அத்தேனே பட்டணத்தில் பவுல் அவர்களுக்காகக் காத்துக்கொண்டிருக்கையில், அந்தப் பட்டணம் விக்கிரகங்களால் நிறைந்திருக்கிறதைக் கண்டு, தன் ஆவியில் மிகுந்த வைராக்கியமடைந்து, ஜெபஆலயத்தில் யூதரோடும், பக்தியுள்ளவர்களோடும், சந்தைவெளியில் எதிர்ப்பட்டவர்களோடும் தினந்தோறும் சம்பாஷணைபண்ணினான். (அப் 17:16,17)
ஒருவேளை இந்தச் செய்தியைப் படித்துக்கொண்டிருக்கும் நீங்கள் ஒரு நகரத்தில் வசிக்கலாம்; ஆகவே பசுமையான புல்வெளிகளைவிட, செங்கற்களையும் கட்டுமானப் பொருட்களையும் அதிகம் பார்க்கலாம். அல்லது நீங்கள் ஆழமாக நேசிக்கும் உங்கள் உறவினரோ நண்பரோ ஒரு பட்டணத்தில் வசிக்கலாம். இவற்றில் உங்கள் நிலை எதுவாக இருந்தாலும், இக்கட்டுரையின் முகப்பில் உள்ள வேதவாக்கியங்கள் உங்கள் கவனத்தை நாடுகின்றன. இந்த வேதப்பகுதி கற்றுக்கொடுக்கும் பாடங்களை நான் உங்களுக்குக் காண்பிக்கும்படியாக, சில நிமிடங்களுக்கு உங்கள் கவனத்தை இங்கே திருப்புங்கள்.
இது மிகவும் பிரபலமான அத்தேனே பட்டணம். அந்நாட்களில் இப்பட்டணமானது அதன் நிபுணத்துவத்துக்கும், தத்துவஞானிகளுக்கும், புகழ்பெற்ற வரலாற்றாசிரியர்களுக்கும், கவிஞர்களுக்கும், ஓவியர்களுக்கும், கட்டிடக் கலைஞர்களுக்கும் பிரசித்திபெற்ற நகரமாக விளங்கியது. உலகத்தாருக்குப் பண்டைய கிரேக்க நாடு கண்களாக இருந்ததுபோல, அத்தேனே பட்டணம் கிரேக்க நாட்டின் கண்களாயிருந்தது.
பவுல் புறஜாதியாருக்கு அப்போஸ்தலனாயிருந்தார். உலகம் இதுவரைக் கண்டதிலேயே கடின உழைப்பிலும் ஊழியத்திலும் வெற்றிகண்டவர் பவுல். தன்னுடைய ஆவிக்குரிய போதகரைத் தவிர, ஸ்திரீயினிடத்தில் பிறந்தவர்களில், தன்னுடைய எழுதுகோலாலும் பேச்சாலும் மனுக்குலத்தின் மீது மிக ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியவர் பவுல் மட்டுமே.
அத்தேனே பட்டணத்தில் பவுல் எதைப் பார்த்தார்?
அதற்கான பதிலைத் தெளிவாக அப்பகுதியில் வாசிக்கிறோம். “முழுவதும் விக்கிரக ஆராதனையில் மூழ்கியிருந்த ஒரு பட்டணத்தை” அவர் பார்த்தார். ஒவ்வொரு தெருவிலும் விக்கிரகங்கள் அவருடைய கண்களுக்குத் தென்பட்டன. விக்கிரகக் கடவுள்களின் கோயில்கள் ஒவ்வொரு முக்கியப் பகுதியையும் ஆக்கிரமித்திருந்தன. பிளினியைப் (Pliny) பொறுத்தவரை, அக்ரோபோலிஸை (Acropolis - ஏதென்ஸ் நகரில் உள்ள உயர் பாறை அடுக்கின் மேல் அமைந்துள்ள ஒரு பண்டைய அரண்) நோக்கி அமைந்துள்ள, குறைந்தது 40 அடி உயர மினெர்வாவின் (Minerva) சிலை, எப்பக்கத்திலிருந்தும் பார்ப்போரின் கண்களைக் கவர்ந்தது. பவுலைப் பொறுத்தவரை மிகப்பெரிய விக்கிரக ஆராதனை அமைப்பு அப்பகுதி முழுவதும் பரவியிருந்தது. “அத்தேனியர்கள் தங்கள் முழு கவனத்தையும் ஒருமுகப்படுத்தி விக்கிரகக் கடவுள்களை வணங்கினார்கள்” என்று வரலாற்று ஆசிரியரான பௌசானியாஸ் (Pausanias) சொல்கிறார். சுருக்கமாகச் சொல்லவேண்டுமென்றால், அந்தப் பட்டணம் முழுவதும் விக்கிரகங்களால் நிறைந்திருந்தது.
இந்தப் பட்டணம், அநேகமாக, பவுல் பார்த்ததிலேயே புறஜாதியாரின் பட்டணத்திற்கு ஒரு சிறந்த மாதிரியாக இருந்திருக்கலாம். அதன் அளவுடன் ஒப்பிடும்பொழுது, உலகத்திலேயே மிகவும் அதிகமான கற்றறிந்த வல்லுநர்களையும், நாகரிகமுள்ளவர்களையும், தத்துவஞானிகளையும், கலை மற்றும் அறிவியலில் சிறந்த அறிவுள்ளவர்களையும் அத்தேனே பட்டணம் தன்னகத்தே கொண்டிருந்தது. ஆனால் சமயரீதியாகப் பார்த்தால் அதன் நிலை என்ன? சாக்ரடீஸ், பிளாட்டோ போன்ற தத்துவஞானிகளின் பட்டணம் – எஸ்கிலஸ் (Aeschylus), சோபோகிளிஸ் (Sophocles), யூரிபிடிஸ் (Euripides) மற்றும் துசிடிடிஸின் (Thucydides) பட்டணம் – மனம், அறிவு மற்றும் கலையின் பட்டணம் – முழுவதும் விக்கிரக ஆராதனையில் மூழ்கியிருந்தது.
1. தெய்வீக வெளிப்பாடு மற்றும் பரலோக வழிநடத்துதல் ஆகியவை மிக முக்கியமாகத் தேவை என்பதை நாம் அறிந்துகொள்கிறோமா? மனிதனுக்கு வேதம் இல்லாவிட்டால், அவன் தன் மனிதத்தன்மைக்கு ஏற்ப மிகவும் மோசமான ஒரு கடவுளைக் கொண்ட ஒரு வகையான சமயத்தைப் பின்பற்றுவான்; ஆனால் அது வெளிச்சமில்லாத, சமாதானமில்லாத, நம்பிக்கையற்ற சமயமாகவே இருக்கும்.
“தேவஞானத்துக்கேற்றபடி உலகமானது சுயஞானத்தினாலே தேவனை அறியாதிருக்கிறது” (1 கொரி 1:21). பண்டைய அத்தேனே பட்டணமானது நாம் மிகவும் கவனிக்க வேண்டிய, நம்முன் நிற்கும் ஒரு பாடம். தேவ வெளிப்பாடு இல்லாத இயற்கைத் தன்மை வீணானதே; அது வீழ்ந்துபோன மனிதனை இயற்கைக் கடவுள்களை நோக்கியே நடத்தும். வேதம் இல்லாமல் அத்தேனியர்கள் கல்லையும் மண்ணையும் தங்கள் கைவேலைகளையும் வணங்கினார்கள். ஸ்தோயிக்கர் அல்லது எப்பிகூரியராகிய ஒரு புறஜாதி தத்துவஞானியை ஒரு திறந்த கல்லறையின் அருகில் நிறுத்தி, வரவிருக்கும் உலகத்தைக் குறித்து அவனிடம் கேளுங்கள்; சமாதானம் தரும், ஏற்றுக்கொள்ளக்கூடிய, தெளிவான எந்த ஒரு பதிலையும் அவனால் சொல்ல இயலாது.
2. சமயத்தின் இருளுக்கு எதிராக, மிக உயர்ந்த அறிவுப்பூர்வமான பயிற்சி எந்த வகையிலும் பாதுகாப்புத் தராது என்ற ஒரு பாடத்தை நாம் கற்றுக்கொள்கிறோமா? புறஜாதியாரின் உலகத்தில் வேறெங்கிலும் இருந்ததைவிட, அத்தேனே பட்டணத்தில் மிகவும் சிந்திக்கத்தக்க, கற்றறிந்த ஞானிகள் இருந்தார்கள் என்பதை மறுப்பதற்கில்லை. கிரேக்கத் தத்துவ மாணவர்கள் ஒன்றுமறியா அறிவிலிகள் அல்ல. அவர்கள் தர்க்க நெறிமுறைகள், சொற்பொழிவு, வரலாறு மற்றும் கலைத் துறைகளில் சிறந்து விளங்கினார்கள். ஆனால் இந்த எல்லா மனக்கட்டுப்பாடும், அவர்களின் பட்டணம் “விக்கிரக ஆராதனையில் முழுவதுமாக மூழ்கியிருப்பதிலிருந்து” தடுக்க முடியவில்லை.
இந்த 21-ம் நூற்றாண்டில், வாசித்தல், எழுதுதல், கணிதம், வரலாறு, மொழியியல், இயற்பியல், உயிரியல் ஆகியவை வேதத்தின் அறிவு இல்லாமல் கல்வியைக் கொடுக்கப் போதுமானவை என்று நமக்குச் சொல்லப்படுகிறதா? தேவன் அதை மறுக்கிறார்! அப்படியென்றால் நாம் கிறிஸ்துவை அறிந்துகொள்ளவில்லை. அறிவாற்றலை விக்கிரகமாக்குவது ஒருசில மனிதர்களைத் திருப்திப்படுத்தலாம்; கிரேக்க சிந்தனைகளுக்கு முழு உலகமும் மிகவும் கடன்பட்டுள்ளது என்றும் சொல்லலாம். ஆனால் ஒன்று மட்டும் தெளிவாகிறது: எபிரெய நாட்டுக்குப் பரிசுத்த ஆவியானவர் வெளிப்படுத்தின அந்த அறிவு இல்லாமல், பண்டைய கிரேக்கம் இருளான விக்கிரக உலகத்தில் புதையுண்டிருக்கும். சாக்ரடீஸ் அல்லது பிளாட்டோவின் சீடர் பல காரியங்களில் அறிவுப்பூர்வமாகச் சொற்திறமை பெற்றிருக்கலாம்; ஆனால், “இரட்சிக்கப்படுவதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?” (அப் 16:30) என்ற சிறைச்சாலைக்காரனின் கேள்விக்கு அவனால் பதில் சொல்லியிருக்கவே முடியாது. “மரணமே உன் கூர் எங்கே? பாதாளமே உன் ஜெயம் எங்கே?” என்று அவனால் தன்னுடைய இறுதி நேரத்தில் சொல்லவே முடியாது.
3. கலைப்புலமை, படுமோசமான மூடநம்பிக்கைக்கு எதிராக எந்தப் பாதுகாப்பையும் தருவதில்லை என்பதை நாம் கற்றுக்கொள்கிறோமா? அத்தேனியர்களின் கட்டிடக்கலை மற்றும் சிற்ப நுண்ணறிவு மிகப்பெரிய, மறுக்க இயலாத உண்மை. அத்தேனே பட்டணத்தில் பவுலின் கண்கள் பல அழகிய சிற்பங்களைக் கண்டன; அவை இன்றும் கலையை விரும்பும் மனதுக்கு எல்லையில்லா மகிழ்ச்சி தரக்கூடியவை. ஆனாலும் அத்தேனே பட்டணத்தின் உன்னத கட்டிடங்களை வடிவமைத்துக் கட்டின மனிதர்கள் ஒரே உண்மையான கடவுளைப்பற்றி அறிவற்றவர்களாயிருந்தார்கள். நம்முடைய கலை மற்றும் அறிவியலில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தினால் இன்றைய உலகம் தற்பெருமையில் நிறைந்திருக்கிறது. மனிதன் இயந்திரங்களைப்பற்றியும் புது கண்டுபிடிப்புகளைப்பற்றியும், ஏதோ மனிதனால் முடியாதது ஒன்றுமில்லை என்பதுபோல் எழுதுகிறான், பேசுகிறான். ஆனால், மிக உயர்ந்த கலை அறிவு மற்றும் இயந்திரவியல் அறிவு ஆவிக்குரிய மரணத்துடன் இணைந்துள்ளது என்பதை மறந்துவிட வேண்டாம். பிடியாஸின் (Phidias - சிற்பி) பட்டணமாகிய அத்தேனே “முழுவதும் விக்கிரகத்தால் நிறைந்திருந்தது”. ஒரு அத்தேனிய சிற்பி ஒரு கவர்ச்சியான கல்லறையைக் கட்டலாம்; ஆனால் பாவத்தால் துக்கப்படுபவனின் கண்ணீரின் ஒரு துளியைக்கூட அவனால் துடைக்க இயலாது.
இந்தச் செய்தியை மறந்துவிடக்கூடாது. இது கவனமாகச் சிந்திக்கப்பட வேண்டும். நாம் வாழும் இந்தக் காலத்துக்கும் இவை பொருத்தமானவை. நாம் சந்தேகம் நிறைந்த அவிசுவாசமான நாட்களில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். நாம் திரும்பும் ஒவ்வொரு பக்கத்திலும் சத்தியத்தையும், தெய்வீக வெளிப்பாட்டின் மதிப்பையும் குறித்த சந்தேகத்தையும் கேள்வியையுமே எதிர்கொள்கிறோம். “இந்தக் காரணம் மட்டுமே போதாதா?”, “இரட்சிப்புக்கேதுவான அறிவை மனிதன் பெற வேதம் உண்மையாகவே தேவையா?”, “சத்தியத்திற்கும் தேவன
அத்தேனே பட்டணத்தில் அப்போஸ்தலனாகிய பவுல் இரண்டாவதாக எதை உணர்ந்தார் என்பதைக் கவனியுங்கள். “பட்டணம் முழுவதும் விக்கிரக ஆராதனையால் நிறைந்திருப்பதைக்” கண்டார். அந்தத் தரிசனம் அவரை எப்படிப் பாதித்தது? அவர் என்ன உணர்ந்தார்?
ஒரே காட்சி வெவ்வேறு மனிதர்களை வெவ்வேறு விதமாகப் பாதிப்பது கவனிக்கத்தக்கது. இரண்டு மனிதர்களை ஒரே இடத்தில் நிறுத்துங்கள்; இருவரும் அருகருகே நிற்கட்டும்; ஒரே பொருள் அவர்கள் இருவருக்கும் காண்பிக்கப்படட்டும். ஒருவரிடமிருந்து வெளிப்படும் உணர்ச்சிகள், மற்றொருவருடைய உணர்ச்சிகளுக்கு முற்றிலும் மாறானதாக இருக்கும்.
அத்தேனே பட்டணத்தை முதல்முறையாகப் பார்க்கும் ஒரு கட்டிடக் கலைஞர், சந்தேகமில்லாமல் அதன் அழகில் மூழ்கிவிடுவார். ஒரு அரசியல் தலைவரோ அல்லது ஒரு சிறந்த பேச்சாளரோ பெரிகிளையையோ (Pericles) அல்லது டெமோஸ்தனிஸையோ (Demosthenes) நினைவு கூர்ந்திருப்பார். ஒரு கல்வியாளர் துசிடிடைஸையோ (Thucydides), சோபோகிளஸையோ (Sophocles) அல்லது பிளாட்டோவையோ நினைத்திருப்பார். ஒரு வியாபாரி அதன் துறைமுக நகரமாகிய பிரேயுவையும் கடலையும் கண்டு வியந்திருப்பார்.
ஆனால், கிறிஸ்துவின் அப்போஸ்தலனோ இவர்களை விட உன்னதமான சிந்தனைகளைக் கொண்டிருந்தார். எல்லாவற்றையும் விட ஒரு காரியம் அவரது கவனத்தை ஈர்த்தது; மற்றவையெல்லாம் அவர் கண்களுக்குச் சிறியதாகத் தெரிந்தன. அத்தேனே பட்டணத்தாரின் ஆவிக்குரிய நிலையும், அவர்களது ஆத்துமாக்களின் நிலையுமே அந்த முக்கிய காரியம். புறஜாதியாரின் அப்போஸ்தலன் அந்த ஒரு காரியத்தைக் குறித்ததற்கே கரிசனை கொண்டிருந்தார். தமது தெய்வீக எஜமானரைப்போல அவரும் எப்பொழுதும் “பிதாவுக்கடுத்தவைகளையே” (லூக் 2:49) சிந்தித்துக்கொண்டிருந்தார்.
அத்தேனே பட்டணத்தில் நின்று அத்தேனியர்களின் ஆத்துமாக்களைத் தவிர வேறொன்றையும் அவர் நினைக்கவில்லை. மோசே, பினெகாஸ், எலியா என்பவர்களைப் போல, “பட்டணம் முழுவதும் விக்கிரக ஆராதனைக்குள் இருப்பதைக் கண்டு அவருடைய ஆவி அவருக்குள் கலங்கிற்று” (அப் 17:16).
பூமியிலுள்ள காட்சிகளிலெல்லாம் அந்த உன்னத பட்டணத்தின் காட்சியைப் போல, மனதைக் கவரக்கூடிய நுண்ணிய காட்சிகள் வேறெங்குமில்லை. அந்தப் பட்டணத்திலிருந்த உரையாடல்கள் அறிவைக் கூர்மையாக்குவதாகவும், சிந்தனையைத் தூண்டுவதாகவும் இருந்தன. சரியோ தவறோ, அந்தப் பட்டணத்தில் வசிப்பவர் ஒரு கிராமவாசியை விட இருமடங்கு வேகமாகவும் அதிகமாகவும் சிந்தித்தார்.
ஆனாலும், “சாத்தானுடைய சிங்காசனம்” (வெளி 2:13) அந்தப் பட்டணத்தில் இருந்தது. எல்லாவிதத் தீமைகளும் அங்கே சிந்தித்து விதைக்கப்பட்டன. அங்கு வாழ்க்கையைத் தொடங்கும் ஒரு இளைஞன், பாவக் காட்சிகளினால் விரைவில் கடினப்பட்ட மனமுடையவனாகவும் வீணான சிந்தனை உடையவனாகவும் மாறினான். மாம்ச இச்சைகளும், குடிவெறியும், உலகத்தின் மோசமான களியாட்டுகளும் அங்கே உச்சக்கட்டத்தில் இருந்தன. தேவனற்ற தன்மையும், சமயமற்ற தன்மையும் அங்கே கைகோத்து நின்றன. கிருபையை உதாசீனப்படுத்தி, ஓய்வுநாளை மீறுபவர், மற்றவர்களுடைய தவறான முன்மாதிரியைக் கண்டு “நான் தனியாக இல்லை” என்று தன்னைத் தேற்றிக்கொண்டார்.
அத்தேனே பட்டணம் எல்லாவித மூடநம்பிக்கைகளுக்கும், வீண் தத்துவங்களுக்கும் இடமளித்தது. ஸ்தோயிக்கம், எப்பிக்கூரியம், அறியாமைக் கொள்கை (Agnosticism), சமயச்சார்பின்மை, ஐயுறவியல் (Skepticism), நாத்தீகம் போன்ற தவறான தத்துவங்களின் இருப்பிடமாக அது இருந்தது. அச்சு இயந்திரங்கள் போன்ற புதிய கண்டுபிடிப்புகள் நன்மை தீமைக்கான சக்திகளோடு ஓய்வில்லாமல் வேலை செய்துகொண்டிருந்தன. நாளேடுகள் பொதுக்கருத்தை உருவாக்கி மக்களை வழிநடத்தின. வங்கிகள், நீதிமன்றங்கள், நாடாளுமன்றம் என அனைத்தும் அங்கே இருந்தன. அப்பட்டணம் அந்தத் தேசத்தையே தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது.
பவுல் அத்தேனேயைக் கண்டு ஆவியில் கலங்கியதைக் குறித்து நாம் வியப்படையத் தேவையில்லை. மனந்திரும்பிய தர்சு பட்டணத்தானும், இயேசு கிறிஸ்துவை முகமுகமாய்த் தரிசித்தவனுமான பவுலின் இருதயத்தை அக்காட்சி ஆழமாகப் பாதித்தது.
அவர் நான்கு விதமான பரிசுத்த உணர்வுகளால் கலங்கினார்:
பரிசுத்த மனதுருக்கம்: ஒரு பெரும் கூட்டம் அறிவில்லாமல், தேவனில்லாமல், நம்பிக்கையில்லாமல் அழிவுக்குச் செல்லும் பாதையில் செல்வதைக் கண்டு கலங்கினார்.
பரிசுத்த கவலை: மனிதருடைய திறமைகள் தவறாகப் பயன்படுத்தப்படுவதைக் கண்டு கலங்கினார். சிறந்த கைகளும் சிந்திக்கக்கூடிய மனமும் அங்கே இருந்தும், ஜீவனைத் தந்த தேவன் அங்கே மகிமைப்படுத்தப்படவில்லை.
பரிசுத்த கோபம்: பாவம் மற்றும் சாத்தானுக்கு எதிராக அவர் கோபம் கொண்டார். இப்பிரபஞ்சத்தின் தேவன் மக்களின் கண்களைக் குருடாக்கி வைத்திருப்பதையும், ஆவிக்குரிய மருந்தோ மீட்போ இல்லாமல் மக்கள் தவிப்பதையும் கண்டார்.
பரிசுத்த வாஞ்சை: தமது எஜமானரின் மகிமைக்காக வாஞ்சை கொண்டார். தனக்குச் சொந்தமில்லாத வீட்டைச் சாத்தான் ஆக்கிரமித்திருப்பதையும், சிருஷ்டிகராகிய தேவனுக்குச் சேர வேண்டிய மகிமையை விக்கிரகங்கள் பெற்றுக்கொள்வதையும் கண்டு கலங்கினார்.
வாசகரே, அப்போஸ்தலனைத் துக்கப்படுத்திய இந்த உணர்ச்சிகளே ஆவியினால் பிறந்த ஒருவனுடைய அடையாளங்கள். எங்கே உண்மையான கிருபை இருக்கிறதோ, அங்கே ஆத்தும பாரமும் இருக்கும். தேவனுடைய பிள்ளைகள் தங்கள் பாவத்திற்காக வருந்துவது மட்டுமல்லாமல், பிறருடைய பாவத்திற்காகவும் வருந்துவார்கள்.
வேதம் கூறுவதைக் கேளுங்கள்:
லோத்து: சோதோமின் அக்கிரமக் கிரியைகளைக் கண்டு நீதியுள்ள தன் இருதயத்தில் வாதிக்கப்பட்டார் (2 பேது 2:8).
தாவீது: “உம்முடைய வேதத்தை மனுஷர் காவாமல் போனதினால் என் கண்களிலிருந்து நீர்த்தாரைகள் ஓடுகிறது” என்றார் (சங் 119:136).
எசேக்கியேலின் காலம்: எருசலேமின் அருவருப்புகளினிமித்தம் பெருமூச்சுவிட்டு அழுகிறவர்களின் நெற்றியில் அடையாளம் இடப்பட்டது (எசே 9:4).
ஆண்டவராகிய இயேசு: எருசலேம் நகரத்தைப் பார்த்தபோது அதற்காகக் கண்ணீர்விட்டு அழுதார் (லூக் 19:41).
பாவத்தைக் குறித்து மனஸ்தாபப்படாதவன் ஆவியின் சிந்தை உடையவன் அல்ல. இன்று நம் தேசத்திற்கு வெளியே பாருங்கள்; கோடிக்கணக்கான மக்கள் அறியாமையிலும் விக்கிரக ஆராதனையிலும் மூழ்கிக் கிடக்கிறார்கள். அவர்கள் கிறிஸ்துவின் அன்பையோ, கிருபையையோ அறியாமல் மடிகிறார்கள். கிறிஸ்தவர்கள் மெத்தனமாகத் தூங்கிக்கொண்டிருக்கும்போது, இந்த ஆத்துமாக்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள். இது நம் “ஆவியைக் கலங்கச் செய்ய” வேண்டிய காட்சி அல்லவா?
இன்றைய தலைமுறையினர் துன்மார்க்கத்தையும் பொறுப்பற்ற தன்மையையும் விரும்புகிறார்கள் என்பது வருத்தத்திற்குரிய உண்மை. சுவிசேஷப் பணிகளில் அவர்களுக்கு ஆர்வமில்லை. திருச்சபை ஊழியங்களை அவர்கள் குறை கூறுகிறார்கள். “உலகத்தை அதன் போக்கிலேயே விட்டுவிடுவது நல்லது” என்பது அவர்களின் வாதம்.
இப்படிப்பட்டவர்களிடம் நாம் என்ன சொல்லலாம்? நீங்கள் அப்போஸ்தலனாகிய பவுலுக்கு எதிராக நிற்கிறீர்கள் என்பதை வெளிப்படையாகச் சொல்வோம். பவுல் உணர்ந்த அந்த ஆத்தும பாரத்தை நாம் ஏன் உணரவில்லை என்று கேட்போம். கடந்த 2000 ஆண்டுகளில் மனிதனின் தேவையிலோ அல்லது விக்கிரக ஆராதனையின் பாவத்திலோ எந்த மாற்றமும் ஏற்பட்டுவிடவில்லை.
உலகத்தின் பார்வையில் நம்முடைய ஆத்தும பாரம் அறிவீனமாகத் தெரியலாம். ஆனால், வேதாகமம் உண்மையானதாக இருக்கும் வரை, ஆத்துமாக்களிடம் அன்பு கூருவதே முதன்மையான கிறிஸ்தவப் பண்பு. இதைப் பற்றி அறியாதவர் கிறிஸ்துவின் பாடசாலையில் இன்னும் பயில வேண்டும். இந்த உணர்வுகளை மதிக்காதவர் பவுலைப் பின்பற்றுபவர்கள் அல்ல; மாறாக, “என் சகோதரனுக்கு நான் காவலாளியோ?” என்று கேட்ட காயீனின் வழித்தோன்றல்கள்.
அப்போஸ்தலனாகிய பவுல் அத்தேனே பட்டணத்தில் என்ன செய்தார் என்பதைக் கவனிக்கும்படி என்னுடைய வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறேன்.
அவர் என்ன பார்த்தார் என்பதைக் கேட்டிருக்கிறீர்கள்; அவர் என்ன உணர்ந்தார் என்பது உங்களுக்குச் சொல்லப்பட்டிருக்கிறது; அவர் எப்படிச் செயல்பட்டார்?
அவர் சில காரியங்களைச் செய்தார். முழுவதும் விக்கிரகங்களால் நிறைந்திருந்த பட்டணத்தின் முன், “மாம்சத்தோடும் இரத்தத்தோடும் போராடிக்கொண்டு” வெறுமையாக நிற்கும் மனிதரல்ல அவர். "நான் தனியாக நிற்கிறேன்; நான் பிறப்பிலே யூதன்; அந்நிய தேசத்திலே நான் ஒரு அந்நியன்; கற்றறிந்த மனிதர்களின் கூட்டமைப்பையும் ஆழமாக வேர்கொண்டிருக்கும் சமயத்திற்கு எதிரானவர்களையும் நான் எதிர்க்க வேண்டும்; முழு நகரத்தின் பழமையான சமயத்தைத் தாக்குதல் என்பது சிங்கத்தை அதின் குகையில் சந்திப்பதற்குச் சமம்; கிரேக்கத் தத்துவத்தில் ஆழ்ந்திருக்கும் மனம் நற்செய்தியால் எந்த வகையிலும் பாதிக்கப்படாது" போன்ற எண்ணங்களால் அவர் தனக்குள்ளாகவே போராடிக்கொண்டிருந்திருக்கக் கூடும். ஆனால் அவைகளில் ஒன்றும் பவுலின் மனதைக் கட்டுப்படுத்தவில்லை. அவர் ஆத்துமாக்கள் அழிவதைப் பார்த்தார்; வாழ்க்கை குறுகியது, காலம் கடந்துபோகிறது என்பதைப் பார்த்தார்; ஒவ்வொரு மனிதரின் ஆத்துமாவையும் சந்திக்கத் தனது எஜமானின் செய்தியின் வல்லமையில் அவர் நம்பிக்கை கொண்டிருந்தார்; அவர் கிருபையைப் பெற்றிருந்தார், அதை அடக்கிவைக்க அவருக்குத் தெரியவில்லை. அவர் கரங்களால் என்ன செய்ய முடியுமோ அதை வல்லமையாகச் செய்து முடித்தார். இந்நாட்களில் இப்படிப்பட்ட செயல்படும் மனிதர்கள் இருந்தால் அது எத்தனை அருமை!
அவர் என்ன செய்தாரோ அதைப் பரிசுத்த ஞானத்துடனும் வல்லமையுடனும் செய்தார். உதவிக்காகவும் உடன் ஊழியருக்காகவும் காத்திருக்காமல், இந்தக் கடினமான வேலையைத் தாமே தனியாக ஆரம்பித்தார். ஒரு தனித் திறமையுடனும், நற்செய்தி அங்கே கால்பதிக்கும் விதத்திலும் அதை ஆரம்பித்தார். முதலில் ஜெப ஆலயத்திலுள்ள யூதர்களோடும், பக்தியுள்ளவர்களோடும் அவர் சம்பாஷணை பண்ணினார் என்று நமக்குச் சொல்லப்பட்டிருக்கிறது. அதன் பிறகு, சந்தைவெளியில் எதிர்ப்பட்டவர்களோடும் அவர் உரையாடினார். மிகவும் அனுபவசாலியைப்போலப் படிப்படியாக அவர் முன்னேறினார். உறுதியான வைராக்கியத்தையும் வலிமையையும் ஒன்றிணைத்தவராய் – பேச்சுத் திறமையுடன் பொது அறிவையும் இணைத்து, முன்னர் பார்த்தது போல, இங்கும் பவுல் நமக்கு முன்மாதிரியாக இருக்கிறார். இந்நாட்களில் இப்படிப்பட்ட ஞானமுள்ள மனிதர்கள் இருந்தால் அது எத்தனை அருமை!
அப்போஸ்தலனாகிய பவுல் எதைப் போதித்தார்? யூதர்களிடத்திலும் கிரேக்கர்களிடத்திலும், ஜெப ஆலயங்களிலும் வீதிகளிலும் அவர் வழக்காடின, வாதம் செய்த, விவாதித்த கருத்தின் மையம் எது? அறியாமையிலிருந்த திரளானவர்களுக்கு விக்கிரக ஆராதனையின் முட்டாள்தனத்தை வெளிப்படுத்தினார். கைகளால் செய்யப்பட்ட சொரூபங்களை வணங்கினவர்களுக்கு உண்மையான தேவனின் தன்மையை விளக்கிக்காட்டினார். தேவன் நமக்குச் சமீபமாயிருக்கிறார் என்பதை உரக்கக் கூறி, நியாயத்தீர்ப்பின் நாளிலே தேவனுக்கு நாம் கணக்கு ஒப்புவிக்க வேண்டியவர்களாயிருக்கிறோம் என்பதை எப்பிக்கூரியர்களுக்கும் ஸ்தோயிக்கர்களுக்கும் உறுதிபடக் கூறினார் – அரேயோபாகு (மாரியப்பா) மேடையில் பவுல் நிகழ்த்திய உரையில் பதிவுசெய்யப்பட்டுள்ள உண்மைகள் இவைகளே.
விக்கிரக ஆராதனையின் நகரத்தில், அப்போஸ்தலனின் செயல்பாடுகளிலிருந்து நாம் மேலும் அறிந்துகொள்ள வேண்டியவை உண்டா? அத்தேனேயில் பவுல் முன்னிலைப்படுத்திய கிறிஸ்தவத்திற்கே உரித்தான வேறு ஏதேனும் முக்கியமானது உண்டா? உண்மையாகவே நாம் அறிந்துகொள்ள வேண்டியவை இன்னும் அதிகம் உண்டு. நாம் பார்த்துக்கொண்டிருக்கும் அதிகாரத்தின் 18-ம் வசனத்திலே, பொன் எழுத்துக்களால் பதிக்கப்பட வேண்டிய வாக்கியம் ஒன்று உண்டு. உன்னதமான புறஜாதியாரின் அப்போஸ்தலன் இயற்கை தெய்வங்களைக் குறித்துப் பேசுகிறார் என்று சிலர் கூறத் துணிந்தபோது, அந்த ஆதாரமில்லாத பேச்சை அந்த வாக்கியம் அடைத்தது! பவுல் இயேசு கிறிஸ்துவையும் உயிர்த்தெழுதலையும் குறித்துப் பேசினது, அத்தேனியர்களின் கவனத்தை ஈர்த்தது என்று 18-ம் வசனத்தில் நமக்குச் சொல்லப்பட்டிருக்கிறது.
இயேசு மற்றும் உயிர்த்தெழுதல்! அந்த வாக்கியம் எத்தனை ஆழமான கருத்தை உள்ளடக்கியிருக்கிறது! இந்த வாக்கியத்திலிருந்து எத்தனை அருமையாகக் கிறிஸ்தவ விசுவாசத்தின் முழுமையான சாராம்சத்தை வெளிக்கொணர முடியும்! அது கிறிஸ்தவ விசுவாசத்தின் சாராம்சமே, எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. அதன் அர்த்தத்தை மாற்றி, மட்டுப்படுத்தி, அது கிறிஸ்துவின் மாதிரி மற்றும் தீர்க்கதரிசன நிறைவேறுதல் மட்டுமே என்று விளக்கமளிப்பவர்களைப் பார்த்து நான் பரிதாபப்படுகிறேன். “சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்து” அல்லது சிலுவையின் உபதேசத்தை சில நாட்களுக்குப் பின்பு கொரிந்து பட்டணத்தில் பிரசங்கித்த இதே அப்போஸ்தலனாகிய பவுல், சிலுவையை அத்தேனியர்களின் காதுகளுக்கு விலக்கி வைத்திருந்தால் அது நம்ப முடியாததாகும். “இயேசு மற்றும் உயிர்த்தெழுதல்” என்ற வாக்கியம் முழு நற்செய்தியையும் குறிக்கிறது என்று நான் நம்புகிறேன். நற்செய்தியை ஸ்தாபித்தவரின் பெயரும், அதன் அடிப்படை உண்மைகளில் ஒன்றும் (உயிர்த்தெழுதல்), முழு கிறிஸ்தவத்தின் உண்மையாக நம்முன் நிற்கிறது.
(இ) கர்த்தராகிய இயேசுவின் பணிகளைப் பவுல் அத்தேனேயில் பிரசங்கித்தார் – மனுக்குலத்திற்கும் தேவனுக்கும் இடையில் மத்தியஸ்தராக, பாவ நோயினால் பாதிக்கப்பட்டிருக்கும் ஆத்துமாக்களுக்கு உன்னத மருத்துவராக, மனபாரமுள்ளவர்களுக்குச் சமாதானத்தையும் விடுதலையையும் அளிப்பவராக, சிநேகிதரில்லாதவர்களுக்குச் சிநேகிதராக, தங்களுடைய ஆத்துமாக்களை அவருடைய கையில் கொடுப்பவர்களுக்குப் பிரதான ஆசாரியராகவும் பரிந்துபேசுபவராகவும், சிறைப்பட்டவர்களுக்குப் பதிலீடாகவும், தேவனைவிட்டு அலைந்து திரிபவர்களுக்கு வெளிச்சமாகவும் வழிகாட்டியாகவும் அவர் இருக்கிறார்.
(ஈ) கர்த்தராகிய இயேசு தன்னுடைய வேலையாட்களை உலகெங்கிலும் சென்று பிரசங்கிக்கச் சொன்ன செய்தியைப் பவுல் அத்தேனேயில் பிரசங்கித்தார் – பாவிகளில் பிரதான பாவியை ஏற்றுக்கொள்ள அவர் ஆயத்தமாயும் ஆர்வமாயும் இருக்கிறார்; அவராலே தேவனிடத்தில் சேரும்படி வருகிற எல்லாரையும் இரட்சிக்க அவர் வல்லமையுள்ளவராயிருக்கிறார்; அவரை விசுவாசிக்கும் எல்லாருக்கும் முழுமையான, உடனடியான பாவமன்னிப்பை அவர் கொடுக்கிறார்; எல்லாவகையான பாவங்களிலிருந்தும் அவருடைய இரத்தம் முழுமையாகக் கழுவுகிறது; விசுவாசமே, தங்கள் பாவங்களிலிருந்து இரட்சிக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறவர்களுக்குத் தேவையான ஒன்று; கிரியைகள் அல்லது செயல்கள் மூலமல்ல, விசுவாசத்தின் மூலமே முழுவதும் நீதிமானாக்கப்படுவார்கள்.
“இயேசு மற்றும் உயிர்த்தெழுதலை” நான் விசுவாசிக்கிறேன், இதன் பொருள் – இயேசு அவருடைய மரணத்தினாலும் உயிர்த்தெழுதலினாலும், அவருடைய அபிஷேகிக்கும் இரத்தம், அவருடைய சிலுவை, அவருடைய பதிலீடு, அவருடைய மத்தியஸ்தத்துவம், பரலோகத்தில் அவருடைய வெற்றிப் பிரவேசம், அதன் விளைவாக அவரை விசுவாசிக்கும் பாவிகளுக்கு முழு இரட்சிப்பு என்பதாகும். பவுல் போதித்த சத்தியம் இதுவே. பவுல் அத்தேனேயில் இருந்த பொழுது செய்த வேலையும் இதுவே.
இப்பொழுது, புறஜாதிகளின் அப்போஸ்தலனான இவரிடமிருந்து நாம் கற்றுக்கொள்வதற்கு உன்னதமான காரியம் ஒன்றும் இல்லையா? இதை வாசிப்பவர்களின் கவனத்தை ஈர்க்கும் விதமாக, மிக முக்கியமாகக் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்களின் சுருக்கத்தைத் தருகிறேன். இவை உங்கள் தனிப்பட்ட சிந்தனைகளுக்கு விதைகளாக அமையும்படி அவைகளைத் தூவுகிறேன்.
அ) மையப்பொருள் கிறிஸ்துவே அத்தேனே பட்டணத்தில் பவுலின் செய்கையிலிருந்து ஒரு சத்தியத்தைக் கற்றுக்கொள்ளுங்கள். எந்த இடத்திலும் நம்முடைய போதனையின் சாராம்சம் இயேசு கிறிஸ்துவாகவே இருக்க வேண்டும். நம்மைக் கேட்டுக்கொண்டிருக்கும் கூட்டம் கற்றவர்களோ, கல்லாதவர்களோ, உயர்ந்தவர்களோ, எளியவர்களோ யாராக இருந்தாலும், "கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டார் – கிறிஸ்து – கிறிஸ்து – கிறிஸ்து – சிலுவையில் அறையப்பட்டார், உயிர்த்தெழுந்தார், பரிந்து பேசுகிறார், விடுவிக்கிறார், மன்னிக்கிறார், ஏற்றுக்கொள்ளுகிறார், இரட்சிக்கிறார்" என்பதே நம் செய்தியாக இருக்க வேண்டும். நம்முடைய போதனையின் மையப்பொருள் கிறிஸ்துவாகவே இருக்க வேண்டும். இந்தக் காரியங்களை விட நற்செய்தியை நாம் மேம்படுத்தவே முடியாது. இதைவிடச் சிறப்பாகச் செயல்படக்கூடிய எந்த ஒரு தலைப்பையும் நாம் காண இயலாது. பவுல் அறுவடை செய்ததுபோல நாமும் அறுவடை செய்ய வேண்டுமென்றால், பவுல் விதைத்ததுபோல நாமும் விதைக்க வேண்டும்.
ஆ) தனித்து நிற்கப் பயப்பட வேண்டாம் அத்தேனே பட்டணத்தில் பவுலின் செய்கையிலிருந்து ஒரு நடைமுறைப் பாடத்தைக் கற்றுக்கொள்ளுங்கள். தனி ஒருவனாகக் கிறிஸ்துவின் சாட்சியாக நிற்பதற்கு நாம் ஒருபோதும் பயப்படக் கூடாது. தேவைப்பட்டால் துன்மார்க்கமுள்ள திருச்சபையின் மத்தியில் தனியாகவும் – நம்முடைய நாட்டில் டெல்லியிலும், ஹைதராபாத்திலும், கொல்கத்தாவிலும், சென்னையிலும், திருச்சியிலும் தனியாக நில்லுங்கள் – எங்கு இருந்தாலும் அங்குத் தனியாக நில்லுங்கள். தேவனின் சத்தியம் நம் பக்கம் இருக்குமென்றால் நாம் அமைதி காக்க வேண்டியதில்லை. அத்தேனேயில் ஒரு பவுல், உலகத்திற்கு எதிராக ஒரு அத்தனாசியஸ், ரோம கத்தோலிக்க பீடாதிபதிகளின் படைகளுக்கு எதிராக ஒரு விக்ளிப், வார்ம்ஸ் நகரில் ஒரு லூத்தர் – இவர்கள் நம் கண்களுக்கு முன்னால் நிற்கும் கலங்கரை விளக்கங்கள். மனிதன் பார்க்கும் விதமாக தேவன் பார்க்கிறதில்லை. கூடியிருக்கும் மக்களின் தலைகளை எண்ணிக்கொண்டு நாம் நிற்கக் கூடாது. கிறிஸ்துவைத் தன் இருதயத்திலும், வேதத்தைத் தன் கரங்களிலும் கொண்டிருக்கும் ஒரு மனிதன், பெரும் விக்கிரக ஆராதனைக்காரர்கள் கூட்டத்தைவிட வலிமையானவன்!
இ) விசுவாசத்தில் உறுதி இயற்கைக்கு அப்பாற்பட்ட ஒரு சக்தி, கிறிஸ்தவ மார்க்கத்தின் ஒரு அங்கம் என்பதை வலிமையாக எடுத்துரைப்பதன் முக்கியத்துவத்தையும் தேவையையும் அறிந்துகொள்ளுங்கள். வேதத்தின் அற்புதங்களைக் கேலி செய்யும், உபயோகமற்ற மரக்கட்டைகளைப்போல அவற்றைக் கட்டித் தூக்கி எறிய இடைவிடாமல் முயற்சி செய்யும், எடுபடாத விளக்கங்கள் மூலம் அவைகள் அற்புதங்களே அல்ல என நிரூபிக்க முயற்சி செய்யும் அவிசுவாசிகளும், சந்தேகப் பேர்வழிகளும் அநேகர் உண்டு என்பதை இதைப் படித்துக் கொண்டிருப்பவர்களுக்குச் சொல்ல வேண்டியதில்லை. இப்படிப்பட்டவர்களை எதிர்கொள்ள நாம் ஒருபோதும் பயப்படாமல், பவுலைப்போல நம்முடைய நிலையில் உறுதியாயிருக்க வேண்டும். பவுலைப்போல, கிறிஸ்து என்ற ஆதாரத்துடன் எல்லா மனிதரையும் உறுதியுடன் எதிர்கொள்ளவும், கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலுக்கு நேராக அவர்களை வழிநடத்தவும் வேண்டும். இயற்கைக்கு அப்பாற்பட்ட காரியங்களை எதிர்க்கிறவர்கள் அந்த ஆதாரத்தை மறுதலிப்பதில்லை; அவர்களால் மறுதலிக்கவும் முடியாது. கிறிஸ்து மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்திருக்காவிட்டால், அவர் பரமேறிய பிறகு அப்போஸ்தலர்களின் போதனைகளும் செய்கைகளும் தீர்க்க முடியாத புதிராகவே இருந்திருக்கும். ஆனால், நாம் விசுவாசிக்கிறபடி, கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் மறுக்க முடியாத உண்மையானால், இயற்கைக்கு அப்பாற்பட்ட இந்தக் காரியங்களுக்கு எதிரான கட்டுக்கதையான விவாதங்கள் அனைத்தும் புறந்தள்ளப்பட்டு வீழ்ந்துபோகும். உன்னதமானதும் அதிசயமானதுமான கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் ஏற்கனவே ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்ட நிலையில், வேதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் மற்ற சிறு அற்புதங்கள் சாத்தியமற்றவை என்று சொல்வது புத்தியீனமானது.
ஈ) நற்செய்தியின் வல்லமை அத்தேனே பட்டணத்தில் பவுலின் செய்கையிலிருந்து, நமது விசுவாசத்தை உற்சாகப்படுத்தும் பாடத்தையும் கற்றுக்கொள்ளுங்கள். நாம் நற்செய்தியைப் பிரசங்கிப்போமென்றால், அது தன் பணியைச் செய்யும் என்ற நம்பிக்கையுடன் அதைச் செய்வோம். மார்ஸ் மேடையில் தனியாக நின்ற தர்சு பட்டணத்து யூதன், அச்சமயத்திலே ஒன்றும் செய்யாதவன் போல் காணப்பட்டான். ஏதோ தோல்வியில் முடிந்ததுபோல அவன் தன் வழியே போய்விட்டான். அநேகமாக, ஸ்தோயிக்கர்களும் எப்பிக்கூரியர்களும் ஏதோ தாங்கள் வென்றுவிட்டதுபோல, பவுலை ஏளனம் செய்து சிரித்திருக்கலாம். ஆனால் அந்தத் தனி யூதன், ஒருபோதும் அணைக்க இயலாத ஒரு விளக்கை அங்கே ஏற்றியிருந்தான். அத்தேனேயில் அவன் அறிவித்த வார்த்தையானது, வளர்ந்து பெருகி, மிகப்பெரிய மரமானது. அந்தச் சிறிய புளித்தமாவு, பின்னாளில் முழு கிரேக்கத்தையும் புளிக்கவைத்தது. பவுல் பிரசங்கித்த நற்செய்தி விக்கிரக ஆராதனைக்கு மேலாக வெற்றிபெற்றது. இன்றைக்கு உள்ள வெறுமையான பார்த்தினோன் கோயில், அத்தேனியரின் மார்க்கம் மரித்துப்போய்விட்டது என்பதற்கு ஆதாரமாகும். ஆம்; நாம் நல்ல விதையை விதைப்போமென்றால், நாம் கண்ணீரோடே விதைத்திருக்கலாம், “ஆனாலும் நாம் அறுத்த அரிகளைக் கெம்பீரத்தோடே சுமந்துகொண்டு வருவோம்” (சங்கீதம் 126:6).
எங்கள் இணைத்தளத்தில் உள்ள கட்டுரைகள் மற்றும் புத்தகங்களைப் வாசகார்களின் வசதிக்காக, BSI இந்திய வேதாகம சங்கத்தாரால் வெளியிடப்பட்ட O.V. தமிழ் வேதாகமத்தின் வசனங்களை பயன்படுத்தியுள்ளோம்.
© 2026. தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்.