லண்டன் நகரத்தில் வெஸ்லியைச் சேர்ந்தவர்கள், தங்கள் முதல் ஆலய ஆராதனையை, ஒரு பாழடைந்த இரும்பு ஆலையில் ஆரம்பித்தனர். சார்லெஸ் வெஸ்லியின் ஆல்டெர்கேட் ரட்சிப்பு அனுபவத்திற்குப் பின் ஓராண்டுக்குள்ளாகவே, 1739-ல் இவ்வாலயம் செயல்படத் துவங்கியது. இவ்வாலயத்தின் முதல் ஆராதனைக்கென்று, சிறப்புப் பாடலாக சார்லெஸ் இப்பாடலை எழுதினார்.
இந்த இரும்பு ஆலை ஆலயத்தில் வெஸ்லியினர் கூடிய நாட்களில், சார்லெஸ் பல புதுப்பாடல்களை எழுத, அனைவரும் அவ்வாராதனைகளில் உற்சாகமாகப் பாடினார்கள்.
இவையனைத்தும் தொகுக்கப்பட்டு, ஒரு பாடல் புத்தகமாக, "இரும்பு ஆலைப் பாடல்கள்" என்ற தலைப்பில் வெளிவந்தது. இப்புத்தகத்தில் இப்பாடலும் "உயிர்த்தெழுந்த நாள் பண்டிகைப் பாடல்", என்ற தலைப்புடன் சேர்க்கப்பட்டது. அதில் நான்கு வரிச் சரணங்கள் இருந்தன.
இப்பாடலை எழுதினபோது, இதில் வரிகளுக்கு இடையிடையே வரும், "அல்லேலூயா" என்ற வார்த்தை இல்லை. ஆனால், பின்னர் வெளிவந்த ஒரு பாடல் தொகுப்பில், அதின் நூலாசிரியர், உற்சாக தொனியோடு கர்த்தரைத் துதித்துப் பாட, இதைச் சேர்த்தார்.
இந்தப் பாடலுக்கு "ஈஸ்டர் பாடல்", என்ற ராகம் இணைக்கப்பட்டது. இதை அமைத்தவர் யாரென்று தெரியவில்லை.
சார்லெஸ் வெஸ்லி எழுதிய மற்றொரு பண்டிகைப் பாடல், "கேள் ஜென்மித்த ராயர்க்கே" என்ற கிறிஸ்மஸ் பாடலாகும். இப்பாடலின் இசையும், நாம் தூதருடன் சேர்ந்து செம்பீரித்துப் பாடும் தொனியில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பாடல்: இயேசு என் நேசர்
ஆசிரியர்: அன்னா வார்னர்
சிறுவர்களை இயேசுவின் அன்பை நோக்கி இழுத்த பாடல்களில் இப்பாடல் மிகவும் சிறப்புப் பெற்றது. இப்பாடலை அன்னா பார்ட்லெட் வார்னர் 1860 - ம் ஆண்டு தன் 40-வது வயதில் எழுதினார்.
அன்னாவின் சகோதரி சூசன் ஒரு சிறந்த எழுத்தாளர். அந்நாட்களில் மிகவும் புகழ் பெற்ற "சொல்லி முத்திரையிடு" என்ற நாவல் புத்தகத்தை அவர் எழுதினார். அதின் கதாபாத்திரங்களான லிண்டன், மரணத்துடன் போராடும் சிறுவன் ஜானி பாக்ûஸ ஆறுதல்படுத்த இப்பாடலைப் பாடுவதாக சூசன் எழுதி, அப்பாடலை இயற்றும் பொறுப்பைத் தன் சகோதரியிடம் கொடுத்தார். இவ்வாறு உருவான இப்பாடல், இன்றும் உலகின் பல்வேறு சிறுவர்களை உற்சாகப்படுத்தும் பாடலாக விளங்குகிறது.
கல்வியில் சிறந்த வார்னர் சகோதரிகள் பக்தி நிறைந்த வாழ்க்கை நடத்தி வந்தனர். சிறந்த வழக்கறிஞரான இவர்கள் தந்தையின் மரணத்திற்குப்பின் தங்களது இலக்கியப் பணிகளின் மூலம் சமூக சேவையையும் நற்செய்திப்பணியையும் செய்து வந்தனர்.நியூயார்க்கின் ஹட்சன் நதிக்கரையில் இருந்த இவர்களின் இல்லத்திற்கருகில் அமைக்கப்பட்ட அமெரிக்க படை அதிகாரிகளின் பயிற்சிப் பள்ளியில் படிக்கும் வாலிப வீரர்களுக்குத் தங்கள் வாழ்நாள் முழுவதும் ஞாயிறு பள்ளி நடத்தி, அவர்களின் ஆவிக்குரிய தேவைகளை சந்தித்து வந்தார்கள்.
எளிமையான வார்த்தைகளுடன் இயேசுவின் அன்பைத் தெளிவாய் விளக்கும் இப்பாடலை, பல மிஷனரிகள் தங்கள் பணித்தளங்களின் புது விசுவாசிகளுக்குச் சொல்லிக் கொடுக்கும் முதல் பாடலாக உபயோகித்தனர். எனவே, இப்பாடல் உலகின் பல மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
இப்பாடலுக்கு டாக்டர் வில்லியம் ஆ. பிராட்பரி இனிமையான ராகம் அமைத்து, அதின் பல்லவியையும் 1861-ம் ஆண்டு சேர்த்தார். பல பாடல் புத்தகங்களை வெளியிட்டுள்ள இவர், இப்பாடலை, 1862 -ம் ஆண்டு தனது "தங்க மழை" என்ற பாடல் புத்தகத்தில் அறிமுகம் செய்தார். ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுவர்கள் ஒரேவித சீருடை அணிந்து, இணைந்து அழகாகப் பாடும் இன்னிசை நிகழ்ச்சிகளை வருடந்தோறும் நடத்திய பெருமை இவரைச் சேரும்.
பொதுவாகவே, பாடல்களை முதலில் எழுதி, பின்னர் அதற்கேற்ற ராகம் அமைப்பது தான் வழக்கம். ஆனால் இதிலோ, ராகமொன்று பாடலைத் தேடி அழைத்ததாம்!
பிரபல அமெரிக்கப் பாடலாசிரியையான பேனி ஜேன் கிராஸ்பி தன் அறையில் ஒரு நண்பருடன் பேசிக்கெண்டிருந்தார். அப்போது அங்கு வந்த தோவன் என்ற புகழ்பெற்ற இசை வல்லுனர், பேனியைப் பார்த்து, "நான் ஒரு ராகத்தை அமைத்திருக்கிறேன். அதற்குப் பாடலை இயற்றித் தர இயலுமா?" என்று கேட்டார். அங்கிருந்த ஒரு சிறிய ஆர்மோனியத்தில், ராகத்தை அவர் வாசிக்கக் கேட்ட பேனி, "இந்த ராகம், 'இயேசுவின் கைகள் காக்க' என்று கூறுகிறதே!" என்று சொன்னார். அருகிலிருந்த அறைக்குள் நுழைந்த அவர், அரைமணி நேரத்திலேயே முழுப்பாடலையும் எழுதி முடித்துவிட்டார்!
பேனி நியூயார்க் நகரில், 1820-ம் ஆண்டு மார்ச் 24-ம் தேதி ஓர் எளிய குடும்பத்தில் பிறந்தார். அவர் 6 வாரக் குழந்தையாய் இருந்தபோது தவறான மருத்துவ சிகிச்சையால் கண் பார்வையை நிரந்தரமாக இழந்தார். நியூயார்க்கிலுள்ள பார்வை இழந்தோர் பள்ளியில் படித்து, பின்னர் அங்கேயே ஆசிரியையுமானார். 1858 - ல் அலெக்சந்தர் வேன் என்ற கண் பார்வையற்ற பிரபல இசை ஆசிரியரை மணந்தார்.
பக்தி நிறைந்த வாழ்க்கை நடத்திய பேனி, தன் 40-வது வயதிற்குப் பின்னரே பாடல்கள் எழுத ஆரம்பித்தார். வாரத்திற்கு 3 பாடல்களாக மொத்தம் 8000 - க்கும் மேற்பட்ட நற்செய்திப் பாடல்களை எழுதினார். ஒவ்வொரு பாடலையும் எழுதுமுன், முழங்காலில் நின்று, தெய்வீக வழிநடத்துதலை வேண்டி ஜெபிப்பது அவரது வழக்கம். அநேக போதகர்கள் தங்கள் செய்திகளின் தலைப்பைக் கொடுத்து, அதற்கு ஏற்ற பாடலை எழுதுமாறு கேட்பார்கள். சில சமயங்களில் இப்படிப்பட்ட இசையாசிரியர்கள் முதலில் ராகத்தை அமைத்து, பாடலை எழுதவும் கேட்பதுண்டு.
பேனி தனது 95-வது வயது வரை வாழ்ந்தார். அவர் இயற்றிய பாடல்கள் அனைத்திலும், இப்பாடல் சிறந்ததாகக் கருதப்பட்டு உலகெங்கும் இன்றும் பாடப்படுகிறது.
2. அன்பு பாராட்டி காப்பவராம்;
எந்தனைத் தாங்கி பூரணமாய்,
இன்பமும் நித்தம் ஊட்டுகிறார்;
இன்னும் நீங்காமல் பாதுகாப்பார்.
- இயேசுவைப் பாடி
3. மெய்ச் சமாதானம் ரம்மியமும்,
தூய தேவாவி வல்லமையும்,
புண்ணிய நாதர் தந்துவிட்டார்;
விண்ணிலும் சேர்ந்து வாழச் செய்வார்.
- இயேசுவைப் பாடி
"இந்த ராகம் என்ன கூறுகிறது?"
"ஏன், 'இயேசு என்னுடையவர்', என்ற நல் உறுதியை எடுத்துரைக்கிறது!"
இசையை மீட்டிய தன் சிநேகிதியின் கேள்விக்கு தயக்கமின்றிப் பதிலுரைத்த பார்வையற்ற பாடலாசிரியை பேனி கிறாஸ்பி, தொடர்ந்து அப்பாடலையும் இசைக் கேற்றபடி துரிதமாக எழுத ஆரம்பித்தார்!
எட்டு வயதில் தனது முதல் கவிதையை எழுதிய பேனியின் உள்ளத்திலிருந்து, பாடல்கள் வெள்ளம் போல ஊற்றெடுத்து வந்து கொண்டேயிருந்தன. கடந்த ஒரு நூற்றாண்டு காலமாக, நற்செய்திப்பணி ஊக்க ஆராதனைகள் அனைத்திலும், விசுவாசிகள் விரும்பிப் பாடும் பாடல்கள் இவரது பாடல்களே. அவற்றிலும் இப்பாடல் மிக அருமையானது; பிரபலமானது; நம்பிக்கையின் நங்கூரமாக அமைந்துள்ளது.
திருமதி ஜோசப் நாப் ஒரு ஆயுள் காப்பீட்டு நிறுவன ஸ்தாபகரின் மனைவியாவார். இவர் இசை வல்லுனர்; சிறந்த பாடலாசிரியையும் கூட; ஐநூற்றுக்கும் மேற்பட்ட நற்செய்திப்பாடல்களை இயற்றியவர்; இப்பாடலின் ராகத்தை அமைத்த இவர், தமது சினேகிதியாகிய பேனியிடம் வாசித்துக் காண்பித்த மாத்திரத்தில், பேனி இப்பாடலை மின்னல் வேகத்தில் இயற்றிக் கொடுத்தார்.
95 ஆண்டுகள் இவ்வுலகில் வாழ்ந்து, ஆண்டவரின் திருப்பாடல் ஊழியத்தை வாஞ்சையோடு செய்து முடித்த பேனி, 12.2.1915 அன்று மரித்தார். கனெக்டிகட்டிலுள்ள பிரிட்ஜ் போர்டில் அவரை அடக்கம் செய்தார்கள். பார்வையற்றவராக வாழ்ந்தாலும், ஆண்டவர் தனக்குத் தந்த தாலந்துகள் அனைத்தையும் முழுமையாக அவருடைய நாம மகிமைக்கென அர்ப்பணித்து உபயோகித்தார்.
எனவே, பேனியின் கல்லறையில், மரியாளைப் பாராட்டி ஆண்டவர் கூறிய, கீழ்க்கண்ட வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது.
"இவள் தன்னால் இயன்றதைச் செய்தாள்" - மாற்கு 14:8
பேனி எழுதிய பாடல்களில், "போற்றும் போற்றும் புண்ணிய நாதரைப் போற்றும்", "இயேசுவே கல்வாரியில் என்னை வைத்துக்கொள்ளும்", "இயேசுவின் கைகள் காக்க", போன்ற பாடல்கள் இன்றும் உலகெங்கும் பிரபலமாக உபயோகத்தில் உள்ளன.
நவயுக ஞாயிறுபள்ளிகளின் தந்தை என அழைக்கப்படும் ராபர்ட் ரேய்க்ஸின் ஊழியங்கள் மூலம், 18ம் நூற்றாண்டில், சிறுவர் சுவிசேஷ நற்பணியின் முக்கியத்துவத்தை திருச்சபை உணர்ந்தது. இச்சிறுபிள்ளைகளின் ஊழியத்தை, பாடல்களின் மூலமே சிறப்பாகச் செய்ய முடியும் என்பதையும், திருச்சபை நன்கு கண்டு கொண்டது.
இத்தேவையைச் சந்திக்க, 19-ம் நூற்றாண்டின் நற்செய்தி இசை வல்லுனர்களான சாங்கி, பேனி கிராஸ்பி, மற்றும் பிலிப் ட. பிளிஸ் ஆகியோர் பல பாடல்களை சிறுவர்களுக்கென்றே இயற்றினார்கள். வேத போதனைகளை சிறுபிள்ளைகள் கற்றுக்கொள்ள இப்பாடல்கள் பெரிதும் உதவின. "இப்பாடலாசிரியர்களில், குறிப்பாக, நற்செய்தியின் அடிப்படைச் சத்தியங்களை அழகாகப் பாடக்கூடிய வகையில் பாடலமைப்பதில் சிறந்த தாலந்து படைத்தவர், பிளிஸ்ûஸப்போல் வேறு எவருமில்லை", என அவரது இசைத்துறை நண்பர் ஜார்ஜ் இ. ஸ்டெப்பின்ஸ் கூறியிருக்கிறார்.
ஒருமுறை, பிளிஸ் ஒரு கூட்டத்தில், "நான் இயேசுவை எவ்வளவாய் நேசிக்கிறேன்", என்ற பல்லவியை மீண்டும் மீண்டும் பாடக் கேட்டுக்கொண்டேயிருந்தார். அப்பொழுது அவர் உள்ளத்தில் ஒரு கேள்வி எழுந்தது. "என் ஆண்டவரின் நித்திய அன்பைப் புகழ்ந்து பாடாமல், அவரிடம் நான் வைத்திருக்கும் சாதாரண அன்பை மீண்டும் மீண்டும் பெரிதாகப் பாடுவதேன்"? என்பதே. இந்தக் கேள்வியின் அடிப்படையில் தான், இப்பாடல் அவர் உள்ளத்தில் உருவானது.
இந்த அழகான பாடல் எழுதப்பட்டவுடனே, சீக்கிரத்தில், பல நாடுகளிலும் பிள்ளைகள் விரும்பிப் பாடும் பாடலென சிறப்புப் பெற்றது. சிறுவர் ஊழியத்தில் வாஞ்சை மிக்க பிளிஸ், அனைத்து ஞாயிறு பள்ளிகளின் உபயோகத்திற்கென்றே, 1871 - ம் ஆண்டு "ஞாயிறு பள்ளிகளின் அலங்காரம்", என்ற தலைப்பில் ஒரு சிறுவர் பாடல் புத்தகத்தை வெளியிட்டார். இப்புத்தகத்தில் இந்தப் பாடல் சேர்க்கப்பட்டது. இப்பாடல் இன்றும் சிறுவர் விரும்பிப் பாடும் பாடலாக விளங்குகிறது.
எங்கள் இணைத்தளத்தில் உள்ள கட்டுரைகள் மற்றும் புத்தகங்களைப் வாசகார்களின் வசதிக்காக, BSI இந்திய வேதாகம சங்கத்தாரால் வெளியிடப்பட்ட O.V. தமிழ் வேதாகமத்தின் வசனங்களை பயன்படுத்தியுள்ளோம்.
© 2025. தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்.