மனிதர்கள் தங்கள் வாழ்வில் பலவிதமான மாயைகளுக்கு உள்ளகிறார்கள். மாயை என்பது பொய்யானதாய் இருப்பது உண்மையைப் போல் தோற்றமளித்து எந்தவித சந்தேகமும் வராமல், நம்மை உணர செய்து அதில் நிலைத்து வாழ்வதே மாயை எனப்படும். தொடர்ந்து வாசிக்க...
மனிதர்கள் தங்கள் வாழ்வில் பலவிதமான மாயைகளுக்கு உள்ளகிறார்கள். மாயை என்பது பொய்யானதாய் இருப்பது உண்மையைப் போல் தோற்றமளித்து எந்தவித சந்தேகமும் வராமல், நம்மை உணர செய்து அதில் நிலைத்து வாழ்வதே மாயை எனப்படும். வேதத்தில் சாத்தானை ஒரு ஏமாற்றும் ஆவி என்று விவரிக்கப்பட்டுள்ளது. “இதினாலே சத்திய ஆவி இன்னதென்றும், வஞ்சக ஆவி இன்னதென்றும் அறிந்திருக்கிறோம்.” (1 யோவான் 4:6). ஏனென்றால், அவன் தனது உத்திகளை நிறைவேற்றுவதற்கு மக்களை பல்வேறு மாயைகளில் விழ வைக்கிறான். இன்றைய சமகாலத்து திருச்சபையில் பலர் தாங்கள் தேவனை நேசிப்பதாகவும், அவருடைய பிள்ளைகள் என்ற விசுவாசத்தை கொண்டுள்ளனர், இதுவும் சாத்தான் உருவாக்கிய மற்றொரு மாயையே! அதனால்தான் விசுவாசியாகிய ஒவ்வொருவரும் நாம் தேவன் மீது வைத்துள்ள அன்பு அவரிடமிருந்து வந்ததா? அல்லது சாத்தானால் உருவாக்கப்பட்ட மாயையா? என்பதை வேதத்தின்படி சோதித்தறிய வேண்டியது அவசியம். ஏனென்றால், அவர்கள் அவ்விதமாக சோதித்தறியும் போது தேவன் மீது வைத்திருக்கும் அன்பு வேதவாக்கியங்களின் படி உண்மையானதல்ல என்று உணர்ந்தால், குறைந்தபட்சம் அதைத் திருத்திகொண்டு அவரிடம் மன்றாட ஒரு வாய்ப்பு இருக்கிறது. அப்படியில்லாமல் அந்த மாயையிலே இருந்துவிட்டால் தீர்ப்பு நாளில், “நீ யாரென்று எனக்குத் தெரியாது” என்பதான ஆண்டவருடைய வார்த்தைகளைக் கேட்க வேண்டியிருக்கும். "அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை; அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்றுபோங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்.” (மத்தேயு 7:22,23) அப்போது தேவனே நான் உம்மை நேசிக்கவில்லையா? என்று கேட்ப்பதில் எந்தவித பயனில்லை.
சாத்தானைப் பற்றி நாம் நினைவில் கொள்ள வேண்டிய மிக முக்கியமான காரியம் என்னவென்றால், சாத்தான் விரும்புவது நம்முடைய அழிவைத்தான். நியாயதீர்ப்பு நாளில் எல்லா மனிதர்களும் தன்னோடு கூட அக்கினிக்கடலில் பங்கு கொள்ளவேண்டும் என்பதே அவனது தீவிர ஆசை. இந்த வரிசையில், அவன் பலரை சுவிசேஷத்திற்குக் கீழ்ப்படிய விடாமல் செய்வதும், சிலரை சுவிசேஷத்திற்குக் கீழ்ப்படிய செய்வதுப்போல ஒரு மாயையில் வைத்து தனது திட்டத்தை நிறைவேற்றுகிறான். இன்று வெவ்வேறு சுவிசேஷத்தின் கீழ் வாழ்கிறவர்கள் இப்படிப்பட்டவர்களே! “நாங்கள் உங்களுக்குப் பிரசங்கித்த சுவிசேஷத்தையல்லாமல், நாங்களாவது, வானத்திலிருந்து வருகிற ஒரு தூதனாவது, வேறொரு சுவிசேஷத்தை உங்களுக்குப் பிரசங்கித்தால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன்.” (கலாத்தியர் 1:8). துரதிர்ஷ்டவசமாக, அவர்கள் அனைவரும் தேவனுடைய சுவிசேஷத்திற்குக் கீழ்ப்படிந்து இரட்சிக்கப்பட்டிருக்கிறோம் என்பதில் உறுதியாக உள்ளனர், எனவே அவர்கள் உலகத்தவர் & புறஜாதியினர் போலவே வாழ்ந்து தங்களுடைய இலக்கைப் பற்றி எந்தவித கவலையும் இல்லாமல் வாழ்கிறார்கள்.
இறுதியாக அவர்கள் அழிவுக்கு நேராக செல்கிறார்கள். தேவனை குறித்த காரியத்தில் கூட இவ்வாறான மாயைகள், உலகத்தாரான & புறஜாதிகளாக வாழ்க்கையை வாழ்ந்ததை விட ஆபத்தானவை. இதை இன்னும் தெளிவாகச் சொல்வதென்றால், ஒருவருக்கு புற்றுநோய் இருப்பதாக வைத்துக் கொள்வோம், உனக்கு புற்றுநோய் இருகிறது என்று அவருக்கு சொல்லுவது ஆபத்தா? அல்லது நீ ஆரோக்கியமாக இருகிறாய் என்று அவரை ஏமாற்றுவது ஆபத்தா? இரண்டாவது தானே! ஏனென்றால் அந்த நபர் தனக்கு புற்றுநோய் இருப்பதை புரிந்து கொண்டால், அவர் தகுந்த சிகிச்சை எடுத்துக்கொண்டு குணப்பட முடியும். அப்படி செய்யாமல் அவருக்கு தெரிவிக்காமல் மறைத்து வைத்தால் புற்றுநோயின் விளைவால் சீக்கிரமே இறந்துவிடுவார். அதனால்தான் நாம் விசுவாசிக்கும் சுவிசேஷத்தையும் மற்றும் தேவன்மீது நமக்கிருக்கும் அன்பு போன்றவற்றின் முக்கியமான விஷயத்தை வேதவாக்கியங்களின்படி நாம் ஆராய்ந்து பார்க்கவேண்டும். வேதவாக்கியங்கள் தேவனின் வார்த்தைகள் என்பதால், எது உண்மையானது? எது பொய்யானது? என்பதை வேத வசனத்தால் மட்டுமே சொல்ல முடியும்.
வேதத்தின்படி தேவனை நேசிப்பதற்கும்,
தேவனை நேசிப்பதுப்போல் ஏமாற்றப்படுவதற்கும் உள்ள வித்தியாசத்தைப் பார்ப்போம்.
பழைய ஏற்பாட்டில் சவுல் என்ற அரசனைக் குறித்து நாம் அனைவருக்கும் தெரியும். தேவனால் இஸ்ரவேலர்களுக்கு நியமித்த முதல் அரசன். “கர்த்தர் உன்னைத் தம்முடைய சுதந்தரத்தின்மேல் தலைவனாக அபிஷேகம் பண்ணினார்.” (1 சாமுவேல் 10:1). ஆனால், இந்த சவுல் அமலேக்கியர்கள் விசயத்தில் தேவனுடைய கட்டளைக்கு கீழ்ப்படியாததற்காக தேவனுடைய பார்வையில் குற்றவாளியாகக் காணப்பட்டு அரசனாக இருந்த ஸ்தானத்தில் இருந்து நீக்கப்பட்டார். “அவர் (தேவன்) சொன்னது: நான் சவுலை ராஜாவாக்கினது எனக்கு மனஸ்தாபமாயிருக்கிறது; அவன் என்னைவிட்டுத் திரும்பி, என் வார்த்தைகளை நிறைவேற்றாமற்போனான் என்றார்; அப்பொழுது சாமுவேல் மனம் நொந்து, இராமுழுதும் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டான்.” (1 சாமுவேல் 15:10,11). அது மட்டுமின்றி, சவுல் முன்பே, ஆசாரியர்கள் மட்டுமே பலியிட வேண்டும் என்பதான் தேவனின் விதியை மீறி, தானே பலிகொடுக்கத் துணிந்தான். “அவன் (சவுல்) தனக்குச் சாமுவேல் குறித்த காலத்தின்படி ஏழுநாள்மட்டும் காத்திருந்தான்; சாமுவேல் கில்காலுக்கு வரவில்லை, ஜனங்கள் அவனை விட்டுச் சிதறிப்போனார்கள். அப்பொழுது சவுல்: சர்வாங்க தகனபலியையும் சமாதான பலிகளையும் என்னிடத்தில் கொண்டுவாருங்கள் என்று சொல்லி, சர்வாங்க தகனபலியைச் செலுத்தினான்.” (1 சாமுவேல் 13:8,9).
இறுதியாக தாவீதுக்கு உதவிய காரணத்திற்காக ஏபோத் அணிந்திருந்த 85 தேவனின் ஆசாரியர்களை கொடூரமாகக் கொன்று அவர்களின் நகரத்தை அழித்தான். “அப்பொழுது ராஜா தோவேக்கை நோக்கி: நீ போய் ஆசாரியர்களைக் கொன்றுபோடு என்றான்; ஏதோமியனாகிய தோவேக்கு ஆசாரியர்கள் மேல்விழுந்து, சணல் நூல் ஏபோத்தைத் தரித்திருக்கும் எண்பத்தைந்துபேரை அன்றையதினம் கொன்றான். ஆசாரியர்களின் பட்டணமாகிய நோபிலுமுள்ள புருஷரையும், ஸ்திரீகளையும், பிள்ளைகளையும், குழந்தைகளையும், மாடுகளையும், கழுதைகளையும், ஆடுகளையும் பட்டயக்கருக்கினால் வெட்டிப்போட்டான்.” (1 சாமுவேல் 22:18,19). தேவனின் ஆசாரியர்களைக் கொன்ற கொடூரமான இருதயத்தைக் கொண்ட சவுல், தேவன் விரும்பிய தாவீதைக் கொல்வதற்கு முயன்றார், "தேவன் அவனை என் கையில் ஒப்புக்கொடுத்தார்; அவன் கதவுகளும் தாழ்ப்பாள்களுமுள்ள பட்டணத்திற்குள் பிரவேசித்ததினால், அடைபட்டிருக்கிறான் என்று சவுல் சொல்லி," (1 சாமுவேல் 23:7),
மேலும் தனக்கு தேவன் துணையாக இருப்பதாக அவன் நினைத்தான். தேவனின் பெயரால் ஆசீர்வாதங்களைப் இருப்பதாக சொல்லிக்கொண்டு, “அதற்கு சவுல்: நீங்கள் என் மேல் தயை வைத்ததினாலே, கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பீர்களாக.” (1 சாமுவேல் 23:21), அவன் மீது தேவனுக்கு மிகுந்த அன்பு இருப்பது போல் தன்னைத்தானே ஏமாற்றிக் கொண்டிருந்தான். ஆனால் சவுல் உண்மையாகவே தேவனை நேசித்திருந்தால், அவன் தேவனின் கட்டளைகளுக்கு விரோதமாகச் சென்றிருக்க மாட்டான், அவன் ஆசாரியார்களைக் கொன்றிருக்க மாட்டான், மற்றும் அவன் தாவீதைக் கொல்ல முயற்சிக்காமல் இருந்திருப்பான். சவுல் தான், மட்டுமே தேவனை நேசிப்பதாக ஏமாற்றப்பட்டான், அந்த மாயையானது அவனை ஆட்கொண்டிருந்த அசுத்த ஆவியினால் வந்தது. “கர்த்தருடைய ஆவி சவுலை விட்டு நீங்கினார்; கர்த்தரால் வரவிடப்பட்ட ஒரு பொல்லாத ஆவி அவனைக் கலங்கப்பண்ணிக் கொண்டிருந்தது.” (1 சாமுவேல் 16:14). இதன் காரணாமாகவே அவனுடைய வாழ்க்கை எவ்வளவு மோசமாக முடிந்தது என்பதை நாம் அனைவரும் அறிந்ததே “சவுலுக்கு விரோதமாய் யுத்தம் பலத்தது; வில்வீரர் அவனைக் கண்டு நெருங்கினார்கள்; அப்பொழுது சவுல் வில்வீரரால் மிகவும் காயப்பட்டு, தன் ஆயுததாரியை நோக்கி: அந்த விருத்தசேதனம் இல்லாதவர்கள் வந்து, என்னைக் குத்திப்போட்டு, என்னை அவமானப்படுத்தாதபடிக்கு, நீ உன் பட்டயத்தை உருவி, என்னைக் குத்திப்போடு என்றான்; அவனுடைய ஆயுததாரி மிகவும் பயப்பட்டதினால், அப்படிச் செய்யமாட்டேன் என்றான்; அப்பொழுது சவுல் பட்டயத்தை நட்டு அதின்மேல் விழுந்தான்.” (1சாமுவேல் 31:3,4).
இப்போது எரேமியா தீர்க்கதரிசியின் காலத்தில் இருந்த இஸ்ரவேலர்களின் நிலைமையைப் பார்ப்போம்.
(எரேமியா 3:2-5) “நீ மேடுகளின்மேல் உன் கண்களை ஏறெடுத்து, நீ வேசித்தனம்பண்ணாத இடம் ஒன்று உண்டோ என்று பார்; வனாந்தரத்திலே அரபியன் காத்துக்கொண்டிருக்கிறதுபோல, நீ வழி ஓரங்களில் உன் நேசருக்குக் காத்துக்கொண்டிருந்து, உன் வேசித்தனங்களாலும், உன் அ க்கிரமங்களாலும் தேசத்தைத் தீட்டுப்படுத்தினாய். அதினிமித்தம் மழை வருஷியாமலும், பின்மாரியில்லாமலும் போயிற்று; உனக்கோ, சோரஸ்திரீயின் நெற்றியிருக்கிறது; நீயோ: நாணமாட்டேன் என்கிறாய். நீ இது முதல் என்னை நோக்கி: என் பிதாவே, தேவரீர் என் இளவயதின் அதிபதியென்று சொல்லி, சதாகாலமும் கோபத்தை வைப்பாரோ? அதை என்றென்றைக்கும் காப்பாரோ என்கிறாய் அல்லவோ? இதோ, இப்படி நீ சொல்லியும் பொல்லாப்புகளைச்செய்து, மிஞ்சிப்போகிறாய் என்கிறார்.”
இந்த சந்தர்ப்பத்தில் இஸ்ரவேலர்கள் ஒருபுறம் தேவன் வெறுக்கும் விக்கிரகாராதனை, விபச்சாரம் போன்ற கொடிய பாவங்களைச் செய்துக்கொண்டு, மறுபுறம் அவர்கள் "என் பிதாவே, தேவரீர் என் இளவயதின் அதிபதியென்று சொல்லி, சதாகாலமும் கோபத்தை வைப்பாரோ?” என்று அவர்கள் தேவனிடம் முறையிடுகிறார்கள். தாங்கள் செய்ய விரும்பும் தீய செயல்களை தொடர்ந்து செய்து வருகின்றனர். இவர்களும் சவுலைப்போல தாங்கள் தேவனை நேசிப்பதாக ஏமாற்றப்பட்டார்கள். அந்த மாயையில் இருந்து அவர்கள் தேவனிடம் "நீர் எங்கள் பிதா, எங்களை நீர் கைவிடுவதில்லை," என்று முறையிடுகிறார்கள். ஆனால் அது உண்மையான அன்பு இல்லாததால், அவருடைய பரிசுத்தத்திற்கு எதிரான துன்மார்க்கத்தை அவர்களால் கைவிட முடியவில்லை.
சங்கீதம் 97:10 “கர்த்தரில் அன்புகூருகிறவர்களே, தீமையை வெறுத்துவிடுங்கள்; அவர் தம்முடைய பரிசுத்தவான்களின் ஆத்துமாக்களைக் காப்பாற்றி, துன்மார்க்கரின் கைக்கு அவர்களைத் தப்புவிக்கிறார்.” இப்போது யூதர்களைப் பற்றி கர்த்தர் சொல்லும் ஒரு காரியத்தைப் பரிசீலிப்போம்; (யோவான் 16:2) “அவர்கள் உங்களை ஜெப ஆலயங்களுக்குப் புறம்பாக்குவார்கள்; மேலும் உங்களைக் கொலைசெய்கிறவன் தான் தேவனுக்குத் தொண்டுசெய்கிறவனென்று நினைக்குங்காலம் வரும்.”
இந்த வசனப்பகுதியில் இயேசுகிறிஸ்துவின் வார்த்தைகளின்படி, யூதர்கள்; ஆரம்பகால கிறிஸ்தவ திருச்சபையின் அப்போஸ்தலர்களையும், விசுவாசிகளையும் கொல்லுவதை தேவனுக்கு செய்யும் சேவையாகக் கருதினார்கள். நாம் ஒருவரை நேசித்தால் தானே, அவர்களுக்கு ஆர்வத்துடன் சேவை செய்யமுடியும். எனவே! யூதர்களும் தாங்கள் தேவனை நேசிப்பதாக ஒரு எமற்றத்தில் இருப்பதினால் அவருக்காக ஏதாவது செய்யவேண்டும் என்ற மாயையில் வாழ்கிறார்கள். அது உண்மையான அன்பு இல்லை என்பதால், இறுதியாக தேவ ஊழியர்களையே கொல்ல நினைக்கிறார்கள். எனவே தான் இயேசுகிறிஸ்து அவர்களைப் பற்றி என்ன சொல்கிறார் என்று பாருங்கள்.
(யோவான் 16:3) “அவர்கள் பிதாவையும் என்னையும் அறியாதபடியினால் இவைகளை உங்களுக்குச் செய்வார்கள்.”
சொல்லப்போனால் தேவனை நேசிப்பது என்றால் என்ன? தேவன் மீது நாம் வைத்திருக்கும் அன்பு உண்மையானதா? அல்லது பிசாசினால் உருவாக்கப்பட்ட மாயையா? என்பதை எப்படி உறுதியாக அறிந்து கொள்வது? இந்த கேள்விக்கு கர்த்தராகிய இயேசுகிறிஸ்து தெளிவான பதிலைக் கொடுக்கிறார் என்பதைப் பாருங்கள்.
(யோவான் 14:21) “என் கற்பனைகளைப் பெற்றுக்கொண்டு அவைகளைக் கைக்கொள்ளுகிறவனே என்னிடத்தில் அன்பாயிருக்கிறான், என்னிடத்தில் அன்பாயிருக்கிறவன் என் பிதாவுக்கு அன்பாயிருப்பான்; நானும் அவனில் அன்பாயிருந்து, அவனுக்கு என்னை வெளிப்படுத்துவேன் என்றார்.”
இந்த வார்த்தைகளின்படி, தேவனை நேசிப்பது என்றால் அவருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதாகும். கர்த்தரின் அன்புச் சீஷரான யோவானும் தனது நிருபத்தில் இந்த வார்த்தைகளையே மீண்டும் நினைவு படுத்துகிறார்.
(1 யோவான் 5:3) “நாம் தேவனுடைய கற்பனைகளை (கட்டளை) கைக்கொள்வதே அவரிடத்தில் அன்புகூருவதாம்;”
தேவ மனிதர்களின் வாழ்விலும், இயேசு கிறிஸ்துவின் வாழ்விலும் இவ்வகையான நேசத்தையே நாம் பார்க்கிறோம், ஏனென்றால் பிதாவின் மீதுள்ள அன்பு உண்மையானது, ஆகையால் இவ்வுலகில் வாழ்ந்த காலம்வரை அவருடைய சித்தத்திற்கு & கட்டளைகளுக்கு கீழ்ப்படிந்து இறுதியாக பிதாவின் விருப்பத்திற்கேற்ப இயேசுகிறிஸ்து தனது ஜீவனையும் தந்தார்.
(யோவான் 17:4) “பூமியிலே நான் உம்மை மகிமைப்படுத்தினேன்; நான் செய்யும்படி நீர் எனக்கு நியமித்த கிரியையைச் செய்து முடித்தேன்.”
(சங்கீதம் 40:8) “என் தேவனே, உமக்குப் பிரியமானதைச் செய்ய விரும்புகிறேன்; உமது நியாயப்பிரமாணம் என் உள்ளத்திற்குள் இருக்கிறது என்று சொன்னேன்.”
(ஏசாயா 53:12) “அவர் தம்முடைய ஆத்துமாவை மரணத்திலூற்றி, அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப்பட்டு, அநேகருடைய பாவத்தைத் தாமே சுமந்து, அக்கிரமக்காரருக்காக வேண்டிக்கொண்டதினிமித்தம் அநேகரை அவருக்குப் பங்காகக் கொடுப்பேன்;”
அதுபோல, “என் பெலனாகிய கர்த்தாவே, உம்மில் அன்புகூருவேன்.” (சங்கீதம் 18:1) என்று பாடிய சந்கீதகாரனான தாவீதைப் பற்றி என்ன எழுதியிருகிறது ஏன்பதைப் பாருங்கள்.
(1 இராஜாக்கள் 15:5) “தாவீது ஏத்தியனாகிய உரியாவின் சங்கதி ஒன்று தவிர கர்த்தர் தனக்குக் கட்டளையிட்டதிலே தான் உயிரோடிருந்த நாளெல்லாம் ஒன்றையும் விட்டு விலகாமல், அவர் பார்வைக்குச் செம்மையானதைச் செய்து வந்தான்.”
இந்த வசனத்தின்படி “என் பெலனாகிய கர்த்தாவே, உம்மில் அன்புகூருவேன்.” என்று தேவனைப் பற்றி பாடிய தாவீதின் படி, தேவன் மீது உண்மையான அன்பு கொண்டிருந்தார், எனவே தான் அவர் "கர்த்தரின் பார்வையில் நேர்மையாக நடந்தார், கர்த்தர் தாவீதுக்குக் கொடுத்த எல்ல கட்டளைகளுக்கு கீழ்படிந்தார்”. ஆனாலும், தாவீது உரியாவின் மனைவி விஷயத்தில் இடறிவிட்டார் பிறகு அவர் தேவன் மீது வைத்த அன்பு எப்படி உண்மையானது? என்ற கேள்வி வறுவதற்கு வாய்ப்புள்ளது. அதற்கான பதிலை பார்ப்போம்.
தாவீதைப் போல தேவனை உண்மையாக நேசித்த எல்லா தேவ மனிதர்களும் “கர்த்தரின் பார்வையில் உத்தமமாய் நடந்து அவருடைய கட்டளைகளைக்கு கீழ்ப்படிந்தார்கள்." என்பதை நாம் வேதத்தில் பார்க்கிறோம். தானியேல் அவ்வாறே செய்தார், யோசேப்பும் அவ்வாறே செய்தார், எல்லா அப்போஸ்தலர்களும் அவ்வாறே செய்தார்கள். ஏனென்றால் அவர்கள் தேவன் மீது வைத்துள்ள அன்பு தேவனால் உண்டான உண்மையான அன்பு. அதனால் தான் அவர்கள் அந்த அன்பிற்கு தகுதியானவர்களாக வாழ்ந்தார்கள். “அவர் முந்தி நம்மிடத்தில் அன்புகூர்ந்தபடியால் நாமும் அவரிடத்தில் அன்புகூருகிறோம்.” (1 யோவான் 4:19). ஆனால் அந்த வகையில் பிசாசினால் வஞ்சிக்கப்பட்டவர்கள், அவர்களைப் போலவே, "கர்த்தரின் பார்வையில் நேர்மையாக நடக்க முடியாது, மற்றும் அவருடைய கட்டளைகளுக்கு கீழ்படிய முடியாது."
தேவனை நேசிப்பது என்றால் சவுல் அரசனைப் போல என்ன தவறு செய்தாலும், "தேவன் என்னுடன் இருக்கிறார் என்று நினைப்பதும்" இஸ்ரவேல் மக்கள் அனைத்து அருவருப்புகளையும் செய்து பிறகு "நீரே எங்கள் பிதா" என்று ஜெபித்தால் போதும். என்று அவர்கள் நினைத்தார்கள். இன்றைய திருச்சபைகளில் இவற்றையே பார்க்கிறோம். திருச்சபையில் இருக்கும் வரை பக்தியின் மறுவுருவமாக இருப்பார்கள் ஆனால் திருச்சபையை விட்டு வெளியே வந்ததும், “அவர்கள் செய்ய நினைத்த தீய செயல்களை” செய்து கொண்டே இருப்பார்கள். குறைந்த பட்சம் திருச்சபையில் இருக்கும்வரை கூட அவர்களின் மனம் ஒரு நிலையாக இருக்காது.
இயேசுகிறிஸ்து, பன ஆசை கொண்டவர்களை குறித்து பேசுகையில், நீங்கள் தேவனுக்கும் உலகப்பொருளுக்கும் ஊழியஞ்செய்ய உங்களால் முடியாது, நீங்கள் ஒருவரை நேசிக்க வேண்டும், மற்றவரை நிராகரிக்க வேண்டும் என்று கற்பித்தார் “இரண்டு எஜமான்களுக்கு ஊழியஞ் செய்ய ஒருவனாலும் கூடாது; ஒருவனைப் பகைத்து, மற்றவனைச் சிநேகிப்பான்; அல்லது ஒருவனைப் பற்றிக்கொண்டு, மற்றவனை அசட்டைபண்ணுவான்; தேவனுக்கும் உலகப்பொருளுக்கும் ஊழியஞ்செய்ய உங்களால் கூடாது.” (மத்தேயு 6:24) –ம் வசனத்தில் பார்க்கிறோம். இந்த வார்த்தையின்படி; யாரவது ஒருவர் பணத்தின் மீது பேராசைக்கொண்டு மற்றும் தேவனை நேசிப்பதாக நினைத்துக்கொண்டால் அது வெறும் மாயையே அல்லது தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்கிறார்கள் என்று பொருள். பண ஆசையை குறித்தே தேவன் தமது வார்த்தைகளை இவ்வளவு துல்லியமாகப் சொன்னறென்றால், பாவத்தைக் குறித்து அவர் எவ்வளவு அதிகமாக சொல்லியிருப்பார் என்பதை சிந்தியுங்கள். இதன்படி, தேவனின் கட்டளைகளுக்கு விரோதமாக செயல்படுவது யாராக இருந்தாலும் தேவனை நேசிப்பதாக நினைப்பது மாயை தானே! "நீ உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழுப் பலத்தோடும் அன்புகூருவாயாக.” (உபாகமம் 6:5) என்ற வார்த்தைக்கு அவர்களின் வாழ்க்கை! எதிரானது அல்லவா?
(1 கொரிந்தியர் 16:22) “ஒருவன் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினிடத்தில் அன்புகூராமற்போனால், அவன் சபிக்கப்பட்ட அவனாயிருக்கக்கடவன்,”
இந்த இடத்தில் நான் இரண்டு காரியங்களை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
- பல விசுவாசிகளுக்கு வேதத்திலுள்ள தேவனின் அனைத்து கட்டளைகளையும் அறிந்திருக்காமல் இருக்காலம், அத்தகையவர்கள் சில சமயங்களில் அவற்றிற்கு மாறாக செயல்படலாம். அதை காரணம் காட்டி அவர்கள் தேவனிடம் வைத்திருப்பது உண்மையான விசுவாசம் அல்ல, அது சாத்தானால் உருவாக்கப்பட்ட மாயை என்று நான் அவர்களைக் குற்றம் சாட்டவில்லை.
ஏனெனில் அத்தகையவர்கள்;
A : தாங்கள் தவறவிட்ட தேவனின் கட்டளையும், நீதியைப் பற்றி யாராவது வேதத்திலிருந்து எச்சரித்தால் தங்களை திருத்துக் கொள்பவர்களாக இருப்பார்கள்.
B : தாங்கள் பின்பற்ற வேண்டிய தேவனின் கட்டளைகள் என்ன என்பதை அறிய, வேத வசனங்களை தவறாமல் வாசித்து ஆராய்ந்து சரி செய்துக் கொள்வார்கள் உதாரணமாக; கணவனை உண்மையாக நேசிக்கும் மனைவி அந்த கணவனுடைய இதயத்தை அறிந்து அதன்படி செயல்படுவதில் அவள் ஆர்வம் காட்டுவாள்.
ஒருவேளை இந்நிலைக்கு மாறாக, தாங்கள் தவறவிட்ட தேவனின் கட்டளைகள் & நியாயங்களைப் பற்றி யாரேனும் எச்சரித்தால், தங்களுடைய வாழ்வை சரிசெய்துக்கொள்ள ஆர்வமில்லாமல், தாங்கள் செய்வதே அல்லது அவர்கள் மனதில் பிறந்தது சரி என்று வாதிடத் தொடங்குகிறார்கள். தேவனின் கட்டளைகளை அறிந்துக்கொள்வதில் & பின்பற்றுவதில், அவர்களுக்கு விருப்பம் இல்லையென்றால் நான் ஆரம்பத்திலிருந்தே சொன்னது போல், தேவன் மீது அவர்களின் அன்பு சாத்தானால் உருவாக்கப்பட்ட ஒரு மாயை. நான் மீண்டும் சொல்கிறேன், தேவனை நேசிப்பவர்கள் அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடிப்பார்கள், அவர்கள் எதை கடைப்பிடிக்க வேண்டுமோ அந்த கட்டளைகளுக்காக வேதத்தில் தேடுவார்கள். அது எந்த கட்டளையென முழுமையாக அறியாததினால் அதை தவறவிட்டால், அவை அறிந்துக் கொள்ளும்போது அல்லது யாரவது எச்சரிக்கை செய்யும்போது உடனடியாக திருத்திக் கொள்கிறார்கள் மீண்டும் அதைச் செய்யமாட்டார்கள்.
- விசுவாசிகள் சில சமயங்களில் தங்களுக்குத் தெரிந்தளவிற்கு தேவனின் கட்டளைகளைக் கைக்கொள்வதில் கூட இடறிவிடுவார்கள். அதன் காரணமாக தேவன்மீது அவர்களுக்கு உண்மையான அன்பு இல்லையென்றும் மாறாக சாத்தானால் உருவாக்கப்பட்ட ஒரு மாயையே என நான் அவர்கள் மீது குற்றம் சாட்டவில்லை, “என் பெலனாகிய கர்த்தாவே, உம்மில் அன்புகூருவேன்.” என்று பரிசுத்த ஆவியின் தூண்டுதலால் சங்கீதத்தை எழுதிய தாவீதும், உரியாவின் மனைவியான பத்சேபாவின் விஷயத்தில் தோற்றுப்போனார். ஆகவே, அவர்கள் சில கட்டளைகளைத் தவறவிட்டதால் தேவன் மீது அவர்களுக்கு உண்மையான அன்பில்லை என்று நாம் குற்றம் சாட்ட முடியாது. ஏனென்றால், உண்மையாக தேவனை நேசிப்பவர்கள், தாங்கள் தவறிவிட்ட தேவனுடைய கட்டளை விசயத்தில் அவர்கள் நிம்மதியாக வாழ முடியாது, அந்த பாவத்தில் பழக்கப்பட்டது போல் தொடர்ந்து இருக்க முடியாது. தாவீதின் நிலைமையைப் பாருங்கள், அவர் விழுந்துப்போனார், ஆதன் பின்னர் இருதயத்தில் குத்தப்பட்டு வேதனையோடு மனந்திரும்பினார், தனது பாவத்தை தேவனிடம் ஒப்புக்கொண்டு மன வேதனையோடு ஒரு சங்கீதத்தையே எழுதினார். அதுவே (51 - ம் சங்கீதம்) இனி தன்னுடைய வாழ்வில் அப்படி ஒரு மோசமான நிலை வராமல் இருக்க மிகவும் கவனமாக இருந்தார்.
இவ்வாறு தேவனை உண்மையாக நேசிக்கும் நபர், தேவனின் கட்டளைகளில் ஏதேனும் ஒன்றில் தவறினால், அந்த நபர் அதைத் தாங்க முடியாத அளவுக்கு தேவனின் முன்னிலையில் தன் இதயம் உடைந்துபோகும் அளவிற்கு, அதற்காக வருந்துவார்கள். மீண்டும் தவறி போகாமல் கவனமாக இருப்பார்கள். ஆனால் நான் தேவனை நேசிக்கிறேன் என்று சாத்தானால் ஏமாற்றப்பட்ட நபர், தேவனின் கட்டளைகளை மீறி, வழக்கமாக செய்கின்ற பாவத்தை செய்கிறான், அதை ஏதோ ஒரு வகையில் நியாயப்படுத்துவான். இப்பேற்ப்பட்டவர்களில் சிலர் தாங்கள் செய்துவருகிற பாவங்களை மேலோட்டமாக ஒப்புக்கொள்வார்கள், ஏனென்றால் அது அவர்களுக்கு ஒரு பழக்கமாகவும், & வழக்கமாகவும் அவர்களுக்கு இருக்கும். ஆனால், அவைகளிலிருந்து விலகமாட்டார்கள் பாவத்தை ஒப்புக்கொண்டு விட்டுவிடுவது அன்பு. ஏதோ, பாவத்தை பெயரளவில் ஒப்புக்கொண்டு அதே பாவத்தில் தொடர்வது சாத்தான் உண்டாக்கிய மாயையே!
அப். பேதுருவைப்பற்றி நாம் சிந்தித்துப் பார்த்தால், “இயேசு சீமோன் பேதுருவை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, இவர்களிலும் அதிகமாய் நீ என்னிடத்தில் அன்பாயிருக்கிறாயா என்றார். அதற்கு அவன்: ஆம் ஆண்டவரே, உம்மை நேசிக்கிறேன் என்பதை நீர் அறிவீர் என்றான். அவர்: என் ஆட்டுக்குட்டிகளை மேய்ப்பாயாக என்றார். இரண்டாந்தரம் அவர் அவனை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ என்னிடத்தில் அன்பாயிருக்கிறாயா என்றார். அதற்கு அவன்: ஆம் ஆண்டவரே, உம்மை நேசிக்கிறேன் என்பதை நீர் அறிவீர் என்றான். அவர்: என் ஆடுகளை மேய்ப்பாயாக என்றார். மூன்றாந்தரம் அவர் அவனை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ என்னை நேசிக்கிறாயா என்றார். என்னை நேசிக்கிறாயா என்று அவர் மூன்றாந்தரம் தன்னைக் கேட்டபடியினாலே, பேதுரு துக்கப்பட்டு: ஆண்டவரே, நீர் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறீர், நான் உம்மை நேசிக்கிறேன் என்பதையும் நீர் அறிவீர் என்றான். இயேசு: என் ஆடுகளை மேய்ப்பாயாக என்றார். (யோவான் 21:15-17).
இயேசு கிறிஸ்துவின் மீது அவர் கொண்டிருந்த அன்பு உண்மையானது, அவருடைய நமத்துகாக அவர் பல துன்பங்களை அனுபவித்தார். ஆனால், பேதுரும் ஒரு முறை புறஜாதியார் என்றும் யூதர்கள் என்றும் வேறுபாடு காட்டக்கூடாது என்ற தேவனின் கட்டளை (சுவிசேஷ ஒழுங்கு) விஷயத்தில் தவறிழைத்தார், அதை உடனடியாக அப். பவுல் கண்டித்தபோது அதற்கு சாக்கு போக்கு சொல்ல முயற்சிக்கவில்லை. “மேலும், பேதுரு அந்தியோகியாவுக்கு வந்தபோது, அவன்மேல் குற்றஞ் சுமந்ததினால், நான் முகமுகமாய் அவனோடே எதிர்த்தேன். எப்படியெனில், யாக்கோபினிடத்திலிருந்து சிலர் வருகிறதற்குமுன்னே அவன் புறஜாதியாருடனே சாப்பிட்டான்; அவர்கள் வந்தபோதோ, விருத்தசேதனமுள்ளவர்களுக்குப் பயந்து, விலகிப் பிரிந்தான். மற்ற யூதரும் அவனுடனேகூட மாயம்பண்ணினார்கள்; அவர்களுடைய மாயத்தினாலே பர்னபாவும் இழுப்புண்டான். இப்படி அவர்கள் சுவிசேஷத்தின் சத்தியத்திற்கேற்றபடி சரியாய் நடவாததை நான் கண்டபோது, எல்லாருக்கும் முன்பாக நான் பேதுருவை நோக்கிச் சொன்னது என்னவென்றால்: யூதனாயிருக்கிற நீர் யூதர் முறைமையாக நடவாமல், புறஜாதியார் முறைமையாக நடந்து கொண்டிருக்க, புறஜாதியாரை யூதர் முறைமையாக நடக்கும்படி நீர் எப்படிக் கட்டாயம்பண்ணலாம்?” (கலாத்தியர் 2:11-14). மேலும், அதன் பின்பு பேதுரு தனது நிருபத்தில் அப். பவுலைப் புகழ்ந்து எழுதினார். “நமக்குப் பிரியமான சகோதரனாகிய பவுலும் தனக்கு அருளப்பட்ட ஞானத்தினாலே இப்படியே உங்களுக்கு எழுதியிருக்கிறான்;” (2 பேதுரு 3:15,16). இதிலிருந்து நாம் புரிந்துக்கொள்வது பேதுரு சுவிசேஷ முறையை தவறியிருந்தாலும், அதற்காக வருந்தியதையும், மீண்டும் அந்தப் பாவத்தைச் செய்யவில்லை என்பதையும் வேத வசனத்தில் புரிந்து கொள்ளமுடிகிறது.
இப்படியாக தேவனை நேசிப்பவர்களும் சில சமயங்களில் அவருடைய கட்டளைகளில் தவறிழைக்கிறார்கள், ஆனால் அவர்கள் அதில் தொடரமாட்டார்கள், யாராவது அவர்களை வேதத்தின்படி எச்சரித்தால், அவர்கள் சரிசெய்துக் கொள்கிறவர்களாக இருப்பார்கள். மற்றும் மனந்திரும்புவார்கள், அத்தகைய சூழ்நிலை மீண்டும் ஏற்படாமல் பார்த்துக்கொள்வார்கள். தாங்கள் தேவனை நேசிப்பதாக நினைத்து சாத்தானால் ஏமாற்றப்படுகிறவர்கள். அல்லது இந்த விஷயத்தில் தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்கிறார்கள் வழக்கமாக பாவம் செய்கிறார்கள்.
“எல்லாவற்றைப்பார்க்கிலும் இருதயமே திருக்குள்ளதும் மகா கேடுள்ளதுமாயிருக்கிறது, அதை அறியத்தக்கவன் யார்?” (எரேமியா 17:9), “ஒருவனும் தன்னைத்தானே வஞ்சியாதிருப்பானாக; இவ்வுலகத்திலே உங்களில் ஒருவன் தன்னை ஞானியென்று எண்ணினால் அவன் ஞானியாகும்படிக்குப் பைத்தியக்காரனாகக்கடவன்.” (1 கொரிந்தியர் 3:18) “சத்தியத்தை அறியும் அறிவை அடைந்தபின்பு நாம் மனப்பூர்வமாய்ப் பாவஞ்செய்கிறவர்களாயிருந்தால், பாவங்களினிமித்தம் செலுத்தத்தக்க வேறொரு பலி இனியிராமல், நியாயத்தீர்ப்பு வருமென்று பயத்தோடே எதிர்பார்க்குதலும், விரோதிகளைப் பட்சிக்கும் கோபாக்கினையுமே இருக்கும். (எபிரேயர் 10:26,27)
இதுவரை நான் அளித்த விளக்கத்திலிருந்து, தேவனை உண்மையாக நேசிப்பதற்கும், தேவனை நேசிப்பதாக சாத்தானால் ஏமாற்றப்படுவதற்கும், உள்ள வித்தியாசத்தை புரிந்துக்கொள்ள உதவும் என்று நினைக்கிறேன். நேசிக்கும் விஷயத்தில் மட்டுமல்ல, நம்முடைய ஆவிக்குரிய விஷயத்திலும், மனமாற்றத்தின் விஷயத்திலும், நம்பிக்கை விஷயத்திலும், வேதத்தின் அடிப்படையில் ஆராய்ந்து, எது உண்மையானது? எது போலியானது? என்பதை உணர வேண்டும். உதாரணமாக, இன்றைய திருச்சபையில் அனைவரும் பக்திமான்களாக இருந்தாலும், அவர்களில் பலருக்கு வேதம் போதிக்கும் அடிப்படை விஷயங்கள் கூடத் தெரியாது.
(யாக்கோபு 1:27) “திக்கற்ற பிள்ளைகளும் விதவைகளும் படுகிற உபத்திரவத்திலே அவர்களை விசாரிக்கிறதும், உலகத்தால் கறைபடாதபடிக்குத் தன்னைக் காத்துக்கொள்ளுகிறதுமே பிதாவாகிய தேவனுக்குமுன்பாக மாசில்லாத சுத்தமான பக்தியாயிருக்கிறது.”
நீதிமொழிகள் 8:13 “தீமையை வெறுப்பதே கர்த்தருக்குப் பயப்படும் பயம்; பெருமையையும், அகந்தையையும், தீய வழியையும், புரட்டுவாயையும் நான் வெறுக்கிறேன்.”
இந்த வசனங்கள் தேவன் மீது பக்தி உள்ளவர்களின் முக்கிய குணங்களை விவரிக்கின்றன. இப்படிப்பட்ட குணங்கள் எத்தனை விசுவாசிகளின் வாழ்கையில் பார்க்க முடிகிறது. இந்த விஷயத்தில் பலர் சாத்தானால் ஏமாற்றப்படுகிறார்கள்! அவர்கள் அதையே நாடுகிறார்கள், மேலும் "இந்த உலகின் அசுத்தங்களை" தங்களுக்குள் இணைத்துக் கொள்கிறார்கள். அவர்கள் "தீமையை" ஆழமாக நேசிக்கிறார்கள் மற்றும் அதில் மகிழ்ச்சியை அனுபவிக்கிறார்கள்.