கிறிஸ்துவின் மலைப்பிரசங்கத்தின் வடிவமைப்பு, நோக்கம் மற்றும் பயன்பாடு குறித்துப் பலத்த கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. பெரும்பாலான வேதவியாக்கியானிகள் இதனை கிறிஸ்தவ நன்னெறிகளின் விளக்கவுரையாகவே பார்க்கின்றனர். காலஞ்சென்ற கவுண்ட் டால்ஸ்டாய் போன்றவர்கள், எல்லா மனிதர்களும் பின்பற்றி வாழ வேண்டிய ஒரு "பொன் விதியாகவே" இதனைக் கருதுகின்றனர். மற்றவர்களோ, இது தற்போதைய கிருபையின் காலத்திலுள்ள பரிசுத்தவான்களுக்குரியதல்ல, எதிர்கால ஆயிரவருட அரசாட்சியில் வாழப்போகும் விசுவாசிகளுக்கே உரியது என்று வலியுறுத்தி, இதன் காலரீதியான (dispensational) பயன்பாட்டின் மீதே அதிக கவனம் செலுத்துகின்றனர். ஆயினும், தேவ ஆவியால் ஏவப்பட்ட இரண்டு வசனங்கள் இதன் மெய்யான எல்லையை வெளிப்படுத்துகின்றன. மத்தேயு 5:1, 2-ல் கிறிஸ்து தம்முடைய சீஷர்களுக்கு உபதேசித்தார் என்பதை அறிகிறோம். மத்தேயு 7:28, 29-ல் அவர் திரளான ஜனங்களுக்கும் போதித்தார் என்பது தெளிவாகிறது. எனவே, நமது ஆண்டவரின் இந்த உரை விசுவாசிகள், அவிசுவாசிகள் ஆகிய இரு சாராருக்கும் தேவையான போதனைகளை உள்ளடக்கியுள்ளது என்பது நமக்கு தெளிவாகிறது.
முழுமையான சத்தியம் இல்லாத குறைபாடுள்ள யூத மார்க்கத்தில் வளர்க்கப்பட்ட யூத பொதுமக்களுக்கு கிறிஸ்து பிரசிங்கித்த முதல் பிரசங்கம் என்பதை மனதில் கொள்ள வேண்டும். சொல்லப்போனால் அவருடைய சீஷர்களுக்கும் இதுவே அவரது முதல் போதனையாக இருந்திருக்கலாம். கிறிஸ்தவ நன்னெறிகளைப் போதிப்பது மட்டுமன்றி, பரிசேயத்துவத்தின் தவறுகளை அம்பலப்படுத்துவதும், நியாயப்பிரமாணத்தின் கிரியைகளைச் சார்ந்திருந்த கேட்போரின் மனச்சாட்சியைத் தட்டியெழுப்புவதுமே அவரது நோக்கமாக இருந்தது. மத்தேயு 5:20-ல், "வேதபாரகர் பரிசேயர் என்பவர்களுடைய நீதியிலும் உங்கள் நீதி அதிகமாயிராவிட்டால், பரலோகராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டீர்கள்" என்று கிறிஸ்து கூறினார். பின்னர், அவ்வதிகாரத்தின் இறுதிவரை, கேட்போர் அவரது பூரணமான நீதியின் அவசியத்தை உணர்ந்துகொள்ளும் வகையில் நியாயப்பிரமாணத்தின் ஆவிக்குரிய தன்மையை விளக்கினார். பரிசேய மார்க்கத்தின் தலைவர்கள் நியாயப்பிரமாணத்தின் வெளிப்புறமான எழுத்துக்களையே நிறைவேற்றுவதாக தங்களை காட்டிக்கொள்கிறார்கள்; ஆனால் நியாயப்பிரமாணத்தின் ஆவிக்குரிய தன்மையைக் குறித்த அவர்களது அறியாமையே பரிசேயத்துவத்தின் மெய்யான ஆணிவேராக இருந்தது. எனவே, நியாயப்பிரமாணத்தின் உண்மையான மற்றும் உள்ளான அர்த்தத்தையும் அதன் தேவையையும் வலியுறுத்துவதன் மூலம், அவருடைய போதனையை கேட்போரின் மனச்சாட்சியைத் தட்டியெழுப்புவதே நமது ஆண்டவரின் நோக்கமாக இருந்தது.
இம்மலைப்பிரசங்கம் மத்தேயு சுவிசேஷத்தில் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கும் லூக்கா 6-ல் உள்ள சமபூமிப் பிரசங்கத்திற்கும் இடையே உள்ள வேறுபாடுகள் தெளிவானவை என்பதும் எண்ணற்றவையுமாகும். நான்கு சுவிசேஷங்களில் மத்தேயு சுவிசேஷம் அதிக யூதப் பின்னணியைக் கொண்டுள்ளது என்ற கருத்து உண்மைதான் என்றாலும், இதன் பயன்பாட்டை கடந்த கால அல்லது எதிர்கால யூதர்களுக்கு மட்டுமே உரியதாக சுருக்குவது ஒரு பெரிய தவறாகும் என்று நாங்கள் நம்புகிறோம். மத்தேயு சுவிசேஷத்தின் முதல் வசனத்தில் கிறிஸ்து இருவிதங்களில் அறிமுகப்படுத்தப்பட்டிருப்பது, அப்படிப்பட்ட சுருக்கலான எண்ணத்திற்கு எதிராக நம்மை எச்சரிக்க வேண்டும். அங்கு அவர் தாவீதின் குமாரனாகவும், "விசுவாசிக்கிற யாவருக்கும் தகப்பனாகிய" ஆபிரகாமின் குமாரனாகவும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளார் (ரோமர் 4:11). எனவே, இந்த உரை எந்தக் காலத்திற்கும் பொருந்தக்கூடிய ஆவிக்குரிய கொள்கைகளை எடுத்துரைக்கிறது என்பதை நாங்கள் முழுமையாக நம்புகிறோம், இந்த அடிப்படையில்தான் நாம் தொடர்ந்து செல்லப்போகிறோம்.
அவருக்கு முன் வந்த யோவான் ஸ்நானகனைப் போலவே, கிறிஸ்துவின் முதல் பிரசங்கமும் சுருக்கமான ஆனால் மிக முக்கியமான ஒரு வாக்கியத்தில் தொகுக்கப்பட்டுள்ளதைக் காணலாம்: "மனந்திரும்புங்கள், பரலோகராஜ்யம் சமீபமாயிருக்கிறது" (மத்தேயு 3:2; 4:17). இந்தச் சுருக்கமான ஆய்வில், பரலோகராஜ்யம் என்றால் என்ன, அதன் வளர்ச்சியின் பல்வேறு காலக்கட்டங்கள் எவை என்பது போன்ற சுவாரஸ்யமான தலைப்புகளை விவாதிப்பது பொருத்தமாக இருக்காது. ஆனால் இந்த பாக்கியவான்கள் (Beatitudes), அந்த பரலோக ராஜ்யத்திற்கு உரியவர்கள் யார் என்பதையும், எவர்கள் மீது கிறிஸ்து தமது உன்னதமான ஆசீர்வாதங்களை அறிவித்தார் என்பதை குறித்து நமக்கு அநேக காரியங்களைப் போதிக்கின்றன.
கிறிஸ்து ஒருமுறை மாம்சத்தில் வந்தார், அவர் மீண்டும் வரப்போகிறார். ஒவ்வொரு வருகையும் பரலோக ராஜ்யத்தோடு தொடர்புடைய ஒரு குறிப்பிட்ட நோக்கத்தைக் கொண்டுள்ளது. தனிப்பட்ட ஆத்துமாக்களுக்குள் பரலோக ராஜ்யத்தின் அடித்தளத்தை அமைப்பதன் மூலம் மனிதர்கள் மத்தியிலும் மனிதர்கள் மீதும் ஒரு ராஜ்யத்தை நிறுவுவதே நமது ஆண்டவரின் முதல் வருகையின் நோக்கமாகும். அவரது இரண்டாம் வருகை அந்தப் ராஜ்யத்தின் மகிமையில் நிறுவுவதற்காக அமையும். எனவே, அந்த ராஜ்யத்தில் உள்ள குடிமக்களின் குணாதிசயங்கள் என்ன என்பதை நாம் புரிந்துகொள்வது மிகவும் முக்கியம்; அப்போதுதான் நாம் அந்த ராஜ்யத்தைச் சேர்ந்தவர்களா என்பதையும், அதன் நன்மைகள், பாதுகாப்புகள் தற்போதைய மற்றும் எதிர்கால சுதந்திரத்தின் ஒரு பகுதியாக இருக்கிறதா என்பதையும் நாம் அறிய முடியும்.
இந்த பாக்கியவான்கள் என்ற புத்தகத்தை கவனத்தோடு வாசிப்பதின் அவசியத்தை இதிலிருந்து ஒருவர் புரிந்துகொள்ளலாம். இவற்றை நாம் ஒட்டுமொத்தமாக ஆராய வேண்டும்; அவை இணைந்து கற்பிக்கும் பாடத்தின் ஒரு பகுதியை இழக்காமல், ஒன்றைக் கூட நாம் தனித்து எடுக்க முடியாது. இந்தப் பாக்கியங்கள் அனைத்தும் சேர்ந்து ஒரு முழுமையான ஓவியத்தை உருவாக்குகின்றன. ஒரு கலைஞர் ஒரு படத்தை வரையும்போது, ஒவ்வொரு கோடும் அழகாகவும் நேர்த்தியாகவும் வரைந்திருக்கலாம், ஆனால் அந்தக் கோடுகளின் சேர்க்கையே தான் நெருங்கிய உறவை வெளிப்படுத்துகிறது; பல்வேறு கலைவடிவங்கள் மற்றும் நுணுக்கமான தூரிகைத் தீண்டல்களின் கலவையே நமக்கு முழுமையான ஓவியத்தைத் தருகிறது. அதுபோலவே இங்கும், ஒவ்வொரு தனிப்பட்ட அம்சமும் தனக்கே உரிய அழகையும் நேர்த்தியையும் கொண்டு, சிறந்த கலைஞரின் கைவண்ணத்தைக் காட்டினாலும், எல்லாக் கோடுகளையும் ஒன்றாக இணைக்கும்போதுதான், தேவனுடைய ராஜ்யத்தின் மெய்யான குடிமகனின் முழுமையான ஓவியத்தை நாம் பெறுகிறோம்.
தேவனுடைய மாபெரும் இரட்சிப்பு "பணமுமின்றி விலையுமின்றி" (ஏசாயா 55:1) இலவசமாக வழங்கப்படுகிறது. இது தேவனுடைய கிருபையின் மகா இரக்கமுள்ள ஏற்பாடாகும்; தேவன் இரட்சிப்பை விலைக்கு விற்பாரானால், இந்த உலகில் எந்த ஒரு ஏழைப் பாவியாலும் அதை வாங்க முடியாது, ஏனென்றால் அதை வாங்குவதற்கு அவனிடம் எதுவும் இல்லை. ஆனால் பெரும்பான்மையான மக்கள் இதை உணருவதில்லை; ஆம், பரிசுத்த ஆவியானவர் பாவத்தால் குருடாக்கப்பட்ட நமது கண்களைத் திறக்கும் வரை நாமெல்லோரும் அப்படியே இருந்தோம். மரணத்திலிருந்து ஜீவனுக்குக் கடந்தவர்கள் மட்டுமே தங்கள் வறுமையை உணர்ந்து, பிச்சைக்காரர்களின் நிலையை ஏற்று, தேவனுடைய ஈவை சந்தோஷமாகப் பெற்று, உண்மையான செல்வத்தைத் தேடத் தொடங்குகின்றனர். இவ்வாறு "தரித்திரருக்குச் சுவிசேஷம் பிரசங்கிக்கப்படுகிறது" (மத்தேயு 11:5), அது அவர்களின் செவிகளுக்கு மட்டுமல்ல, அவர்களின் இருதயங்களுக்கும் பிரசங்கிக்கப்படுகிறது!
இவ்வாறு ஆவியில் எளிமை அதாவது ஒருவன் தன் வெறுமையையும் தேவையையும் உணர்ந்துகொள்ளும் நிலை, மனித இருதயத்திற்குள் பரிசுத்த ஆவியானவர் செய்யும் கிரியையின் விளைவாக உண்டாகிறது. 'என் நீதியெல்லாம் அழுக்கான கந்தையைப் போல இருக்கிறது' (ஏசாயா 64:6) என்ற வலிமிகுந்த கண்டுபிடிப்பிலிருந்து இது பிறக்கிறது. என்னுடைய மிகச் சிறந்த செயல்கள் கூட மும்மைசால் பரிசுத்தருக்கு ஏற்புடையதல்ல (ஆம், அது அவருக்கு அருவருப்பானது) என்ற உண்மையை நான் உணர்த்தப்படுவதைத் தொடர்ந்து இது வருகிறது. இவ்வாறு ஆவியில் எளிமையுள்ள ஒருவன், தான் நரகத்திற்குப் பாத்திரமான பாவி என்பதை உணர்ந்துகொள்கிறான்.
ஆவியில் எளிமையை விசுவாசத்தின் அடித்தள நிலை என்று கூறலாம். விசுவாசத்தினால் கிறிஸ்துவைப் பற்றிக்கொள்வதற்கு முன்பும், ஆவிக்குரிய விதத்தில் அவரது மாம்சத்தை புசித்து அவரது இரத்தத்தைப் பானம்பண்ணுவதற்கு (யோவான் 6:48-58) முன்பும் ஒருவன் தன் முழுமையான தகுதியற்ற நிலையை உணர்வதே இதுவாகும். கிறிஸ்து தன்னை நிரப்பும்படி, சுயத்தை இருதயத்திலிருந்து அகற்றும் ஆவியானவரின் கிரியை இதுவே. இது தேவையையும் வெறுமையையும் உணரும் நிலையாகும்.
எனவே, இந்த முதல் பாக்கியவான் என்பது அடிப்படையானதாகும், இது மறுபடியும் பிறந்த ஒவ்வொரு ஆத்துமாவிலும் காணப்படும் ஒரு அடிப்படைப் பண்பை விவரிக்கிறது. ஆவியில் எளிமையுள்ளவன் தன் சொந்தப் பார்வையில் ஒன்றுமில்லாதவன், தேவனுக்கு முன்பாகத் தூசியில் இருப்பதே தனக்குரிய சரியான இடம் என்று அவன் உணருகிறான். தவறான போதனைகள் அல்லது உலக ஆசைகளின் மூலமாக அவன் அந்த இடத்தை விட்டு விலகலாம், ஆனால் அவனை எப்படிக் கொண்டுவர வேண்டும் என்று தேவனுக்குத் தெரியும். அவருடைய உண்மை மற்றும் அன்பின் நிமித்தம் அவர் அதைச் செய்வார், ஏனென்றால் தேவனுக்கு முன்பாகத் தன்னைத் தாழ்த்தும் தாழ்மையின் இடமே அவருடைய பிள்ளைகளுக்கான ஆசீர்வாதத்தின் இடமாகும். தேவனை மகிமைப்படுத்தும் இந்த ஆவியைப் பயிற்றுவிக்கும் விதம் மத்தேயு 11:29-ல் கர்த்தராகிய இயேசுவால் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த ஆவியின் எளிமையைக் கொண்டிருப்பவன் பாக்கியவான் என்று அறிவிக்கப்படுகிறான்: ஏனெனில், சுபாவத்தின்படி அவனிடம் இருந்ததற்கு முற்றிலும் நேர்மாறான ஒரு மனநிலையை அவன் இப்போது கொண்டிருக்கிறான்; தெய்வீக கிருபையின் கிரியை அவனுக்குள் செயல்பட்டிருக்கிறது என்பதற்கான முதல் உறுதியான சாட்சியை அவன் பெற்றிருக்கிறான்; அப்படிப்பட்ட ஒரு ஆவி, உண்மையான செழிப்புக்காக தன்னைத் தாண்டி வெளியே பார்க்க அவனைத் தூண்டுகிறது; மேலும் அவன் பரலோக ராஜ்யத்தின் சுதந்தரவாளியாக இருக்கிறான்.





