தீத்து 2:11–14 சொல்கிறது: “ஏனெனில் எல்லா மனுஷருக்கும் இரட்சிப்பை அளிக்கத்தக்க தேவகிருபையானது பிரசன்னமாகி, நாம் அவபக்தியையும் லௌகிக இச்சைகளையும் வெறுத்து, தெளிந்த புத்தியும் நீதியும் தேவபக்தியும் உள்ளவர்களாய் இவ்வுலகத்திலே ஜீவனம்பண்ணி, நாம் நம்பியிருக்கிற அனந்த பாக்கியத்துக்கும், மகாதேவனும் நமது இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவினுடைய மகிமையின் பிரசன்னமாகுதலுக்கும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும்படி நமக்குப் போதிக்கிறது. அவர் நம்மைச் சகல அக்கிரமங்களினின்று மீட்டுக்கொண்டு, தமக்குரிய சொந்த ஜனங்களாகவும், நற்கிரியைகளைச் செய்ய பக்திவைராக்கியமுள்ளவர்களாகவும் நம்மைச் சுத்திகரிக்கும்படி, நமக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார்.”
மிகச் சுருக்கமாக நாம் பின்வரும் கருத்துக்களைப் பதிய வைப்போம். அப்போஸ்தலனாகிய பவுல் இரண்டு விதமான 'பிரசன்னமாகுதல்களைக்' குறித்து எழுதியுள்ளார். முதலாவதாக, “தேவனுடைய கிருபை பிரசன்னமாகி” என்று பவுல் குறிப்பிடுகிறார்; இது இயேசு கிறிஸ்துவின் முதலாம் வருகையைக் குறிக்கிறது. இரண்டாவதாக, “நாம் நம்பியிருக்கிற அனந்த பாக்கியத்துக்கும்... இயேசு கிறிஸ்துவினுடைய மகிமையின் பிரசன்னமாகுதலுக்கும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும்படி” என்று சொல்வது கிறிஸ்துவின் இரண்டாம் வருகையைக் குறிக்கிறது.
நமது இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவின் முதலாம் வருகை நமக்கு முன்பாக மூன்று காரியங்களை முன்வைக்கிறது:
-
கிறிஸ்துவின் வருகை எல்லா மனிதருக்கும் இரட்சிப்பைக் கொண்டு வருகிறது. இதில் எல்லாத் தரப்பு மக்களும் அடங்குவர்; 9-வது வசனத்தில் சொல்லப்படும் அடிமைகள் உட்பட அனைவருக்குமான இரட்சிப்பைக் கிறிஸ்துவின் முதலாம் வருகை கொண்டு வந்திருக்கிறது.
-
இரண்டாவதாக, கிறிஸ்துவில் கிடைக்கும் இந்தக் கிருபையைப் பெற்றுக்கொண்டவர்கள் இரண்டு வழிகளில் நடக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். இங்கே பயன்படுத்தப்பட்டுள்ள ‘போதிக்கிறது’ (அல்லது புத்தி சொல்லுகிறது) என்கிற வார்த்தை, ‘பயிற்சியின் வழியாகப் புத்திமதியைப் பெறுதல்’ என்கிற அர்த்தத்தில் வருகிறது.
-
முதல் போதனை (எதிர்மறையானது): நாம் அவபக்திக்கும், உலக இச்சைகளுக்கும் மறுப்புத் தெரிவிக்க வேண்டும். அவைகளைப் புறக்கணிக்கவும், விட்டுவிடவும், அவைகளிலிருந்து திரும்பவும் வேண்டும்.
-
இரண்டாவது புத்திமதி (நேர்மறையானது): நாம் இந்தக் காலத்தில் விவேகமுடனும், நீதியாகவும், பக்தியுள்ளவர்களாகவும் வாழ வேண்டும்.
‘தெளிந்த புத்தியுடன் வாழ வேண்டும்’ என்கிற அறிவுரைக்கு அர்த்தம், நாம் சுயக்கட்டுப்பாடு உடையவர்களாய், நல்யோசனை மற்றும் அறிவுப்பூர்வமான முறையில் வாழ வேண்டும் என்பதாகும். ‘பக்தி’ என்கிற வார்த்தை, தேவனுக்குக் கனத்தைத் தருவதும், அவருக்குப் பிரியத்தைத் தருவதுமான வாழ்க்கை வாழ்வதைக் குறிக்கிறது. நமது மனம் தேவனுடைய வார்த்தையில் வேரூன்றக் கட்டப்படாமல், நிரப்பப்படாமல் அல்லது அதன் ஆளுகைக்கு உட்படாமல், நாம் தெளிந்த புத்தியுடனும், நீதியோடும், பக்தியோடும் வாழ முடியாது.
கிறிஸ்துவில் நமக்குக் கிடைத்த தேவகிருபை, இந்த உலக வாழ்வில் நம்மை இரட்சிப்பது மட்டுமல்ல; கிறிஸ்துவில் இருக்கும் இந்த தேவகிருபை, நாம் இவ்வுலகில் எவ்வாறு வாழ வேண்டும் என்பதையும் போதிக்கிறது. நாம் வாழும் இந்த உலகம் தீமையும் பாவமும் நிறைந்ததாகவே இருக்கிறது. இதைப் பவுல், “கோணலும் மாறுபாடுமான சந்ததி” என்று குறிப்பிடுகிறார் (பிலிப்பியர் 2:15).
நாம் இப்படிப்பட்ட தீமையான, பாவம் நிறைந்த உலகில் வாழ்ந்து வருகிறோம். ஆனால், இப்பிரபஞ்சத்திற்குரிய தீமை மற்றும் பாவத்திலிருந்து நாம் திரும்ப வேண்டும் என்றும், இம்மைக்குரிய வாழ்வில் தேவனுக்குக் கனத்தைக் கொண்டுவரும்படியான வாழ்க்கை வாழ வேண்டும் என்றும் பவுல் விரும்புகிறார்.
இது நமது (வசனம் 13-ல் உள்ள) கடைசிக் குறிப்பிற்கு நேராக நம்மை வழிநடத்துகிறது. கிறிஸ்துவின் முதலாம் வருகையின் விளைவாக நம்மிடம் வந்த தேவனுடைய கிருபையானது, நாம் அவருடைய இரண்டாவது பிரசன்னமாகுதலை எதிர்பார்க்கும்படி அழைக்கிறது. இந்த எதிர்பார்ப்பு என்பது ஆர்வத்துடனும், நம்பிக்கையுடனும் வரவேண்டிய ஒன்று. இரண்டாம் வருகை, ‘அனந்த பாக்கியம்’ எனவும், ‘மகிமையின் பிரசன்னமாகுதல்’ எனவும் வர்ணிக்கப்பட்டுள்ளது. கர்த்தராகிய இயேசு கிறிஸ்து, “மகாதேவனும் நமது இரட்சகருமானவர்” என்று அழைக்கப்படுகிறார்.
மகாதேவனும் நமது இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்து! இயேசு நமது இரட்சகராகவும் தேவனாகவும் இருக்கிறார். ‘இரட்சகரும் தேவனும்’ என்று அழைக்கப்படுவது, இயேசு கிறிஸ்து மெய்யாகவே தேவன் என்பதை வலியுறுத்தச் சொல்லப்பட்டதே. வேதம் தெளிவாக இயேசு கிறிஸ்து தேவன் என்று போதிக்கிறது. அதை மறுதலிப்பது சத்தியத்தைப் பொய்யாக்கிவிட முடியாது. இந்தச் சத்தியத்தை மறுதலிப்பது என்பது, உங்கள் மனதின் அந்தகாரத்தை உறுதிப்படுத்துவதற்குச் சமானம் (எபேசியர் 4:17,18).
கிறிஸ்துவின் இரண்டாம் வருகை பற்றிய சத்தியத்தை நடைமுறையில் அப்பியாசப்படுத்தும் விதமாக, அப்போஸ்தலனாகிய யோவான் இவ்விதமாக எழுதுகிறார்: “அவர்மேல் இப்படிப்பட்ட நம்பிக்கை வைத்திருக்கிறவன் எவனும், அவர் சுத்தமுள்ளவராயிருக்கிறதுபோல, தன்னையும் சுத்திகரித்துக்கொள்ளுகிறான்” (1 யோவான் 3:3).
கிறிஸ்துவின் இரண்டாம் வருகையின் மீது நம்பிக்கை வைத்திருப்பதும், அதை எதிர்பார்ப்பதும் நம்முடைய ஆவிக்குரிய வளர்ச்சியிலும், பரிசுத்த வாழ்விலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது.