பெரிய வெள்ளிக் கிழமை மும்மணி ஆராதனை!
ஆலயம் நிரம்பி வழிகின்றது. சிலுவைக் காட்சியின் அடிப்படையில் செய்திகள் தொடர்ந்து கொடுக்கப்படுகின்றன.
"என்ன? கிறிஸ்தவர்கள் விக்கிரகத்திற்குப் பதிலாக சிலுவையை வணங்குகிறார்களோ?"
தப்புக் கணக்குப் போடவேண்டாம்! சிலுவைக் காட்சியின் மையக் கதாநாயகனான, தியாகச் செம்மல் இறைமகன் இயேசுவையே தியானம் செய்கிறோம். ஆம், இறைவனின் தியாக அன்பை அறிய, சிலுவைத்தியானம் அவசியமே. இதன் அருமையை அறிந்த பவுல், "ரோமர்களும் மற்றவர்களும் கீழ்த்தரமாக மதித்த இந்த ஈனச் சிலுவையைக் குறித்தே மேன்மை பாராட்டுவேன்", என்று வெற்றிப் பெருமிதம் கொள்ளுகிறான்.
எனவே, 20-ம் நூற்றாண்டின் மிகச்சிறந்த பாடலாகிய இப்பாடலும், சிலுவையின் பின்ணணியில் இருப்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. பாடுகள் நிறைந்த தன் வாழ்க்கையின் பிரச்சனைகளின் மத்தியில், ஆறுதலைத் தேடி, சிலுவைத்தியானத்தை மேற்கொண்ட, ஒரு தேவ மனிதனின் உள்ளத்தில் எழுந்ததே இப்பாடலாகும்.
இப்பாடலை எழுதிய ஜார்ஜ் பென்னார்டு 1873 - ம் ஆண்டு ஓகியோவிலுள்ள யங்ஸ்டவுனில் பிறந்தார். பின்னர் அயோவாவிலுள்ள லூக்காஸ் என்ற ஊரில் சிறுவனாக இருக்கும்போதே, இயேசு கிறிஸ்துவைத் தன் சொந்த ரட்சகராக ஏற்றுக் கொண்டார். பதினாறு வயதாகுமுன்பே தந்தையை இழந்தார். உடனே இரட்சண்ய சேனையில் சேர்ந்தார்.
பென்னார்டு மெதடிஸ்ட் சபை போதகராக சிறப்பாக ஊழியம் செய்தார். பின்னர் மிச்சிகன், நியூயார்க் மாநிலங்களில் உயிர் மீட்சிப்பணியில் ஈடுபட்டார். மீண்டும் மிச்சிகனுக்கு வந்த அவர், கடினமான சூழ்நிலையில் சிக்கித் தவித்தார். அந்நாட்களில் கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளைப் பற்றி, பவுல் எழுதிய வேத வசனங்களை தியானித்தார். சிலுவையைப் பற்றிய உபதேசம், நற்செய்தியின் மையக் கருத்தாக இருப்பதை பென்னார்டு உணர்ந்தார்.
இச்சிலுவைத் தியானங்களின் போது, 1913-ம் ஆண்டு ஒரு நாள் இப்பாடலை எழுத ஆரம்பித்தார். அதை எழுதியவுடன், தன் சொந்த வாழ்க்கைப் பிரச்சனைகளைச் சந்திக்கவே, தேவன் இப்பாடலைக் கொடுத்ததாக எண்ணினார். பின்னர் 7.6.1913 அன்று நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் இப்பாடல் அறிமுகம் செய்யப்பட்டது. அதன்பின் சிக்காகோ நற்செய்திக் கல்லூரியில் நடைபெற்ற கூட்டங்களில் பாடப்பட்டு பிரபலமானது.
இப்பாடலின் ராகத்தையும் பென்னார்டே அமைத்தார். உலகப்பிரசித்தி பெற்ற இப்பாடலை எழுதிய பென்னார்டு, 85-ம் வயதில், 9.10.1958 அன்று, தனது இவ்வுலக வாழ்வின் சிலுவையை, பரலோகத்தின் பொற்கிரீடமாக மாற்றிக் கொண்டார். எனவே, சிலுவைத் தியானம் நமது ஆவிக்குரிய வாழ்க்கைக்கு அத்தியாவசியமானது, என்பதை இப்பாடலின் மூலம் உணர்ந்து கொள்வோமா?
21.5.1889 அன்று இங்கிலாந்திலுள்ள ஜான்ஸ்டன் பட்டணம் மிகுந்த வெள்ளப் பெருக்கினால் சூழப்பட்டது. அங்கு ஒரு வண்டி சுழல் நீரில் சிக்கி, தண்ணீரில் மூழ்க ஆரம்பித்தது அவ்வண்டியில் கவிழ்ந்து கிடந்த ஒரு பெட்டிக்குள் ஒரு இளம் பெண் சிக்கிக் கொண்டிருந்தாள். அவள் தூர கிழக்கு நாடுகளுக்கு மிஷனரியாகச் செல்லத் தன்னை அர்ப்பணித்து, அப்பயணத்தை மேற்கொண்டவள். கரையிலிருந்து உதவி எதுவும் செய்ய முடியாமல் தவித்த மக்களை அமைதியாகப் பார்த்தாள். ஒரு ஜெபம் பண்ணிவிட்டு, இப்பாடலை எந்தவித கலக்கமுமின்றிப் பாட ஆரம்பித்தாள். கரையிலிருந்து அனைவரும் கண்ணீர் மல்க, அவளோடு பாடலில் இணைந்தனர். பாடிக் கொண்டிருக்கும் போதே அவள் ஆண்டவரின் சந்நிதியைச் சென்றடைந்தாள்.
1912 - ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பதிநான்காம் நாள்! இங்கிலாந்து தேசமெங்கும் ஒரே கோலாகலம்! ஊரெங்கும், புதிதாக பயணத்தைத் துவக்கப் போகும் அந்த அதிநவீன சொகுசுக் கப்பலைப் பற்றிய பேச்சுத்தான்!.
டைட்டானிக் என்ற அந்த உலகிலேயே மிகப் பெரியதும், பிரமாண்டமுமான சொகுசுக்கப்பல், இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகளைச் சுமந்து கொண்டு, இங்கிலாந்திலுள்ள சௌதாம்ப்டன் துறை முகத்திலிருந்து, அமெரிக்கா செல்லத் தயாராகி, கெம்பீரமாக நின்றது. அக்கப்பலை வடிவமைத்த பொறியியல் வல்லுனர்கள், "இக்கப்பல் கடலில் மூழ்குவது சாத்தியமேயில்லை." என்று பெருமையுடன் கூறினர்.
ஆனால் நடந்தது என்ன?
தன் முதற் பயணத்திலேயே அட்லாண்டிக் சமுத்திரத்தின் பனிக்கட்டிகளில் அக்கப்பல் மோதி, மூழ்க ஆரம்பித்தது.
உயிர்காக்கும் சாதனங்கள் போதுமான அளவு இல்லை. எனவே, திகிலோடு மரணத்தை எதிர் நோக்கிய 2000 - க்கும் மேற்பட்ட பயணிகளின் மன அமைதியைக் காக்க, கப்பலின் இசைக்குழு இப்பாடலை இசைக்க ஆரம்பித்தது. அனைவரும் உள்ளத்தின் ஆழத்திலிருந்து, உணர்ச்சி பொங்க, இப்பாடலைப் பாடினார்கள். மூன்று மணி நேரத்திற்குள் அதில் 1500 பேர், உறைய வைக்கும் குளிர்ந்த சமுத்திர நீரில் மூழ்கி மரித்தனர்.
அமெரிக்க ஜனாதிபதி வில்லியம் மெக்கின்லே இதைத் தனக்கு மிகவும் விருப்பமான பாடலென்று கூறிவந்தார். 1901 - ம் ஆண்டு அவர் சுட்டுக் கொல்லப்பட்டபோது, உயிர் பிரியுமுன் அவர் முணுமுணுத்த வார்த்தைகள் இப்பாடலே. பின்னர் அவரது அடக்க ஆராதனையிலும், ஞாபகார்த்த ஆராதனையிலும், அமெரிக்கா முழுவதும் இப்பாடல் பாடப்பட்டது. இவ்வாறு, மிகவும் துயரமான தருணங்களில், பலதரப்பட்ட மக்களும் ஆறுதல் பெறப் பாடிய, புகழ் பெற்ற இப்பாடலை எழுதியவர், சாரா பிளவர் ஆடம்ஸ் என்ற ஒரு பெண்.
சாரா இங்கிலாந்திலுள்ள ஹார்லோவில் 22. 2. 1805 - அன்று பிறந்தாள். அவளது தந்தை பெஞ்சமின் "கேம்பிரிட்ஜ் இன்டெலிஜென்சர்", என்ற வாராந்திர புரட்சிப் பத்திரிக்கையின் நிருபர். எனவே, தந்தையின் எழுத்துத் திறமையை மகளும் பெற்றிருந்தாள்.
சாரா இளம் வயதிலேயே, அவள் பங்கு பெறும் திருச்சபையின் செய்தி மலரில், கட்டுரைகளும் கவிதைகளும் எழுதுவாள். பல தாலந்துகள் படைத்த சாரா ஒரு நல்ல அழகி. நடிப்பதிலும் திறமை மிக்கவள். 1834-ம் ஆண்டு ஜான் பிரிட்ஜஸ் ஆடம்ஸ் என்ற பிரபல பொறியியல் வல்லுனரைத் திருமணம் செய்து கொண்டாள். அவளுடைய பல்வேறு தாலந்துகளையும், விருப்பங்களையும் அறிந்த அவளது கணவர், அவளை மிகவும் உற்சாகப்படுத்தினார். 1837-ல் லண்டனில் உள்ள ரிச்சர்டு கலையரங்கத்தில் மாக்பெத் சீமாட்டியாக நடித்தாள். ஆயினும், அவளது உடல்நிலை பெலவீனமாயிருந்ததால், அவளால் அதில் தொடர்ந்து ஈடுபட முடியவில்லை. எனவே, நடிப்பதை விட்டுவிட்டு, எழுத்துப்பணியில் தனது கவனத்தைத் திருப்பினாள். சிறந்த எழுத்தாளராக மாறினாள்.
சாராவின் சகோதரி எலிசபெத் இசை அமைப்பதில் தாலந்து படைத்தவளாக விளங்கினாள். எனவே, திறமைவாய்ந்த இச்சகோதரிகளிடம், அவர்கள் ஆலயப் போதகர் மறைதிரு வில்லியம் ஜான்சன் பாக்ஸ் தன் திருச்சபைக்கு ஒரு புதிய பாடல் புத்தகம் தயாரிக்கும் பொறுப்பை ஒப்படைத்தார். சகோதரிகள் பழைய பாடல்களுடன், 13 புதிய பாடல்களையும், 62 புதிய ராகங்களையும் இப்புதிய பாடல் புத்தகத்தில் தங்களது காணிக்கையாகச் சேர்த்தனர்.
ஒருநாள் போதகர் பாக்ஸ் யாக்கோபின் பெத்தேல் அனுபவத்தைப் பற்றி ஒரு செய்தியைத் தயாரித்தார். அச்செய்தியின் நிறைவாக ஒரு பாடல் இருந்தால் நலமாக இருக்குமென இச்சகோதரிகளிடம் கூறினார். சாரா பாடலை எழுத, எலிசபெத் அதற்கு ராகம் அமைத்தாள். இவ்வாறு, மற்றுமொரு புதிய பாடல், அவர்கள் தொகுத்த பாடல் புத்தகத்தில் இடம் பெற்றது. இப்புத்தகம்
1841 - ம் ஆண்டு வெளியிடப்பட்டது.
அமெரிக்காவில் 1844 - ம் ஆண்டு இப்பாடல் அறிமுகமானது. ஆயினும் பிரபலமாகவில்லை.
12 ஆண்டுகளுக்குப்பின் "அமெரிக்க ஆலய இசைத் தந்தை", என்று அழைக்கப்படும் லோவல் மேசன், "பெத்தனி" என்ற அருமையான ராகத்தை இப்பாடலுக்கு அமைத்தார். இந்த ராகம் இப்பாடலை உலகப்புகழ் பெற்றதாக மாற்றிவிட்டது. இந்த லோவல் மேசன் என்பவர், "என் அருள் நாதா", போன்ற பல பிரபல பாடல்களுக்கும் ராகம் அமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வுலக வாழ்க்கையில் வீசும் புயலில் நங்கூரமாக, வெற்றி அளிப்பவராக, ஆண்டவர் விளங்குகிறார் என்பதை, இப்பாடல் தெளிவாகக் காட்டுகிறது. எலிசபெத் 1846-ம் ஆண்டு எலும்புருக்கி நோயால் மரித்தாள். அவளது வியாதிப் படுக்கையில் உதவி செய்த சாராவும், இரண்டாண்டுகளுக்குள், தனது 43-வது வயதிலேயே மரித்தாள்.
பாடல்: எத்தனை நாவால் பாடுவேன்
ஆசிரியர்: சார்லெஸ் வெஸ்லி
"எனக்கு மட்டும் ஆயிரம் நாவுகள் இருந்தால், அத்தனை நாவுகளையும் கொண்டு என் இயேசுவைப் போற்றுவேன்!"
மொரோவியர் குழுத்தலைவர் பீட்டர் போலர் பிரசங்க மேடையில் இவ்வாறு உற்சாகமாய் முழங்கியதைக் கேட்டுக் கொண்டிருந்தார் சார்லெஸ் வெஸ்லி. தனது ஆல்டெர்கேட் இரட்சிப்பு அனுபவத்தின் 11-வது நினைவு நாளைக் கொண்டாட, வெஸ்லி எழுத நினைத்த பாடலின் தலைப்பாய் இவ்வாஞ்சை மாறியது.
எனவே, 1749-ல் 19 சரணங்களுடன் வெஸ்லி எழுதிய இப்பாடலுக்கு, அவர் கொடுத்த தலைப்பு "ரட்சிப்பின் அனுபவ நினைவு நாள் பாடல்" என்பதே. நன்றிப் பெருக்குடன் தன் சொந்த ரட்சிப்பின் அனுபவத்தைப் பற்றி பல சரணங்களை இதில் எழுதினார். இதைப் பார்த்த அவரது சகோதரர் ஜான் வெஸ்லி, இதில் பல சரணங்களை எடுத்துவிட்டு, இதை ஒரு 7 சரணப் பாடலாக மாற்றினார்.
இப்பாடல் ஆயிரம் மொழிகளில் ஆண்டவரைத் துதிக்க விரும்புவதாகவும் அர்த்தம் கொள்கிறது. இதனால் இப்பாடல் வேதாகம மொழிபெயர்ப்பில் ஈடுபட, பல மிஷனரிகளை உற்சாகப்படுத்தியிருக்கிறது. தற்போது வேதாகமம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
50 ஆண்டுகளுக்கு மேல், ஆண்டவருக்காக உற்சாகமாய் உண்மையோடு ஊழியம் செய்த சார்லெஸ், 29-3-1788 அன்று மரித்தார். அவர் மரணப்படுக்கையில் இருந்தபோது கூட, ஆண்டவரைத் துதித்து தன் கடைசிப் பாடலை அவரது மனைவியின் உதவியுடன் எழுதினார். இது, ஆண்டவர் மீது அவருக்கிருந்த அன்பையும், பாடல் எழுதுவதில் அவருக்குள் இருந்த தணியாத ஆவலையும் காட்டுகிறது.
இப்பாடலுக்கு கார்ல் G. கிளேசர், "அஸ்மோன்" என்ற ராகத்தை அமைத்தார்.
1881-ம் ஆண்டு ஒரு சுற்றுலாக்குழு வட அமெரிக்காவில் வாஷிங்டனிலிருந்து போட்டோமாக் நதியில் பயணம் செய்து கொண்டிருந்தது. அழகான இயற்கைக் காட்சிகளை ரசித்தவண்ணம், அக்குழுவிலிருந்த ஒருவர் இப்பாடலைப் பாட ஆரம்பித்தார். இரண்டு சரணங்களைப் பாடி முடிக்குமுன், அப்படகிலிருந்த, அவருக்கு அறிமுகமில்லாத ஒருவர், அவரிடம் வந்து, "மன்னிக்கவும்; கடந்த யுத்தத்தில் நீங்கள் பணிபுரிந்தீர்களா?" என்று கேட்டார். பாடியவர், "ஆம்; ஜெனரல் கிராண்ட் தலைமையில் பணிபுரிந்தேன்." என்றார்.
அப்போது அந்த மனிதர், "நான் தென்ராணுவத்தில் பணி செய்தேன். 18 ஆண்டுகளுக்கு முன், இதே மாதம், ஒரு நாள் இரவில், நல்ல நிலா வெளிச்சத்தில், உங்களுக்கு வெகு அருகில் மறைந்திருந்தேன். அன்று இரவு நீங்கள் காவல் பொறுப்பிலிருந்தீர்கள். நான் என் கையிலிருந்த துப்பாக்கியுடன் உங்களை நெருங்கினேன். நீங்கள் குறுக்கும் நெடுக்குமாய் நடந்தவாறு இப்பாடலைப் பாடிக் கொண்டிருந்தீர்கள். நான் என் துப்பாக்கியை எடுத்துக் குறிபார்த்தபோது, அச்சமயம் நீங்கள், 'ஏதுமற்ற ஏழையை (பாதுகாப்பற்ற என் தலையை) செட்டையாலே மூடுவீர்' என்ற வரியைப் பாடினீர்கள். அதைக் கேட்ட என்னால், உங்களைச் சுடமுடியவில்லை. உங்கள் முகாமைத் தாக்காமல் நாங்கள் விட்டுச் சென்றோம்" என்றார்.
இதைக் கேட்ட பாடகர், அவர் கையைக் குலுக்கி, "அந்த இரவை நான் நன்கு அறிவேன். இரவு காவல் வேலைக்குச் செல்லும்போது, நான் மிகவும் சோர்வுற்றிருந்தேன். அந்த இடம் மிகவும் அபாயகரமானது என அறிந்திருந்தேன். எனவே, உலாவிக்கொண்டிருந்த அவ்வேளையில், என் மனக்கண்முன் என் குடும்பமும், என் நண்பர்களும் தோன்றினார்கள். அத்துடன் இறைவனின் பாதுகாப்பையும் எண்ணினேன். உடனே இப்பாடலைப் பாடினேன். இப்போது உங்களை சந்திக்கும் வரை, என் ஜெபத்திற்கு ஆண்டவர் இவ்வாறு பதிலளித்தார் என்றே எனக்குத் தெரியாது." என்று கூறினார்.
உலகெங்கும் பிரபல்யமான இப்பாடலை எழுதியவர் சார்லெஸ் வெஸ்லி. இவர் மெதடிஸ்ட் திருச்சபையை ஸ்தாபித்த பிரபல பிரங்கியார் ஜான் வெஸ்லியின் சகோதரராவார். இவரது தந்தை சாமுவேல் வெஸ்லி எப்வொர்த்தின் திருச்சபைப் போதகராகப் பணியாற்றினார். சாமுவேல் வெஸ்லியும் அவர் மனைவி சூசன்னாளும் ஏழ்மையில் குடும்பத்தை நடத்தினாலும், தங்கள் பிள்ளைகள் நன்றாகப் பாடுவதற்கு பயிற்சி அளித்துவந்தார்கள். இப்படிப்பட்ட சங்கீத சூழலில் வளர்ந்ததால், சார்லெஸ் வெஸ்லி பெரியவனானபோது, 6500 - க்கும் அதிகமான பாடல்களை எழுத முடிந்தது.
சார்லெஸ் எழுதிய பாடல்கள் அனைத்திலும், இப்பாடல் முதன்மையானதாக சிறந்து விளங்குகிறது. டாக்டர் போடைன் இப்பாடலை, "ஆங்கில மொழியின் இதய கீதம்" என்று கூறுகிறார். இப்பாடல் எண்ணற்ற மக்களுக்கு ஆறுதலையும், ஆவியில் உற்சாகத்தையும் அளித்துள்ளது. மரணத் தறுவாயிலிருந்த பலர், இப்பாடலைப் பாடியபடியே, நிறைவான சமாதானத்துடன் இவ்வுலகைக் கடந்து சென்றனர். எளிமையான, முழுமையான, கருத்து நிறைந்த, உயிரூட்டும் பாடலாக இது விளங்குகிறது. எனினும், இப்பாடலை எழுதியவுடன், சார்லெஸ் தன் சகோதரன் ஜான் வெஸ்லியிடம் காட்டியபோது, அவர் "இப்பாடல் மிகவும் உணர்ச்சிவசப்பட வைக்கிறது" என்று கூறி நிராகரித்துவிட்டார். எனவே, சார்லெஸ் வெஸ்லி வாழ்ந்த நாட்களில் இப்பாடல் பிரபலமாகவில்லை.
ஜானும் சார்லெசும் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் படித்தனர். அந்நாட்களில், மாணவ சமுதாயம் ஆவிக்குரிய காரியங்களில் நாட்டம் காட்டவில்லையே என்று வருந்திய இச்சகோதரர்கள், "பரிசுத்தர் குழு" என்ற குழுவை ஆரம்பித்தனர். இக்குழுவின் அங்கத்தினர்கள் எல்லாக் காரியங்களையும் ஒழுங்கும் கிரமமுமாய் செய்வதைப் பார்த்த மற்ற மாணவர்கள், அவர்களை "மெதடிஸ்டுகள்" என்று கேலியாக அழைத்தனர்.
படிப்பை முடித்த சார்லெஸ், 1735-ல் இங்கிலாந்து திருச்சபையின் போதகராக நியமிக்கப்பட்டார். பின்னர் அமெரிக்காவின் ஜார்ஜியா குடியிருப்புகளில் வாழும் மக்களின் ஆவிக்குரிய மறுமலர்ச்சிக்கெனவும், அங்குள்ள இந்தியரிடையே நற்செய்திப் பணியாற்றவும், இங்கிலாந்து திருச்சபை ஜானையும் சார்லெûஸயும் அனுப்பி வைத்தது. அந்நாட்களில் இவர்கள் ஊழிய வாஞ்சை நிறைந்தவர்களாக இருந்தாலும், இயேசு கிறிஸ்துவைத் தங்கள் சொந்த ரட்சகராக ஏற்றுக் கொண்ட அனுபவம் இவர்களுக்கு இல்லை.
இந்நிலையில் அவர்கள் அட்லாண்டிக் மகா சமுத்திரத்தைக் கடந்து கொண்டிருந்த போது, அவர்களோடு பயணம் செய்த "ஜெர்மானிய மொரோவியர்கள்" என்ற குழுவின் மூலம் அவர்களுக்கு ஒரு அனுபவம் கிடைத்தது. உற்சாகமாக எப்போதும் பாடிக்கொண்டிருந்த அந்த விசுவாசிகளின் ஆவிக்குரிய வளர்ச்சி நிலையை, எதிர்பாராதவிதமாக அவர்கள் சந்தித்த கடும்புயலின் மூலம் அறிந்தனர்.
கப்பலில் ஆராதனையை ஆரம்பித்து சங்கீதங்களைப் பாடும்போது கடல் கொந்தளித்து பாய்மரத்தை உடைத்தது. தண்ணீர் உள்ளே வர ஆரம்பித்தது. உடனே, ஆராதனையிலிருந்த ஆங்கிலேயர் அனைவரும், உரத்த சத்தமாய் அலறி ஓலமிட்டனர். ஆனால், மொரோவியர்கள் புயலின் கொடூரத்தைப் பார்த்தும் கூட, சங்கீதம் பாடுவதை நிறுத்தாமல் தொடர்ந்தனர். புயல் ஓய்ந்தபின், வெஸ்லி சகோதரர்கள் அவர்களிடம், "உங்களுக்குப் பயமாக இருக்கவில்லையா?" என்று கேட்டனர். அதற்கு அவர்கள், "இல்லை." என்று பதில் கூறி, ஆண்டவருக்கு நன்றி செலுத்தினார்கள்.
வெஸ்லி சகோதரரின் அமெரிக்க ஊழியம் வெற்றிகரமாக நடைபெறவில்லை. எனவே, சோர்வுற்ற அவர்கள், சீக்கிரமே இங்கிலாந்து திரும்பினார்கள். அப்பொழுது, மீண்டுமாக, பக்தி வைராக்கியம் மிகுந்த மொரோவியர் குழுவினரை, லண்டனிலுள்ள ஆல்டெர்ஸ்கேட்டில் சந்திக்கும் வாய்ப்புப் பெற்றனர்.
1738-ம் ஆண்டு மே மாதம் 21-ம் தேதி, இச்சகோதரர்கள் ரட்சிப்பின் அனுபவத்தைப் பெற்று, புத்துணர்ச்சி பெற்றனர். தேவ ஆவியின் வல்லமையால், தினமும் 15 முதல் 18 மணி நேரத்தை ஆண்டவருடைய ஊழியத்திற்கென செலவிட்டனர்.
இங்கிலாந்தில் மட்டும், 1739 முதல் 1756-க்குள் சுமார் 2,50,000 மைல்கள் குதிரைகளில் பயணம் செய்து,
40,000-க்கும் மேற்பட்ட நற்செய்திக்கூட்டங்களை நடத்தினார்கள். எதிர்ப்புகள் பெருகின சூழ்நிலைகளிலும், சோர்ந்து போகாமல் தொடர்ந்து ஊழியம் செய்தனர். இடைவெளியின்றி அயராது உழைத்த இந்நாட்களில், சார்லெஸ் இவ்வளவு பாடல்களை எழுதினார் என்பது அவரின் ஊழிய தாகத்தைக் காட்டுகிறது. பாடல் எழுதுவதில் அவருக்கிருந்த வாஞ்சையை அவர் கூறிய, பின்வரும் சம்பவத்திலிருந்து நாம் அறியலாம்:
ஒரு நாள் சார்லெஸ் குதிரையிலிருந்து தூக்கி எறியப்பட்டார். தலை, கை கால்களில் அடிபட்ட அவர், அதிர்ச்சியால் அந்த நாள் முழுவதும் அசையாமல் படுக்கையில் இருந்தார். மறுநாள் காலையில் விழித்த அவர், "ஒரு பாடலும் எழுதாமல் ஒரு நாளைக் கழித்து விட்டேனே!" என்று வருந்தினாராம்.
இப்பாடல் எழுதப்பட்ட சூழ்நிலையைப் பற்றிப் பல கதைகள் உண்டு. உணர்ச்சி ததும்பும் இப்பாடலுக்கேற்றதாக, ஒரு புறாவோ, கழுகோ புயலிருந்து தப்ப அடைக்கலம் தேடி, சார்லெஸ் தங்கியிருந்த கப்பலறையில், அவர் மார்பில் தஞ்சம் புகுந்தது என்று ஒரு கதை கூறப்படுகிறது. வேறு சிலர், சார்லெஸ் எதிர்ப்பாளர்களால் தாக்கப்பட்டு, குணமடைய இளைப்பாறிய நாட்களில் அவர் எழுதியதாகக் கருதுகின்றனர். மற்றும் சிலர் ஆல்டெர்ஸ்கேட் ரட்சிப்பின் அனுபவ நாட்களில் உள்ளமுருக இப்பாடலை எழுதினார் என்று எண்ணுகிறார்கள்.
எனினும், தன் வாழ்வின் ஆரம்ப கால அனுபவங்களின் அடிப்படையில், நெகிழ்ந்த உள்ளத்தின் உணர்ச்சிக் குவியலாக இப்பாடலை சார்லெஸ் எழுதினார். 1740-ம் ஆண்டு வெளிவந்த, "பாடல்களும் புனித கவிதைகளும்" என்ற புத்தகத்தில் இப்பாடல் இடம் பெற்றது. இது தொடர்பான அவரது ஆரம்ப கால அனுபவங்களில் முக்கியமான மூன்றை நாம் பார்ப்போம்:-
முதலாவதாக, 1736-ம் ஆண்டு அமெரிக்காவில் கவர்னர் ஓகில்தோர்ப்புக்கு செயலாளராக இருந்த சார்லெஸ், அவரோடு ஒத்துப்போக முடியாத காரணத்தால் தன் பதவியை இழந்தார். உடலிலும் உள்ளத்திலும் சோர்வுற்று, ஜார்ஜியாவிலிருந்து இங்கிலாந்து திரும்பும் வழியில், அவர் பயணம் செய்த கப்பல் கடும்புயலில் சிக்கியது. உயிர் தப்புவோம் என்ற நம்பிக்கையை இழந்து சார்லெஸ் தவித்துப்போனார். அவர் உள்ளத்தில் ஆழமாகப் பதிந்த இச்சம்பவத்தின் அடிப்படையில், இப்பாடலின் முதலிரண்டு சரணங்கள் அமைந்துள்ளன.
இரண்டாவதாக, அவர் 21-5-1738 அன்று ஆல்டெர்ஸ்கேட்டில் பெற்ற ஆவிக்குரிய புத்தெழுச்சி அனுபவம், சார்லெசின் வாழ்க்கையில் ஒரு திருப்பு முனையாக அமைந்தது. அந்நாட்களில் அவர் அடிக்கடி சுகவீனப்பட்டுக் கொண்டிருந்தார். குறிப்பாக, அவர் இரட்சிப்பின் அனுபவம் பெற்ற நாளன்று, தன் விடுதி அறையில் மிகுந்த பெலவீனத்துடன் படுத்திருந்தார். அப்போது ஒரு தரிசனத்தின் மூலம், ஆண்டவர் அவரைத் தேற்றி, அற்புத சுகமளித்தார். அந்நேரமே அவர் புது பெலனடைந்தார். இப்பாடலின் மூன்றாம், நான்காம் சரணங்கள் இதைக் குறிப்பிடுகின்றன.
கடைசியாக, நியூகேட் சிறைக்கைதிகள் மத்தியில் அவர் ஊழியம் செய்தபோது அக்கைதிகளின் அவல நிலை சார்லெஸின் உள்ளத்தை வாட்டியது. குறிப்பாக 1738-ம் ஆண்டு ஜுலை மாதம், அங்கிருந்த 10 கைதிகள் ஆண்டவரை ஏற்றுக்கொண்டு, இரட்சிப்பின் அனுபவம் பெற்றவர்களாக, டைபர்ன் குன்றில் தூக்கிலிடப்பட்டபோது, அவர் உள்ளம் நெகிழ்ந்தது.
இப்படிப்பட்ட ஆழ்ந்த அனுபவங்களே, இப்பாடலை எழுத சார்லெûஸத் தூண்டின. நித்திய தேவனை அண்டி வாழ வேண்டுமென்ற மனிதனின் உள்ளக் கிளர்ச்சியை, இப்பாடல் தெளிவாகக் காட்டுகிறது. சிமியோன் B. மார்ஸ் என்பவர் அமைத்த, "மார்டின்" என்ற ராகத்தை தாமஸ் ஹேஸ்டிங்ஸ் என்பவர் இப்பாடலுடன் இணைத்தார்.
"சகோதரி, நீங்கள் இன்னும் சில நாட்கள் மட்டுமே உயிரோடு இருக்க முடியும்."
என 42 வயதே நிரம்பிய ஹேவர்கலைப் பார்த்து வருத்தத்துடன் கூறினார் அவளது வைத்தியர்.
அவளோ, பதிலுக்கு மகிழ்ச்சியுடன், "நான் உண்மையாகவே சீக்கிரம் இவ்வுலகை விட்டுப் போகப் போகிறேன் என்பதே எனக்கு மிகவும் விருப்பமான செய்தி!" என்று கூறினாள்.
படுத்த படுக்கையாகப் பல ஆண்டுகள் இருந்தபோதும், அவள் விரும்பிய, "தேவ குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் ரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மை சுத்திகரிக்கும்" என்ற வேத வசன அட்டையைத் தன் படுக்கைக்கருகே, எளிதில் பார்க்கும் வண்ணம் வைத்திருந்தாள். மரணம் சந்தித்தபோது, "பரலோக வாசலருகே நிற்பது எத்தனை அருமையாக இருக்கிறது!" என்று மகிழ்ச்சியுடன் கூறியபடி மரித்தாள்.
பிரான்சிஸ் ரிட்லி ஹேவர்கல் இங்கிலாந்திலுள்ள அஸ்ட்லி என்ற இடத்தில் 14-12-1836 அன்று பிறந்தார். ஐம்பதிற்கும் மேற்பட்ட பாடல்களை எழுதிய ஹேவர்கல் "அர்ப்பணப் பாடகி" என அழைக்கப்படுகிறார். ஏனெனில், அவர் எழுதிய பாடல்கள் அனைத்தும், விசுவாசம், அர்ப்பணம், ஊழியம் என்ற கருத்துக்களை மையமாகக் கொண்டு எழுதப்பட்டவை. தன் வாழ்க்கையிலும் ஹேவர்கல் இக்கருத்துக்களை நடைமுறையில் வாழ்ந்து காட்டினார்.
ஹேவர்கலின் தந்தை வில்லியம் ஒரு எளிமையான ஆங்கிலிக்கன் போதகர். அவர் ஒருமுறை வண்டியில் சென்றபோது நிகழ்ந்த விபத்தில், அடிபட்டு ஊனமானார். சுமார் 20 ஆண்டுகள், இங்கிலாந்தின் ஆலய இசை வளர்ச்சிக்கென, வில்லியம் தன் தாலந்துகள் அனைத்தையும் செலவிட்டார். தந்தை வழி வந்த மகளும் சிறுவயதிலிருந்தே தாலந்து மிக்கவளாக விளங்கினாள்.
ஹேவர்கல் மனப்பாடம் செய்யவும் ஆரம்பித்தாள். தனது ஏழாவது வயதிலேயே தன் கருத்துக்களைக் கவிதையாக எழுதினாள். பிரெஞ்சு, ஜெர்மன், இத்தாலிய மொழிகளைக் கற்று, பின்னர் கிரேக்க, எபிரேய மொழிகளிலும் தேர்ச்சி பெற்றாள். 43-வது வயதிலேயே மரித்த ஹேவர்கல், தனது சொற்ப வாழ்நாட்களிலேயும், தொடர்ந்து பெலவீனமானவளாகவே இருந்தாள். எனினும், மனந்தளராது, படிப்பதிலும், எழுதுவதிலும், இசை அமைப்பதிலும் மிகுந்த உற்சாகத்துடன் ஈடுபட்டாள்.
வாலிப மாணவியாக சுவிஸ் ஆல்ப்ஸ் மலைமீது கூட ஏறிய ஹேவர்கல், பின்னர் நோயால் தாக்கப்பட்டு, தன் வாழ்க்கையின் கடைசி 21-ஆண்டுகளை சக்கர நாற்காலியில் கழித்தாள். சுகவீனத்தின் மத்தியிலும், இங்கிலாந்திலும், ஜெர்மனியிலும், பின்னர் சுய முயற்சியாலும், தொடர்ந்து படித்து முன்னேறினாள். வாலிபப் பெண்ணாக இருக்கும்போதே முழு புதிய ஏற்பாட்டையும், சங்கீதங்கள் அனைத்தையும், ஏசாயாவையும் மனப்பாடம் செய்து முடித்தாள்.
சிறுவயதில் ஹேவர்கல் மரணத்தைப்பற்றிப் பயம் கொண்டவளாக, ஆண்டவர் தன்னை ஏற்றுக்கொள்ள மறுத்துவிடுவாரோ, என்ற ஐயம் கொண்டவளாக இருந்தாள். ஆனால், தன் வாலிப வயதில் ரட்சிப்பின் அனுபவம் பெற்றபின், சந்தோஷம் நிறைந்தவளாக, கனிகொடுக்கும் வாழ்க்கையை நடத்தினாள். இசையில் தாலந்து படைத்த ஹேவர்கல், இனிமையான குரல் வளம் உடையவள். நன்றாகப் பாடும் திறமையும் மிக்கவள். எனவே, இசை நிகழ்ச்சிகளில் சிறப்புப் பாடகியாகவும், அருமையாக பியானோ இசைப்பவளாகவும் விளங்கினாள்.
தன் வாழ்க்கையை ஆண்டவருக்கென்று முழுவதுமாக அர்ப்பணம் செய்த ஹேவர்கல், 1873-ம் ஆண்டு முதல், இயேசுவைப் புகழ்ந்து பாடுவதற்கு மட்டுமே, தன் தாலந்துகள் அனைத்தையும் உபயோகித்தாள். 1874-ம் ஆண்டு லண்டனிலுள்ள ஒரு நண்பரின் வீட்டிற்குச் சென்று 5 நாட்கள் தங்கினாள், அதிக நாட்களாக அநேகர் ஜெபித்தும், அவ்வீட்டிலிருந்த 10 பேரில் சிலர், ஆண்டவரை சொந்த ரட்சகராக ஏற்றுக் கொள்ளாமலிருந்தனர். ஆண்டவரை ஏற்றுக் கொண்ட மற்றவரும் மகிழ்ச்சியின்றி, சோர்வுடன் இருந்தனர்.
"ஆண்டவரே, இவ்வீட்டிலுள்ள அனைவரையும் எனக்குத் தாரும்," என்று ஹேவர்கல் ஜெபித்தாள். அவளது வேண்டுதலின்படியே, அவள் தங்கியிருந்த அந்த 5 நாட்களுக்குள், ஆண்டவர் அந்த 10 நபர்களின் உள்ளங்களில் கிரியை செய்து, இரட்சிப்பின் புது ஆசீர்வாத அனுபவத்திற்குள் நடத்தினார். ஹேவர்கல் அங்கு தங்கியிருந்த கடைசி நாள் இரவில், அவள் படுக்கைக்குச் சென்றபின்தான், இன்னும் குணப்படாமலிருந்த கடைசி இரு வாலிபப் பெண்களையும் ஆண்டவர் சந்தித்துப் பேரானந்தத்தால் நிரப்பினார்.
இதைப் பார்த்த ஹேவர்கலுக்கு, மகிழ்ச்சியின் மிகுதியால் அன்றிரவு தூக்கமே வரவில்லை. தன் விண்ணப்பத்தைக் கேட்டுப் பதிலளித்த ஆண்டவருக்கு, தன்னை மீண்டும் ஒருமுறை அர்ப்பணித்து ஜெபித்துக் கொண்டிருந்தாள். அப்போது, "என் அனைத்தையும் தத்தம் செய்தேன் நித்தமாய்" என்ற வார்த்தைகள் ஒவ்வொன்றாக அவள் உள்ளத்தில் வந்து சேர்ந்து, இப்பாடலுக்கு மையக்கருத்தை அளித்தன.
இப்பாடலை எழுதிய ஹேவர்கல், இதிலுள்ள ஜெபமாகிய, "எந்தன் ஆஸ்தி தேவரீர் முற்றும் அங்கிகரிப்பீர்." என்பதைத் தன் வாழ்க்கையில் செயல்படுத்தினாள். தன்னிடமிருந்த விலையுர்ந்த ஆபரணங்கள் அனைத்தையும், திருச்சபையின் ஊழியத்திற்குக் கொடுத்துவிட்டாள்.
சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த சிசர் மலன் என்ற போதகர் அமைத்த "ஹென்டன்" என்ற ராகம் இப்பாடலுக்குப் பொருத்தமாக அமைந்தது. இப்போதகர் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களையும், ராகங்களையும் உருவாக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. "அருள் நாதா, நம்பி வந்தேன்," என்ற பிரபல பாடலும் ஹேவர்கல் எழுதிய பாடல்களில் ஒன்றாகும்.
எங்கள் இணைத்தளத்தில் உள்ள கட்டுரைகள் மற்றும் புத்தகங்களைப் வாசகார்களின் வசதிக்காக, BSI இந்திய வேதாகம சங்கத்தாரால் வெளியிடப்பட்ட O.V. தமிழ் வேதாகமத்தின் வசனங்களை பயன்படுத்தியுள்ளோம்.
© 2025. தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்.