இப்பாடலை எழுதத் தன்னைத் தூண்டிய நிகழ்ச்சிகளைப் பற்றி டாக்டர் ஜார்ஜ் மதீசன் இவ்வாறு கூறுகிறார்:
"1882 - ம் ஆண்டு ஜீன் மாதம் ஆறாம் தேதி இனெல்லத்தில் இப்பாடலை எழுதினேன். அன்று என் சகோதரிக்கு கிளாஸ்கோவில் திருமணம் நடைபெற்றது. எனவே, என் உறவினர் அனைவரும் அங்கே தங்கியிருக்க, நான் மட்டும் தனித்து விடப்பட்டவனாக, தனிமையில் இருந்தேன். அப்போது தான் அந்த பயங்கர துயர அனுபவம் எனக்கு நேரிட்டது. நான் மட்டுமே அறிந்த, அந்த துயர அனுபவம் என்னை மிகவும் வாட்டியது.
மிகவும் சஞ்சலப்பட்டு, சோர்வுற்ற மனநிலையில், தனித்து விடப்பட்ட அந்த சூழ்நிலையில் தான், இப்பாடல் என் உள்ளத்தில் உருவானது. அதை நான் எழுதினேன் என்று சொல்வதைக் காட்டிலும், என் உள்ளத்தில் பேசிய ஒரு குரல், வார்த்தைகளைச் சொல்லச்சொல்ல, அவற்றை அப்படியே, என் கை ஒரு தாளில் துரிதமாக எழுதிவிட்டது. பாடல் முழுவதையும் எழுதி முடிக்க, மொத்தம் ஐந்தே நிமிடங்கள் தான் ஆயின. பொங்கி வரும் நீரூற்றைப் போல என் உள்ளத்தில் கொடுக்கப்பட்ட இப்பாடலை, நான் மேலும் மெருகேற்றத் தேவை ஒன்றுமில்லாமல், தனிப் பொலிவுடன் அமைந்திருந்தது.
இப்படிப்பட்டதோர் சிறந்த அனுவத்தை என் வாழ்நாளில் நான் அதன்பின் பெற்றதேயில்லை."
சிறுவயதிலேயே கண்பார்வை குறைவுபட்ட மதீசனுக்கு, மருத்துவர்கள் சரியான சிகிச்சை அளிக்காததால், தனது 18-வது வயதிலேயே பார்வையிழந்தார். இப்பெருங்குறையுடனும் கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தின் சிறந்த மாணவனாகத் தேறி, தனது 19வது வயதிலேயே பட்டம் பெற்றார். 1866-ம் ஆண்டு, தனது 24-ம் வயதில், உதவிகுருவாக பொறுப்பேற்று, பின் இரண்டு ஆண்டுகளில் இனெல்லம் என்ற இடத்திலுள்ள சிற்றாலயத்தின் போதகரானார்.
இனெல்லத்தில் 18 ஆண்டுகள் திறமையாகப் பணியாற்றி, "சிறந்த பிரசங்கியார்" என்ற மதிப்பும் பாராட்டும் பெற்றார். திருமறைக்கட்டுரைகள் பல எழுதி, திருச்சபை மக்களின் அன்பையும் பேராதரவையும் பெற்றார். இதையறிந்த இங்கிலாந்தின் விக்டோரியா மகாராணி, அவரைத் தன் பால்மோரல் கோட்டை அரண்மனை ஆலயத்தில் தேவ செய்தியளிக்க அழைத்தார். மதீசனின் செய்தியால் புத்துணர்ச்சி பெற்ற ராணி அவருக்கு நன்றி கூறினார்.
பின்னர் 1886-ம் ஆண்டு எடின்பர்கில் உள்ள, 2000 அங்கத்தினர்களைக் கொண்ட தூய பெர்னார்டு பேராலயத்திற்குப் போதகராக நியமிக்கப்பட்டார்.
1899 - ம் ஆண்டில் அவர் ஓய்வு பெறும் வரை அந்த ஆலயத்தில் மிகச் சிறப்பாக ஊழியம் செய்தார். அவரது கிறிஸ்தவ இலக்கியத் தொண்டு அவர் ஓய்வு பெற்ற பின்னரும் தொடர்ந்தது.
இப்பாடலுக்கு இசை அமைத்ததும் ஒரு வித்தியாசமான அனுபவம் தான். 1885 - ம் ஆண்டு, ஸ்காட்லாந்து தேசத்தின் அசான் கடற்கரை மணலில் உட்கார்ந்து, டாக்டர் ஆல்பர்ட் லிஸ்டர் பீஸ் இப்பாடலை வாசித்துக் கொண்டிருந்தார். திடீரென்று அவர் உள்ளத்தில் தொனித்த ராகத்தை, அப்படியே சில நிமிடங்களில் எழுதி முடித்துவிட்டார்.
"ஆண்டவர் நல்லவராம்! என்னை நேசிப்பவராம்! கைவிடவே மாட்டாராம்! இப்படிக் கூறும் வேத புத்தகத்தை நான் நம்ப வேண்டுமாம்!''
பொங்கி எழும் தன் உள்ளக் குமுறலின் உணர்ச்சி அலைகளோடு போராடிக் கொண்டிருந்தாள் வாலிபப் பெண்ணான மேரி பேக்கர். மேரி பேக்கரின் பெற்றோர் எலும்புருக்கி நோயாளிகள். அவளது தம்பியையும் தங்கையையும் வளர்க்கும் பொறுப்பை மேரியின் கரத்தில் கொடுத்துவிட்டு, சீக்கிரமே மரித்துப் போனார்கள். அமெரிக்காவின் சிக்காகோ மாநகரில் தனது கடின உழைப்பினால் குடும்பத்தைப் பராமரித்து வந்தாள் மேரி.
இந்த வாலிபப் பெண்ணின் வாழ்வில் மற்றுமொரு சூறாவளி! அவளுடைய அருமைத் தம்பியையும் எலும்புருக்கி நோய் தாக்கியது. எப்படியாவது தன் ஒரே தம்பியைக் காப்பாற்ற வேண்டுமென மேரி முயற்சித்தாள். தென் அமெரிக்காவில் உள்ள பிளாரிடாவின் சூரிய ஒளியும், வெப்ப நிலையும் அவனைச் சீக்கிரம் குணமாக்கும் எனப் பலர் ஆலோசனை கூறினர். எனவே, தன்னால் சேமிக்க முடிந்த பணமனைத்தையும் சேர்த்து, தன் தம்பியை அங்கு அனுப்பி வைத்தாள்.
ஆனால், பிளாரிடாவில் தம்பியின் உடல்நிலை சில நாட்களுக்குள் மிகவும் மோசமடைந்தது. அயராது உழைத்த மேரியோ சிக்காகோவில் சுகவீனமானாள். எனவே, மேரிக்கு பிளாரிடா செல்ல பெலனுமில்லை; பணமுமில்லை. இரு வாரங்களில் அவள் நேசித்த ஒரே தம்பி ஆயிரம் மைல்களுக்கப்பால் தனிமையில் அனாதையாய் மரித்துப் போனான். பயணச் செலவுக்கும் பணமில்லாததால் தன் தம்பியின் சடலத்தைப் பார்க்கவோ, அடக்க ஆராதனையில் கலந்துகொள்ளவோ மேரியால் முடியவில்லை. தவித்துப் புலம்பினாள்.
மேரி ஒரு கிறிஸ்தவள் தான். ஆனால், அவளது வாலிப வயதில் தொடர்ந்து புயல்போல் தாக்கிய இச்சோதனைகளால் மனக்கசப்பு அடைந்தாள். தேவனின் அன்பு, பராமரிப்பு என்பவற்றை நம்ப, அவள் உள்ளம் மறுத்தது. அவரையே வெறுக்குமளவிற்கு எதிர்ப்புணர்ச்சி தலை தூக்கியது. அமைதியின்றி, வேதனையுற்ற அவள் உள்ளம் அலை மோதியது.
அந்நிலையில், தன்னோடு மெல்லிய சத்தத்தில் பேசும் ஆண்டவரின் அன்புக்குரலை மேரி கேட்டாள். அதன் பின்னர், ஒரு புதிய ஆழமான சமாதானத்தையும், நல் நம்பிக்கையையும் அடைந்தாள்.
சில வாரங்கள் சென்றபின், அவளது ஆலயப் போதகர் டாக்டர் பால்மர் மேரியைச் சந்தித்தார். ஆலய ஞாயிறு பள்ளியில் போதிக்கப்படும் சில பாடங்களின் கருத்தமைந்த பாடல்களை அவள் எழுத வேண்டுமென்று கேட்டார். அப்பாடங்களில் ஒன்று "இயேசு புயலை அமர்த்தும் சம்பவம்'' இத்தலைப்பில் பாடலை எழுதத் துவங்கிய மேரி பேக்கர், அந்நிகழ்ச்சியைத் தன் வாழ்வின் அனுபவ சாட்சியாகவே உணர்ந்து எழுதினாள். தன் உள்ளத்தில் வீசிய புயலை, ஆண்டவர் எவ்வாறு அற்புதமாக அமைதியாக்கினார், என்ற மேரி பேக்கரின் இந்த சாட்சிப் பாடல், அநேகரின் வாழ்க்கைப் புயலில் அமைதியையும், ஆறுதலையும் இன்றும் அளிக்கிறது. இதற்கு எடுத்துக்காட்டாக, சமீபத்தில் நடந்த ஒரு சம்பவத்தைக் கீழே குறிப்பிடுகிறோம்.
1995-ம் ஆண்டு கிறிஸ்மஸ் தினம். தஞ்சாவூரில், அதற்கு சில நாட்களுக்கு முன் தன் அருமை கணவனை இழந்த ஒரு சகோதரி, துயரம் தாங்கமுடியாமல் கண்ணீர் விட்டுக் கொண்டேயிருந்தார். அவரை ஆற்ற முடியாமல் தவித்த அவர் தம்பி அதை எங்களுடன் வேதனையோடு பகிர்ந்து கொண்டார். நாங்கள் அவர் வீட்டிற்கு உடனே சென்று, இப்பாடலின் பின்னணியத்தைக் கூறிப் பாடி முடித்தபோது, மேரி பேக்கரின் சாட்சியின் மூலம் ஆண்டவர் அச்சகோதரியைத் தேற்றி அவருக்கு ஆறுதல் அளித்தார்.
இச்சகோதரியும் அடுத்த வருடமே வியாதியால் மரித்தபோது, அவரது பிள்ளைகளை ஆண்டவர் கைவிடாது, அருமையாய் பராமரித்து வழி நடத்துவதை நாங்கள் கண்கூடாகப் பார்த்து, வேதனையின் மத்தியிலும் தேவன் தரும் உன்னத சமாதானத்தை உணர்ந்து கொண்டோம்.
பிறந்தது முதல் பெலவீனங்கள், மனச்சோர்புகள், மனக்குழப்பங்கள்! பின்னர் அவன் மதி மயங்கியே போனான்!
அந்த வாலிபன் தான் வில்லியம் கூப்பர். ராஜ குலத்தில் வந்த தன் தாயைத் தனது ஆறாவது வயதில் இழந்தவன்! ஒருபோதகரின் மகன்! சட்டப்படிப்பை மேற்கொண்டு, இறுதித் தேர்வை எழுத பயந்து, புத்தி பேதலித்தவனாய், தன் வாழ்க்கையை முடிக்க, விஷத்தையும் பேனாக்கத்தியையும் நாடினான். ஆனால், தற்கொலை செய்து கொள்ளவும் பயம்! தூக்குப் போட்டுக்கொள்ள முயன்றான். ஆனால், கயிறு அறுந்து விழவே, அதிலும் தோல்வி!
இத்தனை சோர்வுகளையும், தோல்விகளையும், தன் இளமையிலேயே அனுபவித்த கூப்பரை, புத்தி பேதலித்தோர் காப்பகத்தில் சேர்த்தனர். 18 மாதங்கள் அங்கே தங்கியிருந்தபோது, 1764 - ம் ஆண்டு, தன் 33-வது வயதில், கூப்பர் இயேசுவைத் தன் சொந்த ரட்சகராக ஏற்றுக்கொண்டார். அங்கிருந்து சுகம் பெற்று வெளியேறிய கூப்பரை, மார்லி அன்வின் என்ற போதகரும் அவர் மனைவியும் தங்கள் இல்லத்தில் ஏற்றுக்கொண்டு உற்சாகப்படுத்தினார்கள்.
அன்வின் தம்பதியரின் அன்பான பராமரிப்பால் புதுவாழ்வை மேற்கொண்ட கூப்பருக்கு, இன்னும் ஏமாற்றங்கள் காத்திருந்தன. போதகர் அன்வின் திடீரென்று மரித்துப்போனார். போதகரின் மனைவியையும், கூப்பரையும் பராமரிக்கும் பொறுப்பை, ஓல்னியின் புகழ்பெற்ற போதகர் ஜான் நியூட்டன் ஏற்றுக்கொண்டார். ஓல்னியில் ஜான் நியூட்டனின் ஊக்குவிப்பால், கூப்பரின் கவிதைத் தாலந்து சிறப்பான விளைவுகளைத் தந்தது, இங்கிலாந்து தேசத்தின் சிறந்த கவிஞரெனப் புகழ் பெற்றார். 1799 - ல் நியூட்டனும், கூப்பரும் இணைந்து தயாரித்த, பிரபல ""ஓல்னி பாடல் புத்தகம்'' வெளியிடப்பட்டது.
மகிழ்வுடன் வாழ்ந்த கூப்பருக்கு மற்றுமொரு சோதனை! 1769 டிசம்பர் மாதம், கூப்பர் அதிகமாய் நேசித்த அன்வின் அம்மையார் மிகுந்த சுகவீனமடைந்தார். மரணம் அவரையும் தன்னிடமிருந்து பிரித்துவிடுமோ என்று கலங்கித் தவித்த கூப்பர், "எனக்கு அருமையான உறவுகளையும், அரவணைப்புகளையும், நான் இழக்க நேரிட்டாலும், அது என் பிதாவின் சித்தமென்று ஏற்றுக் கொள்கிறேன். இந்த அனுபவமே என் வாழ்வை இன்னும் தூய்மைப்படுத்துவதாக" என்று எழுதினார்.
இந்த நிலையில், ஆண்டவரின் நெருங்கிய வழிநடத்துதலை வேண்டி, 9-12-1769 அன்று அதிகாலை நேரத்தில், இப்பாடலின் முதலிரண்டு வரிகளை கூப்பர் எழுதினார். பின்னர் தூங்கிவிட்டார். விழித்து எழுந்தபோது, தன் உள்ளத்தில் ஒலித்த மெல்லிய சத்தத்தைக் கேட்டு மூன்றாம் நான்காம் வரிகளை எழுதினார்.
பின்னர் 1773-ம் ஆண்டு, மீண்டும் மனநோயால் தாக்கப்பட்டு, தற்கொலை செய்துகொள்ள முயற்சித்தார். அதன்பின் தன் சுயபுத்தியுடன், 20 ஆண்டுகள் கவிதைகளையும், பிறபாடல்களையும் எழுதினார். பெலவீனங்கள் நிறைந்த கூப்பர், அடிக்கடி, "ஆண்டவர் என்னை ஒருவேளை ஏற்றுக்கொள்ள மறுத்துவிடுவாரோ?" என்று பயந்து கூறுவார். ஆனால், அவர் தனது மரணப்படுக்கையில், உயிர் பிரியும் போது, புன்முறுவலுடன் கூறிய இறுதி வார்த்தைகள் "பரலோகத்தைவிட்டு ஆண்டவர் என்னைத் தள்ளிவிடவில்லை" என்பதே.
பெலவீனங்கள் மத்தியிலும் ஆண்டவரின் பெலன் பூரணமாய் விளங்கும் என்பதற்கு, கூப்பரின் வாழ்க்கை ஒரு சிறந்த சாட்சியாகும்.
1861-ம் ஆண்டு அயர்லாந்தில் ஆவிக்குரிய சிறப்பு தியானக்கூட்டங்கள் நடத்தப்பட்டு அத்தேசமெங்கும் உயிர்மீட்சி அலை எதிரொலித்தது. அந்நாட்களில் வெஸ்டன் சூப்பர்மரே என்ற கிராமத்தில்:
"டீச்சர்! டீச்சர்!" என்ற தன் மாணவ மாணவியரின் ஆரவார சத்தம் கேட்டுத் திரும்பிப் பார்த்தாள் எலிசபெத் காட்னர்.
"என்ன? ஒரே குதூகலமாயிருக்கிறீர்கள்?"
"நாங்கள் லண்டனுக்கு விடுமுறை நாட்களை கழிக்கச் சென்றோமல்லவா, டீச்சர்?"
"ஓ ! அங்கே எல்லா இடங்களையும் சுற்றிப்பார்த்த மகிழ்ச்சியா?"
"இல்லை டீச்சர். நாங்கள் அங்கே நடைபெற்ற தியானப் பயிற்சிக் கூட்டங்களில் கலந்து கொண்டோம். ஆண்டவரை எங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டோம். அவர் எங்கள் உள்ளத்தில் சந்தோஷத்தையும் சமாதானத்தையும் ஆசீர்வாதமாகப் பொழிந்து விட்டார்."
தன்னிடம் கல்வி கற்கும் மாணவரின் ஆவிக்குரிய வாழ்க்கையைப் பற்றியும் மிகுந்த அக்கரை கொண்ட எலிசபெத் காட்னரின் காதுகளில் இச்செய்தி தேனாய் ஓலித்தது. ஆயினும், அவள் உள்ளத்தில் ஓர் ஏக்கம். "என்னிடம் கற்கும் மாணவர்கள் பலர் உண்டே. லண்டனுக்குச் சென்ற ஒருசில மாணவர்கள் மட்டுமே, இந்த சிறந்த அனுபவத்தைப் பெற்றார்களே; மற்றெல்லா மாணவரும் கூட இதைப் பெற வேண்டுமே."
இந்த வாஞ்சையே, இப்பாடலை எழுத காட்னரைத் தூண்டியது.
"ஆண்டவரே, உம் அருள் மாரி எங்கும் பெய்கிறதெனக் கேள்விப்படுகிறேனே. அது இங்கேயும் பொழியட்டுமே!"
என்ற இப்பாடலின் வார்த்தைகள், அவளது இதய வாஞ்சையை வெளிப்படுத்துகிறதல்லவா?
தன் மாணவர்களின் ஆவிக்குரிய வளர்ச்சிக்கென காட்னர் எழுதிய இப்பாடலை, சிறந்த நற்செய்திப் பாடகரான சாங்கி, மூடிப் பிரசங்கியாரின் கூட்டங்களில் பாடிப் பிரபலமாக்கினார். அக்கூட்டங்களில் இப்பாடல் அநேக ஆத்துமாக்களை ஆண்டவருக்காக ஆதாயம் பண்ணியது.
பல ஆண்டுகளுக்குப் பின், அருள்திரு கனோன் ஹேய் ஐட்கென் என்ற பிரபல மிஷனரி, லண்டனின் மேற்குப்பகுதியில் கூட்டங்கள் நடத்திக்கொண்டிருந்தார். உல்லாச வாழ்க்கை நடத்தும் நாகரீக இளம் பெண்ணொருத்தி, மற்றவர்களின் வற்புறுத்தலால் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டாள். பிரசங்கியாரின் உருக்கமான வேண்டுதல்களும், அழைப்பும், அவள் உள்ளத்தை சிறிதளவும் அசைக்கவில்லை.
செய்தி முடிந்தவுடன், ஆராதனை முடிவின் கலந்துரையாடலில் பங்கேற்க அவள் விரும்பவில்லை. எனவே, ஆலயத்திலிருந்து வெளியேற எழுந்தாள். ஆனால், ஆலயம் நிரம்பி வழிந்து, நடைபாதையிலும் மக்கள் கூட்டமாக நிறைந்திருந்ததால், வாயிலை நோக்கி அவளது பயணம் மிகவும் மெதுவாகவே முன்னேறியது. அதற்குள் பாடகர் குழு இப்பாடலைப் பாட ஆரம்பித்தது. மெதுவாகப் போய்க்கொண்டிருந்த அந்தப் பெண்ணை, இப்பாடல் மிகவும் கவர்ந்தது. திரும்பத்திரும்ப வந்த "என்னையும்" என்ற வார்த்தை, அவள் உள்ளத்தைத் தொட்டது.
இப்பாடல் அவளுக்குப் புதிதாக இருந்ததால், அப்பாடலின் வரிகளைத் தன் கையிலிருந்த பாடல் புத்தகத்தில் வாசித்துக்கொண்டே வந்தாள். ஆலய வாசலை அவள் நெருங்கும்போது, பாடலின் கடைசி சரணத்தைப் பாடகர் குழு பாடியது. திடீரென்று, பாடலில் கூறப்பட்டுள்ள காணாமற்போன நபர் தான் தானே, என்ற எண்ணம் அவள் உள்ளத்தில் எழுந்தது. போகும் வழியெல்லாம், அவள் வீடு செல்லும் வரை, "திக்கில்லா இவ்வேழையேனை, கைவிடாமல்" என்ற வார்த்தைகள் அவள் உள்ளத்தில் தொனித்துக்கொண்டே இருந்தன. இவ்வார்த்தைகளே, பின்னர் அவள் தனிமையில் தன் படுக்கையறையில் படுத்திருந்தபோது, அவளது தேம்பி அழும் ஜெபமாக மாறியது.
அப்போது, "இழந்து போனதைத் தேடவும், இரட்சிக்கவுமே, இயேசு உலகத்தில் வந்தார்" என்கிற வேத வசனம் (லூக்கா 19:10), அவளுடைய நினைவில் தோன்றியது. அன்றிரவு தூங்குமுன்பே, அவள் இயேசுவையும், அவரது அன்பையும் ஏற்றுக்கொண்டாள். அன்றிரவே, கிறிஸ்துவுக்குள் அவளது புதுவாழ்வு மலர்ந்தது.
ஆசிரியர்: எமிலி எலியட்
குதூகலமாகக் கொண்டாடப்படும் கிறிஸ்மஸ் பண்டிகைக்கு ஆதாரமான, இயேசு கிறிஸ்துவின் பிறப்பைப் பற்றி, தூய வேதத்தில் வாசித்துக் கொண்டிருந்த எமிலி எலியட் இவ்வார்த்தைகளைக் கண்டபோது வேதனைப்பட்டாள். இந்த வசனம் அவள் உள்ளத்தில் எழுப்பிய கேள்விக் குறிக்குப் பதிலாக இப்பாடலை எழுதினாள்.
இறைமகன் இயேசு தியாக அன்பினால் இவ்வுலகில் மனு உரு எடுத்த செயலையும், அதற்கு எதிரிடையாக, இவ்வுலக மக்கள் காட்டிய அன்பற்ற பதிலையும் ஒப்பிட்டு தியானித்த எமிலி, தன் பாடலின் முதல் 4 சரணங்களையும் ஒப்பிடும் காட்சிகளாகவே எழுதினாள். ஒவ்வொரு சரணத்திலும் முதலிரு வரிகள் இயேசுவின் பிறப்பின் தியாக அன்பை எடுத்துக் கூறுகின்றன. பின்வரும் இருவரிகள் அவருக்கு நாம் அளித்த அன்பற்ற பதிலை எடுத்துக்காட்டுகின்றன. இயேசுவின் முதலாம் வருகையைப் பற்றி இவ்வாறு எழுதின எமிலி, 5-வது சரணத்தில், அவரது கம்பீரமான இரண்டாம் வருகையைப் பற்றி எழுதி, "இவ்வருகையில், முதல் வருகையின் வேறுபாடுகள் அனைத்தும் மாறிப்போகும்", என்ற நல் நம்பிக்கையுடன் இப்பாடலை முடிக்கிறார்.
இப்பாடலை இயற்றிய எமிலி, 22-7-1836 அன்று இங்கிலாந்திலுள்ள பிரைட்டனில் பிறந்தார். தன் வாழ்நாள் முழுவதையும் திருச்சபையின் நற்பணிக்கென்று அர்ப்பணித்து வாழ்ந்தார். தாம் இருந்த பகுதியில் செய்யப்பட்ட மீட்புப் பணிகளிலும், ஞாயிறு பள்ளி ஊழியங்களிலும் உற்சாகமாக ஈடுபட்டார். "நான் பாவி தான்" என்ற பிரபல பாடலை இயற்றிய சார்லெட் எலியட் இவருடைய மருமகளாவார். ஆறு ஆண்டுகள் "திருச்சபையின் மிஷனரி ஊழியத்தில் சிறுவர் பணி" என்ற பத்திரிக்கையின் ஆசிரியராக இருந்தார். நோய்வாய்ப்பட்டோர், உடல் ஊனமுற்றோர், மற்றும் குடும்பங்களில் பிரச்சனையோடு இருப்பவர்களின் உபயோகத்திற்கென்று 48 பாடல்களை எழுதி, "தலையணைக்கடியில்" என்ற தலைப்பில் வெளியிட்டார்.
இப்பாடலை, எமிலி தன் தந்தையின் ஆலயமாகிய தூய மாற்கு ஆலயத்தின் பாடகர், மற்றும் ஞாயிறு பள்ளிப் பிள்ளைகளின் உபயோகத்திற்கென எழுதினார். சிறுவர்களுக்கு இயேசு கிறிஸ்துவின் பிறப்பின் உண்மையான நோக்கத்தை எடுத்துக்காட்டவே இப்பாடல் எழுதப்பட்டது.
அந்நாட்களில் இங்கிலாந்து தேசத்தில் புகழ்பெற்ற ஆர்கன் இசைமேதையான போதகர் தீமோத்தேயு R. மத்தேயு இப்பாடலுக்கு "மார்கரெட்" என்ற ராகத்தை, அமைத்துக் கொடுத்தார்.
எங்கள் இணைத்தளத்தில் உள்ள கட்டுரைகள் மற்றும் புத்தகங்களைப் வாசகார்களின் வசதிக்காக, BSI இந்திய வேதாகம சங்கத்தாரால் வெளியிடப்பட்ட O.V. தமிழ் வேதாகமத்தின் வசனங்களை பயன்படுத்தியுள்ளோம்.
© 2025. தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்.