வேதாகமம்

பரிசுத்த வேதாகமம்
ஆசிரியர்: C.H ஸ்பர்ஜன் 1834 - 1892
தமிழாக்கம்: சீர்திருத்த பாப்திஸ்து திருச்சபை சேலம்
வாசிப்பதற்கான நேரம்: 6 நிமிடங்கள்

 C.H. ஸ்பர்ஜன் 1855 ஆம் ஆண்டு மார்ச் 18 ஆம் தேதி பிரசங்கித்த பிரசங்கம்; தலைப்பு : "வேதாகமம்".

"என் வேதத்தின் மகத்துவங்களை அவர்களுக்கு எழுதிக்கொடுத்தேன்; அவைகளை அந்நியகாரியமாக எண்ணினார்கள்” (ஓசியா 8:12).

இது தேவன் தாமே எப்ராயீம் மீது சாற்றும் குற்றச்சாட்டாக இருந்தாலும், தேவன் தம்முடைய அன்பினிமித்தம் தம்முடைய சிருஷ்டிப்பை நோக்கிப் பார்த்து இவ்விதமாகக் கடிந்து கொள்கிறதை நாம் பார்க்கிறோம். அவர் விரும்பியிருந்தால், சூரியன், சந்திரன், நட்சத்திரங்களுடன் அல்லது தனிமையாகவே திரியேகக் கடவுளாகப் பரலோகத்தில் வாசம் பண்ணியிருக்கலாம். சிருஷ்டிப்பின் பேரில் எந்தவிதமான கவலையும் கொள்ள அவசியமில்லை. ஆனால், இந்த இடத்தில் கடவுள் மனிதனை நோக்கிப் பார்க்கிறார். அவனைக் குறித்து அக்கறையோடு பேசுகிறார். அவர் மனிதனை நோக்கிப் பார்த்து, "நீங்கள் தேவனுடைய பிள்ளைகளாக இருக்கிறீர்கள், தேவன் உங்களை நோக்கிப் பார்க்கிறார்" என்று சொல்லுகிறார்.

உங்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கின்ற வெளிச்சம் என்பது சர்வ ஏகாதிபத்தியத்தின் ஈவு. தேவன் சிருஷ்டிகராக உங்களை மறந்துவிடவில்லை. கடலில் அடிபட்டுப்போன நிலையில் அவர் உங்களைக் கைவிட்டுவிடவில்லை. அவர் உங்களை அறிந்திருக்கிறார். நீங்கள் தனிமையானவர்கள் இல்லை; அதை நினைத்துக்கொள்ளுங்கள். தேவன் உங்களைக் குறித்து இவ்விதமாகச் சொல்வது அவருடைய அன்பின் நிமித்தமாகவே. தேவன் நம் ஒவ்வொருவரையும் நோக்கிப் பார்க்கிறார். ஒரு சிறிய அடைக்கலக்குருவியும் அவருடைய திட்டத்தின் கீழ் இருக்கிறது. இந்த உலகத்தில் அவருடைய கண்பார்வைக்கு அப்பாற்பட்ட மனிதர் ஒருவருமில்லை. நம்முடைய ரகசியமான செயல்களையும் அவர் அறிந்திருக்கிறார். நம் வாழ்க்கையில் நாம் கடந்து போகின்ற துன்பங்கள், துயரங்களைப் பார்த்து அவருடைய கண்கள் அமர்ந்திருக்கவில்லை. ஏனென்றால் நாம் அவருடைய ஜனங்கள். ஆனால் இப்பொழுதோ நாம் வழிதவறியிருக்கிறோம். ஆகவேதான் இந்த இடத்தில் அவர் இவ்விதமாகப் பேசுகிறார். தேவன் எவ்வளவு இரக்கமுள்ளவராய் இருக்கிறார் என்பதைப் பாருங்கள்.

தேவன் மனிதனைப் பார்த்து, "என் வேதத்தின் மகத்துவங்களை அவர்களுக்கு எழுதிக் கொடுத்தேன்; அவைகளை அந்நிய காரியமாக எண்ணினார்கள்" என்று சொல்லுகிறார். இந்த இடத்தில் தேவன் மனிதனைப் புறக்கணித்து அவனை உதறித் தள்ளியிருக்கலாம். ஆனால் தேவன் பரலோகத்திலிருந்து தம்முடைய மக்களோடு பேசுகிறார். ஒரு பாவியின் நிலையை மனவருத்தத்தோடு இவ்விதமாய்ச் சொல்லுகிறார்: "எப்ராயீமே, நான் வேதத்தின் மகத்துவங்களை உனக்கு எழுதிக் கொடுத்தேன். அவைகளை நீ அந்நிய காரியங்களாக எண்ணிவிட்டாய். பரிசுத்த ஆவியானவர் உன்னோடே இடைப்பட வேண்டும் என்பதே என்னுடைய வாஞ்சையாயிருக்கிறது. தேவன் மகத்துவமான காரியங்களை உனக்குக் கொடுத்திருக்கிறார். ஆனால் அவைகளை நீ அற்பமாக எண்ணிவிட்டாய்". இது தேவனுடைய புத்தகமான வேதத்தைக் குறித்துச் சொல்லுகிறது.

இந்த வேதத்தைக் குறித்து 3 காரியங்களை நான் உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். முதலாவதாக, இதை ஆக்கியோன் 'நான் எழுதிக் கொடுத்தேன்' என்று சொல்லுகிறார். இரண்டாவது, 'வேதத்தின் மகத்துவங்கள்' என்று சொல்லுகிறார். மூன்றாவது, 'இந்தக் காலத்தில் வேதம்' கையாளப்படும் விதத்தைக் குறித்துச் சொல்ல விரும்புகிறேன்.

1. நான் எழுதிக் கொடுத்தேன்: வேதப்புத்தகத்தைக் குறித்துத் தேவன், "நானே இதை எழுதினவர்; மகத்துவமான காரியங்களை நான் எழுதிக் கொடுத்தேன்" என்று சொல்லுகிறார். தேவனே இந்தப் புத்தகத்தைத் தம்முடைய பரிசுத்த ஆவியைக் கொண்டு, தம்முடைய மனிதர்கள் மூலமாக நமக்கு எழுதிக் கொடுத்திருக்கிறார். நாகூம் குதிரைகளைக் குறித்தும், ஆபகூக் பாடுகளைக் குறித்தும், மல்கியாவில் எரியும்படியான உலகத்தைக் குறித்தும் எழுதுவதை நாம் வாசிக்கிறோம். யோவான் தேவ அன்பைக் குறித்துச் சொல்லுகிறதை நாம் பார்க்கிறோம். பேதுரு, "இந்தப் பூமியானது அக்கினிக்கு இரையாக வைக்கப்பட்டிருக்கிறது" என்று சொல்லுகிறார். இவை தேவனுடைய நித்தியமான வார்த்தைகள். இது தேவனுடைய புத்தகம். இதில் தேவன் தம்முடைய மகத்துவமான காரியங்களை வெளிப்படுத்தியிருக்கிறார்.

இந்த வேதத்தைத் தேவன் எழுதினார் என்பதை எப்படிச் சொல்ல முடியும் என்று நீங்கள் கேட்கலாம். நிச்சயமாகச் சொல்ல முடியும். இந்த வேதத்தின் மகத்துவமான எழுத்தின் வடிவம், இந்த உலகத்தில் எந்த ஒரு மனிதனும் தனித்து எழுதிவிட முடியாத அளவில் எழுதப்பட்ட தேவனுடைய மகத்துவமான சத்தியம் என்பதை நாம் பார்க்கிறோம். மனிதனுடைய அறிவுக்கு அப்பாற்பட்ட பல காரியங்கள், திரித்துவ சத்தியங்கள், உலகம் உண்டாக்கப்பட்ட விதம், இந்த உலகத்தைத் தேவன் வழிநடத்தும் விதம் எனச் சகலத்தையும் ஒரு உன்னதமான நோக்கத்தோடு செயல்படுத்துகின்ற ஒரு தேவனைக் காட்டுகிறது. இது ஒரு நேர்மையான புத்தகம். இது சாலமோன் போன்ற மனிதர்களால் சுயபுத்தியில் எழுதப்பட்டவைகள் அல்ல; கிரேக்கத் தத்துவங்களைக் கொண்டதல்ல. இது தேவன் மனிதர்களைக் கொண்டு எழுதிய புத்தகம். தேவனுடைய கரத்தினால் எழுதப்பட்டது. இந்தப் புத்தகத்தின் காலங்களை நாம் பார்க்கும்பொழுது, இது பரலோகத்திலிருந்து புறப்படுகின்ற காலமாய் இருக்கிறது. இதனுடைய ஒவ்வொரு எழுத்தும் நம்முடைய கண்களுக்கு மகிமையாய் இருக்கிறது. மேலும் இது அவருடைய வல்லமையை வெளிப்படுத்துகிறதாக இருக்கிறது. இது தேவனுடைய புத்தகம். இதற்கு முன்பாக என்னை நான் தாழ்த்துகிறேன். இது தேவனுடைய அதிகாரத்தைக் கொண்டது. பரலோகத்திலுள்ள ராஜாதி ராஜாவுடைய அதிகாரத்தைக் கொண்ட புத்தகம். இதை ஏற்றுக்கொள்வதே தேவனுக்கு நான் கொடுக்கும் கனமாய் இருக்கிறது.

வேதத்தில் அவருடைய மாறாத உண்மைத் தன்மையைப் பாருங்கள். இது மனிதர்களால் எழுதப்பட்டிருந்தால், என்றோ அழிந்து போயிருக்கும். ஆனால் இது தேவனுடைய வார்த்தை. அநேகர் இதைக் குற்றம்சாட்ட முயற்சி செய்தார்கள்; ஆனால் அவர்கள் அழிந்து போனார்கள், வேதம் அழிந்துபோகவில்லை. "தேவனுடைய வார்த்தையைக் குறித்து விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெறுகிறவன் இரட்சிக்கப்படுவான்; விசுவாசியாதவனோ ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுவான்" என்று வேதம் சொல்லுகிறது. தேவனுடைய வார்த்தையை தேவனுடைய வார்த்தையாக ஏற்றுக்கொள்ளாதவன் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுவான். தேவனுடைய வார்த்தை பரிபூரணமானது; நம்முடைய வாழ்க்கையில் பலனைக் கொடுக்கிறதாய் இருக்கிறது. அது ஜீவத் தண்ணீரை நமக்குக் கொடுக்கிறதாய் இருக்கிறது.

அடுத்ததாக, வேதத்தில் தேவனுடைய இரக்கத்தைக் குறித்துப் பார்க்கிறோம். இந்த வேதத்தை அவர் நமக்குக் கொடுத்திருப்பது அவருடைய மிகப் பெரிய இரக்கம். இருளில் நாம் தடுமாறாதபடி வெளிச்சத்தைக் கொடுக்கிறார். வாழ்க்கையில் ஒவ்வொரு காரியத்தையும் அறிந்து கொண்டு வாழக்கூடிய ஆலோசனைகளைத் தேவ ஆவியானவர் தம்முடைய வசனத்தின் மூலமாக நமக்குக் கொடுத்து, நம்மை வழிநடத்துகிறவராக இருக்கிறார். அவர் நம்மீது எவ்வளவு உன்னதமான கிருபையுள்ளவராகவும் அன்புள்ளவராகவும் இருக்கிறார் என்பதை நாம் சிந்தித்துப் பார்ப்பது அவசியமாய் இருக்கிறது. நீங்கள் கடைசியாக எப்போது வேதத்தை வாசித்தீர்கள்? அதற்கு நீங்கள் கனத்தையும் முக்கியத்துவத்தையும் உண்மையாகவே கொடுக்கிறீர்களா?

2. வேதத்தின் மகத்துவங்கள்: இரண்டாவது காரியம், "நான் மகத்துவமான காரியங்களை எழுதிக் கொடுத்தேன்" என்கிறார். வேதம் மிக உன்னதமான காரியங்களைக் குறித்துப் பேசுகிறது. ஒவ்வொரு வசனமும் நமக்குத் தேவனுடைய ஞானத்தை வெளிப்படுத்துகிறதாக இருக்கிறது. ஆண்டவருடைய வார்த்தை நமக்கு ஆழமான சத்தியங்களை வெளிப்படுத்துகிறது. இவைகள் நித்தியத்தின் காரியங்களாக இருக்கின்றன. வேதத்திலுள்ள எல்லாம் உன்னதமாகவும் மகத்துவமாகவும் இருக்கின்றன. ஆனாலும் சில காரியங்கள் அதிக முக்கியமானதாக இருக்கின்றன. தேவன் தம்முடைய மக்களை நேசிப்பதின் நிமித்தமாக, நாம் தெளிவாக அறிந்து கொள்ளக்கூடிய சத்தியத்தைக் குறித்துச் சொல்லுகிறார். ஒருசிலர், "நாங்கள் எங்களுடைய சுய சித்தத்தினால் இரட்சிக்கப்படுகிறோம்" என்று சொல்லலாம். இன்னும் சிலர், "நாங்கள் ஆண்டவருடைய கிருபையினால் இரட்சிக்கப்படுகிறோம்" என்று சொல்லலாம். ஆனால் வேதம் மட்டுமே நமக்குத் தெளிவான பதிலைக் கொடுக்கிறது. வேத காரியங்களில், ஒரு சபைக்குச் செல்பவர்கள் இன்னொரு சபைக்குச் செல்பவர்களோடு சில காரியங்களில் வித்தியாசமான புரிதல்களைக் கொண்டிருக்கலாம். ஆனால், அதிக முக்கியமாகச் சொல்லப்பட்டிருக்கின்ற காரியத்தில், எந்த விதமான சந்தேகமும் இல்லாமல், எந்த முரண்பாடும் இல்லாமல் தேவன் நமக்குத் தெளிவாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

தேவன், "மகத்துவமான காரியங்களை உங்களுக்கு எழுதிக் கொடுத்தேன்" என்று சொல்லுகிறார். தேவனுடைய சத்தியத்தின்படி தெளிவாய் வாழும்படியான ஒரு வாழ்க்கைக்கு, இந்த வேதமே நமக்கு அஸ்திபாரமாய் இருக்கிறது. தேவன் வேதத்தில் சொல்லும் காரியங்களில் அதிக முக்கியமான காரியங்களும் உண்டு. மனிதன் விழுந்து போனவன். ஆதாம்-ஏவாள் பாவம் செய்ததினால், தேவனுடைய கிருபைக்கும் அவருடைய இரக்கத்திற்கும் அந்நியனாகப் போனவன். மனிதனுடைய வாழ்க்கையின் நிலை மிகப் பயங்கரமானது. தன்னுடைய பொல்லாத இருதயத்தின் சிந்தையினால், தன் சொந்த வழிகளில் நடக்கிற நிலையில் காணப்படுகிறவன். ஆண்டவருடைய கிருபை அவனைச் சந்தித்து இரட்சிக்கவில்லையென்றால், அவனுக்கு மீட்பு என்பதே இல்லை.

இயேசு கிறிஸ்துவின் குற்றமில்லாத இரத்தத்தினால் நாம் மீட்கப்பட்டிருக்கிறோம். அவருடைய வல்லமையினால், அவர் நமக்காகச் செய்து முடித்த பலியினால், அவருடைய கிருபையினால் நாம் மீட்கப்பட்டிருக்கிறோம். அவர் தம்முடைய கிருபையினால் நம்மை மீட்கவில்லையென்றால், நம்முடைய அறிவும் ஞானமும் நம்மை மீட்க முடியாது. நாம் முற்றிலும் கைவிடப்பட்டவர்களாய், தேவனுடைய ஆக்கினைக்கு உரியவர்களாய் இருக்கிறோம் என்று வேதம் சொல்லுகிறது. நாம் நம்முடைய பாவங்களுக்கு மன்னிப்பைப் பெற்று மறுபிறப்பு அடையவில்லையென்றால், நம்முடைய வாழ்க்கை முற்றிலும் வீண் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். மீட்கப்படாத எந்த மனிதனும் மறுபிறப்பு அடைவதில்லை. அவன் தன்னுடைய வாழ்க்கையில் எவ்வளவு நல்லவனாகக் காணப்பட்டாலும், அவன் மறுபிறப்பைப் பெறாமல் இருந்தால், அவன் கைவிடப்பட்டவனாய் ஆக்கினைக்கு உரியவனாகவே இருப்பான்.

நம்முடைய வாழ்க்கை குறுகிய கால வாழ்க்கை. ஒரு நாள் நாம் எல்லோரும் முடிவு என்ற ஒன்றைச் சந்திக்க வேண்டும். இந்தப் பொல்லாத உலகத்திலே தேவனுடைய ஞானத்தைக் கொண்டு கொடுத்திருக்கின்ற இந்தப் புத்தகம் நமக்கு இனிமையானதாகக் காணப்படட்டும். அவருடைய இந்த வேத சத்தியம் நம்முடைய வாழ்க்கையில் ஜீவத் தண்ணீரை கொடுக்கிறதாகக் காணப்படட்டும். தேவனுடைய வார்த்தை ஒவ்வொன்றும் முக்கியமானது. ஆனால் அவற்றில் ஒரு சில காரியங்கள் அதிமுக்கியமானவை என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. நீங்கள் ஒருவேளை மறுபிறப்பு அடையாமல் இருப்பீர்களானால் இதைச் சிந்தித்துக் கொள்ளுங்கள். தேவன் இல்லாத வாழ்க்கை, எந்த நம்பிக்கையும் இல்லாத ஒரு வாழ்க்கை. அது நித்தியமான அழிவிற்குச் செல்லும்படியான ஒரு வாழ்க்கை. "சபிக்கப்பட்டவர்களே என்னை விட்டு அகன்று போங்கள்" என்று தேவன் சொல்லும்படியாக நம்முடைய வாழ்க்கையில் ஒருநாளும் நடந்துவிடக் கூடாது. இவைகள் அதிமுக்கியமாக இருக்கின்றன. பரலோகம் நாம் விரும்பப்படக்கூடியது; ஆனால் நரகம் நாம் பயப்பட வேண்டியது. நம்முடைய வாழ்க்கையில் இந்த முடிவில்லாத நித்தியத்தை நோக்கி ஓடுகிற ஓட்டத்தில், நரகத்தின் பயங்கரத்திற்கு விலகி நாம் மீட்கப்படுவது மிக அவசியம். அவருடைய வார்த்தைகளே நமக்கு மகத்துவமான காரியங்களைப் போதிக்கின்றன. ஆனால் தேவன் சொல்லுகிறார், "மகத்துவமான காரியங்களை எழுதிக் கொடுத்தேன், அவைகளோ உங்களுக்கு அந்நிய காரியமாய்ப் போயிற்று".

3. இந்தக் காலத்தில் வேதம்: மூன்றாவதாக, இந்த வேதாகமம் எவ்விதமாய்க் கருதப்படுகிறது? இன்றைக்கு அநேகருக்கு வேதாகமம் ஒரு வினோதப் பொருளாகவே காணப்படுகிறது. ஆகவே அவர்கள் அதை வாசிக்கிறதில்லை. நீங்கள் வேதத்தை வாசிக்கவில்லையென்றால், அது உங்களுக்கு மிகப் பெரிய இழப்பு. ஒருவேளை, "வேதம் எங்கள் வீட்டில் இருக்கிறது, ஆனால் நாங்கள் அதை வாசிக்கிறதில்லை" என்று நீங்கள் சொல்லலாம். ஆனால் இது நியாயமான காரியமா? வேதத்தைக் கடைசியாக நீங்கள் எப்போது வாசித்தீர்கள்? நீங்கள் அனுதினமும் வேதத்தை வாசிக்கவில்லையென்றால், வேதத்தை அசட்டை பண்ணுகிறீர்கள் என்று அர்த்தம். பரிசுத்த ஆவியானவர் நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையில் வெளிச்சத்தைக் கொடுக்கும்பொழுதுதான் நாம் இந்த வேதத்தின் மகத்துவங்களை அறிந்து கொள்ள முடியும். நீங்கள் ஆண்டவருடைய வார்த்தையைச் சோதித்து நிரூபித்துக் கொள்ளுங்கள். அது உங்கள் ஆத்துமாவுக்குப் பிரயோஜனமாக இருக்கும். ஆனால் ஆண்டவரைப் புறக்கணிப்பவர்களுக்கு, தேவனுடைய வார்த்தையின் காரியங்களில் பங்குமில்லை, பாத்திரமுமில்லை. உங்கள் அனுதின ஆகாரம் உங்களுக்கு எப்படி முக்கியமாகக் காணப்படுகிறதோ, அப்படியே உங்கள் ஆவிக்குரிய வாழ்க்கைக்கு வேத வாசிப்பு உங்கள் அனுதின ஆகாரமாயிருக்கிறது.

ஒருசிலர் இந்த வேதத்தை வெறுப்பவர்களும் உண்டு, அதை அலட்சியப்படுத்துகிறவர்களும் உண்டு. ஆனால் வேதம் சொல்லுகிறது: "தேவனை மறக்கிறவர்களே, இதைச் சிந்தித்துக்கொள்ளுங்கள்; இல்லாவிட்டால் நான் உங்களைப் பீறிப்போடுவேன், ஒருவரும் உங்களை விடுவிப்பதில்லை" (சங்கீதம் 50:22). ஆகவே நம்முடைய வாழ்க்கையில் நம்முடைய விருப்பங்களின்படிச் செய்யாமல், ஆண்டவருடைய ஞானத்தைப் பெற்றுக் கொள்ளும்படி அவரின் வார்த்தைக்குச் செவிகொடுப்போம். இது உங்களுக்கு இரட்சிப்பின் வழிகாட்டி. இந்த வேதத்தை ஒருக்காலும் புறக்கணித்து விடாதீர்கள். ஒரே நம்பிக்கையான கிறிஸ்துவை இந்த வேதம் நமக்குக் காட்டுகிறது. பரிசுத்த ஆவியானவர் உங்களுக்குத் துணையாக நின்று இந்த வேதத்தின் காரியங்களை உங்களுக்குப் போதித்து நடத்துவார். ஒருவரும் இந்த வேதத்தை அற்பமாக எண்ணிவிடாதீர்கள். வேதமே நம்முடைய வாழ்க்கையில் அதிமுக்கியமான காரியமாக இருக்க வேண்டும். வேதத்தை வாசியுங்கள். பரிசுத்த ஆவியானவர், தம்முடைய மகத்துவமான கிருபைகளை உங்களுக்கு வெளிப்படுத்துவார். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பராக! ஆமென்!

 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.