“நாவும் நெருப்புத்தான், அது அநீதி நிறைந்த உலகம் நம்முடைய அவயவங்களில் நாவானது முழுச்சரீரத்தையும் கறைப்படுத்தி, ஆயள் சக்கரத்தைக் கொளுத்திவிடுகிறதாயும், நரக அக்கினியினால் கொளுத்தப்படுகிறதாயும் இருக்கிறது! சகலவிதமான மிருகங்கள், பறவைகள், ஊரும்பிராணிகள், நீர்வாழும் ஜெந்துக்கள் ஆகிய இவைகளின் சுபாவம் மனுஷசுபாவத்தால் அடக்கப்படும், அடக்கப்பட்டதுமுண்டு. நாவை அடக்க ஒரு மனுஷனாலும் கூடாதுளூ அது அடங்காத பொல்லாங்குள்ளதும் சாவுக்கேதுவான விஷம்நிறைந்ததுமாயிருக்கிறது.” (யாக்கோபு 3: 6-8)
மேற் வாசித்த வசனப்பகுதியில் அப்போஸ்தலனாகிய யாக்கோபு நாவினால் ஏற்படும் தீமைகளை விவரிக்கிறார். நாவும் நெருப்புத்தான், அது அநீதி நிறைந்த உலகம் என்று சொல்லுகிறார்.
- நாவு ஒரு நெருப்பு. அது கட்டுபடுத்தமுடியாதபடி எரிகிறது. அதுமட்டுமல்லாமல் வெப்பத்தை மற்றவர்களுக்கும் கடத்துகிறது. மற்றவர்களையும் அந்த நெருப்பில் போடுகிறது.
- நாவு அநீதி நிறைந்த உலகம். முதலில் தேவனை புகழ்ந்து பாடுவதற்கு உருவாக்கப்பட்ட ஒரு இசைக்கருவிபோல் இருந்தது. ஆனால் தற்போது அது தீய கருவியாய் செயல்படுகிறது. நமது சரீரத்தின் அனைத்து அங்கங்களும் பாவத்தால் கறைபட்டிருக்கிறது. நமது உடலில் ஒவ்வொரு பிரிவிலும் கசப்பு கலந்நதிருக்கிறது. ஆனால் நாவோ மிக அதிகமாக பாவத்தால் கறைபட்டிருக்கிறது. அது சாவுக்கேதுவான விஷம் நிறைந்ததுமாயிருக்கிறது. (வசனம் 8)
நாம் படிக்கப்போகிற வேதசத்தியம் -
நாவு நம்முடைய சரீரத்தில் மிகவும் சிறிய அவயம். ஆனால் அது உலகம் அளவிற்கு தீமையை கொண்டிருக்கிறது. அது கட்டுபடுத்தமுடியாத தீமைகளை கொண்டிருக்கிறது. நான் ஒரு சில தீமைகளை உங்களுக்கு விளக்கப்படுத்தப்போகிறேன்.
- தீமையான நாவு ஒரு அமைதியான நாவு.
அது தேவனுக்கு அடுத்த காரியங்களை பேசுவதில் முற்றிலும் அமைதியாக இருக்கிறது. அது ஒருபோதும் தேவனைப்பற்றியோ அல்லது பரலோகத்தை பற்றியோ பேசவே பேசாது. ஒருவேளை அப்படி பேச முயற்சி செய்யும் போது உதடு மேல்வாயோடு ஒட்டிக்கொள்ளுகிறது. மனிதர்கள் மற்ற காரியங்களை பற்றி பேசும்போது மிகவும் ஞானமாகவும் சரளமாயும் பேசுகிறார்கள். ஆனால் கிறிஸ்தவத்தை பற்றி பேசும் போது மட்டும் அவர்கள் வாய் இருக்கமாக மூடிக்கொள்ளுகிறது. நாம் அவர்களுடன் கலக்கும்போது அவர்கள் கிறிஸ்துவை பற்றி பேசாமல் இருப்பதை பார்க்கும்போது இவர்கள் யூதர்கள் அல்லது இஸ்லாமியர்களா? என்று சிந்திக்க வைக்கிற அளவிற்கு அமைதியாக காணப்படுகிறார்கள். சுவிசேஷத்தில் சொல்லப்பட்ட ஊமையான ஆவிபிடித்த மனிதனை போல் இருக்கிறார்கள். (மாற்கு 9: 17)
- தீமையான நாவு ஒரு உலகப்பிரகாரமான நாவு.
அவர்கள் அனைத்து நம்பிக்கையும் இந்த உலகத்தின் மீது வைத்துவிட்டு உலகத்தையே நித்தியமாக பார்ப்பவர்கள். அவர்கள் பேச்சில் உலக காரியங்களை தவிர வேறு எதுவும் இருக்காது. அவர்களுக்கு உலக எண்ணங்கள் மட்டுமே இருக்கும். “பூமியிலிருந்துண்டானவன் பூமியின் தன்மையுள்ளவனாயிருந்து, பூமிக்கடுத்தவைகளைப் பேசுகிறான்.” (யோவான் 3:31)
- தீமையான நாவு வேகம் மற்றும் கோபம் நிறைந்த நாவு.
அதற்கு பொறுமை என்ற கட்டளையை பற்றி தெரியாது. அது காட்டு குதிரையை போல வேகமாக பேசுகிறது. எனக்கு நீதியான கோபத்தை பற்றியும் தெரியும். அதை நாம் நம்முடைய பாவத்தின் மீது காட்ட வேண்டும். தேவாலயத்தில் வணிகம் செய்யப்படும்போது இயேசுவிடம் இந்த நீதியான கோபம் வெளிப்பட்டது. (யோவான் 2:15) அந்த கோபத்தில் பாவம் இல்லை. அது பாவத்திற்க்கெதிரான கோபம். ஆனால் தீய நாவில் இருந்து வெளிப்படும் கோபமானது கட்டுப்படுத்த முடியாததாயிருக்கிறது. அது நரக அக்கினியினால் கொளுத்தப்படுகிறது போல் இருக்கிறது. கோபப்படும் ஆவி சுவிசேஷத்திற்கு பொறுத்தமானது அல்ல. சுவிசேஷமானது சமாதானத்தை தரக்கூடியது. சுவிசேஷத்தின் நாயகரும் சமாதானத்தின் ராஜாவாய் இருக்கிறார். அவர் பரிசுத்த ஆவியானவரால் அபிஷேகம் பெற்றபோது ஆவியானவர் சமாதானத்தின் அடையாளமாக புறாவைப்போல் அவர்மீது அமர்ந்தார். யாருடைய நாவு அதிகமாக தீமையை பேசுகிறதோ அது சந்தேகமில்லாமல் நரகத்தின் அக்கினிதான். நரகத்தில் இருந்து ஒரு சொட்டு நீருக்காக ஏங்கும் நிலை ஏற்பட்டுவிடாதபடி இன்றே எச்சரிக்கையாய் இருங்கள்.
- தீமையான நாவு ஒரு மாயையான நாவு.
தேவையற்ற வீணான வார்த்தைகளை பேசுவதே அதின் வேலை. “அவன் நாவில் தீவினையும் அக்கிரமும் உண்டு.” சங்கீதம் 10:7. வீணான வார்த்தைகளை பேசும் நாவு கெட்ட இருதயத்தை காண்பிக்கிறது. ஆனால் தேவ மனிதனின் வார்த்தைகளோ நிதானமானதாகவும் அர்த்தமுள்ளதாகவும் இருக்கிறது. அவனது உதடுகள் ஜீவவிருட்சம் போல் அநேகரை போஷித்து அவனது வார்த்தைகள் அநேகரை திருத்துகிறது. “நீதிமானுடைய நாவு சுத்த வெள்ளி.” (நீதிமொழிகள் 10:20) ஆனால் “மூடனுடைய நாவோ புத்தியீனத்தை கக்கும்.” (நீதிமொழிகள் 15:2) ஆனால் இந்த கிருபையின் நாட்களில் எத்தனைபேர் தேவையில்லாத விளையாட்டுதன பேச்சுகளை பேசிக்கொண்டிருக்கிறார்கள்? ஞானியின் வார்த்தைகள் தங்கம் போலவும் அர்த்தமுள்ளதாகவும் அநேகரின் இருதயத்தோடு பேசுவதாகவும் இருக்கிறது. ஆனால் நிறைய மக்களின் வார்த்தைகள் பெலனற்றதாகவும் எந்தவித சாரமற்றும் இருக்கிறது. அது மற்றவர்களை எந்த வகையிலும் ஈர்க்காது. “மனுஷர் பேசும் வீணான வார்த்தைகள் யாவையும் குறித்து நியாயதீர்ப்பு நாளிலே கணக்கொப்புவிக்க வேண்டும்.” (மத்தேயு 12:36)
- தீமையான நாவு மற்றவர்கள் மேல் குற்றம் சுமத்தும் நாவு.
“மற்றவனை குற்றப்படுத்துகிறதற்கு நீ யார்?” (யாக்கோபு 4:12) அநேக கிறிஸ்தவர்கள் தங்களுடைய வாழ்க்கையில் மற்றவர்களை குற்றப்படுத்துவதும், தங்களை நியாயபடுத்துவதும் ஒரு பகுதியாய் இருக்கிறது. அவர்கள் மற்றவர்களிடம் காணப்படும் கிருபையின் கிரியைகளை பின்பற்றுவதில்லை. ஆனால் மற்றவர்களின் வீழ்ந்துபோகுதலை விமர்சிக்கிறவர்களாய் இருக்கிறார்கள். அப்படிபட்டவர்கள் மாயமாலக்காரர்கள். இந்த கெட்ட குணம் பெருமையிலிருந்து வருகிறது. மனிதனின் இருதயம் மிகுந்த தாழ்மையாயிருக்கும்போது அந்த மனிதனின் வார்த்தைகள் மிகுந்த இரக்கமுள்ளதாயிருக்கும். மற்றவர்கள் மீது குற்றம் சுமத்துபவர்கள் பெருமையின் இருக்கையில் அமர்ந்து மற்றவர்கள் மீது குற்றம் சுமத்தி அவர்களை கேலி செய்கிறார்கள். மனிதர்களை நியாயந்தீர்ப்பதற்கு தேவனுக்கு மட்டுமே உரிமையிருக்கிறது. ஆனால் இவர்கள் தேவனின் கரத்திலிருந்து அந்த வேலையை பிடுங்குகிறார்கள். நியாயந்தீர்ப்பது கடவுளின் வேலை. அது நம்முடைய வேலை அல்ல. யாரெல்லாம் தன்னுடைய நேரங்களை மற்றவர்கள் மீது குற்றம் செலுத்துவதில் செலவிடுகிறார்களோ அவர்களுக்கு தன்னுடைய சொந்த குற்றங்களை சரிசெய்வதற்கு நேரம் கிடைக்காது. மற்றவர்கள் மீது நியாயந்தீர்ப்பதற்கும் குற்றம் சுமத்துவதற்கும் துடிக்கும் செயலை விட மாயமாலமான இருதயத்திற்கு பெரிய அடையாளம் தேவை இல்லை.
- தீய நாவு அவதூறு பேசும் நாவு.
“நீ உட்கார்ந்து உன் சகோதரனுக்கு விரோதமாய் பேசி உன் வாயின் மகனுக்கு அவதூறு உண்டாக்குகிறாய்.” சங்கீதம் (50;20). அவதூறு என்பது மற்றவர்களை காயப்படுத்தும் விதத்தில்
பேசுவதும் உண்மையில்லாத காரியத்தை உண்மையென்று பேசுவதுமாகும். அவர்களுக்கு மதிப்பும் மரியாதையும் கிடைக்காது. அவர்களிடம் பரிசுத்தமும் காணப்பட்டது. “எப்படியெனில், யோவான் போஜனபானம்பண்ணாதவனாய் வந்தான் அதற்கு அவர்கள்: அவன் பிசாசு பிடித்திருக்கிறவன் என்றார்கள். மனுஷகுமாரன் போஜனபானம் பண்ணுகிறவராய் வந்தார் அதற்கு அவர்கள்: இதோ, போஜனப்பிரியனும் மதுபானப்பிரியனுமான மனுஷன், ஆயக்காரருக்கும் பாவிகளுக்கும் சிநேகிதன் என்கிறார்கள். ஆனாலும், ஞானமானது அதின் பிள்ளைகளால் நீதியுள்ளதென்று ஒப்புக்கொள்ளப்படும் என்றார்.” (மத்தேயு 11:18,19). அவதூறு பேசுகிறவர்கள தங்கள் நாவினாலே மற்றவர்களை கொலை செய்கிறார்கள். மேலும் மற்றவர்களின் பெயர்களுக்கு கலங்கத்தை உண்டாக்குகிறார்கள். அந்த கலங்கத்தை எதை கொண்டும் சரிசெய்ய முடியாது. பட்டயம் ஏற்படுத்தும் காயத்தை பார்க்கிலும் நாவு ஏற்படுத்தும் காயம் பெரிதாயிருக்கிறது. அவதூறு என்ற வார்த்தைக்கு இணையான கிரேக்க வார்த்தை சாத்தானை குறிக்கிறதாய் இருக்கிறது. ஒரு சிலர் அவதூறு பேசுவதும் மற்றவர்களுக்கு கலங்கம் விளைவிக்கும் செயலை செய்வதும் தவறு இல்லை என நினைக்கிறார்கள். ஆனால், அவதூறு பேசும் நாவு இருபுறமும் கருக்கான பட்டயம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். அவதூறு பேசுபவர்கள் மற்றவர்களை காயப்படுத்தும் போது முதலில் தன்னுடைய சொந்த மனசாட்சியை காயப்படுத்துகிறார்கள். “ஒருவருக்கொருவர் விரோதமாய் பேசாதிருங்கள்” (யாக்கோபு 4:11). ஒருவேளை பரிசுத்தமான வாழ்கிற மனிதர்கள் மீதோ அல்லது கிறிஸ்தவத்திற்கு மகிமை சேர்க்கும் விதத்தில் வாழும் மனிதர்கள் மீதோ அவதூறு சொல்லும்போது தேவன் அந்த குற்றத்தை அவதூறு பேசுபவர்கள் கையில் கேட்பார். “என் தாசனாகிய மோசேக்கு விரோதமாக பேச உங்களுக்கு பயமில்லாமற் போனதென்ன?” (எண்ணாகமம் 12:8). என்னுடைய தாசானாகிய மோசே அநேக அற்புதங்களை செய்திருக்கிறான். சீனாய் மலையில் முகமுகமாக அவனோடு பேசினேன். அப்படியிருந்த மோசேக்கு விரோதமாக பேச உங்களுக்கு பயமில்லாமற் போனதென்ன? அதினால் தேவன் உன்னுடைய பாவம் உன் தலையின் மேல் இருக்கும் என சொல்லி மிரியாமை சபித்தார். இதை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள். மற்றவர்களின் பெயருக்கு கலங்கம் விளைவிக்கும் இந்த பாவம் மேலே சொல்லிய உதாரணத்திற்கு சற்றும் குறைவானது அல்ல. சகோதரரே ஒருவருக்கொருவர் விரோதமாய் (அவதூறு) பேசாதிருங்கள். (யாக்கோபு 4:11)
- தீய நாவு ஒரு சுத்தமில்லாத நாவு.
அதிலிருந்து இழிவான அசுத்தமான பேச்சு வெளிப்படுகிறது. “கெட்ட வார்த்தை ஒன்றும் உங்கள் வாயிலிருந்து புறப்படவேண்டாம்” (எபேசியர் 4:29). நாக்கு கருமையாய் இருப்பது ஒரு பெரிய வியாதியை குறிக்கும் அறிகுறியாய் இருக்கிறது. அதேபோல் ஒரு மனிதனின் வாயிலிருந்து தீமையான வார்த்தைகள் புறப்படும்போது அவனுடைய இருதயமும் மிகவும் கெட்ட நிலைமையில் இருக்கிறது.
- தீய நாவு ஒரு பொய் பேசும் நாவு.
“ஒருவருக்கொருவர் பொய் சொல்லாதிருங்கள்” (கொலோசெயர் 3:9). “கிரேத்தா தீவர் ஓயாப்பொய்யர் என குறிப்பிடப்பட்டிருக்கிறார்கள்” (தீத்து 1:12) எந்த ஒரு கிறிஸ்தவனும் கிரேத்தா தீவர் போல் இருக்கமுடியாது. பொய் தேவனுக்கு முரணானது. பொய் கிறிஸ்தவத்திற்கு ஒத்துபோகாதது. பொய் என்கிற பாவம் எப்போதும் தனியாக இருக்காது. அது மற்ற பாவத்தோடு கூட்டணி வைத்துதான் இருக்கும். அப்சலோம் எப்ரோனுக்கு பொருத்தனை செய்யப் போவதாக பொய்சொல்லிவிட்டு தன் தகப்பனுக்கு துரோகம் செய்தான். அவன் செய்த பெரிய பாவத்திற்கு ஆரம்பமாக பொய் என்கிற பாவம் இருந்தது. பொய் ஒரு மனிதனுக்கு சமூகத்தில் இருக்கிற பெயரை கெடுத்துவிடும். ஒரு மனிதனை நீங்கள் நம்பவில்லையென்றால் அவனுடன் எப்படி பேச்சு வார்த்தை வைத்துக்கொள்வீர்கள்? பொய் என்பது மிகவும் இழிவான பாவம். பொய் பேசுவது கண்டுபிடிக்கப்படும் போது அது அசிங்கமாக இருக்கும். “அவர்கள் என் ஜனந்தானென்றும், அவர்கள் வஞ்சனைசெய்யாதிருக்கும் பிள்ளைகளென்றும் சொல்லி, அவர்களுக்கு இரட்சகரானார்.” (ஏசாயா 63:8). மறுபிறப்பை அடைந்த மனிதன் பொய்யை தன்னிடம் அனுமதிக்கமாட்டான். பொய் பேசுகிறவர்கள் பிசாசின் அருகில் போகிறார்கள். அதினால் வெகு விரைவில் அவனுடன் ஐக்கியமாகிவிடுவார்கள். “அவன் பொய்யனும் பொய்க்கு பிதாவுமாயிருக்கிறான்” (யோவான் 8:44). ஒரு பொய்யின் மூலமாக நம்முடைய ஆதிப்பெற்றோரை பாவம் செய்யும்படி ஏவிவிட்டான். (ஆதியாகமம் 3:4). தேவனுக்கு பாவத்தின் வாடை எப்படி இருக்கிறதென்று பாருங்கள். அவர் அனனியாவை பொய் பேசியதிற்காக அடித்தார். அவன் அங்கேயே செத்தான் (அப்போஸ்தலர் 5:5). பொய் பேசுகிறவர்களை தூக்கி எறிவதற்கு நரகத்தின் அக்கினி சூளை ஆயத்தமாயிருக்கிறது. “நாய்களும், சூனியக்காரரும், விபசாரக்காரரும், கொலைபாதகரும், விக்கிரகாராதனைக்காரரும், பொய்யை விரும்பி அதின்படி செய்கிற யாவரும் புறம்பே இருப்பார்கள்”. (வெளிப்படுத்தல் 22:15)
- தீய நாவு முகஸ்துதி செய்யும் நாவு.
அது மனிதர்களின் முகத்துக்கு முன்பாக புகழ்ச்சியாக பேசி மற்ற இடத்தில் அவர்களை தரைகுறைவாக பேசும். “பகைஞன் தன் உள்ளத்தில் கபடத்தை மறைத்து, தன் உதடுகளினால் சூது பேசுகிறான்”. (நீதிமொழிகள் 26:24). ஒருவன் உங்களை புகழ்ச்சியாக பேசும்போது அவனை நம்பாதீர்கள்.
மாயமான அன்பு வெறுப்பை காட்டிலும் மோசமானது. ஒருசிலர் அறிவுரை சொல்லுவார்கள் பாராட்டுவார்கள் முகஸ்துதி செய்வார்கள். ஆனால் அவர்கள் உதடுகள் மட்டுமே தேன்போன்று இருக்கும். அவர்கள் உள்ளமோ கபடத்தினால் நிறைந்திருக்கும். சிநேகிதன் அடிக்கும் அடிகள் உண்மையுள்ளவைகள் சத்துரு இடும் முத்தங்களோ வஞ்சனையுள்ளவைகள். அநேக மக்களிடம் இந்த வஞ்சனை நிறைந்த முகஸ்துதி செய்யும் நாவு காணப்படுகிறது. “பிறனை முகஸ்துதி செய்கிறவன் அவன் கால்களுக்கு வலையை விரிக்கிறான்.” (நீதிமொழிகள் 29:5). அநேக நண்பர்கள் கடைசியாக விரியன்பாம்புபோல் இருந்து விடுவது உண்டு. மாயமான அன்பு ஒரு சிறப்பான பொய். அநேகர் யோவாபை போல் இருக்கிறார்கள். “அப்பொழுது யோவாப் அமாசாவைப் பார்த்து: என் சகோதரனே, சுகமாயிருக்கிறாயா என்று சொல்லி, அமாசாவை முத்தஞ்செய்யும்படி, தன் வலதுகையினால் அவன் தாடியைப் பிடித்து,தன் கையிலிருக்கிற பட்டயத்திற்கு அமாசா எச்சரிக்கையாயிராதபோது, யோவாப் அவனை அவன் குடல்கள் தரையிலே சரிந்துபோகத்தக்கதாய், அதினால் வயிற்றிலே ஒரே குத்தாகக் குத்தினான் அவன் செத்துப்போனான்” (2 சாமுவேல் 20:9,10). தனது நண்பனுக்கு எதிராக முகஸ்துதி செய்பவர்களையும் பொய் பேசுகிறவர்களையும் பற்றிய தேவனின் உண்மையான வார்த்தை என்னவென்றால் அப்படிபட்டவர்கள் முடிவிலே வெட்கத்தை அடைவார்கள். பகையை வஞ்சகமாய் மறைத்து வைக்கிறவனெவனோ, அவனுடைய பொல்லாங்கு மகா சபையிலே வெளிப்படுத்தப்படும்” (நீதிமொழிகள் 26:26).
- தீய நாவு தற்பெருமை பேசும் நாவு.
அப்படியே, நாவானதும் சிறிய அவயவமாயிருந்தும் பெருமையானவைகளைப் பேசும்.” (யாக்கோபு 3:5). தேவனின் பெருமையை பேசுவது என்பது இருக்கிறது. “தேவனுக்குள் நித்தம் மேன்மை பாராட்டுவோம்.” சங்கீதம் 44:8. அவருடைய வல்லமையையும் அவருடைய கிருபையையும் குறித்து மேன்மை பாராட்டுவது சரி. மனிதர்கள் தங்களை பற்றி பெருமை பாராட்டும்போது மற்றவர்கள் அவர்களின் செயல்களை பார்த்து அவர்களை பின்பற்றலாம் பாராட்டலாம். ஆனால் இது பாவம்.
மனிதர்கள் தாங்கள் ஆராதிக்கப்படுவதையும் புகழப்படுவதையும் விரும்புகிறார்கள். “இந்நாட்களுக்கு முன்னே தெயுதாஸ் என்பவன் எழும்பி, தன்னை ஒரு பெரியவனாகப்பாராட்டினான்” (அப்போஸ்தலர் 5:36). மனிதர்கள் தங்கள் பாவத்தைபற்றியே பெருமையடித்து கொள்ளுகிறார்கள். “பலவானே, பொல்லாப்பில் ஏன் பெருமைபாராட்டுகிறாய்?” (சங்கீதம் 52:1). ஒருசிலர் தாங்கள் எவ்வளவு துன்மார்க்கமாய் இருக்கிறோம் என்பதை பெருமைபாராட்டுகிறார்கள். சிலர் தாங்கள் குடிப்பதை பற்றியும் வேசித்தனம் பண்ணுவதையும் பெருமை பாராட்டுகிறார்கள். ஏதாவது பிச்சைக்காரன் தனது பருக்கைகளை குறித்து மேன்மை பாராட்டுவானா? அல்லது திருடன் தான் கண்டுபிடிக்கப்பட்டதை குறித்து மேன்மை பாராட்டுவானா? இதைக்குறித்து அவர்கள் சந்தோஷப்பட ஏதாவது வாய்ப்பு இருக்கிறதா? தற்பெருமை பேசுகிறவர்களுக்கு பலன் நரகத்தில் இருக்கிறது.
- தீயநாவு சத்தியம் செய்யும் நாவு.
“பரிச்சேதம் (ஒருபோதும்) சத்தியம்பண்ணவேண்டாம்” (மத்தேயு 5:34). ஒரு விவாதத்தை முடிவு கட்டுவதற்கு மட்டுமே சத்தியம் செய்யும்படி வேதம் நமக்கு அனுமதியளிக்கிறது. (எபிரேயர் 6:16). ஆனால் நாம் சாதாரணமான பேச்சுகளின் மத்தியில் சத்தியம் செய்வது ஆண்டவரின் நாமத்தை வீணிலே வழங்குவதுபோல். அது பாவம். சத்தியம் செய்தலை பிசாசின் கனிகள் என்றும் அழைப்பதுண்டு. அதினால் எந்த பயனோ அல்லது இன்பமோ கிடையாது. “தேசம் சாபத்தினால் துக்கிக்கிறது.” (எரேமியா 23:10) ஒருசிலர் சத்தியம் செய்து பேசுவது அவர்களின் பேச்சுக்கு பலம் என்று நினைக்கிறார்கள். ஆனால் தேவன் நியாயத்தீர்ப்பு நாளிலே மனிதனின் வீணான பேச்சுக்கு கணக்கு கேட்கும்போது அவர்கள் பாவமான சத்தியம் செய்ததற்கு என்ன பதிலை சொல்லப்போகிறார்கள்? ஒருசிலர் சத்தியம் செய்ததை நியாயப்படுத்தும் விதமாக அது ஒரு உறுதிமொழி என்றும் அல்லது அது எங்களின் முறைமை என்றும் சொல்லுகிறார்கள். இது ஒரு காரணமா? ஒரு குற்றவாளி வழிப்பறி செய்து நீதிபதியிடம் மாட்டிகொண்டு வழிப்பறி செய்வது என்னுடைய முறை என்று சொன்னால் நீதிபதி அதை ஏற்று கொள்வாரா? நிச்சயம் அந்த நீதிபதி தண்டனை தருவார். நீங்கள் செய்கிற ஒவ்வொரு உறுதிமொழிக்கும் தேவனின் கோபமானது துளிதுளியாய் ஒரு குப்பியில் சேமிக்கப்படுகிறது. ஒருசிலர் சத்தியம் செய்வதினால் என்ன தவறு என்று நினைக்கிறார்கள். வார்த்தைகள் காற்று போன்றவை. அந்த காற்று மனந்திரும்புதலை ஏற்படுத்தாமல் நரகத்தின் பாதைக்கு எடுத்து செல்லக் கூடியவை.
- தீயநாவு மற்றவர்களை திட்டும் நாவு.
புண்ணிலிருந்து சீழ்வடிவதுபோல வாயிலிருந்து இகழ்ச்சியான வார்த்தைகள் வருகிறது. மோசேயின் சரீரத்தைபற்றி பிரதான தூதனுக்கும் சாத்தானுக்கும் இடையே சர்ச்சை வந்தபோது பிரதான தூதன் சாத்தானை எந்த வார்த்தையும் சொல்லி திட்டவில்லை. தூதன் சொன்னது “கர்த்தர் உன்னை கடிந்து கொள்வாராக” (யூதா 9). பிரதான தூதன் எந்த வார்த்தையும் சொல்லி சாத்தானை இகழ்ச்சியாக பேசவில்லை. சபிப்பதில் ஆரம்பிப்பது சபிப்பதில் தான் போய் முடியும். அதினால் மனிதர்கள் எரிநரகத்திற்கு ஏதுவாயிருக்கிறார்கள் (மத்தேயு 5:22).
- தீயநாவு மற்றவர்களுக்கு தவறான போதனை செய்யும் நாவு.
அவர்கள் வாயிலிருந்து வரும் வார்த்தைகள் மிகவும் மென்மையாக இருந்து மற்ற மனிதர்களை வஞ்சனை செய்து தவறாக வழிநடத்துகிறது. நயவசனிப்பினாலும் இச்சகப்பேச்சினாலும், கபடில்லாதவர்களுடைய இருதயங்களை வஞ்சிக்கிறவர்களாயிருக்கிறார்கள். (ரோமர் 16:18). ஒரு நல்ல நாவினால் தவறான சண்டையை அமைதிபடுத்தமுடியும். ஆனால் நயவஞ்சனை செய்யும் நாவு சண்டையை நிறுத்துவதில் ஒரு பெரிய காரணம் நிறைந்திருக்கும். நயவஞ்சனை செய்யும் நாவு ஒரு பொய்யை உண்மைபோல் காட்டும் சக்தி நிறைந்தது. உதாரணமாக தேவனின் நீதிமானாக்குதல் செயலில் இயேசுகிறிஸ்துவின் சொல்லிமுடியாத அன்பு மனிதர்களின் மீது கொண்டுவரப்பட்டு அவர்கள் நீதிமானாக்கப்படுகிறார்கள். இது ஒரு மகிமையான சத்தியம். ஆனால் இந்த சத்தியத்தின் கீழாக தாராளவாத கோட்பாடு பிரசங்கிகள் கிறிஸ்தவர்கள் எல்லாவித பாவத்தையும் செய்யலாம் தேவன் அவர்களின் பாவத்தை பார்ப்பதில்லை என தவறாக உபதேசிக்கிறார்கள். இவர்களின் உபதேசம் நீதிமானாக்குதலை விளக்குகிறது அதேசமயம் அதனுடன் இணைந்த பரிசுத்தமாகுதலை முற்றிலுமாக கொல்லுகிறது. இதுதான் தவறான போதனை செய்யும் வஞ்சக நாவு. இது விஷம் போன்றது. ஒருவர் விஷம் குடித்தாலும் இறந்து போகலாம் அல்லது துப்பாக்கியால் சுடப்பட்டும் இறந்து போகலாம்.
- தீயநாவு ஒரு கொடுமையான நாவு.
அது மற்றவர்களின் இருதயத்தை தன்னுடைய வார்த்தையால் காயப்படுத்துகிறது. நம்முடைய நாவின் அமைப்பு ஒரு வாளின் அமைப்பு போல் இருக்கிறது. அதேசமயம் வாளைவிட மிகவும் கூர்மையானதாய் இருக்கிறது. அவர்கள் நாவு கருக்கான பட்டயமாயிருக்கிறது. (சங்கீதம் 57:4). கனத்த இருதயம் கொண்டவர்களுக்கு அன்பான வார்த்தைகளை பேசவேண்டும். “உபாதிக்கப்படுகிறவர்களுக்கு அவனுடைய சிநேகிதனால் தயை கிடைக்க வேண்டும்” (யோபு 6:14). காயப்பட்ட இருதயத்திற்கு சுகமாக்கும் மென்மையான வார்த்தைகளே தகுந்தவை. ஆனால் இந்த கொடுமையான நாவிற்கு இரக்கமற்ற வார்த்தைகளையும் இருதயத்தை துளைக்கும் வார்த்தைகளை மட்டுமே பேசத்தெரியும். “நீர் காயப்படுத்தினவர்களை நோகப் பேசுகிறார்களே.” (சங்கீதம் 69:26). அன்னாள் துக்கமுள்ள இருதயத்துடன் கர்த்தரை நோக்கி வேண்டுதல் செய்கிறாள். “அவள் போய், மனங்கசந்து, மிகவும் அழுது, கர்த்தரை நோக்கி விண்ணப்பம் பண்ணி” (1 சாமுவேல் 1:10). “அப்போது ஏலி அன்னாளை பார்த்து நீ எதுவரைக்கும் வெறித்திருப்பாய்” (1 சாமுவேல் 1:14). ஏலியின் இந்த வார்த்தைகள் காயத்தின் மீது காடியை ஊற்றினது போல இருந்தது. யோபு சோதிக்கப்பட்டபோது அவனை ஆறுதல்படுத்த வேண்டிய அவனுடைய நண்பர்கள் அவனை ஒரு மாய்மாலக்காரன் என்று குற்றப்படுத்துகிறார்கள் (யோபு 11:2). இவர்களின் வார்த்தைகள் யோபுவின் இருதயத்தை குத்தினது. யோபுவிற்கு ஆறுதல் சொல்ல வேண்டிய இவர்கள் யோபுவை மேலும் காயப்படுத்துகிறார்கள். இப்படி பேசுவது மரிக்கும் தருவாயில் இருக்கும் மனிதனின் மேல் அதிக பாரத்தை வைப்பது போலாகும்.
- தீயநாவு முறுமுறுக்கும் நாவு.
“இவர்கள் முறுமுறுக்கிறவர்களும், முறையிடுகிறவர்களும், தங்கள் இச்சைகளின்படி நடக்கிறவர்களுமாயிருக்கிறார்கள்” (யூதா 16). முறுமுறுத்தல் என்பது நம்முடைய மனதின் அதிருப்தியை நம்முடைய உதடுகளின் வழியில் வெளிகாட்டுவது. ஏன் மனிதர்கள் முறுமுறுக்கிறார்கள்? ஏன் மனிதர்கள் தங்கள் நிலைமையை குறித்து அதிருப்தியுடன் இருக்கிறார்கள்? தேவன் அவர்களுக்கு எல்லாவற்றையும் செய்ய அவசியமிருக்கிறதா? அல்லது எல்லாவற்றையும் பெற்றுகொள்ள அவர்களிடம் ஏதாவது தகுதி இருக்கிறதா? ஐயோ தேவனின் பராமரிப்பிற்கு முன்பாக மனிதரின் முறுமுறுக்கு எவ்வளவு பயங்கரமானது.
அ. முறுமுறுத்தல் அவிசுவாசத்திலிருந்து வருகிறது. மனிதர்கள் தேவன் கொடுத்த வாக்குறுதியில் நம்பிக்கை கொல்லாதபோது அவருக்கு விரோதமாக முறுமுறுக்கிறார்கள். “கர்த்தருடைய சத்தத்திற்கு செவிகொடாமல் தங்கள் கூடாரங்களில் முறுமுறுத்தார்கள்” (சங்கீதம் 106:24). விசவாசம் வளர்ச்சியில் குறைய தொடங்கும்போது ஆசை இச்சைகள் உயரமாக வளரத் தொடங்கும்.
ஆ. முறுமுறுத்தல் பெருமையிலிருந்து வருகிறது. தாழ்மையுள்ளவர்கள் தாங்கள் எல்லாவற்றையும் பெற்றுகொள்ள தகுதியானவர்கள் என்று நினைத்து அனைத்து கஷ்டங்களையும் சகித்து கொள்ளுகிறார்கள். “அவருடைய கோபத்தை சுமப்பேன்” (மீகா 7:9). ஆனால் பெருமையோ இருதயத்தில் அதிருப்தியை உருவாக்கி முறுமுறுத்தலை கொண்டுவருகிறது. முறுமுறுக்கிற பாவத்தை தேவனால் சகித்து கொள்ள முடியாது. “எனக்கு விரோதமாக முறுமுறுக்கிற இந்த பொல்லாத சந்ததியாரை எதுவரைக்கும் பொறுப்பேன்” (எண்ணாகமம் 14:27). முறுமுறுக்கிறவர்கள் மிகுந்த நன்றிகெட்டவர்களாயிருக்கிறார்கள். முறுமுறுக்கிற நாவு எப்போதுமே நன்றிகெட்ட நாவு. இவர்கள் ஒருபோதும் தேவனின் இலவசமான கிருபையை சிந்திக்காத மனிதர்கள். என்னதான் இவர்கள் செய்தாலும் தேவனுக்கு இவர்கள் கடனாளிகள் என்பதை மறந்த மனிதர்கள். தேவனின் கோபத்தை காட்டிலும் இரக்கம் மனிதர்கள் மீது அதிகமாக பொழியப்படுகிறதை அறியாத மக்கள். அவரது கோப்பையில் தண்டனையின் எட்டியைவிட தேன் அதிகமாக இருக்கிறது. தேவன் தங்களுக்காக என்ன செய்திருக்கிறார் என்பதை பொருட்படுத்தாமல் தாங்கள் செய்கிற சின்ன காரியத்தை பெரிதாக பேசுகிற மக்கள். முறுமுறுக்கிறவர்களே! நீங்கள் சிறிய விஷயத்தில் முறுமுறுக்கும்போது தேவனுக்கு விரோதமாக செயல்படுகிறார்கள். இது உங்களின் நன்றிகெட்டதனம். இஸ்ரவேல் மக்கள் தூதர்களின் உணவாகிய வானத்திலிருந்து விழுந்த மன்னாவை தங்கள் ஆகாரமாக சாப்பிட்டார்கள். ஆனால் தங்களுக்கு காடை இறைச்சி இல்லையே என்று முறுமுறுத்தார்கள். தேவன் அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்தார். ஆனால் தங்கள் இச்சைகளையும் தேவன் பூர்த்தி செய்ய வேண்டும் என எதிர்பார்த்தார்கள். இந்த கெட்ட இஸ்ரவேல் மக்கள் தண்டனையாக வனாந்தரத்திலே செத்து விழுந்தார்கள். “அவர்களில் சிலர் முறுமுறுத்து சங்காரகாரனாலே அழிக்கப்பட்டார்கள்” (1 கொரிந்தியர் 10:10). அவர்களின் வார்த்தைகள் கொடியதாக இருந்ததால் தேவனும் அவர்களை கொடிய பாம்பை கொண்டு தண்டித்தார்.
- தீயநாவு மற்றவர்களை பரியாசம் செய்யும் நாவு.
அவர்கள் கிறிஸ்தவத்திற்கு அவப்பெயரை சேர்க்கிறார்கள். இப்படிப்பட்ட காரியத்தை செய்யும்போது பிசாசானவன் மனிதர்களை அதிகமாக தன்வசப்படுத்தி அவர்களின் வாழ்க்கையில் பரிசுத்தமாகுதலை தடை செய்கிறான். இவை கடைசிகாலத்தின் பாவங்கள் என முன்பாகவே சொல்லப்பட்டிருக்கிறது. “கடைசிநாட்களில் பரியாசக்காரர் வந்து, தங்கள் சுய இச்சைகளின்படியே நடந்து,” (2 பேதுரு 3:3). ஒருசிலர் வேதத்தின் அதிகாரத்தை பற்றியும் ஆத்துமாவின் அழியாத தன்மை பற்றியும் தவறாக பேசுகிறார்கள். இது மிகவும் மோசமான தீங்கை கொண்டுவரக்கூடியது. கிறிஸ்தவத்தில் மக்கள் தாழ்மையை விலக்கி வைக்கும்போது இப்படிபட்ட பாவத்தில் விழுந்து கிறிஸ்தவ மதத்தை தவறாக பேசுகிறார்கள். ஆனால் மக்கள் இந்த நிலைமைக்கு வரும்போது அவர்களின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. எந்த அறிவுரைகளும் அவர்களை திருத்தமுடியாது. அவர்களின் இந்த பாவத்தை நீங்கள் அவர்களிடம் சுட்டிக் காண்பிக்கும் போது மேலும் உங்களை பகைப்பார்கள். “பரியாசக்காரனைக் கடிந்துகொள்ளாதே, அவன் உன்னைப் பகைப்பான்” (நீதிமொழிகள் 9:8). இப்படிப்பட்ட மனிதன் மீண்டுவரமுடியாத ஒரு வாசலில் நின்று கொண்டிருக்கிறான்.
- தீயநாவு தன்னை சபிப்பதற்கு அர்ப்பணித்த நாவு.
“அவன் வாய் சபிப்பினாலும் கபடத்தினாலும் கொடுமையினாலும் நிறைந்திருக்கிறது.” (சங்கீதம் 10:7). சபித்தல் என்கிற ஒரு பெரிய பாவம் மற்றொரு பெரிய பாவத்திற்கு வழிநடத்துவதாயிருக்கிறது. சபித்தல் என்பது ஒரு பொல்லாத இருதயத்தில் இருந்து புறப்படுகிறது. அது உண்மை தான் என்றாலும் மக்கள் காரணமில்லாமல் சபிப்பதில்லை. மற்றவர்களை சபித்தல் என்பது மனிதர்களின் வேலை அல்ல. அப்படியும் சபித்தால் அது மிகவும் பயப்படக்கூடிய பாவம். "தன் சகோதரனைப் பகைக்கிற எவனும் மனுஷ கொலைபாதகனாயிருக்கிறான்" (1 யோவான் 3:15). சபித்தல் என்பது பகைத்தலை காட்டிலும் மிகவும் கொடுமையான பாவம். அப்படியென்றால் கொலையை காட்டிலும் பெரிய காரியத்தை செய்கிறான். சபிக்கும்போது மற்றவர்களை பற்றி எவ்வளவு மட்டமாக தங்கள் மனதில் நினைத்திருக்கிறார்கள் என்பதை வெளிபடுத்துகிறார்கள். ஒருசிலர் தங்களை தாங்களே சபித்துக்கொள்வார்கள். அவர்களை பார்த்து யூதர்கள் அவர்களின் இரத்தப்பழி அவர்கள் மீதே விழட்டும் என்றும் கடவுள் உங்களை கடிந்து கொள்வாராக என்றும் சொல்லுவார்கள், அவர்கள் மீது சாபமும் சீக்கிரம் வரும். "சாபத்தை விரும்பினான் அது அவனுக்கு வரும்." (சங்கீதம் 109:17)
- தீயநாவு நியாயமாய் பேசாத நாவு.
ஒரு ரூபாய் பணம் அந்த நாக்கை பொய்யாக பேச வைக்கும். ஒரு வழக்கறிஞரின் நாவு பணத்திற்கு விற்கப்பட்டிருக்கும். "எதுவரைக்கும் நீங்கள் நியாயத்தீர்ப்பு செய்வீர்கள்" (சங்கீதம் 82:2). ஒருசிலர் அநியாயத்திற்காக மிகவும் வாதாடுவார்கள். அவர்களுக்கே தாங்கள் பேசுவது பொய் என்றும் அதில் நீதி இல்லையென்றும் தெரிந்தும் அதற்காக லஞ்சம் வாங்கி போராடுவார்கள். ஒரு மனிதன் அநியாயத்திற்காக வழக்காடும்போது அவன் பிசாசின் வழக்கறிஞராய் செயல்படுகிறான். கர்த்தர் கள்ளத்தராசை வெறுப்பது போல இந்த அநியாயம் பேசும் நாவையும் வெறுக்கிறார். ஒருமுறை அநியாயமாய் பொய் பேசுவதைவிட ஊமையாய் பிறப்பது மிகவும் மேலானது, ஐயோ நாம் வாழ்கிற காலத்தில் சூழல் எப்படி இருக்கிறது என்று பாருங்கள், அநேகர் பணத்திற்காக நியாயத்தை புரட்டி நீதியை அபத்தமாக்குகிறார்கள். இது திருடுவதை காட்டிலும் மேலான பாவம்.
பயன்பாடு
வீழ்ச்சியின் காரணமாக நமக்கு ஏற்பட்ட காயத்தை பாருங்கள். பாவம் நமது இயற்கையான சாயலை மாற்றி சாபத்தை கொடுத்திருக்கிறது. மூல பாவமானது விஷமாக அனைத்து மனிதர்களுக்குள்ளும் கலந்திருக்கிறது. அது நமது கண்களை அசுத்தமாக்கி, நமது கரங்களை லஞ்சம் வாங்கவைத்து, நமது நாக்கை தீட்டுபடுத்தியிருக்கிறது. இது அநீதி நிறைந்த உலகம். தேவனை துதிப்பதற்கு படைக்கப்பட்ட நாவு தற்போது ஒரு தீவிரமான அநீதியின் ஆயுதமாக மாறியிருக்கிறது.
இவ்வளவு தீங்குகள் நமது நாவில் மட்டும் இருந்தால் நமது இருதயத்தில் எவ்வளவு இருக்கும்? ஒரு ஓடையில் முழுக்க நீர் ஓடினால் அதற்கு மூலதனமாயிருக்கிற நீரூற்றில் எவ்வளவு நீர் இருக்கும். உலகம் அளவிற்கு பாவம் நாவில் இருந்தால் இருதயத்தில் எத்தனை உலக அளவு பாவம் நிறைந்திருக்கும். "அவர்கள் உள்ளம் கேடுபாடுள்ளது." (சங்கீதம் 5:9), வெளிப்புறமாகிய நாவு கெட்டதாயிருந்தால் உள்புறமாகிய இருதயம் எவ்வளவு கெட்டதாயிருக்கும். "அவர்களில் ஒவ்வொருவனுடைய உட்கருத்தும் இருதயமும் ஆழமாயிருக்கிறது." (சங்கீதம் 64:6). இந்த ஆழம் அளவிட முடியாததாய் இருக்கிறது. அங்கு ஆழமான பெருமை மாய்மாலம் தேவனை அறிந்துகொள்ளாத தன்மை என அநேகம் வேரூன்றி நிற்கிறது.
இருதயம் கடலை போன்றது. அங்கு பெரிய திமிங்கலமும், எண்ணிமுடியாத அநேக நீர்வாழ் ஜந்துக்களும் இருக்கிறது. (சங்கீதம் 104:25 26) ஒரு தோளின்மீது குஷ்டம் பரம்பி இருந்தால் உடலில் ஓடும் இரத்தம் எவ்வளவு கெட்டதாயிருக்கும்? நாவு கெட்டதாயிருந்தால் இருதயம் எவ்வளவு கொடூரமானதாக இருக்கும்? இருதயமே நாவை செயல்பட வைக்கிறது. இருதயத்தின் நிறைவினால் வாய் பேசும். இருதயமே தேவன் வெறுக்கிற அனைத்து பாவத்திற்கும் விதையாய் இருக்கிறது. "இருதயத்திலிருந்து பொல்லாத சிந்தனைகளும், கொலைபாதகங்களும், விபசாரங்களும், வேசித்தனங்களும், களவுகளும், பொய்ச்சாட்சிகளும், தூஷணங்களும் புறப்பட்டுவரும்" (மத்தேயு 15:19). ஒரு மரத்தின் இலையில் மிகுந்த கசப்பு இருந்தால் அதின் வேரில் எவ்வளவு கசப்பு இருக்கும்? அப்படியென்றால் மனிதனின் இருதயத்தில் எவ்வளவு கசப்பான வேர்கள் இருக்கும்.
ஒருசிலர் எங்கள் இருதயம் சுத்தமாக இருக்கிறது என்கிறார்கள். ஆனால் அவர்கள் நாவோ கெட்டதாயிருக்கிறது. ஒரு புகை போக்கியிலிருந்து புகை அதிகமாக வெளியேறும்போது எப்படி ஒரு நெருப்பு அடியில் எரிந்து கொண்டிருக்கும். "பேலியாளின் மனுஷனாகிய ஒரு துன்மார்க்கன் ஆகடியம் பேசித்திரிகிறான்" (நீதிமொழிகள் 6:12). சாலோமோன் நாவு கெட்டதாயிருப்பதற்கு காரணத்தை சொல்கிறார். ஏனெனில் இருதயம் கேடு நிறைந்ததாயிருக்கிறது. கேடானவைகளை சேர்த்து வைக்கும் இடமே இருதயம். "பொல்லாத மனுஷன் பொல்லாத பொக்கிஷத்திலிருந்து பொல்லாதவைகளை எடுத்துக்காட்டுகிறான்" (மத்தேயு 12:35). உண்மையான நீதி மெய்யான பொக்கிஷமாயிருந்தது. ஆனால் அது நம்மிடமிருந்து போய்விட்டது. இப்போது நம்மிடம் பாவத்தின் கெட்ட பொக்கிஷமே இருக்கிறது. பொக்கிஷம் என்பது அநேக காரியத்தை குறிக்கிறது. அது நம்முடைய இருதயத்தில் புதைந்திருக்கிற, மறைந்திருக்கிற அனைத்து பாவங்களையும் குறிக்கிறது. நாம் ஆழ்ந்து சிந்திக்கும்போது நம் இருதயமே ஒரு நரகம் போல் காணப்படுகிறது. இருதயமானது எகிப்தின் கோயில்களை போல சிலந்திகள் மற்றும் பாம்புகளால் நிறைந்திருக்கிறது.
நீங்கள் உங்கள் நாவை சரிபடுத்த விரும்பினால் முதலில் உங்கள் இருதயத்தை சரிபடுத்த உழையுங்கள். இருதயமே நாவை ஆளுகை செய்கிறது. இருதயம் மாயையாயும், உலகப்பிரகாரமாகவும் இருக்குமானால் உங்கள் நாவும் அப்படித்தான் இருக்கும். உங்கள் இருதயம் பரிசுத்தமாயிருந்தால் உங்கள் நாவும் பரிசுத்தமாயிருக்கும். உங்கள் இருதயத்தை சீர்தூக்கி பார்த்து சிறப்பான இருதயத்தையும், நல்ல நாவையும் பெற்றுகொள்ளுங்கள்.
நான் எப்படி என் இருதயத்தை சிறப்பாக மாற்றமுடியும்? என்ற கேள்விக்கு வியப்பான கிருபையின் கொள்கையை பாருங்கள். கிருபை மனிதனின் இருதயத்தை மாற்றி சரீரத்தின் அனைத்து பாகங்களையும் பரிசுத்தப்படுத்துகிறது. அது கண்களை பரிசுத்தப்படுத்தி அதை சுத்தமாக்குகிறது. அது நாவை பரிசுத்தப்படுத்தி பரிசுத்தமாகவும், அமைதியாகவும் இருக்கும்படி செய்கிறது. "பரிசுத்த ஆவியானவர் அப்போஸ்தலர்கள் மீது பொழிந்தருளப்பட்டபோது அவர்கள் வெவ்வேறு பாஷைகளிலே பேசத்தொடங்கினார்கள்" (அப்போஸ்தலர் 2:4). கர்த்தருடைய ஆவியானவர் மனிதர்களை பரிசுத்தப்படுத்தும்போது மனிதர்கள் சுத்தமான நாவினால் பேசுவார்கள். அவர்களுடைய வார்த்தைகளும் பரலோகத்திற்குரியதாயிருக்கும். இருதயத்தை நேராக்கி நாவிலிருந்து புறப்படுகிற அலட்சியமான வார்த்தைகளை தடைசெய்கிறது. இருதயம் சரியாக இருக்கும்போது அதிலிருந்து புறப்படும் வார்த்தைகளும் இனிமையாக இருக்கும்.
நீங்கள் நிச்சயம் உங்களின் செய்கைகளுக்கும், வாயின் வார்த்தைகளுக்கும் தேவனுக்கு முன்பாக கணக்கு ஒப்புவிக்க வேண்டும் என்பதை ஞாபகப்படுத்தி கொள்ளுங்கள். மனுஷர் பேசும் வீணான வார்த்தைகள் யாவையும் குறித்து நியாயத்தீர்ப்பு நாளிலே கணக்கொப்புவிக்கவேண்டும் (மத்தேயு 12:36). தேவையில்லாத வீண்வார்த்தைகளுக்கு மிகப்பெரிய கணக்கு ஒப்புவிக்க வேண்டும். தேவன் வீணான கோபமான வார்த்தைகளுக்கே கணக்கு கேட்டால் பாவமான சத்தியங்களுக்கு எவ்வளவு கணக்கு கேட்பார்.
ஆ! நான் இப்பொழுது சொல்லும் வார்த்தைகள் எழுதப்பட்டால் நலமாயிருக்கும் யோபு 19:23. உண்மையாகவே அநேகருடைய வார்த்தைகள் எழுதப்பட்டால் முடிவில் அதுவே அவர்களுக்கு வெட்கமாக இருக்கும். இப்போது சொல்லுங்கள் உங்களின் வார்த்தைகள் எழுதப்பட்டால் எப்படி இருக்கும்.நான் உங்களுக்கு சொல்லுகிறேன் உங்கள் வார்த்தைகள் எழுதப்படுகிறது. "ஜீவபுஸ்தகம் என்னும் வேறொரு புஸ்தகம் திறக்கப்பட்டது." கர்த்தரின் ஞாபக புஸ்தகத்தில் நீங்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தைகளும் எழுதப்பட்டிருக்கும். அதினால் உங்கள் வாயிலிருந்து புறப்படுகிற வார்த்தைகளை குறித்து மிகவும் கவனமாயிருங்கள். நீங்கள் பேசுகிற அனைத்தையும் கடவுள் எழுதிகொண்டிருக்கிறார். அதற்கு நீங்கள் கணக்கு ஒப்புவிக்க வேண்டும். புஸ்தகம் திறக்கப்படும்போது கர்த்தர் உங்கள் வாயின் வார்த்தையின்படியே நியாயதீர்ப்பு செய்வார். "உன் வார்த்தைகளினாலே நீதிமான் என்று தீர்க்கப்படுவாய்; அல்லது உன் வார்த்தைகளினாலே குற்றவாளி என்று தீர்க்கப்படுவாய்" (மத்தேயு 12:37).