ஆரம்ப காலத்தில் இப்பாடலுக்குக் கொடுக்கப்பட்ட தலைப்பு ''உணவருந்து முன் பாடவேண்டிய சிறு நன்றிப் பாடல்.'' ஆனால், கெம்பீர தொனியுடன் பாடப்படும் இப்பாடல், இங்கிலாந்து தேசம் முழுவதும் மகிழ்வுடன் உற்சாகமாகப் பாடும் கொண்டாட்டப் பாடலாக மாறியது. கோலோன் பேராலயப் பிரதிஷ்டை ஆராதனை, விக்டோரியா மகாராணியின் ரத்தின விழா, போயர் யுத்த முடிவு ஆகிய முக்கிய நிகழ்ச்சிகளில் பாடத் தெரிந்து கொள்ளப்பட்ட சிறப்புப் பெற்றது.
ஆனால், நன்றித் தொனியை உற்சாகமுடன் முழங்கும் இப்பாடல் எழுதப்பட்ட சூழ்நிலையோ, முற்றிலும் மாறுபட்டது. அதைப் பார்ப்போமா?
23.04.1586 அன்று, ஜெர்மனியின் எய்லென்பெர்க்கில், ஓர் ஏழைத் தட்டானின் மகனாக மார்ட்டின் ரிங்கர்ட் பிறந்தார். சிறுவனாக இருக்கும்போதே லீப்சிக்கில்
பிரபலமான, தூய தோமாவின் ஆலயப் பாடகர் குழுவில் இருந்தார். பின்னர், அந்நகரப் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்து, லுத்தரன் திருச்சபையின் ஊழியத்தில் சேர்ந்தார். தனது 31-வது வயதில், தன் சொந்த ஊராகிய எய்லென்பெர்க்கின் போதகராக நியமிக்கப்பட்டார். தன் வாழ்வின் எஞ்சிய 30 ஆண்டுகளையும், அதே இடத்தின் ஊழியத்திற்கு அர்ப்பணித்தார்.
ரிங்கர்ட் எய்லென்பெர்க்கில் ஊழியம் செய்த நாட்களில், ''முப்பது ஆண்டுப் போர்'' நடைபெற்றது. எய்லென்பெர்க் ஒரு கோட்டை நகரமாக இருந்ததால், பலதரப்பட்ட அகதிகள் பாதுகாப்புக்காக அதற்குள் நுழைந்தனர். ஜனக்கூட்டம் அதிகமானதால், சுகாதாரமற்ற நிலையில், பல பஞ்சங்களும், கொள்ளை நோய்களும், அந்நகரத்தை அடிக்கடி தாக்கின. 1637-ல் நிலைமை மிகவும் மோசமாகி, அங்கிருந்த அதிகாரிகள், மற்றும் போதகர்கள் பலர் மரித்தனர். மற்றவர்கள் அந்நகரத்தை விட்டு ஓடிவிட்டனர்.
எனவே, நகர மக்களைப் பராமரிக்கும் முழுப்பொறுப்பும், தனித்து நின்ற பேராயர் ரிங்கர்ட்டின் தோளில் விழுந்தது. ஒரு நாளுக்கு 40 அல்லது 50 அடக்க ஆராதனைகளை அவர் நடத்தினார். பின்னர் சாவுகள் இன்னும் அதிகரிக்கவே, பொதுக்குழிகளில் பலருக்கு ஒரே நேரத்தில் அடக்க ஆராதனைகள் நடத்தலானார். இப்படி மரித்த 8000 பேர்களில், இவரது அருமை மனைவியும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. தன்னைச் சுற்றியுள்ள தேவை நிறைந்த மக்களுக்குத் தொடர்ந்து உதவியதால், தன் சொந்தக் குடும்பத்தின் அத்தியாவசியத் தேவைகளான, உணவு, உடை, முதலியவற்றைக் கூட சந்திக்க முடியாமல் பலமுறை வாடினார்.
இப்படிப்பட்ட சூழ்நிலையிலும், ஆண்டவரின் சேவையில், தன் தாலந்துகள் அனைத்தையும் உபயோகிப்பதில், ரிங்கர்ட் சிறிதும் தளர்ந்து போகவில்லை. அந்நாட்களில், அவர் 7 நாடகங்களையும், 66 பாடல்களையும் எழுதினார்.
யுத்தம் முடிவடையும் சமயம், எய்லென்பெர்க், ஆஸ்திரிய, மற்றும் சுவீடன் படைகளால் மூன்று முறை தாக்கப்பட்டது. இதில் ஒரு முறை, சுவீடன் படை, இந்நகர மக்களை 30000 டாலர் பணத்தைப் பொது அபராதமாகக் கட்ட உத்தரவிட்டது. அந்த ஏழை மக்களின் பிரதிநிதியாக, ரிங்கர்ட் அவர்களோடு சென்று, சுவீடன் படைத் தளபதியிடம் தங்கள் இயலாமையை எடுத்துரைத்தார். ஆனால் அத்தளபதி அபராதத் தொகையைக் குறைக்க மறுத்துவிட்டார். அப்போது ரிங்கர்ட், தம்முடன் வந்த ஏழைச் சபை மக்களை நோக்கி, ''என் அருமைக் குழந்தைகளே, மனிதனிடம் இரக்கத்தை எதிர்பார்த்து ஏமாந்து போகலாம். நம் தேவனிடத்தில் அடைக்கலம் பெறுவோம், வாருங்கள்.'' என்று அழைத்தார். முழங்காலில் நின்று, அந்த ஏழை மக்களுக்காக வேண்டி, ஜெபத்துடன் அவர்கள் அறிந்த ஒரு பாடலையும் அவர்களோடு சேர்ந்து பாடினார். இதைப் பார்த்துக் கொண்டிருந்த படைத் தளபதி, மனமிரங்கி, அபராதத் தொகையை 2000 டாலர் என்று குறைத்தார். இவ்வாறு பணப்பற்றாக் குறையுடனும், பெலவீன சரீரத்துடனும் தொடர்ந்து ஊழியம் செய்த ரிங்கர்ட், தமது 61-ம், வயதில் மரித்தார்.
ஜெர்மானிய மொழியில் எழுதப்பட்ட இப்பாடலை, 1858-ம் ஆண்டு, கத்தரின் விங்க்வொர்த் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். இப்பாடலின் சிறப்பான ராகத்தை ஜோகன் குரூகர் என்ற ஜெர்மானிய இசை ஆசிரியர் அமைத்தார். 1647-ம் ஆண்டு, "பிராக்ஸிக் பையடாடிஸ் மெலிக்கா" என்ற ஜெர்மானியப் பாடல் புத்தகத்தில், இப்பாடல் இடம் பெற்றது. எவ்வேளையிலும் ஆண்டவரைத் துதிப்பதை, ரிங்கர்ட் தம் வாழ்க்கையின் அனுபவ சாட்சியாக இப்பாடலில் எழுதியிருப்பது, நம் அனைவருக்கும் சிறந்த சவாலாக அமைந்திருக்கிறது.
ஆங்கிலத்தில் பிரியாவிடைக்கு, ''Good bye" அதாவது, ''நல்லது, போய் வாருங்கள்'' என்று பொதுவாக உபயோகிக்கும் வழக்கம் உண்டு.
''இந்த “குட்பை'' என்கிற வார்த்தை எப்படி வந்தது? அதின் முழு அர்த்தம் என்ன? என்று அறிந்து கொள்ள விரும்பினார் போதகர் டாக்டர் எரேமியா ஈம்ஸ் ரான்கின். எனவே, ஆங்கில அகராதியைப் புரட்டிப் பார்த்தார். அதில், ''குட்பை'' என்பது தேவன் உங்களோடிருப்பாராக'' (God be with you), என்ற வார்த்தைகளின் சுருக்கமே என்றும், ஒரு கிறிஸ்தவ வாழ்த்துதலாகக் கூறப்படுகிறது என்றும் விளக்கம் கொடுக்கப்பட்டிருந்தது. இதையறிந்த டாக்டர் ரான்கின், இப்பாடலை ஒரு கிறிஸ்தவ வாழ்த்துப்பாடலாக எழுதினார்.
போதகர் ரான்கின் அமெரிக்காவின் நியூ ஹாம்ஷையரிலுள்ள தார்ட்டனில் 1828-ம் ஆண்டு பிறந்தார். வெர்மோன்டின் மிடில்பரி கல்லூரியில் படித்து முடித்துவிட்டு, பின்னர் மசாச்சூசெட்டின் அன்டோவரில் இறையியல் கற்றார். பல திருச்சபைகளின் போதகராகப் பணிபுரிந்த பின், வாஷிங்டன் க்.இ.-ல் உள்ள, நீக்ரோக்களுக்கான கல்வி நிலையமாகிய, ஹோவர்டு பல்கலைக் கழகத்தின் தலைவரானார். இவர் அருமையாகப் பிரசங்கம் செய்யும் தாலந்து படைத்தவர். எனவே, அவரது திருச்சபை துரிதமாய் வளர்ந்தது. மாலை நேரங்களில் நற்செய்திக் கூட்டங்களும் நடத்துவார். இக்கூட்டங்களில் பாடுவதற்கென்றே, இப்பாடலை அவர் 1882-ம் ஆண்டு எழுதினார்.
இப்பாடல் இதற்கு அமைக்கப்பட்ட ராகத்தின் மூலம், அனைவரும் மிகவும் விரும்பிப் பாடும் பாடலாக மாறியது. டாக்டர் ரான்கின் இப்பாடலின் முதல் சரணத்தை எழுதி முடித்தவுடன், இரண்டு இசை வல்லுனர்களுக்கு ராகம் அமைக்குமாறு கேட்டு அனுப்பினார். இதில் ஒருவர் புகழ்பெற்ற இசை மேதை மற்றவர், பேரும் புகழும் பெறாத சாதாரண நபர். இருவரும் ராகம் அமைத்து அனுப்பினார்கள். அவற்றில் சாதாரண நபரின் ராகத்தை விரும்பிய ரான்கின், அதையே தெரிந்தெடுத்து, தன் நற்செய்திக் கூட்டங்களில் உபயோகித்தார். இந்த ராகத்தை எழுதிய அந்த சாதாரண நபர், டாமர் என்ற ஒரு பள்ளி ஆசிரியர்.
இப்பாடல் ''மூடியும் சாங்கியும்'' என்ற பாடல் தொகுப்பில் இடம் பெற்றுப் பிரபலமானது. கவிதை நயம் நிறைந்திராவிட்டாலும், இப்பாடல் உள்ளத்தைத் தொடும் பாடலாக விளங்குகிறது.
இப்பாடலின் பல்லவியை டாக்டர் ரான்கின் எழுதவில்லை. பாடல் புத்தகத்தைத் தொகுத்தவர் பின்னர் சேர்த்துவிட்டார். அப்பல்லவி, பிரியாவிடைப் பாடலாக இருந்த இப்பாடலை, பரலோக வாழ்வை எதிர்நோக்கும் பாடலாக, ''பரலோகில் இயேசுவின் பாதத்தண்டை சேரும் வரை, ஆண்டவர் உங்களோடிருப்பாராக.'' என்று வாழ்த்தும் பாடலாக மாற்றிவிட்டது.
''மோசேயின் ஒளி எங்கே மறைந்தது?''
''நேபோ மலையில் தான். ஏனெனில், அங்கேதானே மோசேயின் வாழ்வின் ஒளி மறைந்தது !''
கடினமான கேள்விக்கு, தயக்கமின்றி உடனே பதிலளித்தான், ஐந்தே வயது நிரம்பிய சிறுவன் ஹீபர்!
''உலகின் மிகச் சிறந்த பாடல்,'' என இங்கிலாந்து நாட்டின் பெரும் புலவர் டென்னிசன் பிரபு ஆல்பிரட்டால் வர்ணிக்கப்பட்டது இப்பாடலாகும். புகழ்பெற்ற இப்பாடலை எழுதிய பேராயர் ரெஜினால்டு ஹீபர் பாடலாசிரியர்களுள் சிறப்பு மிக்கவர். அவர் அன்று எழுதிய பாடல்கள் அனைத்தும், இன்றும் பலரால் பாடப்படுகின்றன. ஹீபரின் வாழ்க்கையோ, மெய்சிலிர்க்க வைக்கும் சவால் நிறைந்த சாட்சியாகும்.
சமுதாயத்தில் உயர் நிலையிலிருந்த, வசதி படைத்த குடும்பத்தில், ரெஜினால்டு ஹீபர் 21.04.1783 அன்று பிறந்தார். தன் சிறுவயது முதல் தெய்வ பக்தி நிறைந்தவராக வளர்ந்தார். முழு வேதாகமத்தையும் தனது 5-வது வயதிற்குள் சிரத்தையுடன் வாசித்து முடித்தார். சிறுவனாயிருந்தபோதே, வேத வசனங்களை மேற்கோள் காட்டிப் பேசுமளவிற்கு, புத்தி கூர்மையுள்ளவராய் இருந்தார்.
ஹீபர் சிறுவயதிலேயே மிகுந்த தைரியமுடையவராக விளங்கினார். அவருக்கிருந்த கக்குவான் இருமல் நோயைக் குணப்படுத்த, மருத்துவர் அவரின் ரத்தத்தை எடுக்க வேண்டுமென்றார். ஹீபரின் தாதி பயந்து, மறுப்புத் தெரிவித்தார். ஆனால் சிறுவன் ஹீபரோ, '' என் அருமைத் தாதியை வெளியே அனுப்பிவிடுங்கள். நான் அசையாது இருப்பேன். என்னை யாரும் பிடிக்கத் தேவையில்லை '' என்று கூறித் தன் கையை டாக்டரிடம் நீட்டினார்.
இளகிய மனதுள்ள ஹீபர், பள்ளியில் படிக்கும்போது, தான் சந்திக்கும் வசதியற்ற எவருக்கும், தன்னிடமிருந்த பணமனைத்தையும், சிறிதும் தயக்கமின்றிக் கொடுத்து விடுவார்; சுயநலமற்ற மென்மையான உள்ளம் கொண்டவர்; தீய பழக்கங்கள் கல்லூரி மாணவர்களிடம் பரவி நின்ற அந்நாட்களில், பரிசுத்தத்தைப் பறைசாற்றும் வாலிபனாக வாழ்ந்து, சக மாணவர்களையும் தூய்மை நிறைந்த வாழ்க்கையை மேற்கொள்ள உற்சாகப்படுத்தினார்.
ஹீபர் படிப்பில் முதன்மையான மாணவனெனப் பெயர் பெற்றார். தனது 17-வது வயதில் ஆக்ஸ்போர்டில் கல்லூரிப் படிப்பை ஆரம்பித்த அவர், கவிதைப் போட்டியில் இரு பரிசுகளையும், லத்தீன் மொழிக் கட்டுரைப் போட்டியில் பல்கலைக் கழகத்தின் சிறப்புப் பரிசையும் பெற்றார்.
1807-ம் ஆண்டு, 24 வயதே நிரம்பிய ஹீபர், தன் தந்தையின் ஹாட்னட் ஆலயப் போதகரானார். தொடர்ந்து 16 ஆண்டுகள் அக்கிராமத்தின் தலைவராகவும், போதகராகவும் பணியாற்றினார். அத்திருச்சபையின் பாடல் ஊழியத்தை முன்னேற்றுவதற்காக பல பாடல்கள் எழுதினார். அவரது புலமைமிக்க நண்பர்களான வால்டர் ஸ்காட், சவுதே, மில்மன் ஆகியோரையும், பாடல் எழுதித்தருமாறு கேட்டுக் கொண்டார். இவர்களில் மில்மன் அவருக்கு உற்சாகமாய் உதவினார்.
ஹீபர் தனது ஹாட்னட் சிற்றாலய மக்களை அதிகமாய் நேசித்தார். பிரச்சனையுள்ளவர்களைச் சந்தித்து, நல் ஆலோசனைகள் வழங்கினார் ; வியாதியுற்றோரின் இல்லங்களுக்குச் சென்று, ஜெபித்து உற்சாகமூட்டினார்; சண்டை சச்சரவுகளை சுமூகமாய் தீர்த்து வைத்து, அமைதி காத்தார்; தேவையுள்ள மக்களுக்கு பொருளுதவியும் செய்தார்; மொத்தத்தில் ,தன் தாலந்துகள் அனைத்தையும், இத்திருப்பணியில் முற்றுமாய்ச் செலவழித்தார்.
ஹீபரின் மாமனார் டாக்டர் ஷிப்லி, தூய ஆசாப் ஆலயப் போதகராவார். அவர் 1819-ம் ஆண்டு பரிசுத்த ஆவியின் பண்டிகைக்கு முன்தினம், அப்பண்டிகையின் ஞாயிறு காலை ஆராதனையில் பாடுவதற்கென, ஒரு புதுப்பாடலை இயற்றிக் கொடுக்குமாறு, ஹீபரைக் கேட்டுக் கொண்டார். இப்பொறுப்பை மேற்கொண்ட ஹீபர் , சில மணி நேரத்தில் இப்பாடலை எழுதி முடித்தார். மறுநாள் பண்டிகை ஆராதனையில், இப்பாடல் பாடப்பட்டது. பின்னர் இப்பாடல், உலகெங்குமுள்ள திருச்சபைகளில், பரிசுத்த ஆவியின் பண்டிகையிலும், திரித்துவத் திருநாள் பண்டிகையிலும் பாடப்படும் சிறப்புப் பாடலாக பிரபலமானது.
இப்பாடல் நிசேயா விசுவாசப் பிரமாணத்தை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. நாம் வணங்கும் திரித்துவ தெய்வமாகிய, பிதா, குமாரன், தூய ஆவியானவரைப் போற்றி ஆராதிக்க, நம்மை வழிநடத்துகிறது. திரித்துவ தெய்வத்தின் தன்மைகளை ஒவ்வொன்றாக அழகாக வர்ணித்து, அவரைப் போற்றி வணங்க, நம்மை இப்பாடல் ஏவுகிறது. அவர் தூயாதி தூயவர் ; கர்த்தாதி கர்த்தர்; மாட்சிமை நிறைந்தவர்; சர்வ வல்லவர் ; கிருபை நிறைந்தவர்; பராக்கிரமமுள்ளவர்; இவ்வாறு, அன்பிலும், பரிசுத்தத்திலும், வல்லமையிலும் முழுமையான நிறைவுடையவராக, ஒன்றாய் அரசாட்சி செய்கிற, திரியேக தெய்வத்தை, நமது உள்ளத்தின் ஆழத்திலிருந்து, நன்றியுடன் போற்றி வாழ்த்திப் பாட, இப்பாடல் நம்மை உற்சாகப்படுத்துகிறது.
ஹாட்னட் திருச்சபையில் சிறப்பாக ஊழியம் செய்த ஹீபருக்கு, கல்கத்தாவின் பேராயராகப் பொறுப்பேற்க இருமுறை அழைப்பு வந்தது. முதலில் ஏற்க மறுத்த ஹீபர், மிஷனரி வாஞ்சை நிறைந்தவராய் இருந்தபடியால், பின்னர் அதை தெய்வ சித்தமென உணர்ந்து, ஏற்றுக் கொண்டார். 1823-ம் ஆண்டு, மிஷனரிப் பேராயராக, தன் குடும்பத்துடன் இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டார்.
பரந்துகிடந்த அவரது திருமண்டலத்தின் எல்லை, இந்தியா முழுவதுமன்றி, இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா தேசங்களும் சேர்ந்ததாகும். எனவே, தமது திருமண்டலத்தின் பல பகுதிகளுக்கும் சென்று, திருச்சபைகளை ஊக்குவிக்கும் பணியை மேற்கொண்டார். மூன்று ஆண்டுகள், தொடர்ந்து, பல்லாயிரம் மைல்கள், கடினமான பாதைகளில் பயணம் செய்து, வேறுபட்ட காலநிலைகளில் ஊழியம் செய்தார். எனவே, அவரது சரீôம் களைப்புற்று, பெலவீனமானது. ஆயினும், விடா முயற்சியுடனும், முழு அர்ப்பணத்துடனும் இப்பணியைத் தொடர்ந்தார்.
1826-ம் ஆண்டு, ஹீபர் தன் மனைவியையும், இரு பெண்குழந்தைகளையும் பம்பாயில் விட்டுவிட்டு, தென்னிந்தியா, மற்றும் இலங்கைப் பகுதிகளிலுள்ள திருச்சபைகளைச் சந்திக்கப் புறப்பட்டார். மிகுந்த உஷ்ணமான வெப்ப நிலையில், பல நாட்கள் தொடர்ந்து பயணம் செய்து, 31.03.1826 அன்று நள்ளிரவில், திருச்சி வந்தடைந்தார். மறுநாள் காலை 8 மணிக்கு முன்னரே, அங்குள்ள திருச்சபைத் தலைவர்களுடன் கலந்துரையாடி, பல இடங்களைச் சுற்றிப் பார்த்து, அநேக கடிதங்களை எழுதினார். இந்திய கிறிஸ்தவர்களின் கல்வி முன்னேற்றத் திட்டங்களையும் ஆலோசித்தார்.
02.04.1826 அன்று ஞாயிறு காலை, தூய யோவான் ஆலயத்தில், அவரது செய்தியைக் கேட்கவும், 42 இந்திய கிறிஸ்தவர்களுக்காக நடத்தப்பட்ட திடப்படுத்தல் ஆராதனையில் கலந்து கொள்ளவும், திரளான மக்கள் கூடிவந்தனர். ஆராதனையை நடத்தி முடித்த ஹீபர், சுகவீனமாயிருந்த உதவிகுருவின் வீட்டிற்குச் சென்று ஜெபித்துவிட்டு, பல கடிதங்களை எழுதினார். பின்னர் மாலை ஆராதனையையும் தாமே நடத்தினார்.
03.04.1826 அன்று திங்கள் காலை ஆகாரத்திற்கு முன்பே, 4 மணிநேரம், தொடர்ந்து பல வேலைகளில் ஈடுபட்டார். காலை 10 மணிக்கு, சுவார்ட்ஸ் சிற்றாலயத்தில் (தற்போதுள்ள கோட்டை கிறிஸ்து நாதர் ஆலயம்) மக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால், அக்கூட்டத்தைத் திறந்த வெளியில் நடத்தினார். அங்குள்ள மிஷன் வீட்டுப் படிகளில் நின்று, ஜாதி வேற்றுமையின் தீமைகளை, வேதத்தின் அடிப்படையில் எடுத்துக்கூறி, சாட்சியுள்ள கிறிஸ்தவ வாழ்க்கை வாழும்படி, அங்கு கூடியிருந்த இந்திய கிறிஸ்தவ சபையோரை, வெகுநேரம் உற்சாகப்படுத்தினார். அப்போது அவர் வெயிலில் தொடர்ந்து நின்றதால், சூரிய வெப்பத்தின் பாதிப்பு அவருக்கு நேரிட்டது.
ஹீபர் தன் ஊழியத்தை நிறைவேற்றி முடித்துவிட்டு, காலை உணவருந்த, மத்தியான வேளையில் நீதிபதி பேர்டின் இல்லம் சென்றார். உணவருந்துமுன் களைப்பாற, அங்கிருந்த நீச்சல் குளத்தில் குளித்துவரச் சென்றவர், மீண்டும் திரும்பி வரவில்லை. அரைமணி நேரத்திற்குப் பின், நீச்சல் குளத்தில் பிணமாய் அவர் மிதப்பதைக் கண்டனர்.
43 வயது கூட நிறைவு பெறுமுன், இவ்வுலக வாழ்வைக் கடந்து சென்ற ஹீபரை, தூய யோவான் ஆலயத்தில் அடக்கம் செய்தனர். இன்றும் அவரது ஊழியத்தின் நினைவுச் சின்னமாக, அவர் பெயரில் ஒரு முதல்தரக் கல்லூரியும், இரு உயர்நிலைப் பள்ளிகளும் திருச்சியில் உள்ளன.
''விடியற்காலத்து வெள்ளியே தோன்றி'' என்ற கிறிஸ்மஸ் பாடலையும் ஹீபர் எழுதினார்.
திரித்துவ தேவனை ஆராதிக்கும் இப்பாடலுக்கு,
''நிசேயா'' என்ற ராகத்தை, டாக்டர் ஜான் பக்கஸ்
டைக்ஸ் என்ற பிரபல இசை வல்லுனர், 1861-ம் ஆண்டு அமைத்தார். இவர், ''இயேசுவே உம்மை தியானித்தால்'' போன்ற பாடல்களுக்கும் இசை அமைத்தவராவார்.
இங்கிலாந்து தேசத்தில் நற்செய்திப் பணியானது, ஜார்ஜ் வொயிட்பீல்டு, மற்றும் வெஸ்லி சகோதரர்களின் ஊழியங்களால், பதினெட்டாம் நூற்றாண்டில் விறுவிறுப்படைந்தது. ஆயினும், ஆரம்ப நாட்களில் இப்பணி, சமுதாயத்தின் கீழ்நிலை மக்கள் மத்தியில் தான் சிறப்பாக நடைபெற்றது. பின்னர், 19-ம் நூற்றாண்டில், உயர்நிலை மக்களும் நற்செய்திப் பணியில் ஆர்வம் காட்ட ஆரம்பித்தனர். தென்கிழக்கு லண்டனின் கிளாபம் என்ற பகுதியில் உள்ள வசதிபடைத்த மக்கள், வேத போதனையிலும், ஜெப ஐக்கியத்திலும் உறுதியுள்ளவர்களாய், பல இடங்களிலும் நற்செய்தி பரவ செயல்பட்டனர். இம் மக்கள் இங்கிலாந்து திருச்சபையின் அங்கத்தினர்களாகத் தொடர்ந்து நிலைத்திருந்து, நற்செய்திப் பணியை உற்சாகமாகச் செய்து வந்தது குறிப்பிடத்தக்கது.
இப்படிப்பட்ட ஊழிய வாஞ்சை நிறைந்த ஒரு செல்வந்தரின் மகளாக, கேத்தரின் ஹான்கே 1834-ம் ஆண்டு பிறந்தார். தந்தையின் சுவிசேஷ பாரம், மகளின் உள்ளத்தையும் நிரப்பிற்று. தன் வாலிப வயதிலேயே, லண்டன் மாநகரின் பலதரப்பட்ட பிள்ளைகளுக்கு, ஞாயிறு பள்ளிகள் அமைத்து, சிறுவர் ஊழியம் செய்தாள். இப்பணியின் மூலம், அநேக வாலிபர்கள் ஊழியர்களாக எழும்பினார்கள். கேத்தரின், கவிதைகள் மற்றும் கட்டுரைகள் எழுதுவதில் திறமை மிக்கவள். இத்தாலந்துகள் மூலம் அவள் சம்பாதித்த பணம் அனைத்தையும், தூர தேச மிஷனரிப் பணிகளுக்கென்று, காணிக்கையாக அனுப்பி வைத்தாள்.
இவ்வாறு ஊழியம் செய்த கேத்தரின், தனது முப்பதாவது வயதிலேயே, கடுமையான வியாதிக்குள்ளானாள். வியாதிப் படுக்கையின் நாட்களையும் வீணாக்காமல், இயேசு கிறிஸ்துவின் இவ்வுலக வாழ்க்கையை, 50 சரணங்களடங்கிய ஒரு பெரிய கவிதையாக எழுதினாள். இரு பகுதிகளாக எழுதப்பட்ட இக்கவிதையின் முதற்பகுதியின் தலைப்பு, "தேவையான நற்செய்தி". இப்பகுதியை மையமாகக் கொண்டு, "தொன்மை மிக்க அந்நற்செய்தியை எனக்குக் கூறுங்கள்" என்ற பிரபல பாடலை அவள் எழுதினாள். பின்பு, அதே ஆண்டிலேயே, இரண்டாம் பகுதியின் அடிப்படையில், ''அந்நற்செய்தியை நான் கூற விரும்புகிறேன்.'' என்ற இந்த அருமையான பாடலைத் தன் முதல் பாட்டிற்குப் பதிலாக அமையுமாறு எழுதினாள்.
இசையிலும் திறமையுள்ள கேத்தரின், இப்பாடலுக்கு ராகத்தையும் அமைத்தாள். பின்னர், 1867- ல் கனடாவின் மான்ட்ரியலில் நடைபெற்ற, Y.M.C.A பன்னாட்டுக் கூட்டத்தில், மேஜர் ஜெனரல் ரஸ்ஸல் இந்தப் பாடலைத் தன் செய்தியில் அறிமுகம் செய்தார். அந்த மாநாட்டில் கலந்துக் கொண்ட அமெரிக்க இசை வல்லுனரான வில்லியம் D. டோயன் இப்பாடலை விரும்பியதால், அருமையான மற்றொரு ராகத்தை இதற்கு உருவாக்கினார்.
பின்னர், பிலடெல்பியாவின் இசை மேதையான வில்லியம் G. ஃபிஷர், இப்பாடலுக்கு புதியதொரு ராகம் அமைத்து, இப்பாடலின் பல்லவியையும் இணைத்தார். 1875-ல் பிளிஸ் -சாங்கி வெளியிட்ட '' நற்செய்திப் பாமாலைகளும், பக்திப் பாடல்களும் '' என்ற புத்தகத்தில் இப்பாடல் இடம் பெற்று பிரபலமானது.
அந்த அறையில் மயான அமைதி நிலவியது. நடுவில் மரணத்தோடு போராடியவாறு படுத்திருந்தார் ஒரு வாலிபப் பிரசங்கியார். சோகமே உருவாக சுற்றி அமர்ந்திருந்த உடன் ஊழியர்களில் ஒரு போதகர் கேட்டார். ''டாக்டர் டிங், உங்கள் உடன் ஊழியர்களுக்கும், மற்ற சபை மக்களுக்கும் நீங்கள் அளிக்க விரும்பும் கடைசிச் செய்தி என்ன?''.
மரணத்தைத் தழுவும் நிலையிலும், ஆண்டவருக்காக வைராக்கியம் பாராட்டும் உறுதி, தன் வார்த்தைகளில் பளிச்சிடும் வண்ணம், டாக்டர் டிங் கூறினார், ''அனைவரும் நம் நல்மீட்பரின் பட்சம் உறுதியாய் தரித்து நிற்க வேண்டும் என்று கூறுங்கள்.'' இவ்வாறு, சாத்தானின் சேனைகளுக்கெதிராய் போர்முரசெழுப்பிய வண்ணம், தனது உலக வாழ்க்கையை, வெற்றித் தொனியுடன் முடித்தார் டாக்டர் டிங்.
அவரது கடைசிச் சவாலின் எதிரொலிதான் இப்பாடல்!.
அமெரிக்காவில் உள்நாட்டுப்போர் நடந்து கொண்டிருந்த காலமது. ஐரோப்பாவிலிருந்து வந்து குடியேறினவர்கள், அமெரிக்காவில் பெரிய பண்ணைகளை நிறுவி, புகையிலை பயிரிட்டு வந்தனர். இப்பண்ணைகளில் வேலை செய்ய ஆட்கள் தேவை. எனவே, அடிமை வியாபாரிகள் ஆப்பிரிக்க நாடுகளில் நீக்ரோக்களை, மிருகங்களை வேட்டையாடுவது போலப் பிடித்து, இப்பண்ணை முதலாளிகளுக்கு விற்று, மிகுந்த பணம் சம்பாதித்து வந்தனர்.
அந்நாட்களில், பிலடெல்பியா நகரில் உள்ள, மகிமை நிறை ஆலயத்தின் இளம் போதகராக, 29 வயதே நிரம்பிய டாக்டர் . டட்லி A. டிங் பணியாற்றி வந்தார். அவரது சபையில், பல பண்ணை முதலாளிகளும், அடிமை வியாபாரிகளும் முக்கிய அங்கத்தினர்களாக இருந்தனர். சுவிசேஷ வாஞ்சையும், உயர்ந்த பண்புகளும் நிறைந்த போதகர் டிங், இந்த அடிமைகளின் அவல வாழ்வைக் கண்டு, பரிதபித்தார். எனவே, ''அடிமை முறையானது கிறிஸ்தவ தத்துவங்களுக்கு ஒவ்வாதது; சக மனிதனை அடிமையாக்குவது ஒரு பாவச் செயல்!'' என பிரசங்க பீடத்தில் பகிரங்கமாகப் போதிக்க ஆரம்பித்தார்.
போதகர் டிங்கின் செய்தியால் அதிர்ச்சியுற்ற பண்ணை முதலாளிகளும், அடிமை வியாபாரிகளும், அவரிடம் சென்று, இம்முயற்சியைக் கைவிடுமாறு பணிவுடன் கேட்டனர்; முறையிட்டனர்; பின்னர் பயமுறுத்தியும் பார்த்தனர். போதகரோ, அவர்கள் வற்புறுத்தலுக்கு இணங்க மறுத்துவிட்டார். கொதித்தெழுந்த அந்த செல்வாக்கு மிகுந்த, பண வசதி படைத்த கூட்டத்தினர், சூழ்ச்சி செய்து, ஆலயப் பொறுப்பிலிருந்து டாக்டர் டிங்கை வெளியேற்றினார்கள்.
நேர்மையான போதகரை வெளியேற்றியதற்குக் கண்டனம் தெரிவித்து, டாக்டர் டிங்கின் ஆதரவாளர்கள் பலர், சபையிலிருந்து விலகினார்கள். அவர்கள் அனைவரும் சேர்ந்து, YMCA உதவியுடன், 5000 பேர் அமரக்கூடிய ஜேய்ன் அரங்கத்தில், 1857-58-ம் ஆண்டு, மதியக் கூட்டங்களை நடத்தினார்கள். இவ்வாறு ஆரம்பமான உடன்படிக்கைத் திருச்சபையில், டாக்டர் டப்பீல்ட் போன்ற பல போதகர்களும் சேர்ந்தனர். புத்தெழுச்சி பெற்ற இத்திருச்சபை, நாளுக்குநாள் வளர்ந்து பெருகியது.
30.3.1858 அன்று, திரளாகக் கூடியிருந்த வாலிபர்களுக்கு, யாத்திராகமம் 10:11 வசனத்தை மையமாகக் கொண்டு செய்தியளித்த டாக்டர். டிங், கர்த்தருக்கு ஊழியம் செய்ய, சவால் விடுத்தார். அந்த ஆராதனையின் முடிவில், 1000 வாலிபர்கள் தேவனுக்குத் தங்கள் வாழ்வை அர்ப்பணித்து உறுதி மொழிந்தனர்.
அதைத் தொடர்ந்த புதன்கிழமை, டிங் தன் தியான அறையிலிருந்து, சிறிது நேரம் ஓய்வெடுக்க வெளியே வந்தார். அருகிலிருந்த களத்தில், சோளத்தைப் பிரித்தெடுக்கும் எந்திரத்தில் வேலை செய்த மட்டக்குதிரையிடம் சென்றார். அதின் கழுத்தில் அன்போடு தட்டிக் கொடுத்தார். அப்போது அவர் அறியாமல், அவர் அணிந்திருந்த பட்டு அங்கியின் நீளக்கைப்பகுதி, எந்திரத்தின் சக்கரத்தில் சிக்கி, இழுத்துச் செல்லப்பட்டது. அதினால் அவர் கை முழுவதும் துண்டிக்கப்பட்டது. இந்தக் கோர விபத்தால், டாக்டர் டிங் 19.4.1858 அன்று மரித்துப் போனார்.
டாக்டர் டிங்கின் மரணப்படுக்கையருகே இருந்து, அவரின் பிரியாவிடைச் சவாலை போதகர் டாக்டர் டப்பீல்டு கேட்டுக் கொண்டிருந்தார். டாக்டர் டிங்கின் அடக்க ஆராதனையின் போதும் இச்சூளுரை அவர் உள்ளத்தில் ஒலித்துக் கொண்டேயிருந்தது.
அதன் விளைவு? டாக்டர் டிங்கின் பிரிவு வார்த்தைகளே ''நல் மீட்பர் பட்சம் நில்லும்'' என்ற அழகிய பாடலாக, டாக்டர் டப்பீல்டின் பேனாவிலிருந்து உருவெடுத்தது.
அடுத்த ஞாயிறன்று, டாக்டர் டிங்கின் நினைவு தோத்திர ஆராதனை நடைபெற்றது. எபேசியர் 6:16- ஐ மையமாகக் கொண்டு, ''தரித்து நில்லுங்கள்'' என்ற தலைப்பில், வல்லமை நிறைந்த தேவ செய்தியளித்த டாக்டர் டப்பீல்டு, அச்செய்தியின் நிறைவாக, தான் இயற்றிய இப்பாடலை வாசித்தார்.
பின்னர், இப்பாடலின் பிரதியை, ஆலய ஞாயிறு பள்ளிக் கண்காணிப்பாளரிடம் டாக்டர் டப்பீல்டு கொடுத்தார். அவர் அதை அச்சிட்டு, ஞாயிறுபள்ளியில் பாட வழி வகுத்தார். துரிதமாக இப்பாடல் பிரபல்யமானது. அமெரிக்க உள் நாட்டுப் போர் வீரர்களின் விருப்பப் பாடலாகவும், பின்னர் அமெரிக்கா முழுவதும் பாடப்படும் சிறப்புப் பாடலாகவும் பெயர்பெற்றது.
இப்பாடலுக்கு, 1867-ல் ஜார்ஜ் J. வெப் ராகம் அமைத்தார். ரோமப் போர் வீரனைக் கருத்தில் கொண்டு, பவுல் எழுதிய ஆவிக்குரிய போராட்டத்தின் அடிப்படையில் எழுதப்பட்ட இப்பாடல், ஒரு போரெழுச்சிப் பாடலாக விளங்குகிறது.
எங்கள் இணைத்தளத்தில் உள்ள கட்டுரைகள் மற்றும் புத்தகங்களைப் வாசகார்களின் வசதிக்காக, BSI இந்திய வேதாகம சங்கத்தாரால் வெளியிடப்பட்ட O.V. தமிழ் வேதாகமத்தின் வசனங்களை பயன்படுத்தியுள்ளோம்.
© 2025. தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்.