சில விசேஷித்த நடைமுறைக் குறிப்புகளை உங்களுக்குக் கூறிவிட்டு இந்தத் தியானத்தை முடிக்கிறேன். இயேசுவுக்குள்ளாக நான் விசுவாசிக்கிற சத்தியங்களை உங்களுக்கு எடுத்துக் கூறினேன். தேவனுடைய ஆசீர்வாதத்தினால் இவைகளை உங்கள் இருதயத்திலும் மனசாட்சியிலும் பதிக்க முயற்சி செய்கிறேன்.
1. நீங்கள் மரித்தவர்களாய் இருக்கிறீர்களா? அல்லது உயிருடன் இருக்கிறீர்களா?
முதலாவதாக, இத்தியானத்தை வாசிக்கிற உங்களிடம் ஒரு கேள்வியைக் கேட்கிறேன்: "நீங்கள் மரித்தவர்களாய் இருக்கிறீர்களா? அல்லது உயிருடன் இருக்கிறீர்களா?"
கிறிஸ்துவின் பிரதிநிதியாக உங்களுடைய மனசாட்சியிடம் விசாரிப்பதற்கு என்னை அனுமதியுங்கள். இரண்டு விதமான பாதைகள் மாத்திரமே இருக்கின்றன: ஒன்று குறுகியது, மற்றது விசாலமானது. நியாயத்தீர்ப்பின் நாளில் இரண்டு விதமான கூட்டத்தினர் மாத்திரமே இருப்பார்கள்: ஒரு சாரார் வலதுபுறத்திலும், மற்றொரு சாரார் இடதுபுறத்திலும் நிற்பார்கள். கிறிஸ்துவின் சபை என அறிக்கை செய்கிற மக்களிடையே இரண்டு விதமான வகுப்பார் மாத்திரமே இருப்பார்கள்; அதில் ஒரு வகுப்பாரைச் சார்ந்தவர்களாக நீங்கள் இருக்க வேண்டும். நீங்கள் எதில் இருக்கிறீர்கள்? எப்படி இருக்கிறீர்கள்? நீங்கள் உயிரோடு இருப்பவர்களில் ஒருவரா? அல்லது மரித்தவர்களில் ஒருவரா?
நான் உங்களிடம் மாத்திரம்தான் தனிப்பட்ட விதத்தில் கேட்கிறேன். மற்றவர்களையோ அல்லது உங்கள் அருகில் வசிப்பவரையோ வேறு யாரையுமோ நான் கேட்கவில்லை; எந்த தேசத்தாரையும் குறிப்பிட்டுக் கேட்கவில்லை; பிரத்தியேகமாக உங்களிடம் மாத்திரமே விசாரிக்கிறேன். நீங்கள் ஒரு தேவதூதனைப் போல இருக்கிறீர்களா என நான் கேட்கவில்லை. தாவீதைப் போலவோ அல்லது பவுலைப் போலவோ நீங்கள் இருக்கிறீர்களா என நான் கேட்கவில்லை. இயேசு கிறிஸ்துவுக்குள்ளாக நீங்கள் ஒரு புது சிருஷ்டியாக இருக்கிறீர்கள் என்பதில் திடமான நம்பிக்கை உங்களுக்கு இருக்கிறதா என்று கேட்கிறேன். நீங்கள் பழைய மனிதனைக் களைந்துபோட்டுப் புதிய மனிதனைத் தரித்திருக்கிறீர்கள் என்று நீங்கள் நம்புவதற்கான காரணங்கள் இருக்கின்றனவா எனக் கேட்கிறேன். உங்களுக்குள் ஆவிக்குரிய பிரகாரமான உண்மையான மாற்றம் நிகழ்ந்திருப்பதை எப்போதாவது உணர்ந்திருக்கிறீர்களா? ஒரே வார்த்தையில் கேட்பதானால், நீங்கள் மரித்தவரா அல்லது உயிருள்ளவரா எனக் கேட்கிறேன்.
"உயிரோடிருக்கிறதான இந்த ஒரு காரியம்தான் மற்ற அனைத்திற்கும் மதிப்பைத் தருகிறது. இது சரியாக இல்லையென்றால் உங்களுக்கு அழிவுதான்; அது நித்தியமான அழிவு. உயிர்ப்பிக்கப்படாத நிலையில், உங்களுடைய தொழில், மரியாதை, உரிமைகள், வரங்கள், கடமைகள் எல்லாமே பூஜ்ஜியம்தான். மறுபிறப்பு என்கிற அந்த முக்கியமான எண் இவைகள் அனைத்திற்கும் முன்னாக இல்லையென்றால் மற்ற சிறப்புகளுக்கு எந்த மதிப்பும் இல்லை." — ஜார்ஜ் ஸ்வின்னோக் (George Swinnock), 1660.
"நீங்கள் யாராக இருந்தாலும், ஒரு பிரபுவாக இருப்பதற்காகவோ, வீரனாவதற்காகவோ, மதிப்புக்குரியவனாவதற்காகவோ, பணபலம் மிக்கவனாவதற்காகவோ, ஞானியாவதற்காகவோ, பிறரால் புகழப்படுவதற்காகவோ, பேச்சாளனாவதற்காகவோ ஒருபோதும் இரட்சிக்கப்பட மாட்டீர்கள். கால்வினிஸ்ட், லூத்தரன், ஆர்மீனியன், அனபாப்திஸ்ட், பிரெஸ்பிட்டேரியன், சுயாதீன சபையார், புராட்டஸ்டன்ட் போன்ற ஏதேனும் ஒரு கொள்கையாளன் ஆவதற்காகவும் இரட்சிக்கப்பட மாட்டீர்கள். ஆனால் உயிர்ப்பிக்கப்பட்ட கிறிஸ்தவன் ஆவதற்காகவே நீங்கள் இரட்சிக்கப்பட வேண்டும்; இல்லையென்றால் உங்களுக்கு எந்த நம்பிக்கையும் கிடையாது." — ரிச்சர்டு பாக்ஸ்டர் (Richard Baxter), 1659.
(அ) சடங்காச்சாரங்களைச் சார்ந்திருக்காதீர்கள்: "ஞானஸ்நானத்தின் மூலமாகச் சபையில் சேர்த்துக்கொள்ளப்படுகிறோம், பரிசுத்த பந்தியின் கிருபைகளைப் பெறுகிறோம்; ஆகவே உயிரோடு இருக்கிறோம்" என்று கூறி என்னைச் சமாதானப்படுத்திவிடலாம் என நினைக்காதீர்கள். அது உங்களுக்குப் பயனளிக்காது. ஞானஸ்நானம் பெற்று, சுகபோகமாக வாழ்கிற விதவையைக் குறித்துப் பவுல், "அவள் உயிரோடே செத்தவள்" என்று குறிப்பிடுகிறார் (1 தீமோத்தேயு 5:6). மேலும் நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவும் சர்தை சபையின் தூதனிடம், "நீ உயிருள்ளவனென்று பெயர்கொண்டிருந்தும் செத்தவனாயிருக்கிறாய்" என்று சொல்லுகிறார் (வெளிப்படுத்தல் 3:1). உயிரோடு இருப்பதற்கான அடையாளத்தைக் காண்பிக்க முடியாவிட்டால், அதைப் பற்றிய வெறும் பேச்சினால் பயன் இல்லை. அது இருப்பதற்கான அடையாளத்தைக் காட்டுங்கள், நான் நம்புவேன். கிருபை என்பது வெளிச்சத்தைப் போன்றது; வெளிச்சம் எப்போதும் காணக்கூடியதாகவே இருக்கும். கிருபை என்பது உப்பைப் போன்றது; உப்பு எப்போதும் ருசியைத் தரக்கூடியது. வெளிப்படையான கனிகளால் தன்னை வெளிப்படுத்திக்கொள்ளாத ஆவியையும், மனிதர்களால் பார்க்க முடியாத நற்குணத்தையும் மிகுந்த சந்தேகத்துடன்தான் பார்க்க வேண்டியிருக்கும். ஞானஸ்நானத்தையும் திருவிருந்தையும் தவிர்த்து வேறு எதையும் உங்களுடைய ஆவிக்குரிய வாழ்க்கைக்கான ஆதாரமாக உங்களால் காண்பிக்க முடியாவிட்டால், நீங்கள் இன்னும் மரித்தவர்களாகவே இருக்கிறீர்கள்.
(ஆ) தவறான தாழ்மையைக் காட்டாதீர்கள்: "இது முடிவெடுக்க இயலாத ஒரு கேள்வி; இம்மாதிரியான விஷயத்தில் கருத்துத் தெரிவிப்பது அகங்காரம்" என்று என்னிடம் சொல்ல நினைக்காதீர்கள். அப்படிக் கூறுவது ஒரு வீணான சாக்குப்போக்கு; மேலும் அது தவறுதலான தாழ்மை. ஆவிக்குரிய வாழ்க்கை என்பது நீங்கள் நினைப்பது போல மங்கலான அல்லது சந்தேகத்துக்கிடமான ஒன்றல்ல. ஆவிக்குரிய வாழ்க்கைக்கு அடையாளங்களும் ஆதாரங்களும் உண்டு; வேதாகமத்தை நன்கு அறிந்தவர்களால் அதைப் பகுத்தறிய முடியும். "நாம் மரணத்தை விட்டு நீங்கி ஜீவனுக்குட்பட்டிருக்கிறோமென்று அறிந்திருக்கிறோம்" என்று யோவான் கூறுகிறார் (1 யோவான் 3:14). அது நிகழ்ந்த சரியான நேரமும் காலமும் வேண்டுமானால் மனிதர்களுக்கு மறைக்கப்பட்டிருக்கலாம்; ஆனால் அது நிகழ்ந்திருக்கிறதா என்கிற நிச்சயமில்லாமல் இருப்பது மிகவும் அரிது. ஒருமுறை ஸ்காட்லாந்து தேசத்தைச் சேர்ந்த ஒரு இளம்பெண் விட்ஃபீல்டு (Whitefield) என்கிற தேவபக்தனிடம் கூறியது ஒரு அழகான கருத்தாக இருந்தது. அவளுடைய இருதயம் மாற்றப்பட்டிருக்கிறதா என அவர் கேட்டார். "ஆம், ஏதோ ஒன்று மாறியிருக்கிறது என்பதை அறிவேன். அது ஒருவேளை இந்த உலகமாயிருக்கலாம், அல்லது என்னுடைய இருதயமாக இருக்கலாம்; ஆனால் ஏதோ ஒரு பெரிய மாற்றம் நிகழ்ந்திருப்பதை நான் நிச்சயமாக அறிவேன். ஏனென்றால் எல்லாமே முன்னர் இருந்தது போல இல்லை, வித்தியாசமாக இருக்கிறது" என்று அவள் கூறினாள். ஓ! உங்கள் இருதயத்தை ஆராய்வதைத் தவிர்க்காதீர்கள். "நீ பார்வையடையும்படிக்கு உன் கண்களுக்குக் கலிக்கம் போடவும் வேண்டுமென்று உனக்கு ஆலோசனை சொல்லுகிறேன்" (வெளிப்படுத்தல் 3:18). நீங்கள் உயிரோடிருக்கிறீர்களா? மரித்துப் போயிருக்கிறீர்களா?
(இ) காலதாமதம் செய்யாதீர்கள்: "எனக்குத் தெரியாது; நீங்கள் கேட்பது முக்கியமான கேள்விதான், ஆனால் மரிப்பதற்கு முன்பாக அதற்கு விடை கண்டுபிடித்துவிடுவேன் என நம்புகிறேன். தகுந்த நேரம் வாய்க்கும்போது அதைப் பற்றிச் சிந்திப்பேன், ஆனால் இப்போதைக்கு எனக்குப் பதில் தெரியாது" என்று என்னிடம் கூற நினைக்காதீர்கள். உங்களுக்குத் தெரியாது! இருந்தாலும், இந்தக் கேள்வியில்தான் மோட்சமா நரகமா என்பது தெரியப்போகிறது. நித்தியமான சந்தோஷமா அல்லது நிரந்தரமான துயரமா என்பது உங்களுடைய பதிலில் அடங்கியிருக்கிறது. உங்களுடைய உலக விஷயங்களில் நீங்கள் இப்படி நிச்சயமில்லாதவர்களாக இருக்க மாட்டீர்கள்; உலகக் காரியங்களை அவ்வளவு சுலபமாக எண்ணிவிட மாட்டீர்கள். வருங்காலத்தைக் குறித்து அதிக அக்கறை எடுத்துக்கொள்வீர்கள். எதிர்பாராமல் நடைபெறக்கூடிய நிகழ்வுகளுக்கும்கூட உங்களைத் தயார்படுத்திக்கொள்வீர்கள். உங்களுடைய உயிருக்கும் உடைமைகளுக்கும் காப்பீடு செய்துகொள்வீர்கள். அதே மாதிரியாக அழிவில்லாத உங்களுடைய ஆத்துமாவுக்காகவும் நீங்கள் ஏன் அக்கறை எடுத்துக்கொள்ளக் கூடாது?
உங்களுக்குத் தெரியாது! ஆனால் உங்களைச் சுற்றிலும் நிச்சயமற்ற தன்மைதான் நிலவுகிறது. நீங்கள் பரிதாபகரமான ஒரு புழுவைப் போன்றவர்கள்; உங்கள் சரீரம் பிரமிக்கத்தக்க அதிசயமாய் உருவாக்கப்பட்டிருக்கிறது; ஆயிரக்கணக்கான வழிகளில் உங்களுக்கு உடல்நலக் குறைவு ஏற்படலாம். அடுத்த முறை பூக்கள் மலரும் பருவத்தில், அவை ஒருவேளை உங்கள் கல்லறையின் மீது மலரலாம். உங்களுடைய எதிர்காலம் என்னவென்று உங்களுக்குத் தெரியாது. ஒரு நாள் பிறப்பிப்பதை அறிய மாட்டோம்; அப்படியிருக்கையில் ஒரு வருடத்தில் நிகழப்போகும் மாற்றங்கள் என்னவென்று தெரியாது. ஆகவே உங்கள் ஆத்துமாவைக் குறித்த விஷயத்தில் காலதாமதமின்றி ஒரு முடிவுக்கு வந்தால் என்ன?
இந்தத் தியானத்தை வாசிக்கின்ற அனைவரும் சுயபரிசோதனை செய்துகொள்வது அவசியம். கடவுளின் பார்வையில் உங்களுடைய நிலைமையின் நீள, அகல, ஆழம் என்னவென்பதை உணரும் வரைக்கும் விடாமல் ஆராய்ந்து பாருங்கள். அப்படிச் செய்யாமல் பின்வாங்கிப் போவது ஒரு தீய அடையாளமாகும்; அது ஒரு கலங்கிய மனசாட்சியினால் உருவாகிறது. அவனுக்குத் தன்னைக் குறித்தே நல்லெண்ணம் இல்லை என்பதை இது காட்டுகிறது. ஒரு கள்ள வியாபாரி தனது கணக்கு வழக்குகள் சரிபார்க்கப்படுவதை விரும்ப மாட்டான்; அது போல அவனும் இருக்கிறான். வெளிச்சத்திற்கு வர அவன் பயப்படுகிறான்.
எந்த விஷயமானாலும் அது வேலை செய்கிறதா எனப் பரிசோதித்து உறுதி செய்துகொள்ளுதலே சிறந்த ஞானம். அது போலத்தான் ஆவிக்குரிய விஷயங்களிலும் உறுதி செய்துகொள்வது அறிவுடைமை ஆகும். எதையும் சாதாரணமாக எடுத்துக்கொள்ளாதீர்கள். மற்றவர்களோடு உங்கள் நிலையை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டாம்; தேவனுடைய வார்த்தையின்படியாக உங்களை அளவிட்டுப் பாருங்கள். உங்களுடைய ஆத்துமாவைக் குறித்த தவறுதலான கணிப்பு நிரந்தரமான பிழையாக ஆகிவிடும். "மறுபடியும் பிறவாமல் போனவர்கள், தாங்கள் பிறவாமல் இருந்திருந்தாலே நலமாயிருந்திருக்கும் என ஒரு நாளிலே நிச்சயமாக விரும்புவார்கள்" என்று பழங்காலப் பக்தன் ஒருவர் கூறினார்.
இன்றைக்கே நீங்கள் அமர்ந்து இதைக்குறித்துச் சிந்தனை செய்யுங்கள். அமைதலாக உங்கள் இருதயத்தோடு பேசுங்கள். உங்களுடைய அறைக்குச் சென்று தனிமையில் சிந்தித்துப் பாருங்கள்; தேவனோடு தனிமையில் பேசுவதற்கு முயற்சி செய்யுங்கள். கேட்கப்பட்டிருக்கும் இந்தக் கேள்வியை உண்மையோடும், முழுமையாகவும், நேர்மையாகவும் எதிர்கொள்ளுங்கள். அது உங்கள் மனதைத் தொடுகிறதா? நீங்கள் உயிருள்ளோரில் ஒருவரா? அல்லது மரித்தோரில் ஒருவரா?
"உங்களுடைய நிலை சரியானதாக இருந்தால், ஆராய்ந்து பார்ப்பது உங்களுக்கு ஆறுதலைத் தரும். உங்களுடைய நிலை மோசமானதாக இருந்தால், ஆராய்ந்து பார்ப்பது ஒன்றும் நிலையை மேலும் மோசமாக்காது. மாறாக, நிலையைச் சரிப்படுத்துவதற்கு ஆராய்ந்து பார்ப்பது ஒன்றுதான் வழி; ஏனென்றால் குற்றம் உணர்த்தப்படும்போதுதான் மனமாற்றத்திற்கு வழி உண்டாகும்." — எசேக்கியேல் ஹாப்கின்ஸ் (Ezekiel Hopkins), 1680.
2. மரித்தவர்களாக இருக்கிறவர்களிடம் ஒரு வார்த்தை
அடுத்தபடியாக, ஆவியில் மரித்தவர்களாக இருக்கிறவர்களிடம் நான் மிகுந்த அன்புடன் பேசுகிறேன்.
நான் உங்களுக்கு என்ன சொல்வது? நான் என்ன சொல்ல முடியும்? நான் என்ன வார்த்தைகளைச் சொன்னால் அது உங்கள் இருதயத்தில் ஏதாவது கிரியை செய்யும்? ஒன்றை நான் கூறுகிறேன்: நான் உங்களுடைய ஆத்துமாக்களுக்காக வருந்துகிறேன்; உண்மையாகவே நான் மிகவும் வருந்துகிறேன். நீங்கள் ஒருவேளை அலட்சியமாகவும், அக்கறையில்லாமலும் இருக்கலாம். நான் சொல்வதை நீங்கள் கொஞ்சமும் பொருட்படுத்தாமல் இருக்கலாம். இந்தப் பகுதியை நீங்கள் வாசிக்க மனமில்லாமல் இருக்கலாம். ஒருவேளை இதை வாசித்த பின்னர் அதை அலட்சியம் செய்துவிட்டு உலகிற்குத் திரும்பலாம். ஆனால் அதனால் நான் உங்களுக்காகப் படுகிற வேதனை மாறிவிடாது. உங்களுக்காக நீங்கள் சிறிதளவேனும் துக்கப்படாவிட்டாலும், எனது துக்கத்தைத் தடுத்து நிறுத்த உங்களால் முடியாது.
வாலிப வயதுள்ள ஒருவன் இச்சைகளிலும் மோகங்களிலும் சிக்கிக்கொண்டு, தனது சரீரத்தின் ஆரோக்கியத்தைக் கெடுத்துக்கொண்டிருக்கிறவனாகவும், தனது முதிர்வயதுக்கெனக் கசப்புகளை விதைத்துக்கொண்டிருக்கிறவனாகவும் இருப்பதைக் காணும்போது நான் வேதனைப்படாமல் இருப்பேனா? ஆனால் அதைவிட அதிகமாக நான் உங்களுடைய ஆத்துமாவைக் குறித்து வேதனைப்படுவேன்.
மனிதர்கள் தங்களுடைய பரம்பரைச் சொத்துக்களையும் ஆஸ்திகளையும் அற்பத்தனமான விஷயங்களில் செலவழித்து வீணாக்குவதைக் காணும்போது வேதனைப்படுகிறேன். ஆனால் அதைக் காட்டிலும் அதிகமாக உங்களுடைய ஆத்துமாக்களுக்காக நான் துக்கப்படுவேன்.
மதுபானங்களுக்கும் போதைப் பொருட்களுக்கும் அடிமைப்பட்டிருப்பவர்கள், துளித்துளியாக விஷத்தை அருந்தி, கொஞ்சம் கொஞ்சமாகத் தங்களுக்குத் தாங்களே கல்லறையை வெட்டிக்கொள்பவர்களாய் இருக்கிறார்கள். அவர்களைக் காணும்போது நான் வேதனைப்படுகிறேன்; ஆனால் உங்களுடைய ஆத்துமாக்களுக்காக அதைவிட அதிகமாகத் துக்கப்படுகிறேன்.
பொன்னான வாய்ப்புகள் தூக்கியெறியப்படும்போதும், கிறிஸ்து நிராகரிக்கப்படும்போதும், அவருடைய பரிகார பலியின் இரத்தம் கால்களின் கீழே மிதித்துப் போடப்படும்போதும், பரிசுத்த ஆவியானவர் எதிர்க்கப்படும்போதும், மோட்சம் அலட்சியப்படுத்தப்பட்டுப் புறக்கணிக்கப்படும்போதும், தேவனுக்குக் கொடுக்க வேண்டிய இடத்தை உலகத்திற்குக் கொடுக்கும்போதும் நான் மிகவும் வேதனைப்படுகிறேன்.
நீங்கள் தவறவிட்டுக்கொண்டிருக்கிற நிகழ்காலச் சந்தோஷங்களை எண்ணி நான் உங்களுக்காக வருந்துகிறேன். சமாதானத்தையும் ஆறுதலையும் விலக்கிப் போட்டுக்கொண்டிருக்கிறீர்கள்; உங்களுக்காகத் துக்கத்தையே சேமித்துக்கொண்டிருக்கிறீர்கள்; வருங்காலத்தில் கசப்பான நிலையில் விழித்தெழப் போகிறீர்கள். இவைகளை நினைத்து உங்களுக்காக நான் மிகவும் வருந்துகிறேன்.
ஆம்! நான் வருத்தப்படத்தான் வேண்டும்; வேறு வழியில்லை. இறந்த உடல்களுக்கு முன்பாகத் துக்கப்பட்டால் போதுமானது என மற்றவர்கள் நினைப்பார்கள். ஆனால் என்னைப் பொறுத்தமட்டில், மரித்துப் போயிருக்கும் ஆத்துமாக்களுக்காகத் துக்கப்பட வேண்டியது மிகவும் அவசியம் என்று நினைப்பேன். போதகர்களாகிய நாங்கள் மிகவும் தீவிரமாகவும் கடுமையாகவும் இருப்பதாக உலக மக்கள் சில வேளைகளில் குறை கூறுகிறார்கள். ஆனால் உண்மையில் உலகத்தை உற்று நோக்கும்போது, எங்களால் சிறிதளவாவது மகிழ்ச்சியாக இருக்க முடியுமா என்கிற கேள்வி எழுகிறது.
பாவத்தில் மரித்தவர்களாய் இருக்கிற உங்களிடம் இன்று கேட்கிறேன்: நீங்கள் ஏன் சாக வேண்டும்? பாவத்தின் சம்பளம் என்ன இனிமையாகவும் நன்மையாகவுமா இருக்கிறது? அதை உங்களால் விட்டுவிட முடியாதா? உலகத்தை வெறுக்க முடியாத அளவுக்கு அது என்ன அவ்வளவு திருப்தியைத் தருகிறதா? சாத்தானை விட்டுப் பிரிய முடியாத அளவுக்கு அவனுக்குச் செய்கின்ற ஊழியம் அவ்வளவு சந்தோஷத்தை அளிக்கிறதா? மோட்சத்தைத் தேடத் தகுதியில்லாத அளவுக்கு அது அவ்வளவு பரிதாபகரமாக இருக்கிறதா? உங்கள் ஆத்துமா இரட்சிப்பை அடைவதற்காகப் போராடாதபடிக்கு அது என்ன அவ்வளவு மதிப்பில்லாததா? மனந்திரும்புங்கள்! காலம் கடந்துபோவதற்கு முன்பாக மனந்திரும்புங்கள்! நீங்கள் அழிந்துபோவதை தேவன் விரும்பவில்லை. "சாகிறவனுடைய சாவை நான் விரும்புகிறதில்லை என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்" (எசேக்கியேல் 18:32). இயேசு உங்களை நேசிக்கிறார்; உங்களுடைய அறிவீனத்தைக் கண்டு மனம் வருந்துகிறார். பொல்லாத எருசலேமைப் பார்த்து அவர் கண்ணீர் விடுகிறார்: "நான் எத்தனை தரமோ உன் பிள்ளைகளைக் கூட்டிச் சேர்த்துக்கொள்ள மனதாயிருந்தேன்; உங்களுக்கோ மனதில்லாமல் போயிற்று" (மத்தேயு 23:37) என்கிறார். நீங்கள் அழிந்தால் அந்த இரத்தப்பழி நிச்சயமாக உங்கள் தலை மீதுதான் இருக்கும். ஆதலால், "தூங்குகிற நீ விழித்து, மரித்தோரை விட்டு எழுந்திரு; அப்பொழுது கிறிஸ்து உன்னைப் பிரகாசிப்பிப்பார்" (எபேசியர் 5:14).
உண்மையாக மனந்திரும்பினதைக் குறித்து எந்த மனிதனும் ஒருக்காலும் மனம் வருந்தியதில்லை என்பதே உண்மை. ஆயிரக்கணக்கானவர்கள் தங்களுடைய கடைசிக் காலத்தில், தாங்கள் "தேவனுக்கென்று மிகக் குறைவாகச் சேவை செய்ததாக" வருந்தியிருக்கிறார்கள். ஆனால் யாருமே இவ்வுலகை விட்டுப் போகும்போது, "எங்கள் ஆத்துமாவைக் குறித்து அளவுக்கதிகமாகக் கவலைப்பட்டுவிட்டோம்" என வருந்தியதில்லை. ஜீவனுக்குப் போகின்ற வழி குறுகலானது; அது ஒருவழிப் பாதை போன்றது. அதனுள் பிரவேசித்த எவரும் திரும்பி வந்து, அது வீணான வழி என்று கூறியதில்லை. உலகத்தின் வழியோ விசாலமான பாதை; ஆனால் அதில் சென்றுகொண்டிருந்த பல்லாயிரக்கணக்கானவர்கள் அதைக் கைவிட்டிருக்கிறார்கள்; அது வருத்தங்களும் ஏமாற்றங்களும் நிறைந்திருக்கிற வழி என்று சாட்சி கூறியிருக்கிறார்கள்.
3. உயிரோடு இருக்கிறவர்களிடம் ஒரு வார்த்தை
உயிரோடு இருக்கிறவர்களிடம் இப்போது பேசுகிறேன். நீங்கள் உண்மையில் தேவனுக்குள்ளாக உயிருடன் இருக்கிறீர்களா? "நான் மரித்தவனாய் இருந்தேன், மீண்டும் உயிர் பெற்றேன்; நான் குருடனாய் இருந்தேன், இப்போது பார்க்கிறேன்" என்று உங்களால் உண்மையாகக் கூற முடியுமா? அப்படி இருந்தால் இந்தப் புத்திமதிகளைக் கேளுங்கள்; உங்கள் இருதயத்தில் ஞானம் அடையுங்கள்.
உங்களுடைய செயல்களால் நிரூபியுங்கள்: நீங்கள் உயிரோடு இருக்கிறீர்களா? அப்படியானால் அதை உங்களுடைய செயல்களால் நிரூபியுங்கள். நிலையான சாட்சியாக இருங்கள். உங்களுடைய வார்த்தைகள், செய்கைகள், வழிகள், குணங்கள் ஆகிய அனைத்தும் ஒன்றையே பிரதிபலிக்கட்டும். ஒரு ஆமையைப் போல உங்கள் வாழ்க்கை மந்தமானதாக இருக்க வேண்டாம்; குதித்து ஓடும் மானைப் போலவோ அல்லது பறக்கும் பறவையைப் போலவோ அது உற்சாகம் நிறைந்ததாக இருக்கட்டும். உங்களுடைய நற்குணங்கள் உங்கள் வாழ்க்கையில் ஒளிவீசிப் பிரகாசிக்கட்டும். உங்கள் அருகாமையில் உள்ளவர்கள், உங்கள் வாழ்க்கையில் பரிசுத்த ஆவியானவர் வசிப்பதை அறிந்துகொள்ளட்டும். உங்களுடைய வெளிச்சம் மங்கலாகவோ, அணைந்து அணைந்து எரிவதாகவோ, நிச்சயமில்லாததாகவோ இருக்க வேண்டாம். பலிபீடத்தின் மீது எப்போதும் அணையாமல் எரிகின்ற நெருப்பைப் போல அது மங்காமல் எரியட்டும். மரியாளின் விலையேறப்பெற்ற தைலத்தைப் போல, உங்களுடைய பக்தியின் வாசனை நீங்கள் இருக்கும் இடத்தையெல்லாம் நிரப்பட்டும். மிகத் தெளிவாகவும் விளக்கமாகவும் எழுதப்பட்ட கிறிஸ்துவின் நிருபமாக வாழுங்கள்; உங்களைச் சந்திக்கிறவர்களெல்லாம் படித்துக்கொள்ளும் விதமாக இருங்கள்.
உங்களுடைய கிறிஸ்தவம் குறையில்லாததாக இருக்கட்டும். உங்கள் கண்கள் ஒன்றையே நோக்கட்டும்; உங்கள் இருதயம் முழுமையாக விளங்கட்டும்; உங்கள் நடக்கை நேர்மையாக இருக்கட்டும். உங்களைச் சந்திக்கிறவர்களுக்கு நீங்கள் யாருடையவர் என்பதும், யாரை நீங்கள் சேவிக்கிறீர்கள் என்பதும் சந்தேகத்துக்கிடமில்லாமல் தெரியட்டும். நாம் ஆவியானவரால் உயிர்ப்பிக்கப்பட்டிருந்தால் யாருக்கும் அந்தச் சந்தேகம் வராது. நமது சம்பாஷணைகள் நாம் "பரம தேசத்தை நாடிப் போகிறவர்கள்" என்பதைத் தெளிவாகக் காண்பிக்க வேண்டும் (எபிரெயர் 11:16). மோசமாக வரையப்பட்ட ஒரு படத்திற்கு விளக்கம் சொல்வதைப் போல, நீங்கள் ஒரு கிறிஸ்தவர்தான் என்று விளக்க வேண்டிய அவசியம் இல்லாதபடிக்குப் பார்த்துக்கொள்ளுங்கள். நாம் மந்தமானவர்களாகவும் உணர்வற்றவர்களாகவும் இருக்கக் கூடாது. மக்கள் நம் அருகில் வந்து உற்றுப் பார்த்து, "இவர் மரித்தவரா அல்லது உயிரோடுதான் இருக்கிறாரா?" எனக் கேட்கும் வகையில் நாம் இருக்கக் கூடாது.
உங்களுடைய வளர்ச்சியின் மூலமாக நிரூபியுங்கள்: நீங்கள் உயிரோடே இருக்கிறீர்களா? அப்படியானால் அதை உங்களுடைய வளர்ச்சியின் மூலமாக நிரூபியுங்கள். உங்களுக்குள்ளாக ஏற்படுகின்ற அந்த மகத்தான வளர்ச்சி ஒவ்வொரு ஆண்டும் தெளிவாகத் தெரியட்டும். யோசுவாவின் காலத்தில் சூரியன் அஸ்தமிக்காமல் நடுவானத்தில் தரித்து நின்றதைப் போலவோ, அல்லது எசேக்கியாவின் காலத்தில் சூரியன் பின்னிட்டுச் சென்றதைப் போலவோ ஆகாமல், உங்கள் வாழ்நாளின் கடைசி நாள் வரைக்கும் உங்களுடைய வெளிச்சம் அதிகமதிகமாகப் பிரகாசிக்கட்டும். ஆண்டவரால் புதுப்பிக்கப்பட்டுள்ள நீங்கள் அவருடைய சாயலாக வளர்ந்து வருவது மாதந்தோறும் தெளிவாகத் தெரியட்டும். அதிக நாட்களாக உபயோகித்த நாணயத்தின் வடிவமும் எழுத்துக்களும் தேய்ந்துபோய்க் காணப்படுவதைப் போல அது ஆகிவிட வேண்டாம். நாளாக நாளாக உங்களுடைய ராஜாவின் சாயல் உங்களிடத்தில் தெளிவாகவும் முழுமையாகவும் காணப்படட்டும்.
அசைவில்லாமல் நின்றுபோகும் பக்தியில் எனக்கு நம்பிக்கை இல்லை. கிறிஸ்தவன் ஒரு மிருகத்தைப் போன்றவன் அல்ல; மிருகம் ஒரு குறிப்பிட்ட வயது வரைக்கும் வளர்ச்சி அடைந்து அதன் பிறகு வளர்வதில் நின்றுபோகும். அவன் ஒரு மரத்தைப் போல வளர வேண்டும் என நான் நினைக்கிறேன்; தன் வாழ்நாள் முழுவதும் அது பலத்திலும் உறுதியிலும் அதிகரிப்பது போலக் கிறிஸ்தவனும் இருக்க வேண்டும். பேதுரு கூறின வார்த்தைகளை நினைவில் வையுங்கள்: "உங்கள் விசுவாசத்தோடே தைரியத்தையும், தைரியத்தோடே ஞானத்தையும், ஞானத்தோடே இச்சையடக்கத்தையும், இச்சையடக்கத்தோடே பொறுமையையும், பொறுமையோடே தேவபக்தியையும், தேவபக்தியோடே சகோதர சிநேகத்தையும், சகோதர சிநேகத்தோடே அன்பையும் கூட்டி வழங்குங்கள்" (2 பேதுரு 1:5-7). இவ்விதமாகத்தான் ஒரு கிறிஸ்தவன் உபயோகமுள்ளவனாய் இருக்க முடியும். உங்களிடத்தில் தொடர்ச்சியான முன்னேற்றத்தைக் காணும்போதுதான் மக்கள் நீங்கள் ஆர்வத்தோடு இருப்பதாக நம்புவார்கள்; அப்போது ஒருவேளை உங்களுடைய வழியில் வருவதற்கு ஈர்க்கப்படுவார்கள். வளர்ச்சி அடைவது இரட்சிப்பின் நிச்சயத்தைப் பெறுவதற்கான ஒரு வழியாகும்: "இவ்விதமாய், நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவினுடைய நித்திய ராஜ்ஜியத்திற்குட்படும் பிரவேசம் உங்களுக்குப் பூரணமாய் அளிக்கப்படும்" (2 பேதுரு 1:11). பிரியமானவர்களே, உங்களுடைய பக்தியில் நீங்கள் எப்போதும் பயனுள்ளவர்களாகவும் சந்தோஷமுள்ளவர்களாகவும் இருக்க விரும்பினால், உங்கள் வாழ்நாளின் கடைசி மட்டும் உங்களுடைய குறிக்கோள் "முன்னேற்றம், முன்னேற்றம்" என்பதாக இருக்கட்டும்.
"மக்கள் வார்த்தைகளைவிடச் செயல்களை அதிகமாகக் கவனிக்கிறார்கள்." — இராபர்ட் லெய்டன் (Robert Leighton).
இந்தத் தியானத்தை வாசிக்கிற விசுவாசிகளே, இதில் நான் கூறுகிறவைகளை உங்களுக்கும் எனக்கும் சேர்த்துதான் கூறுகிறேன் என்பதை நினைவில் வையுங்கள். கிறிஸ்தவர்களின் ஆவிக்குரிய வாழ்க்கை வெளிப்படையாகத் தெரிய வேண்டும். நமது விளக்குகள் தூண்டப்பட்டிருக்க வேண்டும்; அவைகள் மங்கலாக எரியக் கூடாது. உலகத்திலிருந்து நாம் பிரிந்து வாழ்கிறோம் என்பது தெளிவாகத் தெரிய வேண்டும்; தேவனோடு நாம் நடக்கிறோம் என்பது தெரிய வேண்டும். நம்மில் அநேகர் லோத்தைப் போலத் தாமதித்துக்கொண்டிருக்கிறோம்; அல்லது ரூபன், காத், மனாசே கோத்திரத்தாரைப் போல் விளிம்பு நிலையிலேயே இருக்கிறோம்; அல்லது நமது ஆவிக்குரிய பாரம்பரியம் எத்தகையது என்பதை வெளிப்படுத்த முடியாதவர்களாக, எஸ்ராவின் காலத்தில் வாழ்ந்த யூதரைப் போல அந்நியரோடு கலந்து உறவாடி வருகிறோம். அப்படி இருக்கக் கூடாது; நாம் எழுந்திருந்து செயலாற்றுவோமாக. நாம் ஆவிக்குள்ளானவர்களாக இருந்தால், ஆவியின்படியே நடக்கக்கடவோம். நம்மில் உண்மையிலேயே ஜீவன் இருக்குமானால், அதை வெளிப்படுத்தக்கடவோம்.
உலகம் இப்போது இருக்கிற நிலையில் நாம் செயலாற்ற வேண்டியது அவசியமாக இருக்கிறது. கடைசி நாட்கள் நம் மீது வந்துவிட்டன. உலகத்தின் ராஜ்ஜியங்கள் பெலவீனமாகின்றன, விழுகின்றன, உடைந்து நொறுங்கிப் போகின்றன (ஏசாயா 24:19). எப்போதும் அழியாத, மகிமையுள்ள ஒரு ராஜ்ஜியம் நெருங்கி வந்துகொண்டிருக்கிறது; அதனுடைய ராஜாவே சமீபமாக வந்துவிட்டார். அவருடைய பரிசுத்தவான்கள் என்ன செய்கிறார்கள் என்று இவ்வுலகத்தின் மக்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். தேவன் தமது அற்புதமான திட்டத்தின்படியாக, "என் பக்கத்தில் இருப்பது யார்? என்னோடு இருப்பவர் யார்?" என்று நம்மைப் பார்த்துக் கேட்கிறார். நாமும் ஆபிரகாமைப் போலவே, "இதோ, நான் இருக்கிறேன் ஆண்டவரே!" என்று சொல்வதற்குத் தயாராக இருக்க வேண்டும் (ஆதியாகமம் 22:1).
"ஆ! அதெல்லாம் பழங்காலத்துச் சம்பவங்கள். அவை தைரியமான வார்த்தைகள், நாங்கள் அதை அறிவோம். ஆனால் நாங்களோ பெலவீனர்கள்; நன்மையானவைகளைச் சிந்திக்கவோ செய்யவோ சக்தி இல்லாதவர்கள்; எங்களால் எதுவும் செய்ய முடியாது" என்று ஒருவேளை நீங்கள் சொல்லுவீர்கள். விசுவாசிகளே, நான் கூறுவதைக் கேளுங்கள். உங்கள் பெலவீனத்திற்கு எது காரணம்? ஜீவ ஊற்றை நீங்கள் மிகவும் குறைவாக உபயோகிப்பதுதானே? உங்களுடைய பழைய அனுபவங்களிலேயே இருந்துகொண்டு, தினசரி மன்னாவைப் புதிதாகச் சேகரித்துக்கொள்ளாமல் இருப்பதால்தானே? கிறிஸ்துவிடம் தினமும் கிட்டிச் சேர்ந்து புதிய பெலனைப் பெற்றுக்கொள்ளாமல் இருப்பதால்தானே? அவர் உங்களுக்காகத் தேற்றரவாளனை விட்டுச் சென்றிருக்கிறார். அவரிடம் வேண்டுகிறவர்களுக்கு "அவர் அதிகமான கிருபையை அளிக்கிறார்" (யாக்கோபு 4:6). "உங்களுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும்" அவர் வந்தார் (யோவான் 10:10). "உன் வாயை விரிவாய்த் திற, நான் அதை நிரப்புவேன்" என்று இன்றைக்கு அவர் உங்களிடம் கூறுகிறார் (சங்கீதம் 81:10).
இந்தத் தியானத்தை வாசிக்கின்ற விசுவாசிகளே! உங்களுடைய ஆவிக்குரிய வாழ்க்கை ஆரோக்கியமாகவும் துடிப்பாகவும் இருக்க வேண்டுமானால், நீங்கள் தைரியமாகக் கிருபாசனத்தின் அருகில் வர வேண்டும். பின்வாங்கும் ஆவியை நீங்கள் விட்டுவிட வேண்டும். அவருடைய வார்த்தைகளை நம்புவதற்குத் தயங்கக் கூடாது. நீங்கள் பரிதாபகரமான பாவிதான், அதில் சந்தேகமில்லை; அதை ஆண்டவர் அறிவார். அவர் நீங்கள் பெற்றுக்கொள்வதற்காகப் பெலனை வைத்திருக்கிறார்; ஆனால் நீங்களோ அதனால் ஈர்க்கப்படவில்லை. நீங்கள் கேட்காதபடியினால் பெலனைப் பெற்றுக்கொள்ளாமல் இருக்கிறீர்கள். உங்களுடைய பெலவீனத்திற்குக் காரணம் உங்களுடைய விசுவாசமும் ஜெபமும் மிகவும் குறைவாக இருப்பதே. ஜீவ ஊற்று திறந்து வைக்கப்பட்டிருக்கிறது, ஆனால் நீங்களோ அதிலிருந்து சில துளிகள்தான் பருகுகிறீர்கள். ஜீவ அப்பம் உங்களுக்கு முன்பாக வைக்கப்பட்டிருக்கிறது, ஆனால் நீங்களோ அதிலிருந்து சில துணிக்கைகளை மாத்திரம் உண்கிறீர்கள். பரலோகத்தின் பொக்கிஷங்கள் உங்களுக்கு முன்பாகத் திறந்து வைக்கப்பட்டிருக்கின்றன, ஆனால் நீங்களோ அதிலிருந்து சில காசுகளை மாத்திரம் பொறுக்கிக்கொள்கிறீர்கள். "அற்ப விசுவாசிகளே, ஏன் சந்தேகப்படுகிறீர்கள்?" (மத்தேயு 14:31).
உங்களுடைய பாக்கியங்களை அறிந்துகொள்ளும்படியாக விழித்து எழுங்கள்! இனி உறங்க வேண்டாம்; எழுந்திருங்கள். கிருபையின் சிங்காசனம் உங்களுக்கு முன்பாக வைக்கப்பட்டுள்ள வரையில் இனி என்னிடம் ஆவிக்குரிய பசி என்றோ, தாகம் என்றோ, குறைச்சல் என்றோ சொல்லாதீர்கள். அதற்குப் பதிலாக, பாவியாகக் கிருபாசனத்தண்டையில் வர மனமில்லாத பெருமையுள்ளவர்கள் என்பதை ஒத்துக்கொள்ளுங்கள்; அதிகமான கிருபையைப் பெற்றுக்கொள்வதற்கு முயற்சிக்காத சோம்பேறிகள் எனச் சொல்லுங்கள்.
உங்களைச் சுற்றிக்கொண்டிருக்கிற பெருமை என்னும் கந்தை ஆடைகளைக் கழற்றி எறியுங்கள். சோம்பேறித்தனம் என்கிற எகிப்திய ஆடையைக் களைந்துபோடுங்கள்; அது செங்கடலைத் தாண்டி வரக் கூடாது. உங்கள் நாவை முடக்கிக் கட்டிப் போட்டிருக்கின்ற அவிசுவாசத்தை விலக்கிப் போடுங்கள். உங்களை நீங்களே சிரமப்படுத்திக்கொண்டிருக்கிறீர்கள். "தைரியமாய்க் கிருபாசனத்தண்டையிலே சேரக்கடவோம்" (எபிரெயர் 4:16). அங்கே கொடுப்பதற்காகப் பிதா எப்பொழுதும் காத்துக்கொண்டிருக்கிறார். அவர் அருகில் இயேசு எப்பொழுதும் பரிந்து பேசுகிறவராக உட்கார்ந்திருக்கிறார். நீங்கள் எவ்வளவு பெரிய பாவியாக இருந்தாலும், மகா பிரதான ஆசாரியனாகிய இயேசுவின் மூலமாக வருவதானால் தைரியமாகப் பிதாவிடம் வரலாம். தைரியமாக வாருங்கள்; பெரிதானவைகளைக் கேளுங்கள்; அதிகமான பதில்களைப் பெற்றுக்கொள்வீர்கள். ஆறாக ஓடும் இரக்கத்தையும், நீரோடையைப் போல வல்லமையாகப் பாய்கின்ற கிருபையையும் பெலத்தையும் பெறுவீர்கள். தைரியமாக வாருங்கள்; நீங்கள் நினைப்பதற்கும் கேட்பதற்கும் மேலான ஆசீர்வாதங்களைப் பெறுவீர்கள். "இதுவரைக்கும் நீங்கள் என் நாமத்தினாலே ஒன்றும் கேட்கவில்லை; கேளுங்கள், அப்பொழுது உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படி பெற்றுக்கொள்வீர்கள்" (யோவான் 16:24).
நாம் மரித்தவர்களாய் இராமல் உயிரோடு இருப்பவர்களாய் இருந்தால், நாம் யாருடையவர்கள் என்பதை மக்கள் அறிந்துகொள்ளத்தக்கதாக வாழ்வதற்கு முயற்சி செய்வோமாக. நாம் வாழும் காலத்தில் கர்த்தருக்கென்று வாழ்வோம். நாம் மரிக்கும்போது, நீதிமான் மரிப்பது போல மரிப்போமாக. ஆண்டவராகிய இயேசு வரும்போது நாம் ஆயத்த நிலையில் இருப்போமாக; "அவர் வருகையில் அவருக்கு முன்பாக வெட்கப்பட்டுப் போகாமல்" இருப்போமாக (1 யோவான் 2:28). ஆனால் எல்லாவற்றிற்கும் மேலாக—நாம் உயிருடனே இருக்கிறோமா? அல்லது மரித்தவர்களாய் இருக்கிறோமா? இதுதான் பெரிய கேள்வி!
"அக்கிரமங்களினாலும் பாவங்களினாலும் மரித்தவர்களாயிருந்த உங்களை உயிர்ப்பித்தார்." — எபேசியர் 2:1
இந்தத் தியானத்தின் தலைப்பில் கேட்கப்பட்டிருக்கும் கேள்வி மிகுந்த சிந்தனைக்குரியது. நீங்கள் எல்லோரும் இந்தத் தியானத்தில் சொல்லப்பட்டிருப்பவைகளை நன்றாகக் கவனித்துப் பார்த்து, சிந்தித்து அறியுங்கள் என உங்களுக்குப் புத்திமதி கூறுகிறேன். உங்கள் இருதயத்தை ஆராய்ந்து பாருங்கள். அதற்கு விடை காணாமல் இந்தப் புத்தகத்தைக் கீழே வைக்காதீர்கள். நீங்கள் உயிரோடிருப்பவர்களில் ஒருவரா? அல்லது மரித்தோரில் ஒருவரா?
அதற்கான விடையைக் காண நான் உங்களுக்கு உதவப் போகிறேன். கவனித்துக் கேளுங்கள். இதிலுள்ள காரியங்களை நான் விவரிக்கும்போது அதைக் கருத்தோடு கவனியுங்கள். இதைக்குறித்து வேதாகமத்தில் தேவன் என்ன சொல்லியிருக்கிறார் என்பதை உங்களுக்குக் காண்பிக்கப் போகிறேன். நான் கடினமான சில காரியங்களைச் சொல்ல வேண்டியிருக்கலாம். உங்களை வெறுப்பதால் அல்ல, உங்களை நேசிப்பதாலேயே அவைகளை உங்களுக்குக் கூறுகிறேன். நீங்கள் இரட்சிப்படைய வேண்டுமென நான் விரும்புவதால் அவைகளை எழுதுகிறேன். உண்மையை முழுவதுமாகச் சொல்பவனே சிறந்த நண்பன் ஆவான்.
முதலாவதாக நான் சொல்லப் போவது, சுபாவத்தின்படி நாம் எப்படிப்பட்டவர்கள் என்பதே. நாம் ஆவிக்குரிய பிரகாரமாக மரித்தவர்கள்.
"மரித்தவன்" என்பது ஒரு கடினமான வார்த்தைதான். ஆனால் நான் இதை உருவாக்கவுமில்லை, அது என் சொந்தக் கண்டுபிடிப்பும் அல்ல. அது எபேசிய சபையார் முன்னர் இருந்த நிலையைக் குறித்து எழுதும்படியாக பரிசுத்த ஆவியானவர் பவுலுக்குக் கற்பித்த வார்த்தையாகும்: "அக்கிரமங்களினாலும் பாவங்களினாலும் மரித்தவர்களாயிருந்த உங்களை உயிர்ப்பித்தார்." கெட்ட குமாரனைப் பற்றிய உவமையில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவும் இந்த வார்த்தையை உபயோகித்திருக்கிறார்: "என் குமாரனாகிய இவன் மரித்தான், திரும்பவும் உயிர்த்தான்" (லூக்கா 15:24, 32). பவுல் தீமோத்தேயுவுக்கு எழுதின முதலாம் நிருபத்திலும் இந்த வார்த்தையைக் காண்பீர்கள்: "சுகபோகமாய் வாழ்கிறவள் உயிரோடே செத்தவள்" (1 தீமோத்தேயு 5:6). எழுதப்பட்டிருக்கும் தேவனுடைய வார்த்தையைவிட அழிவுக்குரிய மனிதன் அதிக ஞானவானா? வேதாகமத்தில் காணப்படும் வார்த்தைகளுக்கு அதிகமாகவோ குறைவாகவோ நான் கூறாதபடிக்கு எச்சரிக்கையாய் இருக்க வேண்டாமா?
"மரித்தவன்" என்பது மனிதன் விரும்பாத வார்த்தை. அதை ஏற்றுக்கொள்ள அநேகமாக யாரும் விரும்புவதில்லை. தனது ஆத்துமாவின் வியாதிப்பட்ட நிலையை முழுவதுமாக உணர்ந்துகொள்வதை அவன் விரும்புவதில்லை. அது எத்தகைய ஆபத்தான நிலையில் இருக்கிறது என்பதைக் காணாதபடிக்கு அவன் தன் கண்களை மூடிக்கொள்கிறான். மனிதனுடைய இயற்கை சுபாவத்தைக் குறித்துப் பெரும்பாலான மனிதர்களின் கருத்து என்னவென்றால், "மனிதன் எந்த அளவுக்கு இருக்க வேண்டுமோ அந்த அளவிற்கு இல்லை; அவன் கவனக்குறைவானவன், உறுதியற்றவன், உல்லாசத்தை விரும்புபவன், அடங்காதவன், எதிலும் ஆழ்ந்த சிந்தனை இல்லாதவன் என்று வேண்டுமானால் கூறிக்கொள்ளுங்கள். ஆனால் அவன் மரித்த நிலையில் இருக்கிறான் என்று மட்டும் சொல்லாதீர்கள்" என்பார்கள். அப்படிக் கூறுவது அளவுக்கதிகமானது என்பார்கள். அத்தகைய எண்ணம் இடறுதலின் கல்லாகவும், விழுவதற்கேதுவான கன்மலையுமாய் இருக்கிறது என்பார்கள்.
"நமது வியாதியின் தன்மையை நாம் முழுவதுமாகப் புரிந்துகொள்ளாததால்தான் நாம் குணமடையாமல் இருக்கிறோம். நமது நிலைமை எவ்வளவு மோசமாக இருக்கிறதென்பதை அறியாதவர்களாய் இருப்பதுதான் நாம் சரியாக இல்லாமலிருப்பதற்குக் காரணம்." — அஷ்ஷர் (Ussher) என்கிற பரிசுத்தவானின் பிரசங்கத்திலிருந்து, 1650.
ஆனால் நாம் எவ்வித பக்தியை விரும்புகிறோம் என்பது அதிக முக்கியம் அல்ல. வேதாகமத்தில் என்ன எழுதப்பட்டுள்ளது? கர்த்தர் என்ன சொல்லுகிறார்? என்பதே நாம் கேட்க வேண்டிய முக்கியமான கேள்வி. தேவனுடைய நினைவுகள் மனுஷனுடைய நினைவுகள் அல்ல; தேவனுடைய வார்த்தைகள் மனுஷனுடைய வார்த்தைகள் அல்ல. உலகில் வாழுகின்ற ஒவ்வொரு மனிதனும், அவன் உண்மையான, முழுமையான, தீவிரமான கிறிஸ்தவனாக இல்லாதபட்சத்தில், ஆவிக்குரிய பிரகாரமாகச் செத்தவனே. அவன் உயர்ந்தவனோ அல்லது தாழ்ந்தவனோ, ஏழையோ அல்லது பணக்காரனோ, வயதானவனோ அல்லது இளைஞனோ, எந்த நிலையில் இருந்தாலும் அவன் ஆவிக்குரிய பிரகாரம் மரித்தவன்.
இந்த விஷயத்திலும் கர்த்தருடைய வார்த்தை கூறுவதுதான் மிகவும் சரியானது. மனிதனின் நிலையைக் குறித்து மிகச் சரியாகவும், மிகவும் துல்லியமாகவும், மிகவும் உண்மையாகவும் வேதாகமத்தில் கூறப்பட்டிருக்கிறது. இதிலுள்ள உண்மைத்தன்மையைத் தகுந்த காரணங்களோடு நான் உங்களுக்கு விளக்கிச் சொல்லப் போகிறேன்.
யோசேப்பு தன் தகப்பனாகிய யாக்கோபின் மீது விழுந்து அழுதுகொண்டிருப்பதைப் பார்த்தால் நீங்கள் என்ன சொல்லுவீர்கள்? "யோசேப்பு தன் தகப்பனுடைய முகத்தின்மேல் விழுந்து அழுது, அவனை முத்தஞ்செய்தான்" (ஆதியாகமம் 50:1). ஆனால் அதற்கு யாக்கோபிடமிருந்து எந்தப் பதிலும் வரவில்லை. யாக்கோபின் அந்த வயதான முகம் மௌனமாக, அசைவற்று, அமைதியாக இருந்தது. அதற்கான காரணத்தை நீங்கள் நிச்சயம் யூகித்திருப்பீர்கள். யாக்கோபு மரித்துப் போய்விட்டார்.
கிபியாவிலே இராத்தங்குவதற்காக லேவியன் ஒருவன் தன் மறுமனையாட்டியோடு அங்கு சென்றான். காலையிலே வீட்டு வாசலுக்கு முன்பாக விழுந்து கிடந்த அவளை நோக்கி, "எழுந்திரு, போவோம்" என்று சொன்னான் (நியாயாதிபதிகள் 19:28). அதற்கு அவள் பதில் ஒன்றும் கூறவில்லை. அங்கே அவள் அசையாமல், விறைப்பாக, சில்லிட்டுப் போய்க் கிடந்தாள். அதன் காரணம் உங்களுக்குத் தெரியும். ஆம், அவள் மரித்துப் போயிருந்தாள்.
கில்போவா மலையிலே சவுலின் அருகில் சென்று அவருடைய ராஜ அணிகலன்களை ஒரு அமலேக்கிய வாலிபன் உருவி எடுக்கும் காட்சியை நீங்கள் கண்டால் என்ன நினைப்பீர்கள்? "அவர் தலையின்மேல் இருந்த முடியையும், அவர் புயத்தில் இருந்த அஸ்தகடகத்தையும் எடுத்துக்கொண்டான்" (2 சாமுவேல் 1:10). அவன் எடுக்கும்போது சவுலிடமிருந்து எதிர்ப்பு ஒன்றும் கிளம்பவில்லை. கம்பீரமான அந்த முகத்தின் ஒரு தசையும் அசையவில்லை; தடுப்பதற்கு ஒரு விரலும் எழவில்லை. ஏன்? சவுல் மரித்துப் போயிருந்தார்.
நாயீன் ஊரின் வாசலிலே அந்த விதவையின் மகனை நீங்கள் சந்தித்திருந்தால் என்ன நினைப்பீர்கள்? அவன் பாடையில் வைக்கப்பட்டிருந்தான்; துணிகளால் சுற்றப்பட்டிருந்தான். அவன் தாய் அழுதுகொண்டு பாடையின் பின்னாலே வந்துகொண்டிருந்தாள். அவனை அடக்கம் செய்வதற்காகச் சுமந்துகொண்டு சென்றார்கள் (லூக்கா 7:12). என்ன நடந்திருக்கிறது என்பது சந்தேகத்துக்கிடமின்றி உங்களுக்குத் தெளிவாகத் தெரிந்திருக்கும். அதற்கு விளக்கமே தேவையில்லை; அந்த வாலிபன் மரித்துப் போயிருந்தான்.
ஒவ்வொரு மனிதனின் ஆத்துமாவும் இயற்கை சுபாவத்தில் இந்த நிலையில்தான் இருக்கிறது. நம்மைச் சுற்றிலும் இருக்கின்ற பெரும்பாலான மக்கள் ஆவிக்குரிய விதத்தில் இம்மாதிரியாகவே இருக்கிறார்கள். தேவன் அவர்களைத் தொடர்ந்து அழைத்துக்கொண்டேயிருக்கிறார்; அவருடைய இரக்கங்களின் மூலமாகவும், துன்பங்களின் மூலமாகவும், ஊழியர்களின் மூலமாகவும், தமது வார்த்தையின் மூலமாகவும் அவர்களை அழைக்கிறார். ஆனால் அவர்கள் அவருடைய சத்தத்திற்குச் செவிகொடுப்பதில்லை. கர்த்தராகிய இயேசு கிறிஸ்து அவர்களுக்காகத் துயரப்படுகிறார், வேண்டுதல் செய்கிறார், கிருபையுள்ள அழைப்பு விடுக்கிறார், அவர்கள் இருதயக் கதவைத் தட்டுகிறார். ஆனால் அவர்களோ அதைக் கவனிப்பதில்லை. அவர்களுடைய மகிமையும் கிரீடமுமாக இருக்கிற விலைமதிப்பற்ற நித்திய ஆத்துமா சிறைப்பிடிக்கப்பட்டு, கொள்ளையிடப்பட்டு, அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளது. அதைக்குறித்து அவர்களுக்குக் கொஞ்சமும் அக்கறையில்லை. கேட்டுக்குப் போகின்ற அகலமான பாதையின் வழியாகத் தினந்தோறும் சாத்தான் அவர்களை வழிநடத்திச் செல்கிறான். அவனைக் கொஞ்சம்கூட எதிர்த்துப் போராடாமல், வெகு சுலபமாகத் தங்களைக் கைதியாக்கிக்கொள்வதற்கு அவனுக்கு அனுமதி அளிக்கிறார்கள். இது எல்லா இடங்களிலும் நடந்துகொண்டிருக்கிறது; நம்மைச் சுற்றிலும் நடக்கிறது. எல்லா வகுப்பாரிடையிலும், எல்லா தேசங்களிலும் இதே நிலைமை காணப்படுகிறது. இதை வாசிக்கின்ற உங்களுடைய சொந்த மனசாட்சியில் இதை உணர்வீர்கள்; நீங்கள் அதை அறிந்திருப்பீர்கள்; அதை உங்களால் மறுக்க முடியாது. அப்படியிருக்கையில் தேவன் கூறுவது முற்றிலும் உண்மையே தவிர வேறென்ன? இயற்கை சுபாவத்தின்படியாக நாமெல்லாரும் ஆவிக்குரிய பிரகாரமாக மரித்தவர்களே!
ஆம்! ஒரு மனிதனுடைய இருதயம் அனலற்று இருக்கையில், பக்திக்குரிய காரியங்களில் அக்கறையற்று இருக்கையில், அவன் கரங்கள் தேவனுடைய அலுவல்களில் ஈடுபடாமல் இருக்கையில், அவன் கால்கள் தேவனுடைய வழிகளில் நடவாமல் இருக்கையில், அவனுடைய நாவு தேவனைத் துதிப்பதிலும் ஜெபிப்பதிலும் உபயோகப்படுத்தப்படாமல் இருக்கையில், அவனுடைய காதுகள் கிறிஸ்துவின் சுவிசேஷத்தைக் கேளாதபடிக்குச் செவிடாக இருக்கையில், அவனுடைய கண்கள் பரலோக ராஜ்ஜியத்தின் அழகைப் பருகாமல் இருக்கையில், அவனுடைய மனது முழுவதும் உலகம் நிரம்பிக் கிடக்கையில், அதில் ஆவிக்குரிய காரியங்களுக்கே இடமில்லாமல் இருக்கையில்—இத்தகைய அடையாளங்கள் ஒரு மனிதனிடம் காணப்படும்போது, அவனைக் குறிப்பிடுவதற்கு வேதாகமம் ஒரே ஒரு வார்த்தையைப் பயன்படுத்துவதே சரியானதாக இருக்கும். அந்த வார்த்தை என்னவென்றால், அவன் "மரித்தவன்" என்பதே.
அப்படிச் சொல்வது ஒருவேளை நமக்குப் பிடிக்காமல் இருக்கலாம். இவ்வுலகத்தில் நடைமுறையில் காணப்படுகின்ற உண்மை நிலைக்கும், கர்த்தருடைய வார்த்தையில் கூறப்பட்டுள்ள உண்மை நிலைக்கும் நாம் வேண்டுமானால் நமது கண்களை மூடிக்கொள்ளலாம். ஆனால், தேவனுடைய சத்தியம் பேசப்பட வேண்டும். அதைப் பேசாவிட்டால் அதிகப் பாதிப்புகள் ஏற்படுவது நிச்சயம். எவ்வளவு குற்றப்படுத்தினாலும் சத்தியம் பேசப்பட வேண்டும். சரீரத்தினாலும், ஆத்துமாவினாலும், ஆவியினாலும் எவனொருவன் தேவனுக்குப் பணிவிடை செய்யாமல் இருக்கிறானோ அவன் உண்மையில் உயிருள்ளவன் அல்ல. முதலிடம் கொடுக்க வேண்டியவைகளுக்குக் கடைசி இடத்தையும், கடைசி இடத்தில் வைக்க வேண்டியவைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து முதலிடத்தையும் கொடுப்பவன் தேவனுடைய பார்வையில் மரித்தவன். தேவன் கொடுத்த தாலந்துகளைப் புதைத்து வைத்து, இலாபம் சம்பாதிக்காத அந்த ஊழியனைப் போல இவனும் தேவனுக்கு எந்த மகிமையையும் கொண்டுவராதவனாக இருக்கிறான்; ஆகவே அவன் மரித்தவன். தனக்கு அளிக்கப்பட்டிருக்கும் வாழ்க்கையில் அவன் செய்ய வேண்டியவைகளைச் செய்யாமல் இருக்கிறான். தேவன் அவனுக்குக் கொடுத்திருக்கும் வாய்ப்புகளையும் திறமைகளையும் அவன் உபயோகிக்காமல் இருக்கிறான். ஒரு பாடல் ஆசிரியர் மிகவும் சரியாகச் சொல்லியிருக்கிறார்: "தேவனுக்கென வாழ்பவனே உயிருள்ளவன்; மற்ற யாவரும் இறந்தவர்களே!"
மனிதர்கள் பாவத்தை உணராமல் இருப்பது, பிரசங்கங்களை நம்பாமல் இருப்பது, நல்ல அறிவுரைகளைப் பின்பற்றாமல் இருப்பது, சுவிசேஷத்தை ஏற்றுக்கொள்ளாமல் இருப்பது, உலகத்தை விட்டுவிடாமல் இருப்பது, சிலுவையை எடுத்துக்கொள்ளாமல் இருப்பது, சுயநலத்தை அழிக்காமல் இருப்பது, தீய பழக்கங்களை விட்டு விலகாமல் இருப்பது, வேதாகமத்தை அரிதாக வாசிப்பது, ஜெபிக்காமல் இருப்பது—இவைகளுக்கு என்ன காரணத்தைக் காண்பிக்க முடியும்? உலகம் எங்கும் மனிதர்கள் ஏன் இப்படியாகவே காணப்படுகிறார்கள்? இதற்கு விடையளிப்பது மிகவும் சுலபம்: எல்லோரும் ஆவியில் மரித்துப் போயிருக்கிறார்கள்.
அநேகர் ஒருமனதாகச் சொல்லுகிற பல்லாயிரக்கணக்கான சாக்குப்போக்குகளின் உண்மையான காரணம் இதுதான். சிலருக்குப் படிப்பறிவு இல்லை; சிலருக்கு நேரம் இல்லை; சிலருக்கு அதிகமான வேலைப்பளு இருக்கிறது; சிலருக்கு உலக விவகாரங்களில் கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது; சிலருக்கு வறுமை; சிலருக்குக் குடும்பத்தில் பிரச்சனை; சிலருக்கு உடல்நலக் குறைவுகள்; சிலருக்கு விசித்திரமான தடைகள்; சிலருக்கு விளங்கிக்கொள்வதில் பிரச்சனை; சிலருடைய இல்லங்களில் அசாதாரணமான குறைபாடுகள்—இவைகளெல்லாம் நீங்க வேண்டுமென அவர்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள். இவர்கள் அனைவரையும் குறித்து தேவன் வேதாகமத்தில் சுருக்கமாகக் கூறுகிறார்: அவர்கள் எல்லோரும் மரித்துப் போயிருக்கிறார்கள். இந்த மனிதர்களுடைய இருதயத்தில் ஆவிக்குரிய வாழ்க்கை ஆரம்பமாகிவிட்டதென்றால், மேற்குறிப்பிட்ட சாக்குப்போக்குகளெல்லாம் விரைவில் மறைந்து போய்விடும்.
உண்மையான ஊழியனின் இதயத்தை உலுக்கும் பல விஷயங்களின் உண்மையான விளக்கம் இதுதான். அவரைச் சுற்றிலும் இருக்கிற அநேகர் தேவ ஆராதனையில் பங்குகொள்வதே இல்லை. பலர் ஒழுங்கீனமாகப் பங்கெடுக்கிறார்கள்; அவர்கள் ஆராதனைக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்பதை இது காண்பிக்கிறது. பலர் ஞாயிறு காலை ஆராதனையில் மாத்திரம் பங்கெடுக்கிறார்கள்; மாலைக் கூட்டங்களுக்கு வர முடிந்தாலும் வருவதில்லை. பலர் கர்த்தருடைய பந்தியில் பங்கெடுப்பதில்லை; மேலும் அவர்கள் வாராந்திரக் கூட்டங்களுக்கும் வருவதில்லை. எதனால் மனிதர் இப்படி இருக்கிறார்கள்? இவர்களைக் குறித்துப் பெரும்பாலும் ஒரு காரியத்தை மாத்திரம்தான் குறிப்பிட முடியும்—அவர்கள் மரித்தவர்கள்.
பாருங்கள்! கிறிஸ்தவர்கள் எனச் சொல்லிக்கொள்கிற அனைவரும் எவ்வாறாகத் தங்களையும் தங்களுடைய நிலைமையையும் பரிசோதித்துக்கொள்ள வேண்டியதாக இருக்கிறது! மரித்தவர்கள் கல்லறைத் தோட்டங்களில் மாத்திரம் அல்ல, சபைக்கு உள்ளேயும் அநேகர் இருக்கிறார்கள்; பிரசங்க மேடைக்கு அருகிலும் இருக்கிறார்கள். மரித்த அநேகர் சபையின் ஆசனங்களில் உட்கார்ந்துகொண்டிருக்கிறார்கள். தீர்க்கதரிசியாகிய எசேக்கியேல் தரிசனத்தில் கண்டதுபோல, "இதோ, பள்ளத்தாக்கின் வெட்டவெளியிலே எலும்புகள் மகா திரளாய்க் கிடந்தது; அவைகள் மிகவும் உலர்ந்ததுமாயிருந்தது" (எசேக்கியேல் 37:2). சபைகளிலெல்லாம் செத்த ஆத்துமாக்கள் நிறைந்திருக்கின்றன; நமது தெருக்களிலும் செத்த ஆத்துமாக்கள் நடமாடிக்கொண்டிருக்கின்றன. குடும்பம் முழுவதும் தேவனுக்கென்று வாழுவதைக் காண்பது அரிதாக இருக்கிறது. செத்த ஆத்துமா ஒன்றாகிலும் இல்லாத ஒரு வீட்டைக் காண்பது கடினம். ஓ! நாம் அனைவரும் நம்மை நாமே சோதித்துப் பார்ப்போம்; நமது குடும்பத்தைச் சோதித்துப் பார்ப்போம்; நமது நிலையைச் சோதித்து அறிவோம். நாம் உயிரோடிருக்கிறோமா? அல்லது மரித்துப் போயிருக்கிறோமா?
ஆவிக்குரிய மாற்றம் ஏற்படாமலேயே வாழுகின்றவர்களின் நிலை எவ்வளவு வருத்தத்திற்குரியது என்பதை நினைத்துப் பாருங்கள். அவர்கள் பிறந்தது முதல் இருந்த விதமாகவே அவர்களுடைய இருதயம் இன்னமும் இருக்கிறது. அவர்களுக்கும் பரலோகத்திற்கும் இடையே மலையளவு வேறுபாடு இருக்கிறது. அவர்கள் இன்னமும் "மரணத்தை விட்டு நீங்கி ஜீவனுக்குட்படவில்லை" (1 யோவான் 3:14). அவர்கள் தங்கள் ஆபத்தைப் பார்த்து உணர்ந்தால் எவ்வளவு நலமாயிருக்கும்! சரீர மரணத்தைப் போலவே ஆவிக்குரிய மரணமும் அதை அடைந்தவர்களால் உணர முடியாமல் இருப்பது, ஆவிக்குரிய மரண நிலையின் பயங்கரமான அடையாளமாகும். நமக்கு அருமையானவர்கள் மரிக்கும்போது, அவர்கள் சடலத்தை நாம் கல்லறையில் வைக்கும்போது, அதை அவர்கள் உணருவதில்லை. "மரித்தவர்கள் ஒன்றும் அறியார்கள்" என்று ஞானவான் கூறுகிறார் (பிரசங்கி 9:5). மரித்த ஆத்துமாக்களின் நிலையும் இது போன்றதுதான்.
தனது சபை அங்கத்தினர்களைக் குறித்துச் சபையின் ஊழியர்கள் கவலை கொள்வதற்கான காரணங்கள் என்னவென்பதையும் பாருங்கள். காலம் குறைவாக உள்ளதையும், வாழ்க்கை நிச்சயமில்லாதது என்பதையும் நாங்கள் உணர்ந்திருக்கிறோம். ஆவிக்குரிய மரணம் நித்திய அழிவுக்கு இட்டுச்செல்லும் என்பதை நாங்கள் அறிந்திருக்கிறோம். பிரசங்கங்களைக் கேட்கிற எவராவது தங்கள் பாவங்களிலும், ஆயத்தமில்லாமலும், புதுப்பிக்கப்படாமலும், மனந்திரும்பாமலும், மாற்றம் அடையாமலும் இறந்து போய்விடக் கூடாதே என நாங்கள் அஞ்சுகிறோம். அதனால் பல நேரங்களில் நாங்கள் கடுமையாகப் பேசிவிடுகிறோம்; பல சமயங்களில் அன்புடன் மன்றாடவும் செய்கிறோம்! நாங்கள் உங்களை முகஸ்துதி செய்ய மாட்டோம்; அற்ப விஷயங்களைக் கொண்டு உங்களைச் சந்தோஷப்படுத்திவிட மாட்டோம்; மனதுக்கு இதமானவைகளையே பேசிக்கொண்டிருக்க மாட்டோம். வாழ்க்கையும் மரணமும் ஆபத்துக்குள்ளான நிலையில் இருக்கும்போது, "சமாதானம், சமாதானம்" எனக் கூறி உங்களை ஏமாற்றிவிட மாட்டோம். கொள்ளை நோய் உங்கள் மத்தியில் பரவிக்கொண்டிருக்கிறது. அவ்வேளையில் உயிருள்ளோருக்கும் மரித்தோருக்கும் நடுவே நின்றுகொண்டிருப்பதாக நாங்கள் உணருகிறோம். நாங்கள் வெளிப்படையாகவும், "மிகுந்த தாராளத்தோடும்" பேச வேண்டியதாயிருக்கிறது. "எக்காளம் விளங்காத சத்தமிட்டால் எவன் யுத்தத்திற்கு ஆயத்தம் பண்ணுவான்?" (2 கொரிந்தியர் 3:12; 1 கொரிந்தியர் 14:8).
இரட்சிக்கப்படும் ஒவ்வொரு மனிதனும் உணர்வடைந்து, ஆவியில் உயிர்ப்பிக்கப்பட வேண்டும். எல்லாவற்றையும் விட உயிர்தான் விலைமதிக்க முடியாத சொத்தாகும். மரணத்திலிருந்து உயிர் பெறுவதுதான் சகல மாற்றங்களிலும் பெரிய, மகத்தான மாற்றமாகும். இந்த மாற்றம் நிகழாவிட்டால் ஒரு மனிதனின் ஆத்துமா மோட்சத்தில் வாழத் தகுதியற்றதாயிருக்கும். ஆம்! அந்த மாற்றம் என்பது ஒன்றும் சிறிய திருத்தம் அல்லது பழுதுபார்த்தல் அல்ல; கொஞ்சமாகச் சுத்தப்படுத்துவது அல்ல; கொஞ்சம் வர்ணம் பூசி மெழுகுதல் அல்ல; சிறிதளவு வெள்ளையடித்து மெருகேற்றுதல் அல்ல; கொஞ்சம் மாற்றங்கள் செய்து வெளித்தோற்றத்தில் புதியது போலக் காட்டுவது அல்ல. அந்த மாற்றம் என்பது முற்றிலுமான புதிய ஒன்றைக் கொண்டுவருவதாகும். நமக்குள்ளாக ஒரு புதிய சுபாவம், ஒரு புதிய சிருஷ்டிப்பு, புதிய கொள்கை, புதிய மனது ஆகியவற்றை விதைப்பதாகும். மனிதனுடைய ஆத்துமாவின் தேவையைச் சந்திப்பதற்கு அத்தகைய மாற்றம் மாத்திரமே தேவை; இதற்குக் குறைந்த வேறு எதுவும் பிரயோஜனப்படாது. நமக்கு ஒரு புதிய தோல் மட்டுமல்ல, புதிய இருதயமே தேவை.
"சிறிதளவு சீர்திருத்தம் ஒரு மனிதனை இரட்சித்துவிடாது. உலகிலுள்ள அனைத்து ஒழுக்கநெறிகளும் அவனை இரட்சிக்க முடியாது. தேவ ஆவியானவரின் பொதுவான கிருபைகள் அவனை மீட்டுவிட முடியாது. அவன் வாழ்க்கையின் வெளிப்பிரகாரமான மாற்றங்கள் அவனை இரட்சிக்காது. அவன் உயிர்ப்பிக்கப்பட்டு, ஒரு புது சிருஷ்டியாக மாறும் வரைக்கும் இவைகளால் எதுவும் செய்ய முடியாது." — அஷ்ஷர் (Ussher) என்பவரின் பிரசங்கத்திலிருந்து.
சுரங்கங்களிலிருந்து பளிங்குக் கற்களை வெட்டி எடுத்து, அவற்றை அழகான சிற்பங்களாகச் செதுக்குவது அந்தக் கல்லுக்கு ஏற்படும் மாற்றம். காடாக இருக்கும் நிலங்களை மாற்றி, அவற்றில் அழகான பூந்தோட்டங்களை ஏற்படுத்துவது நிலத்துக்கு ஏற்படும் மாற்றம். இரும்பிலிருந்து ஒரு கட்டியை எடுத்து உருக்கி, அதிலிருந்து கடிகார உதிரி பாகங்களைத் தயாரிப்பது இரும்புக்கு ஏற்படும் மாற்றம். இவையெல்லாம் மிகப் பெரிய மாற்றங்கள்தான். ஆனால் மனிதனிடம் ஏற்பட வேண்டிய மாற்றத்தோடு ஒப்பிடும்போது இவையெல்லாம் மிக மிகச் சிறியவை. ஏனென்றால் இவைகளிலெல்லாம் அதே மூலப்பொருள் வேறு ஒரு நிலைக்கு மாறியிருக்கின்றது; பொருள் அதேதான், வடிவமைப்பு மட்டுமே மாறியிருக்கிறது. ஆனால் மனிதனுக்கோ ஒட்டுச்செடி போல, முன்பு இல்லாத ஏதோ ஒன்று பொருத்தி வைக்கப்பட வேண்டியதாக இருக்கிறது. இறந்தவன் மீண்டும் உயிர் பெறுவதைப் போன்ற ஒரு மிகப் பெரிய மாற்றம் அவனுக்குள் உருவாக வேண்டியதாக இருக்கிறது. அவன் ஒரு புதிய சிருஷ்டியாக ஆக வேண்டும். "பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின" (2 கொரிந்தியர் 5:17). அவன் "மறுபடியும் பிறக்க வேண்டும்; ஆவியினால் பிறக்க வேண்டும்; தேவனால் பிறக்க வேண்டும்" (யோவான் 3:3). சரீர வாழ்க்கைக்கு எப்படிச் சரீரப் பிறப்பு அவசியமோ அதேபோல், அதற்குச் சற்றும் குறையாமல் ஆவிக்குரிய வாழ்க்கைக்கு ஆவிக்குரிய பிறப்பு மிகவும் அவசியம்.
இப்படிச் சொல்வது கடினமானது என்பது எனக்குத் தெரியும். "நீங்கள் மறுபடியும் பிறக்க வேண்டும்" என்று சொல்வதைக் கேட்பதற்கு இவ்வுலகத்தின் பிள்ளைகளுக்கு விருப்பம் இருக்காது என்பதை நான் அறிவேன். அது அவர்களுடைய மனசாட்சியைக் குத்தும். அவர்கள் நினைத்துக்கொண்டிருப்பதைவிடப் பரலோகத்திற்கு வெகு தொலைவில் அவர்கள் இருக்கிறார்கள் என்பதை அது உணர வைக்கிறது. அவர்கள் இதுவரை பணிந்து குனிந்து நுழையாத குறுகலான கதவு போல அது அவர்களுக்குத் தோற்றமளிக்கிறது. அந்தக் கதவை அகலப்படுத்தி அதில் நுழைய விரும்புவார்கள்; அல்லது சுவரேறிக் குதித்து நுழைய விரும்புவார்கள். ஆனால் இந்த விஷயத்தில் நான் அவர்களுக்குச் சற்றும் சலுகை காட்ட மாட்டேன். அவர்களுக்குள் தவறான நம்பிக்கைகளை விதைக்க மாட்டேன். "கொஞ்சம் மனந்திரும்பி, அதற்குப் பின் உங்களிடம் இருக்கும் தாலந்துகளை உபயோகித்தால் போதுமானது; நீங்கள் உண்மையான கிறிஸ்தவர்களாக ஆகிவிடலாம்" என்பது போன்ற பொய்யான நம்பிக்கைகளை அவர்களுக்குக் கொடுக்க மாட்டேன். வேதாகமம் என்ன கூறுகிறதோ அதை அப்படியே கூறுவேன். நாம் அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக எழுதப்பட்டுள்ள வார்த்தைகளையே எடுத்துக் கூறுவேன்: "நாம் அனைவரும் மறுபடியும் பிறக்க வேண்டும்; நாம் எல்லோரும் சுபாவத்தின்படியாக மரித்தவர்கள், நாம் உயிர்பெற வேண்டும்."
யூதாவின் ராஜாவாகிய மனாசேயைப் பாருங்கள். அவன் தன் வாழ்வின் ஒரு காலகட்டத்தில் எருசலேமை விக்கிரகங்களினால் நிரப்பி, தன்னுடைய பொய்யான கடவுள்களுக்குத் தன் பிள்ளைகளையே பலிகொடுத்துக் கொண்டிருந்தான். ஆனால் வேறொரு சமயத்தில் எருசலேம் ஆலயத்தைச் சுத்திகரித்து, விக்கிரகங்களைத் தகர்த்துப் போட்டு, தேவபக்தியுள்ள வாழ்க்கை வாழ்ந்தான். எரிகோவில் வாழ்ந்த சகேயு என்னும் ஆயக்காரனைப் பாருங்கள். அவன் ஒரு சமயத்தில் மக்களை ஏமாற்றுகிறவனாகவும், கொள்ளையடிக்கிறவனாகவும், பேராசையுள்ளவனாகவும் வாழ்ந்துகொண்டிருந்தான். ஆனால் அவனே பிற்பாடு கிறிஸ்துவைப் பின்பற்றுகிறவனாகவும், தன் ஆஸ்தியில் பாதியை ஏழைகளுக்குக் கொடுக்கிறவனாகவும் மாறினான். ஏரோதுவின் வீட்டு வேலையாட்களைப் பாருங்கள். ஒரு காலத்தில் அவர்கள் தங்கள் எஜமானரின் அநாகரிகமான வழிகளுக்கு இணங்கி வாழ்ந்தார்கள்; ஆனால் பிற்காலத்தில் அப்போஸ்தலனாகிய பவுலோடு ஒரே மனதும் சிந்தையும் உடையவர்களாய் வாழ்ந்தார்கள். ஆதிச்சபைப் பிதாக்களில் ஒருவரான அகஸ்டின் (Augustine) என்பவரைப் பாருங்கள். அவர் ஒரு காலத்தில் துன்மார்க்கமான வாழ்க்கை வாழ்ந்தார்; பிற்பாடு தேவனோடு மிகவும் நெருங்கியவராக நடந்தார். சீர்திருத்தவாதி லாட்டிமர் (Latimer) என்பவரை நாம் கவனித்தால், ஒரு சமயத்தில் அவர் கிறிஸ்துவின் சத்தியத்துக்கு விரோதமாகத் தீவிரமாகப் பிரசங்கித்துக் கொண்டிருந்தார்; இன்னொரு சமயத்தில் மரணமே வந்தாலும் கிறிஸ்துவுக்காகத் தன் வாழ்க்கையையும் தன்னையும் செலவிடத் துணிந்தார். மேலும் நியூசிலாந்து மற்றும் இந்தியாவின் சில பாகங்களிலுள்ள மக்கள் ஒரு காலத்தில் இரத்த வெறியர்களாகவும், துன்மார்க்கராகவும், அருவருக்கத்தக்க மூடநம்பிக்கைகளில் மூழ்கிப் போனவர்களாகவும் வாழ்ந்துகொண்டிருந்தார்கள். ஆனால் அவர்களே இன்னொரு காலத்தில் பரிசுத்தவான்களாயும், நற்குணமுள்ளவர்களாயும், கிறிஸ்துவை விசுவாசிப்பவர்களாயும் ஆனார்கள்.
இவ்வித மாற்றங்களைப் பார்க்கிற புத்தியுள்ள கிறிஸ்தவர்களிடம் கேட்கிறேன்: இதைக்குறித்து நீங்கள் என்ன சொல்லுவீர்கள்? அவர்களெல்லோரும் தங்கள் வாழ்க்கையைச் சற்று மாற்றிக்கொண்டார்கள் அல்லது திருத்தி அமைத்துக்கொண்டார்கள் என்று சொல்வீர்களானால் அந்தப் பதில் சரியானதுதானா? அகஸ்டின் தன் வாழ்க்கையைச் "சீர்திருத்திக்கொண்டார்" என்றும், லாட்டிமர் தன் வாழ்வில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கினார் என்றும் கூறுவது திருப்திகரமான பதிலா? இதைக்காட்டிலும் சிறப்பான பதிலை நம்மால் கூற முடியாவிட்டால் இந்தக் கல்லுகளே சரியான விடையைக் கூறிவிடும். மேற்கூறின உதாரணங்கள் எல்லாவற்றிலும் புதிய பிறப்பு நிகழ்ந்திருக்கிறது. ஒரு புதிய மனித சுபாவம் உயிர் பெற்றிருக்கிறது; மரித்துப் போன நிலை மாறி உயிர் பெற்றிருக்கிறது. அப்படிச் சொல்வதுதான் சரியாக இருக்கும். வேறு எவ்விதமாக அந்த மாற்றங்களைக் குறிப்பிட்டாலும் அது பெலவீனமானதாகவும், வலுவற்றதாகவும், குறையுள்ளதாகவும், வேதத்திற்குப் புறம்பானதாகவும், உண்மைக்கு மாறாகவும் இருக்கும்.
நாம் இரட்சிக்கப்பட வேண்டுமானால் நமக்கும் அதே விதமான மாற்றம் தேவை. மேற்குறிப்பிட்டவர்களுக்கும் நமக்கும் அதிக வித்தியாசமில்லை. வெளிப்பிரகாரமான தோற்றத்தை நீக்கிவிட்டால், உள்ளே ஒரே மாதிரியான சுபாவம்தான் நமக்கும் அவர்களுக்கும் காணப்படும். முற்றிலுமான மாற்றம் தேவைப்படுகின்ற பொல்லாத சுபாவம் உள்ளே இருக்கும். பூமியின் பல்வேறு பாகங்களில் அதனதன் சீதோஷ்ண நிலைக்கு ஏற்றாற்போல் வித்தியாசங்கள் காணப்படலாம். ஆனால் பூமியின் ஆழமான உட்புறத்தைத் தோண்டினால் எல்லா இடங்களிலும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும் என நான் நம்புகிறேன்; அதன் ஆழத்தில் பாறைகளும் கற்களும் இறுகின மண்ணுமாக இருக்கும். மனிதருடைய இருதயங்களும் அப்படித்தான் இருக்கின்றன. அவர்களுடைய கலாச்சாரங்கள், நிறம், நடைமுறைகள், சட்டங்கள் இவையெல்லாம் ஒவ்வொரு பிரதேசத்திலும் வேறுபடலாம். ஆனால் அவர்களுடைய உள்மனது ஒரே விதமாக இருக்கிறது. அவர்களுடைய இருதயத்தின் ஆழத்தில் இருதயக்கடினமும், பக்தியில்லாமையும் காணப்படும். அத்தகைய இருதயம் முற்றிலுமாகப் புதுப்பிக்கப்பட வேண்டியதாக இருக்கிறது. எந்த தேசத்தவராக இருந்தாலும் இந்த விஷயத்தில் ஒரே மாதிரியாக இருக்கிறார்கள். அவர்கள் சுபாவத்தின்படியாக மரித்தோராக இருக்கிறார்கள்; அவர்கள் உயிர்ப்பிக்கப்பட வேண்டியது அவசியமாயிருக்கிறது. அவர்கள் எல்லோருமே பாவத்தில் வீழ்ந்த ஆதாம் என்கிற ஒரே தகப்பனுடைய பிள்ளைகள்; அவர்கள் அனைவருமே மறுபடியும் பிறந்து, தேவனுடைய பிள்ளைகளாக ஆக வேண்டியிருக்கிறது.
உலகின் எந்தப் பாகத்தில் நாம் வசிக்கிறவர்களாயிருந்தாலும் நமது கண்கள் திறக்கப்பட வேண்டியதாக இருக்கிறது; ஏனென்றால் நாம் நமது பாவத்தையோ, குற்றத்தையோ, ஆபத்தையோ ஒருபோதும் பார்க்காத இயல்புள்ளவர்களாக இருக்கிறோம். நாம் எந்த தேசத்தைச் சேர்ந்தவர்களாய் இருந்தாலும் நமது புத்திக்கு உணர்வூட்ட வேண்டியதாக இருக்கிறது; ஏனென்றால் இரட்சிப்பின் திட்டத்தைக் குறித்து நாம் அறியாத இயல்புள்ளவர்களாக இருக்கிறோம். பாபேல் கோபுரத்தைக் கட்டத் தொடங்கினவர்களைப் போல, பரலோகத்திற்கு நமது சொந்த வழியிலே போய்விடலாம் என நினைத்துக்கொண்டிருக்கிறோம். நாம் எந்தச் சபையைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், நமது விருப்பங்களைச் சரியான திசையில் திருப்ப வேண்டியதாக இருக்கிறது; ஏனென்றால் நமது சமாதானத்துக்கானவைகளை ஒருபோதும் தேர்ந்தெடுக்க விரும்பாத இயல்புள்ளவர்களாய் இருக்கிறோம். நாமாகக் கிறிஸ்துவிடம் ஒருபோதும் வர மாட்டோம். நாம் எவ்வளவு உயர் பதவியை வகிக்கிறவர்களாக இருந்தாலும், நமது எண்ணங்களை மேலானவைகளை நோக்கித் திருப்ப வேண்டியதாக இருக்கிறது; ஏனென்றால் பூமிக்கடுத்தவைகளிலும், சிற்றின்பங்களிலும், தற்காலிகமானவைகளிலும், வீணானவைகளிலும்தான் நமது எண்ணங்கள் இயல்பாகவே செல்கின்றன. நம்மிடத்தில் பெருமை ஒழிந்து தாழ்மை உருவாக வேண்டும். சுயநீதிக்குப் பதிலாகத் தன்னைத்தானே வெறுத்தல் ஏற்பட வேண்டும். அலட்சிய மனப்பான்மை நீங்கி ஜாக்கிரதை உணர்ச்சி தோன்ற வேண்டும். உலகப்பிரகாரத்திற்குப் பதிலாகப் பரிசுத்தம் ஏற்பட வேண்டும். அவிசுவாசத்திற்குப் பதிலாக விசுவாசம் உருவாக வேண்டும். சாத்தானின் ஆளுகை அடக்கப்பட்டு, தேவராஜ்ஜியம் நமக்குள்ளாக ஸ்தாபிக்கப்பட வேண்டும். சுயம் சிலுவையில் அறையப்பட்டு, கிறிஸ்து நம்மில் ஆளுகை செய்ய வேண்டும். இவையெல்லாம் நடக்கும் வரைக்கும் நாம் உயிரில்லாத கற்களைப் போன்றவர்கள். இதுவரையிலும் இல்லாத இவைகளெல்லாம் நடக்க ஆரம்பிக்கும்போதுதான் நாம் ஆவிக்குரிய பிரகாரமாக உயிர் பெறுகிறோம்.
"மனிதனுடைய புத்தி மிகவும் இருளடைந்து போயிருக்கிறது. அவனால் கடவுளிடத்தில் இருக்கும் கடவுள் தன்மையைப் பார்க்க முடியவில்லை; பரிசுத்தத்தில் உள்ள பரிசுத்தத்தைக் காண முடியவில்லை; நன்மையில் இருக்கும் நன்மையை விளங்கிக்கொள்ள முடியவில்லை; தீமையில் இருக்கும் தீமையை உணர முடியவில்லை; பாவத்தில் இருக்கின்ற பாவத்தின் தன்மையைப் புரிந்துகொள்ள முடியவில்லை. அவனுடைய விளங்கும் தன்மை எவ்வளவுக்கு இருளடைந்திருக்கிறதென்றால், தீமையில் நன்மை இருப்பதாக அவன் கற்பனை செய்துகொள்கிறான். அதுபோல நன்மையில் தீமை இருப்பதாகவும், பாவம் செய்வதில் சந்தோஷம் இருப்பதாகவும், பரிசுத்தமாக வாழ்வது துன்பமானது என்றும் நினைத்துக்கொள்கிறான்." — பெர்ரிட்ஜ் (Berridge) என்பவர் எழுதியதிலிருந்து.
இப்படிக் கூறுவது சில பேருக்கு முட்டாள்தனமாகத் தோன்றலாம். ஆனால் ஆத்துமா மரித்துப் போயிருந்த நிலையிலிருந்து உயிர்பெற்ற அநேகம் பேர் இந்நாளிலே எழுந்து நின்று இது உண்மைதான் என்று சாட்சி கூறுவார்கள். இவைகளையெல்லாம் தாங்கள் அனுபவபூர்வமாக அறிந்திருப்பதாகச் சொல்லுவார்கள். தாங்கள் ஒரு புது மனிதராக இருப்பதை உணர்வதாகக் கூறுவார்கள். ஒரு காலத்தில் வெறுத்து ஒதுக்கிய விஷயங்களை அவர்கள் இப்போது விரும்புகிறார்கள்; ஒரு காலத்தில் நேசித்தவைகளை இப்போது வெறுக்கிறார்கள். புதிய பழக்கவழக்கங்களும், புதிய நட்புகளும், புதிய வழிமுறைகளும், புதிய விருப்பங்களும், புதிய உணர்வுகளும், புதிய கருத்துக்களும், புதுவிதமான துன்பங்களும், புதுவிதமான சந்தோஷங்களும், புதுவிதமான கவலைகளும், புதிய வாஞ்சைகளும், புதிய நம்பிக்கைகளும், புதுவிதமான பயங்களும் இப்போது அவர்களை ஆட்கொண்டிருப்பதாகச் சொல்லுவார்கள். சுருக்கமாகக் கூறினால், அவர்களுடைய முழுத் தன்மையும் மாற்றப்பட்டிருக்கிறது. அவர்களுக்கு நெருங்கின நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் அவர்களைப் பற்றிக் கேட்டுப் பாருங்கள்; அந்த மாற்றத்துக்கு அவர்கள் சாட்சியளிப்பார்கள். அவர் முன்னர் இருந்த ஆளில்லை என்பதை அவர்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் ஒத்துக்கொள்வார்கள்.
"மறுபிறப்பு அடைந்த ஆத்துமா தனது பழைய நிலையிலிருந்து எவ்வளவு அற்புதமாக வேறுபடுகிறது! அவன் ஒரு புதிய வாழ்க்கையை வாழ்கிறான்; புதிய பாதையில் நடக்கிறான்; புதிய வழிகாட்டியைக் கொண்டு தன் பயணத்தை மேற்கொள்கிறான்; புதிய எல்லையை நோக்கிப் பயணிக்கிறான். அவனுடைய கொள்கைகள் புதிது, எண்ணங்கள் புதிது, நடைமுறைகள் புதிது, திட்டங்கள் புதிது—எல்லாமே புதிது. தான் இதற்கு முன்னர் இருந்த எல்லா நிலைகளிலிருந்தும் தன்னை விடுவித்துக்கொண்டு, முற்றிலுமாக ஒரு புதிய பணிக்குத் தன்னை அர்ப்பணித்துக்கொள்கிறான்." — ஜார்ஜ் ஸ்வின்னோக் (George Swinnock) என்பவர் எழுதியதிலிருந்து.
தான் ஒன்றும் அவ்வளவு பெரிய பாவி இல்லை என எண்ணிக்கொண்டிருந்ததாக அநேகர் கூறுவார்கள். தான் மற்றவர்களைவிட எவ்விதத்திலும் மோசமாக இல்லை என நினைத்துக்கொண்டிருந்ததாக அவர்கள் கூறுவார்கள். ஆனால் இப்போது அப்போஸ்தலனாகிய பவுலோடு சேர்ந்து, "பாவிகளில் பிரதான பாவி நான்" (1 தீமோத்தேயு 1:15) என அவர்களும் கூறுவார்கள்.
"என்னால் ஜெபிக்க முடியாது, ஆனால் பாவம் செய்கிறேன்; என்னால் ஒரு பிரசங்கத்தைக் கேட்கவோ பிரசங்கிக்கவோ முடியாது, ஆனால் பாவம் செய்கிறேன்; என்னால் பிறருக்கு உதவ முடியாது, திருவிருந்தில் பங்கெடுக்க முடியாது, ஆனால் பாவம் செய்கிறேன். என் பாவங்களை என்னால் அறிக்கையிட முடியாது, எனது அறிக்கையிடுதல்கூட அவற்றை இன்னும் மோசமாக்குகின்றன. எனது மனந்திரும்புதலைக் குறித்தும் நான் மனந்திரும்ப வேண்டியதாக இருக்கிறது. என்னுடைய கண்ணீர் கழுவப்பட வேண்டியதாக இருக்கிறது; கழுவப்பட வேண்டிய அந்தக் கண்ணீரும் மறுபடியுமாக எனது மீட்பரின் இரத்தத்தினால் கழுவப்பட வேண்டியதாக இருக்கிறது." — பெவரிட்ஜ் (Beveridge) என்பவரின் எழுத்துக்களிலிருந்து.
"என்னிடத்தில் ஏதேனும் நன்மை உண்டென மனிதர் நினைத்தால் எனக்கு ஐயோ! அவர் எனக்குச் சாட்சியாய் இருக்கிறார்; அவருக்கு முன்பாக நான் படிகத்தைப் போல இருக்கிறேன். என்னுள் குடிகொண்டிருக்கும் இரகசிய பாவநிலை அடிக்கடி என்னை ஆட்கொள்கிறது. என்னுள் இருக்கிற தீமைகள் என்னை ஆழ்கடலில் அழுத்துவதை நான் உணருகிறேன்." — ரூதர்ஃபோர்டு (Rutherford) எழுதிய கடிதங்களிலிருந்து, 1637.
மனிதன் ஒரு காலத்தில் தனக்கு ஒரு மோசமான இருதயம் இருப்பதாக நினைத்ததில்லை. ஒருவேளை தன்னிடம் சில தவறுகள் இருந்திருக்கலாம்; கெட்ட நண்பர்களாலும், சோதனைகளாலும் வழிதவறிப் போயிருந்திருக்கலாம்; ஆனால் "அடிப்படையில் தான் நல்ல இருதயம் கொண்டவன்" என்கிற எண்ணம் அவனுக்கு இருந்தது. ஆனால் இப்போதோ அவன், தன்னைப் போல ஒரு மோசமான இருதயத்தை உடையவர்கள் யாரும் இருந்திருக்க முடியாது என்று கூறுவான். "எல்லாவற்றைப்பார்க்கிலும் இருதயமே திருக்குள்ளதும் மகா கேடுள்ளதுமாயிருக்கிறது" என்பதை அவன் உணர்ந்துகொண்டான் (எரேமியா 17:9).
ஒரு காலத்தில் அவன் மோட்சத்திற்குப் போவது அப்படியொன்றும் சிரமமான விஷயம் இல்லை என நினைத்துக்கொண்டிருந்தான். மனந்திரும்ப வேண்டும், சில ஜெபங்களைச் சொல்ல வேண்டும், முடிந்த நன்மைகளைச் செய்ய வேண்டும், அவனால் முடியாதவைகளைக் கிறிஸ்து ஈடுசெய்து விடுவார் என எண்ணிக்கொண்டிருந்தான். ஆனால் இப்போதுதான் அவன் செல்ல வேண்டிய பாதை குறுகலானது என்பதையும், அதைக் கண்டுபிடிப்பவர்கள் சிலர்தான் என்பதையும் நம்புகிறான். தனது சொந்த முயற்சியினால் ஒருபோதும் கடவுளுடனான சமாதானத்தை அடைந்திருக்க முடியாது என்பதை உறுதியாக நம்புகிறான். இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தைத் தவிர வேறு எதுவும் தனது பாவங்களைக் கழுவிட முடியாது என நம்புகிறான். "மனுஷன் நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலல்ல, விசுவாசத்தினாலேயே நீதிமானாக்கப்படுகிறான்" என்பதே அவனுடைய ஒரே நம்பிக்கையாக இருக்கிறது (ரோமர் 3:28).
ஒரு காலத்தில் அவனால் இயேசுவிடத்தில் எந்த அழகையும் மேன்மையையும் காண முடியவில்லை. இயேசுவின் ஊழியர்கள் அவரைக் குறித்து உயர்வாகப் பேசுவதை அவனால் விளங்கிக்கொள்ள முடியாதிருந்தது. ஆனால் இப்போதோ அவன் அவரைக் குறித்து, அவர் விலைமதிப்பிட முடியாத முத்து என்றும், பதினாயிரங்களில் சிறந்தவரென்றும், தனது மீட்பர், தனக்காகப் பரிந்து பேசுபவர், தனது ஆசாரியன், தனது ராஜா, தனது வைத்தியன், தனது மேய்ப்பன், தனது சிநேகிதன், தனக்கு எல்லாமே அவர்தான் என்றும் கூறுவான்.
ஒரு காலத்தில் அவன் பாவத்தைக் குறித்து இலேசாக எண்ணிக்கொண்டிருந்தான். அதைப் பற்றி விவரமாக யோசிக்க வேண்டியதன் அவசியத்தை அவன் உணரவில்லை. மனிதனுடைய வார்த்தைகள், சிந்தனைகள், செயல்கள் ஆகியவற்றிற்கு அவ்வளவாக முக்கியத்துவம் இருப்பதாக அவன் நினைக்கவில்லை; அவற்றில் கவனமாக இருக்க வேண்டும் எனவும் அவன் எண்ணவில்லை. ஆனால் இப்போதோ பாவம் என்பது ஒரு அருவருக்கத்தக்க காரியம் எனக் கூறுவான். அதை அவன் வெறுக்கிறான்; அது தன் வாழ்வின் துயரமாகவும் சுமையாகவும் இருக்கிறதென்பான். தான் இன்னும் அதிகப் பரிசுத்தமாக வேண்டுமென அவன் ஏங்குகிறான். விட்ஃபீல்டு (Whitefield) என்பவர், "நானும் மற்றவர்களும் இனி ஒருபோதும் பாவம் செய்யாமலிருக்கிற இடத்திற்குப் போக வேண்டுமென நான் விரும்புகிறேன்" என்று சொன்னார்; அதுபோலவே அவனும் ஆசைப்படுகிறான்.
"நான் செய்வதைக் குறித்து எனக்கே திருப்தியில்லை. இருந்தாலும் எனது மீட்பர் இன்னும் தொடர்ந்து என்னை ஆசீர்வதிப்பதைக் கண்டு நான் ஆச்சரியப்படுகிறேன். அதிகமான கிருபைகளைப் பெற்றிருந்தும், அவருக்காக மிகவும் குறைவாகப் பணியாற்றுகிற என்னைப் போன்ற புத்தியற்ற மனிதன் வேறு யாரும் இருக்க மாட்டார்கள் என்பது நிச்சயம்." — விட்ஃபீல்டின் கடிதங்களிலிருந்து.
ஒரு காலத்தில் அவனுக்குக் கிருபையின் சாதனங்கள் மகிழ்ச்சியை அளிக்கவில்லை. வேதாகமம் அவனால் புறக்கணிக்கப்பட்டிருந்தது. அவன் ஜெபித்தாலும், அது வெறும் சம்பிரதாயமாக இருந்தது. ஞாயிறு தினம் அவனுக்கு மிகுந்த களைப்பைத் தரும் நாளாயிருந்தது. பிரசங்கங்கள் சோர்வைத் தந்து, அவனை உறக்கத்தில் ஆழ்த்தின. ஆனால் இப்போதோ எல்லாம் மாறிப் போய்விட்டது. மேற்கூறிய அனைத்தும் அவனுடைய ஆத்துமாவுக்கு ஆகாரமாகவும், ஆறுதலாகவும், மகிழ்ச்சியை அளிப்பதாகவும் மாறிவிட்டன.
ஒரு காலத்தில் அவன் கிறிஸ்துவைத் தீவிரமாகப் பின்பற்றுகிறவர்களை வெறுக்கிறவனாய் இருந்தான். அவர்கள் துக்க மனப்பான்மையுள்ளவர்களாகவும், தாழ்வு மனப்பான்மை உள்ளவர்களாகவும், பெலவீனமானவர்களாகவும் இருப்பதாக இகழுவான். ஆனால் இப்போதோ உலகிலேயே அவர்கள்தான் மிகவும் சிறந்தவர்களென்றும், அவர்களைப் போல அதிகமான பேர்களைப் பார்க்க முடிவதில்லை என்றும் கூறுகிறான். அவர்களோடு இருக்கும்போது மகிழ்ச்சி அடைவதைப் போலத் தான் வேறு எப்போதும் சந்தோஷமாயிருந்ததில்லை என்கிறான். உலகில் எல்லா மனிதர்களும் பரிசுத்தராக இருந்தால், இவ்வுலகமே மோட்சமாயிருக்கும் என்று உணருகிறான்.
ஒரு காலத்தில் அவனுடைய நாட்டமெல்லாம் இவ்வுலகத்தின் மீது மாத்திரமே இருந்தது. அதன் உல்லாசங்கள், அதன் வியாபாரங்கள், அதன் தொழில்கள், அதில் கிடைக்கும் இலாபங்கள் ஆகியவற்றின் மீது மாத்திரமே அவனுடைய கவனமெல்லாம் இருந்தது. ஆனால் இப்போதோ அந்த உலகத்தை அவன் ஒரு வெறுமையான, திருப்தி அளிக்காத இடமாகப் பார்க்கிறான். உலகம் அவனுக்கு ஒரு சத்திரம் போலவும், தற்காலிகமாகத் தங்கும் விடுதி போலவும் இருக்கிறது; வரப்போகின்ற நித்திய வாழ்க்கைக்குப் பயிற்சி தருகின்ற பள்ளிக்கூடமாகக் காட்சி அளிக்கிறது. அவனுடைய பொக்கிஷமெல்லாம் பரலோகத்தில் இருக்கிறது; அவனுடைய வீடு கல்லறைக்கு அப்பால் இருக்கிறது.
நான் மீண்டும் உங்களைக் கேட்கிறேன்: இந்த மாற்றங்களெல்லாம் எப்படி வந்தன? இது ஒரு புதிய வாழ்க்கைதானே? நான் மேற்குறிப்பிட்ட மாற்றங்களெல்லாம் கனவோ அல்லது கட்டுக்கதையோ அல்ல; அது நிஜமாக நடக்கின்ற காரியம். இவ்வுலகில் அநேகர் அதை அறிந்தும் உணர்ந்தும் இருக்கிறார்கள். இவையெல்லாம் என்னுடைய சொந்தக் கற்பனையல்ல. இத்தகைய மாற்றங்கள் நடப்பதைக் காண்பது உங்களில் சிலருக்குக் கடினமாக இருக்கலாம். ஆனால் இம்மாதிரியான மாற்றங்கள் எங்கே நடந்தாலும், அப்போது நீங்கள் நான் எதைப் பற்றி இப்போது பேசிக்கொண்டிருக்கிறேன் என்பதை உணருவீர்கள். அங்கே மரித்தோர் உயிர் பெறுவதைக் காண்பீர்கள்; ஒரு புதிய சிருஷ்டியைக் காண்பீர்கள்; ஒரு ஆத்துமா பிறந்திருப்பதை உணருவீர்கள். "இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவுக்குள் இருந்தால் புது சிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின" (2 கொரிந்தியர் 5:17).
இவ்விதமான மாற்றங்கள் அதிகமாக ஏற்பட வேண்டுமென நான் கடவுளிடம் விரும்பி வேண்டுகிறேன். இதைப் பற்றி அதிகமானவர்கள் அறியாமல் இருக்கிறார்களே என நாங்கள் கண்ணீர் சிந்தாத நிலை ஏற்பட விரும்புகிறேன். இவ்வித மாற்றங்கள் நம் எல்லோருக்கும் அவசியமாக இருக்கின்றன. எல்லோருக்கும் ஒரேவிதமான அனுபவம் ஏற்பட வேண்டுமென நான் கூறவில்லை. வெவ்வேறு நபர்களில் அந்த மாற்றமானது அளவு மற்றும் தீவிரம் ஆகியவற்றில் வேறுபடலாம் என்பதை நான் ஒத்துக்கொள்கிறேன். மாற்றம் சிறிதளவே இருந்தாலும் அது உண்மையாக இருக்க வேண்டும். உயிர் பெலவீனமாக இருக்கலாம், ஆனால் அதில் உண்மைத்தன்மை இருக்க வேண்டும். நாம் இரட்சிக்கப்பட வேண்டுமானால் இவ்வித மாற்றங்களுக்குள்ளாகச் செல்ல வேண்டும். இவ்வித மாற்றங்கள் ஏற்படும் வரைக்கும் நம்மில் உயிர் இல்லை என்றுதான் அர்த்தம். நாம் சபைக்குச் சென்று வருகின்றவர்களாக இருக்கலாம்; ஆனால் நம்மில் மாற்றங்கள் ஏற்படவில்லையென்றால் நாம் செத்த கிறிஸ்தவர்களாகவே இருப்போம்.
"நாம் இன்னும் பழைய நிலையிலும், மாறாதவர்களாகவும் இருந்தால், உலகில் பிறந்த அதே மனிதனாக இருந்தால், நமது அக்கிரமங்களைச் சிலுவையில் அறையாதவர்களாக இருந்தால், நற்குணத்திலும் பரிசுத்தத்திலும் வளராதவர்களாய் இருந்தால், நாம் நிச்சயமாக வேறொரு தந்தையைத்தான் தேட வேண்டும்; நாம் இன்னும் பிதாவாகிய தேவனுடைய பிள்ளைகளாக ஆகவில்லை." — ஜோசப் ஹால் (Joseph Hall), 1652.
"நான் சொல்கிறேன், நம்புங்கள்: நீங்கள் புதுப்பிக்கப்படாத வரைக்கும் உங்களால் மோட்சத்தைக் காண முடியாது. நீங்கள் மறுபடியும் பிறக்கும் வரைக்கும் பரலோகத்திற்குச் செல்லும் வாய்ப்பு இல்லை." — அஷ்ஷர் (Ussher) என்பவரின் பிரசங்கங்கள்.
நண்பர்களே, இவற்றையெல்லாம் உங்கள் மனசாட்சியைக் கொண்டு நன்றாகச் சிந்தித்துப் பாருங்கள். இரட்சிப்பை அடைய வேண்டுமென விரும்புகிற அனைவரும், தொட்டிலுக்கும் கல்லறைக்கும் இடைப்பட்ட ஏதாவதொரு காலகட்டத்தில் உயிர் பெற வேண்டும். பெர்ரிட்ஜ் (Berridge) என்கிற பரிசுத்தவான் தனது கல்லறையில் கீழ்க்கண்ட வாசகங்களைப் பொறிக்கச் செய்தார். அது எவ்வளவு உண்மையாயிருக்கிறது! "இதை வாசிப்பவரே! நீங்கள் மறுபடியும் பிறந்துவிட்டீர்களா? மறுபிறப்பு இல்லாமல் இரட்சிப்பு கிடையாது. நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்!"
பெயரிலும் தோற்றத்திலும் கிறிஸ்தவனாக இருப்பவனுக்கும், செயலிலும் உண்மைத்தன்மையிலும் கிறிஸ்தவனாக இருப்பவனுக்கும் இடையே எவ்வளவு பெரிய வித்தியாசம் இருக்கிறதென்பதைக் கவனியுங்கள். அது, ஒருவர் மற்றவரைவிடக் கொஞ்சம் பரவாயில்லை அல்லது மற்றவரைவிடச் சிறிதளவுதான் மோசம் என்கிற வகையிலான வித்தியாசம் அல்ல; அது உயிருள்ளதற்கும் பிணத்திற்கும் இருப்பது போன்ற மிகப் பெரிய வித்தியாசம். மிகவும் அழகாக உருவாக்கப்பட்ட மெழுகுப் பூங்கொத்தைவிட மலையுச்சியில் வளர்ந்திருக்கிற மிகச் சிறிய புல் மிகவும் சிறந்தது; ஏனென்றால் மனிதனின் எந்த விஞ்ஞானத்தினாலும் உருவாக்க முடியாத உயிர் அந்தப் புல்லில் இருக்கிறது. கிரேக்க தேசத்திலோ அல்லது இத்தாலியிலோ இருக்கின்ற பளிங்கினால் மிக அழகாகச் செதுக்கப்பட்டுள்ள சிலையைவிட, ஒரு குடிசையின் தரையில் தவழ்ந்துகொண்டிருக்கும் நோய்வாய்ப்பட்ட குழந்தை உயர்ந்தது. அந்தச் சிலை எவ்வளவுதான் பளபளப்பாக அழகாக இருந்தாலும் அது செத்தது; அதில் உயிர் இல்லை. கிறிஸ்துவின் குடும்பத்தில் உள்ள ஒரு பெலவீனமான மனிதன், உலகத்தின் தலைசிறந்த மனிதர்களைவிட தேவனுடைய பார்வையில் விசேஷமானவன். இவ்விருவரில் ஒருவன் தேவனுக்கென்று வாழ்கிறான்; அவன் நித்தியமாக வாழ்வான். மற்றவனோ, அவனுக்கு எவ்வளவுதான் அறிவு பெருகியிருந்தாலும், இன்னமும் பாவத்தில் மரித்தவனாய் இருக்கிறான்.
ஓ! சிநேகிதனே! மரித்த நிலையிலிருந்து உயிருள்ள நிலைக்குக் கொண்டுவரப்பட்டிருக்கிற உனக்கு நன்றியோடு இருப்பதற்கான காரணங்கள் இருக்கின்றன. சுபாவத்தின்படி நீ ஒரு காலத்தில் எவ்வாறு இருந்தாய் என்பதை நினைவில் கொள்—மரித்தவனாய் இருந்தாய். கிருபையினாலே இன்று எந்த நிலைக்கு வந்திருக்கிறாய் என்பதைச் சிந்தித்துப் பார்—உயிருள்ள நிலையை அடைந்திருக்கிறாய். கல்லறையில் உள்ள காய்ந்த எலும்புகளைப் பார்; அப்படித்தான் நீயும் இருந்தாய். உன்னை மாற்றியது யார்? உனது தேவனுடைய பாதபடிக்குச் சென்று அவர் முன் சாஷ்டாங்கமாய் விழுந்து பணிந்துகொள். அவருடைய கிருபைக்காக ஸ்தோத்திரம் செலுத்து. இலவசமாகப் பெற்ற அந்தப் பிரத்தியேகமான கிருபைக்காக நன்றி சொல். "கர்த்தராகிய ஆண்டவரே! தேவரீர் என்னை இதுவரைக்கும் கொண்டுவந்ததற்கு நான் எம்மாத்திரம்? நான் யார்? ஏன் என்னிடம் இவ்வளவு கருணை காட்டுகிறீர்?" என்று அடிக்கடி அவருடைய சமூகத்தில் கூறு.
மரித்த ஆத்துமா ஆவிக்குரிய உயிர் பெறுவது எப்படி? அதற்கு எவ்விதத்தில் மட்டுமே உணர்வூட்டப்படுகிறது? நான் இவ்வளவு எழுதிய பிறகு, இதை உங்களுக்குச் சொல்லாவிட்டால் அது மிகவும் கொடுமையான செயலாகும். பயங்கரமான வனாந்தரத்துக்குள் உங்களை அழைத்துச் சென்று, தண்ணீரும் உணவும் கொடுக்காமல் அங்கேயே விட்டுவிட்டு வருவதற்கு ஒப்பாகும். செங்கடல் வரைக்கும் வழிநடத்திச் சென்று, பிறகு நீங்களே கடந்து செல்லுங்கள் எனச் சொல்லுவதற்கு ஒப்பாகும். பார்வோனைப் போலச் செங்கல் செய்யுங்கள் எனக் கட்டளையிட்டுவிட்டு, அதற்குத் தேவையான வைக்கோலைக் கொடுக்காமல் இருப்பதற்கு ஒப்பாகும். உங்களுடைய கைகளையும் கால்களையும் கட்டிப் போட்டுவிட்டு, "பந்தயப் பொருளைப் பெறும்படிக்கு ஓடுங்கள்" என்று கூறி, நல்ல போராட்டத்தை நீங்கள் போராட வேண்டுமென விரும்புவதற்கு ஒப்பாகும். நான் அந்த மாதிரி செய்ய மாட்டேன். நீங்கள் ஓடிச் சென்று அடைய வேண்டிய வாசலை நான் உங்களுக்குச் சுட்டிக் காண்பிக்கும் வரை உங்களை விடமாட்டேன். மரித்த ஆத்துமாக்களுக்காக முன்னேற்பாடாகச் செய்து வைக்கப்பட்டுள்ள அனைத்தையும் தேவனுடைய உதவியால் உங்கள் முன் வைக்கப் போகிறேன். இன்னும் சற்று நேரம் நான் கூறுவதைக் கவனமாகக் கேளுங்கள்; வேத வாக்கியங்களில் எழுதி வைக்கப்பட்டுள்ளவைகளை உங்களுக்கு எடுத்துக் காண்பிப்பேன்.
ஒன்று மாத்திரம் நிச்சயம்—இந்த மகத்தான மாற்றத்தை நமக்கு நாமே ஏற்படுத்திக்கொள்ள முடியாது; அது நம் கையில் இல்லை. அதைச் செய்வதற்கான சக்தியோ அதிகாரமோ நமக்குக் கிடையாது. பாவங்களை நம்மால் மாற்றிக்கொள்ள முடியலாம், ஆனால் நமது இருதயத்தை நம்மால் மாற்ற முடியாது. ஒருவேளை ஒரு புதிய வழியை நாம் கண்டுபிடிக்கலாம், ஆனால் புதிய சுபாவத்தை உருவாக்க முடியாது. நாம் கணிசமான சீர்திருத்தங்களையும் மாற்றங்களையும் நம் வாழ்வில் கொண்டுவரலாம்; வெளிப்படையாகத் தெரிகின்ற அநேக கெட்ட பழக்கங்களைத் தள்ளிப் போடலாம்; அநேக நல்ல கடமைகளைச் செய்யத் தொடங்கலாம். இருந்தாலும் நமக்குள்ளாக ஒரு புதிய நோக்கத்தை நம்மால் உருவாக்க முடியாது. ஒன்றுமில்லாமையிலிருந்து நம்மால் எதையும் உருவாக்க முடியாது. எத்தியோப்பியன் தன் தோலையும், சிவிங்கி தன் புள்ளிகளையும் மாற்ற முடியாது (எரேமியா 13:23); அதுபோலவே மரித்த நிலையிலிருக்கும் நமது ஆத்துமாவை உயிர்ப்பிக்க நம்மால் முடியாது.
"நல்ல கடமை ஒன்றைக்கூட மனித சுபாவத்தினால் செய்ய முடியாது. எந்த ஒரு நற்காரியத்தினால் நீங்கள் மோட்சம் செல்வீர்களென்று மனிதனிடம் கேட்டால் அவனால் ஒன்றைக்கூடச் சொல்ல முடியாது. லாசருவைக் கல்லறையிலிருந்து உயிர்ப்பித்தது போல, தேவன்தாமே அவனைப் பாவக்குழியிலிருந்து எழுப்பும் வரைக்கும், அவனால் தேவனுக்குப் பிரியமான எதையும் செய்ய முடியாது. அவன் ஒருவேளை ஒழுக்கமுள்ள செயல்களைச் செய்கிறவனாக இருக்கலாம்; ஆனால் மரித்த நிலையிலிருந்து உயிர்ப்பிக்கப்பட்டு, அறிவொளி பெற்ற மனிதன் நடப்பதைப் போல நடப்பது அவனுடைய சக்திக்கு அப்பாற்பட்டது." — அஷ்ஷரின் பிரசங்கங்களிலிருந்து.
"சாத்தானைச் சாத்தானால் விரட்ட முடியாதது போலவே, இயற்கை சுபாவத்தால் இயற்கை சுபாவத்தை அழித்துப் போட முடியாது." — தாமஸ் வாட்சன் (Thomas Watson), 1653.
இன்னொரு விஷயமும் அதே போலத் தெளிவாகத் தெரிகிறது. வேறு எந்த மனிதனும் இதை நமக்காகச் செய்ய முடியாது. தேவ ஊழியர்கள் நமக்குப் பிரசங்கிக்கலாம், நம்மோடு சேர்ந்து ஜெபிக்கலாம், ஞானஸ்நானம் செய்விக்கலாம், கர்த்தருடைய பந்தியில் பங்கெடுக்க அனுமதிக்கலாம், அப்பமும் திராட்சை இரசமும் நமக்குக் கொடுக்கலாம்; ஆனால் ஆவிக்குரிய ஜீவனை அவர்களால் நமக்கு அளிக்க முடியாது. ஒழுங்கீனமானவைகளை அவர்கள் ஒருவேளை ஒழுங்காக்கலாம்; வெளிப்படையாகத் தெரிகின்ற பாவங்களைக் கண்டித்துத் திருத்தலாம்; ஆனால் அதற்குமேல் ஆழமாக அவர்களால் செல்ல முடியாது. நமது இருதயத்தின் ஆழத்தில் மறைந்திருக்கிறவைகளை அவர்களால் காண முடியாது. பவுல் நட்டிருக்கலாம், அப்பொல்லோ நீர் பாய்ச்சியிருக்கலாம், ஆனால் விளையச் செய்கிறவர் தேவனல்லவா? (1 கொரிந்தியர் 3:6). யாரால் மரித்த ஆத்துமாவை உயிர்ப்பிக்க முடியும்? தேவனைத் தவிர வேறு யாராலும் அதைச் செய்ய முடியாது. ஆதாமின் நாசியில் ஜீவ சுவாசத்தை ஊதி உயிர்பெறச் செய்த தேவனால் மட்டுமே மரித்துப் போன நிலையிலுள்ள ஒரு பாவியை உயிருள்ள கிறிஸ்தவனாக்க முடியும். சிருஷ்டிப்பின் நாளிலே ஒன்றுமில்லாமையிலிருந்து இவ்வுலகத்தை வடிவமைத்தவரால் மாத்திரமே ஒரு மனிதனைப் புது சிருஷ்டியாக்க முடியும். "வெளிச்சம் உண்டாகக்கடவது" என்றார், வெளிச்சம் உண்டாயிற்று. அவ்விதமாக வெளிச்சத்தை உண்டாக்கியவரால் மாத்திரமே மனிதனுடைய இருதயத்தில் பிரகாசமுள்ள ஆவிக்குரிய வெளிச்சத்தை உண்டாக்க முடியும். மண்ணிலிருந்து மனிதனை உருவாக்கி, அவனுடைய சரீரத்திற்கு உயிர் கொடுத்தவரால் மாத்திரமே அவனுடைய ஆத்துமாவுக்கும் உயிர் கொடுக்க முடியும். பரிசுத்த ஆவியானவரின் மூலமாக இந்த விசேஷித்த பணியை நிறைவேற்றுகிறவர் அவரே; அதைச் செய்யும் வல்லமை உள்ளவரும் அவரே.
"ஒன்றுமில்லாமையிலிருந்து எதையாவது சிருஷ்டிப்பது என்பது எவ்வளவு பலமுள்ளவர்களாலும் முடியாத காரியம். மனிதர்களாலும் தேவதூதர்களாலும் ஒரு புல்லைக்கூட உருவாக்க முடியாது. இது தனது ஆளுகையின் தனித்துவமான சிறப்புரிமை என தேவன் சவால் விடுகிறார் (ஏசாயா 40:26). உலக மனிதனை மாற்றுவது என்பது மாபெரும் உலகத்தைச் சிருஷ்டிப்பதை விடவும் உயர்ந்தது என்று அகஸ்டின் நன்றாய்ச் சொல்லியிருக்கிறார்." — ஜார்ஜ் ஸ்வின்னோக் (George Swinnock), 1660.
நமது ஆவிக்குரிய வாழ்க்கைக்கும் நித்திய வாழ்க்கைக்கும் தேவையானவை எல்லாம் கிறிஸ்துவின் மகிமையான சுவிசேஷத்தில் அடங்கியிருக்கின்றன. நமது ஆண்டவராகிய இயேசு ஒரு முழுமையான இரட்சகர். அவரைத் தலையாகக் கொண்டுள்ள சரீரத்தில் செத்த அங்கம் எதுவுமில்லை. அவருடைய மக்களின் பாவம் மன்னிக்கப்பட்டு, அவர்கள் நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறார்கள். அது மாத்திரமல்லாமல், அவர்கள் உயிர்ப்பிக்கப்பட்டு அவரோடு இணைக்கப்பட்டிருக்கிறார்கள்; அவருடைய உயிர்த்தெழுதலில் பங்குள்ளவர்களாக ஆக்கப்பட்டிருக்கிறார்கள். ஆவியானவர் பாவிகளை அவரோடு இணைக்கிறார்; அந்த இணைப்பின் காரணமாக அவர்களை மரித்த நிலையிலிருந்து உயிரோடே எழுப்புகிறார். அவரை விசுவாசிக்கும் பாவிகள் அவருக்குள் வாழ்கிறார்கள். கிறிஸ்துவுக்கும் அவர்களுக்கும் இடையேயுள்ள ஐக்கியமே அவர்களுடைய உயிர்நாடியாக இருக்கிறது. அதைத் தொடங்கி வைத்து, செயல்பட வைக்கிற பணியைப் பரிசுத்த ஆவியானவர் நிறைவேற்றுகிறார். நமது ஆவிக்குரிய வாழ்க்கையின் ஜீவ ஊற்றாக நியமிக்கப்பட்டிருப்பவர் கிறிஸ்து; அதை நமது ஆத்துமாவுக்கு விளங்கச் செய்வதற்காக நியமிக்கப்பட்டிருப்பவர் பரிசுத்த ஆவியானவர்.
"பரிசுத்த ஆவியானவர் நம்மோடு தொடர்புகொண்டு, ஜீவ ஊற்றாகிய கிறிஸ்துவோடு நம்மை இணைக்கும்போது நாம் உயிர் பெறுகிறோம். அந்த நேரத்திலிருந்துதான் நாம் உயிர்பெறுவதாக எண்ண வேண்டும்." — ஜான் பிளேவல் (John Flavel).
"கிறிஸ்துவே எல்லா ஜீவனுக்கும் ஆதாரமாயிருக்கிறார்." — ரிச்சர்ட் சிப்ஸ் (Richard Sibbes), 1635.
உங்களுக்கும் ஜீவன் வேண்டுமானால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிடம் வாருங்கள்; அவர் உங்களைப் புறம்பே தள்ள மாட்டார். அவருக்கு விரோதமாகக் கலகம் பண்ணினவர்களுக்கும்கூட அவர் வரங்களை அருளுகிறவர். இறந்த மனிதனின் பிரேதம் எலிசாவின் எலும்புகளின் மீது பட்டபோது, அந்த மனுஷன் உயிரடைந்து தன் கால்களை ஊன்றி எழுந்திருந்தான் (2 இராஜாக்கள் 13:21). அதுபோல நீங்களும் உங்களுடைய விசுவாசமாகிய கரங்களைக் கொண்டு கர்த்தராகிய இயேசுவைத் தொட்ட உடனே தேவனுக்குள்ளாக உயிர் பெறுவீர்கள்; உங்களுடைய பாவங்கள் மன்னிக்கப்படும். இயேசுவிடம் வாருங்கள்; அப்போது உங்கள் ஆத்துமா பிழைக்கும்.
கடந்த காலத்தில் ஒருவனது வாழ்க்கை எவ்வளவு மோசமாயிருந்தாலும், அவனும்கூட ஒரு தீவிரமான கிறிஸ்தவனாக மாறக்கூடும் என்கிற நம்பிக்கையை நான் ஒருபோதும் இழக்க மாட்டேன். மரித்த நிலையிலிருந்து உயிர் பெறுவது என்பது எவ்வளவு பெரிய மாற்றம் என்பதை நான் அறிவேன். நம்மில் சிலருக்கும் மோட்சத்துக்கும் இடையில் மலையளவு வித்தியாசம் இருப்பது எனக்குத் தெரியும். மனித சுபாவத்தின்படி அவர்கள் இருதயமானது கடினப்பட்டதாகவும், தவறான அபிப்பிராயங்கள் நிறைந்ததாயும், துணிகரமான பாவங்களை உடையதாகவும் இருப்பதை நான் அறிவேன். ஆனால் ஒழுங்கின்மையும் வெறுமையுமானதிலிருந்துதான் இந்த அழகான, ஒழுங்கான உலகத்தை தேவன் உருவாக்கினார் என்பதையும் இச்சந்தர்ப்பத்தில் நான் நினைவுகூருகிறேன். கர்த்தராகிய இயேசுவின் சத்தம், நான்கு நாட்களாக மரித்த நிலையிலிருந்த லாசருவைச் சென்று அடைந்ததையும், அவனைக் கல்லறையிலிருந்து உயிரோடே எழுப்பி வெளியே கொண்டுவந்ததையும் நினைக்கிறேன். உலகத்தின் பல்வேறு தேசங்களிலும் தேவ ஆவியானவர் ஏற்படுத்தின அற்புதமான வெற்றிகளை நினைக்கிறேன். இவைகளெல்லாம் என் மனதில் இருப்பதால் நான் ஒருபோதும் நம்பிக்கை இழப்பதில்லை. ஆம்! நம்மோடு இருப்பவர்களில் சிலர் இப்போது பாவத்தினால் மரித்தவர்களாகக் காணப்பட்டாலும், வருங்காலத்தில் ஒருவேளை புது சிருஷ்டியாக உயிர்ப்பிக்கப்பட்டு, தேவனுக்கு முன்பாக ஒரு புதிய வாழ்க்கையை வாழத் தொடங்கலாம் என்கிற நம்பிக்கை இருக்கிறது.
ஏன் அப்படி நடக்காது? பரிசுத்த ஆவியானவர் இரக்கமும் அன்பும் நிறைந்தவர். எந்த மனிதனையும் அற்பமானவன் என்று அவர் புறக்கணித்துவிட மாட்டார். அவர் யாருடைய பாவங்களின் நிமித்தமாகவும் அவனை விட்டு விலகிச் சென்றுவிட மாட்டார். அவர் கொரிந்து சபையாரிடம் வந்து அவர்களை உயிர்ப்பிக்கும் அளவிற்கு அவர்களிடம் எந்த மேன்மையான குணங்களும் இல்லை. அவர்களைக் குறித்து பவுல் தமது நிருபத்தில், "வேசிமார்க்கத்தாரும், விக்கிரக ஆராதனைக்காரரும், விபசாரக்காரரும், சுயபுணர்ச்சிக்காரரும், ஆண்புணர்ச்சிக்காரரும், திருடரும், பொருளாசைக்காரரும், வெறியரும், உதாசினரும், கொள்ளைக்காரரும்... உங்களில் சிலர் இப்படிப்பட்டவர்களாயிருந்தீர்கள்; ஆயினும் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலும், நமது தேவனுடைய ஆவியினாலும் கழுவப்பட்டீர்கள், பரிசுத்தமாக்கப்பட்டீர்கள், நீதிமான்களாக்கப்பட்டீர்கள்" என்று குறிப்பிட்டுள்ளார் (1 கொரிந்தியர் 6:9-11).
பரிசுத்த ஆவியானவர் வந்து கொலோசெய மக்களைச் சந்திக்கும் அளவிற்கு அவர்களிடமும் எந்த நற்குணமும் காணப்படவில்லை. "விபசாரம், அசுத்தம், மோகம், துர்இச்சை, விக்கிரக ஆராதனையான பொருளாசை" இவைகளை அவர்கள் செய்துவந்தார்கள் என்று பவுல் கூறுகிறார். ஆனாலும் பரிசுத்த ஆவியானவர் அவர்களை உயிர்ப்பித்தார். அவர்கள் பழைய மனிதனையும் அவன் செய்கைகளையும் களைந்துபோட்டு, தன்னைச் சிருஷ்டித்தவருடைய சாயலுக்கொப்பாய்ப் பூரண அறிவடையும்படி புதிதாக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொள்ளும்படியாகப் பரிசுத்த ஆவியானவர் செய்திருக்கிறார் (கொலோசெயர் 3:5-10).
ஆவியானவர் மகதலேனா மரியாளிடம் வந்து அவள் ஆத்துமாவை உயிர்ப்பிப்பதற்கான தகுதி எதுவும் அவளிடத்தில் இல்லை. அவள் ஏழு பிசாசுகளால் பிடிக்கப்பட்டிருந்தாள். பாரம்பரியச் செய்தி உண்மையாயிருக்குமானால், அவள் ஒரு காலத்தில் இழிவானவளாகவும், அக்கிரமக்காரியாகவும் இருந்தாள் எனச் சொல்லுகிறார்கள். அவளையும்கூடப் பரிசுத்த ஆவியானவர் புது சிருஷ்டியாக மாற்றியிருக்கிறார். அவளுடைய பாவங்களிலிருந்து அவளை விடுவித்து, கிறிஸ்துவிடம் கொண்டுவந்தார். அவளை இயேசுவின் சிலுவையின் அருகில் கடைசிவரை நின்றவளாகவும், கல்லறைக்கு முதலாவது வந்தவளாகவும் ஆக்கினார்.
ஒரு ஆத்துமா கெட்டுப்போன நிலையில் இருக்கிறது என்பதற்காகப் பரிசுத்த ஆவியானவர் ஒருபோதும் அந்த மனிதனை விட்டு விலகிவிட மாட்டார். இதுவரைக்கும் அவர் அப்படிச் செய்ததில்லை, இனிமேலும் செய்ய மாட்டார். பாவம் நிறைந்த இருதயத்தைச் சுத்தப்படுத்தி, அதைத் தாம் வசிக்கும் ஆலயமாக ஆக்கிக்கொள்வது அவருடைய மகிமை. இனிமேலும்கூட அவர் நம்மிலுள்ள மோசமானவர்களை எடுத்துத் தமக்குரிய கிருபா பாத்திரங்களாக மாற்றலாம்.
ஏன் அப்படி நடக்கக் கூடாது? பரிசுத்த ஆவியானவர் சர்வ வல்லமை உடையவர். அவரால் கல்லான இருதயத்தைச் சதையான இருதயமாக மாற்ற முடியும். மோசமான கெட்ட பழக்கங்களை அவரால் உடைத்து அழிக்க முடியும்; கடினமான விஷயங்களை அவரால் எளிதாகச் செய்ய முடியும். கடினமான எதிர்ப்புகள் அவருக்கு முன்னால் பனியைப் போல உருகிவிடும். அவரால் வெண்கலக் கதவுகளை உடைத்து, தவறான அபிப்பிராயங்களாகிய தாழ்ப்பாள்களை முறித்துத் திறந்துவிட முடியும். எல்லாப் பள்ளங்களையும் நிரப்பி, கோணலானவைகளைச் சரிசெய்துவிட அவரால் முடியும். அடிக்கடி அவர் இவ்வாறு செய்திருக்கிறார்; இனிமேலும் செய்வார்.
"மக்களை உயிர்ப்பித்து, அவர்களைப் புத்தம் புதியவர்களாக மாற்றுகிற ஆற்றலை உடையவர் பரிசுத்த ஆவியானவர். அதனால் அவர்கள் முன்னர் இருந்தது போல இருப்பதில்லை." — ஹோமிலி (Homily).
கிறிஸ்தவத்தை வெகுவாக எதிர்க்கின்ற ஒரு யூதனைத் தெரிந்துகொண்டு, அந்த யூதனை முற்றிலுமாக மாற்றக்கூடிய வல்லமை உடையவர் அவர். உண்மையான விசுவாசிகளை உபத்திரவப்படுத்தின ஒரு யூதன், பரிசேயக் கருத்துக்களில் மிகுந்த பற்று உடைய மனிதன், சுவிசேஷத்திற்கு எதிராகத் தவறான அபிப்பிராயம் கொண்டிருந்த ஒரு மனிதன்—அப்பேர்ப்பட்ட ஒரு மனிதனை, ஒரு காலத்தில் தான் எதிர்த்த விசுவாசத்தையே பிரசங்கிக்கும் வல்லமையான பிரசங்கியாக மாறப்பண்ணுவது பரிசுத்த ஆவியானவரின் வல்லமை. அதை அவர் ஏற்கனவே செய்திருக்கிறார்; அப்படி மாற்றப்பட்ட மனிதன்தான் அப்போஸ்தலனாகிய பவுல்.
பரிசுத்த ஆவியானவரால் ஒரு ரோமன் கத்தோலிக்க மதகுருவை முற்றிலுமாக மாற்ற முடியும். ரோமன் கத்தோலிக்க மூடநம்பிக்கைகளில் வளர்க்கப்பட்டவர், சிறுவயது முதலே தவறான கோட்பாடுகளில் பயிற்றுவிக்கப்பட்டு போப்புக்குக் கீழ்ப்படியக் கற்றுக்கொடுக்கப்பட்டவர், தவறான கொள்கைகளில் ஊறிப்போனவர்—அப்படிப்பட்ட ஒருவரை, "விசுவாசத்தினால் மாத்திரமே நீதிமானாக முடியும்" என்று உலகத்தாரின் முன்பாகத் தெளிவாக அறிக்கையிட வைத்தவர் பரிசுத்த ஆவியானவர். மார்டின் லூத்தர் (Martin Luther) என்கிற மதகுருவைப் பரிசுத்த ஆவியானவர் இவ்வாறாக மாற்றினார்.
கல்வியோ, ஆதரவோ, பணமோ இல்லாத ஒரு ஏழை ஆங்கிலேய மனிதன்—உலோகப் பாத்திரங்களைப் பழுதுபார்க்கும் வேலை செய்பவர், ஒரு காலத்தில் தூஷித்தல் மற்றும் சபித்தல் ஆகியவற்றிற்குப் பெயர்போனவர்—அந்த மனிதனை மாற்றி, அப்போஸ்தலர்களின் காலத்திற்குப் பிறகு அதற்கு ஒப்பான நூல் வேறொன்றும் ஏற்படவில்லை எனும்படியான ஒரு புனிதமான நூலை எழுதும்படியாகச் செய்தவர் பரிசுத்த ஆவியானவர். 'மோட்சப் பிரயாணம்' (The Pilgrim's Progress) என்கிற நூலை எழுதின ஜான் பன்யன் (John Bunyan) என்பவரைத்தான் பரிசுத்த ஆவியானவர் இவ்விதமாக மாற்றியிருந்தார்.
உலகப்பிரகாரமாகவும் பாவத்திலும் மூழ்கியிருந்த, அடிமை வியாபாரம் செய்யும் கப்பலின் சீர்கெட்ட தலைவன் ஒருவனை வெற்றிகரமான சுவிசேஷ ஊழியனாகப் பரிசுத்த ஆவியானவரால் மாற்ற முடியும். அவர் பக்தி நிரம்பிய கடிதங்களை எழுதினார்; அவை பக்தி வாழ்க்கைக்கு உதவும் களஞ்சியங்களாக இருக்கின்றன. அநேக பக்திப் பாடல்களை இயற்றினார்; ஆங்கில மொழி தெரிந்த இடங்களிலெல்லாம் அவை இன்றும் பாடப்படுகின்றன. ஜான் நியூட்டன் (John Newton) என்கிற மனிதனைத்தான் ஆவியானவர் இவ்விதமாக மாற்றியிருந்தார்.
இவ்வாறெல்லாம் பரிசுத்த ஆவியானவர் செய்திருக்கிறார்; இதற்கு மேலும் செய்திருக்கிறார். எல்லாவற்றையும் விவரித்துக் கூற என்னால் முடியாது. ஆவியானவரின் கரம் குறுகினது அல்ல; அவருடைய வல்லமை குறையவில்லை. அவர் கர்த்தராகிய இயேசுவைப் போலவே நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார் (எபிரெயர் 13:8). இன்றும் அவர் அதிசயமானவைகளைச் செய்கிறார்; உலக முடிவு வரைக்கும் செய்வார்.
மீண்டும் சொல்கிறேன்: எந்த மனிதனுடைய ஆத்துமாவும் உயிர்ப்பிக்கப்படுவதைக் குறித்து நான் நம்பிக்கை இழந்துவிட மாட்டேன். அது உயிரடைவது மனிதனைப் பொறுத்ததாயிருக்குமானால் நான் நம்பிக்கை இழப்பேன்; ஏனெனில் சிலர் மிகவும் கடின இருதயமுள்ளவர்களாய்க் காணப்படுகிறார்கள். மனிதர் உயிர்ப்பிக்கப்படுவது தேவ ஊழியர்களைப் பொறுத்ததாயிருந்தாலும் எனக்கு நம்பிக்கை இருக்காது; ஏனெனில் மிகச் சிறந்த ஊழியரும்கூடக் குறைபாடுள்ளவரும் பெலவீனருமாய் இருக்கிறார்கள். ஆனால் பரிசுத்த ஆவியாகிய தேவன் ஆத்துமாக்களை உயிர்ப்பிக்கிறவராக இருக்கிறார் என்பதை நான் நினைக்கும்போது என்னால் நம்பிக்கை இழந்துவிட முடியாது. ஏனென்றால் அவரால் முடியாதது எதுவும் இல்லை என்பதை நான் நிச்சயமாக அறிந்திருக்கிறேன்.
இவ்வுலக வாழ்க்கையில் எனக்கு அறிமுகமானவர்களின் பட்டியலில், கடின மனதுடையவராயிருந்தவர் இளகிய மனமுடையவராக மாறினால் அதைக் குறித்து நான் ஆச்சரியப்பட மாட்டேன்; பெருமை நிறைந்த மனிதன் இயேசுவின் பாதத்தில் ஒரு குழந்தையைப் போல அமர்ந்தாலும் நான் ஆச்சரியம் கொள்ள மாட்டேன். அழிவின் பாதையாகிய விசாலமான வழியில் பயணம் செய்துகொண்டிருந்த அநேகரை, நான் மரித்துப் போன பிறகு, நியாயத்தீர்ப்பின் நாளிலே வலதுபுறமாக நிற்பவர்களின் வரிசையில் நிற்கக் கண்டால் நான் திடுக்கிட்டு, "என்ன? நீங்கள் எப்படி இங்கு வந்தீர்கள்?" என்று எண்ணி ஆச்சரியப்பட மாட்டேன். அவர்களிடம் சென்று, "மரித்தோரை உயிர்ப்பிக்கிறவரால் முடியாத காரியம் எதுவுமில்லை என்று நான் உங்களுடன் வசித்தபோதே சொன்னேன் அல்லவா!" என அவர்களிடம் ஞாபகப்படுத்துவேன்.
கிறிஸ்துவின் சபைக்கு உதவி செய்வதற்கு யாருக்காவது விருப்பம் இருக்கிறதா? அப்படியானால் பரிசுத்த ஆவியானவரின் கிருபை அதிகமாகப் பொழியப்பட வேண்டுமென ஜெபியுங்கள். ஆவியானவரால் மாத்திரமே பிரசங்கங்களுக்கு உயிரோட்டம் ஏற்படுத்த முடியும். அவரால் மாத்திரமே நல்ல புத்திமதிகளை வழங்க முடியும்; வல்லமையாகக் கடிந்துகொள்ளும் சக்தியைக் கொடுக்க முடியும்; பாவியின் இருதயத்தைச் சுற்றிலும் எழுப்பப்பட்டிருக்கும் மதில் சுவர்களை உடைத்தெறிய முடியும். சிறந்த பிரசங்கங்களையும் அருமையான புத்தகங்களையும் விட, பரிசுத்த ஆவியானவரின் பிரசன்னம்தான் இக்காலத்திற்கு மிகவும் அதிகமாகத் தேவை.
உங்களில் யாராவது தேவனை நோக்கி ஈர்க்கப்படுவதாகச் சிறிதளவாவது உணருகிறீர்களா? உங்களுடைய அழியாத ஆத்துமாவைக் குறித்துக் கொஞ்சமாவது அக்கறை கொள்கிறீர்களா? அப்படியானால் ஜீவனுள்ள நீரூற்றாகிய இயேசுவை நோக்கி விரைந்து ஓடிச் செல்லுங்கள்; அப்போது பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்வீர்கள் (யோவான் 7:39). பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக்கொள்வதற்காக உடனடியாக ஜெபிக்கத் தொடங்குங்கள். நம்பிக்கை இழந்துவிடாதீர்கள். "தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்குப் பரிசுத்த ஆவியைக் கொடுப்பதாக" பிதா வாக்குக் கொடுத்திருக்கிறார் (லூக்கா 11:13). அவருடைய பெயரே சத்திய ஆவியானவர் என்றும், ஜீவ ஆவி என்றும் இருக்கிறது. அவர் வந்து உங்களுக்கு ஒரு புதிய இருதயத்தைக் கொடுக்கும் வரைக்கும் விடாமல் அவரிடம் வேண்டுதல் செய்யுங்கள். "என்னையும் ஆசீர்வதியும் கர்த்தாவே! எனக்கு உணர்த்தி, என்னை உயிர்ப்பியும்" என்று அவரிடம் ஊக்கமாகக் கெஞ்சுங்கள்.
எங்கள் இணைத்தளத்தில் உள்ள கட்டுரைகள் மற்றும் புத்தகங்களைப் வாசகார்களின் வசதிக்காக, BSI இந்திய வேதாகம சங்கத்தாரால் வெளியிடப்பட்ட O.V. தமிழ் வேதாகமத்தின் வசனங்களை பயன்படுத்தியுள்ளோம்.
© 2026. தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்.