உண்மையான கிறிஸ்தவ வாழ்க்கை

ஆசிரியர்: A.W. பிங்க் 1886-1952
தமிழாக்கம்: தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்
வாசிப்பதற்கான நேரம்: 6 நிமிடங்கள்

 

Christian workers

      “வேலைக்காரரே, நீங்கள் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிகிறதுபோல, சரீரத்தின்படி உங்கள் எஜமான்களாயிருக்கிறவர்களுக்குக்கும் பயத்தோடும் நடுக்கத்தோடும் கபடற்ற மனதோடும் கீழ்ப்படிந்து, மனுஷருக்குப் பிரியமாயிருக்க விரும்புகிறவர்களாகப் பார்வைக்கு ஊழியஞ்செய்யாமல், கிறிஸ்துவின் ஊழியக்காரராக, மனப்பூர்வமாய்த் தேவனுடைய சித்தத்தின்படி செய்யுங்கள்.   அடிமையானாலும், சுயாதீனமுள்ளவனானாலும், அவனவன் செய்கிற நன்மையின்படியே கர்த்தரிடத்தில் பலனை அடைவானென்று அறிந்து, மனுஷருக்கென்று ஊழியம்செய்யாமல், கர்த்தருக்கென்றே நல்மனதோடே ஊழியஞ்செய்யுங்கள்”. (எபேசியர் 6:5-8)

 

தேவன் நமக்கு கொடுத்த வேதம் எவ்வளவு நடைமுறைக்கேற்ப உள்ளது! அது நமக்கு பரலோகத்திற்கான பாதையை மட்டுமல்ல, நாம் பூமியில் எப்படி வாழ வேண்டும் என்பதையும் வெளிப்படுத்துகிறது. நாம் அனுதினமும் நடக்க வேண்டிய பாதையை சீர்ப்படுத்துவதற்காக, நமது கால்களுக்கு தீபமாகவும், பாதைக்கு வெளிச்சமாகவும் தேவன் தனது வார்த்தையை நமக்கு அருளியுள்ளார்; நம்முடைய வாழ்க்கையின் பல்வேறு நிலைகளில் நாம் எவ்வாறு நடந்துக்கொள்ள வேண்டும் என்பதை வேதம் நமக்கு வெளிப்படுத்துகிறது. சிலர் திருமணமாகாமல் இருக்கலாம், சிலர் திருமணமாகியிருக்கலாம்; சிலர் குழந்தைகளாக இருக்கலாம், சிலர் பெற்றோர்களாக இருக்கலாம்; சிலர் எஜமான்களாக இருக்கலாம், சிலர் வேலைக்காரர்களாக இருக்கலாம். பரிசுத்த வேதம் ஒவ்வொருவருக்கும் நிச்சயமான போதனைகளையும், கட்டளைகளையும், உற்சாகத்தையும், ஆறுதல்களையும் தருகிறது. நாம் திருச்சபையிலும், வீட்டிலும் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதை மட்டுமல்ல, பணிபுரியும் இடத்திலும், சமையலறையிலும் எவ்வாறு நடந்துக்கொள்ள வேண்டும் என்பதையும் போதிக்கிறது. இது எஜமான்களுக்கும், வேலைக்காரர்களுக்கும் தேவையான ஆலோசனைகளை வழங்குகிறது. எல்லா மனிதர்களும் சமமாக இருக்க வேண்டும் என தேவன் திட்டமிடவில்லை என்பதற்கும், “சோஷலிசம் (சமூக நீதி)” அல்லது “கம்யூனிசம் (பொதுவுடமை கொள்கை)” ஆகியவை உலகமெங்கும் நிலைத்திருக்க முடியாது என்பதற்கும், இது தெளிவான சான்றாகும். நம்மில் பலருடைய வாழ்க்கையின் பெரும்பகுதியும் பணியில் செலவிடப்படுவதால், நாம் இவற்றை கவனமாகப் பின்பற்றுவது நம்முடைய நன்மைக்கும், தேவனுடைய மகிமைக்கும் ஏற்றதாய் இருக்கும்.

ஒரு சமய சார்பற்ற எழுத்தாளர் சமீபத்தில் குறிப்பிடுகையில், “வேலை என்பது, ஓய்வைப் பெறுவதற்கான ஒருவித வெறுப்பான வழியாகவே தற்போது பார்க்கப்படுகிறது; உண்மையில், ஓய்வு என்பது நம்மை மீண்டும் வேலைக்குத் தயாராக்கும் புத்துயிர் கொடுப்பதாக இருக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார். இது, தற்போதைய தலைமுறை மகிழ்ச்சிக்கு அடிமையாகி, எந்தவொரு உண்மையான வேலையையும் வெறுக்கிறது என்பதை கூறும் விதமாய் உள்ளது. இதற்கான பல காரணங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன: கைத்தொழில்களை இயந்திரங்கள் மாற்றியமைத்தது, வேலை இழப்பதற்கான அச்சம் ஊக்கத்தைக் குறைத்தது, வேலை செய்யாதவர்களுக்காக வழங்கப்படும் உதவித்தொகைகள், சலுகைகள் மற்றும் நிவாரணங்கள் போன்றவை ஆகும். இவையெல்லாம் ஒரு பங்கு வகித்தாலும், இந்த சமூக நோய்க்கு அடிப்படையான மற்றும் மிகக் கவலையூட்டும் காரணம் ஒன்று இருக்கிறது. அதாவது, கடந்த காலங்களில் திருச்சபைக்கு செல்லும் பெரும்பாலானோர் வாழ்ந்த நெறிமுறைகள் இன்றைய தலைமுறையிலிருந்து மறைந்து போனது. அவர்கள் உலகப் பிரகாரமான பணிகளில் ஈடுபட்டபோதிலும், ஆண்டவருக்காக உழைப்பதற்கான மனச்சாட்சியோடு செயல்பட்டனர்; மேலும், நேர்மை, உண்மை, நம்பிக்கையின் மூலமான விசுவாசம் மற்றும் தேவபக்தியோடு உடனான கடமை உணர்வு போன்ற ஒழுக்கநெறிகளால் அவர்களின் வாழ்க்கை நிறைந்து  காணப்பட்டது.

கடந்த இரண்டு அல்லது மூன்று தலைமுறைகளில், கிறிஸ்தவர்கள் என்று கூறுவதில் உள்ள வெறுமை இதைப்போல் எங்கும் வெளிப்படையாக தெரியவில்லை. கிறிஸ்துவின் நாமத்தைத் தரித்த பெரும்பாலான வேலையாட்கள் மூலமே, கிறிஸ்துவின் நாமத்திற்கு அதிக தூஷணம் வருகிறது. தொழிற்சாலை, சுரங்கப்பணி, அலுவலகம், மற்றும் விவசாயப்பணி எப்பணியாக இருந்தாலும், கர்த்தராகிய இயேசுவின் சீஷனாய் தன்னை அடையாளப்படுத்தும் ஒருவர், அவர் செய்யும் வேலையின் தரத்தாலும், நேர்மையினாலும், நேர்த்தியினாலும், பொறுப்புணர்ச்சியுடனும் விசுவாசத்துடனும் செயல்படுதலாலும், மற்ற பணியாளர்கள் மத்தியிலே முன்மாதிரியாய் விளங்க வேண்டும். அவரது நேர்மை, உண்மை, தீவிரப்பணி, மற்றும் எஜமானின் நலனுக்காக காட்டும் பட்சமான சேவை ஆகியவை வெளிப்படையாக இருக்க வேண்டும்; அவர் தன்னை கிறிஸ்துவின் சீஷன் என்று சொல்வதற்கே அவசியம் இருக்கக்கூடாது. பொறுப்பின்மை, அலட்சியம், சுயநலம், பேராசை, அருவருப்பான ஜீவியம் போன்ற எந்தவித குற்றமின்றி அவர் தன்னுடைய பணியில் செயல்பட வேண்டும், ஏனெனில் இரட்சிக்கப்படாதவர்களை ஒப்பிடும்போது, அவர் அவர்களைவிட உற்சாகமாய் செயல்படுகிறார் என்பதை அனைவரும் காண வேண்டும். ஆனால், அவருடைய நடத்தை என்பது தன்னை கிறிஸ்தவர் என்று அறிக்கையிடுவதை மறுப்பதாக இருந்தால், "அவர் பின்பற்றும் கிறிஸ்தவ சமயத்தில் வெறும் பேச்சு மட்டும்தான், வேறொன்றும் இல்லை" என்று பிறர் நம்புவதற்கு காரணமாகும்.

இப்படிப்பட்ட நிலை எல்லாவற்றிற்கும் அவர்கள் மாத்திரம் காரணமில்லை; இந்த விஷயத்தில் திருச்சபையின் பிரசங்க பீடமும் இக்குற்றத்திற்கு தூரமானதல்ல. கர்த்தர் தம்முடைய ஊழியர்களிடம் இந்த காரியங்களைக் குறித்து போதிக்கும்படி தெளிவாக கட்டளையிட்டிருக்கிறார், ஏனெனில் இது மிக முக்கியமானது மட்டுமல்ல, திருச்சபையில் போதிக்கிற சத்தியத்தின் அத்தியாவசிய பகுதியாகும். “தேவனுடைய நாமமும் உபதேசமும் தூஷிக்கப்படாதபடிக்கு, அடிமைத்தன நுகத்திற்குட்பட்டிருக்கிற வேலைக்காரர் யாவரும் தங்கள் எஜமான்களை எல்லாக் கனத்திற்கும் பாத்திரரென்று எண்ணிக்கொள்ளக்கடவர்கள். விசுவாசிகளாகிய எஜமான்களை உடையவர்கள், தங்கள் எஜமான்கள் சகோதரராயிருக்கிறதினாலே அவர்களை அசட்டைபண்ணாமல், நல்வேலையின் பலனைப் பெற்றுக்கொள்ளுகிற அவர்கள் விசுவாசிகளும் பிரியருமாயிருக்கிறபடியால், அவர்களுக்கு அதிகமாய் ஊழியஞ் செய்யக்கடவர்கள். இந்தப்படியே போதித்துப் புத்திசொல்லு” (1 தீமோத்தேயு 6:1,2) “ஒருவன் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் ஆரோக்கியமான வசனங்களையும், தேவபக்திக்கேற்ற உபதேசங்களையும் ஒப்புக்கொள்ளாமல், வேற்றுமையான உபதேசங்களைப் போதிக்கிறவனானால், அவன் இறுமாப்புள்ளவனும், ஒன்றும் அறியாதவனும், தர்கங்களையும் வாக்குவாதங்களையும்பற்றி நோய்கொண்டவனுமாயிருக்கிறான். அவைகளாலே பொறாமையும், சண்டையும், தூஷணங்களும், பொல்லாத சம்சயங்களுமுண்டாகி,” (1 தீமோத்தேயு 6:3,4) ஒருமுறை மீண்டும் ஒரு தேவ மனுஷன் தெய்வீகமாக கட்டளையிடுகிறார்: “நீயோ ஆரோக்கியமான உபதேசத்துக்கேற்றவைகளைப்பேசு. முதிர்வயதுள்ள புருஷர்களும், முதிர்வயதுள்ள ஸ்திரீகளும், பாலிய புருஷரும் தெளிந்த புத்தியுள்ளவர்களாய் இருக்கவும், வேலைக்காரர் நம்முடைய இரட்சகராகிய தேவனுடைய உபதேசத்தை எல்லாவற்றிலும் அலங்கரிக்கத்தக்கதாக,  தங்கள் எஜமான்களுக்குக் கீழ்ப்படிந்திருந்து எதிர்த்துப்பேசாமல், எல்லாவற்றிலும் பிரியமுண்டாக நடந்து கொள்ளவும், திருடாமலிருந்து சகலவிதத்திலும் நல்லுண்மையைக் காண்பிக்கவும் புத்திசொல்லு” (தீத்து 2:1-10) அருமை ஊழியக்காரரே, நீங்கள் இந்த விஷயங்களைப் பற்றி பேசுகிறீர்களா? தேவையற்ற விடுமுறை எடுப்பது பாவம் என்று பணியாளர்களுக்குச் சொல்லுகிறீர்களா? உங்கள் திருச்சபை விசுவாசிகள் பணிபுரிபவர்களாக இருந்தால், அவர்கள் தங்கள் தேவனுக்கு முழுதிருப்தி அளிக்கத் தொடர்ந்து முயற்சிக்க வேண்டும் என்றும், தங்கள் நடத்தை முழுவதும் மரியாதையுடனும், பரிபூரண உழைப்புடனும், கீழ்ப்படிதலுடனும் இருக்க வேண்டும் என்று அவர்கள் உணர்கிறார்களா? அவர்களுடைய நடத்தை, அவர்கள் சொல்லும் சத்தியத்தை அலங்கரிக்கவோ அல்லது அவமதிக்கவோ செய்யும் என்பதை நீங்கள் போதிக்கிறீர்களா?  இல்லையெனில், நீங்கள் உங்கள் கடமையை நிறைவேற்றுவதில் தவறியுள்ளீர்கள்.

திருச்சபையின் பிரசங்க பீடத்தின் மௌனத்தை கருத்தில் கொண்டு பார்க்கும்போது, வேதாகமத்தில் வேலையாட்களின் கடமைகளை எவ்வளவு முக்கியமாக வலியுறுத்தி சொல்லப்பட்டிருக்கிறது என்பதைக் காண்பது மிக விசேஷமாக இருக்கிறது. எபேசியரில் அப்போஸ்தலர் பின்வருமாறு அறிவுறுத்துகிறார்: “வேலைக்காரரே, நீங்கள் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிகிறதுபோல, சரீரத்தின்படி உங்கள் எஜமான்களாயிருக்கிறவர்களுக்குக்கும் பயத்தோடும் நடுக்கத்தோடும் கபடற்ற மனதோடும் கீழ்ப்படிந்து, மனுஷருக்குப் பிரியமாயிருக்க விரும்புகிறவர்களாகப் பார்வைக்கு ஊழியஞ்செய்யாமல், கிறிஸ்துவின் ஊழியக்காரராக, மனப்பூர்வமாய்த் தேவனுடைய சித்தத்தின்படி செய்யுங்கள்” (எபேசியர் 6:5-7).  கிறிஸ்தவ பணியாளர்கள் தங்கள் மேலதிகாரிகளின் அழைப்புகளுக்கும் கட்டளைகளுக்கும் கீழ்ப்படிந்திருக்க வேண்டும். கனத்தோடும், பணிவோடும் நடந்து, அவர்களை பிரியப்படுத்துகிறவர்களாக இருக்க வேண்டும். அதிகாரிகள் கண்களுக்குப் புலப்படும் வேலை செய்வதல்லாமல், மேற்பார்வை இல்லாவிட்டாலும், தன்னுடைய பணியில் முழு ஈடுபாடுடன் செய்ய வேண்டும். அவர்களுடைய பணியை நல்மனதோடே செய்யவும், குறைகளுடனோ, விருப்பமற்றோ செய்யாமல், நேர்மையான நல்ல வாழ்க்கைக்கு நன்றியோடு செய்ய வேண்டும். இவையெல்லாவற்றிலும் மேலாக, கிறிஸ்துவின் ஊழியக்காரர்களாக தேவனை கனவீனப்படுத்தாமல், அவரை மகிமைப்படுத்துவதற்கேதுவாக, நமது உழைப்பினை "ஆவிக்குரிய பலியாக" செலுத்துவோமாக.

கொலோசெயருக்கு நிருபம் எழுதும் போது அப். பவுல் மேலும் அறிவுறுத்துகிறார், “வேலைக்காரரே, சரீரத்தின்படி உங்கள் எஐமான்களாயிருக்கிறவர்களுக்கு எல்லாக் காரியத்திலேயும் கீழ்ப்படிந்து, நீங்கள் மனுஷருக்குப் பிரியமாயிருக்க விரும்புகிறவர்களாகப் பார்வைக்கு ஊழியஞ்செய்யாமல், தேவனுக்கு பயப்படுகிறவர்களாகக் கபடமில்லாத இருதயத்தோடே ஊழியஞ்செய்யுங்கள். எதைச் செய்தாலும் அதை மனுஷர்களுக்கென்று செய்யாமல் கர்த்தருக்கென்றே மனப்பூர்வமாய்ச் செய்யுங்கள்” (கொலோசெயர் 3:22,24). எந்தவொரு நீதிசார்ந்த கட்டளைகளையும், அது எவ்வளவு விருப்பமில்லாததாக, கடினமாக அல்லது எரிச்சலூட்டுகிறதாக இருந்தாலும், அதை கடைபிடிக்க வேண்டும். அவருக்கு ஒப்படைக்கப்பட்ட ஒவ்வொரு பொறுப்பிலும் விசுவாசமுள்ளவராக இருக்க வேண்டும். அவரது கைகளுக்கு நேரிடுகிற காரியம் எதுவாயினும், அவர் அதை முழு மனதுடனும், முழு திறனுடனும் செய்ய வேண்டும். அவர் அதை உற்சாகமாகவும் மகிழ்ச்சியுடனும் செய்ய வேண்டும், தன் பணியில் மகிழ்ச்சியாய் இருக்க வேண்டும். அனைத்தையும் “கர்த்தருக்காகவே” செய்ய வேண்டும், இது உலகப்பிரகாரமானதை பரிசுத்தமானதாக மாற்றும். மேலும் கூறப்படுகிறது, "நீங்கள் கர்த்தராகிய கிறிஸ்துவைச் சேவிக்கிறதினாலே, சுதந்தரமாகிய பலனைக் கர்த்தரால் பெறுவீர்களென்று அறிந்து," (கொலோசியர் 3:23) இந்த வசனம் நம்பிக்கைக்கு எவ்வளவு உற்சாகமளிக்கிறது! “அநியாயஞ்செய்கிறவன் தான் செய்த அநியாயத்துக்கேற்ற பலனை அடைவான்;” (கொலோசியர் 3:25) என்பது கடமையில் தவறாமல் இருக்குமாறு எச்சரிக்கும் ஓர் எச்சரிக்கையாகும், ஏனெனில் “இந்த உலகத்திலோ அல்லது மறுபிறப்பிலோ தேவன் அத்தகைய அநீதிக்குப் பழிவாங்குவார்” என்று (ஜான் கில்) இவ்விதமாக சொல்லுகிறார்.

“வேலைக்காரரே, அதிக பயத்துடனே உங்கள் எஜமான்களுக்கு கீழ்ப்படிந்திருங்கள். நல்லவர்களுக்கும் சாந்தகுணமுள்ளவர்களுக்கும் மாத்திரம் அல்ல, முரட்டுக்குணமுள்ளவர்களுக்கும் கீழ்ப்படிந்திருங்கள். ஏனெனில், தேவன்மேல் பற்றுதலாயிருக்கிற மனச்சாட்சியினிமித்தம் ஒருவன் அநியாயமாய்ப் பாடுபட்டு உபத்திரவங்களைப் பொறுமையாய்ச் சகித்தால், அதுவே பிரீதியாயிருக்கும்” (1 பேதுரு 2:18,19). பணியாட்கள் தங்கள் கடமைகளைச் சரியாக நிறைவேற்ற வேண்டும் என அப்போஸ்தலர்கள் மீண்டும் மீண்டும் வலியுறுத்துதலில், தேவனின் மகிமை இதில் எவ்வளவு தொடர்புடையது என்பதை மட்டுமல்லாமல், அவர்களின் எதிர்ப்பும் இதை மீண்டும் கூற தேவையுண்டாக்குகிறது. அதை இரண்டு அல்லது மூன்று நாட்கள் கூடுதல் விடுமுறையாக எடுத்துக்கொண்டு ஆவிக்குரிய கூட்டங்களில் கலந்து கொள்ளுவதன் மூலம் தங்கள் எஜமான்களை சிரமப்படுத்தும் சிலர் நிரூபிக்கின்றனர். நாம் செய்யும் பணிகளை ஆவியுடனும், திறமையுடனும் செய்து நாம் பணிசெய்கிறவர்களுக்கு சுவிசேஷத்தை நன்றாக எடுத்துக்காட்ட வேண்டும். இந்த அறிவுரைகள் ஆண், பெண் என அனைத்து பணியாளர்களுக்கும் பொருந்துவதை நினைவில் கொள்ள வேண்டும். இந்தச் செய்திகளைப் படிக்கிற ஒவ்வொருவரும் நாம் பணிபுரியும் நிலையில் தேவனுடைய கட்டளைகளை எவ்வளவு நம்பிக்கையுடனும், ஜெபத்துடனும், சந்தோஷமான சகிப்புத்தன்மையுடனும் நமது பணிகளை நிறைவேற்றுகிறோம்? என்பதை சிந்திப்போமாக. “தொழிற்சங்க விதிகள்” அல்லது “கடை மேலாளர்களின் கட்டுப்பாடுகள்” தேவனின் கட்டளைகளை மாற்றவோ அல்லது புறக்கணிக்கவோ அனுமதிக்கக்கூடாது.

மேலே கூறப்பட்டுள்ளவை, எழுதப்பட்ட வேதவாக்கியங்களால் பல முக்கியமான உதாரணங்கள் மூலம் வலியுறுத்தப்பட்டும், விளக்கப்பட்டும் உள்ளன. உதாரணமாக, எலியேசர், "இன்றைக்கு நீர் எனக்குக் காரியம் சித்திக்கப்பண்ணி, என் எஜமானாகிய ஆபிரகாமுக்குத் தயவு செய்தருளும்" (ஆதியாகமம் 24:12) என்று தேவனை நோக்கி ஜெபித்த நேரத்தில், பரிசுத்த ஆவியானவர் எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்திருப்பார் என்பதை காணலாம். அவர் தமது கடமையை எவ்வளவு உண்மையுடன் நிறைவேற்றி, தனது எஜமானைப் பற்றி எவ்வளவு நன்றாகப் பேசினார் என்பதை கவனியுங்கள். யாக்கோபும், “என்னால் இயன்றமட்டும் நான் உங்கள் தகப்பனுக்கு ஊழியஞ்செய்தேன் என்று நீங்கள் அறிந்திருக்கிறீர்கள்" (ஆதியாகமம் 31:6) என்று சொல்லக்கூடியவராய் இருந்தார். இதை வாசிக்கும் நீங்களும் அதே பதிலை சொல்ல முடியுமா? ஒரு புறஜாதியாக இருந்தாலும், “கர்த்தர் அவனோடே இருக்கிறார் என்றும் அவன் செய்கிற யாவையும் கர்த்தர் வாய்க்கப்பண்ணுகிறார் என்றும், அவன் எஜமான் கண்டு: யோசேப்பினிடத்தில் தயவுவைத்து, அவனைத் தனக்கு ஊழியக்காரனும் தன் வீட்டுக்கு விசாரணைக்காரனுமாக்கி, தனக்கு உண்டான யாவற்றையும் அவன் கையில் ஒப்புவித்தான்” (ஆதியாகமம் 39:3-4) இது என்ன ஒரு அற்புதமான சாட்சி! வேதாகமம், எலிசாவின் உண்மையற்ற வேலைக்காரனையும், அவனுக்கு வந்த பயங்கர நியாயத்தீர்ப்பையும் பதிவு செய்கிறது (2 இராஜாக்கள் 5:20-27) இறுதியாக, இயேசு கிறிஸ்து மனுஷகுமாரனாக வெளிப்பட்டவர் ஊழியரின் ஸ்தானத்தில் இருந்தபோதும் பூரண கீழ்ப்படிதலினாலே என்றென்றைக்குமுள்ள கனத்தையும், மாட்சிமையும் அடைந்தார் என்பதை எல்லா வேலைக்காரரும், எஜமான்களும் நினைவில் கொள்ள வேண்டும்.

“செய்யும்படி உன் கைக்கு நேரிடுகிறது எதுவோ, அதை உன் பெலத்தோடே செய்;” (பிரசங்கி 9:10) அதில் உங்கள் முழு திறமையையும் செலுத்துங்கள்.

கருத்துக்களை தெரிவிக்க

Security code
Refresh

 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.