“ஆனாலும் நான் போகும் வழியை அவர் அறிவார். அவர் என்னைச் சோதித்தபின் நான் பொன்னாக விளங்குவேன்." (யோபு. 23:10)
யோபு இங்கே தன்னைத் திருத்திக் கொள்கிறார். இந்த அதிகராத்தின் தொடக்கத்தில், “இன்றையதினமும் என் அங்கலாய்ப்பு முரண்டுத்தனமாக எண்ணப்படுகிறது. என் தவிப்பைப்பார்க்கிலும் என் வாதை கடினமானது." (யோபு 23:2) என்று யோபு குறை கூறுவதைக் காண்கிறோம். தன்மீதான சுமை தாங்க முடியாத அளவுக்கு அதிகமாய் இருப்பதாக யோபு உணர்ந்தார். ஆனால் இப்படிப்பட்ட மனப்பான்மையிலிருந்து மீள்கிறார். அவர் தனது ஆவேச உக்கிரத்தைத் தடுத்து, தன் மூர்க்கமான சிந்தனையைத் திருத்திக்கொள்கிறார். நாம் அனைவரும் நம்மைத் திருத்திக் கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது. ஆனால் இந்த பூமியில் வாழ்ந்த ஒரே ஒரு மனிதருக்கு மட்டும் அந்தத் தேவை ஏற்படவில்லை.
யோபு இந்த இடத்தில் தன்னைத் தானே ஆறுதல்படுத்திக் கொள்கிறார். தேவத் திட்டத்தின் இரகசியங்களை யோபுவால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் அவர் நடக்கும் பாதை தேவனுக்குத் தெரியும். தன்னை அமைதிப்படுத்தும் தேவனுடைய பிரசன்னத்தை யோபு ஊக்கமாய்த் தேடினார், ஆனால் அந்த முயற்சி குறிப்பிட்ட காலத்திற்கு வீணாகவே இருந்தது. அதனால்தான் “இதோ, நான் முன்னாகப்போனாலும் அவர் இல்லை. பின்னாகப்போனாலும் அவரைக் காணேன். இடதுபுறத்தில் அவர் கிரியை செய்தும் அவரைக் காணேன். வலது புறத்திலும் நான் அவரைக் காணாதபடிக்கு ஒளித்திருக்கிறார்” (யோபு 23:8,9) என்று அங்கலாய்த்தார். ஆனாலும் அவர் இந்த ஆசீர்வாதமான சத்தியத்தைக்கொண்டு தன்னை தான் ஆறுதல் படுத்திக்கொண்டார்: என்னால் தேவனைப் பார்க்க முடியாவிட்டாலும், அதைவிட ஆயிரம் மடங்குக்கு சிறப்பானது என்னவென்றால், அவர் என்னைக் காண்கிறவர் – “அவர் அறிவார்" மேலே இருக்கும் ஒருவர் நம் சூழ்நிலைகளைப் பற்றி அலட்சியமானவரோ, நம் நிலையைப் புரியாதவரோ அல்ல. ஒரு குருவி கீழே விழுவதைக்கூட அவர் கவனிக்கிறார் என்றால், நம்முடைய தலைமுடிகளையும் அவர் எண்ணுகிறவரானால், நிச்சயமாக நான் நடக்கும் பாதையை அவர் அறிவார்.
இங்கே யோபு வாழ்க்கையின் உன்னதமான பார்வையை வெளிப்படுத்துகிறார். அவர் எத்தனை மாபெரும் நம்பிக்கையைக் காட்டுகிறார் பாருங்கள். அவரது துன்பங்கள் அவரை சந்தேகிக்கிறவராக மாற்ற அனுமதிக்கவில்லை. தனக்கு வந்த சோதனைகள் மற்றும் இன்னல்கள் தன்னை மூழ்கடித்துவிட அனுமதி தரவில்லை. இருள் சூழ்ந்த மேகத்தின் பிரகாசமான பகுதியை நோக்கினார் – அது தேவனுடைய பகுதி, புத்திக்கும் புலன்களுக்கும் மறைக்கப்பட்ட பிரகாசமான பகுதி. வாழ்வைப் பற்றிய நெடியை பார்வையை அவர் தெரிந்துகொண்டார். தற்போதைய அக்கினிமயமான சோதனைகளுக்கும் அப்பால் பார்த்து, அவைகளின் முடிவு புடமிடப்பட்ட பொன் போன்றது என்று அறிக்கை செய்தார்: “ஆனாலும் நான் போகும் வழியை அவர் அறிவார். அவர் என்னைச் சோதித்தபின் நான் பொன்னாக விளங்குவேன்." இந்த வசனத்தில் மூன்று மாபெரும் சத்தியங்கள் வெளிப்படுத்தப் பட்டுள்ளன. அவற்றைத் தனித்தனியே சுருக்கமாக ஆராய்வோம்.
அ) என் வாழ்வைப் பற்றிய தெய்வீக அறிவு
“நான் போகும் வழியை அவர் அறிவார்". தேவனின் சர்வஞானம் என்பது அவருடைய தெய்வீகத்தின் சிறந்த பண்புகளில் ஒன்றாகும். “அவருடைய கண்கள் மனுக்ஷருடைய வழிகளை நோக்கியிருக்கிறது. அவர்களுடைய நடைகளையெல்லாம் அவர் பார்க்கிறார்" (யோபு 34:21). “கர்த்தரின் கண்கள் எவ்விடத்திலுமிருந்து, நல்லோரையும் தீயோரையும் நோக்கிப்பார்க்கிறது” (நீதிமொழிகள் 15:3). “நடைமுறை கிறிஸ்தவ வாழ்வின் மிகப்பெரிய சோதனைகளில் ஒன்று, தேவனுடைய சர்வஞானத்திற்கும் எனக்கும் என்ன தொடர்பு இருக்கிறது என்பதே,” என்றார் சார்லஸ் ஸ்பர்ஜன். அன்பான வாசகரே! தேவனின் சர்வ ஞானத்திற்கும் உங்களுக்கும் என்ன தொடர்பு இருக்கிறது? அது உங்களை எவ்வாறு பாதிக்கிறது? அது உங்களைத் கலங்கப் பண்ணுகிறதா அல்லது ஆறுதல் தருகிறதா? உங்கள் வழிகள் அனைத்தையும் தேவன் அறிந்திருக்கிறார் என்ற உண்மையிலிருந்து தப்பிக்க விரும்புகிறீர்களா? அந்த முயற்சியே போலியானதும், சுயநலமானதாகவும், மாய்மாலமானதாகவும் தான் இருக்க வேண்டும். தேவன் தனது வழிகள் அனைத்தையும் அறிந்திருக்கிறார் என்ற எண்ணம் ஒரு பாவியை மிகவும் பயமுறுத்துகிறது. அவன் அதை மறுக்கிறான் அல்லது அதை மறப்பதற்கு வழிகளைத் தேடுகிறான். ஆனால் கிறிஸ்தவர்களுக்கு அது ஆறுதலை அளிக்கிறது. என்னுடைய சோதனைகள், இன்னல்கள், துக்கங்கள் மற்றும் அவரை மகிமைப்படுத்துவதற்காக நான் எடுக்கும் முயற்சிகள் அனைத்தையும் தேவன் அறிந்திருக்கிறார் என்ற உணர்வு எவ்வளவு ஊக்கமளிக்கிறது! நான் நடக்கும் எல்லா வழிகளையும் தேவன் அறிந்திருக்கிறார் என்ற உண்மை கிறிஸ்துவுக்குள் இருப்பவர்களுக்கு மகிமையாகவும், கிறிஸ்துவில் இல்லாதவர்களுக்கு சங்கடமாகவும் இருக்கிறது.
“நான் போகும் வழியை அவர் அறிவார்". யோபு நடந்த பாதையை அவனது தோழர்களுக்குத் தெரியவில்லை. யோபுவைத் தவறாகப்; புரிந்து கொண்டனர். கடினமான சூழலில் இருந்த யோபுவுக்கு இது மிகவும் வேதனையான காரியம். அவரது நண்பர்களே யோபுவை ஒரு ஏமாற்றுக்காரன் என்று நினைத்தார்கள். அவன் ஒரு கொடிய பாவி என்றும், அதனால் தான் தேவனால் தண்டிக்கப்படுகிறான் என்றும் அவர்கள் கருதினர். ஆனால், அவரோ தான் ஒரு தகுதியில்லாத பரிசுத்தவான் என்றும் பாசாங்கு செய்பவர் அல்ல என்பதையும் அறிந்திருந்தார். அவர்கள் சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை என அவர்களிடம் அறைகூவல் விடுத்தார். “நான் போகும் வழியை அவர் அறிவார். அவர் என்னைச் சோதித்தபின் நான் பொன்னாக விளங்குவேன்." இங்கு நாம் கற்றுக் கொள்ள வேண்டியது ஒன்று உள்ளது. என் சக விசுவாசியே, உங்கள் சகமனிதர்கள், ஆம், உங்களுடன் பயணிக்கும் கிறிஸ்தவர்கள் உங்களைத் தவறாகப் புரிந்துகொண்டு, உங்கள் வாழ்வில் நடக்கும் தேவசெயலைத் தவறாக அர்த்தம் சொல்வார்கள். ஆனால் சர்வஞானியாகிய தேவன் நீங்கள் போகும் வழியை அறிவார் என்கிற பாக்கியமான சத்தியத்தால் உங்களை ஆறுதல்படுத்திக் கொள்ளுங்கள்.
“நான் போகும் வழியை அவர் அறிவார்". இந்த வார்த்தைகள் சரியாகப் புரிந்து கொள்ளப்பட்டால், யோபுக்குக்கூட அவர் நடந்துக் கொண்டிருந்த வழி தெரியாது. அதேபோல, நாம் நடக்கும் வழிகளும் நமக்குத் தெரியாது. வாழ்க்கை பலவேளைகளில் மர்மமாகவே இருப்பது போலத் தெரிகிறது. ஆண்டுகள் கடந்தும் தீர்வு கிடைக்கிறதில்லை. வாழ்க்கை தத்துவார்த்த சிந்தனையும் நமக்கு உதவாது. மனித வேட்கை என்பது ஒரு விசித்திரமான புதிர். நாம் இயந்திர சாதனங்கள் அல்ல என்பதை நமது சிந்தனைத்திறன் தெளிவாக்குகிறது. நம் எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியிலும் நமது விருப்பத்தேர்வுகளைப் பயன்படுத்துகிறோம். இருந்தபோதிலும், நமது சுதந்திரம் இறுதியானது இல்லை என்பது நமக்குத் தெரியும். நம்மால் எதிர்க்க முடியாத பல நன்மையும் தீமையுமான அழுத்தங்கள் நமது முடிவுகளை பாதிக்கின்றன. பாரம்பரியமும், வாழ்வுச்சூழலும் நம்மீது வலுவான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. நமது சுற்றுப்புறங்கள், சூழ்நிலைகள் போன்றவற்றை நாம் புறக்கணிக்க முடியாது. மேலும், நம்முடைய முடிவுகளைத் தீர்மானிக்கும் தேவதிட்டம் பற்றி நாம் என்ன சொல்வது? நாம் எடுக்கும் வழியைப் பற்றி நமக்கு எவ்வளவு குறைவான அறிவே உள்ளது பாருங்கள். “கர்த்தாவே, மனுஷனுடைய வழி அவனாலே ஆகிறதல்லவென்றும், தன் நடைகளை நடத்துவது நடக்கிறவனாலே ஆகிறதல்லவென்றும் அறிவேன்" (எரேமியா 10:23) என்கிறார் தீர்க்கன் எரேமியா. நாம் இங்கே புதிர் நிறைந்த மண்டலத்தில் நுழைகிறோம். அதை மறுப்பது அர்த்தமற்றது. அதை ஒப்புக்கொண்டு, “கர்த்தராலே மனுக்ஷருடைய நடைகள் வாய்க்கும். ஆகையால் மனுக்ஷன் தன் வழியை அறிந்து கொள்வதெப்படி?" (நீதிமொழிகள் 20:24) என்ற ஞானியின் கருத்துடன் உடன்படுவதே சிறப்பானதாக இருக்க முடியும்.
மற்றுமொரு கோணத்தில் பார்க்கும் பட்சத்தில் யோபு தான் நடக்கும் வழியை அறிந்திருந்தார் எனலாம். அந்தப் பாதை என்ன என்பதை அடுத்த இரண்டு வசனங்களில் விளக்குகிறார்: “என் கால்கள் அவர் அடிகளைப் பற்றிப்பிடித்தது. அவருடைய நெறியைவிட்டு நான் சாயாமல் அதைக் கைக்கொண்டேன். அவர் உதடுகளின் கற்பனைகளை விட்டு நான் பின்வாங்குவதில்லை. அவருடைய வாயின் வார்த்தைகளை எனக்கு வேண்டிய ஆகாரத்தைப் பார்க்கிலும் அதிகமாய்க் காத்துக்கொண்டேன்" (யோபு 23:11, 12). யோபு தேர்ந்தெடுத்த பாதை சிறந்த பாதை, வசனத்தின் படியான பாதை, தேவனின் பாதை - அதுவே யோபுவின் பாதை. அன்பான வாசகரே! அந்த பாதைக் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? இது உன்னதமான தேர்ந்தெடுத்தல் அல்லவா! யோபு பொறுமையானவர் மட்டுமல்ல, ஞானம் உள்ளவரும் கூட! நீங்களும் அதுபோன்ற பாதையைத் தேர்ந்தெடுத்திருக்கிறீர்களா? “என் கால்கள் அவர் அடிகளைப் பற்றிப்பிடித்தது. அவருடைய நெறியைவிட்டு நான் சாயாமல் அதைக் கைக்கொண்டேன்" என்று உங்களால் சொல்ல முடியுமா? (வசனம் 11). அவ்வாறு சொல்ல முடிந்தால், அந்த கிருபையை உங்களுக்கு வழங்கிய தேவனை துதிசெய்யுங்கள். அப்படிச் சொல்ல முடியாவிட்டால், அவருடைய கிருபையை வேண்டி மன்றாடாமல் இருந்ததிற்காக வெட்கத்துடன் உங்கள் தவறை ஒப்புக் கொள்ளுங்கள். உடனே முழங்காலிட்டு விழுந்து பணிந்து மன்னிப்புக் கேளுங்கள். எதையும் மறைக்காமல், ஒன்றையுமம் ஒளித்து வைக்காமல் அறிக்கை செய்யுங்கள். “நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருந்து, நம்முடைய பாவங்களை மன்னித்து, எல்லா அநியாயத்தினின்றும் நம்மைச் சுத்திகரிப்பார்" (1 யோவான் 1:9) என்று எழுதப்பட்டிருப்பதை நினைவில் வையுங்கள். அன்பு வாசகரே வசனம் 12 உங்கள் மற்றும் எனது தோல்வியை விவரிக்கவில்லையா? நாம் தேவனுடைய கட்டளைக்கு முன்பாக நடுங்காமலும், அவருடைய வார்த்தையை பொருட்படுத்தாமலும், அவரை விட்டு விலகியும் சென்றிருக்கிறோமே! ஆகவே, இப்போது, ஒவ்வொரு நாளும் அவருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதற்கும், அவருடைய வார்த்தையை நம் இதயங்களில் வைப்பதற்கும் அவருடைய கிருபையை மன்றாடுவோம்.
“நான் போகும் வழியை அவர் அறிவார்." நீங்கள் எந்த பாதையை பின்பற்றுகிறீர்கள்? ஜீவனுக்கு நேராக நடத்தும்; குறுகலான பாதையா? அல்லது அழிவுக்குக் கொண்டு செல்லும் விசாலமான பாதையா? அன்பான நண்பரே! இந்த காரியத்தைப் பற்றிய நிச்சயம் உங்களுக்கு இருக்கட்டும். வேத வசனம் சொல்லுகிறது: “ஆதலால் நம்மில் ஒவ்வொருவனும் தன்னைக்குறித்துத் தேவனுக்குக் கணக்கொப்புவிப்பான்” (ரோமர் 14:12). ஆனால் இந்த விக்ஷயத்தில் நீங்கள் ஏமாற்றப்படவோ, உறுதியற்றவராகவே இருக்கலாகாது. ஏனென்றால் “நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்” என்று கர்த்தர் சொல்லுகிறார் (யோவான் 14:6).
ஆ) தெய்வீகப் பரிசோதனை
“அவர் என்னை சோதித்த பின்” “வெள்ளியை உலைக்கலமும், பொன்னைப் புடமும் சோதிக்கும். இருதயங்களைச் சோதிக்கிறவரோ கர்த்தர்" (நீதிமொழிகள் 17:3). கடந்த காலத்தில் இஸ்ரவேலைத் தேவன் இவ்வாறே பரிசோதித்தார். இதுபோலவே இப்போதும் கிறிஸ்தவர்கள் பரிசோதிக்கப்படுகிறார்கள். கானான் தேசத்துக்குள் நுழைவதற்கு முன்பும், எகிப்தை விட்டு வெளியேறியது முதல் அவர்களின் வரலாற்றை விவரிக்கவும் இஸ்ரவேலர்களை நோக்கி மோசே சொன்ன வார்த்தைகளைக் கவனியுங்கள், “உன் தேவனாகிய கர்த்தர் உன்னைச் சிறுமைப்படுத்தும்படிக்கும், தம்முடைய கட்டளைகளை நீ கைக்கொள்வாயோ கைக்கொள்ளமாட்டாயோ என்று அவர் உன்னைச் சோதித்து, உன் இருதயத்திலுள்ளதை நீ அறியும்படிக்கும், உன்னை இந்த நாற்பது வருக்ஷமளவும் வனாந்தரத்திலே நடத்திவந்த எல்லா வழியையும் நினைப்பாயாக" (உபாகமம் 8:2). இவ்விதமாக தான் தேவன் நம்மை பரிசோதித்து, ஆராய்ந்து, நாம் தாழ்மைப்படும்படி செய்கிறார்.
'அவர் என்னைச் சோதித்தபின்” இதை நாம் அதிகம்; புரிந்து கொண்டால், நம்முடைய துன்பங்களின் மத்தியில் நாம் பொறுமையுடன் சகித்துக்கொள்ள வல்லவர்களாவோம். ஒவ்வொரு நாளும் வாழ்வில் நாம் சந்திக்கும் தடைகள், நம்மை அதிகம் எரிச்சல் அடையச்செய்யும் விக்ஷயங்கள் - அவைகளின் அர்த்தம் என்ன? இவைகள்; அனுமதிக்கப்படுவது ஏன்? இந்தக் கேள்விகளுக்கான பதில் இதுதான். இதோ, தேவன் உங்களைப் பரிசோதிக்கிறார். இந்த விளக்கம் தான் (குறைந்த பட்சம் ஒரு பகுதியாக) அந்த ஏமாற்றங்களுக்கும், உங்கள் பூமிக்குரிய நம்பிக்கை உடைக்கப்படும் அந்த நேரங்களுக்கும், அந்தப் பெரிய இழப்புகளுக்கும் - தேவன் உங்களைப் பரிசோதித்தார், பரிசோதிக்கிறார், என்பதே சரியாக இருக்கும். தேவன் உங்கள் சுபாவத்தை, உங்கள் தைரியத்தை, உங்கள் விசுவாசத்தை, உங்கள் பொறுமையை, உங்கள் அன்பு, உங்கள் உத்தமத்தைப் பரிசோதிக்கிறார்.
“அவர் என்னைச் சோதித்த பின்" தேவனுடை பரிசுத்தவான்கள் கூட அடிக்கடி அவர்கள் எதிர்க்கொள்ளும் அனைத்துப் பிரச்சனைகளுக்குத் சாத்தான் மீது பழி சுமத்துகிறது வழக்கம். அவர்களுடைய துன்பங்களுக்குப் பொறுப்பு அந்தப் பெரிய எதிரி என்று கருதுகிறார்கள். ஆனால் இப்படி நினைப்பது மனதுக்கு ஆறுதலாக இருக்காது. சாத்தான் பல சிக்கல்களையும் சிரமங்களையும் உருவாக்குகிறான் என்பதை நாம் மறுக்கவில்லை. ஆனாலும் சாத்தானுக்கும் மேலே சர்வவல்ல தேவன் இருக்கிறார்! தேவனின் அனுமதியின்றி சாத்தானால் நம் தலைமுடியை அசைக்க முடியாது. ஒருவேளை அப்படி நம்மை சோதிப்பதற்கு சாத்தானுக்கு தேவன் அனுமதித்தால், அவைகள்; நம்மைப் பரிசோதிக்கும்படி தேவன் அவைகளைப் பயன்படுத்திக் கொள்கிறார். ஆகவே, இந்த முக்கியமற்ற காரணங்களையெல்லாம் தாண்டி, “எல்லாவற்றையும் தம்முடைய சித்தத்தின்படியே செய்கிற” தேவனை நோக்கிப் பார்க்கக் கற்றுக்கொள்வோம் (எபேசியர் 1:11). யோபு உண்மையில் செய்தது இதுதான்.
யோபு புத்தகத்தின் முதல் அதிகாரத்தில், யோபுவை துன்புறுத்துவதற்கு சாத்தான் தேவனின் அனுமதியைப் பெற்றான் என்று வாசிக்கிறோம், அவன் யோபுவின் வேலையாட்களைக் கொன்று அவன் மந்தையைக் கொள்ளையடிக்க, சபேயரைப் பயன்படுத்தினான். (வசனம் 1:14-15). வேலையாட்களைக் கொல்லவும் ஒட்டகங்களைத் திருடவும் கல்தேயர்களைப் பயன்படுத்தினான். (வசனம் 17). யோபின் பிள்ளைகளைக் கொல்வதற்கு அவர் ஒரு பெரிய சூறாவளியைப் பயன்படுத்தினான். (வசனம் 19). ஆனால் இவையெல்லாம் நடந்தபோது யோபு எவ்விதமாக பதிலளித்தார்? “அதற்கு யோபு, ‘கர்த்தர் கொடுத்தார், கர்த்தர் எடுத்தார். கர்த்தருடைய நாமத்துக்கு ஸ்தோத்திரம் என்றான்’” (யோபு 1:21). மனித சூழ்ச்சிகளுக்கு அப்பாற்பட்டு, அவற்றைச் செயல்படுத்தும் சாத்தானுக்கு அப்பால் எல்லாவற்றையும் கட்டுப்படுத்தி ஆளும், தேவனை யோபு பார்க்க முடிந்தது. தேவன் தன்னைப் பரிசோதிக்கிறார் என்பதை உணர்ந்தார். புதிய ஏற்பாட்டில் இதையே நாம் பெறுகிறோம். உபத்திரவத்தின் மத்தியில் கடந்து சென்ற ஸ்மிர்னாவில் உள்ள சபைக்கு எழுதிய கடிதத்தில், “நீ படப்போகிற பாடுகளைக்குறித்து எவ்வளவும் பயப்படாதே. இதோ, நீங்கள் சோதிக்கப்படும்பொருட்டாகப் பிசாசானவன் உங்களில் சிலரைக் காவலில் போடுவான்;” (வெளிப்படுத்துதல் 2: 10) என்று எழுதினார் யோவான் அப்போஸ்தலன். சுிறையில் அவர்கள் தள்ளப்பட்டது என்பது தேவன் அவர்களைப் பரிசோதிக்கத் தரப்பட்ட அனுமதியே.
இதை மறப்பதால் நாம் எவ்வளவு இழக்கிறோம்? எவ்வளவு கடினமான சூழ்நிலையாக இருந்தாலும், எவ்வளவு வலிமிகுந்த நிலை எதுவாக இருந்தாலும், தேவன் தம்முடைய பிள்ளைகளை எல்லாவற்றிலும் பரிசோதிக்கிறார் என்பதை அறிவது இருதயம் உடைந்தவர்களுக்கு ஆறுதல் அளிக்கிறதாக இருக்கிறது. இதற்கு நமது இரட்சகர் என்ன ஒரு சிறந்த உதாரணம். பேதுரு மல்கூஸ் என்பவனின் காதைத் துண்டித்தபோது கர்த்தர் சொன்ன வார்த்தைகள் “பிதா எனக்குக் கொடுத்த பாத்திரத்தில் நான் பானம்பண்ணாதிருப்பேனோ? என்றார்" (யோவான் 18:11). மனிதர்கள் தங்கள் ஆத்திரத்தை அவர் மீது கொட்ட ஆயத்தமாயினர். சர்ப்பம் அவர் குதிகாலைப் பதம்பார்க்கப்போகிறது. ஆனால் இயேசுவோ அவைகளுக்கு அப்பாலும் மேலாகவும் பார்த்தார். அன்புள்ள வாசகரே! தேவனிடமிருந்து வரும் பாத்திரத்தில் இருந்து எவ்வளவு கசப்பாக இருந்தாலும் (அது நம் இரட்சகர் பருகியதற்கும் எண்ணற்ற அளவில் குறைவானதே) குடிக்க தயாராக இருங்கள். சில சூழ்நிலைகளில் நாம் தேவனுடைய ஞானத்தைக் கேள்வி கேட்பவர்களாக இருக்கிறோம். தேவன் நமக்கு அளிக்கும் சில அனுபவங்களால் நாம் தாழ்மை அடைகிறோம். என்னால் சுமக்க முடியாத பாரத்தை தேவன் ஏன் என் மீது சுமத்தினார்? பிறர் நேசிப்பவர்களைக் காப்பாற்றியவர் என் அன்புக்கு உரியவர்களை மட்டும் ஏன் மரணத்தின் வாயிலாக கொண்டுச் செல்கிறார்? என் உடல் நலனும்; வலிமையும் என் பார்வையும் ஏன் எனக்கு மட்டும் மறுக்கப்பட வேண்டும்? இது போன்ற எல்லாக் கேள்விகளுக்குமான முதல் பதில் இது தான், “ஓ மனிதனே! தேவனோடு எதிர்த்துத் தர்க்கிக்கிற நீ யார்?" (ரோமர் 9:20)! எந்தவொரு உயிரினமும் அதன் படைப்பாளரான மாபெரும் தேவனைக் கேள்வி கேட்பது துன்மார்க்கமும் கீழ்ப்படியாமையும் கலந்த செயல் தான். “உருவாக்கப்பட்ட வஸ்து உருவாக்கினவனை நோக்கி: நீ என்னை ஏன் இப்படி உண்டாக்கினாயென்று சொல்லலாமா?" (ரோமர் 9:20). தேவனுடைய கிருபை நம் மீறுகிற உதடுகளை அடக்கி, கடினப்பட்ட இதயங்களில் பொங்கி எழும் புயல்களைக் கட்டுப்படுத்த வேண்டுமென்று நாம் ஒவ்வொருவரும் எத்துணை ஊக்கமாய் மன்றாட வேண்டும் என்பதை யோசித்துப்பாருங்கள்!
ஆனால் தாழ்மையோடு சர்வத்தையும் அறிந்த தேவன் அனுமதிக்கும் அனைத்திற்கும் அடிபணிபவர்களுக்கு, வேதாகமம் சரியான தீர்வுகளைத் தருகிறது. இந்த ஒளி நமது அறிவுத்திறனுக்குத் திருப்தி தருவதாக இல்லாமல் போகலாம். ஆனால் ஒரு குழந்தையைப் போல விசுவாசமுடன் ஏற்றுக்கொள்பவர்களுக்கு ஆறுதலையும் பெலத்தையும் அது தருகிறது. இதைப் பற்றி பேதுரு இவ்வாறு குறிப்பிடுகிறார்: “இதிலே (இரட்சிப்பு) நீங்கள் மிகவும் சந்தோக்ஷப்படுகிறீர்கள். என்றாலும், துன்பப்படவேண்டியது அவசியமானதால், இப்பொழுது கொஞ்சக்காலம் பலவிதமான சோதனைகளினாலே துக்கப்படுகிறீர்கள். அழிந்துபோகிற பொன் அக்கினியினாலே சோதிக்கப்படும். அதைப்பார்க்கிலும் அதிக விலையேறப்பெற்றதாயிருக்கிற உங்கள் விசுவாசம் சோதிக்கப்பட்டு, இயேசு கிறிஸ்து வெளிப்படும்போது உங்களுக்குப் புகழ்ச்சியும் கனமும் மகிமையுமுண்டாகக் காணப்படும்.” (1 பேதுரு 1:6,7). இங்கே நாம் மூன்று காரியங்களைக் கவனிக்கிறோம். முதலாவது - விசுவாசத்திற்கு சோதனை தேவை. தேவன் இந்த வார்த்தையை சொல்லுவதால் நாம் இவைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும். இரண்டாவதாக, இந்த விசுவாசத்தின் சோதனை தங்கத்தை விட விலையேறப்பெற்றது. அது தேவனின் பார்வையில் விலையேறப்பெற்றது (சங்கீதம் 116:15) எனவே அது நம்முடைய பார்வைக்கும் விலையேறப் பெற்றதாக இருக்க வேண்டும். மூன்றாவதாக, தற்போதைய சோதனை நமது எதிர்காலத்தை மனதில் கொண்டுள்ளது. இந்தப் பரீட்சையைச் சாந்தமாகச் சகித்துக் கொண்டு, தைரியமாக எதிர்கொள்பவர்கள், இரட்சகராகிய இயேசு கிறிஸ்து வெளிப்படும் நாளிலே பெரும் வெகுமதியைப் பெறுவார்கள்.
மேலும் 1 பேதுரு 4:13-13ல் நமக்கு இவ்வாறு புத்திமதி தரப்பட்டள்ளது: “பிரியமானவர்களே, உங்களைச் சோதிக்கும்படி உங்கள் நடுவில் பற்றியெரிகிற அக்கினியைக்குறித்து ஏதோ புதுமையென்று திகையாமல், கிறிஸ்துவின் மகிமை வெளிப்படும்போது நீங்கள் களிகூர்ந்து மகிழும்படியாக அவருடைய பாடுகளுக்கு நீங்கள் பங்காளிகளானதால் சந்தோக்ஷப்படுங்கள்”. முந்தைய வசனங்களில் வெளிப்படுத்தப்பட்ட அதே எண்ணங்களையே இதே வசனத்திலும் நாம் காண்கிறோம், எனவே பரிசோதனை மிகவும் அவசியம். அது இடையூறு என்று நாம் நினைக்கக்கூடாது, அதற்காக நாம் ஆயத்தப்பட வேண்டும். கிறிஸ்து மீண்டும் வரும்போது, அவரால் தாராளமாக பலன்பெறுவோம் என்பது நமது ஆசீர்வதிக்கப்பட்ட நம்பிக்கையாக இருக்க வேண்டும். கிறிஸ்துவின் பாடுகளில்; பங்குகொள்கிற தகுதி நமக்குக் கிடைத்திருப்பதால் நாம் அவற்றை விசுவாசத்தின் தைரியத்துடன் மட்டுமல்ல, மகிழ்ச்சியுடனும் எதிர்கொள்ள வேண்டும். அவரும் பாடுபட்டார், எனவே குருவைப் பின்பற்றும் சீடனாக நாமும் பாடுபடுவது தேவையானதே.
“அவர் என்னைச் சோதித்த பின்" அன்புள்ள கிறிஸ்தவ வாசகரே! இதற்கு விதிவிலக்கு ஒன்றும் இல்லை, தேவனுக்கு பாவம் செய்யாத ஒரே ஒரு குமாரன் இருந்தார், ஆனால் துக்கம் இல்லாத ஒரு குமாரர் இல்லை. துரிதமாகவோ அல்லது தாமதமாகவோ, ஏதாவது ஒரு வடிவத்தில், கடினமும் கணமுமான சுமையாகிய சோதனையை நாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். “இந்த உபத்திரவங்களினாலே ஒருவனும் அசைக்கப்படாதபடிக்கு உங்களைத் திடப்படுத்தவும், உங்கள் விசுவாசத்தைப்பற்றி உங்களுக்குப் புத்திசொல்லவும், நம்முடைய சகோதரனும் தேவ ஊழியக்காரனும் கிறிஸ்துவின் சுவிசேக்ஷத்தில் எங்கள் உடன்வேலையாளுமாகிய தீமோத்தேயுவை அனுப்பினோம். இப்படிப்பட்ட உபத்திரவங்களைச் சகிக்க நாம் நியமிக்கப்பட்டிருக்கிறோமென்று நீங்கள் அறிந்திருக்கிறீர்களே” (1தெசலோனிக்கேயர் 3:2-3). மேலும், “நாம் அநேக உபத்திரவங்களின் வழியாய்த் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கவேண்டும்" (அப்போஸ்தலர் 14:22) என்றும் எழுதப்பட்டுள்ளது. இதுபோன்றே ஒவ்வொரு தலைமுறையிலும் நடந்துள்ளது. ஆபிரகாம் சோதிக்கப்பட்டார், கடுமையாக சோதிக்கப்பட்டார். அவ்வாறே யோசேப்பு, யாக்கோபு, மோசே, தாவீது;, தானியல், மற்றும் அப்போஸ்தலர்கள் போன்ற இன்னும் பலரும் சோதிக்கப்பட்டனர்.
இ) முடிவான கனி
“நான் பொன்னாக விளங்குவேன்" என்ற சொற்றொடரின் காலத்தைக் கவனியுங்கள். யோபு ஏற்கனவே சுத்தமான பொன்னாக இருப்பதாக சிந்தனை செய்யவில்லை. “நான் தங்கம் போல் வெளிவருவேன்," என்று அவர் அறிக்கையிட்டார். அப்போதும் தன்னில் களிம்பு அதிகமாக இருந்தது யோபுவுக்கு நன்றாகவே தெரியும். தான் ஏற்கனவே பூரணரானதாகப் பெருமை கொள்ளவில்லை. அதற்கு மாறாக யோபு சொன்னதை இந்தப் புத்தத்தின் இறுதி அதிகாரத்தில் வாசிக்கிறோம். “நான் என்னை அருவருத்து... மனஸ்தாபப்படுகிறேன்” (யோபு 42:6). அவ்வாறு யோபு உணர்ந்தது சரிதான். நாமும் அவ்வேறே உணர்ந்திருப்போம். நம்முடைய சரீரத்தில் எந்தவித நன்மையும் இல்லை என்பதை உணர்ந்து (ரோமர் 7:18), யோபுவைப் போல ஒப்புக்கொள்வது நல்லது. தேவனுடைய வார்த்தையின் வெளிச்சத்தில் நம்மையும் நம்முடைய நடத்தையையும் ஆராயும்போது, எண்ணற்றதும், கணக்கிட முடியாததுமான பாவங்கள் காணும்போது, நம்மை வெறுப்பதற்கு நமக்கும் பல காரணங்கள் இருப்பதைக் காண்கிறோம்! அன்புள்ள கிறிஸ்தவனே! இன்னும் நம்முள் பலவித அழுக்குகள் இருக்கிறது. ஆனால் நம்முடைய நிலை என்றென்றும் இப்படியே இருந்துவிடாது.
“நான் பொன்னாக விளங்குவேன்." யோபு 'என்னை சோதித்தபின் பொன்னாக காணப்படுவேன்” என்றோ, 'பொன்னைப்போல காணப்பட ஆசைப்படுகிறேன்” என்றும் சொல்லவில்லை. முழுமையான விசுவாசத்துடன், உறுதியான நம்பிக்கையுடன், “நான் பொன்னாக விளங்குவேன்" என்று அறிவித்தார். ஆனால் அது அவருக்கு எப்படித் தெரிந்தது? நமது இறுதி முடிவு ஆரோக்கியமானதாக இருக்கும் என்று எப்படி நாம் உறுதியாக நம்புவது? ஏனென்றால், தேவனுடைய நோக்கங்கள் ஒருபோதும் மாறாதாது: “உங்களில் நற்கிரியையைத் தொடங்கினவர் அதை இயேசு கிறிஸ்துவின் நாள்பரியந்தம் முடிய நடத்திவருவார்" (பிலிப்பியர் 1:6). நமது இறுதியான முடிவு ஆரோக்கியமானதாக இருக்கும் என்று எப்படி உறுதியாக நம்புவது? தேவனுடைய வாக்குறுதி நம்பகமானது என்பதால் நாம் அந்த உறுதியைப் பெறலாம். “கர்த்தர் எனக்காக யாவையும் செய்து முடிப்பார்” (சங்கீதம் 138:8). ஆகவே பாடுகளிலும் சோதனைகளிலும் கடந்து போகிறவர்களே, நீங்கள் சந்தோக்ஷப்படுங்கள். நீங்கள் கடந்து வரும் பாதை இனிமையற்றதாகவும், வலி நிறைந்ததாகவும் இருந்தாலும், முடிவு அழகானதாகவும் உறுதியானதாகவும் இருக்கப்போகிறது.
“நான் பொன்னாக விளங்குவேன்." இந்த வார்த்தைகள் வலியையும், துக்கத்தையும் நன்கு அறிந்த ஒருவரால் சொல்லப்பட்டவை. ஆனால் இந்த அக்கினி சோதனையின் வாயிலாக நடந்து கொண்டிருக்கும்போது கூட, எல்லாமே நேர்மறையான முடிவுக்கு வழிவகுக்கும் என்று அவர் நம்புகிறார். அத்தகைய வெற்றி முழக்கம் நம்முடைதாகட்டும். “நான் பொன்னாக விளங்குவேன்" என்பது மாம்சீகமான வீண்பெருமை அல்ல, ஆனால் தேவனைப் பற்றி உறுதியுடன் இருக்கும் மனதில் இருந்து வெளிப்படும் நம்பிக்கையின் வார்த்தைகளே. இதில் பெருமை பாராட்ட நமக்கு ஒன்றும் இல்லை – சகல மகிமையும் நம்மைப் பொன் போல ஆக்கும் தெய்வீக சுத்திகரிப்பாளருக்கே உரியது (யாக்கோபு 1:12).
இப்போது நமக்கு முன்பாக இரண்டு மையக்கருத்துக்கள் உள்ளன. முதலாவதாக, நாம் தீவிரமான சோதனையின் உலைக்குள் இருக்கும் போது, அன்பு நம் சகிப்புத்தன்மையை அளவிடும். “அவர்; வெள்ளியைப் புடமிட்டுச் சுத்தகரிப்பவர்போல அமர்ந்திருப்பார் (தேவகிருபையின் பொறுமை).” (மல்கியா 3:3). இரண்டாவதாக, அக்கினி சூளையில் மூன்று எபிரேய வாலிபர்களுடன் தேவன் இருந்தது போல், நம் சோதனையின் சூளையிலும் தேவன் நம்மோடும் இருப்பார் (தானியேல் 3:25). நம் எதிர்காலம் உறுதியானது: பரலோகத்தில் மிகவும் அதிசயமாய் இருப்பது தங்கத்தின் தெருவோ, தங்கத்தால் செய்யப்பட்ட இசைக் கருவிகளாகவோ அல்ல, ஆனால் தேவனின் சாயல் பொறிக்கப்பட்ட பொன்னான ஆத்துமாக்களாக – அதாவது, தம்முடைய குமாரனின் சாயலுக்கு ஒப்பாயிருக்க முன்குறிக்கப்பட்ட ஆத்துமாக்கள் (ரோமர் 8:29)! அத்தகைய மகிமையான எதிர்காலத்திற்காக, வெற்றிகரமான முடிவிற்காக, மற்றும் அழகான இலக்கிற்காக தேவனுக்கு ஸ்தோத்திரம் உண்டாகட்டும்.
காப்புரிமை அறிவிப்பு
இந்த இணையதளத்தில் வெளியிடப்படும் அனைத்து கட்டுரை & புத்தகத்தை வணிக ரீதியாகப் பயன்படுத்த விரும்பும் எவரும் எங்கள் எழுத்துப்பூர்வ அனுமதியைப் பெற வேண்டும். இலவச வெளியீட்டிற்கு எங்கள் அனுமதியைப் பெற வேண்டிய அவசியமில்லை. இருப்பினும், அவர்கள் வெளியிடுபவைகளில் "தமிழ் கிறிஸ்தவ களஞ்சியம்" என்ற அறிவிப்பைச் சேர்க்க வேண்டும். நாங்கள் மேற்கோளுக்கு பயன்படுத்தியது BSI வேதாகமம்.