உண்மையான கிறிஸ்தவ வாழ்க்கை

ஒவ்வொரு நாளையும் தேவனோடு கழிப்பது எப்படி
ஆசிரியர்: ரிச்சர்ட் பாக்ஸ்டர் (1615-1691)
தமிழாக்கம்: A. அருள்நேசன்
வாசிப்பதற்கான நேரம்: 9 நிமிடங்கள்

 நமது கடமைகளின் வழக்கமான வரிசையையும் முறையையும் நாம் அறிந்திருக்கும்போது, ஒவ்வொன்றும் அதனதன் சரியான இடத்தில் அமையும்போது, ஒரு பரிசுத்தமான வாழ்க்கை எளிதாகிறது. எனவே, ஒவ்வொரு நாளையும் பரிசுத்தமான முறையில் கழிப்பதற்கான சில சுருக்கமான வழிகாட்டுதல்களை நான் தருகிறேன்.

உறக்கம்

உங்கள் உறக்கத்தின் நேரத்தைச் சரியாக அளவிட்டுக்கொள்ளுங்கள், அப்போதுதான் உங்கள் விலையேறப்பெற்ற காலை நேரங்களைச் சோம்பேறித்தனமாகப் படுக்கையில் வீணடிக்க மாட்டீர்கள். உங்கள் உறக்கத்தின் நேரம் உங்கள் ஆரோக்கியத்திற்கும் உழைப்பிற்கும் ஏற்றதாக இருக்கட்டுமே தவிர, சோம்பேறித்தனமான இன்பத்திற்காக அல்ல.

முதல் சிந்தனைகள்

நீங்கள் விழித்தெழும்போது உங்களின் முதல் சிந்தனைகள் தேவனைப் பற்றியதாக இருக்கட்டும்; முந்தைய நாள் இரவு நீங்கள் அனுபவித்த ஓய்விற்காகப் பயபக்தியோடும் நன்றியோடும் உங்கள் இதயங்களை அவரிடமாக உயர்த்துங்கள், மேலும் வரப்போகும் நாளுக்காக உங்களை அவரிடம் ஒப்புக்கொடுங்கள்.

சாதாரண உலகச் சிந்தனைகள் முதலில் நுழைய முயலும்போது உங்கள் மனசாட்சி உங்களைத் தடுக்கும் அளவுக்கு, தொடர்ந்து இந்தப் பழக்கத்தை வளர்த்துக்கொள்ளுங்கள். ஓர் இரவின் ஓய்வு என்பது எவ்வளவு பெரிய கிருபை என்பதைச் சிந்தித்துப் பாருங்கள்; அதே இரவை நரகத்தில் கழித்தவர்கள் எத்தனை பேர்; சிறையில் கழித்தவர்கள் எத்தனை பேர்; குளிரிலும் கடினமான இடங்களிலும் கழித்தவர்கள் எத்தனை பேர்; கடுமையான வலிகளாலும் வியாதிகளாலும் அவதிப்பட்டு, தங்கள் படுக்கைகளையும் வாழ்க்கையையுமே வெறுத்துப்போனவர்கள் எத்தனை பேர் என்று சிந்தித்துப் பாருங்கள்.

அந்த இரவில் எத்தனை ஆத்துமாக்கள் தங்கள் உடல்களிலிருந்து பிரிக்கப்பட்டு, பயங்கரமான முறையில் தேவனுக்கு முன்பாக நிற்க அழைக்கப்பட்டார்கள் என்று சிந்தித்துப் பாருங்கள்! பகலும் இரவும் எவ்வளவு வேகமாக உருண்டோடுகின்றன என்பதையும் எண்ணிப் பாருங்கள்! உங்கள் கடைசி இரவும் பகலும் எவ்வளவு சீக்கிரம் வரும்! அப்படிப்பட்ட ஒரு நேரத்திற்காக உங்கள் ஆத்துமா தயாராக இருப்பதில் என்ன குறைவு இருக்கிறது என்பதைக் கவனித்து, தாமதமின்றி அதைத் தேடுங்கள்.

ஜெபம்

குடும்பமாகச் சேர்ந்து ஜெபிப்பதற்கு முன்பாக, நீங்கள் தனியாக (அல்லது உங்கள் வாழ்க்கைத்துணையோடு) ஜெபியுங்கள். முடிந்தால், அன்றைய தினத்தின் வேறு எந்த வேலையையும் தொடங்குவதற்கு முன் இதுவே முதலாவதாக இருக்கட்டும்.

குடும்ப ஆராதனை

குடும்ப ஆராதனையைத் தொடர்ந்து தவறாமல் செய்யுங்கள்; குடும்பத்தினர் எவ்விதத் தடையுமின்றி ஈடுபடக்கூடிய ஒரு நேரத்தை அதற்காகத் தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள்.

இறுதி நோக்கம்

உங்களின் இறுதி நோக்கத்தை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் உங்கள் அன்றாட வேலையைத் தொடங்கும்போதோ அல்லது உலகத்தின் எந்தவொரு செயலில் ஈடுபடும்போதோ, நீங்கள் செய்யும் எல்லாவற்றிலும் ‘கர்த்தருக்குப் பரிசுத்தம்’ என்பது உங்கள் இதயங்களில் எழுதப்பட்டிருக்கட்டும். தேவனுக்கு உரிமை கொண்டாட முடியாத எந்த வேலையையும் செய்யாதீர்கள்; அவர் உங்களை அந்த வேலைக்காக நியமித்தார் என்று உண்மையாகச் சொல்ல முடியாத எதையும் செய்யாதீர்கள். அவரைப் பிரியப்படுத்தவும், மகிமைப்படுத்தவும், அவரை அனுபவிக்கவும் தவிர, வேறு எந்த இறுதி நோக்கத்திற்காகவும் உலகத்தில் எதையும் செய்யாதீர்கள். “ஆகையால் நீங்கள் புசித்தாலும், குடித்தாலும், எதைச் செய்தாலும், எல்லாவற்றையும் தேவனுடைய மகிமைக்கென்றே செய்யுங்கள்.” (1 கொரிந்தியர் 10:31).

உங்கள் தொழிலில் சுறுசுறுப்பு

உங்கள் தொழிலின் கடமைகளைக் கவனமாகவும் சுறுசுறுப்பாகவும் செய்யுங்கள். இதன்மூலம்:

(a) நீங்கள் சோம்பேறிகள் அல்ல என்பதையும், உங்கள் மாம்சத்திற்கு அடிமைகள் அல்ல (அதன் வசதிகளை மறுக்க முடியாதவர்களைப் போல) என்பதையும் காட்டுவீர்கள்; மேலும், சோம்பேறித்தனத்தாலும் ஓய்வாலும் வளர்க்கப்படும் அனைத்து மாம்ச இச்சைகளையும் ஆசைகளையும் அழிக்கும் வேலையை நீங்கள் முன்னெடுப்பீர்கள்.

(b) சோம்பேறிகளின் மனதில் மொய்க்கும் வீணான எண்ணங்களை உங்கள் மனதிலிருந்து விலக்கி வைப்பீர்கள்.

(c) சோம்பேறிகள் தினமும் செய்யும் தவற்றான, விலைமதிப்பற்ற நேரத்தை வீணடிப்பதை நீங்கள் செய்ய மாட்டீர்கள்.

(d) சோம்பேறிகள் தொடர்ந்து கடமையைத் தவிர்க்கும் பாவங்களில் ஈடுபட்டிருக்கும்போது, நீங்கள் தேவனுக்குக் கீழ்ப்படியும் வழியில் இருப்பீர்கள்.

(e) உங்கள் தொழிலைச் சுறுசுறுப்பாகச் செய்தால், பரிசுத்தக் கடமைகளில் செலவிட உங்களுக்கு அதிக நேரம் கிடைக்கும். சோம்பேறிகளுக்கு ஜெபிக்கவும் வாசிக்கவும் நேரம் இருப்பதில்லை, ஏனென்றால் அவர்கள் தங்கள் வேலையில் நேரத்தை வீணடிக்கிறார்கள்.

(f) நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் தேவனுடைய ஆசீர்வாதத்தையும் வசதியான பராமரிப்பையும் எதிர்பார்க்கலாம். (g) இது உங்கள் உடலின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும், அதன் மூலம் உங்கள் ஆத்துமாவின் சேவைக்கான அதன் தகுதியும் அதிகரிக்கும்.

சோதனைகளும் சீரழிக்கும் காரியங்களும்

உங்களை எளிதில் சிக்கும்படி செய்யும் சோதனைகளையும், உங்களைச் சீரழிக்கக்கூடிய காரியங்களையும் முழுமையாக அறிந்துகொள்ளுங்கள் — நாள் முழுவதும் அவற்றுக்கு எதிராக விழிப்பாயிருங்கள். குறிப்பாக மிகவும் ஆபத்தான சீரழிக்கும் காரியங்களுக்கும், உங்கள் நண்பர்கள் அல்லது உங்கள் தொழில் தவிர்க்க முடியாமல் உங்கள் முன் வைக்கும் சோதனைகளுக்கும் எதிராக நீங்கள் விழிப்பாயிருக்க வேண்டும்.

அவிசுவாசம், மாயமாலம், சுயநலம், பெருமை, மாம்ச இச்சைகளைப் பிரியப்படுத்துதல் மற்றும் பூமிக்குரிய காரியங்கள் மீதான அதீத அன்பு ஆகிய பிரதான பாவங்களுக்கெதிராக விழிப்பாயிருங்கள்.

உங்கள் தொழிலில் சுறுசுறுப்பாக இருக்கிறோம் என்ற சாக்கில், உலகச் சிந்தையிலும், அதீத கவலைகளிலும், அல்லது உலகில் உயர்வதற்கான பேராசையான திட்டங்களிலும் ஈர்க்கப்பட்டுவிடாதபடி கவனமாக இருங்கள்.

நீங்கள் மற்றவர்களோடு வியாபாரம் செய்யவோ அல்லது பழகவோ நேர்ந்தால், சுயநலத்திற்கும், அநீதி அல்லது அன்பற்ற தன்மைக்குச் சாயலான அனைத்திற்கும் எதிராக விழிப்பாயிருங்கள். மற்றவர்களுடனான உங்களின் அனைத்து உரையாடல்களிலும், வீணான மற்றும் வெற்றுப் பேச்சுகளின் சோதனைக்கு எதிராக விழிப்பாயிருங்கள். உங்களைக் கோபத்திற்குத் தூண்டும் நபர்களுக்கெதிராகவும் விழிப்பாயிருங்கள். பரிசுத்தத்தின் விதிகள் கோருகிற அடக்கத்தையும் பேச்சின் தூய்மையையும் காத்துக்கொள்ளுங்கள்.

முகஸ்துதி செய்பவர்களோடு நீங்கள் உரையாடினால் — பெருமை உங்களை ஆட்கொள்ளாதபடி எச்சரிக்கையாக இருங்கள்.

உங்களை இகழ்ந்து காயப்படுத்துபவர்களோடு நீங்கள் உரையாடினால் — பொறுமையற்ற, பழிவாங்கும் பெருமைக்கு எதிராக உங்களைப் பலப்படுத்திக் கொள்ளுங்கள்.

உங்களுக்குள் பாவத்திற்கு ஏதாவது பலம் இருக்கும் வரை, ஆரம்பத்தில் இந்தக் காரியங்கள் மிகவும் கடினமாகவே இருக்கும்; ஆனால் இந்தப் பாவங்களில் ஏதேனும் ஒன்றின் விஷம் போன்ற ஆபத்தைக் குறித்த தொடர்ச்சியான விழிப்புணர்வை நீங்கள் பற்றிக்கொண்டால், உங்கள் இதயம் உடனடியாகவும் எளிதாகவும் அவற்றைத் தவிர்க்கும்.

தியானம்

உங்கள் வேலைகளில் நீங்கள் தனியாக இருக்கும்போது, அந்த நேரத்தைப் பயனுள்ள மற்றும் நடைமுறைக்கு உகந்த தியானங்களில் மேம்படுத்துங்கள். இவற்றைத் தியானியுங்கள்… தேவனுடைய அளவற்ற நற்குணங்கள் மற்றும் பரிபூரணங்கள்; கிறிஸ்துவும் மீட்பும்; பரலோகம் மற்றும் அங்கு செல்வதற்கு நீங்கள் எவ்வளவு தகுதியற்றவர்கள் என்பது; மேலும் நரகத்தின் நித்திய வேதனைக்கு நீங்கள் எவ்வளவு தகுதியானவர்கள் என்பது.

ஒரே நோக்கம்

நீங்கள் கூட்டத்தில் இருந்தாலும் சரி, தனியாக இருந்தாலும் சரி, எதைச் செய்தாலும் அதைத் தேவனுடைய மகிமைக்காகவே செய்யுங்கள் (1 கொரிந்தியர் 10:31). இல்லையென்றால், அது தேவனால் ஏற்றுக்கொள்ளப்படாது.

காலத்தைப் பிரயோஜனப்படுத்திக்கொள்ளுதல்

உங்கள் நேரத்திற்கு அதிக மதிப்பளித்து, பணத்தை இழக்காமல் இருக்க நீங்கள் எவ்வளவு கவனமாக இருப்பீர்களோ, அதைவிட அதிகக் கவனமாக உங்கள் நேரத்தை இழக்காமல் இருங்கள். பயனற்ற பொழுதுபோக்குகள், உலகப்பிரகாரமான கேளிக்கைகள், வீண்பேச்சு, லாபமற்ற நட்பு, அல்லது உறக்கம் — ஆகியவை உங்களின் விலையேறப்பெற்ற நேரத்தைத் திருட அனுமதிக்காதீர்கள்.

திருடர்கள் மற்றும் கொள்ளையர்களிடமிருந்து தப்பிக்க நீங்கள் எவ்வளவு கவனமாக இருப்பீர்களோ, அதைவிட அதிகமாக உங்கள் நேரத்தைத் திருடும் நபர், செயல் அல்லது வாழ்க்கை முறையிலிருந்து தப்பிக்கக் கவனமாக இருங்கள்.

நீங்கள் வெறுமனே சோம்பேறியாக இல்லாமல் இருப்பது மட்டுமல்லாமல், உங்களால் முடிந்தவரை மிகவும் பயனுள்ள வழியில் உங்கள் நேரத்தைப் பயன்படுத்துகிறீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்; அதிகப் பயனுள்ள ஒரு வழியை விடக் குறைந்த பயனுள்ள வழிக்கு முன்னுரிமை அளிக்காதீர்கள்.

உண்ணுவதும் குடிப்பதும்

பயனற்ற இன்பத்திற்காக அல்லாமல், ஆரோக்கியத்திற்காக மிதமாகவும் நன்றியுணர்வுடனும் உண்ணுங்கள், குடியுங்கள். உணவு அல்லது பானத்தில் உங்கள் பசியை ஒருபோதும் திருப்திப்படுத்தாதீர்கள், அது உங்கள் ஆரோக்கியத்திற்குக் கெடுதலாக அமைய வாய்ப்புள்ளபோது.

சோதோமின் பாவத்தை நினைவில் கொள்ளுங்கள்: “இதோ, பெருமையும், போஜனத்திரட்சியும், நிர்விசாரமான அமரிக்கையுமே உன் சகோதரியாகிய சோதோமின் அக்கிரமம்; இவைகளே அவளுக்கும் அவள் குமாரத்திகளுக்கும் இருந்தது” (எசேக்கியேல் 16:49).

“அவர்களுடைய முடிவு அழிவு, அவர்களுடைய தேவன் வயிறு, அவர்களுடைய மகிமை அவர்களுடைய இலச்சையே, அவர்கள் பூமிக்கடுத்தவைகளைச் சிந்திக்கிறார்கள்” என்று கூறி, “அநேகர் வேறுவிதமாய் நடக்கிறார்கள்; அவர்கள் கிறிஸ்துவின் சிலுவைக்குப் பகைஞரென்று உங்களுக்கு அநேகந்தரம் சொன்னேன், இப்பொழுதும் கண்ணீரோடே சொல்லுகிறேன்” (பிலிப்பியர் 3:18-19) என்று அப்போஸ்தலனாகிய பவுல் கண்ணீர் வடித்தார். ஓ, ஆகையால் மாம்சத்தின்படி வாழாதீர்கள், வாழ்ந்தால் சாவீர்கள்! (ரோமர் 8:13).

ஆதிக்கம் செலுத்தும் பாவங்கள்

வழக்கமான தவறுகளைத் தாண்டி, ஏதாவது ஒரு சோதனை உங்கள் மீது ஆதிக்கம் செலுத்தி நீங்கள் ஏதேனும் பாவங்களில் விழுந்தால், உடனடியாக அதற்காகப் புலம்பித் தேவனிடம் அறிக்கையிடுங்கள்; அதற்காக எவ்வளவு விலை கொடுக்க வேண்டியிருந்தாலும் விரைவாக மனந்திரும்புங்கள். நீங்கள் பாவத்தில் தொடர்ந்தால், மனந்திரும்பாமல் இருந்தால், நிச்சயமாக நீங்கள் அதற்காக இன்னும் அதிக விலை கொடுக்க நேரிடும்.

உங்கள் வழக்கமான தவறுகளை இலேசாக நினைக்காதீர்கள், அவற்றை அறிக்கையிட்டுத் தினமும் அவற்றுக்கு எதிராகப் போராடுங்கள்; மனந்திரும்பாமை மற்றும் அவமதிப்பின் மூலம் அவற்றை மேலும் தீவிரமாக்கிவிடாதபடி கவனமாக இருங்கள்.

உறவுகள் கணவர்கள், மனைவிகள், குழந்தைகள், எஜமானர்கள், வேலைக்காரர்கள், போதகர்கள், மக்கள், ஆளுநர்கள், குடிமக்கள் எனப் பல்வேறு உறவுகளின் சிறப்புக் கடமைகளை ஒவ்வொரு நாளும் நினைவில் கொள்ளுங்கள்.

ஒவ்வொரு உறவிற்கும் அதற்கென ஒரு சிறப்புக் கடமையும், சில நன்மைகளைச் செய்வதற்கான வாய்ப்பும் உள்ளது என்பதை நினைவில் கொள்ளுங்கள். மற்ற எந்தக் கடமையைப் போலவே இந்த விஷயத்திலும் உங்கள் உண்மையைத் தேவன் கோருகிறார்.

நாளை முடித்தல்

உறங்கச் செல்வதற்கு முன், கடந்துபோன நாளின் செயல்களையும் இரக்கங்களையும் திரும்பிப் பார்ப்பது ஞானமானதும் அவசியமானதும் ஆகும்; அப்போதுதான் அனைத்து விசேஷித்த கிருபைகளுக்காகவும் நீங்கள் நன்றியுள்ளவர்களாகவும், உங்கள் பாவங்கள் அனைத்திற்காக உங்களைத் தாழ்த்திக் கொள்பவர்களாகவும் இருக்க முடியும்.

உங்கள் மனந்திரும்புதலையும் கீழ்ப்படிதலுக்கான உங்கள் தீர்மானத்தையும் நீங்கள் புதுப்பித்துக்கொள்ள இது அவசியமாகும். மேலும், உங்கள் ஆத்துமா சிறப்பாக வளர்ந்ததா அல்லது மோசமானதா, பாவம் குறைகிறதா கிருபை அதிகரிக்கிறதா, பாடுகள், மரணம் மற்றும் நித்தியத்திற்காக நீங்கள் இன்னும் சிறப்பாகத் தயாராக இருக்கிறீர்களா என்று உங்களை நீங்களே சோதித்துப்பார்க்கவும் இது அவசியமாகும்.

இந்த வழிகாட்டுதல்கள் உங்கள் மனதில் பொறிக்கப்பட்டு, உங்கள் வாழ்க்கையின் அன்றாடப் பயிற்சியாக மாறுவதாக.

இதை உண்மையாகப் பின்பற்றினால், இவை உங்கள் வாழ்க்கையின் பரிசுத்தம், கனி கொடுத்தல் மற்றும் அமைதிக்குத் துணையாக அமைந்து, உங்களுக்கு ஆறுதலான மற்றும் சமாதானமான மரணத்தைக் கொண்டுவரும்.

 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

Join WhatsApp எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.