போதகர் டாக்டர் ஐசக் வாட்ஸ் ஒரு புகழ் பெற்ற கவிஞர். அவரது வாலிப நாட்களில், அவரை நேரில் பார்த்திராத ஓர் அழகான நாகரீகமான பெண், அவர் எழுதிய கவிதையின் அழகில் மயங்கினாள். அவரைக் காண ஆவலாய் ஓடி வந்தாள். அந்த நேரிடைச் சந்திப்பில், வாட்ஸ் அவளது அழகில் மயங்கி நிற்க, அவளோ அவரைப் பார்க்கச் சகிக்க முடியாமல், தன் முகத்தைத் திருப்பிக் கொண்டாள். வாட்ஸ் அவளிடம் தன்னைத் திருமணம் செய்ய வேண்டினார். அவளோ, "வாட்ஸ், இந்த விலையேறப்பெற்ற ஆபரணத்தை நான் மிகவும் நேசிக்கிறேன். ஆனால், அது அமைந்திருக்கும் பெட்டகத்தை என்னால் விரும்ப முடியவில்லையே," என்று கூறினாள்.
ஆம், வளர்ச்சி முற்றுப்பெறாத, அவலட்சணமான தோற்றமுடையவர்தான் ஐசக் வாட்ஸ். 5 அடி உயரத்தில், குள்ளமானவராய் இருந்தார். அவருடைய பெரிய தலையும், நீண்டு வளைந்த மூக்கும், அவருக்கு விகாரத் தோற்றமளித்தன. தன்னை நிராகரித்த அப்பெண்ணின் பதிலால் துவண்டு விடாமல், பெருந்தன்மையுடன் ஏற்றுக்கொண்டார். பின்னர் அவர்கள் இருவரும் தங்கள் வாழ்நாள் முழுவதும், 30 ஆண்டுகளுக்கு மேலாக, சிறந்த நண்பர்களாக இருந்தனர். இந்த நிகழ்ச்சிக்குப்பின், ஐசக் வாட்ஸ் தன் திருமணத்தைப் பற்றிச் சிந்திக்கவேயில்லை.
பெலவீனமான சரீரமுடைய வாட்ஸ் தன் 9வது வயதில் அம்மை நோயால் பாதிக்கப்பட்டார். தனது
14 - வது வயதில் இயேசு கிறிஸ்துவைத் தன் சொந்த ரட்சகராக ஏற்றுக்கொண்டார். தனக்காக, சிலுவையில் தம்மையே தியாக பலியாக அளித்த இயேசுவின் அன்பை வியந்து, தன் நன்றியை வெளிப்படுத்தும் வகையில் இப்பாடலை எழுதினார்.
அந்நாட்களில், சுய அனுபவங்களையோ, உள்ளத்தின் உணர்ச்சிகளையோ, அடிப்படையாகக் கொண்டு பாடல் எழுதுவதற்கு, மிகுந்த எதிர்ப்புகள் இருந்தன. எனினும், தன் உள்ளத்தில் சிலுவைக் காட்சியை நிறுத்தியவராக, வாட்ஸ் இப்பாடலை எழுதியிருக்கிறார். பிரபல வேதாகம வல்லுனராகிய மத்தேயு அர்னால்ட், "ஆங்கில மொழியில் எழுதப்பட்ட திருச்சபைப் பாடல்களில், இப்பாடல் மிகச் சிறந்தது," எனக் கூறுகிறார்.
இப்பாடலை வாட்ஸ் 1707-ம் ஆண்டு, தான் நடத்திய நற்கருணை ஆராதனைக்கென்று எழுதினார். அதே ஆண்டிலேயே வாட்ஸ் வெளியிட்ட, "பாடல்களும் ஆவிக்குரிய கீதங்களும்" என்ற பாடல் புத்தகத்தில் இப்பாடல் இடம் பெற்றது. இப்பாடலுக்கு வாட்ஸ் கொடுத்த தலைப்பு, "கிறிஸ்துவின் சிலுவையால், உலகிற்குச் சிலுவையில் அறையப்படுதல்" என்பதாகும்.
இப்பாடலுக்கு, புகழ்பெற்ற அமெரிக்க இசை வல்லுனராகிய லோவல் மேசன், "ஹாம்பர்க்" என்ற ராகத்தை அமைத்தார். எபிரெயர்கள் தேவாலயத்திலும், ஜெப ஆலயங்களிலும் பாடும் பாடல் ராகங்களின் அடிப்படையில் இது அமைக்கப்பட்டுள்ளது. லோவல் மேசன், "உம்மண்டை கர்த்தரே" போன்ற பிரபல பாடல்களுக்கு ராகம் அமைத்தவராவார்.
இப்பாடல் உருவான சம்பவத்தை அதின் ஆசிரியர் ஜோசப் H. கில்மோர் இவ்வாறு கூறுகிறார் :-
"நான் பிலடெல்பியாவிலுள்ள முதல் பாப்டிஸ்ட் சபையின் புதன் மாலைக் கூட்டத்தில், சங்கீதம் 23-ப் பற்றிப் பிரசங்கிக்க அழைப்புப் பெற்றேன். தேவனால் வழிநடத்தப்படுவதின் ஆசீர்வாதங்களை எண்ணி வியந்தவனாய் தேவசெய்தி அளித்தேன். ஆராதனை முடிவில் போதகர் வாட்சனின் வீட்டில் எங்களை உபசரித்தார்கள். அப்போது எங்கள் கலந்துரையாடலின்போது, மீண்டும் "தேவனின் வழிநடத்துதலின் ஆசீர்வாதங்கள்" என்ற எண்ணம் என் உள்ளத்தில் தொனிக்கவே, ஒரு பென்சிலை எடுத்து, மட மடவென்று இப்பாடலை எழுதி, என் மனைவியின் கரத்தில் கொடுத்தேன். அதன்பின் அதை மறந்துவிட்டேன். என் மனைவி, எனக்கே தெரியாமல், அதை "" வாட்ச்மன் அண்டு ரிபிளெக்டர் '' என்ற பத்திரிக்கைக்கு அனுப்ப, அவர்கள் அதை வெளியிட்டிருந்தனர்.
மூன்று வருடங்கள் கழித்து, நியூயார்க்கிலுள்ள ரோச்செஸ்டரின் இரண்டாம் பாப்டிஸ்ட் சபையில் நியமனம் பெற, செய்தி கொடுக்கச் சென்றேன். அங்குள்ளவர்கள் பாடும் பாடல்கள் என்னவென்பதை அறிய, அவர்கள் பாடல் புத்தகத்தைத் திறந்தேன். திறந்த பக்கத்தில் இப்பாடல் இருந்தது. அப்போது தான் இப்பாடல் திருச்சபையின் பாடல்களில் ஒன்றாக மாறியிருப்பதை நான் அறிந்தேன்.''
கில்மோர், மாசாசூசெட்ஸிலுள்ள போஸ்டனில் 29.4.1834-ல் பிறந்தார். அவருடைய தந்தை நியூஹாம்ஷையர் மாகாணத்தின் கவர்னராக இருந்தார். 1861-ல் கில்மோர் நியூட்டன் மறையியல் கல்லூரியில் பட்டம் பெற்று, பல பாப்டிஸ்ட் சபைகளில் போதகராகப் பணியாற்றினார். பின்னர், கவர்னரான தன் தந்தையின் செயலாளராகவும், தான் படித்த கல்லூரியிலேயே எபிரேய மொழிப் பேராசிரியராகவும் வேலை செய்தார். அதன் பின், ரோச்செஸ்டர் பல்கலைக் கழக இலக்கியப் பேராசியராகப் பணிபுரிந்து, பல பாடப்புத்தகங்களைக் கல்லூரி மாணவர்களுக்கு எழுதி வெளியிட்டார்.
இப்பாடலை அவர் தமது 28-வது வயதில் 26.3.1862-ல் எழுதினார். பல பாடல்களை அவர் எழுதியிருக்கிறார். எனினும், அவற்றில் இப்பாடலே பிரபலமானது.
1863-ம் ஆண்டு பத்திரிக்கையில் வெளியான இப்பாடலைப் பார்த்த வில்லியம் B. பிராட்பரி, இதற்கு இசையமைத்ததுடன், இதின் பல்லவியையும் எழுதி இணைத்தார்.
"போதகர் வந்திருக்கிறார்!"
மரணப்படுக்கையிலிருந்த மனிதன் தன் கண்களைத் திறந்து, போதகரை ஆவலோடு நோக்கினான். போதகர் ஹென்றி லைட் தனது திருச்சபை அங்கத்தினனாகிய அந்த மனிதனுக்கு, வேத புத்தகத்திலிருந்து, பல ஆறுதல் வார்த்தைகளை எடுத்துக் கூறி உற்சாகப்படுத்தினார். சாகுந்தறுவாயிலிருந்த அந்த மனிதன், மரண பயம் நீங்கி அமைதிபெற்றான். சிறிது நேரம் கழித்து, போதகர் புறப்பட எழுந்தார்.
"ஐயா! என்னோடு இன்னும் கொஞ்ச நேரம் தங்கியிருங்கள்."
மரணத்தோடு போராடும் அம்மனிதனின் கெஞ்சும் குரல், போதகரைத் தடுத்தது. அவ்வார்த்தைகள் அவர் உள்ளத்தைத் தொட்டு, ஆழமாய்ப் பதிந்தது.
"இயேசு ஒருவரே, நித்திய காலமாக நம்மோடு இருப்பார்."
என்று மீண்டும் ஆறுதல் கூறி, ஜெபித்து விடைபெற்றார் போதகர் ஹென்றி லைட்.
இங்கிலாந்து நாட்டின் தேசிய விளையாட்டு நிகழ்ச்சிகளில் முக்கியமானது, வெம்பிளே கோப்பை கால்பந்து இறுதிப்போட்டியாகும். அம்மைதானத்தில் ஆண்டுதோறும் நடைபெறும், இந்நிகழ்ச்சியைக் காணக் கூடிவரும், சுமார் ஒரு லட்சம் மக்கள் அனைவரும் சேர்ந்து பாடுவது இப்பாடலையே. 1916-ம் ஆண்டு, பெல்ஜியத்தில் காவெல் என்ற நர்ஸ், தன்னைச் சுடுவதற்குத் தயாராகும் போர்வீரர்களுக்கு முன், தைரியமாய் நிற்க, இப்பாடல் பெலனளித்தது. வீரன் ஷாக்கில்டன் அன்டார்க்டிக் பனிமலைகளில் மரணத்தைத் தழுவும்போது, ஆறுதல் அளித்ததும் இப்பாடல் தான். 1912-ம் ஆண்டு, அட்லாண்டிக் சமுத்திரத்தில் மூழ்கிய, உல்லாசக் கப்பல் டைட்டானிக்கின் கடைசி நிமிடங்களில் பாடப்பட்ட பாடல்களில் இதுவும் ஒன்று. போலந்தின் யுத்த கைதிகளின் முகாம்களில், ஞாயிறு மாலை நேரத்தில், இப்பாடலை விரும்பிப் பாடி, தூர தேசங்களில் இருக்கும் தங்கள் அருமைக் குடும்பங்களோடு, நெருங்கிச்சேர்ந்த உணர்வைப் பெற்ற கைதிகள் அநேகர்.
இப்படிப்பட்ட அருமையான இப்பாடல் உருவானதின் பின்னணியைப் பார்ப்போமா?
இப்பாடலை எழுதிய போதகர் ஹென்றி பிரான்சிஸ் லைட், 01.06.1793 - அன்று, ஸ்காட்லாந்தில் உள்ள எட்னாம் என்ற ஊரில் பிறந்தார். ஏழ்மையான சூழ்நிலையில் பிறந்த ஹென்றி, சிறுகுழந்தையாக இருக்கும்போதே அனாதையானார். அயர்லாந்தில் மாணவர் பள்ளியிலும், பின்னர் டப்ளின் திரித்துவக் கல்லூரியிலும், பலரது உதாரத்துவ உதவியுடன், வறுமையோடு போராடிக்கொண்டே, படித்து முடித்தார்.
தனது 21-வது வயதில், ஆங்கிலிக்கன் திருச்சபையின் முழுநேர ஊழியராகி, அயர்லாந்திலுள்ள ஒரு சிறு திருச்சபையின் போதகரானார். தினசரி காலை- மாலை ஆராதனைகளையும், ஞானஸ்நானம், திருமணம் மற்றும் அடக்க ஆராதனைகளையும், சடங்காச்சாரங்களுடன் நடத்தும் திறமையான பாதிரியாரானார். ஆனால் இவற்றைத் தன்மேல் விழுந்த கடமையாக மட்டுமே கருதிய லைட், புத்தகங்கள் வாசிப்பதிலும், விளையாடுவதிலும் நேரத்தைச் செலவிட்டுவந்தார்.
அருகிலுள்ள கிராமத்தில் இவரைப் போலவே வாழ்ந்து வந்த போதகர் ஒருவர் மரணப்படுக்கையிலிருந்தார். அவர் ஹென்றியை அவசரமாய்த் தன்னிடம் அழைத்து, தன் ஆத்தும வேதனையைப் பகிர்ந்து கொண்டார். பாவமன்னிப்பின் நிச்சயத்தைப் பெற்றிராத அப்போதகர், சாவதற்குத் தயாராக இல்லை. இரட்சிப்படைவது எப்படி, என்று இருவரும் சேர்ந்து வேதபுத்தகத்தை ஆராய்ந்தபோது, தேவ ஆவியானவர் வேத வசனங்களின் மூலம் அவர்களோடு பேசினார். இருவரும் ரட்சிப்பின் அனுபவத்தைப் பெற்றனர். மகிழ்வுடன் மரித்த அந்தப் போதகரின் நிம்மதியான முடிவு, ஹென்றியை இன்னும் ஆழமாக வேதத்தைத் தியானிக்கச் செய்தது. அது முதல் அவரது அருளுரைகள், உள்ளான அனுபவத்தின் பிரதிபலிப்பாக மாறின.
இந்நிலையில், ஹென்றி லைட் தொடர்ந்து சுகவீனமாகி, ஆஸ்துமா நோயாளியானார். பல சிற்றாலயங்களில் மாறிமாறிப் பணியாற்றினார். கடற்கரைப் பகுதியிலுள்ள கீழ் பிரிக்ஸ்ஹாமின் சூரிய வெளிச்சமும் வெப்பநிலையும் அவரது உடல்நிலைக்குச் சாதகமாக இருந்ததால், 1823-ம் ஆண்டு அவ்வூரின் ஆலயப் போதகரானார். கிராம மக்கள், மீனவர்கள், போர்வீரர்கள் அடங்கிய இத்திருச்சபையின் சேவைக்கே, தன் வாழ்வின் மீதியான 24 ஆண்டுகளை அர்ப்பணித்தார். தனது சமுதாய மேன்மை, நாகரீகம் அனைத்தையும், இப்பணிக்காக இழந்துபோன ஹென்றி லைட், தன் முதல் பாடலாக, "இயேசுவே, என் சிலுவையை நான் எடுத்துக் கொண்டேன்," என்று எழுதினார்.
பள்ளிக்கூடங்கள் மிகக்குறைவாக இருந்த அந்நாட்களிலேயே 800 பிள்ளைகளடங்கிய ஞாயிறு பள்ளியைத் துவக்கி, அதின் 70 ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளித்தார். இந்த ஆலயத்தின் சிறுவர், மீனவர், மற்றும் வேதனையிலுள்ளவர்களுக்கென்று அவர் எழுதிய பாடல்களே, பின்னர் உலகப் பிரசித்தியாயிற்று.
தன் தியாக அன்பால், தனது திருச்சபை மக்களைக் கவர்ந்த லைட்டின் ஞாயிறு ஆராதனையில் ஆலயம் நிரம்பி வழிந்தது. சுறுசுறுப்பான, முரட்டாட்ட சுபாவமுள்ள அம்மக்களின் தவறான நடத்தைகளிலிருந்து அவர்களை மாற்ற, லைட் பல முயற்சிகளை எடுத்தார். மீனவர்களின் படகுகளுக்குச் சென்று, உற்சாகப்படுத்தி, அச்சிறு துறைமுகத்திற்கு வரும் அனைத்துக் கப்பல்களிலும், வேத புத்தகத்தை வைக்க ஏற்பாடு செய்தார். அடிமைத்தனத்திற்கு எதிராகவும் போராடினார்.
ஹென்றி ஒரு புதிய ஆராதனை முறையைக் கையாண்டு, பாடகர் குழு ஒன்றையும் ஆரம்பித்துப் பயிற்சி அளித்தார். ஆராதனையில் அனைவரும் ஆண்டவரைத் துதித்து உற்சாகமாகப் பாட, "ஆத்மமே, உன் ஆண்டவரின்," என்ற துதிப்பாடலைத் தன் வியாதியின் மத்தியிலும் எழுதி, அதற்கான ராகத்தையும் அமைத்தார்.
லைட்டின் அயராத உழைப்பால், அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டது. 1844-ம் ஆண்டு, மிகவும் சுகவீனமடைந்தார். அது முதல், குளிர்கால நாட்களை பிரெஞ்சு ரிவேராவில் கழிக்கலானார். இந்த இறுதிப் பத்தாண்டுகளில், ஹென்றி லைட் பல வேதனையூட்டும் அனுபவங்களைச் சந்தித்தார். அவர் விடுமுறையில் சென்ற நாட்களில், அவரது திருச்சபையில் பல வேறுபாடுகள் தோன்றி, சில அங்கத்தினர்கள் சபையை விட்டு வெளியேறி, பிளைமவுத் பிரதரனில் சேர்ந்தனர். அவருடைய பாடல் குழுவும் உடைந்தது.
இந்நிலையில், கடைசி முறையாக, 1847-ம் ஆண்டின் வேனிற்காலத்தில், தன் திருச்சபைக்கு மீண்டும் ஊழியம் செய்ய வந்தார். அப்போது, தன் வாழ்க்கையின் இறுதி நிலைக்குத் தான் வந்துவிட்டதை உணர்ந்தார். 54 வயதே நிரம்பிய அவர், தனக்கு அருமையாயிருந்த அந்த மக்களின் ஆவிக்குரிய வாழ்க்கைக்கு, நிரந்தரமாக உதவும் வண்ணம், ஒரு பாடல் எழுத விரும்பினார்.
1847-ம் ஆண்டு செப்டம்பர் மாதம், வேனிற்காலம் முடியும் நேரம், மீண்டும் ஹென்றி தன் திருச்சபை மக்களைவிட்டுப் பிரிய வேண்டிய தருணம் நெருங்கியது. புறப்படுமுன், மீண்டும் ஒருமுறை ஆலய ஆராதனையில் செய்தி கொடுக்க விரும்பினார். மிகுந்த பெலவீனத்துடன் இருந்ததால், 04.09.1847 அன்று ஞாயிறு காலை ஆராதனையில், தன் கடைசிச் செய்தியை அளிக்க, பிரசங்க மேடைக்கு ஏறிச் செல்லவும் அவருக்குப் பெலனில்லை. அவருடைய குடும்பத்தினர் அவரது நிலையைக் கண்டு தயங்கினர். எனினும், "என்ன நேர்ந்தாலும் கவலையில்லை," என்ற உறுதியோடு, பரிசுத்த நற்கருணையைப் பற்றிச் செய்தி அளித்து, அதைச் சபையோருக்குப் பரிமாறுவதிலும் உதவி செய்தார்.
அந்தக் கடைசி ஞாயிறு மாலை, தன் வீட்டிற்கு முன்பாக இருந்த பள்ளத்தாக்கில் உள்ள தோட்டத்திற்கு நடந்து சென்றார். நல்ல மாலை நேர சூரிய வெளிச்சத்தில், ஒரு கற்பாறையின் மீது அமர்ந்து, போதகர் ஹென்றி லைட் இப்பாடலை எழுதினார். மாலை மயங்கிய பின், தன் அறைக்குச் சென்றார்.
அன்று மாலை அவருடைய திருச்சபை மக்களில் அநேகர், போதகரின் சுகத்திற்காக ஜெபித்துக் கொண்டிருந்தனர். அவரோ, இளைப்பாறாமல், தன் அறையில், தான் அன்று மாலை எழுதின பாடலுக்கு, இறுதி மாற்றங்களைச் செய்தார். உடனே, அதை அச்சுப் பதிவு செய்து, பிரதிகளையும் தயார் செய்தார். மறுநாள், தனது திருச்சபையின் அங்கத்தினர்களுக்குத் தன் ஞாபகார்த்தப் பரிசாக வினியோகித்தார்.
பின்னர், தனது திருச்சபை மக்களிடம் பிரியாவிடை பெற்று, இளைப்பாற, இத்தாலிக்கு அன்றே பயணமானார். பிரான்சின் நைஸ் பட்டணம் வரை அவர் பிரயாணம் செய்தார். அங்கே, தன் இரு கரங்களையும் வானத்திற்கு நேராக உயர்த்தி, "சமாதானம்! சந்தோஷம்!" என்ற கடைசி வார்த்தைகளுடன் 20.11.1847 அன்று ஹென்றி லைட் கர்த்தரின் இராஜ்ஜியத்தில் சேர்ந்தார். அங்கே அவரை அடக்கம் செய்தனர்.
டாக்டர் வில்லியம் ஹென்றி மங்க் இப்பாடலுக்கான, "மாலை அலை," என்ற அருமையான ராகத்தை, தன் வாழ்வின் மிகவும் சோகமான சூழ்நிலையில், மாலைக் கதிரவன் மறையும் வேளையில், பத்தே நிமிடங்களில் உருவாக்கினார்.
இப்பாடல், பல ஆலயங்களில், மாலை ஆராதனையின் முடிவுப்பாடலாகப் பாடப்படுகிறது. எனினும், இப்பாடலின் முக்கிய கருத்து, "வாழ்க்கையின் அந்தி நேரம்," என்பதே. இப்பாடல், எம்மாவூர் சென்ற சீஷர்கள், மாலை மயங்கும் வேளையில், உயிர்த்தெழுந்த ஆண்டவரை, "எங்களோடு இராத்தங்கும்," என்று வேண்டிக்கொண்ட வேத பகுதியின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. மிகவும் கருத்து மிக்க, உள்ளமுருகும் பாடலானதால், இதை அமெரிக்காவில் 1855-ம் ஆண்டு வெளியிட்டபோது, "இது பாடுவதற்காக அல்ல, வாசிப்பதற்கே." என்று அறிமுகம் செய்தனர்.
"உபயோகமின்றித் துருப்பிடித்து அழிவதைக் காட்டிலும், தொடந்து உபயோகிக்கப்பட்டுத் தேய்ந்து போவதே மேல்," என்ற தமது சொல்லுக்கேற்ப வாழ்ந்து காட்டியவர் ஹென்றி லைட் ஆவார்.
நியூ இங்கிலாந்தில் பல ஆண்டுகளுக்கு முன், ஒரு தாய் தன் ஒரே பாலகனைத் தூங்க வைக்கும் தாலாட்டுப் பாடலாக இதை உபயோகித்து வந்தாள். வேதனைகளும், பாடுகளும் நிறைந்த அவள் வாழ்க்கையின் ஒவ்வொரு நாள் முடிவிலும், இப்பாடலைப் பாடி, மன அமைதியையும் இளைப்பாறுதலையும் பெறுவது அவளுடைய வழக்கமாயிருந்தது. அவளுடைய மகன் பெரியவனாகி, தினமும் அந்தி சாயும் நேரத்தில் மாடுகளை ஓட்டிக்கொண்டு வீடு திரும்பும்போது, வீட்டிலிருந்து அவன் தாய் பாடும் இப்பாடலின் சத்தம் அவனை வரவேற்கும்.
நாளடைவில், அவன் தாய் வியாதிப்பட்டு பெலவீனமடைந்த போதும், இப்பாடலை மெல்லிய குரலில் அவள் பாட, அவன் கேட்பதுண்டு. சில நாட்களுக்குப்பின் அவனது தாய் மரித்தாள். தாயின் பாடல் ஒலியும் மறைந்து போனது. அன்பற்று கடுமையாய் நடத்திய தன் தகப்பனின் செயலைப் பொறுக்க முடியாமல், அவன் தன் உடைமைகளையும் தன் தாயின் பொக்கிஷமான வேதபுத்தகத்தையும் எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு பட்டணத்திற்கு ஓடிப்போனான். அங்கு தீய நண்பர்களோடு பழகி, தன் வாழ்க்கையையும், உடலையும் கெடுத்து வியாதிப் பட்டான்.
ஒரு பொது விடுதியில் மரண அவஸ்தைப் பட்டுக் கொண்டிருந்த அவனைச் சந்திக்க, மிஷனரி ஒருவர் வந்தார். ஆண்டவரின் அன்பைப் பற்றி அவர் பலமுறை எடுத்துக்கூறியும், அவன் ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டான். இம்முயற்சியில் தோல்வியுற்று, மனமுடைந்த மிஷனரி, மரிக்கும் அந்த வாலிபனை விட்டு சற்றே விலகி, ஜன்னலருகே சென்று, இப்பாடலை சோர்வுடன், மெல்லிய குரலில் பாட ஆரம்பித்தார். அதைக் கேட்டவுடன், அவ்வாலிபன் கண்ணீர் மல்க, "இது என் தாய் விரும்பிப் பாடும் பாட்டல்லவா!" என்று கூறினான். அப்போது, அவன் தாயின் அன்பும், அவளது ஜெபங்களும், பக்தி நிறைந்த வாழ்க்கையும், அவன் மனக்கண்முன் தோன்றின. "என் தந்தையின் கொடூர நடத்தையால் நான் வீட்டை விட்டு வெளியேறின போதெல்லாம் என்னை அன்போடு தடுத்தது என் தாயின் இந்தப் பாடல் தானே! எத்தனை ஆண்டுகள் இதை மறந்து போனேன்!" என்று கதறினான்.
அந்நிலையில், தாயின் அன்புக்கும் மேலான இயேசுவின் அன்பை, மிஷனரி மீண்டும் எடுத்துரைத்தார். அவன் அந்நேரமே இயேசுவைத் தன் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டு, அவருடைய சமாதானத்தையும் சந்தோஷத்தையும் பெற்று மரித்தான். அமைதியாக விளங்கிய அவன் முகத்தை நோக்கிய வண்ணம், மிஷனரி கூறினார், "அந்தத்தாயின் பாடல்! தூர இடங்களில் அலைந்து திரிந்த அவளது மகனைத் தம்மிடம் சேர்த்துக்கொள்ள, ஆண்டவர் இப்பாடலையல்லவா உபயோகித்தார்!''
இந்த அருமையான பாடலை எழுதியவர் யாரென்று தெரியவில்லை. "F.P.B." என்ற கையெழுத்தை மட்டும் விட்டுச் சென்ற இவர், 16 அல்லது 17-ம் நூற்றாண்டில் வாழ்ந்த கத்தோலிக்கப் பாதிரியாராக இருக்கக்கூடுமென கருதப்படுகிறது.
எக்கிங்டனின் போதகர், ஜோசப் பிரோம்ஹெட் என்பவரை, அப்போது உபயோகத்திலிருந்த ஆலயப்பாடல் புத்தகத்தைத் திருத்தி அமைத்துத் தருமாறு கேட்டுக் கொண்டார். அதன்படி 1795-ம் ஆண்டு வெளிவந்த, புதுப்பாடல் புத்தகத்தில் சேர்க்கப்பட்ட 37 பாடல்களில் இப்பாடலும் ஒன்று.
பரலோகத்தைப் பற்றி, நானூறு வார்த்தைகளடங்கிய கட்டுரையாக, இது முதலில் உருவெடுத்தது. வெளிப்படுத்தின விசேஷம் 21-ம் அதிகாரத்தை மையமாகக் கொண்டு, ஆசிரியரின் உணர்ச்சி மிக்க படைப்பாக உருவானது. முதலில் அநேக எழுத்துப் பிழைகளுடன், 26சரணங்களைக் கொண்டிருந்த இப்பாடலில், 7 சரணங்களே இப்போது உபயோகத்திலுள்ளன. இப்பாடலின் மூலம் ஆவிக்குரிய ஆசீர்வாதம் பெற்றவர் பலர்.
இந்நாட்களில், இறந்தோர் வீடுகள் மற்றும் அடக்க ஆராதனைகளில் மட்டுமே இப்பாடல் பாடப்படுகிறது. தன் மரணத்தையோ, ஆண்டவரின் இரண்டாம் வருகையையோ சந்திக்க ஆயத்தமில்லாத, பல கிறிஸ்தவ மக்களுக்கு, மரண பயத்தையும், திகிலையும் ஊட்டும் சாவுப்பாடலாக இது மாறியிருப்பது, வேதனைக்குரிய காரியம். ஆனால், பரலோகத்தை அழகாகச் சித்தரிக்கும் இப்பாடல், இரட்சிப்பின் அனுபவம் பெற்றவர்களுக்கு, நித்திய வாழ்வின் நம்பிக்கையூட்டுவதாக விளங்குகிறது.
இந்தியாவுக்கு முன்னோடி மிஷனரியாக வந்த E.P.ஸ்காட், ஒருமுறை ஒரு பாதையில் தனியாகச் சென்று கொண்டிருந்தார். அப்போது திடிரென்று, ஒரு ஆதிவாசிகளின் கொலைக்கூட்டம், ஈட்டிகளுடன் அவரைச் சூழ்ந்து கொண்டது. என்ன செய்வதென்று அறியாமல் திகைத்த ஸ்காட், உடனடியாகத் தன் பெட்டியைத் திறந்து, வயலின் இசைக்கருவியை எடுத்து, அதை மீட்டிக்கொண்டே, இப்பாடலைப் பாட ஆரம்பித்தார். மெய்மறந்து கேட்டுக் கொண்டிருந்த ஆதிவாசிகள், அவர், ''எல்லா ஜனங்களும் எல்லா ஜாதிகளும், '' என்ற சரணத்தைப் பாடும்போது, தங்கள் ஈட்டிகளைத் தாழ்த்திக் கொண்டு, கண்ணீர் மல்க நின்றனர். பின்னர், அவர்களுக்கு அவர் நற்செய்தியை எடுத்துக் கூறினார். இவ்வாறு, அந்த நாளிலே, எளிமையான, கருத்துச் செறிந்த இப்பாடலைக் கொண்டு, மிஷனரியின் உயிரைக் காத்ததுடன், நற்செய்தியை அவர்களுக்கு அறிவிக்கும் வாய்ப்பையும் ஆண்டவர் அளித்தார்.
இப்பாடல் ''கிறிஸ்தவ ராஜ்ஜியத்தின் தேசிய கீதம்'' என்று அழைக்கப்படுகிறது. இது, ''பிளவுண்ட மலையே,'' என்ற பிரபல பாடலை எழுதிய, அகஸ்டஸ் டாப்லடி வெளியிட்ட நற்செய்திப் பத்திரிக்கையில் முதலாவது அறிமுகமானது. கிறிஸ்தவம் பரவிய அனைத்து மொழிகளிலும் இப்பாடல் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ''கிறிஸ்தவர்கள் இவ்வுலகத்தில் இருக்கும்வரை, இப்பாடல் தொடர்ந்து பாடப்படும். பின்னர், பரலோகத்தில் இது தொடரும்.'' என்று ஒரு எழுத்தாளர் எழுதினார்.
இச்சிறந்த பாடலை எழுதிய எட்வர்டு பெரோனெட், இங்கிலாந்தின் கென்ட்டில் உள்ள சன்டிரிட்ஜ் என்ற இடத்தில், 1726-ம் ஆண்டு பிறந்தார். இவருடைய மூதாதையர் பிரான்ஸ் நாட்டின் மதக்கலவரத்தால் நேரிட்ட துன்புறுத்தலினால், சுவிட்சர்லாந்துக்கும், பின்னர் இங்கிலாந்துக்கும் ஓடி வந்த, பிரபல பிரெஞ்சு ஹீகுநாட் குடும்பத்தினராவர். இங்கிலாந்து திருச்சபையின் போதகரான இவர் தந்தை, வெஸ்லி, வொயிட்பீல்டு ஆகிய பிரசங்கியார்களின் நற்செய்தி இயக்கப் பணியை ஆதரித்தார். அவர் லண்டனிலிருந்து 20 மைல் தூரத்திலிருந்த, ஷோர்காம் என்ற அழகிய கிராமத்தின் ஆலயப் போதகராக ஊழியம் செய்தார்.
தந்தையைப் போல திருச்சபை போதகரான எட்வர்டு, திருச்சபையின் மந்த நிலையை வெறுத்தார். ஒருமுறை அவர், ''நான் இங்கிலாந்து திருச்சபையின் ஐக்கியத்தில் வளர்ந்து, அதிலேயே மரிக்கப் போகிறேன். ஆனால், இத்திருச்சபையின் அர்த்தமில்லாத நடத்தைகளை வெறுக்கிறேன்,'' என்று எழுதினார்.
வாலிபனான எட்வர்டுக்கு, ஜான் வெஸ்லியின் மீது, மிகுந்த மதிப்பும், உயர்வான எண்ணமும் இருந்தது. எனவே, அவர் திருச்சபை ஊழியத்தை விட்டு விலகி, சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாக, வெஸ்லியின் ஊழியங்களில் தீவிரமாக ஈடுபட்டார். பவுலுக்கு தீமோத்தேயு போல, வெஸ்லிக்கு எட்வர்டு இருந்தார். வெஸ்லியின் ஊழியங்களுக்கு எதிராக கடும் எதிர்ப்புத் தோன்றிய அந்நாட்களில், எட்வர்டு வைராக்கியமாக இவ்வூழியங்களில் முன்நின்று செயல்பட்டார். ஒருமுறை போல்டன் என்ற ஊரில் அவர் தாக்கப்பட்டு, சேற்றிலும் சகதியிலும் புரட்டி எடுக்கப்பட்டார்; கல்லெறிபட்டார்.
ஒருமுறை ஜான் வெஸ்லி,'' அடுத்த கூட்டத்தில், வாலிபனான எட்வர்டு பெரோனெட் பேசுவார்'' என்று பகிரங்கமாக அறிவித்தார். தன்னைவிட 18 வயது மூத்த, சிறந்த பிரசங்கியாராகிய ஜான் வெஸ்லியின் முன்னிலையில் பேச விரும்பாத பெரோனெட் அடுத்த கூட்டத்தில், ''நான் பிரசங்கிக்க ஒத்துக்கொள்ளவே இல்லை. எனினும், இவ்வுலகின் மிகச் சிறந்த பிரசங்கத்தை, இப்போது தரப்போகிறேன் '' என்று கூறி, மலைப் பிரசங்கத்தை வேதாகமத்திலிருந்து வாசித்து விட்டுத் தன் இருக்கையில் அமர்ந்தார்.
வெஸ்லியின் ஊழியங்களில் பெரோனெட் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்த போதும், தனித்தன்மை உள்ளவராக விளங்கினார். ஒருமுறை வெஸ்லி, "மெதடிஸ்டுகளுக்குள் போதகர்கள் தவிர, மற்ற பிரசங்கிமார் நற்கருணை கொடுக்கலாகாது," என்று தீர்மானம் எடுத்தபோது, அதை எதிர்த்து, அவருடைய ஊழியத்திலிருந்து விலகினார். பின்னர் ஹன்டிங்டன் சீமாட்டியின் ஆலயப் போதகர்களில் ஒருவராக ஊழியம் செய்தார். அவருடைய பிரசங்கங்களில், திருச்சபையின் அவல நிலையைப் பற்றி மிகவும் கடிந்துரைப்பதை அச்சீமாட்டி விரும்பாததால், அங்கிருந்தும் அவர் விலகி, கேன்டர்பரியிலிருந்த ஒரு தனிப்பட்ட சிற்றாலயத்தின் போதகரானார்.
உணர்ச்சிகரமான ஈடுபாட்டுடன் ஊழியம் செய்த பெரோனெட்டுக்கு, பாட்டு எழுதுவது தானாகவே வந்த கலையாக இருந்தது. அவர் பல பாடல்களைப் புனைப்பெயரில் எழுதியபோதும், அவரது பாடல்களில் இப்பாடல் ஒன்றே இன்றும் உபயோகத்திலிருக்கிறது. இப்பாடலை அவர் தனது 58-வது வயதில், கேன்டர்பரியில் ஊழியம் செய்யும்போது எழுதினார் என்று கருதப்படுகிறது.
இப்பாடல், உயிர்த்தெழுந்த ஆண்டவரை வாழ்த்திப் பாடுவதாக எழுதப்பட்டுள்ளது. உயிர்த்தெழுந்த ஆண்டவர் உன்னதத்திற்கு ஏறி, மகிமையின் நித்திய சிங்காசனத்தில் அமரும்போது, இறைவன் படைத்த படைப்புகள் ஒவ்வொன்றும் வந்து அவரை வாழ்த்திப் பாட, இப்பாடலாசிரியர் அழைக்கிறார்.
இப்பாடலுக்கு மூன்று அழகான ராகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாசாச்சூசெட்டில் தச்சுவேலை செய்த ஆலிவர் ஹோல்டன் என்ற இசை ஆசிரியர், ''காரனேஷன்'' என்ற ராகத்தை அமைத்தார். பெரோனெட்டின் நண்பரும், அவரது கேன்டர்பரி பேராலயப் பாடகருமான, வில்லியம் ஷ்ரப்சோல் எழுதிய ''மைல்ஸ் லேன் '' என்ற ராகம், இங்கிலாந்தில் அனைவராலும் பாடப்படுகிறது. பின்னர், 1838-ம் ஆண்டு, ஜேம்ஸ் எல்லோர் என்ற ஆங்கிலேயரால் விழாக்காலங்களுக்கென்று அமைக்கப்பட்ட ''டையடெம்'' என்ற ராகம், பாடகர் குழுக்கள் விரும்பிப் பாடும் சிறப்பு ராகமாகக் கருதப்படுகிறது.
எங்கள் இணைத்தளத்தில் உள்ள கட்டுரைகள் மற்றும் புத்தகங்களைப் வாசகார்களின் வசதிக்காக, BSI இந்திய வேதாகம சங்கத்தாரால் வெளியிடப்பட்ட O.V. தமிழ் வேதாகமத்தின் வசனங்களை பயன்படுத்தியுள்ளோம்.
© 2025. தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்.