“துயரப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்" (மத்தேயு 5:4)
துக்கம் என்பது விரும்பத்தகாததும், வேதனை நிறைந்ததுமான மனித உணர்வு எனலாம். நமது மனம் துன்பத்தினாலும் கவலையினாலும் உடனடியாகவே சுருங்கி விடுகிறது. இயல்பாகவே நாம் மகிழ்ச்சியான வாழ்க்கையையே விரும்புகிறோம். நமது தியான வசனம் மறுபடியும் பிறவாதவர்களுக்கு விநோதமாய்த் தோன்றலாம்; ஆனால் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களுக்கு இது இனிமையானதாகவும், மனநிறைவளிக்கும் இசையாகவும் தோன்றுகிறது. ஒருவேளை பாக்கியவானாய் இருந்தால், ஏன் துயரப்பட வேண்டும்? நீங்கள் துயரப்படுகிறவர்களாய் இருந்தால் எப்படி பாக்கியவான்கள் ஆவீர்கள்? இந்த வார்த்தைகளை நாம் சிந்திக்கும்போது, ‘அந்த மனிதன் பேசியது போல் ஒருவரும் ஒருபோதும் பேசவில்லை' என்பதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். “துயரப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்" என்பது உலகத்தின் சிந்தனைக்கு நேர் எதிரானது. ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு தலைமுறையிலும் மனிதர்கள் செல்வந்தர்களையும் மகிழ்ச்சியோடு வாழ்கிறவர்களையுமே பாக்கியவான்களாகக் கருதுகிறார்கள். ஆனால் கிறிஸ்து மட்டுமே ஆவியில் எளிமையுள்ளவர்களையும், துயரப்படுகிறவர்களையும் பாக்கியவான்கள் என்கிறார். எல்லாவிதமான துன்பங்களையும் அவர் இந்த இடத்தில் குறிப்பிடவில்லை என்பதே உண்மை. மரணத்திற்கு ஏதுவான துக்கமும் உள்ளது. “லௌகிக துக்கமோ மரணத்தை உண்டாக்குகிறது” (2 கொரிந்தியர் 7:10). ஆனால் இங்கு வாக்களிக்கப்பட்ட ஆசீர்வாதம் ஆவிக்குரிய துயரத்திற்கு மட்டுமே சொல்லப்பட்டுள்ளது. ஆசீர்வதிக்கப்பட்ட துயரம் என்பது தேவனின் பரிசுத்தம் மற்றும் நன்மையை உணருவதாலும், நமது சொந்த துன்மார்க்கம், நமது வீழ்ச்சியடைந்த சுபாவம், நமது நடத்தையில் இருக்கும் மாறுபாடுகள் போன்றவற்றை அங்கீகரிப்பதாலும் வரும் துயரமாகும்.
சுவிசேஷப் பகுதியில் வரும் பாக்கியங்கள் குறித்த எட்டு குறிப்புகளும் நான்கு ஜோடிகளாக அமைக்கப்பட்டிருப்பதை தியானிப்பது நலமாக இருக்கும். இந்தப் புரிதல் நியாயமானது என்பதை நாம் இந்த தியானத்தில் தொடரும்போது உணர்ந்துகொள்ளலாம். இந்த எட்டில் முதல் ஆசீர்வாதமான 'ஆவியில் எளிமையுள்ளவர்களுக்கு' என்பதை, தங்களுக்குள் நன்மையானது ஒன்றும் இல்லை, வெறுமையே உள்ளது என்கிற சத்தியத்தை உணர்ந்தவர்கள் என்று நாம் அர்த்தம் கொள்கிறோம். அப்படியான ஆவிக்குரிய வறுமையிலிருந்து துயரத்திற்குக் கடந்து செல்வது புரிந்துகொள்ள மிகவும் இலகுவானதே. உண்மையில் இவை இரண்டும் தோழர்கள் என்றே கருதும் அளவிற்கு ஒன்றையொன்று மிகவும் நெருக்கமாய்ப் பின்தொடர்கின்றன.
இங்கே “துயரம்" என்ற வார்த்தையின் அர்த்தம் பலவீனம், துன்பம், இழப்பு போன்ற உணர்வுகளை விடப் பெரியது. இது பாவத்தினிமித்தம் வரும் துயரம். “இங்கு துக்கப்படுவது என்பது நமது ஆவியில் நாம் உணரும் கைவிடப்பட்ட நிலை, நமக்கும் தேவனுக்கும் பிரிவினையை ஏற்படுத்திய நம் அக்கிரமங்கள் நிமித்தம் வரும் துயரம், நம்மிடம் உள்ள சுயநீதியைப் போற்றியதின் விளைவாக வந்த துயரம், தேவனை எதிர்த்து, தேவனின் சித்தத்திற்கு விரோதமாக இருந்ததற்கான கவலை ஆகும். இது போன்ற துயரம் ஆவியின் எளிமையுடன் எப்போதும் இணைந்தே பயணிக்கிறது” (டாக்டர் பியர்சன்).
நம்முடைய இரட்சகர் எப்படிப்பட்ட நபரைப் பாக்கியவான் என்று அழைத்தார் என்பதற்கு ஒரு சிறந்த உதாரணத்தை லூக்கா 18-ல் நாம் பார்க்கிறோம். அங்கு சொல்லப்பட்ட ஜெபம் கவனிக்கத்தக்கது. முதலாவதாக சுயநீதியுள்ள ஒருவன் தேவாலயத்தில் நின்று: "தேவனே! நான் பறிகாரர், அநியாயக்காரர், விபசாரக்காரர் ஆகிய மற்ற மனுஷரைப்போலவும், இந்த ஆயக்காரனைப்போலவும் இராததினால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். வாரத்தில் இரண்டுதரம் உபவாசிக்கிறேன்; என் சம்பாத்தியத்திலெல்லாம் தசமபாகம் செலுத்தி வருகிறேன்" என்று தனக்குள்ளே ஜெபம்பண்ணினான் (லூக்கா 18:11,12). அவன் சொன்னவை உண்மையாக இருந்திருக்கலாம்; ஆனால் அந்தப் பரிசேயன் ஆக்கினைக்குள்ளானவனாகவே தன் வீட்டுக்குப் போனான். அவனுடைய நீதியெல்லாம் அழுக்கான கந்தைகள் என்றும், அவனது அங்கி களங்கமுள்ளது என்பதையும் அவன் தெரிந்துகொள்ளாமல் போனான். அதன்பிறகு ஆயக்காரனைக் குறித்து நாம் வாசிக்கிறோம். “எண்ணிக்கைக்கு அடங்காத தீமைகள் என்னைச் சூழ்ந்துகொண்டது, என் அக்கிரமங்கள் என்னைத் தொடர்ந்து பிடித்தது, நான் நிமிர்ந்து பார்க்கக்கூடாதிருக்கிறது” (சங்கீதம் 40:12) என்று பாடிய சங்கீதக்காரனைப் போல, புலம்புகிறவனாக ஆயக்காரன் தூரத்திலே நின்று, தன் கண்களையும் வானத்துக்கு ஏறெடுக்கத் துணியாமல், தன் மார்பிலே அடித்துக்கொண்டு: "தேவனே! பாவியாகிய என்மேல் கிருபையாயிரும்" என்றான். அவன் நீதிமானாக்கப்பட்டவனாய்த் தன்னுடைய வீட்டுக்குத் திரும்பினான் (லூக்கா 18:13). ஏனெனில், அவன் ஆவியில் எளிமையுள்ளவனாகவும், தன் பாவத்திற்காகப் புலம்பியவனாகவும் இருந்தான்.
தேவனால் பிறந்த பிள்ளைகளின் முதல் அடையாளமே இதுதான். தாங்கள் ஆவிக்குரிய ரீதியில் துயரப்படுகிறவர்கள் என்பதை உணர்ந்து, அதற்காக வருத்தப்படாதவர்கள், அவர்கள் திருச்சபையின் உறுப்பினர்களாக இருந்தாலும் சரி, அந்தத் திருச்சபையில் பணியாற்றுபவர்களாக இருந்தாலும் சரி, தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கவோ அதைக் காணவோ முடியாது. நொறுங்குண்டு பணிந்த இருதயத்தில் வாசம்பண்ணும்படி மகா தேவன் இறங்கி வருவதைக் குறித்துக் கிறிஸ்தவ விசுவாசிகள் எத்துணை நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும்! பழைய ஏற்பாட்டில் இதிலும் மகத்துவமான ஒன்றை வேறு எங்கு நாம் காணமுடியும்? தேவனுடைய பார்வையில் வானங்கள் கூடச் சுத்தமில்லாதிருக்குமானால், எந்த மனிதனால் அவருக்கு ஏற்ற ஆலயத்
“அவர்கள் ஆறுதலடைவார்கள்". இந்த ஆறுதல் முதன்மையாகக் குற்றஞ்சாட்டும் மனசாட்சியை அகற்றுவதிலிருந்து வருகிறது. பரிசுத்த ஆவியானவர், கிருபையின் சுவிசேஷத்தைப் பாவ உணர்வு பெற்று இரட்சகரின் தேவையை உணர்ந்த நபரின் வாழ்வில் அனுபவமாக்குவதன் மூலம் இந்த ஆறுதல் நிறைவடைகிறது. பாவத்திற்காகப் பிராயச்சித்தம் செய்த இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தின் வழியாக இந்த மன்னிப்பு இலவசமாகவும், முழுமையாகவும் கிடைக்கிறது என்கிற உணர்வை இது உண்டாக்குகிறது. பிரியமானவருக்குள் அங்கீகரிக்கப்பட்ட (எபேசியர் 1:6) ஒவ்வொரு இருதயத்தையும் நிரப்பும், எல்லாப் புத்திக்கும் மேலான தேவ சமாதானத்தினால் இந்த ஆறுதல் உண்டாகிறது. தேவன் குணமாக்குவதற்கு முன்னர் காயப்படுத்துகிறார்; அவர் உயர்த்துவதற்கு முன்பு தாழ்த்துவார். முதலில் அவர் நீதியையும் பரிசுத்தத்தையும் வெளிப்படுத்துகிறார், பின்னர் அவர் தம் இரக்கத்தையும் கிருபையையும் வெளிப்படப்பண்ணுகிறார்.
“அவர்கள் ஆறுதலடைவார்கள்" என்ற வாக்குத்தத்தம் கிறிஸ்தவர்களின் வாழ்வில் தொடர்ந்து நிறைவேறி வருவது நாம் கவனிக்க வேண்டிய ஒன்றாகும். சாக்குப்போக்கு சொல்ல முடியாத தன்னுடைய தோல்விக்காகத் துக்கத்துடன் தன் பாவங்களையெல்லாம் ஒப்புக்கொண்ட பிறகு, ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தால் தான் பரிசுத்தப்படுத்தப்படுவோம் என்ற பதிலையும் ஆறுதலையும் அவன் பெறுகிறான் (1 யோவான் 1:7). தன்னைச் சுற்றி கிறிஸ்துவுக்கு நடக்கும் அவமானத்தைக் கண்டு அவன் புலம்பினாலும், சாத்தான் முற்றிலுமாக அகற்றப்பட்டு, கிறிஸ்து ராஜா தமது கிருபையின் சிம்மாசனத்தில் அமர்ந்து நீதியின் ராஜ்யத்தை நிறுவுவார் என்ற அறிவு அவனுக்கு ஆறுதலாக இருக்கிறது. கர்த்தரின் கடிந்துகொள்ளும் கரம் அவன் மீது தங்கியிருந்தாலும், தற்போது விதிக்கப்படும் தண்டனைகள் அனைத்தும் தற்போதைக்கு ஆனந்தமாயிராமல் துக்கமாய்க் காணப்பட்டாலும், வரப்போகும் மகத்தான நித்திய மகிமைக்கு அவனைத் தயார்படுத்துவதற்காகவே (2 கொரிந்தியர் 4:17) இவையனைத்தும் இருக்கின்றன என்பதை உணர்ந்துகொள்வது அவனுக்கு ஒரு பெரிய ஆறுதல். தன் தேவனுடன் ஐக்கியம் கொண்ட ஒரு விசுவாசி அப்போஸ்தலனுடன் சேர்ந்து, “துக்கப்படுகிறவர்கள் என்னப்பட்டாலும் எப்பொழுதும் சந்தோஷப்படுகிறவர்களாகவும்" (2 கொரிந்தியர் 6:10) இருக்கிறோம் என்று கூறலாம். பலமுறை மாராவின் கசப்பான தண்ணீரைக் குடிக்க நேரிட்டாலும், தேவன் அதன் அருகிலே கசப்பை முறிக்கும் ஒரு மரத்தை நட்டிருப்பதைக் காண்பான். ஆம், இப்போதும் துயரப்படுகிற கிறிஸ்தவர்கள் தெய்வீக ஆறுதல் தருகிறவரால் ஆறுதலடைகிறார்கள். அவருடைய ஊழியர்கள் மூலமாகவும், சக கிறிஸ்தவர்களின் உற்சாகமூட்டும் வார்த்தைகளினாலும் அவர்கள் ஆறுதலடைகிறார்கள். இதுபோன்ற வாய்ப்புகள் இல்லாதபோது, தேவனுடைய வார்த்தையின் வாக்குறுதிகள் அவர்களின் நினைவில் கொண்டுவரப்பட்டு ஆறுதல் பெறுகிறார்கள். நல்ல ரசம் கடைசிவரைக்கும் வைக்கப்பட்டிருக்கிறது. "சாயங்காலத்தில் அழுகை தங்கும், விடியற்காலத்திலே களிப்புண்டாகும்" (சங்கீதம் 30:5). அவர் இல்லாதது போன்ற இந்த நீண்ட இரவில், துக்கம் அனுபவித்தவராகிய மனுஷகுமாரனுடன் ஐக்கியங்கொள்ளப் பரிசுத்தவான்கள் அழைக்கப்படுகின்றனர். ஆனால் தேவனுக்கே மகிமை! "நாம் அவருடன் பாடுசகித்தால், அவரோடேகூட ஆளுகையும் செய்வோம்" என்று எழுதப்பட்டுள்ளது (ரோமர் 8:17). அந்த மேகமற்ற விடியலைக் காணும்போது அது எவ்வளவு ஆறுதலையும் சந்தோஷத்தையும் நமக்குத் தரும்! அப்போது ஏசாயா 35:10-ல் சொல்லப்பட்ட வார்த்தை நிறைவேறும்: “துக்கமும் பெருமூச்சும் பறந்துபோகும்." அதுமட்டுமல்லாமல் வெளிப்படுத்துதல் 21:3-4ல் சொல்லப்பட்ட வார்த்தையும் நிறைவேறும்.





