முதலாவதாக நான் சொல்லப் போவது, சுபாவத்தின்படி நாம் எப்படிப்பட்டவர்கள் என்பதே. நாம் ஆவிக்குரிய பிரகாரமாக மரித்தவர்கள்.
"மரித்தவன்" என்பது ஒரு கடினமான வார்த்தைதான். ஆனால் நான் இதை உருவாக்கவுமில்லை, அது என் சொந்தக் கண்டுபிடிப்பும் அல்ல. அது எபேசிய சபையார் முன்னர் இருந்த நிலையைக் குறித்து எழுதும்படியாக பரிசுத்த ஆவியானவர் பவுலுக்குக் கற்பித்த வார்த்தையாகும்: "அக்கிரமங்களினாலும் பாவங்களினாலும் மரித்தவர்களாயிருந்த உங்களை உயிர்ப்பித்தார்." கெட்ட குமாரனைப் பற்றிய உவமையில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவும் இந்த வார்த்தையை உபயோகித்திருக்கிறார்: "என் குமாரனாகிய இவன் மரித்தான், திரும்பவும் உயிர்த்தான்" (லூக்கா 15:24, 32). பவுல் தீமோத்தேயுவுக்கு எழுதின முதலாம் நிருபத்திலும் இந்த வார்த்தையைக் காண்பீர்கள்: "சுகபோகமாய் வாழ்கிறவள் உயிரோடே செத்தவள்" (1 தீமோத்தேயு 5:6). எழுதப்பட்டிருக்கும் தேவனுடைய வார்த்தையைவிட அழிவுக்குரிய மனிதன் அதிக ஞானவானா? வேதாகமத்தில் காணப்படும் வார்த்தைகளுக்கு அதிகமாகவோ குறைவாகவோ நான் கூறாதபடிக்கு எச்சரிக்கையாய் இருக்க வேண்டாமா?
"மரித்தவன்" என்பது மனிதன் விரும்பாத வார்த்தை. அதை ஏற்றுக்கொள்ள அநேகமாக யாரும் விரும்புவதில்லை. தனது ஆத்துமாவின் வியாதிப்பட்ட நிலையை முழுவதுமாக உணர்ந்துகொள்வதை அவன் விரும்புவதில்லை. அது எத்தகைய ஆபத்தான நிலையில் இருக்கிறது என்பதைக் காணாதபடிக்கு அவன் தன் கண்களை மூடிக்கொள்கிறான். மனிதனுடைய இயற்கை சுபாவத்தைக் குறித்துப் பெரும்பாலான மனிதர்களின் கருத்து என்னவென்றால், "மனிதன் எந்த அளவுக்கு இருக்க வேண்டுமோ அந்த அளவிற்கு இல்லை; அவன் கவனக்குறைவானவன், உறுதியற்றவன், உல்லாசத்தை விரும்புபவன், அடங்காதவன், எதிலும் ஆழ்ந்த சிந்தனை இல்லாதவன் என்று வேண்டுமானால் கூறிக்கொள்ளுங்கள். ஆனால் அவன் மரித்த நிலையில் இருக்கிறான் என்று மட்டும் சொல்லாதீர்கள்" என்பார்கள். அப்படிக் கூறுவது அளவுக்கதிகமானது என்பார்கள். அத்தகைய எண்ணம் இடறுதலின் கல்லாகவும், விழுவதற்கேதுவான கன்மலையுமாய் இருக்கிறது என்பார்கள்.
"நமது வியாதியின் தன்மையை நாம் முழுவதுமாகப் புரிந்துகொள்ளாததால்தான் நாம் குணமடையாமல் இருக்கிறோம். நமது நிலைமை எவ்வளவு மோசமாக இருக்கிறதென்பதை அறியாதவர்களாய் இருப்பதுதான் நாம் சரியாக இல்லாமலிருப்பதற்குக் காரணம்." — அஷ்ஷர் (Ussher) என்கிற பரிசுத்தவானின் பிரசங்கத்திலிருந்து, 1650.
ஆனால் நாம் எவ்வித பக்தியை விரும்புகிறோம் என்பது அதிக முக்கியம் அல்ல. வேதாகமத்தில் என்ன எழுதப்பட்டுள்ளது? கர்த்தர் என்ன சொல்லுகிறார்? என்பதே நாம் கேட்க வேண்டிய முக்கியமான கேள்வி. தேவனுடைய நினைவுகள் மனுஷனுடைய நினைவுகள் அல்ல; தேவனுடைய வார்த்தைகள் மனுஷனுடைய வார்த்தைகள் அல்ல. உலகில் வாழுகின்ற ஒவ்வொரு மனிதனும், அவன் உண்மையான, முழுமையான, தீவிரமான கிறிஸ்தவனாக இல்லாதபட்சத்தில், ஆவிக்குரிய பிரகாரமாகச் செத்தவனே. அவன் உயர்ந்தவனோ அல்லது தாழ்ந்தவனோ, ஏழையோ அல்லது பணக்காரனோ, வயதானவனோ அல்லது இளைஞனோ, எந்த நிலையில் இருந்தாலும் அவன் ஆவிக்குரிய பிரகாரம் மரித்தவன்.
இந்த விஷயத்திலும் கர்த்தருடைய வார்த்தை கூறுவதுதான் மிகவும் சரியானது. மனிதனின் நிலையைக் குறித்து மிகச் சரியாகவும், மிகவும் துல்லியமாகவும், மிகவும் உண்மையாகவும் வேதாகமத்தில் கூறப்பட்டிருக்கிறது. இதிலுள்ள உண்மைத்தன்மையைத் தகுந்த காரணங்களோடு நான் உங்களுக்கு விளக்கிச் சொல்லப் போகிறேன்.
யோசேப்பு தன் தகப்பனாகிய யாக்கோபின் மீது விழுந்து அழுதுகொண்டிருப்பதைப் பார்த்தால் நீங்கள் என்ன சொல்லுவீர்கள்? "யோசேப்பு தன் தகப்பனுடைய முகத்தின்மேல் விழுந்து அழுது, அவனை முத்தஞ்செய்தான்" (ஆதியாகமம் 50:1). ஆனால் அதற்கு யாக்கோபிடமிருந்து எந்தப் பதிலும் வரவில்லை. யாக்கோபின் அந்த வயதான முகம் மௌனமாக, அசைவற்று, அமைதியாக இருந்தது. அதற்கான காரணத்தை நீங்கள் நிச்சயம் யூகித்திருப்பீர்கள். யாக்கோபு மரித்துப் போய்விட்டார்.
கிபியாவிலே இராத்தங்குவதற்காக லேவியன் ஒருவன் தன் மறுமனையாட்டியோடு அங்கு சென்றான். காலையிலே வீட்டு வாசலுக்கு முன்பாக விழுந்து கிடந்த அவளை நோக்கி, "எழுந்திரு, போவோம்" என்று சொன்னான் (நியாயாதிபதிகள் 19:28). அதற்கு அவள் பதில் ஒன்றும் கூறவில்லை. அங்கே அவள் அசையாமல், விறைப்பாக, சில்லிட்டுப் போய்க் கிடந்தாள். அதன் காரணம் உங்களுக்குத் தெரியும். ஆம், அவள் மரித்துப் போயிருந்தாள்.
கில்போவா மலையிலே சவுலின் அருகில் சென்று அவருடைய ராஜ அணிகலன்களை ஒரு அமலேக்கிய வாலிபன் உருவி எடுக்கும் காட்சியை நீங்கள் கண்டால் என்ன நினைப்பீர்கள்? "அவர் தலையின்மேல் இருந்த முடியையும், அவர் புயத்தில் இருந்த அஸ்தகடகத்தையும் எடுத்துக்கொண்டான்" (2 சாமுவேல் 1:10). அவன் எடுக்கும்போது சவுலிடமிருந்து எதிர்ப்பு ஒன்றும் கிளம்பவில்லை. கம்பீரமான அந்த முகத்தின் ஒரு தசையும் அசையவில்லை; தடுப்பதற்கு ஒரு விரலும் எழவில்லை. ஏன்? சவுல் மரித்துப் போயிருந்தார்.
நாயீன் ஊரின் வாசலிலே அந்த விதவையின் மகனை நீங்கள் சந்தித்திருந்தால் என்ன நினைப்பீர்கள்? அவன் பாடையில் வைக்கப்பட்டிருந்தான்; துணிகளால் சுற்றப்பட்டிருந்தான். அவன் தாய் அழுதுகொண்டு பாடையின் பின்னாலே வந்துகொண்டிருந்தாள். அவனை அடக்கம் செய்வதற்காகச் சுமந்துகொண்டு சென்றார்கள் (லூக்கா 7:12). என்ன நடந்திருக்கிறது என்பது சந்தேகத்துக்கிடமின்றி உங்களுக்குத் தெளிவாகத் தெரிந்திருக்கும். அதற்கு விளக்கமே தேவையில்லை; அந்த வாலிபன் மரித்துப் போயிருந்தான்.
ஒவ்வொரு மனிதனின் ஆத்துமாவும் இயற்கை சுபாவத்தில் இந்த நிலையில்தான் இருக்கிறது. நம்மைச் சுற்றிலும் இருக்கின்ற பெரும்பாலான மக்கள் ஆவிக்குரிய விதத்தில் இம்மாதிரியாகவே இருக்கிறார்கள். தேவன் அவர்களைத் தொடர்ந்து அழைத்துக்கொண்டேயிருக்கிறார்; அவருடைய இரக்கங்களின் மூலமாகவும், துன்பங்களின் மூலமாகவும், ஊழியர்களின் மூலமாகவும், தமது வார்த்தையின் மூலமாகவும் அவர்களை அழைக்கிறார். ஆனால் அவர்கள் அவருடைய சத்தத்திற்குச் செவிகொடுப்பதில்லை. கர்த்தராகிய இயேசு கிறிஸ்து அவர்களுக்காகத் துயரப்படுகிறார், வேண்டுதல் செய்கிறார், கிருபையுள்ள அழைப்பு விடுக்கிறார், அவர்கள் இருதயக் கதவைத் தட்டுகிறார். ஆனால் அவர்களோ அதைக் கவனிப்பதில்லை. அவர்களுடைய மகிமையும் கிரீடமுமாக இருக்கிற விலைமதிப்பற்ற நித்திய ஆத்துமா சிறைப்பிடிக்கப்பட்டு, கொள்ளையிடப்பட்டு, அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளது. அதைக்குறித்து அவர்களுக்குக் கொஞ்சமும் அக்கறையில்லை. கேட்டுக்குப் போகின்ற அகலமான பாதையின் வழியாகத் தினந்தோறும் சாத்தான் அவர்களை வழிநடத்திச் செல்கிறான். அவனைக் கொஞ்சம்கூட எதிர்த்துப் போராடாமல், வெகு சுலபமாகத் தங்களைக் கைதியாக்கிக்கொள்வதற்கு அவனுக்கு அனுமதி அளிக்கிறார்கள். இது எல்லா இடங்களிலும் நடந்துகொண்டிருக்கிறது; நம்மைச் சுற்றிலும் நடக்கிறது. எல்லா வகுப்பாரிடையிலும், எல்லா தேசங்களிலும் இதே நிலைமை காணப்படுகிறது. இதை வாசிக்கின்ற உங்களுடைய சொந்த மனசாட்சியில் இதை உணர்வீர்கள்; நீங்கள் அதை அறிந்திருப்பீர்கள்; அதை உங்களால் மறுக்க முடியாது. அப்படியிருக்கையில் தேவன் கூறுவது முற்றிலும் உண்மையே தவிர வேறென்ன? இயற்கை சுபாவத்தின்படியாக நாமெல்லாரும் ஆவிக்குரிய பிரகாரமாக மரித்தவர்களே!
ஆம்! ஒரு மனிதனுடைய இருதயம் அனலற்று இருக்கையில், பக்திக்குரிய காரியங்களில் அக்கறையற்று இருக்கையில், அவன் கரங்கள் தேவனுடைய அலுவல்களில் ஈடுபடாமல் இருக்கையில், அவன் கால்கள் தேவனுடைய வழிகளில் நடவாமல் இருக்கையில், அவனுடைய நாவு தேவனைத் துதிப்பதிலும் ஜெபிப்பதிலும் உபயோகப்படுத்தப்படாமல் இருக்கையில், அவனுடைய காதுகள் கிறிஸ்துவின் சுவிசேஷத்தைக் கேளாதபடிக்குச் செவிடாக இருக்கையில், அவனுடைய கண்கள் பரலோக ராஜ்ஜியத்தின் அழகைப் பருகாமல் இருக்கையில், அவனுடைய மனது முழுவதும் உலகம் நிரம்பிக் கிடக்கையில், அதில் ஆவிக்குரிய காரியங்களுக்கே இடமில்லாமல் இருக்கையில்—இத்தகைய அடையாளங்கள் ஒரு மனிதனிடம் காணப்படும்போது, அவனைக் குறிப்பிடுவதற்கு வேதாகமம் ஒரே ஒரு வார்த்தையைப் பயன்படுத்துவதே சரியானதாக இருக்கும். அந்த வார்த்தை என்னவென்றால், அவன் "மரித்தவன்" என்பதே.
அப்படிச் சொல்வது ஒருவேளை நமக்குப் பிடிக்காமல் இருக்கலாம். இவ்வுலகத்தில் நடைமுறையில் காணப்படுகின்ற உண்மை நிலைக்கும், கர்த்தருடைய வார்த்தையில் கூறப்பட்டுள்ள உண்மை நிலைக்கும் நாம் வேண்டுமானால் நமது கண்களை மூடிக்கொள்ளலாம். ஆனால், தேவனுடைய சத்தியம் பேசப்பட வேண்டும். அதைப் பேசாவிட்டால் அதிகப் பாதிப்புகள் ஏற்படுவது நிச்சயம். எவ்வளவு குற்றப்படுத்தினாலும் சத்தியம் பேசப்பட வேண்டும். சரீரத்தினாலும், ஆத்துமாவினாலும், ஆவியினாலும் எவனொருவன் தேவனுக்குப் பணிவிடை செய்யாமல் இருக்கிறானோ அவன் உண்மையில் உயிருள்ளவன் அல்ல. முதலிடம் கொடுக்க வேண்டியவைகளுக்குக் கடைசி இடத்தையும், கடைசி இடத்தில் வைக்க வேண்டியவைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து முதலிடத்தையும் கொடுப்பவன் தேவனுடைய பார்வையில் மரித்தவன். தேவன் கொடுத்த தாலந்துகளைப் புதைத்து வைத்து, இலாபம் சம்பாதிக்காத அந்த ஊழியனைப் போல இவனும் தேவனுக்கு எந்த மகிமையையும் கொண்டுவராதவனாக இருக்கிறான்; ஆகவே அவன் மரித்தவன். தனக்கு அளிக்கப்பட்டிருக்கும் வாழ்க்கையில் அவன் செய்ய வேண்டியவைகளைச் செய்யாமல் இருக்கிறான். தேவன் அவனுக்குக் கொடுத்திருக்கும் வாய்ப்புகளையும் திறமைகளையும் அவன் உபயோகிக்காமல் இருக்கிறான். ஒரு பாடல் ஆசிரியர் மிகவும் சரியாகச் சொல்லியிருக்கிறார்: "தேவனுக்கென வாழ்பவனே உயிருள்ளவன்; மற்ற யாவரும் இறந்தவர்களே!"
மனிதர்கள் பாவத்தை உணராமல் இருப்பது, பிரசங்கங்களை நம்பாமல் இருப்பது, நல்ல அறிவுரைகளைப் பின்பற்றாமல் இருப்பது, சுவிசேஷத்தை ஏற்றுக்கொள்ளாமல் இருப்பது, உலகத்தை விட்டுவிடாமல் இருப்பது, சிலுவையை எடுத்துக்கொள்ளாமல் இருப்பது, சுயநலத்தை அழிக்காமல் இருப்பது, தீய பழக்கங்களை விட்டு விலகாமல் இருப்பது, வேதாகமத்தை அரிதாக வாசிப்பது, ஜெபிக்காமல் இருப்பது—இவைகளுக்கு என்ன காரணத்தைக் காண்பிக்க முடியும்? உலகம் எங்கும் மனிதர்கள் ஏன் இப்படியாகவே காணப்படுகிறார்கள்? இதற்கு விடையளிப்பது மிகவும் சுலபம்: எல்லோரும் ஆவியில் மரித்துப் போயிருக்கிறார்கள்.
அநேகர் ஒருமனதாகச் சொல்லுகிற பல்லாயிரக்கணக்கான சாக்குப்போக்குகளின் உண்மையான காரணம் இதுதான். சிலருக்குப் படிப்பறிவு இல்லை; சிலருக்கு நேரம் இல்லை; சிலருக்கு அதிகமான வேலைப்பளு இருக்கிறது; சிலருக்கு உலக விவகாரங்களில் கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது; சிலருக்கு வறுமை; சிலருக்குக் குடும்பத்தில் பிரச்சனை; சிலருக்கு உடல்நலக் குறைவுகள்; சிலருக்கு விசித்திரமான தடைகள்; சிலருக்கு விளங்கிக்கொள்வதில் பிரச்சனை; சிலருடைய இல்லங்களில் அசாதாரணமான குறைபாடுகள்—இவைகளெல்லாம் நீங்க வேண்டுமென அவர்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள். இவர்கள் அனைவரையும் குறித்து தேவன் வேதாகமத்தில் சுருக்கமாகக் கூறுகிறார்: அவர்கள் எல்லோரும் மரித்துப் போயிருக்கிறார்கள். இந்த மனிதர்களுடைய இருதயத்தில் ஆவிக்குரிய வாழ்க்கை ஆரம்பமாகிவிட்டதென்றால், மேற்குறிப்பிட்ட சாக்குப்போக்குகளெல்லாம் விரைவில் மறைந்து போய்விடும்.
உண்மையான ஊழியனின் இதயத்தை உலுக்கும் பல விஷயங்களின் உண்மையான விளக்கம் இதுதான். அவரைச் சுற்றிலும் இருக்கிற அநேகர் தேவ ஆராதனையில் பங்குகொள்வதே இல்லை. பலர் ஒழுங்கீனமாகப் பங்கெடுக்கிறார்கள்; அவர்கள் ஆராதனைக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்பதை இது காண்பிக்கிறது. பலர் ஞாயிறு காலை ஆராதனையில் மாத்திரம் பங்கெடுக்கிறார்கள்; மாலைக் கூட்டங்களுக்கு வர முடிந்தாலும் வருவதில்லை. பலர் கர்த்தருடைய பந்தியில் பங்கெடுப்பதில்லை; மேலும் அவர்கள் வாராந்திரக் கூட்டங்களுக்கும் வருவதில்லை. எதனால் மனிதர் இப்படி இருக்கிறார்கள்? இவர்களைக் குறித்துப் பெரும்பாலும் ஒரு காரியத்தை மாத்திரம்தான் குறிப்பிட முடியும்—அவர்கள் மரித்தவர்கள்.
பாருங்கள்! கிறிஸ்தவர்கள் எனச் சொல்லிக்கொள்கிற அனைவரும் எவ்வாறாகத் தங்களையும் தங்களுடைய நிலைமையையும் பரிசோதித்துக்கொள்ள வேண்டியதாக இருக்கிறது! மரித்தவர்கள் கல்லறைத் தோட்டங்களில் மாத்திரம் அல்ல, சபைக்கு உள்ளேயும் அநேகர் இருக்கிறார்கள்; பிரசங்க மேடைக்கு அருகிலும் இருக்கிறார்கள். மரித்த அநேகர் சபையின் ஆசனங்களில் உட்கார்ந்துகொண்டிருக்கிறார்கள். தீர்க்கதரிசியாகிய எசேக்கியேல் தரிசனத்தில் கண்டதுபோல, "இதோ, பள்ளத்தாக்கின் வெட்டவெளியிலே எலும்புகள் மகா திரளாய்க் கிடந்தது; அவைகள் மிகவும் உலர்ந்ததுமாயிருந்தது" (எசேக்கியேல் 37:2). சபைகளிலெல்லாம் செத்த ஆத்துமாக்கள் நிறைந்திருக்கின்றன; நமது தெருக்களிலும் செத்த ஆத்துமாக்கள் நடமாடிக்கொண்டிருக்கின்றன. குடும்பம் முழுவதும் தேவனுக்கென்று வாழுவதைக் காண்பது அரிதாக இருக்கிறது. செத்த ஆத்துமா ஒன்றாகிலும் இல்லாத ஒரு வீட்டைக் காண்பது கடினம். ஓ! நாம் அனைவரும் நம்மை நாமே சோதித்துப் பார்ப்போம்; நமது குடும்பத்தைச் சோதித்துப் பார்ப்போம்; நமது நிலையைச் சோதித்து அறிவோம். நாம் உயிரோடிருக்கிறோமா? அல்லது மரித்துப் போயிருக்கிறோமா?
ஆவிக்குரிய மாற்றம் ஏற்படாமலேயே வாழுகின்றவர்களின் நிலை எவ்வளவு வருத்தத்திற்குரியது என்பதை நினைத்துப் பாருங்கள். அவர்கள் பிறந்தது முதல் இருந்த விதமாகவே அவர்களுடைய இருதயம் இன்னமும் இருக்கிறது. அவர்களுக்கும் பரலோகத்திற்கும் இடையே மலையளவு வேறுபாடு இருக்கிறது. அவர்கள் இன்னமும் "மரணத்தை விட்டு நீங்கி ஜீவனுக்குட்படவில்லை" (1 யோவான் 3:14). அவர்கள் தங்கள் ஆபத்தைப் பார்த்து உணர்ந்தால் எவ்வளவு நலமாயிருக்கும்! சரீர மரணத்தைப் போலவே ஆவிக்குரிய மரணமும் அதை அடைந்தவர்களால் உணர முடியாமல் இருப்பது, ஆவிக்குரிய மரண நிலையின் பயங்கரமான அடையாளமாகும். நமக்கு அருமையானவர்கள் மரிக்கும்போது, அவர்கள் சடலத்தை நாம் கல்லறையில் வைக்கும்போது, அதை அவர்கள் உணருவதில்லை. "மரித்தவர்கள் ஒன்றும் அறியார்கள்" என்று ஞானவான் கூறுகிறார் (பிரசங்கி 9:5). மரித்த ஆத்துமாக்களின் நிலையும் இது போன்றதுதான்.
தனது சபை அங்கத்தினர்களைக் குறித்துச் சபையின் ஊழியர்கள் கவலை கொள்வதற்கான காரணங்கள் என்னவென்பதையும் பாருங்கள். காலம் குறைவாக உள்ளதையும், வாழ்க்கை நிச்சயமில்லாதது என்பதையும் நாங்கள் உணர்ந்திருக்கிறோம். ஆவிக்குரிய மரணம் நித்திய அழிவுக்கு இட்டுச்செல்லும் என்பதை நாங்கள் அறிந்திருக்கிறோம். பிரசங்கங்களைக் கேட்கிற எவராவது தங்கள் பாவங்களிலும், ஆயத்தமில்லாமலும், புதுப்பிக்கப்படாமலும், மனந்திரும்பாமலும், மாற்றம் அடையாமலும் இறந்து போய்விடக் கூடாதே என நாங்கள் அஞ்சுகிறோம். அதனால் பல நேரங்களில் நாங்கள் கடுமையாகப் பேசிவிடுகிறோம்; பல சமயங்களில் அன்புடன் மன்றாடவும் செய்கிறோம்! நாங்கள் உங்களை முகஸ்துதி செய்ய மாட்டோம்; அற்ப விஷயங்களைக் கொண்டு உங்களைச் சந்தோஷப்படுத்திவிட மாட்டோம்; மனதுக்கு இதமானவைகளையே பேசிக்கொண்டிருக்க மாட்டோம். வாழ்க்கையும் மரணமும் ஆபத்துக்குள்ளான நிலையில் இருக்கும்போது, "சமாதானம், சமாதானம்" எனக் கூறி உங்களை ஏமாற்றிவிட மாட்டோம். கொள்ளை நோய் உங்கள் மத்தியில் பரவிக்கொண்டிருக்கிறது. அவ்வேளையில் உயிருள்ளோருக்கும் மரித்தோருக்கும் நடுவே நின்றுகொண்டிருப்பதாக நாங்கள் உணருகிறோம். நாங்கள் வெளிப்படையாகவும், "மிகுந்த தாராளத்தோடும்" பேச வேண்டியதாயிருக்கிறது. "எக்காளம் விளங்காத சத்தமிட்டால் எவன் யுத்தத்திற்கு ஆயத்தம் பண்ணுவான்?" (2 கொரிந்தியர் 3:12; 1 கொரிந்தியர் 14:8).





