பரிசுத்த வேதாகமம் என்பது கிறிஸ்தவர்களின் உயிர்நாடியாகும்; ஏனெனில், நம்முடைய ஆத்துமாக்களை இரட்சிக்கக்கூடிய திறன்வாய்ந்த வார்த்தைகளைக் கொண்ட புத்தகமாக நம்முடைய பரலோகத் தேவன் இதனை நமக்குக் கொடுத்துள்ளார். அப்பேற்பட்ட இந்த வேதாகமத்தை இன்றைய காலகட்டத்தில் நாம் மிகவும் சுலபமாக 200 ரூபாய் கொடுத்து வாங்கிக்கொள்கிறோம். இன்னும் சிலர், பிறருக்கு இதனை இலவசமாகவும் கொடுக்கிறார்கள்; மேலும், தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக இது நம்முடைய கைப்பேசியிலேயே வந்துவிட்டது. ஆனால், இன்று நாம் அனைவரும் வேதாகமத்தை இவ்வளவு சுலபமாக வாசிக்கின்றோம் என்றால், அது எளிதான காரியமல்ல. பல நூற்றாண்டுகளாகப் பலர் பாடுபட்டதினாலேயே இன்று நாம் இதனைச் சுலபமாக வாசிக்க முடிகிறது.
வேதாகமம் என்றால் என்ன? வேதாகம அடிப்படையில் பார்த்தால், 2 பேதுரு 1:20-21, 2 சாமுவேல் 23:2, 1 கொரிந்தியர் 2:13, மற்றும் 2 தீமோத்தேயு 3:16 ஆகிய வசனங்களில் இதற்கான மிகத் தெளிவான விளக்கத்தைப் பார்க்கிறோம். எனவே, வேதாகமத்தைப் பொறுத்தவரையில் அதில் மனித ஞானமோ, மனித சிந்தையோ இல்லை; மோசே முதல் தீர்க்கதரிசிகள் வரை அனைவரும் பரிசுத்த ஆவியானவரின் வழிநடத்துதலினாலேயே இதை எழுதினார்கள். அதனால்தான் இது "பரிசுத்த வேதாகமம்" என்று அழைக்கப்படுகிறது. இச்சொல்லுக்கு மூலச்சொல் கிரேக்கத்தில் "பிப்லியா" (Biblia) என்பதாகும். இதையே ஆங்கிலத்தில் "Holy Bible" என்று அழைக்கிறோம். அவ்வார்த்தைக்குப் 'புத்தகம்' அல்லது 'புத்தகங்கள்' என்று பொருள்.
வேதாகமத்தின் அமைப்பு இதில் மொத்தம் 66 புத்தகங்கள் உள்ளன. அவற்றுள் பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாடு என இரு பிரிவுகள் உண்டு. பழைய ஏற்பாட்டில் 39 புத்தகங்கள் உள்ளன; இவை எபிரெய மொழியிலும் அராமிக் மொழியிலும் எழுதப்பட்டன. புதிய ஏற்பாட்டில் 27 புத்தகங்கள் உள்ளன; இவை கிரேக்க மொழியில் எழுதப்பட்டன. பழைய ஏற்பாட்டை நியாயப்பிரமாணம், வரலாறு, சங்கீதம் மற்றும் நீதிநெறிகள், தீர்க்கதரிசனங்கள் என்றும், புதிய ஏற்பாட்டைச் சுவிசேஷங்கள் (நற்செய்தி), வரலாறு, நிருபங்கள், திருவெளிப்பாடு என்றும் பிரிக்கலாம்.
இவை அனைத்தையும் சுமார் 40 நபர்கள் எழுதினார்கள். ஏறக்குறைய 1600 ஆண்டுகளில், வெவ்வேறு காலகட்டங்களில் வாழ்ந்த, வெவ்வேறு தொழில்களைச் செய்தவர்களால் இவை எழுதப்பட்டன. இவ்வாறாக இருந்தபோதிலும், இந்த 66 புத்தகங்களிலும் ஒன்றுக்கொன்று எவ்வித முரண்பாடும் இல்லை. ஏனென்றால், மனிதர்கள் தங்கள் கரங்களால் எழுதினாலும், அவர்களை எழுதவைத்தது பரிசுத்த ஆவியானவரே என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
மொழிபெயர்ப்பின் வரலாறு இப்போது வேதாகமத்தின் பின்னணியையும் வரலாற்றையும் பார்ப்போம். வேதாகமத்தின் முதல் மொழிபெயர்ப்பு கி.மு. 3-ஆம் நூற்றாண்டில், எகிப்து நாட்டில் உள்ள அலெக்சாண்டிரியாவில் நடைபெற்றது. 70 யூத அறிஞர்களைக் கொண்டு, 70 நாட்களில் பழைய ஏற்பாட்டைக் கிரேக்கத்தில் மொழிபெயர்த்தனர். இவ்வாறு 70 நபர்கள் 70 நாட்களில் மொழிபெயர்த்ததினால் இது "செப்துவஜின்ட்" (Septuagint) என்று அழைக்கப்பட்டது. காகிதம் கண்டுபிடிக்கப்படாத அந்தக் காலகட்டத்தில், எகிப்து நாட்டின் நைல் நதியோரத்தில் வளரக்கூடிய "பாப்பிரஸ்" (Papyrus) என்னும் செடியின் இலையை எழுதுவதற்குப் பயன்படுத்தினார்கள். அதன்பின்பான காலத்தில், மிருகங்களின் தோலை எழுதுவதற்குப் பயன்படுத்தினார்கள். இதற்குச் சான்றாக, மத்திய ஆசியாவிலும் மேற்கத்திய நாடுகளிலும் உள்ள அருங்காட்சியகங்களில் அவர்கள் கையால் எழுதிய ஆரம்பப் பதிப்புகள் இன்றும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
வேதாகமத்தை ஒழுங்குபடுத்தி அச்சிட்ட விவரத்தைப் பின்வருமாறு பார்ப்போம்:
- கி.பி. 1238-ஆம் ஆண்டில் ஸ்டீபன் என்பவர் வேதாகமத்தை அதிகாரங்களாகப் பிரித்தார்.
- மேலும், கி.பி. 1551-ஆம் ஆண்டில் ராபர்ட் ஸ்டீபனஸ் என்பவர் வேதாகமத்தை வசனங்களாகப் பிரித்தார்.
- அச்சு இயந்திரம் கண்டுபிடிக்கப்படாத காலத்தில், வேதபாரகர்கள் (Scribes) வேதாகமத்தைக் கையினால் எழுதினார்கள். ஒரு முழு வேதாகமத்தை எழுதி முடிக்கக் கிட்டத்தட்ட 27 ஆண்டுகாலம் ஆனது என்பது வியக்கத்தக்க செய்தியாகும்.
புதிய ஏற்பாட்டைக் கிரேக்க மொழியிலிருந்து கி.பி. 327-ஆம் ஆண்டில் எகிப்து நாட்டு அலெக்சாண்டிரியாவைச் சேர்ந்த போதகர் 'அத்தனாசியஸ்' என்பவர் லத்தீன் மொழிக்குக் கொண்டுவந்தார். பின்னர், கி.பி. 1384-ஆம் ஆண்டில் ஜான் விக்ளிஃப் என்பவர் இதனை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். இதை மொழிபெயர்த்த குற்றத்திற்காக, அன்றைய திருச்சபையின் அதிகார ஆட்சியினால் அவர் தண்டிக்கப்பட்டு எரிக்கப்பட்டார். அதன்பின்பு, கி.பி. 1450-ஆம் ஆண்டில் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த ஜோகன்னஸ் குட்டன்பர்க் என்பவர் அச்சு இயந்திரத்தைக் கண்டுபிடித்து, முதன்முதலில் லத்தீன் மொழியில் வேதாகமத்தை அச்சடித்தார். அந்தப் பெருமைக்குச் சொந்தக்காரர் இவரே!
கி.பி. 1522-ஆம் ஆண்டில் சீர்திருத்தவாதியான மார்ட்டின் லூதர் புதிய ஏற்பாட்டை ஜெர்மன் மொழியில் மொழிபெயர்த்தார். பின்பு, வில்லியம் டின்டேல் என்பவர் புதிய ஏற்பாட்டை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அச்சடித்தார். அப்போதைய இங்கிலாந்து நாட்டு அரசர் இதற்குத் தடை விதித்ததால், ஜெர்மனி நாட்டில் அச்சடித்து இரகசியமாக இங்கிலாந்துக்கு வேதாகமத்தைக் கொண்டுவந்தார். கி.பி. 1536-ஆம் ஆண்டில் வேதாகமத்தை அச்சடித்த குற்றத்திற்காக, இவரை மரத்தில் கட்டி அனைவரும் பார்க்கும்படி எரித்தனர். அப்போது அவர் தேவனிடம், "கர்த்தாவே, இங்கிலாந்து ராஜாவின் கண்களைத் திறந்தருளும்" என்று உருக்கமாக வேண்டிக்கொண்டார். தேவனுடைய கிருபையினால், அதே வருடத்தில் இங்கிலாந்து நாட்டு அரசனின் அனுமதியோடு அதிகாரப்பூர்வமாக வேதாகமம் அச்சடிக்கப்பட்டது.
கி.பி. 1604-ஆம் ஆண்டில் இங்கிலாந்து அரசராக இருந்த கிங் ஜேம்ஸ், சுமார் 54 அறிஞர்களைக் கொண்டு, வேதாகமத்தின் மூல மொழிகளான எபிரெய, கிரேக்க மொழிகளிலிருந்து மொழிபெயர்த்து, கி.பி. 1611-ஆம் ஆண்டில் ஆங்கில வேதாகமத்தை வெளியிட்டார். அதன் பின்னர் ஒருசில திருத்தங்களைச் செய்து, இறுதியாக கி.பி. 1769-ஆம் ஆண்டில் அதிகாரப்பூர்வமான "King James Version" (KJV) வெளிவந்தது. மேலும், உலகம் முழுவதிலும் உள்ள சுமார் 2300-க்கும் மேற்பட்ட மொழிகளில் இன்று வேதாகமம் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது என்பது விந்தையிலும் விந்தையான செய்தியாகும்.
தமிழ் வேதாகமத்தின் வரலாறு தமிழில் முதன்முதலாக வேதாகமத்தை மொழிபெயர்க்கும் முயற்சியில் ஈடுபட்டவர் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த சீகன்பால்கு ஆவர். இவர் கி.பி. 1706-ஆம் ஆண்டில் லூத்தரன் மிஷன் சார்பாகத் தமிழ்நாட்டிற்கு வந்து, மொழிபெயர்க்கும் பணியில் ஈடுபட்டார். சில ஆண்டுகளுக்குப் பிறகு, தனது கடின உழைப்பால் கி.பி. 1715-ஆம் ஆண்டில் புதிய ஏற்பாட்டை மொழிபெயர்த்து முடித்தார். பழைய ஏற்பாட்டில் ரூத் புத்தகம் வரை மட்டுமே அவரால் மொழிபெயர்க்க முடிந்தது; பின்னர் கி.பி. 1719-ஆம் ஆண்டில் உடல்நலக்குறைவால் அவர் காலமானார்.
அதன்பின்னர், யோகான் பிலிப் பெப்ரீசியஸ், பெஞ்சமின் சூல்ட்சே, ஹென்றி பவர் போன்ற பலரும் சீகன்பால்கு மொழிபெயர்த்த வேதாகமத்தைச் சீர்திருத்தம் செய்து பலமுறை வெளியிட்டனர். மூல மொழிகளான எபிரெய, கிரேக்க மொழிகளில் புலமைவாய்ந்த அறிஞர்களின் துணையோடு, திருத்தப்பட்ட புதிய ஏற்பாட்டைக் கி.பி. 1858-ஆம் ஆண்டிலும், பழைய ஏற்பாட்டைக் கி.பி. 1864-ஆம் ஆண்டிலும் இந்திய வேதாகமச் சங்கம் இறுதியாக வெளியிட்டது.
முடிவுரை மத்தேயு 24:35-ல் இயேசுகிறிஸ்து கூறியதுபோல, "வானமும் பூமியும் ஒழிந்துபோம், என் வார்த்தைகளோ ஒழிந்துபோவதில்லை." இதற்குச் சாட்சியாக, காலங்கள் பல கடந்தாலும் தேவனுடைய வார்த்தைகளைத் தாங்கி, இன்றுவரை நிலைத்திருக்கும் ஒரே ஒரு புத்தகம் பரிசுத்த வேதாகமம் மட்டுமே!
எனவே அன்பானவர்களே! நாம் வாசிக்கும் வேதாகம அட்டைக்குள் இருப்பது, வெள்ளைக் காகிதத்தில் உள்ள கறுப்பு எழுத்துகள் மட்டுமல்ல; அது, உலகம் உண்டாவதற்கு முன்பாகவே நம் மீது பரலோகப் பிதா வைத்த நீடித்த அன்பின் வெளிப்பாடாகும். மேலும், இந்த உலகப் படைப்பின் ஆரம்பம் முதல் இறுதிவரை உள்ள சம்பவங்களையும், நம்முடைய பிறப்பைப் பற்றியும், நாம் இந்தப் பூமியில் வாழவேண்டிய விதத்தைப் பற்றியும், மரணத்திற்குப் பின் வரவிருக்கும் நித்திய வாழ்வைப் பற்றியும் இந்த வேதாகமத்தில் எழுதிவைக்கச் செய்த நம் பரலோகப் பிதா, நம் மீது எவ்வளவு நேசம் வைத்துள்ளார் என்பதை உணர்ந்தீர்களா? அப்படிப்பட்ட இந்த வேதாகமத்தை நாம் தினந்தோறும் வாசிக்கவும், தியானிக்கவும் எவ்வளவு வாஞ்சையாய் இருக்கிறோம் என்பதை நீங்களே நிதானித்துப் பாருங்கள்!