கிறிஸ்துவின் மலைப்பிரசங்கத்தின் வடிவமைப்பு, நோக்கம் மற்றும் பயன்பாடு குறித்துப் பலத்த கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. பெரும்பாலான வேதவியாக்கியானிகள் இதனை கிறிஸ்தவ நன்னெறிகளின் விளக்கவுரையாகவே பார்க்கின்றனர். காலஞ்சென்ற கவுண்ட் டால்ஸ்டாய் போன்றவர்கள், எல்லா மனிதர்களும் பின்பற்றி வாழ வேண்டிய ஒரு "பொன் விதியாகவே" இதனைக் கருதுகின்றனர். மற்றவர்களோ, இது தற்போதைய கிருபையின் காலத்திலுள்ள பரிசுத்தவான்களுக்குரியதல்ல, எதிர்கால ஆயிரவருட அரசாட்சியில் வாழப்போகும் விசுவாசிகளுக்கே உரியது என்று வலியுறுத்தி, இதன் காலரீதியான (dispensational) பயன்பாட்டின் மீதே அதிக கவனம் செலுத்துகின்றனர். ஆயினும், தேவ ஆவியால் ஏவப்பட்ட இரண்டு வசனங்கள் இதன் மெய்யான எல்லையை வெளிப்படுத்துகின்றன. மத்தேயு 5:1, 2-ல் கிறிஸ்து தம்முடைய சீஷர்களுக்கு உபதேசித்தார் என்பதை அறிகிறோம். மத்தேயு 7:28, 29-ல் அவர் திரளான ஜனங்களுக்கும் போதித்தார் என்பது தெளிவாகிறது. எனவே, நமது ஆண்டவரின் இந்த உரை விசுவாசிகள், அவிசுவாசிகள் ஆகிய இரு சாராருக்கும் தேவையான போதனைகளை உள்ளடக்கியுள்ளது என்பது நமக்கு தெளிவாகிறது.
முழுமையான சத்தியம் இல்லாத குறைபாடுள்ள யூத மார்க்கத்தில் வளர்க்கப்பட்ட யூத பொதுமக்களுக்கு கிறிஸ்து பிரசிங்கித்த முதல் பிரசங்கம் என்பதை மனதில் கொள்ள வேண்டும். சொல்லப்போனால் அவருடைய சீஷர்களுக்கும் இதுவே அவரது முதல் போதனையாக இருந்திருக்கலாம். கிறிஸ்தவ நன்னெறிகளைப் போதிப்பது மட்டுமன்றி, பரிசேயத்துவத்தின் தவறுகளை அம்பலப்படுத்துவதும், நியாயப்பிரமாணத்தின் கிரியைகளைச் சார்ந்திருந்த கேட்போரின் மனச்சாட்சியைத் தட்டியெழுப்புவதுமே அவரது நோக்கமாக இருந்தது. மத்தேயு 5:20-ல், "வேதபாரகர் பரிசேயர் என்பவர்களுடைய நீதியிலும் உங்கள் நீதி அதிகமாயிராவிட்டால், பரலோகராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டீர்கள்" என்று கிறிஸ்து கூறினார். பின்னர், அவ்வதிகாரத்தின் இறுதிவரை, கேட்போர் அவரது பூரணமான நீதியின் அவசியத்தை உணர்ந்துகொள்ளும் வகையில் நியாயப்பிரமாணத்தின் ஆவிக்குரிய தன்மையை விளக்கினார். பரிசேய மார்க்கத்தின் தலைவர்கள் நியாயப்பிரமாணத்தின் வெளிப்புறமான எழுத்துக்களையே நிறைவேற்றுவதாக தங்களை காட்டிக்கொள்கிறார்கள்; ஆனால் நியாயப்பிரமாணத்தின் ஆவிக்குரிய தன்மையைக் குறித்த அவர்களது அறியாமையே பரிசேயத்துவத்தின் மெய்யான ஆணிவேராக இருந்தது. எனவே, நியாயப்பிரமாணத்தின் உண்மையான மற்றும் உள்ளான அர்த்தத்தையும் அதன் தேவையையும் வலியுறுத்துவதன் மூலம், அவருடைய போதனையை கேட்போரின் மனச்சாட்சியைத் தட்டியெழுப்புவதே நமது ஆண்டவரின் நோக்கமாக இருந்தது.
இம்மலைப்பிரசங்கம் மத்தேயு சுவிசேஷத்தில் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கும் லூக்கா 6-ல் உள்ள சமபூமிப் பிரசங்கத்திற்கும் இடையே உள்ள வேறுபாடுகள் தெளிவானவை என்பதும் எண்ணற்றவையுமாகும். நான்கு சுவிசேஷங்களில் மத்தேயு சுவிசேஷம் அதிக யூதப் பின்னணியைக் கொண்டுள்ளது என்ற கருத்து உண்மைதான் என்றாலும், இதன் பயன்பாட்டை கடந்த கால அல்லது எதிர்கால யூதர்களுக்கு மட்டுமே உரியதாக சுருக்குவது ஒரு பெரிய தவறாகும் என்று நாங்கள் நம்புகிறோம். மத்தேயு சுவிசேஷத்தின் முதல் வசனத்தில் கிறிஸ்து இருவிதங்களில் அறிமுகப்படுத்தப்பட்டிருப்பது, அப்படிப்பட்ட சுருக்கலான எண்ணத்திற்கு எதிராக நம்மை எச்சரிக்க வேண்டும். அங்கு அவர் தாவீதின் குமாரனாகவும், "விசுவாசிக்கிற யாவருக்கும் தகப்பனாகிய" ஆபிரகாமின் குமாரனாகவும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளார் (ரோமர் 4:11). எனவே, இந்த உரை எந்தக் காலத்திற்கும் பொருந்தக்கூடிய ஆவிக்குரிய கொள்கைகளை எடுத்துரைக்கிறது என்பதை நாங்கள் முழுமையாக நம்புகிறோம், இந்த அடிப்படையில்தான் நாம் தொடர்ந்து செல்லப்போகிறோம்.
அவருக்கு முன் வந்த யோவான் ஸ்நானகனைப் போலவே, கிறிஸ்துவின் முதல் பிரசங்கமும் சுருக்கமான ஆனால் மிக முக்கியமான ஒரு வாக்கியத்தில் தொகுக்கப்பட்டுள்ளதைக் காணலாம்: "மனந்திரும்புங்கள், பரலோகராஜ்யம் சமீபமாயிருக்கிறது" (மத்தேயு 3:2; 4:17). இந்தச் சுருக்கமான ஆய்வில், பரலோகராஜ்யம் என்றால் என்ன, அதன் வளர்ச்சியின் பல்வேறு காலக்கட்டங்கள் எவை என்பது போன்ற சுவாரஸ்யமான தலைப்புகளை விவாதிப்பது பொருத்தமாக இருக்காது. ஆனால் இந்த பாக்கியவான்கள் (Beatitudes), அந்த பரலோக ராஜ்யத்திற்கு உரியவர்கள் யார் என்பதையும், எவர்கள் மீது கிறிஸ்து தமது உன்னதமான ஆசீர்வாதங்களை அறிவித்தார் என்பதை குறித்து நமக்கு அநேக காரியங்களைப் போதிக்கின்றன.
கிறிஸ்து ஒருமுறை மாம்சத்தில் வந்தார், அவர் மீண்டும் வரப்போகிறார். ஒவ்வொரு வருகையும் பரலோக ராஜ்யத்தோடு தொடர்புடைய ஒரு குறிப்பிட்ட நோக்கத்தைக் கொண்டுள்ளது. தனிப்பட்ட ஆத்துமாக்களுக்குள் பரலோக ராஜ்யத்தின் அடித்தளத்தை அமைப்பதன் மூலம் மனிதர்கள் மத்தியிலும் மனிதர்கள் மீதும் ஒரு ராஜ்யத்தை நிறுவுவதே நமது ஆண்டவரின் முதல் வருகையின் நோக்கமாகும். அவரது இரண்டாம் வருகை அந்தப் ராஜ்யத்தின் மகிமையில் நிறுவுவதற்காக அமையும். எனவே, அந்த ராஜ்யத்தில் உள்ள குடிமக்களின் குணாதிசயங்கள் என்ன என்பதை நாம் புரிந்துகொள்வது மிகவும் முக்கியம்; அப்போதுதான் நாம் அந்த ராஜ்யத்தைச் சேர்ந்தவர்களா என்பதையும், அதன் நன்மைகள், பாதுகாப்புகள் தற்போதைய மற்றும் எதிர்கால சுதந்திரத்தின் ஒரு பகுதியாக இருக்கிறதா என்பதையும் நாம் அறிய முடியும்.
இந்த பாக்கியவான்கள் என்ற புத்தகத்தை கவனத்தோடு வாசிப்பதின் அவசியத்தை இதிலிருந்து ஒருவர் புரிந்துகொள்ளலாம். இவற்றை நாம் ஒட்டுமொத்தமாக ஆராய வேண்டும்; அவை இணைந்து கற்பிக்கும் பாடத்தின் ஒரு பகுதியை இழக்காமல், ஒன்றைக் கூட நாம் தனித்து எடுக்க முடியாது. இந்தப் பாக்கியங்கள் அனைத்தும் சேர்ந்து ஒரு முழுமையான ஓவியத்தை உருவாக்குகின்றன. ஒரு கலைஞர் ஒரு படத்தை வரையும்போது, ஒவ்வொரு கோடும் அழகாகவும் நேர்த்தியாகவும் வரைந்திருக்கலாம், ஆனால் அந்தக் கோடுகளின் சேர்க்கையே தான் நெருங்கிய உறவை வெளிப்படுத்துகிறது; பல்வேறு கலைவடிவங்கள் மற்றும் நுணுக்கமான தூரிகைத் தீண்டல்களின் கலவையே நமக்கு முழுமையான ஓவியத்தைத் தருகிறது. அதுபோலவே இங்கும், ஒவ்வொரு தனிப்பட்ட அம்சமும் தனக்கே உரிய அழகையும் நேர்த்தியையும் கொண்டு, சிறந்த கலைஞரின் கைவண்ணத்தைக் காட்டினாலும், எல்லாக் கோடுகளையும் ஒன்றாக இணைக்கும்போதுதான், தேவனுடைய ராஜ்யத்தின் மெய்யான குடிமகனின் முழுமையான ஓவியத்தை நாம் பெறுகிறோம்.
தேவனுடைய மாபெரும் இரட்சிப்பு "பணமுமின்றி விலையுமின்றி" (ஏசாயா 55:1) இலவசமாக வழங்கப்படுகிறது. இது தேவனுடைய கிருபையின் மகா இரக்கமுள்ள ஏற்பாடாகும்; தேவன் இரட்சிப்பை விலைக்கு விற்பாரானால், இந்த உலகில் எந்த ஒரு ஏழைப் பாவியாலும் அதை வாங்க முடியாது, ஏனென்றால் அதை வாங்குவதற்கு அவனிடம் எதுவும் இல்லை. ஆனால் பெரும்பான்மையான மக்கள் இதை உணருவதில்லை; ஆம், பரிசுத்த ஆவியானவர் பாவத்தால் குருடாக்கப்பட்ட நமது கண்களைத் திறக்கும் வரை நாமெல்லோரும் அப்படியே இருந்தோம். மரணத்திலிருந்து ஜீவனுக்குக் கடந்தவர்கள் மட்டுமே தங்கள் வறுமையை உணர்ந்து, பிச்சைக்காரர்களின் நிலையை ஏற்று, தேவனுடைய ஈவை சந்தோஷமாகப் பெற்று, உண்மையான செல்வத்தைத் தேடத் தொடங்குகின்றனர். இவ்வாறு "தரித்திரருக்குச் சுவிசேஷம் பிரசங்கிக்கப்படுகிறது" (மத்தேயு 11:5), அது அவர்களின் செவிகளுக்கு மட்டுமல்ல, அவர்களின் இருதயங்களுக்கும் பிரசங்கிக்கப்படுகிறது!
இவ்வாறு ஆவியில் எளிமை அதாவது ஒருவன் தன் வெறுமையையும் தேவையையும் உணர்ந்துகொள்ளும் நிலை, மனித இருதயத்திற்குள் பரிசுத்த ஆவியானவர் செய்யும் கிரியையின் விளைவாக உண்டாகிறது. 'என் நீதியெல்லாம் அழுக்கான கந்தையைப் போல இருக்கிறது' (ஏசாயா 64:6) என்ற வலிமிகுந்த கண்டுபிடிப்பிலிருந்து இது பிறக்கிறது. என்னுடைய மிகச் சிறந்த செயல்கள் கூட மும்மைசால் பரிசுத்தருக்கு ஏற்புடையதல்ல (ஆம், அது அவருக்கு அருவருப்பானது) என்ற உண்மையை நான் உணர்த்தப்படுவதைத் தொடர்ந்து இது வருகிறது. இவ்வாறு ஆவியில் எளிமையுள்ள ஒருவன், தான் நரகத்திற்குப் பாத்திரமான பாவி என்பதை உணர்ந்துகொள்கிறான்.
ஆவியில் எளிமையை விசுவாசத்தின் அடித்தள நிலை என்று கூறலாம். விசுவாசத்தினால் கிறிஸ்துவைப் பற்றிக்கொள்வதற்கு முன்பும், ஆவிக்குரிய விதத்தில் அவரது மாம்சத்தை புசித்து அவரது இரத்தத்தைப் பானம்பண்ணுவதற்கு (யோவான் 6:48-58) முன்பும் ஒருவன் தன் முழுமையான தகுதியற்ற நிலையை உணர்வதே இதுவாகும். கிறிஸ்து தன்னை நிரப்பும்படி, சுயத்தை இருதயத்திலிருந்து அகற்றும் ஆவியானவரின் கிரியை இதுவே. இது தேவையையும் வெறுமையையும் உணரும் நிலையாகும்.
எனவே, இந்த முதல் பாக்கியவான் என்பது அடிப்படையானதாகும், இது மறுபடியும் பிறந்த ஒவ்வொரு ஆத்துமாவிலும் காணப்படும் ஒரு அடிப்படைப் பண்பை விவரிக்கிறது. ஆவியில் எளிமையுள்ளவன் தன் சொந்தப் பார்வையில் ஒன்றுமில்லாதவன், தேவனுக்கு முன்பாகத் தூசியில் இருப்பதே தனக்குரிய சரியான இடம் என்று அவன் உணருகிறான். தவறான போதனைகள் அல்லது உலக ஆசைகளின் மூலமாக அவன் அந்த இடத்தை விட்டு விலகலாம், ஆனால் அவனை எப்படிக் கொண்டுவர வேண்டும் என்று தேவனுக்குத் தெரியும். அவருடைய உண்மை மற்றும் அன்பின் நிமித்தம் அவர் அதைச் செய்வார், ஏனென்றால் தேவனுக்கு முன்பாகத் தன்னைத் தாழ்த்தும் தாழ்மையின் இடமே அவருடைய பிள்ளைகளுக்கான ஆசீர்வாதத்தின் இடமாகும். தேவனை மகிமைப்படுத்தும் இந்த ஆவியைப் பயிற்றுவிக்கும் விதம் மத்தேயு 11:29-ல் கர்த்தராகிய இயேசுவால் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த ஆவியின் எளிமையைக் கொண்டிருப்பவன் பாக்கியவான் என்று அறிவிக்கப்படுகிறான்: ஏனெனில், சுபாவத்தின்படி அவனிடம் இருந்ததற்கு முற்றிலும் நேர்மாறான ஒரு மனநிலையை அவன் இப்போது கொண்டிருக்கிறான்; தெய்வீக கிருபையின் கிரியை அவனுக்குள் செயல்பட்டிருக்கிறது என்பதற்கான முதல் உறுதியான சாட்சியை அவன் பெற்றிருக்கிறான்; அப்படிப்பட்ட ஒரு ஆவி, உண்மையான செழிப்புக்காக தன்னைத் தாண்டி வெளியே பார்க்க அவனைத் தூண்டுகிறது; மேலும் அவன் பரலோக ராஜ்யத்தின் சுதந்தரவாளியாக இருக்கிறான்.
பாக்கியங்களும் கிறிஸ்துவும் (The Beatitudes and Christ)
மலைப்பொழிவின் பாக்கியங்களைக் குறித்த நமது தியானங்கள், ஆசீர்வதிக்கப்பட்ட நமது ஆண்டவரைப் பற்றிய சிந்தனைகளுக்கு நம்மை வழிநடத்தாவிட்டால் அவை முழுமையடையாது. நாம் இதுவரை விவரிக்க முயன்றபடி, இந்தப் பாக்கியங்கள் ஒரு கிறிஸ்தவனின் குணாதிசயங்களையும் நடத்தையையும் விவரிக்கின்றன. தேவகுமாரனின் சாயலுக்கு ஒப்பாக நாம் மாற்றப்படும் அனுபவப்பூர்வமான செயல்முறையின் மூலமாகவே கிறிஸ்தவ குணாதிசயம் நமக்குள் உருவாகிறது என்பதால், பூரண முன்மாதிரியாகிய அவர் மீதே நாம் நம்முடைய கண்களைப் பதிக்க வேண்டும். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவில், அவருடைய சீஷர்களிடம் (மங்கலான பிரதிபலிப்பாக) காணப்படும் பல்வேறு ஆவிக்குரிய கிருபைகளின் மிகப்பிரகாசமான வெளிப்பாட்டையும், மிக உயர்ந்த உதாரணத்தையும் நாம் காண்கிறோம். இந்தப் பரிபூரண குணங்களில் ஒன்று அல்லது இரண்டு மட்டுமல்ல, அனைத்தும் அவரில் வெளிப்பட்டன. ஏனெனில் அவர் அழகுள்ளவர் மட்டுமல்ல, "முற்றிலும் அழகுள்ளவர்" (உன்னதப்பாட்டு 5:16). அவரை மகிமைப்படுத்தும்படி வந்திருக்கின்ற பரிசுத்த ஆவியானவர், இப்பொழுது கிறிஸ்துவினுடையவைகளிலிருந்து எடுத்து நமக்கு அறிவிப்பாராக (யோவான் 16:14,15).
முதலாவதாக, "ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள்" என்ற வார்த்தைகளைக் கவனிப்போம். நாம் அவருடைய தரித்திரத்தினாலே ஐசுவரியவான்களாகும்படிக்கு, ஐசுவரியமுள்ளவராயிருந்தும் நமக்காகத் தரித்திரரானாரே (2கொரிந்தியர் 8:9) என்று அவரைப் பற்றி வேதாகமம் கூறுவதைப் பார்ப்பது எவ்வளவு ஆச்சரியமாக இருக்கிறது! அவர் தம்மீது ஏற்றுக்கொண்ட தரித்திரம் மெய்யாகவே மிகவும் பெரியது. இவ்வுலகப் பொருட்களில் ஏழைகளாக இருந்த பெற்றோருக்குப் பிறந்து, அவர் தமது பூமிக்குரிய வாழ்க்கையை ஒரு முன்னணையில் தொடங்கினார். தமது இளமைப் பருவத்திலும் வாலிப நாட்களிலும், தச்சுத் தொழிலாளியாகக் கடினமாக உழைத்தார். அவர் தமது பகிரங்க ஊழியத்தைத் தொடங்கிய பின்பு, நரிகளுக்குக் குழிகளும் ஆகாயத்துப் பறவைகளுக்கு அடைக்கலங்களுமுண்டு, மனுஷகுமாரனுக்கோ தலைசாய்க்க இடமில்லை என்று கூறினார் (லூக்கா 9:58). தீர்க்கதரிசன ஆவியானவரால் சங்கீதங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள மேசியாவைக் குறித்த வார்த்தைகளை நாம் ஆராய்ந்து பார்த்தால், அவர் மீண்டும் மீண்டும் தம்முடைய ஆவியின் எளிமையைத் தேவனிடம் அறிக்கை செய்திருப்பதைக் காணலாம்: "நானோ சிறுமையும் துக்கமுமுள்ளவன்" (சங்கீதம் 69:29); "கர்த்தாவே, உமது செவியைச் சாய்த்து, எனக்குக் கேட்டருளும்; நான் சிறுமையும் எளிமையுமானவன்" (சங்கீதம் 86:1); "நான் சிறுமையும் எளிமையுமானவன்; என் இருதயம் எனக்குள் புண்பட்டிருக்கிறது" (சங்கீதம் 109:22).
இரண்டாவதாக, "துயரப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்" என்ற வார்த்தைகளைத் தியானிப்போம். கிறிஸ்துவே மெய்யாகவே துயரப்படுபவர்களில் பிரதானமானவராக இருந்தார். பழைய ஏற்பாட்டுத் தீர்க்கதரிசனம் அவரை "துக்கங்களை அறிந்தவரும், பாடுள்ளவருமாயிருந்தார்" என்று முன்னறிவித்தது (ஏசாயா 53:3). ஓய்வுநாளை அடிமைத்தனமாக ஆசரிப்பது குறித்துப் பரிசேயர்களோடு விவாதித்தபோது, தேவனுடைய பரிசுத்த நியமத்தின் சரியான புரிதலை உபதேசத்தினாலும் உதாரணத்தினாலும் அவர்களுக்குக் கற்பிக்க முயன்ற அவர், "அவர்களுடைய இருதய கடினத்தினிமித்தம் அவர் துக்கப்பட்டு" அவர்களைப் பார்த்தார் (மாற்கு 3:5). செவிடனும் ஊமையனுமான ஒருவனைக் குணமாக்குமுன் அவர் பெருமூச்சு விட்டதைப் பாருங்கள் (மாற்கு 7:34). லாசருவின் கல்லறையருகே அவர் கண்ணீர் விட்டதைக் கவனியுங்கள் (யோவான் 11:35). தமக்கு விருப்பமான நகரத்தைக் குறித்து அவர் கதறியதைக் கேளுங்கள்: "எருசலேமே, எருசலேமே... உன் பிள்ளைகளை எத்தனையோ தரம் கூட்டிச்சேர்க்க மனதாயிருந்தேன்" (மத்தேயு 23:37). கெத்செமனே தோட்டத்தின் காரிருளில், "பலத்த சத்தத்தோடும் கண்ணீரோடும்" பிதாவிடம் அவர் தம்முடைய விண்ணப்பங்களை ஊற்றுவதை பயபக்தியோடு அணுகிப் பாருங்கள் (எபிரேயர் 5:7). சிலுவையிலிருந்து, "என் தேவனே, என் தேவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்?" என்று அவர் கதறுவதைக் கேட்கும்போது பயபக்தியோடு பணிந்து கொள்ளுங்கள் (மாற்கு 15:34). "வழியாய்ப் போகிறவர்களே, நீங்கள் எல்லாரும் இதைப் பாருங்கள்; ... என் துக்கத்துக்குச் சமமான துக்கம் உண்டோ என்று கவனித்துப்பாருங்கள்" (புலம்பல் 1:12) என்று அவர் கெஞ்சிக் கேட்பதற்குச் செவிகொடுத்துக் கேளுங்கள்.
மூன்றாவதாக, "சாந்தகுணமுள்ளவர்கள் பாக்கியவான்கள்" என்ற வார்த்தைகளில் கிறிஸ்துவின் அழகைக் காணுங்கள். மாம்சத்தில் வந்த மகிமையின் ஆண்டவருடைய அழகான தாழ்மையை விளக்கும் ஏராளமான உதாரணங்களை நற்செய்தி நூல்களிலிருந்து எடுக்கலாம். தமக்கு ஸ்தானாபதிகளாக அவர் தேர்ந்தெடுத்த மனிதர்களைக் கவனியுங்கள். ஞானிகளையோ, கற்றறிந்தவர்களையோ, பெரியவர்களையோ, மேன்மக்களையோ அவர் தேர்ந்தெடுக்கவில்லை. அவர்களில் குறைந்தபட்சம் நான்கு பேர் மீனவர்கள், ஒருவர் ரோம அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட, மக்களால் வெறுக்கப்பட்ட ஆயக்காரராகப் பணிபுரிந்தவர். அவர் கொண்டிருந்த சகவாசத்தில் அவருடைய தாழ்மையைக் காணுங்கள். அவர் செல்வந்தர்களையும் புகழ்பெற்றவர்களையும் தேடாமல், "ஆயக்காரருக்கும் பாவிகளுக்கும் சிநேகிதனாக" இருந்தார் (மத்தேயு 11:19). அவர் செய்த அற்புதங்களில் இதைக் காணுங்கள். தம்மால் குணமடைந்தவர்கள், தங்களுக்குச் செய்யப்பட்டதை எவருக்கும் சொல்ல வேண்டாம் என்று அவர் மீண்டும் மீண்டும் கட்டளையிட்டார். அவருடைய ஊழியத்தின் ஆரவாரமற்ற தன்மையில் இதைக் காணுங்கள். ஏழைகளுக்குத் தர்மம் செய்யும்போது தங்களுக்கு முன்பாக எக்காளம் ஊதும் மாயக்காரர்களைப் போலல்லாமல், அவர் புகழைத் தேடவில்லை; விளம்பரத்தைத் தவிர்த்தார், மக்கள் செல்வாக்கை வெறுத்தார். திரளான மக்கள் அவரைத் தங்கள் ஆராதனைக்குரியவராக மாற்ற நினைத்தபோது, அவர் அவர்களை விட்டு விலகினார் (மாற்கு 1:45; 7:24). "அவர்கள் வந்து தம்மை ராஜாவாக்கும்படிப் பிடித்துக்கொண்டுபோக மனதாயிருக்கிறார்கள் என்று இயேசு அறிந்து, மறுபடியும் விலகி, மலையின்மேல் தனித்துப்போனார்" (யோவான் 6:15). அவருடைய சகோதரர்கள் அவரை நோக்கி, "உம்மை உலகத்துக்கு வெளிப்படுத்தும்" என்று வற்புறுத்தியபோது, அவர் அதை மறுத்துவிட்டு, ரகசியமாகப் பண்டிகைக்குப் போனார் (யோவான் 7:2-10). தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றமாக, அவர் தம்மை இஸ்ரவேலருக்கு அவர்களின் ராஜாவாக வெளிப்படுத்தியபோது, ஒரு கழுதைக் குட்டியின் மேல் ஏறி மிகவும் தாழ்மையான முறையில் எருசலேமுக்குள் நுழைந்தார் (சகரியா 9:9; யோவான் 12:14).
நான்காவதாக, "நீதியின்மேல் பசியும் தாகமுமுள்ளவர்கள் பாக்கியவான்கள்" என்ற வார்த்தைகள் கிறிஸ்துவில் எவ்வாறு மிகச் சிறப்பாக முன்மாதிரியாகத் திகழ்கின்றன என்பதைக் கவனியுங்கள். மனிதனாகிய கிறிஸ்து இயேசுவின் அந்தரங்க வாழ்க்கையின் எப்பேர்ப்பட்ட சுருக்கம் இது! மாம்சத்தில் வெளிப்படுவதற்கு முன்பாகவே, பரிசுத்த ஆவியானவர்: "நீதி அவருக்கு அரைக்கட்டும், சத்தியம் அவருக்கு இடைக்கச்சையுமாயிருக்கும்" என்று அறிவித்தார் (ஏசாயா 11:5). கிறிஸ்து இந்த உலகத்தில் வந்தபோது, "தேவனே, உம்முடைய சித்தத்தின்படி செய்ய, இதோ, வருகிறேன்" என்றார் (எபிரேயர் 10:9). பன்னிரண்டு வயதுச் சிறுவனாக இருந்தபோது, "நான் என் பிதாவுக்கடுத்தவைகளில் இருக்கவேண்டியதென்று அறியீர்களா?" என்று கேட்டார் (லூக்கா 2:49). தம்முடைய பகிரங்க ஊழியத்தின் தொடக்கத்தில், "நியாயப்பிரமாணத்தையானாலும் தீர்க்கதரிசனங்களையானாலும் அழிக்க வந்தேன் என்று எண்ணிக்கொள்ளாதேயுங்கள்; அழிக்கிறதற்கு அல்ல, நிறைவேற்றுகிறதற்கே வந்தேன்" என்று அவர் அறிவித்தார் (மத்தேயு 5:17). தம்முடைய சீஷர்களிடம் அவர், "நான் என்னை அனுப்பினவருடைய சித்தத்தின்படி செய்து அவருடைய கிரியையை முடிப்பதே என்னுடைய போஜனமாயிருக்கிறது" என்று கூறினார் (யோவான் 4:34). அவரைப் பற்றிப் பரிசுத்த ஆவியானவர், "நீர் நீதியை விரும்பி, அக்கிரமத்தை வெறுக்கிறீர்; ஆதலால் தேவனே, உம்முடைய தேவன் உமது தோழரைப் பார்க்கிலும் உம்மை ஆனந்ததைலத்தினால் அபிஷேகம்பண்ணினார்" என்று கூறியுள்ளார் (சங்கீதம் 45:7). எனவே, அவரை "கர்த்தரே நமது நீதி" என்று அழைப்பது மிகவும் பொருத்தமே (எரேமியா 23:6).
ஐந்தாவதாக, "இரக்கமுள்ளவர்கள் பாக்கியவான்கள்" என்ற வார்த்தைகளைக் கவனியுங்கள். கிறிஸ்துவில் இரக்கம் உருவெடுத்திருப்பதை நாம் காண்கிறோம். பாவிகளாகக் கெட்டுப்போயிருந்தவர்கள் மேலுள்ள இரக்கமே, தேவகுமாரன் பரலோகத்தின் மகிமையைப் பூமியின் அவமானத்திற்காக மாற்றிக்கொள்ளக் காரணமாக இருந்தது. தமது மக்களுக்காகச் சாபமாகும்படி அவரைச் சிலுவைக்குக் கொண்டு சென்றது அந்த அற்புதமான, ஈடு இணையற்ற இரக்கமே. எனவே, "நாம் செய்த நீதியின் கிரியைகளினிமித்தம் அவர் நம்மை இரட்சிக்காமல், தமது இரக்கத்தின்படியே... நம்மை இரட்சித்தார்" (தீத்து 3:5). அவர் இப்போதும் நமக்காக "இரக்கமும் உண்மையுமுள்ள பிரதான ஆசாரியராக" (எபிரேயர் 2:17) இரக்கத்தைச் செயல்படுத்துகிறார். எனவே, நாமும் தொடர்ந்து "நித்தியஜீவனுக்கேதுவாக நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினுடைய இரக்கத்தைப் பெறக் காத்திருக்க" வேண்டும் (யூதா 21). ஏனெனில் அவர் தம்மை விசுவாசிக்கிற அனைவருக்கும் நியாயத்தீர்ப்பு நாளில் இரக்கத்தைக் காண்பிப்பார் (2 தீமோத்தேயு 1:18).
ஆறாவதாக, "இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள்" என்ற வார்த்தைகளைத் தியானியுங்கள். இதுவும் கிறிஸ்துவில் முழுமையாக வெளிப்படுத்தப்பட்டது. அவர் "குற்றமில்லாத மாசற்ற ஆட்டுக்குட்டி" (1 பேதுரு 1:19). மனிதனானதில், அவர் பாவத்தின் எந்தவொரு தீட்டாலும் கறைபடாமல் மாசற்றவராக இருந்தார். அவருடைய மனிதத்தன்மை முற்றிலும் பரிசுத்தமானது (லூக்கா 1:35). அவர் "பரிசுத்தரும், குற்றமற்றவரும், மாசற்றவரும், பாவிகளுக்கடுத்தவர்கள் அல்லாதவரும்" ஆவார் (எபிரேயர் 7:26). "அவரில் பாவம் இல்லை" (1 யோவான் 3:5). ஆகையால், அவர் "பாவஞ்செய்யவில்லை" (1 பேதுரு 2:22) மற்றும் "பாவம் அறியாதவராயிருந்தார்" (2 கொரிந்தியர் 5:21). "அவர் சுத்தமுள்ளவராயிருக்கிறார்" (1 யோவான் 3:3). அவர் சுபாவத்தில் முற்றிலும் சுத்தமாக இருந்ததால், அவருடைய நோக்கங்களும் செயல்களும் எப்போதும் சுத்தமாகவே இருந்தன. "நான் என் மகிமையைத் தேடுகிறதில்லை" (யோவான் 8:50) என்று அவர் கூறியபோது, தமது பூமிக்குரிய வாழ்க்கை முழுவதையும் சுருக்கமாகக் கூறினார்.
ஏழாவதாக, "சமாதானம்பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள்" என்ற வார்த்தைகளைத் தியானியுங்கள். நமது ஆசீர்வதிக்கப்பட்ட இரட்சகருக்கு இது முற்றிலும் பொருந்தும். "அவர் சிலுவையில் சிந்தின இரத்தத்தினாலே சமாதானத்தை உண்டாக்கினவர்" (கொலோசெயர் 1:20). தேவனுடைய கோபத்தைத் தணித்து, மீறப்பட்ட அவருடைய நியாயப்பிரமாணத்தின் ஒவ்வொரு கோரிக்கையையும் நிறைவேற்றி, அவருடைய நீதியையும் பரிசுத்தத்தையும் மகிமைப்படுத்தும் கிருபாதார பலியாக (ரோமர் 3:25) அவர் நியமிக்கப்பட்டார். அவர் யூதர்களுக்கும் புறஜாதிகளுக்கும் இடையிலும் சமாதானத்தை ஏற்படுத்தினார் (எபேசியர் 2:11-18). இப்போதும் கிறிஸ்து இயேசு தமது பிதாவாகிய தாவீதின் சிங்காசனத்தில் மகிமையுடன் வீற்றிருந்து (அப்போஸ்தலர் 2:29-36), "சமாதானப் பிரபுவாக" அரசாட்சி செய்கிறார். "தாவீதின் சிங்காசனத்தின்மேலும்... அவருடைய கர்த்தத்துவத்தின் பெருக்கத்துக்கும், அதின் சமாதானத்துக்கும் முடிவில்லை" (ஏசாயா 9:6, 7). மரித்தோரை எழுப்பவும், உலகத்தை நீதியுடன் நியாயந்தீர்க்கவும் கிறிஸ்து திரும்ப வரும்போது, அவர் இந்தப் போரினால் சீரழிந்த பூமியைப் பாவத்திலிருந்தும் வீழ்ச்சியின் எல்லா விளைவுகளிலிருந்தும் தூய்மையாக்குவார் (ரோமர் 8:19-23). "நீதி வாசமாயிருக்கும் புதிய வானங்களும் புதிய பூமியும் உண்டாகுமென்று" (2 பேதுரு 3:13) கிறிஸ்து சமாதானத்தை நிலைநாட்டும் அந்தக் காலத்திற்காக நாம் நம்பிக்கையுடன் காத்திருக்கலாம்.
எட்டாவதாக, "நீதியினிமித்தம் துன்பப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்" என்ற வார்த்தைகளைத் தியானியுங்கள். வெளிப்படுத்தின விசேஷம் 12:4-ல் அவருக்கு அடையாளப்பூர்வமாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளபடி, நீதிபரராகிய அவரைப் போல எவரும் துன்புறுத்தப்பட்டதில்லை! தீர்க்கதரிசன ஆவியின் மூலம் அவர், "நான் சிறுவயதுமுதல் சிறுமைப்பட்டவனும் மாளும் தறுவாயிலிருக்கிறவனுமாயிருக்கிறேன்" என்று அறிவித்தார் (சங்கீதம் 88:15). தமது ஊழியத்தின் தொடக்கத்தில், இயேசு (தமது சொந்த ஊரான) நாசரேத்தில் உபதேசித்துக்கொண்டிருந்தபோது, மக்கள் "எழுந்து, அவரை ஊருக்குப் புறம்பே தள்ளி, ... தலைகீழாய்த் தள்ளும்படிக்குத் தங்கள் ஊர் கட்டப்பட்டிருந்த மலையின் சிகரத்துக்கேற்றிக் கொண்டுபோனார்கள்" (லூக்கா 4:29). தேவாலய வளாகத்தில், யூதர்களின் தலைவர்கள் "அவர்மேல் எறியும்படி கல்லுகளை எடுத்துக்கொண்டார்கள்" (யோவான் 8:59). அவரது ஊழியம் முழுவதும் எதிரிகளால் அவர் பின்தொடரப்பட்டார். மதத்தலைவர்கள் அவர் பிசாசு பிடித்தவர் என்று குற்றம் சாட்டினார்கள் (யோவான் 8:48). வாசலில் உட்கார்ந்திருக்கிறவர்கள் அவருக்கு விரோதமாய்ப் பேசினார்கள்; குடிகாரரின் பாட்டுகளுமானார் (சங்கீதம் 69:12). அவருடைய விசாரணையின்போது அவர்கள் அவருடைய முடியைப் பிடுங்கினார்கள் (ஏசாயா 50:6), அவருடைய முகத்தில் துப்பினார்கள், அவரைக் குட்டினார்கள், மற்றும் அவரைத் தங்கள் கைகளால் அறைந்தார்கள் (மத்தேயு 26:67). போர்வீரர்களால் வாரினால் அடிக்கப்பட்டு முள்முடி சூட்டப்பட்ட பிறகு, அவர் சிலுவையிலறையப்படும்படி தமது சொந்தச் சிலுவையைச் சுமந்துகொண்டு கல்வாரிக்கு வழிநடத்தப்பட்டார். அவருடைய மரண வேளையில்கூட அவர் சமாதானமாக விடப்படவில்லை, நிந்தைகளாலும் பரிகாசங்களாலும் துன்புறுத்தப்பட்டார். அவர் நிமித்தம் நாம் சகிக்க அழைக்கப்பட்டிருக்கும் துன்புறுத்தல், இதோடு ஒப்பிடுகையில், விவரிக்க முடியாத அளவுக்கு எவ்வளவு இலகுவானது!
இதேவிதமாக, பாக்கியங்களோடு இணைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு வாக்குத்தத்தமும் கிறிஸ்துவில் நிறைவேறுகிறது. அவர் ஆவியில் எளிமையுள்ளவராக இருந்தார், பரலோகராஜ்யம் முதன்மையாக அவருடையதே. அவர் துயரப்பட்டார், ஆனாலும் அவர் தமது ஆத்துமா வருத்தப்பட்டு அடைந்த பலனைக் கண்டு திருப்தியாவார் (ஆறுதலடைவார்) (ஏசாயா 53:11). அவர் சாந்தகுணத்தின் உருவமாக இருந்தார், ஆனாலும் இப்போது அவர் மகிமையின் சிங்காசனத்தில் வீற்றிருக்கிறார். அவர் நீதியின்மேல் பசியும் தாகமுமாக இருந்தார், ஆனாலும் அவர் நடப்பித்த நீதி தம்முடைய மக்களுக்குச் சாட்டப்பட்டிருப்பதைக் கண்டு இப்போது திருப்தியால் நிரம்பியிருக்கிறார். இருதயத்தில் சுத்தமுள்ளவரான அவர், வேறு எவரும் காணாத வகையில் தேவனைக் காண்கிறார் (மத்தேயு 11:27). சமாதானம்பண்ணுகிறவராகிய அவர், தம்மால் இரத்தக் கிரயம்கொடுத்து வாங்கப்பட்ட பிள்ளைகள் அனைவராலும் தேவனுடைய இணையற்ற குமாரனாக அங்கீகரிக்கப்படுகிறார். துன்புறுத்தப்பட்டவராக, அவருடைய பலன் மிகுதியானது; ஏனெனில் அவருக்கு எல்லாவற்றிற்கும் மேலான நாமம் கொடுக்கப்பட்டுள்ளது (பிலிப்பியர் 2:9-11). மனுபுத்திரரிலும் மகா சௌந்தரியமுள்ளவராகிய (சங்கீதம் 45:2) அவரோடு தேவனுடைய ஆவியானவர் நம்மை மேன்மேலும் ஐக்கியப்படுத்துவாராக.
"நீதியினிமித்தம் துன்பப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்; பரலோகராஜ்யம் அவர்களுடையது. என்னிமித்தம் உங்களை நிந்தித்துத் துன்பப்படுத்தி, பலவித தீமையான மொழிகளையும் உங்கள்பேரில் பொய்யாய்ச் சொல்வார்களானால் பாக்கியவான்களாயிருப்பீர்கள். சந்தோஷப்பட்டு, களிகூருங்கள்; பரலோகத்தில் உங்கள் பலன் மிகுதியாயிருக்கும்; உங்களுக்கு முன்னிருந்த தீர்க்கதரிசிகளையும் அப்படியே துன்பப்படுத்தினார்களே" (மத். 5:10-12).
கிறிஸ்தவ வாழ்க்கை மனித அறிவுக்கு எட்டாத, ஆனால் ஆவிக்குரிய மனதால் எளிதில் புரிந்துகொள்ளக்கூடிய விசித்திரமான முரண்பாடுகள் நிறைந்தது. தேவனுடைய பரிசுத்தவான்கள் சொல்லிமுடியாத மகிழ்ச்சியினால் களிகூருகிறார்கள்; ஆயினும் உலகத்தார் சற்றும் அறியாத ஒரு புலம்பலோடு துக்கப்படுகின்றனர். கிறிஸ்துவுக்குள் வாழும் விசுவாசி, தனது எல்லா வாஞ்சைகளையும் தீர்க்கவல்ல ஜீவனுள்ள மனநிறைவின் ஊற்றோடு தொடர்புகொண்டிருந்தாலும், தாகமுள்ள மான் நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல அவன் தேவனை நோக்கி வாஞ்சித்துக் கதறுகிறான் (சங். 42:1). அவன் தன் இருதயத்திலே கர்த்தரைப் பக்தியுடன் பாடிக் கீர்த்தனம்பண்ணுகிறான்; அதேவேளையில் அனுதினமும் ஆழமாகப் பெருமூச்சுவிடுகிறான். அவனுடைய அனுபவம் அடிக்கடி வேதனையும் தடுமாற்றமும் நிறைந்ததாகக் காணப்பட்டாலும், உலகத்தின் பொன்னையெல்லாம் கொடுத்தாலும் அவன் அந்த அனுபவத்தை விட்டுக்கொடுக்க மாட்டான். இந்த வியக்கத்தக்க முரண்பாடுகளே, அவன் தேவனால் மெய்யாகவே ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறான் என்பதற்கான சான்றுகளாகும். இத்தகைய சிந்தனைகளே இப்பொழுது நாம் தியானிக்கும் வேதப்பகுதியினால் எழுப்பப்படுகின்றன. நிந்திக்கப்படுகிறவர்களும், துன்புறுத்தப்படுகிறவர்களும், அவதூறு செய்யப்படுகிறவர்களுமே பாக்கியவான்கள் என்று மனித அறிவினால் யார் தான் முடிவுசெய்ய முடியும்?
மனிதர்களுடைய சாபங்களும், கிறிஸ்துவின் ஆசீர்வாதங்களும் ஒரே நபர்களின் மீது வந்து சேர்கின்றன என்பது மனிதனுடைய முழுமையான சீர்கேட்டிற்கு (human depravity) ஒரு வலுவான சான்றாகும். ஒரு மனிதன் நீதியினிமித்தம் நிந்திக்கப்பட்டு, துன்புறுத்தப்பட்டு, சகலவிதமான தீமைகளுக்கும் பொய்யாக ஆளாவான் என்று யார் நினைத்திருப்பார்கள்? துன்மார்க்கர்கள் உண்மையிலேயே நீதியை வெறுத்து, தங்கள் அயலகத்தாரை வஞ்சிப்பவர்களை நேசிக்கிறார்களா? இல்லை; தங்களுக்குச் சாதகமாக இருக்கும் நீதியை அவர்கள் வெறுப்பதில்லை. தேவனைப் பற்றியும், மார்க்கத்தைப் பற்றியுமான நீதியைத்தான் அவர்கள் வெறுக்கிறார்கள்.
கிறிஸ்தவர்கள் நியாயம்செய்து, இரக்கத்தைச் சிநேகிப்பதோடு மட்டும் திருப்தியடைந்து, தேவனுக்கு முன்பாக மனத்தாழ்மையாய் நடப்பதைக் (மீகா 6:8) கைவிடுவார்களாயின், அவர்கள் இவ்வுலகத்தில் சமாதானத்தோடு மட்டுமின்றி, பாராட்டுதலோடும் வாழலாம். ஆயினும், கிறிஸ்து இயேசுவுக்குள் தேவபக்தியாய் நடக்க மனதாயிருக்கிற யாவரும் துன்பப்படுவார்கள் (2 தீமோ. 3:12). இத்தகைய வாழ்க்கை மனிதர்களின் பக்தியற்ற தன்மையைக் கண்டித்துணர்த்தி, அவர்களுடைய கோபத்தைத் தூண்டிவிடுகிறது (ஆண்ட்ரூ ஃபுல்லர்).
வசனங்கள் 10-12 ஒன்றாய் இணைந்து, பாக்கியங்களின் வரிசையில் எட்டாவதும் இறுதியுமான பாக்கியமாக அமைகின்றன. இரட்டிப்பான நடத்தைக்கு இது இரட்டிப்பான ஆசீர்வாதத்தை வழங்குகிறது. இது இரண்டு கோணங்களில் நோக்கப்பட வேண்டும் என்பதை இது உணர்த்துகிறது. முந்தின வசனங்களில் கிறிஸ்து விவரித்த சுபாவத்தைக் கொண்டவர்கள் நிச்சயமாகச் சந்திக்கப்போகும் அனுபவத்தை விளக்கும் ஒரு பிற்சேர்க்கையாக 10-ஆம் வசனம் அமைந்துள்ளது.
மாம்ச சிந்தை தேவனுக்கு விரோதமான பகை (ரோமர் 8:7); தேவனுடைய பிள்ளைகள் எவ்வளவுக்கு எவ்வளவு அவருடைய சாயலுக்கு ஒப்பாக மாறுகிறார்களோ, அவ்வளவுக்கு அவ்வளவு அவருடைய சத்துருக்களின் பகையைத் தங்கள் மேல் வருவிப்பார்கள். "நீதியினிமித்தம் துன்பப்படுதல்" என்பது, சரியானபடி வாழ்வதன் காரணமாக எதிர்க்கப்படுவதைக் குறிக்கிறது. தங்கள் கிறிஸ்தவக் கடமையைச் செய்கிறவர்கள், தங்களைப் பிரியப்படுத்தி வாழ்பவர்களைக் குற்றப்படுத்துவதனால், அவர்களின் வெறுப்பைச் சம்பாதிக்கிறார்கள். இந்தத் துன்புறுத்தல் நச்சரிப்பதிலும் ஏளனம் செய்வதிலும் தொடங்கி, ஒடுக்குவதிலும் வதைப்பதிலும் முடிகிற பல வடிவங்களை எடுக்கிறது.
வசனங்கள் 10-12, ஏழாவது பாக்கியத்திற்குத் துணையாக அமைகின்றன. சமாதானம்பண்ணுகிறவர்களாக இருக்க கிறிஸ்தவர்கள் எடுக்கும் முயற்சிகளே சாத்தானின் கோபத்தை எழுப்பி, அவனுடைய பிள்ளைகளை அதிகம் கிளர்ந்தெழச் செய்கின்றன. அவர் மீதும் அவருடைய சுவிசேஷத்தின் மீதும் நாம் வைக்கும் பற்றுறுதி, நம்முடைய சொந்த சமாதானத்தையே குலைத்து, போராட்டங்களையும் யுத்தங்களையும் கொண்டுவரும் என்பதை எதிர்பார்க்கவே கர்த்தர் இங்கே நம்மை ஆயத்தப்படுத்துகிறார். "உங்களுக்கு முன்னிருந்த தீர்க்கதரிசிகளையும் அப்படியே துன்பப்படுத்தினார்களே" என்று அவர் கூறும்போது இதற்கான சான்று காணப்படுகிறது. தேவனுக்காகச் செய்யப்படும் ஊழியமே மிகக் கடுமையான எதிர்ப்பை வரவழைக்கிறது. அவருடைய சிலுவை நிரந்தரமாக நிரூபித்துக்காட்டியதுபோல, கிறிஸ்துவுக்குப் பகைமையான ஒரு உலகத்தில்தான் நாம் வாழ்கிறோம் என்பதால் இது தவிர்க்க முடியாதது.
தம்முடைய சீஷர்கள் தங்கள் கடமையைச் செய்யும்போது எதிர்பார்க்க வேண்டிய மூன்று வகையான பாடுகளை 11-ஆம் வசனத்தில் கர்த்தர் குறிப்பிடுகிறார். முதலாவது நிந்தனை, அதாவது வாய்மொழியான வசவு. இரண்டாவது துன்புறுத்தல். இது "பின்தொடர்வது" அல்லது "வேட்டையாடுவது" என்ற பொருளைத் தரும் கிரேக்கச் சொல்லின் சரியான மொழிபெயர்ப்பாகும். இங்கு அது உடல் ரீதியாகவோ அல்லது வார்த்தை ரீதியாகவோ தொந்தரவு செய்வதைக் குறிக்கிறது. சவுல் கிறிஸ்துவால் பிடிக்கப்படுவதற்கு முன்பு சபையைத் துன்புறுத்தியதும் (அப். 8, 9) இதில் அடங்கும். மூன்றாவது வகையான பாட்டைக் குறித்துக் கூறும்போது, "பலவித தீமையான மொழிகளையும் உங்கள்பேரில் பொய்யாய்ச் சொல்வார்களானால்..." என்கிறார். இவ்வாறு தம்முடைய பரிசுத்தவான்களின் நற்பெயரின் மீது சுமத்தப்படும் அவதூறுகளை அவர் விவரிக்கிறார். தேவனுடைய பிள்ளைகளின் பாடுகளைத் தீவிரப்படுத்துவதற்காகப் பிசாசு இடைவிடாமல் உருவாக்கும் எண்ணற்ற பொய்க் குற்றச்சாட்டுகள், எளிதில் புண்படும் மனதுடையவர்களுக்கு இரட்டிப்பான வேதனையைத் தருகின்றன.
"நீதியினிமித்தம்", "என்னிமித்தம்" என்ற வார்த்தைகள், நாம் கர்த்தராகிய இயேசுவைப் பின்பற்றுகிறோம் என்ற ஒரே காரணத்திற்காகத்தான் எதிர்க்கப்படுகிறோமே தவிர, நம்முடைய சொந்தத் தவறான நடத்தையினாலோ விவேகமற்ற செயல்களினாலோ அல்ல என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள நம்மை எச்சரிக்கின்றன (1 பேதுரு 2:19-24 பார்க்கவும்).
உபத்திரவம் எப்போதுமே தேவனுடைய மக்களின் பங்காகவே இருந்து வந்திருக்கிறது. காயீன் ஆபேலைக் கொலை செய்தான். "எதினிமித்தம் அவனைக் கொலைசெய்தான்? தன் கிரியைகள் பொல்லாதவைகளும், தன் சகோதரனுடைய கிரியைகள் நீதியுள்ளவைகளுமாயிருந்ததினிமித்தமே" (1 யோவான் 3:12). யோசேப்பு தன் சகோதரர்களால் துன்பப்படுத்தப்பட்டு, எகிப்திலே நீதியினிமித்தம் சிறையில் தள்ளப்பட்டான் (ஆதியாகமம் 37, 39). மோசே மீண்டும் மீண்டும் நிந்திக்கப்பட்டான் (யாத். 5:21; 14:11; 16:2; 17:2). சாமுவேல் தள்ளப்பட்டான் (1 சாமு. 8:5). எலியா அவமதிக்கப்பட்டு (1 இராஜா. 18:17), துன்புறுத்தப்பட்டான் (1 இராஜா. 19:2). மீகாயா பகைக்கப்பட்டான் (1 இராஜா. 22:8). நெகேமியா ஒடுக்கப்பட்டு அவதூறு செய்யப்பட்டான் (நெகேமியா 4). தேவனுடைய உண்மையுள்ள சாட்சியாகிய இரட்சகர்தாமே, தாம் யாருக்கு ஊழியம் செய்தாரோ அந்த மக்களாலேயே கொல்லப்பட்டார். ஸ்தேவான் கல்லெறியப்பட்டான்; பேதுருவும் யோவானும் சிறையிலடைக்கப்பட்டார்கள்; யாக்கோபு சிரச்சேதம் பண்ணப்பட்டான்; அப்போஸ்தலனாகிய பவுலின் முழு கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும் கசப்பான, இடைவிடாத துன்புறுத்தல்களின் நீண்ட தொடராகவே இருந்தது.
முந்தைய காலங்களை விட இன்று பரிசுத்தவான்கள் படும் உபத்திரவம் சற்றே மிதமான வடிவத்தில் இருக்கிறது என்பது உண்மைதான். ஆயினும் அது முற்றிலும் மெய்யானதே. தேவனுடைய கிருபையினால் நாம் நீண்டகாலமாகச் சட்டப்படியான துன்புறுத்தல்களிலிருந்து பாதுகாக்கப்பட்டிருக்கிறோம்; ஆனால் சாத்தானின் பகைமை தன்னை வெளிப்படுத்திக்கொள்ள வேறு வழிகளைக் கண்டறிகிறது. உபத்திரவப்படும் கிறிஸ்தவர்கள் இந்த ஆறுதலான சத்தியத்தை நினைவில்கொள்ளட்டும்: "ஏனெனில் கிறிஸ்துவினிடத்தில் விசுவாசிக்கிறதற்கு மாத்திரமல்ல, அவர்நிமித்தமாகப் பாடுபடுகிறதற்கும் உங்களுக்கு அருளப்பட்டிருக்கிறது" (பிலிப்பியர் 1:29). யோவான் 15:19, 20-ல் உள்ள கிறிஸ்துவின் வார்த்தைகள் ஒருபோதும் நீக்கப்படவில்லை:
"நீங்கள் உலகத்தாராயிருந்தால், உலகம் தன்னுடையதைச் சிநேகித்திருக்கும்; நீங்கள் உலகத்தாராயிராதபடியினாலும், நான் உங்களை உலகத்திலிருந்து தெரிந்துகொண்டபடியினாலும், உலகம் உங்களைப் பகைக்கிறது. ஊழியக்காரன் தன் எஜமானிலும் பெரியவனல்லவென்று நான் உங்களுக்குச் சொன்ன வார்த்தையை நினைத்துக்கொள்ளுங்கள். அவர்கள் என்னைத் துன்பப்படுத்தினதுண்டானால், உங்களையும் துன்பப்படுத்துவார்கள்; அவர்கள் என் வசனத்தைக் கைக்கொண்டதுண்டானால், உங்கள் வசனத்தையும் கைக்கொள்ளுவார்கள்."
உலகத்தின் பகைமை தன்னை ஏளனம், நிந்தனை, அவதூறு, மற்றும் விலக்கிவைத்தல் ஆகியவற்றின் மூலம் வெளிப்படுத்துகிறது. "நீங்கள் நன்மைசெய்து பாடுபடும்போது பொறுமையோடே சகித்தால் அதுவே தேவனுக்கு முன்பாகப் பிரீதியாயிருக்கும்" (1 பேதுரு 2:20) என்ற இந்த வார்த்தைக்குச் செவிகொடுக்க தெய்வீக கிருபை நமக்கு உதவுவதாக.
தம்மீதுள்ள பக்தியினிமித்தம் பாடுபடும்படி அழைக்கப்படுபவர்களைக் கர்த்தராகிய இயேசு இங்கே பாக்கியவான்கள் என்று அறிவிக்கிறார். இரட்சகருடைய பாடுகளில் ஐக்கியமாகும் விவரிக்க முடியாத சிலாக்கியத்தைப் பெறுவதால் அவர்கள் பாக்கியவான்கள் (பிலிப்பியர் 3:10). "உபத்திரவம் பொறுமையையும், பொறுமை பரீட்சையையும், பரீட்சை நம்பிக்கையையும் உண்டாக்குகிறது" என்பதனால் அவர்கள் பாக்கியவான்கள் (ரோமர் 5:3-5). வரப்போகும் அந்தப் பெரிய நாளில் அவர்கள் முழுமையாகப் பலனளிக்கப்படுவார்கள் என்பதனால் அவர்கள் பாக்கியவான்கள். இது நிச்சயமாகவே ஒரு மேன்மையான ஆறுதலாகும்.
பொல்லாங்கன் எய்யும் அக்கினியாஸ்திரங்களினிமித்தம் சிலுவையின் வீரன் கலக்கமடைய வேண்டாம். மாறாக, தேவன் அருளியுள்ள சர்வாயுதவர்க்கத்தை அவன் இன்னும் உறுதியாகத் தரித்துக்கொள்ளட்டும். கிறிஸ்துவைப் பிரியப்படுத்த எடுக்கும் முயற்சிகளினால், தங்களைக் கிறிஸ்தவர்கள் என்று அழைத்துக்கொள்ளும் சிலர் தங்களைக் குறித்துத் தீமையாகப் பேசுவதைக் கண்டு தேவனுடைய பிள்ளை சோர்ந்துபோக வேண்டாம். அக்கினி போன்ற சோதனைகள் தேவனுடைய அதிருப்தியின் அடையாளம் என்று கிறிஸ்தவன் எண்ணிவிட வேண்டாம்.
"சந்தோஷப்பட்டு, களிகூருங்கள்." கிறிஸ்துவுக்கு உண்மையாய் இருப்பதனால் வரும் உபத்திரவங்களைப் பொறுமையோடு சகித்துக்கொள்வது மட்டுமல்லாமல், அவற்றை மகிழ்ச்சியோடும் சந்தோஷத்தோடும் ஏற்றுக்கொள்ள வேண்டும். மூன்று காரணங்களுக்காக நாம் இதைச் செய்ய வேண்டும். (1) இந்த உபத்திரவங்கள் கிறிஸ்துவினிமித்தம் நமக்கு வருகின்றன; நம்மை மீட்கும்படி அவர் அவ்வளவு பாடுகளைச் சகித்திருக்க, அவருக்காகச் சிறிதளவு பாடுபடும்படி நாம் அழைக்கப்படும்போது நாம் மிகவும் களிகூர வேண்டும். (2) இந்தச் சோதனைகள் இரத்தச்சாட்சிகளின் உன்னத கூட்டத்தாரோடு நம்மை ஐக்கியப்படுத்துகின்றன; ஏனெனில் உபத்திரவங்களைச் சந்திப்பது நம்மைப் பரிசுத்த தீர்க்கதரிசிகளோடும் அப்போஸ்தலர்களோடும் இணைக்கிறது. அத்தகைய ஐக்கியத்தில், நிந்தனை புகழ்ச்சியாகவும், அவமானம் மகிமையாகவும் மாறுகிறது. (3) கிறிஸ்துவினிமித்தம் உபத்திரவப்படுகிற நமக்கு பரலோகத்தில் மிகுந்த பலன் வாக்குத்தத்தம் பண்ணப்பட்டுள்ளது. ஆகையால், தற்போதைய போராட்டம் எவ்வளவு கடுமையாக இருந்தாலும் நாம் மெய்யாகவே களிகூரலாம்.
"அநித்தியமான பாவ சந்தோஷங்களை அனுபவிப்பதைப் பார்க்கிலும் தேவனுடைய ஜனங்களோடேகூடத் துன்பத்தை அனுபவிப்பதையே" (எபி. 11:25) நாம் மனப்பூர்வமாகத் தெரிந்துகொண்டிருப்பதால், அவருடைய உறுதியான வாக்குத்தத்தத்தின்படி நாமும் அவரோடேகூட ஆளுகை செய்வோம் (ரோமர் 8:17). "அவருடைய நாமத்திற்காகத் தாங்கள் அவமானமடைவதற்குப் பாத்திரராக எண்ணப்பட்டபடியினால், சந்தோஷமாய் ஆலோசனை சங்கத்தைவிட்டுப் புறப்பட்டுப்போன" பேதுருவையும் யோவானையும் நினைத்துக்கொள்ளுங்கள் (அப். 5:41). அப்படியே, பிலிப்பு பட்டணத்துச் சிறைச்சாலையில், முதுகு கிழிபட்ட நிலையிலும் பவுலும் சீலாவும் "தேவனைத் துதித்துப் பாடினார்கள்" (அப். 16:25). பரலோகத்தில் தங்களுக்கு அதிக மேன்மையும் நிலையுள்ளதுமான சுதந்தரம் உண்டென்று அறிந்து, மற்றவர்கள் "தங்கள் ஆஸ்திகளையும் சந்தோஷமாய்க் கொள்ளையிடக் கொடுத்தார்கள்" (எபி. 10:34) என்று வாசிக்கிறோம்.
அவதூறு செய்யப்பட்ட, தவறாகப் புரிந்துகொள்ளப்பட்ட, ஒடுக்கப்பட்ட தேவனுடைய பரிசுத்தவான்கள் அனைவரும், தங்களுக்குத் தேவையான அந்த ஆறுதலையும் பெலனையும் கிறிஸ்துவின் இந்த விலையேறப்பெற்ற வார்த்தைகளிலிருந்து பெற்றுக்கொள்ளத் தெய்வீக கிருபை உதவுவதாக.
"சமாதானம்பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனுடைய புத்திரர் என்னப்படுவார்கள்" (மத்தேயு 5:9).
இந்த ஏழாவது பாக்கியமே விளக்கியுரைக்க மிகவும் கடினமானதாகும். 'சமாதானம்பண்ணுகிறவர்கள்' என்னும் வார்த்தையின் சரியான அர்த்தத்தையும் அதன் வீச்சையும் தீர்மானிப்பதிலேயே இந்தச் சிரமம் அடங்கியிருக்கிறது. கர்த்தராகிய இயேசு, "சமாதானத்தை விரும்புகிறவர்கள் பாக்கியவான்கள்" என்றோ, "சமாதானத்தைக் காத்துக்கொள்ளுகிறவர்கள் பாக்கியவான்கள்" என்றோ கூறாமல், "சமாதானம்பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள்" என்று கூறுகிறார். ஜென்மசுபாவமுள்ள மனிதனிடம்கூட சில சமயங்களில் காணப்படும், ஒற்றுமை மற்றும் இணக்கத்தின் மீதான அன்பு, சண்டை சச்சரவுகள் மீதான வெறுப்பு ஆகியவற்றை விடவும், மிகவும் மேன்மையான ஒரு காரியமே இங்கு சொல்லப்பட்டிருக்கிறது என்பது வெளிப்படையாகவே தெரிகிறது. ஏனெனில், இங்கு கவனத்தில் கொள்ளப்படும் சமாதானம்பண்ணுகிறவர்கள், தேவனுடைய புத்திரர்கள் என அழைக்கப்படுவார்கள்.
இதற்கான சரியான விளக்கத்தைக் கண்டடைய மூன்று காரியங்கள் நமக்கு வழிகாட்ட வேண்டும்: (1) நம்முடைய ஆண்டவர் பேசிக்கொண்டிருந்தவர்களின் குணாதிசயம்; (2) பாக்கியங்களின் வரிசையில் நம்முடைய வசனம் வகிக்கும் இடம்; (3) அடுத்து வரும் பாக்கியத்துடனான இதன் தொடர்பு.
பொதுவாக யூதர்கள், புறஜாதியினரைக் கடுமையான அசட்டையுடனும் வெறுப்புடனும் கருதினார்கள். மேலும், மேசியாவின் ஆளுகையின் கீழ், இந்த தேசங்கள் முற்றிலும் அழிக்கப்படும் வரை அல்லது தேவனுடைய தெரிந்துகொள்ளப்பட்ட மக்களுக்குக் கீழ்ப்படுத்தப்படும் வரை, அவர்கள் மீது தடையில்லாத தொடர்ச்சியான போர்த்தாக்குதல்கள் நடைபெறும் என்றும் எதிர்பார்த்தார்கள் [தங்கள் முற்பிதாக்களின் அனுபவங்களைக் குறித்து யோசுவாவின் புஸ்தகத்தில் வாசித்தவற்றின் அடிப்படையில் அமைந்த ஒரு கருத்தாகவே இது சந்தேகமின்றி இருந்தது]. பிரபுவாகிய மேசியாவின் கீழ், புறஜாதிகள் இஸ்ரவேலுக்குச் செய்த எல்லாத் தீங்குகளுக்கும் பழிவாங்கும் பணியில் ஈடுபடுபவர்களே, 'பாக்கியவான்கள்' எனப்படுவதற்குத் தகுதியானவர்கள் என்பது அவர்களுடைய எண்ணமாக இருந்தது.
ஆனால், புதிய ஏற்பாட்டு முறைமையின் ஆவியோ எவ்வளவு மாறுபட்டது! அதன் நிறுவனரின் பிறப்பைக் கொண்டாடிய தேவதூதர்களின் பாடலுடன் இது எவ்வளவு அழகாகப் பொருந்துகிறது: "உன்னதத்திலிருக்கிற தேவனுக்கு மகிமையும், பூமியிலே சமாதானமும், மனுஷர்மேல் பிரியமும் உண்டாவதாக!" (டாக்டர். ஜான் பிரவுன்).
இந்த ஏழாவது பாக்கியம், குணாதிசயத்தை விட நடத்தையோடு அதிகம் தொடர்புடையது. எனினும், சமாதானத்தை ஏற்படுத்த செயல்முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதற்கு முன்பாக, முதலில் ஒரு சமாதானமான ஆவி இருக்க வேண்டியது அவசியமே. மலைப்பிரசங்கத்தின் இந்த முதல் பகுதியில், கர்த்தராகிய இயேசு தம்முடைய ராஜ்யத்தில் குடிமக்களாகவும் பிரஜைகளாகவும் இருப்பவர்களின் குணத்தை வரையறுக்கிறார் என்பதை நினைவில் கொள்வோம். முதலில், ஒரு தெய்வீக கிரியை நிகழ்த்தப்படுபவர்களின் ஆரம்ப அனுபவங்களின் அடிப்படையில் அவர்களை அவர் விவரிக்கிறார். முன்பே கூறப்பட்டபடி, முதல் நான்கு பாக்கியங்களும் அவர்களுடைய இருதயங்களில் உள்ள சுயத்தை வெறுக்கச் செய்யும் கிருபைகளை (negative graces) வெளிப்படுத்துவதாக ஒன்றாகத் தொகுக்கப்படலாம். கிறிஸ்துவின் குடிமக்கள் தங்களைத்தாமே சார்ந்திருப்பவர்களாக (self-sufficient) அல்லாமல், தங்கள் ஆவிக்குரிய வறுமையை உணர்ந்தவர்களாக ஆவியில் எளிமையுள்ளவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் தன்னிறைவு அடைந்தவர்களாக இல்லாமல், தங்கள் ஆவிக்குரிய நிலையைக் குறித்துத் துக்கிக்கிறார்கள். அவர்கள் தற்பெருமை உள்ளவர்களாக இல்லாமல், சாந்தகுணமுள்ளவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் சுயநீதியுள்ளவர்களாக இல்லாமல், வேறொருவருடைய நீதிக்காகப் பசித்துத் தாகித்திருக்கிறார்கள்.
அடுத்த மூன்று பாக்கியங்களில், ஆண்டவர் அவர்களின் நேர்மறையான கிருபைகளைப் பெயரிட்டுக் கூறுகிறார். தேவனுடைய இரக்கத்தை ருசித்தவர்களாய், மற்றவர்களிடம் இரக்கமுள்ளவர்களாக இருக்கிறார்கள். ஆவியானவரிடமிருந்து ஒரு ஆவிக்குரிய சுபாவத்தைப் பெற்றவர்களாய், தேவனுடைய மகிமையைக் காண அவர்களுடைய நோக்கம் ஒருமையானதாக இருக்கிறது. கிறிஸ்து தம்முடைய சிலுவையின் இரத்தத்தினால் ஏற்படுத்திய சமாதானத்தில் பிரவேசித்தவர்களாய், இப்போது மற்றவர்களையும் அத்தகைய சமாதானத்தின் அனுபவத்திற்குக் கொண்டுவருவதற்காக அவரால் பயன்படுத்தப்படுவதற்கு ஆர்வமாக இருக்கிறார்கள்.
இந்த ஏழாவது பாக்கியத்தின் பொருளை உறுதிப்படுத்துவதில், வேறெதையும்விட ஒருவேளை அதிகமாக நமக்கு உதவுவது, இதற்கும் உடனடியாகத் தொடர்ந்து வரும் பாக்கியத்திற்கும் இடையே உள்ள தொடர்பே ஆகும். முந்தைய அதிகாரங்களில், பாக்கியங்கள் வெளிப்படையாக ஜோடிகளாகத் தொகுக்கப்பட்டிருப்பதை நாம் கவனத்திற்குக் கொண்டுவந்துள்ளோம். ஆவியில் எளிமை எப்போதும் துக்கத்துடன் சேர்ந்து வருகிறது; அதுபோலவே சாந்தமும் தேவனுடைய நீதிக்கான பசிதாகத்துடன் சேர்ந்து வருகிறது. மனிதர்களிடம் இரக்கம் காட்டுவது, தேவனிடம் இருதயத்தின் சுத்தத்தோடு இணைக்கப்பட்டுள்ளது; சமாதானம்பண்ணுவதும், நீதிக்காகத் துன்பப்படுத்தப்படுவதோடு இணைக்கப்பட்டுள்ளது. எனவே, வசனங்கள் 10-12 ஆகியவை வசனம் 9-க்கான திறவுகோலை நமக்கு வழங்குகின்றன. மேலே குறிப்பிடப்பட்ட மூன்று தனித்தனி நோக்குகளில் ஒவ்வொன்றிலிருந்தும் ஏழாவது பாக்கியத்தை அணுகுவதன் மூலம், நாம் ஒரே முடிவுக்கே வருகிறோம்.
முதலாவதாக, பழைய உடன்படிக்கையின் கீழும், புதிய உடன்படிக்கையின் கீழும் முறையே தேவன் தம்முடைய மக்களுக்கு ஒதுக்கிய பணிகளுக்கு இடையே உள்ள குறிப்பிடத்தக்க வேறுபாட்டைச் சிந்திப்போம். நியாயப்பிரமாணம் கொடுக்கப்பட்ட பிறகு, இஸ்ரவேலர் பட்டயத்தை எடுத்து, கானான் தேசத்தைக் கைப்பற்றி, யெகோவாவின் எதிரிகளை அழிக்கும்படி கட்டளையிடப்பட்டார்கள். உயிர்த்தெழுந்த கிறிஸ்துவோ, தம்முடைய சபைக்கு வேறுபட்ட கட்டளைகளைக் கொடுத்துள்ளார். இந்தச் சுவிசேஷ ஏற்பாட்டுக் காலம் முழுவதும், நாம் சகல தேசத்தாருக்கும் சிலுவையின் தூதுவர்களாகச் சென்று, ஜென்மசுபாவத்தின்படி நம்முடைய எஜமானுக்கு விரோதமாகப் பகைமையில் இருப்பவர்களை ஒப்புரவாக்குதலை நாட வேண்டும்.
இரண்டாவதாக, சமாதானம்பண்ணும் இந்தக் கிருபையானது, முந்தைய வசனங்களில் குறிப்பிடப்பட்ட ஆறு கிருபைகளையும் நிறைவுசெய்கிறது. இது ஏழாவது பாக்கியமாக இருப்பது, கிறிஸ்தவ குணத்திற்கு முழுமையையும் நிறைவையும் கொடுக்கும் பண்பு இதுவே என்று கற்பிக்கவே நம்முடைய ஆண்டவர் நாடினார் என்பதைச் சுட்டிக்காட்டலாம். சமாதானத்தின் ஸ்தானாபதிகளாக அனுப்பப்படுவது சொல்லொணா சிலாக்கியம் என்பதை நாம் நிச்சயமாக முடிவு செய்ய வேண்டும். மேலும், தங்களைக் கிறிஸ்தவர்களாகக் கருதிக்கொண்டும், சக பாவிகளின் இரட்சிப்பில் எந்த அக்கறையும் இல்லாதவர்கள், தங்களைத்தாமே ஏமாற்றிக்கொள்கிறார்கள். அவர்கள் குறைபாடுள்ள ஒரு கிறிஸ்தவத்தையே கொண்டிருக்கிறார்கள்; மேலும் தேவனுடைய புத்திரர்களின் பாக்கியமான சுதந்தரத்தில் பங்குபெற அவர்களுக்கு எந்த உரிமையும் இல்லை.
மூன்றாவதாக, நாம் சமாதானம்பண்ணுகிறவர்களாக இருப்பது பற்றிய இந்த விஷயத்திற்கும், நம்முடைய எஜமான் வசனங்கள் 10-12-ல் குறிப்பிடும் துன்புறுத்தலுக்கும் இடையே ஒரு திட்டவட்டமான தொடர்பு உள்ளது. தம்முடைய பிரசங்கத்தில் கிறிஸ்தவ குணம் மற்றும் அனுபவத்தின் இந்த இரண்டு அம்சங்களையும் அருகருகே குறிப்பிடுவதன் மூலம், கடமையின் பாதையில் தம்முடைய சீடர்கள் சந்திக்கும் எதிர்ப்பானது, அவர்கள் அழைக்கப்பட்ட ஊழியத்தில் அவர்கள் காட்டும் உண்மைத்தன்மையின் (faithfulness) விளைவே என்பதைக் கிறிஸ்து கற்பிக்கிறார். ஆகவே, நம்முடைய வசனத்தில் சொல்லப்பட்டுள்ள சமாதானம்பண்ணுதல் என்பது, முதன்மையாக, தேவனுக்கு எதிராகத் தீவிரமாகப் போரிடுபவர்களை (யோவான் 15:17-27-ஐ ஒப்பிடுக) அவருடன் ஒப்புரவாக்கும் நோக்கத்திற்காக, தேவனுடைய கரங்களில் கருவிகளாக நாம் இருப்பதையே குறிக்கிறது என்று நாம் உறுதியாக இருக்கலாம்.
நம்முடைய வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சமாதானம்பண்ணுகிறவர்கள் என்போர், பாவிகள் தேவனுடன் ஒப்புரவாகும்படி மன்றாடிக் கேட்டுக்கொள்பவர்களே (2 கொரிந்தியர் 5:20) என்ற முடிவுக்கு எங்களை இட்டுச்சென்ற காரணங்களைப் பற்றி ஓரளவு விரிவாகவே பேசியுள்ளோம். ஏனெனில், பெரும்பாலான விளக்கவுரையாளர்கள் தங்கள் விளக்கங்களில் மிகவும் திருப்திகரமாக இல்லை. ஒற்றுமையை மேம்படுத்தவும், பிளவுகளைச் சரிசெய்யவும், பிரிந்துபோனவர்களை மீட்டெடுக்கவும் முயற்சிப்பவர்கள் மீது கிறிஸ்து கூறிய ஆசீர்வாதத்தைத் தவிர வேறொன்றையும் அவர்கள் இந்தப் பாக்கியத்தில் காணவில்லை. இது மிகவும் ஆசீர்வதிக்கப்பட்ட ஒரு செயல் என்றும், கிறிஸ்து தங்களுக்குள் வாசம் செய்வதால் ஒரு கிறிஸ்தவர் சமாதானத்தையும் ஒற்றுமையையும் நேசிப்பவராக இருக்கிறார் என்பதையும் நாங்கள் முழுமையாக ஒப்புக்கொண்டாலும், நம்முடைய ஆண்டவர் இங்கு இதையே மனதில் கொண்டிருந்தார் என்று நாங்கள் நம்பவில்லை.
கிறிஸ்துவில் விசுவாசமுள்ளவர், துன்மார்க்கனுக்குச் சமாதானம் இல்லை என்பதை அறிவார். ஆகவே, அவர்கள் தேவனோடிணங்கி, சமாதானம் அடைய வேண்டும் என்று அவர் மிகுந்த ஆவலோடு விரும்புகிறார் (யோபு 22:21). விசுவாசிகள், தேவனுடனான சமாதானம் நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாக மட்டுமே கிடைக்கும் என்பதை அறிவார்கள் (கொலோசெயர் 1:19, 20). இந்தக் காரணத்திற்காகவே, பரிசுத்த ஆவியானவர் நம்மை வழிநடத்தும்படி, நாம் நம்முடைய சக மனிதர்களிடம் அவரைப் பற்றிப் பேசுகிறோம். நாம் "சமாதானத்தின் சுவிசேஷத்திற்குரிய ஆயத்தம் என்னும் பாதரட்சையைத் தொடுத்தவர்களாய்" இருக்கிறோம் (எபேசியர் 6:15); ஆகவே, மற்றவர்களுக்குத் தேவனுடைய கிருபையைக் குறித்துச் சாட்சி கூறுவதற்கு நாம் ஆயத்தப்படுத்தப்பட்டிருக்கிறோம். நம்மைக் குறித்துச் சொல்லப்பட்டுள்ளது: "சமாதானத்தைக்கூறி, நற்காரியங்களைச் சுவிசேஷமாய் அறிவிக்கிறவர்களுடைய பாதங்கள் எவ்வளவு அழகானவைகள்!" (ரோமர் 10:15). இப்படிப்பட்ட அனைவரும் நம்முடைய ஆண்டவரால் பாக்கியவான்கள் என அறிவிக்கப்படுகிறார்கள். அவர்கள் பாக்கியவான்களாக இல்லாமல் இருக்க முடியாது. நம்முடைய சொந்த ஆத்துமாக்களில் சமாதானத்தின் அனுபவத்தைப் பெற்ற மகிழ்ச்சிக்கு அடுத்தபடியாக, மற்றவர்களும் (தேவனுடைய கிருபையினால்) இந்தச் சமாதானத்திற்குள் பிரவேசிக்கும்படி கொண்டுவருவதில் நாம் அடையும் மகிழ்ச்சியே சிறந்ததாக இருக்க வேண்டும்.
இதன் பரந்த பயன்பாட்டில், கிறிஸ்துவின் இந்த வார்த்தையானது, பிரச்சனைகளைத் தணித்து சாந்தப்படுத்துவதில் மகிழ்ச்சி அடையும், தவறுகளைச் சரிசெய்வதை நோக்கமாகக் கொண்ட, சிரமங்களைச் சமாளித்து நீக்குவதன் மூலமும், கசப்புணர்வுகளைச் சமன்செய்து அமைதிப்படுத்துவதன் மூலமும் பிரிந்த உறவுகளை மீட்டெடுக்க முயலும், தம்மைப் பின்பற்றுபவர்களில் உள்ள அந்த ஆவியையும் குறிப்பிடலாம்.
"சமாதானம்பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனுடைய புத்திரர் என்னப்படுவார்கள்." இங்கு 'என்னப்படுவார்கள்' என்னும் வார்த்தையானது, "அங்கீகரிக்கப்படுவார்கள்" என்று பொருள்படுவதாகத் தெரிகிறது. தேவன் அவர்களைத் தம்முடைய சொந்தப் பிள்ளைகளாக ஏற்றுக்கொள்வார். அவர் "சமாதானத்தின் தேவனாக" இருக்கிறார் (எபிரெயர் 13:20). மீட்பின் அற்புதமான திட்டத்தில் அவருடைய மகத்தான நோக்கம், 'பரலோகத்திலுள்ளவைகளையும் பூலோகத்திலுள்ளவைகளையும் கிறிஸ்துவுக்குள் ஒன்றாகச் சேர்ப்பதாகும்' (எபேசியர் 1:10). மேலும், கிறிஸ்தவ சத்தியத்தின் செல்வாக்கின் கீழ் சமாதானம்பண்ணுகிறவர்கள் அனைவரும், தேவனுடைய அதே கிரியையின் தத்துவத்தால் ஏவப்பட்டு, "கீழ்ப்படியும் பிள்ளைகளாக" (1 பேதுரு 1:14) அவருடைய நன்மை செய்யும் நோக்கத்தில் அவருடன் ஒத்துழைப்பவர்களாக இருக்கிறார்கள் என்பதைக் காட்டுகிறார்கள் (டாக்டர். ஜான் பிரவுன்).
உலகம் அவர்களை மதவெறியர்களாக இகழ்ந்தாலும், பெயர் சார்ந்த கிறிஸ்தவர்கள் (professors of religion) அவர்களைக் குறுகிய மனப்பான்மை கொண்ட பிரிவினைவாதிகளாகக் கருதினாலும், அவர்களின் உறவினர்கள் அவர்களை மூடர்களாகப் பார்த்தாலும், மகத்துவமுள்ள தேவனோ இப்பொழுதே அவர்களைத் தம்முடைய பிள்ளைகளாக ஏற்றுக்கொண்டு, தம்முடைய விசேஷித்த அக்கறையின் அடையாளங்களால் அவர்களை வேறுபடுத்தி, அவர்கள் தேவனுடைய குமாரர்கள் என்பதை அவர்களுக்குச் சாட்சி கொடுக்கும்படி தம்முடைய ஆவியானவர் அவர்களுக்குள் செயல்படச் செய்கிறார். ஆனால் வரப்போகும் நாளில், ஒன்றுகூட்டப்பட்ட பிரபஞ்சத்தின் முன்னிலையில் அவர்களுடன் தமக்குள்ள உறவை அவர் பகிரங்கமாக அறிவிப்பார். இந்த வாழ்க்கையில் அவர்களுடைய நிலை எவ்வளவு தாழ்வாக இருந்தாலும், சக மனிதர்களால் எவ்வளவு இகழப்பட்டுத் தவறாகச் சித்தரிக்கப்பட்டாலும், அவர்கள் ஒரு நாள் "தங்கள் பிதாவின் ராஜ்யத்தில் சூரியனைப் போலப் பிரகாசிப்பார்கள்" (மத்தேயு 13:43). அப்போதுதான், நெடுநாளாக எதிர்பார்க்கப்பட்ட மகிமையான "தேவனுடைய குமாரர்களின் வெளிப்பாடு" (ரோமர் 8:19) நிகழும்.
"இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள்" (மத்தேயு 5:8).
கர்த்தருடைய சத்துருக்களால் கடுமையாகத் திரித்துக்கூறப்படும் பாக்கியங்களில் இதுவும் ஒன்றாகும். இவர்கள், தங்களுக்கு முன்னோடிகளான பரிசேயர்களைப் போலவே, தங்களைச் சத்தியத்தின் பாதுகாவலர்களாகக் காட்டிக்கொண்டு, மெய்யான தேவனுடைய மக்கள் உரிமைபாராட்டத் துணியும் பரிசுத்த வாழ்க்கையை விடத் தங்களது வாழ்க்கை அதிக மேன்மையானது என்று பெருமையடித்துக்கொள்கிறார்கள். மேலும், மறுபிறப்பின் அனுபவமில்லாத பழைய மனிதனின் முழுமையான பரிசுத்தத்தை உரிமைபாராட்டும் பரிதாபத்திற்குரிய, வஞ்சிக்கப்பட்ட ஆத்துமாக்கள் இக்கிறிஸ்தவ யுகம் முழுவதும் இருந்துகொண்டுதான் இருக்கிறார்கள். மற்றவர்களோ, தங்களுடைய மாம்ச சுபாவம் முற்றிலுமாக வேரறுக்கப்படும் அளவுக்குத் தேவன்தாமே தங்களைப் புதிப்பித்துவிட்டார் என்றும், ஆகையால் தாங்கள் பாவங்களைச் செய்வதில்லை என்பது மட்டுமன்றி, தங்களுக்குப் பாவ இச்சைகளோ சிந்தனைகளோ இல்லை என்றும் வற்புறுத்திக் கூறுகின்றனர்.
ஆயினும், பரிசுத்த ஆவியினால் ஏவப்பட்ட அப்போஸ்தலனாகிய யோவான், "நமக்குப் பாவமில்லையென்போமானால், நம்மைநாமே வஞ்சிக்கிறவர்களாயிருப்போம், சத்தியம் நமக்குள் இராது" (1 யோவான் 1:8) என்று அறிவிக்கிறார். நிச்சயமாகவே, இத்தகையவர்கள் தங்களுடைய வீணான வஞ்சகத்திற்குச் சாதகமாக, பாவப்பரிகாரத்தின் சட்டபூர்வமான (legal benefits of the Atonement) நன்மைகளை விளக்குகிற வேதவாக்கியங்களைத் தங்கள் சொந்த அனுபவத்திற்குத் தவறாகப் பயன்படுத்துகின்றனர். "அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்" (1 யோவான் 1:7) என்னும் வார்த்தைகள், தீமையின் கறைபடுத்தும் அசுத்தங்கள் அனைத்திலிருந்தும் நமது இருதயங்கள் கழுவப்பட்டுவிட்டன என்ற பொருளைத் தருவதில்லை; மாறாக, கிறிஸ்துவின் தியாகப் பலியானது, நீதிவிசாரணையின்படி (judicial) நமது பாவங்களைத் துடைத்துப்போடப் போதுமானதாயிருக்கிறது என்பதையே முதன்மையாகப் போதிக்கிறது.
கிறிஸ்துவுக்குள் புதிய சிருஷ்டியாக இருக்கிற மனிதனை விவரிக்கும் அப்போஸ்தலனாகிய பவுல், "பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின" (2 கொரிந்தியர் 5:17) என்று கூறும்போது, கிறிஸ்தவனுடைய இருதயத்தின் புதிய மனப்பான்மையைக் குறித்தே பேசுகிறார். இது பரிசுத்த ஆவியானவரின் மறுபிறப்பின் கிரியைக்கு முன்னிருந்த அவனுடைய உள்ளான மனப்பான்மைக்கு முற்றிலும் மாறானதாகும்.
இருதயத்தின் பரிசுத்தம் என்பது வாழ்வில் பாவமே இல்லாத நிலை (sinlessness of life) அல்ல என்பது, தேவனுடைய பரிசுத்தவான்களின் வாழ்க்கை குறித்து ஆவியானவரால் ஏவப்பட்டு எழுதப்பட்ட வேதப் பதிவுகளிலிருந்து (inspired record) தெளிவாகிறது. நோவா குடித்து வெறித்திருந்தான்; ஆபிரகாம் உண்மையை மறைத்துப் பேசினான்; மோசே தேவனுக்குக் கீழ்ப்படியவில்லை; யோபு தன் பிறந்த நாளைச் சபித்தான்; எலியா யேசபேலுக்குப் பயந்து ஓடினான்; பேதுரு கிறிஸ்துவை மறுதலித்தான். "ஆம், ஆனால் இவையெல்லாம் கிறிஸ்தவம் ஸ்தாபிக்கப்படுவதற்கு முன்பு நடந்தவை அல்லவா!" என்று யாராவது ஆச்சரியத்துடன் கேட்கலாம். உண்மைதான், ஆனால் அதன் பின்னரும் நிலைமை அப்படித்தான் இருக்கிறது. அப்போஸ்தலனாகிய பவுலை விட மேன்மையான ஆவிக்குரிய நிலையை அடைந்த ஒரு கிறிஸ்தவனைக் கண்டுபிடிக்க நாம் எங்கே செல்வது? அவருடைய அனுபவம் என்ன? ரோமர் 7-ஆம் அதிகாரத்தை வாசித்துப் பாருங்கள்.
அவர் நன்மை செய்ய விரும்பியபோது, அவரிடம் தீமை இருந்தது (வச. 21). அவருடைய மனதின் பிரமாணத்திற்கு விரோதமாய்ப் போராடுகிற வேறொரு பிரமாணத்தைத் தம்முடைய அவயவங்களில் அவர் கண்டார்; அது அவரைப் பாவப்பிரமாணத்திற்குச் சிறையாக்கிற்று (வச. 23). அவர் தம்முடைய மனதினாலே தேவனுடைய நியாயப்பிரமாணத்துக்கும், மாம்சத்தினாலேயோ பாவப்பிரமாணத்துக்கும் ஊழியஞ்செய்தார் (வச. 25). சத்தியம் என்னவென்றால், நாம் சுத்தமான இருதயத்தைக் கொண்டிருக்கிறோம் என்பதற்கான மிக உறுதியான சான்றுகளில் ஒன்று, நமது இருதயங்களைத் தொடர்ந்து அலைக்கழிக்கும் எஞ்சியுள்ள அசுத்தத்தைக் குறித்த விழிப்புணர்வும் உணர்வுமே ஆகும். ஆனால், நமது வேதப்பகுதிக்கு நாம் இன்னும் நெருங்கி வருவோம்: "இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள்."
மலைப்பொழிவின் (Sermon on the Mount) எந்தப் பகுதிக்குப் பொருள்விளக்கம் தேடும்போதும், முதலாவது நாம் நினைவில்கொள்ள வேண்டியது என்னவென்றால், நமது கர்த்தர் யாருக்குப் போதித்தாரோ அவர்கள் யூத மார்க்கத்தில் வளர்க்கப்பட்டவர்கள் என்பதே. ஆவியானவரால் மிகவும் ஆழமாய்ப் போதிக்கப்பட்ட ஒருவர் (Dr. John Brown) இவ்வாறு கூறுகிறார்:
"நமது கர்த்தர் இங்கு பயன்படுத்தும் வார்த்தைகளில், யூத மக்களுக்குரிய புறம்பான பரிசுத்தம் அல்லது தூய்மையின் தன்மையையும், அந்தத் தன்மையோடு இணைக்கப்பட்டிருந்த தேவனோடுள்ள ஐக்கியத்தின் சிறப்புரிமையையும் மறைமுகமாகக் குறிப்பிடுகிறார் என்றே நான் நினைக்கிறேன். அவர்கள் விக்கிரகாராதனையால் தீட்டுப்பட்டிருந்த ஜாதிகளிலிருந்து பிரிக்கப்பட்டவர்கள்; யேகோவாவுக்குப் பரிசுத்தமானவர்களாகப் பிரித்தெடுக்கப்பட்டவர்கள். மேலும், ஒரு பரிசுத்த ஜனமாக, ஜீவனுள்ள மெய்த் தேவனாகிய தங்கள் தேவனை அவருடைய ஆராதனை முறைமைகளில் அணுகுவதற்கு அவர்கள் அனுமதிக்கப்பட்டிருந்தார்கள். இந்தத் தன்மையைக் கொண்டிருப்பதிலும், இந்தச் சிறப்புரிமையை அனுபவிப்பதிலும் யூத மக்கள் பெருமிதம் கொண்டார்கள்."
"ஆனால், மேசியாவின் ஆட்சியின்கீழ் உள்ள குடிமக்களுக்கு இதைவிட மேன்மையான ஒரு தன்மையும், மேன்மையான ஒரு சிறப்புரிமையும் உரியதாய் இருந்தது. அவர்கள் புறம்பாக மட்டும் பரிசுத்தமாய் இல்லாமல், 'இருதயத்தில் சுத்தமுள்ளவர்களாக' இருக்க வேண்டும். மேலும், அவர்கள் தேவனுடைய மகிமை வாசம்பண்ணும் பரிசுத்த ஸ்தலத்தை அணுகுவதற்கு மட்டும் அனுமதிக்கப்படாமல், 'தேவனைத் தரிசிக்கவும்', அவரோடு மிக நெருக்கமான ஐக்கியத்திற்குள் வழிநடத்தப்படவும் வேண்டும். இவ்விதமாக, யூத மக்களின் புறம்பான தன்மை மற்றும் சிறப்புரிமைகளுக்கு முரணாக, மேசியாவின் குடிமக்களுடைய ஆவிக்குரிய தன்மை மற்றும் சிறப்புரிமைகளின் விவரிப்பாகப் பார்க்கும்போது, நம்முன் உள்ள இந்தப் பகுதி மிக முக்கியமான, சுவாரஸ்யமான சத்தியத்தால் நிறைந்துள்ளது."
"இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள்." கிறிஸ்துவின் இந்த வார்த்தைகள், மறுபிறப்பின்போது பெற்றுக்கொள்ளும் புதிய இருதயத்தைக் குறிக்கிறதா அல்லது ஆத்துமாவில் நடைபெறும் தேவ கிருபையின் செயலின் விளைவாக ஏற்படும் நற்குணத்தின் தார்மீக மறுரூபத்தைக் குறிக்கிறதா என்பதில் கருத்து வேறுபாடு உள்ளது. அநேகமாக இந்த இரண்டு சத்தியங்களும் இங்கு இணைந்திருக்கலாம். வரிசையின் பிற்பகுதியில் இந்த ஆசீர்வாதம் இடம்பெறுவதைக் கருத்தில் கொண்டால், நமது இரட்சகர் எந்த இருதயத்தின் சுத்தத்தின் மீது ஆசீர்வாதத்தைக் கூறுகிறாரோ, அது புதிய பிறப்போடு இணைந்தும் அதைத் தொடர்ந்தும் வருகிற ஒரு உள்ளான சுத்திகரிப்பு (internal cleansing) ஆகும். இயற்கையான மனிதனிடம் எவ்வித உள்ளான சுத்தமும் இல்லாதபடியால், தேவபக்தியுள்ள மனிதனிடம் கிறிஸ்து காணும் இந்தச் சுத்தம், அதன் ஆரம்பக் கட்டமான பரிசுத்த ஆவியானவரின் இறையாண்மையுள்ள மறுபிறப்பின் கிரியைக்கே கொண்டுசெல்லப்பட வேண்டும்.
சங்கீதக்காரன், "இதோ, உள்ளத்தில் உண்மையிருக்க விரும்புகிறீர்; அந்தக்கரணத்தில் ஞானத்தை எனக்குத் தெரியப்படுத்துவீர்" (சங்கீதம் 51:6) என்று கூறுகிறார். தேவன் எதிர்பார்க்கும் இந்த ஆவிக்குரிய சுத்தமானது, இன்று கிறிஸ்தவ உலகத்தில் பெருமளவு முயற்சிகளாகச் செய்யப்படும் வெறும் புறம்பான சீர்திருத்தங்களையும் புதுப்பித்தல்களையும் தாண்டி மிக ஆழமாகச் செல்கிறது! இன்று நம்மைச் சுற்றி நாம் காண்பதில் பெரும்பாலானவை, கிரியைகளின் மூலமாக இரட்சிப்பைத் தேடும் மார்க்கமாகவோ, அல்லது ஒரு மரபுவழி கோட்பாட்டை ஏற்றுக்கொண்டு திருப்தியடையும் மூளையறிவுக்குரிய மார்க்கமாகவோ இருக்கின்றன. ஆனால் தேவனோ "இருதயத்தைப் பார்க்கிறார்" (1 சாமுவேல் 16:7); அதாவது, அவர் மனிதனின் புரிதல், வாஞ்சைகள், சித்தம் ஆகியவற்றை உள்ளடக்கிய முழுமையான உள்ளான மனிதனை நோக்குகிறார். தேவன் உள்ளான மனிதனை நோக்குவதால்தான், அவர் தம்முடைய மக்களுக்கு ஒரு "புதிய இருதயத்தை" (எசேக்கியேல் 36:26) கொடுக்க வேண்டியதாய் இருக்கிறது. அப்படிப்பட்ட புதிய இருதயத்தைப் பெற்றுக்கொண்டவர்கள் மெய்யாகவே பாக்கியவான்கள்; ஏனெனில் சுத்தமான இருதயமே அதைக் கொடுப்பவருக்குப் பிரியமானது.
மேலே குறிப்பிடப்பட்டுள்ளதுபோல, இந்த ஆறாம் பாக்கியம் மறுபிறப்பின்போது பெற்றுக்கொள்ளும் புதிய இருதயத்தையும், அதைத் தொடர்ந்து ஆத்துமாவில் நடைபெறும் தேவ கிருபையின் செயலினாலான மறுரூபமாக்கப்படுதலையும் உள்ளடக்கியது என்று நாம் நம்புகிறோம். முதலாவதாக, "மறுபிறப்பின் முழுக்கு" (தீத்து 3:5) நடைபெறுகிறது. இதன்மூலம் நாம் புரிந்துகொள்வது என்னவென்றால், இது வாஞ்சைகளின் (affections) சுத்திகரிப்பாகும்; இப்போது அவை கீழானவைகளை அல்ல, மேலானவைகளையே நாடுகின்றன. இது, மறுபிறப்பைத் தொடர்ந்து உடனடியாக வரும் மாற்றத்தோடு நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளது. இதில் விசுவாசிகள் அனைவரும் "விசுவாசத்தினாலே தங்கள் இருதயங்களைச் சுத்தமாக்கும்" (அப்போஸ்தலர் 15:9) அனுபவத்தைப் பெறுகிறார்கள். இதோடு கூடவே மனச்சாட்சியின் சுத்திகரிப்பும் (எபிரெயர் 10:22) நடைபெறுகிறது; இது உணர்வுபூர்வமான குற்றவுணர்ச்சியின் பாரம் நீக்கப்படுவதைக் குறிக்கிறது. இதன் விளைவாக, "நாம் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறபடியால், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து மூலமாய் தேவனிடத்தில் சமாதானம் பெற்றிருக்கிறோம்" (ரோமர் 5:1) என்ற உள்ளான உணர்வு ஏற்படுகிறது.
ஆனால் கிறிஸ்து இங்கே பாராட்டும் இருதயத்தின் சுத்தம் இதைவிட ஆழமானது. சுத்தம் அல்லது தூய்மை என்றால் என்ன? அது தீட்டு மற்றும் பிரிந்த வாஞ்சைகளிலிருந்து (divided affections) விடுதலையாகும்; அது நேர்மை, உண்மை, மற்றும் இருதயத்தின் ஒருமைப்பாட்டைக் குறிக்கிறது. கிறிஸ்தவ நற்குணத்தின் ஒரு பண்பாக, இதை 'தேவபக்தியின் எளிமை' (godly simplicity) என்று நாம் வரையறுக்கலாம். இது வஞ்சனை மற்றும் போலித்தனத்திற்கு நேர் எதிரானது. மெய்யான கிறிஸ்தவம் துர்க்குணத்தை மட்டுமல்ல, கபடத்தையும் வஞ்சகத்தையும் அகற்றிவிடுகிறது. வார்த்தைகளிலும் புறம்பான நடத்தையிலும் மட்டும் சுத்தமாக இருந்தால் போதாது. வாஞ்சைகள், நோக்கங்கள், மற்றும் சிந்தனைகளின் தூய்மையே தேவனுடைய பிள்ளையை அடையாளப்படுத்த வேண்டும் (பெரும்பாலும் அடையாளப்படுத்துகிறது). எனவே, தங்களைக் கிறிஸ்தவர்கள் என்று கூறிக்கொள்ளும் ஒவ்வொருவரும் தங்களைத்தாமே சோதித்துப் பார்க்க வேண்டிய மிக முக்கியமான அளவுகோல் இதுவே: என் வாஞ்சைகள் மேலானவைகளை நாடுகின்றனவா? என் நோக்கங்கள் தூய்மையானவையா? நான் ஏன் கர்த்தருடைய பிள்ளைகளுடன் கூடிவருகிறேன்? மனுஷர் காண வேண்டும் என்பதற்காகவா, அல்லது கர்த்தரைச் சந்தித்து அவரோடும் அவருடைய பிள்ளைகளோடும் இனிமையான ஐக்கியத்தை அனுபவிப்பதற்காகவா?
"அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள்." இந்த ஆசீர்வாதங்களோடு இணைக்கப்பட்டுள்ள வாக்குத்தத்தங்களுக்கு நிகழ்கால மற்றும் எதிர்கால நிறைவேற்றங்கள் உண்டு என்பதை மீண்டும் ஒருமுறை சுட்டிக்காட்ட விரும்புகிறோம். இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் ஆவிக்குரிய பகுத்தறியும் திறனைக் கொண்டுள்ளார்கள்; தங்கள் மனக்கண்களால் தேவனுடைய குணாதிசயங்களைத் தெளிவாகப் பார்க்கிறார்கள், அவருடைய பண்புகளின் மேன்மையை உணருகிறார்கள். கண் தெளிவாயிருந்தால் சரீரம் முழுவதும் வெளிச்சமாயிருக்கும்.
இருதயத்தைச் சுத்தமாக்கும் விசுவாசத்தின் சத்தியத்தில் அவர்கள் "தேவனைத் தரிசிக்கிறார்கள்"; அந்தச் சத்தியம் வேறென்ன? அது இயேசுகிறிஸ்துவின் முகத்திலுள்ள தேவனுடைய மகிமையின் வெளிப்பாடு (2 கொரிந்தியர் 4:6) - அதாவது தெய்வீகப் பரிசுத்தமும், தெய்வீகக் கிருபையும் இணைந்து ஒளிரும் ஒரு பிரகாசமான வெளிப்பாடு! இருதயத்தில் சுத்தமுள்ளவன் தேவனுடைய குணாதிசயங்களைத் தெளிவாகவும் திருப்தியாகவும் தரிசிப்பது மட்டுமல்லாமல், தேவனோடு நெருக்கமான, இனிமையான ஐக்கியத்தையும் அனுபவிக்கிறான். அவன் தேவனிடம் மிகவும் நெருக்கமாகக் கொண்டுவரப்படுகிறான்; தேவனுடைய சிந்தை அவனுடைய சிந்தையாகிறது; தேவனுடைய சித்தம் அவனுடைய சித்தமாகிறது. அவனுடைய ஐக்கியம் மெய்யாகவே பிதாவோடும் அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவோடும் இருக்கிறது.
இவ்விதமாக, இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் இந்த உலகத்திலேயே "தேவனைத் தரிசிக்கிறார்கள்". இனிவரும் உலகத்திலோ தேவனைப் பற்றிய அவர்களின் அறிவு இன்னும் மிக விரிவானதாக மாறும்; அவரோடுள்ள அவர்களின் ஐக்கியம் இன்னும் மிக நெருக்கமானதாக மாறும். ஏனெனில், முந்தைய ஏற்பாட்டின் சிறப்புரிமைகளோடு ஒப்பிடும்போது, நாம் இப்போது திறந்த முகமாய்க் கர்த்தருடைய மகிமையைக் காண்கிறோம் (2 கொரிந்தியர் 3:18) என்றாலும், வரப்போகும் மேன்மையான ஏற்பாட்டின் சிறப்புரிமைகளோடு ஒப்பிடும்போது, நாம் இன்னும் கண்ணாடியிலே நிழலாட்டமாய்க் காண்கிறோம்; நாம் அறிவது குறைவு, நாம் அனுபவிப்பது குறைவு. ஆனால் நிறைவானது வரும்போது குறைவானது ஒழிந்துபோம். அப்பொழுது நாம் முகமுகமாய்த் தரிசிப்போம்; நாம் அறியப்பட்டிருக்கிறபடியே அறிந்துகொள்வோம் (1 கொரிந்தியர் 13:9-12). அல்லது சங்கீதக்காரனின் வார்த்தைகளை இரவல் வாங்கினால், நாம் நீதியில் அவருடைய முகத்தைத் தரிசிப்போம்; நாம் விழிக்கும்போது அவருடைய சாயலால் திருப்தியாவோம் (சங்கீதம் 17:15). அந்நாள்வரை, இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள் என்ற வார்த்தைகளின் முழுமையான அர்த்தம் புரிந்துகொள்ளப்படமாட்டாது (Dr. John Brown).
எங்கள் இணைத்தளத்தில் உள்ள கட்டுரைகள் மற்றும் புத்தகங்களைப் வாசகார்களின் வசதிக்காக, BSI இந்திய வேதாகம சங்கத்தாரால் வெளியிடப்பட்ட O.V. தமிழ் வேதாகமத்தின் வசனங்களை பயன்படுத்தியுள்ளோம்.
© 2026. தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்.