கும் பல ஒற்றுமைகள் உள்ளன. அவன் காற்றினால் அடிக்கப்பட்ட நாணல் போன்றவன் அல்ல; அவன் தரையில் இருக்கும் கொடியைப் போன்றவன் அல்ல. மரம் நேராக வானத்தை நோக்கி வளர்கிறது, மேலும் இது "நடப்பட்ட" மரம். பல மரங்கள் நடப்படாமலே தானே வளரும். ஒரு நடப்பட்ட மரம் அதன் உரிமையாளரின் பராமரிப்பில் வளரும். ஆகவே, கர்த்தருடைய வேதத்தில் பிரியப்படுகிறவன். தேவனுக்கு சொந்தமானவன் என்றும் அவருடைய பாதுகாப்பிலும், போஷிப்பிலும் இருப்பான் என்பதற்கு இந்த வார்த்தை உத்தரவாதம் அளிக்கிறது. "நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு", "காற்றுக்கு ஒதுக்காகவும், பெருவெள்ளத்துக்குப் புகலிடமாகவும், இருப்பான்" (ஏசாயா 32:2). இது கிறிஸ்துவைக் குறிக்கிறது. நதியோரத்தில் நடப்பட்ட மரம், அந்த கால்வாயிலிருந்து ஊட்டத்தைப் பெறுவது போல, ஒரு விசுவாசி கிறிஸ்துவுக்கு நெருக்கமாக இருந்து, அவனுடைய வளர்ச்சிக்குத் தேவையான அனைத்தையும் அவரிடமிருந்து பெறுகிறான். "தன் காலத்தில் தன் கனியைத் தந்து, இலையுதிராதிருக்கிற மரத்தைப்போலிருப்பான்". கிருபையின் பாத்திரமாக வடிவமைக்கப்பட்டவனின் பண்புகள் கண்டிப்பாக இதுப்போல இருக்கும். ஏனென்றால், செழாப்பான திராட்சை கொடியில், பழம் இல்லாமல் இருக்காது.

"தன் காலத்தில் தன் கனியைத் தந்து", எல்லா கனிகளும் ஒரே நேரத்தில் பலன் தருவதில்லை. அதேபோல ஆவியின் கனி ஒரே நேரத்தில் உற்பத்தியாகாது. துன்பங்கள் விசுவாசத்திற்கும், கவலைகள் பொறுமைக்கும், ஏமாற்றங்கள் சாந்தத்திற்க்கும், ஆபத்துகள் தைரியத்திற்கும், ஆசீர்வாதம் துதிப்பதற்க்கும், நன்மைகள் மகிழ்ச்சிக்கும் அழைப்புக் கொடுக்கிறது. காலத்துக்கு ஏற்ற இந்த வார்த்தை காலத்துக்கு ஏற்றது. புதிதாகப் பிறந்த குழந்தைகளில் முதிர்ச்சியின் கனிகளை எதிர்பார்க்கக்கூடாது. "இலையுதிராதிருக்கிற" என்ற வார்த்தைக்கு பொருள் அவனுடைய கிறிஸ்தவ நம்பிக்கை பிரகாசமானது என்பதைக் காட்டுகிறது. அவனுடைய செயல்பாடுகள் அவனுடைய விசுவாசத்தை நிரூபிக்கின்றன. அதனாலேயே அவன் "இலையுதிராதிருக்கிற மரம் மட்டுமின்றி, கனி தரும் மரமாகவும் இருக்கிறான். தேவனின் மகிமையினால் நாம் பலன் தரவில்லை என்றால் நாம் விசுவாசிகள் என்று கூறிக்கொள்வதற்கு வெட்கப்படவேண்டும். "அவர் செய்கையிலும் வாக்கிலும் வல்லமை உள்ளவராயிருந்தார்". (லூக்கா 24:19) என்று கிறிஸ்துவைப் பற்றி கூறுவதைக் கவனியுங்கள். "அவர் செய்யவும் உபதேசிக்கவும் தொடங்கினார்" (அப்போஸ்தலர் 1:2) என்ற வார்த்தையிலும் இதே வரிசையை நாம் காணலாம். "அவன் செய்வதெல்லாம் வாய்க்கும்" இது ஆசீர்வதிக்கப் பட்டவனின் விஷயத்தில் அவசியமாக இருக்கிறது. இருப்பினும், இது எப்போதும் கண்களைச் சந்திக்கும் சாதனையாக இருக்காது. கிறிஸ்துவின் நாமத்தில் இந்தச் சிறியரில் ஒருவனுக்கு ஒரு கலசம் தண்ணீர்மாத்திரம் குடிக்கக் கொடுக்கிறவனும் தன் பலனை அடையாமற்போகான். இங்கு இல்லையென்றால் வரப்போகிற வாழ்வில் நிச்சயம் கிடைக்கும்! 

பிரியமான வாசகரே! நீங்கள் எதுவரைக்கும் இந்த ஆசீர்வதிக்கப்பட்ட மனிதனுக்கு ஒத்திருக்கிறீர்கள்! நாம் ஆரம்பத்தில் படித்த மூன்று வசனங்களின் வரிசையை மீண்டும் ஒருமுறை கவனமாகக் பார்ப்போம். முதல் வசனத்தில் சொல்லப்பட்ட பாவங்களுக்கு நாம் இடம்கொடுக்கும் போது, கர்த்தருடைய வேதத்தில் பிரியப்படுவது நம்மில் குறைகிறது. அவருடைய வார்த்தையின்படி நாம் அவருடைய சித்தத்திற்கு கீழ்படியாத வரை, நாம் தோல்வியடைவோம். உலகத்திலிருந்து முற்றிலும் விலகி, முழு மனதுடன் தேவனில் நிலைத்திருப்பது அவருக்கு மகிமையைக் கொண்டு வருவதற்கு வழி வகுக்கும். தேவனுடைய நாமம் மகிமைப்படுவதாக ஆமென்...

கருத்துக்களை தெரிவிக்க

Security code
Refresh

Comments  

# Tommandru vijay Kumar 2021-05-01 16:19
Good
Reply
# Tommandru vijay Kumar 2021-05-01 16:19
Good
Reply
# Tommandru vijay Kumar 2021-05-01 16:20
Good
Reply
 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.