ஒவ்வொரு உண்மைக் கிறிஸ்தவனும் மிகவும் தெளிவாக அறிந்திருக்க வேண்டிய காரியங்களில் இதுவும் ஒன்று. வேதப்புத்தகம் முழுவதுமே தேவனுடைய சித்தத்தை அறிந்துகொள்வதைப் பற்றிச் சொல்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது. தேவனுடைய சித்தத்தை அறிந்துகொள்வது மட்டுமல்ல, அதைச் செய்வதும் முக்கியம்.
"நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்" என்று ரோமர் 12:2-ல் நமக்குச் சொல்லப்பட்டிருக்கிறது. தேவனுடைய சித்தத்தை நாம் அறிந்துகொள்ள வேண்டும் என்ற கற்பனையை நாம் இங்கே காண்கிறோம். கற்பனை மட்டுமல்ல, தேவனுடைய சித்தத்தைச் செய்பவர்களுக்கு உரிய தேவனுடைய வாக்குத்தத்தத்தையும் நாம் காண்கிறோம்.
"தேவனுடைய சித்தத்தைச் செய்பவன் என்றென்றைக்கும் நிலைத்திருப்பான்" என்று 1 யோவான் 2:17-ல் நமக்குச் சொல்லப்பட்டிருக்கிறது. இந்த வாக்குத்தத்தம் மட்டுமல்ல, தேவனுடைய சித்தத்தைச் செய்வது மிகவும் பாக்கியமும் ஆகும். இயேசு சொன்னார், "தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவன் எவனோ அவனே எனக்குச் சகோதரனும், எனக்குச் சகோதரியும், எனக்குத் தாயுமாய் இருக்கிறான்" (மாற்கு 3:35). நீங்கள் தேவனுடைய சித்தத்தைச் செய்யும்போது, இயேசு கிறிஸ்துவின் சாயலுக்கு ஒத்திருக்கிறீர்கள் என்பதைக் கண்டுகொள்வீர்கள். ஏனென்றால், இயேசு தமது வருகையைக் குறித்து எபிரெயர் 10:9-ல், "தேவனே, உம்முடைய சித்தத்தின்படி செய்ய, இதோ, வருகிறேன்" என்று சொன்னார். சொன்னது மட்டுமல்லாமல், தம் வாழ்க்கை முழுவதும் அதையே அவர் செய்தார். தம்முடைய வாழ்க்கையின் முடிவிலும், கெத்செமனே தோட்டத்தில் ஜெபித்தபோதும், "என் சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது" என்று ஜெபித்தார். "பரலோகத்திலிருக்கிற எங்கள் பிதாவே... உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரலோகத்தில் செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக" என்று நாம் ஜெபிக்க வேண்டும் எனவும் நமக்குக் கற்றுக்கொடுத்தார். நாம் தேவனுடைய சித்தத்தை அறிந்துகொள்வதை முக்கியப்படுத்தும் பல வேதவசனங்களை நாம் வேதத்தில் காணலாம். ஆனாலும், ஒவ்வொரு விசுவாசியின் மனதிலும் எழும் கேள்வி: தேவனுடைய சித்தத்தை எப்படி அறிந்துகொள்வது?
நம்முடைய வாழ்க்கையில் நாம் எடுக்கும் ஒவ்வொரு தீர்மானமும் அல்லது முடிவும் தேவனுடைய சித்தத்தின்படி அமைய வேண்டும் என்பதை நாம் அறிந்திருக்கிறோம். ஏனென்றால், தேவனுடைய சித்தத்தைச் செய்வதில் ஒரு பாதுகாப்பு இருக்கிறது. ஒரு திட்டம் அல்லது செயல் எத்தனை கவர்ச்சிகரமாக இருப்பினும், அது தேவனுடைய சித்தம் இல்லை என்றால் நாம் அதிலிருந்து விலகியிருக்க வேண்டும். இதுவே ஒவ்வொரு உண்மையான தேவனுடைய பிள்ளையின் மனப்போக்காக இருக்கும். இதைக் குறித்து அவன் தெளிவான எண்ணம் கொண்டிருக்கிறான். அவன் தேவனுடைய சித்தத்தைத் தான் செய்கிறான் என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள விரும்புகிறான்.
கிறிஸ்தவ வட்டாரத்தில், தங்களைக் கிறிஸ்தவர்கள் என்றும் வரம்பெற்ற பெரிய ஊழியர்கள் என்றும் அழைத்துக்கொள்ளும் மற்றொரு கூட்டமும் இருக்கிறது. உண்மையான விசுவாசியின் 'தேவனுடைய சித்தத்தின்படி வாழவேண்டும்' என்ற தீர்மானத்தை, இவர்கள் தங்கள் சுய ஆதாயத்திற்காக வியாபார நோக்கில் பயன்படுத்திக்கொள்கிறார்கள். அவர்கள் என்ன சொல்வார்கள் என்றால், "எங்களிடத்தில் வாருங்கள், நாங்கள் உங்கள் மீது கைகளை வைத்து ஜெபம் செய்வோம், நாங்கள் தரிசனங்களைக் காண்போம், தேவனுடைய சத்தத்தைக் கேட்போம், உங்களைக் குறித்துத் தம்முடைய சித்தம் என்ன என்பதைத் தேவன் எங்களுக்கு வெளிப்படுத்துவார், அதை நாங்கள் உங்களுக்கு அறிவிப்போம்" என்கிறார்கள். மிக மோசமான செய்தி என்னவென்றால், பெருங்கூட்டமான கிறிஸ்தவர்கள் அவர்கள் பின்னால் சென்றுகொண்டிருக்கிறார்கள். இதில் மிகப்பெரிய ஆபத்து என்னவென்றால், முதலாவது இவர்கள் உங்கள் பணத்தையும், பிறகு உங்கள் ஆத்துமாக்களையும் வாரிக்கொள்வார்கள்!
நான் ஒரு சவாலான கேள்வியை இவர்களுக்கு முன் வைக்கிறேன். ஒருவரும் அதற்கு இன்னும் பதில் சொல்லவில்லை. "சாத்தானும் ஒளியின் தூதனைப் போல வந்து உங்களை ஏமாற்றுகிறான்" என்று வேத வசனம் சொல்கிறதே, அதை விசுவாசிக்கிறீர்களா? "ஆகவே எப்போது தேவன் பேசுகிறார், எப்போது சாத்தான் பேசுகிறான், அல்லது எப்போது உங்கள் சொந்த இருதயமே உங்களை வஞ்சிக்கிறது என்பதைத் தெளிவாக உங்களால் கூற முடியுமா?" என்ற கேள்வியை அந்த ஏமாற்றுக்காரர்களிடம் கேட்டு முயற்சித்துப் பாருங்கள். அவர்களிடமிருந்து எந்த ஒரு திருப்திகரமான பதிலும் வராது. ஆகவே இவர்களைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள். தேவனுடைய சித்தத்தை அறிந்துகொள்ள இது மிகவும் தவறான வழி. நற்செய்தி வட்டாரங்களில் இது நன்றாக அறியப்பட்டுள்ளது. தேவன் என்னைக் குறித்து ஒரு சித்தம் வைத்திருப்பாரென்றால், அதை அவர் என்னிடம்தான் வெளிப்படுத்த வேண்டும், வேறொருவர் மூலமாக அல்ல. ஆனால் பிரச்சனை என்னவென்றால், தேவனுடைய சித்தத்தை அறிய நாமாகவே சில வழிமுறைகளை ஏற்படுத்தி வைத்திருக்கிறோம். ஆகவே, இக்கட்டுரையைப் பின்வரும் தலைப்புகளில் பிரித்திருக்கிறேன்: தேவனுடைய சித்தத்தை அறியத் தவறான வழிமுறைகள், சரியான வழிமுறைகள், வெளிப்படுத்தப்பட்டுள்ள தேவனுடைய சித்தம் மற்றும் என்னுடைய வாழ்க்கையில் தேவ சித்தம்.





