“நம்முடைய தாழ்வில் நம்மை நினைத்தவரைத் துதியுங்கள். அவர் கிருபை என்றுமுள்ளது." (சங்கீதம் 136:23)
“நம்மை நினைத்தவர்” என்பது நாம் அவரை மறப்பதற்கு எதிரான குறிப்பிடத்தக்கதும் ஆசீர்வாதமானதுமான வேறுபாடாகும். நமது மற்ற திறன்களைப் போலவே, நமது நினைவாற்றலும் பாவத்தினால் பாதிப்படைந்து, வீழ்ச்சியின் அடையாளங்களைச் சுமக்கிறது. பயனுள்ள விஷயங்களை மறந்துவிட்டு, நன்மையானவைகளை நினைவில் வைக்க இயலாத நமது பலவீனமே இதற்குச் சான்றாகும். மனிதன் சிறு வயதில் பாடிய அல்லது கேட்ட ஒரு பாலர் பள்ளிப் பாடலைத் தன்னுடைய வாழ்நாள் முழுவதும் நினைவில் வைத்துக்கொள்கிறான். ஆனால் பயனுள்ள பிரசங்கத்தையோ 24 மணி நேரத்திற்குள் மறந்துவிடுகிறான். இதைவிட மிகவும் வருத்தத்திற்குரியதும் ஆழமானதுமான காரியம் என்னவென்றால், தேவனையும் அவர் நமக்குக் காண்பித்த எண்ணற்ற இரக்கங்களையும் நாம் எளிதாக மறந்துவிடுகிறோம் என்பதே. ஆனால் தேவனுக்கு என்றென்றும் மகிமை உண்டாகட்டும். அவர் ஒருபோதும் நம்மை மறப்பதில்லை. அவர் உண்மையாய் நினைவுகூருகிற தேவனாக இருக்கிறார்.
நாம் வேதாகம ஒத்துவாக்கிய அகராதியில் பார்க்கும்போது, “நினைவுகூருதல்" என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்ட முதல் ஐந்து முறையும் தேவனுடன் தொடர்புடைய நிலையிலேயே பயன்படுத்தப்பட்டதைக் கண்டு நான் ஆச்சரியப்பட்டேன். “தேவன் நோவாவையும், அவனுடனே பேழையிலிருந்த சகல காட்டு மிருகங்களையும், சகல நாட்டு மிருகங்களையும் நினைத்தருளினார்” (ஆதியாகமம் 8:1). “அந்த வில் மேகத்தில் தோன்றும்போது, தேவனுக்கும் பூமியின்மேலுள்ள சகலவித மாம்சஜீவன்களுக்கும் உண்டான நித்திய உடன்படிக்கையை நான் நினைவுகூரும்படிக்கு அதை நோக்கிப்பார்ப்பேன்" (ஆதியாகமம் 9:16). “தேவன் அந்தச் சமபூமியின் பட்டணங்களை அழிக்கும்போது, தேவன் ஆபிரகாமை நினைத்து, லோத்து குடியிருந்த பட்டணங்களைத் தாம் கவிழ்த்துப்போடுகையில், லோத்தை அந்த அழிவின் நடுவிலிருந்து தப்பிப்போகும்படி அனுப்பிவிட்டார்” (ஆதியாகமம் 19:29). இதுபோல தேவனுடைய நினைவைத் தாங்கி வசனங்கள் வரும்போது, முதன்முதலில் இந்த வார்த்தை மனிதனைக் குறிக்கும் வகையில் எவ்வாறு பயன்படுத்தப்பட்டுள்ளது என்று பாருங்கள்: “ஆனாலும் பானபாத்திரக்காரரின் தலைவன் யோசேப்பை நினையாமல் அவனை மறந்துவிட்டான்" (ஆதியாகமம் 40:23)!
நமது கவனத்தில் எடுத்துக்கொண்ட வேதபகுதியின் வரலாற்றுச் சூழல் எகிப்தின் செங்கல் சூளைகளில் இஸ்ரவேல் மக்கள் பட்ட பாடுகளைப் பற்றியது. அவர்கள் உண்மையாகவே அங்கு மிகவும் மோசமான நிலையில் இருந்தனர். தேவனை அறியாத கடின இருதயமுள்ள அரசனால் ஒடுக்கப்பட்டும், இரக்கமற்ற அதிகாரிகளின் சவுக்கடிகளின் கீழ் அவர்கள் புலம்பித் தவிக்கும் அடிமைத்தனத்தில் இருந்தனர். அவர்களுக்கு இரக்கம் காட்ட யாரும் இல்லாத நிலையில், யெகோவா தேவன் அவர்களின் கூக்குரலைக் கேட்டு அவர்களுக்கு இரங்கும்படி கண்ணோக்கினார். அவர்களுடைய “தாழ்ந்த நிலையில்" அவர்களை நினைவுகூர்ந்தார். இதற்குக் காரணம் என்ன? யாத்திராகமம் 2:24-25 சொல்லுகிறது: “தேவன் அவர்கள் பெருமூச்சைக்கேட்டு, தாம் ஆபிரகாமோடும் ஈசாக்கோடும் யாக்கோபோடும் செய்த உடன்படிக்கையை நினைவுகூர்ந்தார். தேவன் இஸ்ரவேல் புத்திரரைக் கண்ணோக்கினார். தேவன் அவர்களை நினைத்தருளினார்.”
மேலும் வரலாறு மீண்டும் திரும்புகிறது. இஸ்ரவேலரின் தாழ்ந்த நிலை இன்னமும் உச்சத்தை அடையவில்லை. அவர்களுடைய அனுபவங்கள் கடந்த 19 நூற்றாண்டுகளில் அதிக அச்சத்தை ஏற்படுத்துவதாகவே இருந்தாலும், மிகவும் மோசமான காரிருளின் இரவு இன்னமும் அவர்களுக்கு முன்பாக வரவிருக்கிறது. இந்தக் கிருபையின் காலம் முடிவுக்கு வரும்போது, இதுவரை இல்லாத நியாயத்தீர்ப்புகள் யூதர்கள் மீது இறங்கும். அது அவர்கள் அடிமைத்தனக் காலத்தில் இருந்தவைகளைவிட மோசமானதாக இருக்கும். “மகா உபத்திரவ காலத்தில்” தான் அவர்கள் மிக மோசமான துன்பங்களை அனுபவிப்பார்கள். “ஐயோ! அந்த நாள் பெரியது. அதைப் போன்ற நாளில்லை. அது யாக்கோபுக்கு இக்கட்டுக்காலம். ஆனாலும் அவன் அதற்கு நீங்கலாகி இரட்சிக்கப்படுவான்” (எரேமியா 30:7) என்று எழுதப்பட்டிருப்பது போல நடக்கும். தேவன் அவர்களுடைய முன்னோர்களுடன் செய்த உடன்படிக்கையை நினைவுகூருவார்.
ஆனால், நமது வேதபகுதி ஆபிரகாமின் நேரடிச் சந்ததியினரான இஸ்ரவேலர்களுக்கு மட்டுமே உரியது என்று சுருக்கிவிடக் கூடாது. இது “தேவனுடைய இஸ்ரவேல்" (கலாத்தியர் 6:16) ஆகிய யாவருக்குமானது. தேவன் அளிக்கும் இரட்சிப்பில் பங்குகொள்ளும் இன்றைய விசுவாசிகளும் சங்கீதக்காரனுடன் இணைந்து, “நம்முடைய தாழ்வில் நம்மை நினைத்தவரைத் துதியுங்கள்" என்று சொல்லலாம். விழுந்துபோன சிருஷ்டிகளாகிய நாம், நம்மை நாமே இரட்சித்துக் கொள்ள முடியாத அளவுக்கு மிகவும் மோசமான நிலையிலும் பாவத்திலும் இருந்தோம். ஆனால் அவரது அற்புதமான கிருபையால் தேவன் நம்மீது இரக்கங்கொண்டார். நாம் விழுந்து கிடந்த இடத்தில் அவர் வந்து, நம்மைப் பார்த்து நம்மீது மனதுருகினார் (லூக்கா 10:33). எனவே ஒவ்வொரு கிறிஸ்தவனும், “பயங்கரமான குழியிலும் உளையான சேற்றிலுமிருந்து என்னைத் தூக்கியெடுத்து, என் கால்களைக் கன்மலையின்மேல் நிறுத்தி, என் அடிகளை உறுதிப்படுத்தினார்" (சங்கீதம் 40:2) என்று கூறலாம்.
அவர் ஏன் நம்மை நினைவுகூர்ந்தார்? “நினைவுகூருதல்" என்ற சொல், ஏற்கனவே இருந்த நம்மீதான அன்பு மற்றும் இரக்கத்தின் சிந்தைகளைச் சொல்கிறது. எகிப்தில் இருந்த இஸ்ரவேலர்களைப் போலவே, அவர் நம்முடைய இயல்பிலேயே பாழாய்ப்போன நிலையில் கிடந்த நம்மையும் நினைவுகூர்ந்தார். அவர் நித்தியகாலத்திற்கு முன்பாகவே நமது உறுதியான மீட்பிற்காக ஏற்படுத்திய தம்முடைய உடன்படிக்கையை நினைவுகூர்ந்தார். நாம் தீத்து 1:2-ல் வாசிப்பதுபோல “பொய்யுரையாத தேவன் ஆதிகாலமுதல் நித்திய ஜீவனைக்குறித்து வாக்குத்தத்தம்பண்ணி” இருக்கிறார். கிறிஸ்து யாருக்காக தம்முடைய ஜீவனைக் கொடுத்தாரோ அவர்களுக்கு நித்திய ஜீவன் வழங்கப்படும் என்று வாக்களித்துள்ளார். ஆம், தேவன் “உலகத்தோற்றத்துக்கு முன்னே கிறிஸ்துவுக்குள் நம்மைத் தெரிந்துகொண்டதை" (எபேசியர் 1:4) நினைவுகூர்ந்தார். எனவே ஏற்ற காலத்தில் அவர் நம்மை மரணத்திலிருந்து ஜீவனுக்குள் கொண்டுவந்தார்.
ஆயினும், இந்த ஆசீர்வாதமான வார்த்தை தேவ இரட்சிப்பின் கிருபையை நாம் பெற்றுக்கொண்ட ஆரம்ப அனுபவத்துக்கும் அப்பால் கடந்து செல்கிறது. சரித்திர அடிப்படையில் நமது வசனப்பகுதி எகிப்தில் இருந்தபோது மட்டுமே தேவன் தம் மக்களை நினைவுகூர்ந்தார் என்று கூறவில்லை, ஆனால் இந்த வசன சூழமைவின்படியே, அவர்கள் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்கு வனாந்தர வழியாய்ப் பயணம் செய்த காலம் முழுவதும் தேவன் நினைவுகூர்ந்தார் என்று சொல்ல முடியும். இஸ்ரவேலின் வனாந்தர அனுபவங்கள் அனைத்தும், இன்று எதிர்ப்புகள் நிறைந்த உலகத்தில் வாழும் பரிசுத்தவான்களுக்கான முன் அடையாளங்களே. கர்த்தர் ஒவ்வொரு நாளும் அவர்களை நினைவுகூர்ந்து அவர்களின் தேவைகளையும் பசியையும் தீர்த்து அவர்கள் மீது காட்டிய அக்கறையானது, பரலோக வீட்டை நோக்கிய நமது பயணத்தில் நமக்கான அனைத்துத் தேவைகளைச் சந்திப்பதிலும் வெளிப்படும் என்பதை இது நமக்கு விளக்குகிறது. பூமியில் நமது தற்போதைய நிலை மிகவும் பரிதாபமாக உள்ளது. ஏனென்றால் நாம் இப்போது அரசர்களாய் ஆளுகை செய்கிறவர்கள் அல்ல. ஆனாலும் நம்முடைய தேவன் எப்போதும் நம்மை அவருடைய நினைவிற்கொண்டு, அனைத்துச் சமயங்களிலும் நமக்கு ஒத்தாசையாக செயல்படுகிறார்.
“நம்முடைய தாழ்வில் நம்மை நினைத்தவரைத் துதியுங்கள்". எப்பொழுதும் நாம் சாதகமான சூழ்நிலைகளில் இருக்க நமக்கு அனுமதி இல்லை. இந்த இயற்கை உலகைப் போலவே நம் வாழ்வும் இருக்கிறது. வெளிச்சமும் பிரகாசமுமான நாட்களைத் தொடர்ந்து மேகமூட்டத்துடன் கூடிய இருண்ட நாட்களும் வரும். கோடைக்காலத்தைத் தொடர்ந்து குளிர்காலமும் வரும். ஏமாற்றங்கள், இழப்புகள், துன்பங்கள் மற்றும் மரணத்தால் வரும் துக்கங்கள் நம் வழியே வந்து நம்மைத் தாழ்மையடையச் செய்கின்றன. மேலும் பல வேளைகளில் நம் நண்பர்களின் ஆதரவு நமக்கு அதிகமாகத் தேவைப்படும் போது அவர்கள் நம்மை ஏமாற்றியிருக்கலாம். நமக்கு உதவி செய்வார்கள் என்று நாம் நினைத்தவர்கள் கூட நம்மைக் கைவிட்டனர். ஆனால், அப்போதும், நம்மை “நினைத்தவர்" தாம் நேற்றும், இன்றும், என்றும் மாறாதவர் (எபிரெயர் 13:8) என்பதை விளங்கப்பண்ணியதால், மீண்டும் நம் வாழ்வில் “அவர் கிருபை என்றுமுள்ளது" என்ற உண்மை மறுபடியும் நிரூபிக்கப்படுகிறது.
“நம்முடைய தாழ்வில் நம்மை நினைத்தவரைத் துதியுங்கள்". இந்த வார்த்தைகளை வாசிக்கும் ஒருசிலர், இதனை மற்றொரு விதத்தில் நடைமுறைப்படுத்த நினைக்கலாம்: அதாவது நீங்கள் ஆதியில் கொண்டிருந்த அன்பில் இருந்து விலகியிருக்கும் வேளையாக, உங்கள் இதயம் குளிர்ந்துபோய், உங்கள் வாழ்க்கை இந்த உலகத்திற்குள் ஈர்க்கப்பட்டும், பின்வாங்கிப்போன நிலைக்குத் தள்ளப்பட்டும் இருக்கலாம். அது உண்மையிலேயே மிகவும் பரிதாபமான தாழ்வான நிலைதான். அப்படி இருந்தும் நம்முடைய உண்மையுள்ள தேவன் உங்களை நினைவுகூர்ந்தார். ஆம், நாம் ஒவ்வொருவரும் சங்கீதக்காரனுடன் இணைந்து, “அவர் என் ஆத்துமாவைத் தேற்றி (மறுபடியும் புதுப்பித்து என்று மூல மொழியில் வருகிறது), தம்முடைய நாமத்தினிமித்தம் என்னை நீதியின் பாதைகளில் நடத்துகிறார்" (சங்கீதம் 23:4) என்று சொல்ல நிறைய காரணங்கள் உள்ளன.
“நம்முடைய தாழ்வில் நம்மை நினைத்தவரைத் துதியுங்கள்". இந்த வார்த்தைகளை விசுவாசியின் வாழ்க்கையில் மற்றொரு சூழ்நிலையிலும் பயன்படுத்தலாம். அது என்னவென்றால், பரிசுத்தவானின் வாழ்வின் கடைசிப் பெரும் நெருக்கடியாகிய இவ்வுலகை விட்டுச் செல்லும் நேரமே. உடலில் உள்ள அனைத்து உயிர்ச்சக்திகளும் மந்தமாகி, சரீரப் பெலன் அனைத்தையும் இழந்து நிற்கும் நிலையில், ஒருவருக்குள் தாழ்வு நிலை உருவாகிறது. ஆனால் அப்போதும் கர்த்தர் நம்மை நினைக்கிறார், ஏனெனில் “அவர் கிருபை என்றுமுள்ளது.” மனிதனின் உச்சபட்ச நெருக்கடி, தேவன் கிரியை செய்கிற வாய்ப்பாகவே அமைகிறது. நம்முடைய பெலவீனத்தில் அவருடைய பெலம் பூரணமாய் விளங்கும். இந்த நிலையில்தான் அவர் நம்மை நினைத்து “பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன். நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன். என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன்.” (ஏசாயா 41:10) என்ற வாக்குத்தத்தம் நிறைவேறும்படி செய்து நமக்கு மிகப்பெரிய ஆறுதலைத் தருகிறார்.
“நம்முடைய தாழ்வில் நம்மை நினைத்தவரைத் துதியுங்கள்." உண்மையில் இந்த வசனம் நாம் நித்திய வாசஸ்தலத்தில் கர்த்தரோடு இருக்கும்போது தேவனைத் துதிப்பதற்குப் பொருத்தமான வார்த்தைகளை நமக்கு வழங்குகிறது. நம்முடைய தாழ்வில் நம்மை நினைத்த அவருடைய உடன்படிக்கையின் உண்மையுள்ள தன்மைக்காகவும், அவருடைய ஒப்பற்ற கிருபைக்காகவும், அவருடைய இரக்கத்திற்காகவும், நாம் எவ்வளவாய் அவரைப் புகழப் போகிறோம்! அப்போது நாம் அவரால் முழுவதும் அறியப்பட்டபடியே நிறைவாக அறிந்துகொள்வோம். நமது நினைவுகளும்கூட புதுப்பிக்கப்பட்டு, பூரணமாக்கப்பட்டு, தேவன் நம்மை நடத்திய அனைத்து வழிகளையும் நினைவில் கொண்டு வருவோம் (உபாகமம் 8:2). அந்த நினைவைக்கொண்டு நன்றியுடனும் சந்தோஷத்துடனும் “அவருடைய கிருபை என்றென்றும் உள்ளது” என்று நாம் ஆமோதித்து அவரை என்றென்றும் ஆராதிப்போம்.
“ஆனாலும் நான் போகும் வழியை அவர் அறிவார். அவர் என்னைச் சோதித்தபின் நான் பொன்னாக விளங்குவேன்." (யோபு 23:10)
யோபு இங்கே தன்னைத் திருத்திக் கொள்கிறார். இந்த அதிகாரத்தின் தொடக்கத்தில், “இன்றையதினமும் என் அங்கலாய்ப்பு முரண்டுத்தனமாக எண்ணப்படுகிறது. என் தவிப்பைப்பார்க்கிலும் என் வாதை கடினமானது" (யோபு 23:2) என்று யோபு குறை கூறுவதைக் காண்கிறோம். தன்மீதான சுமை தாங்க முடியாத அளவுக்கு அதிகமாய் இருப்பதாக யோபு உணர்ந்தார். ஆனால் இப்படிப்பட்ட மனப்பான்மையிலிருந்து மீள்கிறார். அவர் தனது ஆவேச உக்கிரத்தைத் தடுத்து, தன் மூர்க்கமான சிந்தனையைத் திருத்திக்கொள்கிறார். நாம் அனைவரும் நம்மைத் திருத்திக் கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது. ஆனால் இந்த பூமியில் வாழ்ந்த ஒரே ஒரு மனிதருக்கு மட்டும் அந்தத் தேவை ஏற்படவில்லை.
யோபு இந்த இடத்தில் தன்னைத்தானே ஆறுதல்படுத்திக் கொள்கிறார். தேவத் திட்டத்தின் இரகசியங்களை யோபுவால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் அவர் நடக்கும் பாதை தேவனுக்குத் தெரியும். தன்னை அமைதிப்படுத்தும் தேவனுடைய பிரசன்னத்தை யோபு ஊக்கமாய்த் தேடினார், ஆனால் அந்த முயற்சி குறிப்பிட்ட காலத்திற்கு வீணாகவே இருந்தது. அதனால்தான் “இதோ, நான் முன்னாகப்போனாலும் அவர் இல்லை. பின்னாகப்போனாலும் அவரைக் காணேன். இடதுபுறத்தில் அவர் கிரியை செய்தும் அவரைக் காணேன். வலது புறத்திலும் நான் அவரைக் காணாதபடிக்கு ஒளித்திருக்கிறார்” (யோபு 23:8, 9) என்று அங்கலாய்த்தார். ஆனாலும் அவர் இந்த ஆசீர்வாதமான சத்தியத்தைக்கொண்டு தன்னைத்தானே ஆறுதல்படுத்திக் கொண்டார்: என்னால் தேவனைப் பார்க்க முடியாவிட்டாலும், அதைவிட ஆயிரம் மடங்கு சிறப்பானது என்னவென்றால், அவர் என்னைக் காண்கிறவர் – “அவர் அறிவார்". மேலே இருக்கும் ஒருவர் நம் சூழ்நிலைகளைப் பற்றி அலட்சியமானவரோ, நம் நிலையைப் புரியாதவரோ அல்ல. ஒரு குருவி கீழே விழுவதைக்கூட அவர் கவனிக்கிறார் என்றால், நம்முடைய தலைமுடிகளையும் அவர் எண்ணுகிறவரானால், நிச்சயமாக நான் நடக்கும் பாதையை அவர் அறிவார்.
இங்கே யோபு வாழ்க்கையின் உன்னதமான பார்வையை வெளிப்படுத்துகிறார். அவர் எத்தனை மாபெரும் நம்பிக்கையைக் காட்டுகிறார் பாருங்கள். அவரது துன்பங்கள் அவரை சந்தேகிக்கிறவராக மாற்ற அனுமதிக்கவில்லை. தனக்கு வந்த சோதனைகள் மற்றும் இன்னல்கள் தன்னை மூழ்கடித்துவிட அனுமதிக்கவில்லை. இருள் சூழ்ந்த மேகத்தின் பிரகாசமான பகுதியை நோக்கினார் – அது தேவனுடைய பகுதி, புத்திக்கும் புலன்களுக்கும் மறைக்கப்பட்ட பிரகாசமான பகுதி. வாழ்வைப் பற்றிய நெடிய பார்வையை அவர் தெரிந்துகொண்டார். தற்போதைய அக்கினிமயமான சோதனைகளுக்கும் அப்பால் பார்த்து, அவைகளின் முடிவு புடமிடப்பட்ட பொன் போன்றது என்று அறிக்கை செய்தார்: “ஆனாலும் நான் போகும் வழியை அவர் அறிவார். அவர் என்னைச் சோதித்தபின் நான் பொன்னாக விளங்குவேன்." இந்த வசனத்தில் மூன்று மாபெரும் சத்தியங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றைத் தனித்தனியே சுருக்கமாக ஆராய்வோம்.
“நான் போகும் வழியை அவர் அறிவார்". தேவனின் சர்வஞானம் என்பது அவருடைய தெய்வீகத்தின் சிறந்த பண்புகளில் ஒன்றாகும். “அவருடைய கண்கள் மனுஷருடைய வழிகளை நோக்கியிருக்கிறது. அவர்களுடைய நடைகளையெல்லாம் அவர் பார்க்கிறார்" (யோபு 34:21). “கர்த்தரின் கண்கள் எவ்விடத்திலுமிருந்து, நல்லோரையும் தீயோரையும் நோக்கிப்பார்க்கிறது” (நீதிமொழிகள் 15:3). “நடைமுறை கிறிஸ்தவ வாழ்வின் மிகப்பெரிய சோதனைகளில் ஒன்று, தேவனுடைய சர்வஞானத்திற்கும் எனக்கும் என்ன தொடர்பு இருக்கிறது என்பதே,” என்றார் சார்லஸ் ஸ்பர்ஜன். அன்பான வாசகரே! தேவனின் சர்வஞானத்திற்கும் உங்களுக்கும் என்ன தொடர்பு இருக்கிறது? அது உங்களை எவ்வாறு பாதிக்கிறது? அது உங்களைக் கலங்கப் பண்ணுகிறதா அல்லது ஆறுதல் தருகிறதா? உங்கள் வழிகள் அனைத்தையும் தேவன் அறிந்திருக்கிறார் என்ற உண்மையிலிருந்து தப்பிக்க விரும்புகிறீர்களா? அந்த முயற்சியே போலியானதும், சுயநலமானதாகவும், மாய்மாலமானதாகவும்தான் இருக்க வேண்டும். தேவன் தனது வழிகள் அனைத்தையும் அறிந்திருக்கிறார் என்ற எண்ணம் ஒரு பாவியை மிகவும் பயமுறுத்துகிறது. அவன் அதை மறுக்கிறான் அல்லது அதை மறப்பதற்கு வழிகளைத் தேடுகிறான். ஆனால் கிறிஸ்தவர்களுக்கு அது ஆறுதலை அளிக்கிறது. என்னுடைய சோதனைகள், இன்னல்கள், துக்கங்கள் மற்றும் அவரை மகிமைப்படுத்துவதற்காக நான் எடுக்கும் முயற்சிகள் அனைத்தையும் தேவன் அறிந்திருக்கிறார் என்ற உணர்வு எவ்வளவு ஊக்கமளிக்கிறது! நான் நடக்கும் எல்லா வழிகளையும் தேவன் அறிந்திருக்கிறார் என்ற உண்மை கிறிஸ்துவுக்குள் இருப்பவர்களுக்கு மகிமையாகவும், கிறிஸ்துவில் இல்லாதவர்களுக்கு சங்கடமாகவும் இருக்கிறது.
“நான் போகும் வழியை அவர் அறிவார்". யோபு நடந்த பாதையை அவனது தோழர்களுக்குத் தெரியவில்லை. யோபுவைத் தவறாகப் புரிந்துகொண்டனர். கடினமான சூழலில் இருந்த யோபுவுக்கு இது மிகவும் வேதனையான காரியம். அவரது நண்பர்களே யோபுவை ஒரு ஏமாற்றுக்காரன் என்று நினைத்தார்கள். அவன் ஒரு கொடிய பாவி என்றும், அதனால்தான் தேவனால் தண்டிக்கப்படுகிறான் என்றும் அவர்கள் கருதினர். ஆனால், அவரோ தான் ஒரு தகுதியில்லாத பரிசுத்தவான் என்றும் பாசாங்கு செய்பவர் அல்ல என்பதையும் அறிந்திருந்தார். அவர்கள் சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை என அவர்களிடம் அறைகூவல் விடுத்தார். “நான் போகும் வழியை அவர் அறிவார். அவர் என்னைச் சோதித்தபின் நான் பொன்னாக விளங்குவேன்." இங்கு நாம் கற்றுக் கொள்ள வேண்டியது ஒன்று உள்ளது. என் சக விசுவாசியே, உங்கள் சகமனிதர்கள், ஆம், உங்களுடன் பயணிக்கும் கிறிஸ்தவர்கள் உங்களைத் தவறாகப் புரிந்துகொண்டு, உங்கள் வாழ்வில் நடக்கும் தேவச் செயலைத் தவறாக அர்த்தம் சொல்வார்கள். ஆனால் சர்வஞானியாகிய தேவன் நீங்கள் போகும் வழியை அறிவார் என்கிற பாக்கியமான சத்தியத்தால் உங்களை ஆறுதல்படுத்திக் கொள்ளுங்கள்.
“நான் போகும் வழியை அவர் அறிவார்". இந்த வார்த்தைகள் சரியாகப் புரிந்து கொள்ளப்பட்டால், யோபுக்குக்கூட அவர் நடந்துகொண்டிருந்த வழி தெரியாது. அதேபோல, நாம் நடக்கும் வழிகளும் நமக்குத் தெரியாது. வாழ்க்கை பலவேளைகளில் மர்மமாகவே இருப்பது போலத் தெரிகிறது. ஆண்டுகள் கடந்தும் தீர்வு கிடைப்பதில்லை. வாழ்க்கை தத்துவார்த்த சிந்தனையும் நமக்கு உதவாது. மனித வேட்கை என்பது ஒரு விசித்திரமான புதிர். நாம் இயந்திர சாதனங்கள் அல்ல என்பதை நமது சிந்தனைத் திறன் தெளிவாக்குகிறது. நாம் எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியிலும் நமது விருப்பத்தேர்வுகளைப் பயன்படுத்துகிறோம். இருந்தபோதிலும், நமது சுதந்திரம் இறுதியானது இல்லை என்பது நமக்குத் தெரியும். நம்மால் எதிர்க்க முடியாத பல நன்மையும் தீமையுமான அழுத்தங்கள் நமது முடிவுகளை பாதிக்கின்றன. பாரம்பரியமும், வாழ்வுச்சூழலும் நம்மீது வலுவான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. நமது சுற்றுப்புறங்கள், சூழ்நிலைகள் போன்றவற்றை நாம் புறக்கணிக்க முடியாது. மேலும், நம்முடைய முடிவுகளைத் தீர்மானிக்கும் தேவதிட்டம் பற்றி நாம் என்ன சொல்வது? நாம் எடுக்கும் வழியைப் பற்றி நமக்கு எவ்வளவு குறைவான அறிவே உள்ளது பாருங்கள். “கர்த்தாவே, மனுஷனுடைய வழி அவனாலே ஆகிறதல்லவென்றும், தன் நடைகளை நடத்துவது நடக்கிறவனாலே ஆகிறதல்லவென்றும் அறிவேன்" (எரேமியா 10:23) என்கிறார் தீர்க்கதரிசி எரேமியா. நாம் இங்கே புதிர் நிறைந்த மண்டலத்தில் நுழைகிறோம். அதை மறுப்பது அர்த்தமற்றது. அதை ஒப்புக்கொண்டு, “கர்த்தராலே மனுஷருடைய நடைகள் வாய்க்கும். ஆகையால் மனுஷன் தன் வழியை அறிந்து கொள்வதெப்படி?" (நீதிமொழிகள் 20:24) என்ற ஞானியின் கருத்துடன் உடன்படுவதே சிறப்பானதாக இருக்க முடியும்.
மற்றுமொரு கோணத்தில் பார்க்கும் பட்சத்தில் யோபு தான் நடக்கும் வழியை அறிந்திருந்தார் எனலாம். அந்தப் பாதை என்ன என்பதை அடுத்த இரண்டு வசனங்களில் விளக்குகிறார்: “என் கால்கள் அவர் அடிகளைப் பற்றிப்பிடித்தது. அவருடைய நெறியைவிட்டு நான் சாயாமல் அதைக் கைக்கொண்டேன். அவர் உதடுகளின் கற்பனைகளை விட்டு நான் பின்வாங்குவதில்லை. அவருடைய வாயின் வார்த்தைகளை எனக்கு வேண்டிய ஆகாரத்தைப் பார்க்கிலும் அதிகமாய்க் காத்துக்கொண்டேன்" (யோபு 23:11, 12). யோபு தேர்ந்தெடுத்த பாதை சிறந்த பாதை, வசனத்தின் படியான பாதை, தேவனின் பாதை - அதுவே யோபுவின் பாதை. அன்பான வாசகரே! அந்த பாதையைக் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? இது உன்னதமான தேர்ந்தெடுத்தல் அல்லவா! யோபு பொறுமையானவர் மட்டுமல்ல, ஞானம் உள்ளவரும்கூட! நீங்களும் அதுபோன்ற பாதையைத் தேர்ந்தெடுத்திருக்கிறீர்களா? “என் கால்கள் அவர் அடிகளைப் பற்றிப்பிடித்தது. அவருடைய நெறியைவிட்டு நான் சாயாமல் அதைக் கைக்கொண்டேன்" என்று உங்களால் சொல்ல முடியுமா? (வசனம் 11). அவ்வாறு சொல்ல முடிந்தால், அந்த கிருபையை உங்களுக்கு வழங்கிய தேவனை துதிசெய்யுங்கள். அப்படிச் சொல்ல முடியாவிட்டால், அவருடைய கிருபையை வேண்டி மன்றாடாமல் இருந்ததற்காக வெட்கத்துடன் உங்கள் தவறை ஒப்புக் கொள்ளுங்கள். உடனே முழங்காலிட்டு விழுந்து பணிந்து மன்னிப்புக் கேளுங்கள். எதையும் மறைக்காமல், ஒன்றையும் ஒளித்து வைக்காமல் அறிக்கை செய்யுங்கள். “நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருந்து, நம்முடைய பாவங்களை மன்னித்து, எல்லா அநியாயத்தினின்றும் நம்மைச் சுத்திகரிப்பார்" (1 யோவான் 1:9) என்று எழுதப்பட்டிருப்பதை நினைவில் வையுங்கள். அன்பு வாசகரே வசனம் 12 உங்கள் மற்றும் எனது தோல்வியை விவரிக்கவில்லையா? நாம் தேவனுடைய கட்டளைக்கு முன்பாக நடுங்காமலும், அவருடைய வார்த்தையைப் பொருட்படுத்தாமலும், அவரை விட்டு விலகியும் சென்றிருக்கிறோமே! ஆகவே, இப்போது, ஒவ்வொரு நாளும் அவருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதற்கும், அவருடைய வார்த்தையை நம் இதயங்களில் வைப்பதற்கும் அவருடைய கிருபையை மன்றாடுவோம்.
“நான் போகும் வழியை அவர் அறிவார்." நீங்கள் எந்த பாதையை பின்பற்றுகிறீர்கள்? ஜீவனுக்கு நேராக நடத்தும் குறுகலான பாதையா? அல்லது அழிவுக்குக் கொண்டு செல்லும் விசாலமான பாதையா? அன்பான நண்பரே! இந்த காரியத்தைப் பற்றிய நிச்சயம் உங்களுக்கு இருக்கட்டும். வேத வசனம் சொல்லுகிறது: “ஆதலால் நம்மில் ஒவ்வொருவனும் தன்னைக்குறித்துத் தேவனுக்குக் கணக்கொப்புவிப்பான்” (ரோமர் 14:12). ஆனால் இந்த விஷயத்தில் நீங்கள் ஏமாற்றப்படவோ, உறுதியற்றவராகவோ இருக்கலாகாது. ஏனென்றால் “நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்” என்று கர்த்தர் சொல்லுகிறார் (யோவான் 14:6).
“அவர் என்னைச் சோதித்தபின்” “வெள்ள
“அவர் என்னைச் சோதித்தபின்" தேவனுடைய பரிசுத்தவான்கள் கூட அடிக்கடி அவர்கள் எதிர்கொள்ளும் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் சாத்தான் மீது பழி சுமத்துவது வழக்கம். அவர்களுடைய துன்பங்களுக்குப் பொறுப்பு அந்தப் பெரிய எதிரி என்று கருதுகிறார்கள். ஆனால் இப்படி நினைப்பது மனதுக்கு ஆறுதலாக இருக்காது. சாத்தான் பல சிக்கல்களையும் சிரமங்களையும் உருவாக்குகிறான் என்பதை நாம் மறுக்கவில்லை. ஆனாலும் சாத்தானுக்கும் மேலே சர்வவல்ல தேவன் இருக்கிறார்! தேவனின் அனுமதியின்றி சாத்தானால் நம் தலைமுடியை அசைக்க முடியாது. ஒருவேளை அப்படி நம்மை சோதிப்பதற்கு சாத்தானுக்கு தேவன் அனுமதித்தால், அவைகள் நம்மைப் பரிசோதிக்கும்படி தேவன் அவைகளைப் பயன்படுத்திக் கொள்கிறார். ஆகவே, இந்த முக்கியமற்ற காரணங்களையெல்லாம் தாண்டி, “எல்லாவற்றையும் தம்முடைய சித்தத்தின்படியே செய்கிற” தேவனை நோக்கிப் பார்க்கக் கற்றுக்கொள்வோம் (எபேசியர் 1:11). யோபு உண்மையில் செய்தது இதுதான்.
யோபு புத்தகத்தின் முதல் அதிகாரத்தில், யோபுவை துன்புறுத்துவதற்கு சாத்தான் தேவனின் அனுமதியைப் பெற்றான் என்று வாசிக்கிறோம். அவன் யோபுவின் வேலையாட்களைக் கொன்று அவன் மந்தையைக் கொள்ளையடிக்க, சபேயரைப் பயன்படுத்தினான் (யோபு 1:14-15). வேலையாட்களைக் கொல்லவும் ஒட்டகங்களைத் திருடவும் கல்தேயர்களைப் பயன்படுத்தினான் (
இதை மறப்பதால் நாம் எவ்வளவு இழக்கிறோம்? எவ்வளவு கடினமான சூழ்நிலையாக இருந்தாலும், எவ்வளவு வலிமிகுந்த நிலை எதுவாக இருந்தாலும், தேவன் தம்முடைய பிள்ளைகளை எல்லாவற்றிலும் பரிசோதிக்கிறார் என்பதை அறிவது இருதயம் உடைந்தவர்களுக்கு ஆறுதல் அளிக்கிறதாக இருக்கிறது. இதற்கு நமது இரட்சகர் என்ன ஒரு சிறந்த உதாரணம். பேதுரு மல்கூஸ் என்பவனின் காதைத் துண்டித்தபோது கர்த்தர் சொன்ன வார்த்தைகள் “பிதா எனக்குக் கொடுத்த பாத்திரத்தில் நான் பானம்பண்ணாதிருப்பேனோ? என்றார்" (யோவான் 18:11). மனிதர்கள் தங்கள் ஆத்திரத்தை அவர் மீது கொட்ட ஆயத்தமாயினர். சர்ப்பம் அவர் குதிகாலைப் பதம்பார்க்கப்போகிறது. ஆனால் இயேசுவோ அவைகளுக்கு அப்பாலும் மேலாகவும் பார்த்தார். அன்புள்ள வாசகரே! தேவனிடமிருந்து வரும் பாத்திரத்தில் இருந்து எவ்வளவு கசப்பாக இருந்தாலும் (அது நம் இரட்சகர் பருகியதற்கும் எண்ணற்ற அளவில் குறைவானதே) குடிக்க தயாராக இருங்கள். சில சூழ்நிலைகளில் நாம் தேவனுடைய ஞானத்தைக் கேள்வி கேட்பவர்களாக இருக்கிறோம். தேவன் நமக்கு அளிக்கும் சில அனுபவங்களால் நாம் தாழ்மை அடைகிறோம். என்னால் சுமக்க முடியாத பாரத்தை தேவன் ஏன் என் மீது சுமத்தினார்? பிறர் நேசிப்பவர்களைக் காப்பாற்றியவர் என் அன்புக்கு உரியவர்களை மட்டும் ஏன் மரணத்தின் வாயிலாக கொண்டுச் செல்கிறார்? என் உடல் நலனும், வலிமையும் என் பார்வையும் ஏன் எனக்கு மட்டும் மறுக்கப்பட வேண்டும்? இது போன்ற எல்லாக் கேள்விகளுக்குமான முதல் பதில் இது தான், “ஓ மனிதனே! தேவனோடு எதிர்த்துத் தர்க்கிக்கிற நீ யார்?" (ரோமர் 9:20)! எந்தவொரு உயிரினமும் அதன் படைப்பாளரான மாபெரும் தேவனைக் கேள்வி கேட்பது துன்மார்க்கமும் கீழ்ப்படியாமையும் கலந்த செயல் தான். “உருவாக்கப்பட்ட வஸ்து உருவாக்கினவனை நோக்கி: நீ என்னை ஏன் இப்படி உண்டாக்கினாயென்று சொல்லலாமா?" (ரோமர் 9:20). தேவனுடைய கிருபை நம் மீறுகிற உதடுகளை அடக்கி, கடினப்பட்ட இதயங்களில் பொங்கி எழும் புயல்களைக் கட்டுப்படுத்த வேண்டுமென்று நாம் ஒவ்வொருவரும் எத்துணை ஊக்கமாய் மன்றாட வேண்டும் என்பதை யோசித்துப்பாருங்கள்!
ஆனால் தாழ்மையோடு சர்வத்தையும் அறிந்த தேவன் அனுமதிக்கும் அனைத்திற்கும் அடிபணிபவர்களுக்கு, வேதாகமம் சரியான தீர்வுகளைத் தருகிறது. இந்த ஒளி நமது அறிவுத்திறனுக்குத் திருப்தி தருவதாக இல்லாமல் போகலாம். ஆனால் ஒரு குழந்தையைப் போல விசுவாசமுடன் ஏற்றுக்கொள்பவர்களுக்கு ஆறுதலையும் பெலத்தையும் அது தருகிறது. இதைப் பற்றி பேதுரு இவ்வாறு குறிப்பிடுகிறார்: “இதிலே (இரட்சிப்பு) நீங்கள் மிகவும் சந்தோஷப்படுகிறீர்கள். என்றாலும், துன்பப்படவேண்டியது அவசியமானதால், இப்பொழுது கொஞ்சக்காலம் பலவிதமான சோதனைகளினாலே துக்கப்படுகிறீர்கள். அழிந்துபோகிற பொன் அக்கினியினாலே சோதிக்கப்படும். அதைப்பார்க்கிலும் அதிக விலையேறப்பெற்றதாயிருக்கிற உங்கள் விசுவாசம் சோதிக்கப்பட்டு, இயேசு கிறிஸ்து வெளிப்படும்போது உங்களுக்குப் புகழ்ச்சியும் கனமும் மகிமையுமுண்டாகக் காணப்படும்.” (1 பேதுரு 1:6, 7). இங்கே நாம் மூன்று காரியங்களைக் கவனிக்கிறோம். முதலாவது - விசுவாசத்திற்கு சோதனை தேவை. தேவன் இந்த வார்த்தையை சொல்லுவதால் நாம் இவைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும். இரண்டாவதாக, இந்த விசுவாசத்தின் சோதனை தங்கத்தை விட விலையேறப்பெற்றது. அது தேவனின் பார்வையில் விலையேறப்பெற்றது (சங்கீதம் 116:15) எனவே அது நம்முடைய பார்வைக்கும் விலையேறப் பெற்றதாக இருக்க வேண்டும். மூன்றாவதாக, தற்போதைய சோதனை நமது எதிர்காலத்தை மனதில் கொண்டுள்ளது. இந்தப் பரீட்சையைச் சாந்தமாகச் சகித்துக் கொண்டு, தைரியமாக எதிர்கொள்பவர்கள், இரட்சகராகிய இயேசு கிறிஸ்து வெளிப்படும் நாளிலே பெரும் வெகுமதியைப் பெறுவார்கள்.
மேலும் 1 பேதுரு 4:12-13-ல் நமக்கு இவ்வாறு புத்திமதி தரப்பட்டுள்ளது: “பிரியமானவர்களே, உங்களைச் சோதிக்கும்படி உங்கள் நடுவில் பற்றியெரிகிற அக்கினியைக்குறித்து ஏதோ புதுமையென்று திகையாமல், கிறிஸ்துவின் மகிமை வெளிப்படும்போது நீங்கள் களிகூர்ந்து மகிழும்படியாக அவருடைய பாடுகளுக்கு நீங்கள் பங்காளிகளானதால் சந்தோஷப்படுங்கள்”. முந்தைய வசனங்களில் வெளிப்படுத்தப்பட்ட அதே எண்ணங்களையே இதே வசனத்திலும் நாம் காண்கிறோம், எனவே பரிசோதனை மிகவும் அவசியம். அது இடையூறு என்று நாம் நினைக்கக்கூடாது, அதற்காக நாம் ஆயத்தப்பட வேண்டும். கிறிஸ்து மீண்டும் வரும்போது, அவரால் தாராளமாக பலன்பெறுவோம் என்பது நமது ஆசீர்வதிக்கப்பட்ட நம்பிக்கையாக இருக்க வேண்டும். கிறிஸ்துவின் பாடுகளில் பங்குகொள்கிற தகுதி நமக்குக் கிடைத்திருப்பதால் நாம் அவற்றை விசுவாசத்தின் தைரியத்துடன் மட்டுமல்ல, மகிழ்ச்சியுடனும் எதிர்கொள்ள வேண்டும். அவரும் பாடுபட்டார், எனவே குருவைப் பின்பற்றும் சீடனாக நாமும் பாடுபடுவது தேவையானதே.
“அவர் என்னைச் சோதித்தபின்" அன்புள்ள கிறிஸ்தவ வாசகரே! இதற்கு விதிவிலக்கு ஒன்றும் இல்லை. தேவனுக்கு பாவம் செய்யாத ஒரே ஒரு குமாரன் இருந்தார், ஆனால் துக்கம் இல்லாத ஒரு குமாரர் இல்லை. சீக்கிரமாகவோ அல்லது தாமதமாகவோ, ஏதாவது ஒரு வடிவத்தில், கடினமும் கனமுமான சுமையாகிய சோதனையை நாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். “இந்த உபத்திரவங்களினாலே ஒருவனும் அசைக்கப்படாதபடிக்கு உங்களைத் திடப்படுத்தவும், உங்கள் விசுவாசத்தைப்பற்றி உங்களுக்குப் புத்திசொல்லவும், நம்முடைய சகோதரனும் தேவ ஊழியக்காரனும் கிறிஸ்துவின் சுவிசேஷத்தில் எங்கள் உடன்வேலையாளுமாகிய தீமோத்தேயுவை அனுப்பினோம். இப்படிப்பட்ட உபத்திரவங்களைச் சகிக்க நாம் நியமிக்கப்பட்டிருக்கிறோமென்று நீங்கள் அறிந்திருக்கிறீர்களே” (1 தெசலோனிக்கேயர் 3:2-3). மேலும், “நாம் அநேக உபத்திரவங்களின் வழியாய்த் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கவேண்டும்" (அப்போஸ்தலர் 14:22) என்றும் எழுதப்பட்டுள்ளது. இதுபோன்றே ஒவ்வொரு தலைமுறையிலும் நடந்துள்ளது. ஆபிரகாம் சோதிக்கப்பட்டார், கடுமையாக சோதிக்கப்பட்டார். அவ்வாறே யோசேப்பு, யாக்கோபு, மோசே, தாவீது, தானியேல், மற்றும் அப்போஸ்தலர்கள் போன்ற இன்னும் பலரும் சோதிக்கப்பட்டனர்.
“நான் பொன்னாக விளங்குவேன்" என்ற சொற்றொடரின் காலத்தைக் கவனியுங்கள். யோபு ஏற்கனவே சுத்தமான பொன்னாக இருப்பதாக சிந்தனை செய்யவில்லை. “நான் தங்கம் போல் வெளிவருவேன்," என்று அவர் அறிக்கையிட்டார். அப்போதும் தன்னில் களிம்பு அதிகமாக இருந்தது யோபுவுக்கு நன்றாகவே தெரியும். தான் ஏற்கனவே பூரணரானதாகப் பெருமை கொள்ளவில்லை. அதற்கு மாறாக யோபு சொன்னதை இந்தப் புத்தகத்தின் இறுதி அதிகாரத்த
இப்போது நமக்கு முன்பாக இரண்டு மையக்கருத்துக்கள் உள்ளன. முதலாவதாக, நாம் தீவிரமான சோதனையின் உலைக்குள் இருக்கும் போது, அன்பு நம் சகிப்புத்தன்மையை அளவிடும். “அவர் வெள்ளியைப் புடமிட்டுச் சுத்திகரிப்பவர்போல அமர்ந்திருப்பார் (தேவகிருபையின் பொறுமை).” (மல்கியா 3:3). இரண்டாவதாக, அக்கினி சூளையில் மூன்று எபிரேய வாலிபர்களுடன் தேவன் இருந்தது போல், நம் சோதனையின் சூளையிலும் தேவன் நம்மோடும் இருப்பார் (தானியேல் 3:25). நம் எதிர்காலம் உறுதியானது: பரலோகத்தில் மிகவும் அதிசயமாய் இருப்பது தங்கத்தின் தெருவோ, தங்கத்தால் செய்யப்பட்ட இசைக் கருவிகளாகவோ அல்ல, ஆனால் தேவனின் சாயல் பொறிக்கப்பட்ட பொன்னான ஆத்துமாக்களாக – அதாவது, தம்முடைய குமாரனின் சாயலுக்கு ஒப்பாயிருக்க முன்குறிக்கப்பட்ட ஆத்துமாக்கள் (ரோமர் 8:29)! அத்தகைய மகிமையான எதிர்காலத்திற்காக, வெற்றிகரமான முடிவிற்காக, மற்றும் அழகான இலக்கிற்காக தேவனுக்கு ஸ்தோத்திரம் உண்டாகட்டும்.
“கர்த்தருடைய சிட்சையை அற்பமாக எண்ணாதே, அவரால் கடிந்துகொள்ளப்படும்போது சோர்ந்துபோகாதே” (எபிரெயர் 12:5).
தேவனுடைய சிட்சைக்கும் தண்டனைக்கும் உள்ள வித்தியாசத்தை முதலில் புரிந்து கொள்வது மிக அவசியமாகும். இந்த வேறுபாட்டை உணர்ந்துகொள்வது தேவமகிமையையும், கனத்தையும் நிலைநிறுத்துவதற்கும், கிறிஸ்தவனின் உள்ளான சமாதானத்திற்கும் இன்றியமையாதது. இந்த வேற்றுமை மிகவும் எளிமையானது என்றாலும், அது பல நேரங்களில் நம் கண்களுக்கு மறைவாகி விடுகிறது. தேவனுடைய மக்கள் தங்கள் பாவத்திற்காகத் தண்டிக்கப்படுவது ஒருபோதும் சாத்தியமில்லை. ஏனெனில், அவர்களின் பாவங்கள் ஏற்கனவே சிலுவையில் தண்டிக்கப்பட்டுவிட்டன. கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நம்முடைய இடத்தில், நம்முடைய பாவங்களுக்கான முழு தண்டனையையும் ஏற்றுக்கொண்டார். அதனால்தான், “அவருடைய குமாரனாகிய இயேசுவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி நம்மைச் சுத்திகரிக்கும்" (1 யோவான் 1:7) என்று எழுதப்பட்டுள்ளது. தேவனின் நீதியும் அன்பும், கிறிஸ்து செலுத்திய முழு விலையையும் மீண்டும் நம் மீது விதிக்க அனுமதிக்காது. ஆனால், தண்டனைக்கும் சிட்சைக்கும் உள்ள வித்தியாசம் ஒருவர் அனுபவிக்கும் துன்பங்களின் இயல்பில் இருப்பதில்லை என்பதை நினைவில் கொள்வது மிகவும் அவசியமாகும்.
இவை இரண்டுக்கும் மூன்று முக்கிய வித்தியாசங்கள் உள்ளன:
முதலாவதாக, தேவன் செயல்படும் அடிப்படைகள்: தண்டனையில், தேவன் நியாயாதிபதியாகச் செயல்படுகிறார்; ஆனால் சிட்சையில் அவர் தந்தையாகவே செயல்படுகிறார். குற்றம் நிரூபிக்கப்பட்ட பிறகு, தண்டனைத் தீர்ப்பை அறிவிப்பது நீதிபதியின் வேலை. தேவனுடைய பிள்ளைகள் அத்தகைய தண்டனைக்குரிய தீர்ப்புக்கு உட்படமாட்டார்கள். ஏனெனில், அவர்களுடைய பாவம் கிறிஸ்துவின் மீது சுமத்தப்பட்டது. “அவர் தாமே தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களைச் சிலுவையின்மேல் சுமந்தார்” (1 பேதுரு 2:24). எனவே, ஒரு விசுவாசி தன் பாவத்திற்காகத் தண்டிக்கப்படுவதில்லை என்பது உண்மைதான் என்றாலும், ஒரு கிறிஸ்தவனுக்கு இனி ஆக்கினைத்தீர்ப்பு இல்லை (ரோமர் 8:1) என்பது உண்மைதான் என்றாலும், அவன் தேவனால் சிட்சிக்கப்படுகிறான் (கண்டிக்கப்படுகிறான்). ஒரு கிறிஸ்தவன், கிறிஸ்தவனல்லாதவனிலிருந்து முற்றிலும் மாறான நிலையில் இருக்கிறான். அவன் தேவனின் குடும்பத்தைச் சேர்ந்தவன். தேவனுக்கும் அவனுக்கும் உள்ள உறவு தந்தைக்கும் குமாரனுக்கும் உள்ள உறவைப் போன்றது. எனவே, குமாரன் என்ற முறையில் ஒழுங்கில்லாமல் நடக்கும்போது அவன் சிட்சிக்கப்பட வேண்டும். தேவனின் ஒவ்வொரு பிள்ளையின் இருதயத்திற்குள்ளும் மதியீனம் ஒட்டிக்கொண்டிருக்கும்; அவைகளைச் சரிசெய்யும்படி கண்டிப்பதும், கீழ்ப்படுத்துவதும், தாழ்மைப்படுத்துவதும் மிகவும் அவசியமாகிறது.
இரண்டாவதாக, தண்டனைக்கும் சிட்சைக்கும் உள்ள வேறுபாடு, அவற்றைப் பெறுபவர்களைப் பொறுத்தது: தண்டனையைப் பெறுகிறவர்கள் தேவனுடைய எதிராளிகள்; சிட்சையைப் பெறுபவர்கள் அவருடைய பிள்ளைகள். முழு உலகத்தின் நியாயாதிபதியாக, தேவன் இனி வருங்காலத்தில் தம் எதிரிகள் மேல் பழிவாங்குவார். ஆனால், தமது குடும்பத்தின் தகப்பனாக, தேவன் தம் பிள்ளைகளின் ஒழுக்கத்தைப் பராமரிக்கிறார். ஒன்று தீர்ப்புக்குரிய சட்டம் சார்ந்தது, மற்றொன்று தகப்பன் தன் பிள்ளைகளை வளர்ப்பதில் காண்பிக்கும் ஒழுக்கம் சார்ந்தது.
மூன்றாவதாக, இரண்டிற்கும் இடையிலான வேறுபாடு அவற்றின் நோக்கத்தில் காணப்படுகிறது: ஒன்று நியாயத்தீர்ப்பு, மற்றொன்று சரிசெய்தல். ஒன்று தேவனின் கோபத்தால் உண்டானது, மற்றொன்று அவருடைய அளவற்ற அன்பினால் உண்டாகிறது. தேவனின் தண்டனை என்பது பாவிகளின் நன்மைக்காக ஒருபோதும் விதிக்கப்படுவதில்லை; மாறாக, தேவனின் நியாயப்பிரமாணத்தை மகிமைப்படுத்தவும் அவரது ஆளுகையை நியாயப்படுத்தவும் அனுப்பப்படுகிறது. ஆனால் தேவனின் சிட்சை அல்லது கண்டிப்பு, அவரது பிள்ளைகளின் நலனுக்காகவே அனுப்பப்படுகிறது. “அன்றியும், நம்முடைய சரீரத்தின் தகப்பன்மார்கள் நம்மைச் சிட்சிக்கும்போது, அவர்களுக்கு நாம் அஞ்சி நடந்திருக்க, நாம் பிழைக்கத்தக்கதாக ஆவிகளின் பிதாவுக்கு வெகு அதிகமாய் அடங்கி நடக்கவேண்டுமல்லவா? அவர்கள் தங்களுக்கு நலமென்று தோன்றினபடி கொஞ்சக்காலம் சிட்சித்தார்கள். இவரோ தம்முடைய பரிசுத்தத்துக்கு நாம் பங்குள்ளவர்களாகும் பொருட்டு நம்முடைய பிரயோஜனத்துக்காகவே நம்மைச் சிட்சிக்கிறார்" (எபிரேயர் 12:9,10).
மேலே காட்டப்பட்டுள்ள வேறுபாடுகள், தெய்வீக தண்டனை மற்றும் தெய்வீக சிட்சை ஆகிய இரண்டையும் ஒன்றாகக் கருதும் கிறிஸ்தவர்கள் அந்தத் தப்பெண்ணத்தை உணர எச்சரிப்பதாகும். ஒரு விசுவாசி தெய்வீக சிட்சையினால் நடத்தப்படும்போது, தேவன் தன்னைத் தண்டிக்கிறார் என்று நினைப்பது தவறு. அப்படி நினைப்பது இயேசு கிறிஸ்து சிந்திய இரத்தத்தை அவமதிப்பதாகும். தேவன் தம்முடைய அன்பினால் உங்களை ஒழுங்குபடுத்துகிறாரே தவிர, கோபத்தால் உங்களை அழித்துவிடவில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். எந்தக் கிறிஸ்தவனும் இந்தச் சிட்சையைத் தவிர்க்க முடியாத தீமையாகவோ, சுமக்க வேண்டிய சுமையாகவோ கருதலாகாது. மாறாக, தேவனுடைய நன்மையிலும் உண்மையிலும் இருந்து இது வருவதால், இந்தப் பெரிய ஆசீர்வாதத்திற்காக நாம் நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும். தேவனால் ஒழுக்கத்துடனும், கண்டிப்புடனும் நடத்தப்படுவது நாம் அவருடைய பிள்ளைகள் என்பதற்குச் சான்றாகும். எந்தத் தந்தையும் தன் குடும்பத்தவர் அல்லாத ஒருவரைக் கண்டிப்பதில்லை. அவர் தமது வீட்டாரை நேர்மையான பாதையில் நடப்பதற்கே ஒழுங்குபடுத்துகிறார். தெய்வீக சிட்சை நம் நன்மைக்காகவும், நமக்கு மிகவும் பயனுள்ளதாகவும் இருக்கவே அனுமதிக்கப்படுகிறது. எனவே, ஒழுங்குபடுத்தும் தடியைத் தாண்டி, அதைக் கையாளும் சர்வஞானியாகிய தேவனுடைய கரத்தைப் பார்க்க நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.
தங்கள் அவிசுவாசமுள்ள இருதயத்தின் சிந்தையுடைய மக்களாய் இருந்த அவர்களை அப்போஸ்தலன் கையாண்ட விதம் நமக்கு போதனை தரக்கூடியதாகவும், ஆசீர்வதிக்கப்பட்ட ஒன்றாகவும் உள்ளது. அவர்களுடைய வேதப் பகுதிகளிலிருந்தே அவர்களுக்குப் பதிலைக் கொண்டு வருகிறார். நீதிமொழிகளில் வரும் எச்சரிப்பை அவர்களுக்கு ஞாபகப்படுத்தி, அவர்களுடைய சூழலுக்குள் பொருத்துகிறார். முதலில் நாம் குறிப்பிடும் வசனத்தைக் கவனியுங்கள்: “உங்களுக்குச் சொல்லியிருக்கிற புத்திமதியை மறந்தீர்கள்” (எபிரெயர் 12:5). பழைய ஏற்பாட்டில் உள்ள புத்திமதிகள் பழைய உடன்படிக்கைக் காலத்தில் வாழ்ந்தவர்களுக்கு மட்டுமே சுருங்கிவிடக் கூடாது என்பதை இது நமக்குக் காட்டுகிறது; அவை புதிய உடன்படிக்கையின் காலத்தில் வாழ்கிற நமக்கும் அதே வலிமையுடனும் நேரடியாகவும் பொருந்துகின்றன. “வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது... அது நமக்குப் பிரயோஜனமுள்ளது” (2 தீமோத்தேயு 3:16) என்பதை நாம் மறந்து விடாதிருப்போமாக. பழைய ஏற்பாடும், புதிய ஏற்பாட்டைப் போலவே நமது போதனைக்காகவும் எச்சரிப்புக்காகவும் கொடுக்கப்பட்டுள்ளது.
இரண்டாவதாக, நமது வேதபகுதியில் உள்ள வார்த்தையின் காலத்தைக் கவனியுங்கள்: “உங்களுக்குச் சொல்லியிருக்கிற புத்திமதியை மறந்தீர்கள்.” அப்போஸ்தலர் கிட்டத்தட்ட ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பேசப்பட்ட தேவனுடைய வார்த்தையைப் பற்றி பேசுகிறார். என்றாலும் 'இவ்வாறு பேசியிருக்கிறார்' என்று எழுதாமல், 'இவ்வாறு பேசுகிறார்' என்று எழுதுகிறார். இதே நியமம் வெளிப்படுத்தல் விசேஷம் இரண்டாம் மற்றும் மூன்றாம் அதிகாரங்களில் ஏழு முறை எடுத்துக்காட்டப்பட்டுள்ளது: “ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்.” இந்த வசனங்களில் ஆவியானவர் 'சொல்லிய' வார்த்தை என்று இல்லாமல், 'சொல்லுகிற' வார்த்தை என்று பயன்படுத்தப்பட்டிருப்பதைக் கவனியுங்கள். பரிசுத்த வேத வார்த்தைகள் இன்றும் பேசுகிற தேவனுடைய ஜீவனுள்ள வார்த்தையாக இருக்கிறது.
இப்போது நம் வேதபகுதியில் உள்ள “மறந்தீர்கள்" என்ற வார்த்தையைக் கவனிப்போம். நீதிமொழிகள் 3:11,12 வசனங்களில் உள்ள எச்சரிப்பை அன்றைய எபிரேய கிறிஸ்தவர்கள் அறியவில்லை என்று அர்த்தமல்ல, மாறாக அவர்கள் அதைத் தங்கள் கவனத்தில் இருந்து வழுவிப்போக விட்டுவிட்டார்கள். அவர்கள் தேவனுடைய தகப்பன் பண்பையும், பிள்ளைகளாக அவருடன் தங்களுக்கு இருந்த உறவையும் மறந்துவிட்டார்கள். அதன் விளைவாக தேவன் அவர்களை நடத்தும் முறையையும், நோக்கத்தையும் தவறாகப் புரிந்துகொண்டார்கள். தங்களை வழிநடத்தும் விதத்தில் தேவனுடைய அன்பைப் பாராமல், தங்கள் வாழ்வுச் சூழல்கள் தேவன் தங்கள் மீது வெறுப்பாயிருப்பதையே காண்பிக்கிறது என்று தப்பெண்ணம் கொண்டார்கள். இதன் காரணமாக, அவர்கள் தங்களைத் தாங்களே மகிழ்ச்சியுடன் தேவனுக்கு அர்ப்பணிப்பதற்குப் பதிலாக, விரக்தியையும் நம்பிக்கையற்ற தன்மையையும் காட்டினார்கள். இங்கே நமக்கு ஒரு முக்கியமான எச்சரிக்கை உள்ளது. தேவன் தமது திட்டப்படி நம்முடன் இடைபடும் வழிகளை நம்முடைய சொந்த அறிவால் உற்று நோக்காமல், தேவனுடைய வார்த்தையின் வெளிச்சத்தில் மட்டுமே புரிந்து கொள்ள வேண்டும். “என் மகனே, நீ கர்த்தருடைய சிட்சையை அற்பமாக எண்ணாதே, அவர் கடிந்துகொள்ளும்போது சோர்ந்துபோகாதே” (நீதிமொழிகள் 3:11) என்று பிள்ளைகளிடம் பேசுவது போல நம்மிடம் பேசும் இந்த எச்சரிக்கையை நாமும் அடிக்கடி மறந்து விடுகிறோம் அல்லவா!
இந்த வேதபகுதியில் ‘சிட்சை’ என்கிற வார்த்தைக்கு கிரேக்க மொழியில் “பைதேயா” (Paideia) என்கிற பதம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் தொடர்பில் வரும் “பைடியோன்” (Paidion) என்கிற வார்த்தை இளம் பிள்ளைகளைக் குறிக்கிறதாக உள்ளது. இது போன்ற வார்த்தை உபயோகத்தை யோவான் 21:5 மற்றும் எபிரேயர் 2:13 ஆகிய பகுதிகளிலும் காணமுடிகிறது. இந்த வார்த்தை பிள்ளைகளுடன் கையாளும் ஒரு மென்மையான வழிமுறையைக் குறிக்கிறது. சீடனையும் நீதிநெறிக் கல்வியையும் பிரித்துப்பார்க்க முடியாததுபோல, கிரேக்க மொழியில் “ஒழுக்கம் மற்றும் குமாரன்கள்" என்ற வார்த்தைகள் பிரிக்க முடியாதவை. அதே வேளையில் பிள்ளை வளர்ப்பு என்பது மென்மையான ஒன்று. எனவே இங்கே பயன்படுத்தும் வார்த்தை தம் மக்களுக்குத் தேவன் தரும் படிப்பினை, வளர்ப்பு மற்றும் ஒழுக்கம் ஆகியவற்றுடன் தொடர்புடையவை. எனவே இங்கு 'பயிற்சி' என்ற வார்த்தையைப் பயன்படுத்துவது மிகவும் பொருத்தமானது. இது ஒரு தந்தை தனது பிள்ளைகளை அன்புடனும் ஞானத்துடனும் திருத்துவது போன்ற காட்சியை வெளிப்படுத்துகிறது.
பெரும்பாலும் ஒரு குமாரனைத் திருத்தம் செய்ய கையில் ஒரு பிரம்பு தேவைப்படும். ஆனால் நம் எண்ணங்களை இந்த அம்சத்திற்குள் மட்டுப்படுத்துவது மிகப்பெரிய தவறு. ஒவ்வொரு முறையும் சிட்சை என்பது தவறு செய்த தனது பிள்ளைகளுக்கு தேவன் திருத்துவதற்காக கொடுக்கும் அடியாகப் பார்க்கக்கூடாது. தேவனின் பரிசுத்தமான மக்களும், தேவனுக்கு மிகவும் கீழ்ப்படிதலுள்ள பிள்ளைகளும்கூட பல முறை துன்பங்களை அனுபவித்திருக்கிறார்கள், இன்னும் அனுபவிக்கிறார்கள். பல நேரங்களில் தேவன் நம்மைத் திருத்துவதற்காகத் துன்பத்தை நம் வாழ்வில் அனுமதிக்கிறார், தண்டிக்கும்படியாக அல்ல. சுயநீதி மற்றும் தன்னிறைவு ஆகியவற்றிலிருந்து நம்மை வெறுமையாக்குவதற்கும், நமது மீறல்களையும் நம் இதயத்தின் கொடிய நோயையும் வெளிப்படுத்தவுமே அவை அனுமதிக்கப்படுகின்றன. சில சமயங்களில் நம்மை ஆவிக்குரிய ரீதியில் பலப்படுத்துவதற்காக இப்படிப்பட்ட துன்பங்கள் அனுப்பப்படுகின்றன. அனுபவத்தில் வளரவும் பயனுள்ள நிலைக்கு எழும்பவும் அவை நமக்கு உதவுகின்றன. அதுமட்டுமின்றி, நாம் செய்யும் சேவையில் வரும் வெற்றியால் நாம் கர்வப்படாமல் இருக்க, நமது வாழ்வில் வீழ்ச்சியைத் தடுக்கும் விதமாக இந்தச் சிட்சை உதவுகிறது. இங்கே வேதத்திலிருந்து நான்கு உதாரணங்களைச் சுருக்கமாகப் பார்ப்போம்:
தாவீது: தாவீதின் காரியத்தில், தேவனுடைய சிட்சையின் தடி அவருடைய பாவத்தின் தீமையினிமித்தம், வெளிப்படையான துன்மார்க்கத்தனத்தைத் திருத்தப் பயன்படுத்தப்பட்டது. அவனுடைய வீழ்ச்சிக்குக் காரணம் அவனுடைய தன்னம்பிக்கையும் சுயநீதியும்தான். 2 சாமுவேல் 22 மற்றும் 23-ம் அதிகாரங்களில் தாவீது பாடின இரண்டு பாடல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் முதலாவது தன்னுடைய வாழ்க்கையின் ஆரம்பத்திலும், இரண்டாவது தன்னுடைய வாழ்க்கையின் முடிவிலும் இயற்றப்பட்டது. இதை கவனமாகப் படித்தால், வாசகர்கள் இரண்டிற்கும் இடையே ஒரு பெரிய வித்தியாசத்தைக் கண்டுபிடிப்பார்கள். 2 சாமுவேல் 22:22-25 வசனத்தை வாசிக்கும்போது, தாவீதின் வீழ்ச்சியை தேவன் அனுமதித்ததில் எந்தவித ஆச்சரியமுமில்லை என்று அறிவீர்கள். ஆனால் 23-ஆம் அதிகாரத்தில் உள்ள ஆசீர்வாதமான மாற்றத்தைக் கவனியுங்கள். 5-ம் வசனத்தில் தாவீதினுடைய தோல்வியின் இதயப்பூர்வமான வாக்குமூலத்தை நாம் காண்கிறோம். வசனங்கள் 10 முதல் 12 வரை, தேவனை மகிமைப்படுத்தி அவருக்கே ஜெயத்தைச் செலுத்தும் அறிக்கையினையும் நாம் காண்கிறோம். தாவீதை தேவன் கண்டித்தது வீண்போகவில்லை.
யோபு: ஒருவேளை மனிதர்களுக்கு வரக்கூடிய எல்லாவிதமான துன்பங்களையும் அவர் சகித்திருப்பார். குடும்பத்தினர் இழப்பு, சொத்துக்கள் இழப்பு, சரீர பலவீனம் போன்றவை ஒன்றுக்கு பின் மற்றொன்றாக நிகழ்ந்தன. ஆனால் அந்த இழப்புகளிலிருந்து யோபு அதிகமான நன்மையைப் பெற்று, அதிகமாகப் பரிசுத்தத்தில் பங்கு கொள்ள வேண்டும் என்பதே தேவனின் நோக்கமாக இருந்தது. ஆரம்பத்தில் இருந்தே, யோபு தன்னை நீதிமான் என்று சொல்லிக்கொள்கிறார். ஆனால் யோபு இறுதியாக மூன்று மடங்கு பரிசுத்தத்துடன் இருக்கும் தேவனை நேருக்கு நேர் பார்த்தபோது, அவர் தன்னைத்தான் வெறுத்து மனந்திரும்புவதாக ஒப்புக்கொண்டார். “ஆகையால் நான் என்னை அருவருத்து, தூளிலும் சாம்பலிலும் இருந்து மனஸ்தாபப்படுகிறேன் என்றான்” (யோபு 42:6). தாவீதின் காரியத்தில் உண்டான துன்பம் அவனைத் திருத்துவதற்காகத் தரப்பட்டது. ஆனால் யோபுக்கு ஏற்பட்ட துன்பங்களோ அவருக்குத் தாழ்மையைக் கற்றுக்கொடுக்க அனுமதிக்கப்பட்டது.
ஆபிரகாம்: இவருடைய விஷயத்தில் முற்றிலும் மாறுபட்ட நோக்கத்திற்காகத் துன்பங்கள் அனுமதிக்கப்படுவதை நாம் காண்கிறோம். அவருக்கு நேரிட்ட சோதனைகளும் துன்பங்களும் அவரது பாவங்களின் விளைவாகவோ அல்லது அவரது தனிப்பட்ட குறைகளைத் திருத்தவோ அனுமதிக்கப்படவில்லை. மாறாக, அவரது ஆவிக்குரிய வளர்ச்சிக்காக அனுமதிக்கப்பட்டது. ஆபிரகாம் பலவழிகளில் அதிகம் சோதிக்கப்பட்டார்; அவருடைய விசுவாசத்தில் பலப்படவும், அவரில் பொறுமை பூரண கிரியை செய்யவும் வேண்டும் என்பதற்காகவே! இவ்வுலக ஆசையில் இருந்து விடுபட்டவனாக ஆபிரகாம் இருக்கும்படியாகவும், தேவனுடன் உள்ள உறவை அவர் நெருக்கமாக அனுபவிக்க வேண்டும் என்பதற்காகவும் தேவன் அவரைப் பிரித்தெடுத்து, தம்முடைய சிநேகிதனாக்கிக் கொண்டார் (யாக்கோபு 2:23).
பவுல்: “அன்றியும், எனக்கு வெளிப்படுத்தப்பட்டவைகளுக்குரிய மேன்மையினிமித்தம் நான் என்னை உயர்த்தாதபடிக்கு, என் மாம்சத்திலே ஒரு முள் கொடுக்கப்பட்டிருக்கிறது; என்னை நான் உயர்த்தாதபடிக்கு, அது என்னைக் குட்டும் சாத்தானுடைய தூதனாயிருக்கிறது” (2 கொரிந்தியர் 12:7). இந்த “முள்" சோதனைக்காகவோ, பாவத்திற்காகவோ அனுப்பப்படாமல், பெருமை வராமல் தடுக்கும் முகமாகக் கொடுக்கப்பட்டது. இந்த வசனத்தில் “உயர்த்தாதபடிக்கு” என்ற வார்த்தை இரண்டு முறை பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த “முள்ளை" அனுப்பியதன் விளைவாக, பிரியமான அப்போஸ்தலன் தனது பலவீனங்களைப் பற்றிய அதிகமான உணர்வை உடையவராய் இருந்தார். எனவே, நம்முடைய சுயத்தை வெறுமையாக்கி, நம்முடைய மேன்மை ஒன்றுமில்லை என்பதை உணரவே துன்பங்கள் அனுப்பப்படுகின்றன.
மேற்கண்ட சிட்சைகள் வித்தியாசமான நோக்கங்களுக்காக, அதாவது அவை ஒழுக்கத்திற்காகவும், சீர்திருத்துதலுக்காகவும், கற்றுக்கொள்வதற்காகவும், நமது தற்காப்பிற்காகவும் தரப்படுவதை நாம் விளங்குவது அவசியம். நாம் துன்பத்திற்கான காரணத்தைக் கண்டறிவதிலும், பிறருடைய துன்பங்களைக் குறித்துத் தீர்ப்பிடுவதிலும் எத்துணை பலவீனராகவும், மதிகேடராகவும் செயல்பட்டு விடுகிறோம் பாருங்கள்! நம்முடைய சக கிறிஸ்தவன் தெய்வீகப் பிரம்பின் கீழ் இருக்கும்போது, அவர் அவருடைய பாவங்களுக்காகவே தண்டிக்கப்படுகிறார் என்று தவறாக முடிவு கட்டாதிருப்போமாக.
“அன்றியும்: என் மகனே, கர்த்தருடைய சிட்சையை அற்பமாக எண்ணாதே, அவரால் கடிந்துகொள்ளப்படும்போது சோர்ந்துபோகாதே” (எபிரெயர் 12:5).
தேவனுடைய சிட்சை எல்லாருக்கும் இனிமையானதாகத் தோன்றுவதில்லை. அதனால் சிலர் கடினப்படுகிறார்கள்; மற்றவர்கள் அதன் கீழ் நொறுக்கப்படுகிறார்கள். துன்பங்களை நாம் எதிர்கொள்ளும் மனப்பான்மையைப் பொறுத்தே அதன் விளைவு செயல்படுகிறது. சோதனைகளிலும் துன்பங்களிலும் உள்ளார்ந்த நன்மை எதுவும் இல்லை. அவைகள் தேவனால் ஆசீர்வதிக்கப்படுவதால் மட்டுமே நாம் பயனடைய முடிகிறது. எபிரெயர் 12:11 தெளிவுபடுத்துவது போல், “எந்தச் சிட்சையும் தற்காலத்தில் சந்தோஷமாய்க் காணாமல் துக்கமாய்க் காணும். ஆகிலும் பிற்காலத்தில் அதில் பழகினவர்களுக்கு அது நீதியாகிய சமாதான பலனைத் தரும்.” நமக்குத் தேவையானது மென்மையான மனசாட்சியும் மென்மையான இதயமும் மட்டுமே.
இந்த வேதப்பகுதியில் ஒரு கிறிஸ்தவன் இரண்டு ஆபத்துகளைக் குறித்து எச்சரிக்கப்படுகிறான். இந்த இரண்டு ஆபத்தான மனோபாவங்கள் குறித்து மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அவைகள் “அற்பமாக எண்ணாதே" மற்றும் “சோர்ந்துபோகாதே" என்பதே. இந்த இரண்டு உச்சங்களையும் தவிர்த்து சமநிலையோடு இருக்க வேண்டியது அவசியம். வேதத்தில் உள்ள ஒவ்வொரு சத்தியமும் தன்னைச் சமநிலைப்படுத்தும் வெவ்வேறு பக்கங்களைக் கொண்டிருப்பது போல, ஒவ்வொரு தீமைக்கும் எதிர்வினையும் இருக்கிறது. ஒருபுறம், சிட்சையின் பிரம்பை இழிவுபடுத்தும் அகந்தையுள்ள இதயத்தால் தன்னைத் தாழ்த்திக் கொள்ள விருப்பமில்லாத மனநிலை. மறுபக்கம், முற்றிலும் மூழ்கடிக்கச் செய்கிற சோர்வுக்குள்ளாக்கி விரக்தியடையச் செய்யும் மனநிலை. “நீதியின் பாதை இரண்டு ஆபத்தான மலைகளுக்கு இடையே உள்ள ஒரு குறுகிய பாதை, இந்த குறுகிய பள்ளத்தாக்கு வழியாக நடந்து அதன் இலக்கை அடைவதே கிறிஸ்தவ வாழ்வின் இரகசியம்” என்கிறார் சார்லஸ் ஸ்பர்ஜன்.
பிரம்பை இகழ்வது: கிறிஸ்தவர்கள் பல வழிகளில் தேவனுடைய சிட்சையை “வெறுக்கிறார்கள்". அவைகளில் நான்கை நாம் குறிப்பிடுவோம்:
அ) அக்கறையின்மை: அக்கறையின்மை என்பது மானுஷீக ஞானத்தின் கொள்கை – மோசமான வேலையைச் சிறப்பாக்க முயலும் தன்மை. உலக மனிதன் தன் சுயபெலத்தைச் சார்ந்து துணிச்சலுடன் முன்னேற விரும்புகிறான். அவன் தெய்வீகத் தேற்றரவாளர், ஆலோசனைக் கர்த்தர் மற்றும் பரம வைத்தியனாகிய கர்த்தருடைய உதவியின்றி, தனக்கு இருக்கும் அற்பமான வளங்களையே சார்ந்திருக்க வேண்டியுள்ளது. தேவனுடைய பிள்ளைகளும் சாத்தானின் பிள்ளைகள் போல் நடந்துகொள்வது சொல்ல முடியாத வருத்தத்தைத் தருகிறது. பாதகமான சூழ்நிலைகளில் விலகிச் செல்லும் ஒரு கிறிஸ்தவன் தேவனுடைய கண்டிப்பை வெறுக்கிறவனாக இருக்கிறான். இருதயத்தைக் கடினப்படுத்துவதை விட, நொறுங்குண்ட நருங்குண்ட இருதயத்தை உடையவனாக இருப்பது மேன்மை.
ஆ) புகார் செய்வதன் மூலம்: எபிரேயர்கள் வனாந்தரத்தில் செய்தது இதுதான். இன்றும் இவ்வாறு செய்பவர்கள் விசுவாச சமூகத்தில் பலர் இருக்கிறார்கள். நம்மில் சிலருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டால் நம்முடைய நண்பர்கள் கூட நெருங்கி வருவதைத் தவிர்க்கும் அளவிற்கு அவர்களுக்குப் பாரமாக மாறிவிடுகிறோம். சில நாட்களாக உடல்நலக் குறைவு ஏற்பட்டதும், நுகத்திற்குப் பழக்கப்படாத காளையைப் போல முணுமுணுக்கிறோம். நம்மை விட குறைவான பாரத்தைச் சுமப்பவர்களைப் பொறாமையுடன் பார்த்து விரக்தியடைகிறோம். "இவையெல்லாம் அனுபவிக்க நான் என்ன பாவம் செய்தேன்?" என்பதான கேள்வியைக் கேட்போம். வாசகரே! எச்சரிக்கை! முறுமுறுப்பவர்களுக்கு ஐயோ! முதல்முறை நாம் நம்மைத் தாழ்த்திக் கொள்ளாவிட்டால், இரண்டாவது முறை தேவன் நம்மைக் கண்டித்து ஒழுங்குபடுத்துவார். பொன்னில் இன்னும் எவ்வளவு அழுக்கு உள்ளது என்பதை உனக்கு நீயே நினைவூட்டிக்கொள். உன் இருதயத்தின் அக்கிரமத்தைக் கண்டு, தேவன் உன்னை இரட்டிப்பாகத் தண்டிக்காமல் போனதைக் குறித்து ஆச்சரியப்படு. “என் மகனே, கர்த்தருடைய சிட்சையை அற்பமாக எண்ணாதே, அவரால் கடிந்துகொள்ளப்படும்போது சோர்ந்துபோகாதே.”
இ) விமர்சனங்களின் மூலம்: நாம் அடிக்கடி கடிந்துகொள்ளுதலின் பலனைக் கேள்வி கேட்கிறோம். நாம் கிறிஸ்தவர்களாக இருப்பதால், இரட்சிக்கப்படாத காலத்தில் இருந்ததைவிட இப்போது அதிக ஞானமுடன் செயல்படும் திறன் நமக்கு இருப்பதாக எண்ணுகிறோம். சிறு குழந்தைகளாக இருந்தபோது வீட்டில் பிரம்பு தேவையில்லாத ஒன்றாக நினைத்தோம்; தேவனுடைய பிள்ளைகள் அடிக்கடி இப்படித்தான் நினைக்கிறார்கள். எல்லாம் அனுகூலமாக நடக்கும்போது, எதிர்பாராத சில ஆசீர்வாதங்கள் நம்மீது பொழியும் போது, அவற்றைத் தேவனுடைய கருணை என்று சொல்வதில் நமக்குச் சிரமம் இல்லை. ஆனால், நம்முடைய எண்ணங்கள் முறியடிக்கப்படும்போதோ அல்லது நஷ்டத்தைச் சந்திக்க நேரிடும்போதோ, நம் சிந்தனை முற்றிலும் மாறுபடுகிறது. ஆனால், “ஒளியைப் படைத்து, இருளையும் உண்டாக்கினேன், சமாதானத்தைப் படைத்துத் தீங்கையும் உண்டாக்குகிறவர் நானே. கர்த்தராகிய நானே இவைகளையெல்லாம் செய்கிறவர்” (ஏசாயா 45:7) என்று எழுதப்படவில்லையா?
படைப்பாளியிடம் “என்னை ஏன் இப்படிப் படைத்தாய்?" என்று எத்தனை முறை படைப்பு கேள்வி கேட்கிறது? "இது என் ஆத்துமாவுக்குப் பயனுள்ளதாக இருக்கும் என்று பார்க்க முடியவில்லையே" என்று நாம் கேட்கிறோம். "ஒருவேளை நான் நல்ல ஆரோக்கியத்துடன் இருந்திருந்தால், நான் அடிக்கடி ஜெப ஆலயத்திற்குச் சென்றிருப்பேன்; வியாபாரத்தில் நஷ்டம் ஏற்படாமல் இருந்தால், தேவனுடைய ஊழியத்திற்குக் கொடுக்கும்படி அதிக பணம் இருந்திருக்கும்! இந்த இக்கட்டினால் எனக்கு என்ன நன்மை நடக்கப்போகிறது?" என்கிறோம். யாக்கோபைப் போல அனைத்தும் நமக்கு விரோதமாய் இருக்கிறது என்று எண்ணிக் கலங்குகிறோம் (ஆதியாகமம் 42:36). இது தேவனுடைய சிட்சையை அலட்சியப்படுத்துவதே அல்லாமல் வேறில்லை. உன்னுடைய அறியாமை தேவனுக்குச் சவால் விடலாமா? உன்னுடைய குறுகிய பார்வையால் தேவனுடைய அனந்த ஞானத்தைக் கேள்வி கேட்கலாமா?
ஈ) கவனக்குறைவு மூலம்: பலர் தங்களுடைய வழிகளைச் சரிசெய்துகொள்ள விரும்புவதில்லை. நமது வேதப்பகுதி தரும் எச்சரிக்கை நம் அனைவருக்கும் தேவை. தேவனுடைய சிட்சையை இகழ்வோர் பலர் உள்ளனர். அதனால் அவர்களுக்கு எந்தப் பலனும் கிடைக்கவில்லை. எத்தனையோ கிறிஸ்தவர்கள் தேவனால் திருத்தப்பட்டாலும் அது வீணாகி விடுகிறது. நோய்கள், தீமைகள் மற்றும் இழப்புகள் பல நேர்ந்தாலும் ஜெபத்தோடு சுயபரிசோதனை செய்ய அவர்கள் முன்வருவதில்லை. சகோதரியே, சகோதரனே, கவனமாய் இருங்கள்! தேவன் உங்களைக் கடிந்துகொண்டால், “உங்கள் வழிகளைச் சிந்தித்துப் பாருங்கள்" (ஆகாய் 1:5), “உங்கள் கால்நடையைச் சீர்தூக்கிப்பாருங்கள்" (நீதிமொழிகள் 4:26). தேவன் கடிந்துகொள்வதற்குத் தக்க காரணம் உள்ளது என்பதை அறிந்துகொள்ளுங்கள். பல கிறிஸ்தவர்கள் தாங்கள் கண்டிக்கப்படுவதற்கான காரணத்தைக் கவனமாக ஆராய்ந்திருந்தால், தங்கள் துன்பங்களின் தீவிரத்தில் பாதியளவைத் தவிர்த்திருப்பார்கள்.
சோர்ந்துபோவது: தேவனுடைய சிட்சையை வெறுக்க வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்ட பிறகு, அவருடைய கடிந்துகொள்ளுதலைக் குறித்து விரக்தியடைய வேண்டாம் என்று நாம் இப்போது புத்திமதி பெறுகிறோம். குறைந்தபட்சம் மூன்று வழிகளில் தேவனுடைய கடிந்துகொள்ளுதலால் கிறிஸ்தவன் சோர்வடைகிறான்:
அ) தன் எல்லா முயற்சிகளையும் கைவிடும்போது: விரக்தியில் மூழ்கும்போது இது நடக்கிறது. இது தன்னால் தாங்கிக்கொள்ள முடியாதது என்று அதில் சிக்கியவர் அடிக்கடி உணர்கிறார். அவர் இருதயம் கலங்குகிறது; இருள் அவரைச் சூழ்ந்துகொள்கிறது. எதிர்பார்ப்பின் சூரியன் மறையும்போது, நன்றிக் குரல் மௌனமாகிறது. 'மனச்சோர்வு' என்பது நம் கடமையைச் செய்ய நம்மைச் சக்தியற்றவர்களாக ஆக்குவதற்குச் சமமாகும். ஒரு நபர் மயங்கிவிட்டால் அசைவற்று இருப்பார். எத்தனை கிறிஸ்தவர்கள் தங்கள் வாழ்வில் போராட்டம் வரும்போது மனச்சோர்வடைந்து தங்கள் போராட்டத்தை முற்றிலுமாகக் கைவிடுகிறார்கள்? துன்பப்படும்போது தேவனுடைய கரம் என் மீது பாரமாக இருக்கிறது, அதை எதிர்கொள்ள என்னால் எதுவும் செய்ய முடியாது என்று எத்தனை பேர் உணர்கிறார்கள்? பிரியமானவர்களே, நம்பிக்கையில்லாத மற்றவர்களைப் போலத் துக்கப்படாதிருங்கள் (1 தெசலோனிக்கேயர் 4:13). “அவரால் கடிந்துகொள்ளப்படும்போது சோர்ந்துபோகாதே" (எபிரெயர் 12:5). தேவனிடம் அதை எடுத்துச் செல்லுங்கள்; அவருடைய கரத்தை அதில் காண முயலுங்கள். உங்கள் துன்பங்களும்கூட உங்கள் நன்மைக்காகவே நிகழ்வதன் ஒரு பகுதிதான் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
ஆ) அவருடைய புத்திரத்துவத்தைக் கேள்விக்குட்படுத்தும்போது: தேவனுடைய பிரம்பு தங்கள் மீது வரும்போது, தாங்கள் தேவனுடைய பிள்ளைகள் அல்ல என்று முடிவுக்கு வருபவர்கள் கிறிஸ்தவர்களிடையே அதிகம் உள்ளனர். “நீதிமானுக்கு வரும் துன்பங்கள் அநேகமாயிருக்கும், கர்த்தர் அவைகளெல்லாவற்றிலும் நின்று அவனை விடுவிப்பார்" (சங்கீதம் 34:19), “நாம் அநேக உபத்திரவங்களின் வழியாய்த் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கவேண்டும்" (அப்போஸ்தலர் 14:22) என்று எழுதப்பட்டிருப்பதை அவர்கள் மறந்துவிடுகிறார்கள். "நான் தேவனுடைய பிள்ளை என்றால் எனக்கு ஏழ்மையும், துன்பங்களும் ஏன் வரவேண்டும்?" என்று ஒருவர் கேட்கலாம். எபிரெயர் 12:8 சொல்வதைக் கவனியுங்கள்: “எல்லாருக்கும் கிடைக்கும் சிட்சை உங்களுக்குக் கிடையாதிருந்தால் நீங்கள் புத்திரராயிராமல் வேசிப்பிள்ளைகளாயிருப்பீர்களே.” ஆகவே பரீட்சைகள் உங்களைச் சுத்தப்படுத்தி, தேவையற்றவைகளைக் களைந்து, தூய்மையாக்கும் தேவனுடைய அன்பின் அச்சாரமாகப் பார்க்கக் கற்றுக்கொள்ளுங்கள். ஒரு குடும்பத்தின் தந்தை தனது வீட்டிற்கு வெளியே உள்ளவர்களைப் பற்றி அதிகம் கவலைகொள்வதில்லை; மாறாக வீட்டில் உள்ளவர்களைக் காப்பாற்றுவதிலும், நடத்துவதிலும், பராமரிப்பதிலும், அவர்கள் தன் விருப்பத்தின்படி சரியாக வாழ்வதை உறுதிசெய்வதிலுமே அக்கறையாக இருக்கிறார். தேவனும் அவ்வாறே கிரியை செய்கிறார்.
இ) ஏமாற்றமடையும்போது: சிலர் தங்கள் துன்பங்களிலிருந்து ஒருபோதும் வெளியே வர முடியாது என்று நினைக்கிறார்கள். "நான் எவ்வளவுதான் ஜெபித்தாலும் எனக்கு நேரிடும் துன்பங்கள் என் வாழ்வில் இருந்து மறையவில்லை" என்று சொல்கிறார்கள். விடியலுக்கு முன் அதிக இருளின் நேரம் இருக்கும் என்பதை அறிந்து நாம் ஆறுதல் அடைய வேண்டும். எனவே, தேவனுடைய கடிந்துகொள்ளுதலில் சோர்ந்துபோகாதீர்கள். வேறு சிலர், "அவருடைய வாக்கைப் பற்றிக்கொண்டு கெஞ்சினேன், ஆனாலும் இன்னும் என் நிலை சரியாகவில்லை. தம்மை நோக்கிப் பார்க்கிறவர்களை அவர் விடுவிப்பார் என்று எண்ணினேன்; ஆனால் நான் அழைத்தும் அவர் பதில் தரவில்லை. இனி எனக்குப் பதிலே கிடைக்காது என்று பயப்படுகிறேன்" என்கிறார்கள். தேவனுடைய பிள்ளையே, உன் பிதாவைக் குறித்து இப்படிப் பேசுவதா! "தேவன் இவ்வளவு காலமாக என்னைத் தண்டித்துள்ளார், எனவே அவர் என்னைத் தண்டிப்பதை நிறுத்தமாட்டார்" என்கிறீர்கள். ஆனால், "தேவன் என்னை நீண்ட காலம் கண்டிப்பதன் காரணம், நான் சீக்கிரத்தில் பரிபூரண விடுதலையடைய வேண்டும் என்பதற்காகத்தான்" என்று நீங்கள் சொல்ல வேண்டும்.
அலட்சியம் வேண்டாம்; சோர்வும் வேண்டாம். தேவனுடைய கிருபை இந்த இரண்டு எதிர்த்துருவங்களில் இருந்தும் எழுத்தாளரையும், வாசகர்களையும் பாதுகாப்பாராக!
“கர்த்தருடைய ஜனமே அவருடைய பங்கு; யாக்கோபு அவருடைய சுதந்தரவீதம்.” (உபாகமம் 32:9).
இந்த வசனம் மிகவும் ஆச்சரியமான சத்தியத்தை நம் முன் வைக்கிறது. அது எவ்வளவு ஆச்சரியமானது என்றால், இது எந்தவொரு மனித சிந்தனையிலிருந்தும் தோன்றாததாக இருக்கிறது. சர்வவல்லமையுள்ள தேவனுக்கு ஒரு சந்ததி உள்ளது என்றும், அந்தச் சந்ததி அவருடைய மக்கள் என்றும் இந்த வசனம் நமக்குத் தெரியப்படுத்துகிறது. அவர் இந்த உலகத்தைத் தமது சுதந்தரமாக்கிக்கொள்ள மறுத்துவிட்டார் - அது ஒருநாளில் எரிந்து சாம்பலாகும். தேவதூதர்களின் கூட்டங்களைக் கொண்ட பரலோகம் கூட அவரது இதயத்தைத் திருப்திப்படுத்தவில்லை. நித்தியத்தில் கர்த்தராகிய தேவன் எதிர்பார்ப்புடன் பேசிய வார்த்தைகள், “மனுப்புத்திரருடனே மகிழ்ந்துகொண்டிருந்தேன்” என்பதே (நீதிமொழிகள் 8:31).
அவருடைய பரிசுத்தவான்கள் அவருடைய சுதந்தரம் என்று இந்த ஒரு வசனம் மட்டும் சொல்லவில்லை. “கர்த்தர் யாக்கோபைத் தமக்காகவும், இஸ்ரவேலைத் தமக்குச் சொந்தமாகவும் தெரிந்துகொண்டார்” (சங்கீதம் 135:4) என்பதாக சங்கீதத்தில் வாசிக்கிறோம். தேவனாகிய கர்த்தர் தமக்காக யாக்கோபைத் தேர்ந்தெடுத்தார். அவர் இஸ்ரவேலைத் தமது சொந்தப் பொக்கிஷமாக நிறுவினார். மல்கியா 3:17-ல் அவர்களைத் தம்முடைய சம்பத்து என்று அழைக்கிறார். அவர்கள் தேவனுக்கு மிகவும் சிறப்பு வாய்ந்தவர்கள் என்பதால் அவருடைய உன்னதமான அன்பு அவர்களுக்கு அருளப்படுவதுடன், அவர்களுக்காகப் பரலோகத்தில் தங்குமிடங்கள் கூடத் தயாராகி வருகின்றன!
இந்த அற்புதமான சத்தியம் புதிய ஏற்பாட்டிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. எபேசியர் 1:18-ஐப் பார்க்கவும். “தாம் நம்மை அழைத்ததினாலே நமக்கு உண்டாயிருக்கிற நம்பிக்கை இன்னதென்றும், பரிசுத்தவான்களிடத்தில் தமக்கு உண்டாயிருக்கிற சுதந்தரத்தினுடைய மகிமையின் ஐசுவரியம் இன்னதென்றும்; தாம் கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பி, அவரிடத்தில் நடப்பித்த தமது பலத்த சத்துவத்தின் வல்லமைப்படியே விசுவாசிக்கிறவர்களாகிய நம்மிடத்திலே காண்பிக்கும் தம்முடைய வல்லமையின் மகா மேன்மையான மகத்துவம் இன்னதென்றும், நீங்கள் அறியும்படிக்கு, அவர் உங்களுக்குப் பிரகாசமுள்ள மனக்கண்களைக் கொடுக்கவேண்டுமென்றும் வேண்டிக்கொள்ளுகிறேன்” என்று அவர்களுக்காக வேண்டுவதை அப்போஸ்தலன் அறிவிக்கிறார். பரிசுத்தவான்கள் தேவனிடம் சுதந்தரம் பெறுவது மட்டுமல்லாமல், அவர்களுக்கான அந்தச் சுதந்தரத்தை அவரே உருவாக்கிப் பாதுகாக்கிறார். இது என்ன ஒரு ஆச்சரியமான வார்த்தை! அவர் எவ்வளவு மகத்தான தேவனாக இருந்தும், நம்முடைய விசுவாசம், அன்பு மற்றும் ஆராதனையின் மூலம் தம்மை மேலும் செல்வந்தராகக் கருதுவதற்குத் தேர்ந்தெடுக்கிறார். இது என்ன ஒரு அற்புதமான சிந்தனை! வேதத்தில் வெளிப்படுத்தப்பட்ட மிக அற்புதமான சத்தியங்களில் ஒன்று, ஒன்றுக்கும் வழியில்லாத பாவிகளைத் தெரிந்தெடுத்து அவர்களைத் தமக்குச் சுதந்தரமாக்குகிறார் நம் தேவன்!
ஆனால், தேவனுக்கு நம்மிடம் என்ன தேவை இருக்கிறது? நாம் எவ்விதமாக அவரைச் செல்வந்தராக்க முடியும்? ஞானம், வல்லமை, கிருபை, மகத்துவம் இவை அனைத்தும் தேவனிடம் இருக்கிறது அல்லவா? ஆம், அது உண்மைதான். ஆனால், அவருக்குத் தேவையான வேறு ஒன்று இருக்கிறது. அது, அவர் விரும்பும் பாத்திரங்கள். அதாவது, சூரியன் பிரகாசிக்கப் பூமி தேவைப்படுவது போல, தேவனுக்கும் நிரப்பப்படப் பாத்திரங்கள் தேவை. அவருடைய மகிமையைப் பிரதிபலிக்கும் பாத்திரங்கள், அவருடைய கிருபையின் ஐசுவரியத்தை ஊற்றக்கூடிய பாத்திரங்கள் அவருக்குத் தேவை.
தேவனுடைய மக்கள் அவருடைய “பங்கு”, அவருடைய சிறப்பு “சொந்தப் பொக்கிஷம்”, அவருடைய “சொத்து” என்று அழைக்கப்படுவதைக் கவனியுங்கள். இது மூன்று காரியங்களைக் குறிக்கிறது. முதலாவதாக, சுதந்தரமானது மரணத்தின் வழியாகக் கிடைக்கிறது. அதுபோல தேவனுடைய சுதந்தரம் அவருடைய ஒரேபேறான குமாரனின் மரணத்தின் மூலம் நமக்குக் கிடைக்கிறது. இரண்டாவதாக, சுதந்தரம் ஒரு நபருக்கும் அவருடைய வாரிசுகளுக்கும் நிரந்தரமாகக் கிடைக்கிறது. மூன்றாவதாக, சுதந்தரம் ஒரு தனிநபருக்குச் சொந்தமானத
தேவன் தமக்கு ஒரு சுதந்தரம் வேண்டும் என
தேவன் தம்முடைய சொந்த மக்களைக் கிரயத்திற்கு வாங்கினார்: “அவருக்குச் சொந்தமானவர்கள் அவருடைய மகிமைக்குப் புகழ்ச்சியாக மீட்கப்படுவார்கள் என்பதற்கு ஆவியானவர் நம்முடைய சுதந்தரத்தின் அச்சாரமாயிருக்கிறார்” (எபேசியர் 1:14). அதேபோல, “தேவன் தம்முடைய சுயரத்தத்தினாலே சம்பாதித்துக்கொண்ட தமது சபை” என்று (அப்போஸ்தலர் 20:28) வாசிக்கிறோம். தேவன் தம்முடைய மக்களை மரணம் மற்றும் அடிமைத்தனம் ஆகியவற்றிலிருந்து விடுவிக்க மட்டுமல்ல, அவர்கள் தம்முடையவர்களாக இருப்பதற்காகவும் இரட்சித்தார்.
தேவன் தம்முடைய சுதந்தரத்தின் மத்தியில் வந்து வாசம் பண்ணுகிறார்: “கர்த்தர் தம்முடைய ஜனத்தை நெகிழவிடாமலும், தம்முடைய சுதந்தரத்தைக் கைவிடாமலும் இருப்பார்” (சங்கீதம் 94:14). தேவனுடைய சுதந்தரம் இஸ்ரவேலர்களுக்கு மட்டுமல்ல என்பதற்கு உறுதியான ஆதாரம் என்னவென்றால், அன்று விடுவிக்கப்பட்ட இஸ்ரவேலர்களிடையே அவர் வாசம் செய்தது போல, இன்றும் திருச்சபையின் மத்தியில் பரிசுத்த ஆவியானவர் ஒவ்வொரு விசுவாசியிலும் தனித்தனியாக வாசம் செய்கிறார். “நீங்கள் தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களென்றும், தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருக்கிறாரென்றும் அறியாதிருக்கிறீர்களா?” (1 கொரிந்தியர் 3:16). “உங்கள் சரீரமானது நீங்கள் தேவனாலே பெற்றும் உங்களில் தங்கியும் இருக்கிற பரிசுத்த ஆவியினுடைய ஆலயமாயிருக்கிறதென்றும், நீங்கள் உங்களுடையவர்களல்லவென்றும் அறியீர்களா?” (1 கொரிந்தியர் 6:19).
தேவன் தம் சுதந்தரத்தை அழகுபடுத்துகிறார்: ஒரு மனிதன் தன்னுடைய வீட்டையோ, சொத்தையோ வாங்கி, அதைத் தனக்குச் சொந்தமாக்கிக் கொண்டு, அதை மேம்படுத்தி அழகுபடுத்துவது போல, தேவனும் தம் மக்களைத் தமக்குத் தகுதியானவர்களாக வடிவமைக்க அவர்களில் செயல்படுகிறார். “உங்களில் நற்கிரியையைத் தொடங்கினவர் அதை இயேசு கிறிஸ்துவின் நாள்பரியந்தம் முடிய நடத்திவருவாரென்று நம்பி” (பிலிப்பியர் 1:6), இப்போது தேவன் நம்மைத் தம்முடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் சாயலாக மாற்றும் செயலில் உள்ளார். கிறிஸ்துவைப் பெற்றுக்கொண்ட ஒவ்வொரு நபரும் சங்கீதக்காரனுடன் இவ்விதமாகச் சொல்லலாம்: “கர்த்தர் எனக்காக யாவையும் செய்து முடிப்பார்” (சங்கீதம் 138:8). நாம் மகிமையடையும் வரையிலும் தேவன் திருப்தியடையமாட்டார். “அவர் எல்லாவற்றையும் தமக்குக் கீழ்ப்படுத்திக்கொள்ளத்தக்க தம்முடைய வல்லமையான செயலின்படியே, நம்முடைய அற்பமான சரீரத்தைத் தம்முடைய மகிமையான சரீரத்திற்கு ஒப்பாக மறுரூபப்படுத்துவார்” (பிலிப்பியர் 3:21). “அவர் வெளிப்படும்போது அவர் இருக்கிறவண்ணமாகவே நாம் அவரைத் தரிசிப்பதினால், அவருக்கு ஒப்பாயிருப்போமென்று அறிந்திருக்கிறோம்” (1 யோவான் 3:2).
எதிர்காலம் என்ன? தேவன் தவறாமல் தம்முடைய உடைமையைச் சொந்தமாக்கி, அதில் வாசம் செய்து, அதில் ஆனந்தப்பட்டு மகிழ்கிறார். வரவிருக்கும் நித்தியத்தில், “தாம் மகிமைக்காக எத்தனமாக்கின கிருபாபாத்திரங்கள்மேல் தம்முடைய மகிமையின் ஐசுவரியத்தைத் தெரியப்படுத்தவும் சித்தமாய்” இருக்கிறார் (ரோமர் 9:23). தேவன் என்றென்றும் வாசமாயிருக்கும் மகிமையான சுதந்தரம் அவருடைய மக்களிடமிருந்து வருகிறது. எபேசியர் 2-ம் அதிகாரத்தின் முடிவில் வரும் இந்த அறிக்கை எவ்வளவு ஆச்சரியமாக இருக்கிறது: “அவர்மேல் மாளிகை முழுவதும் இசைவாய் இணைக்கப்பட்டு, கர்த்தருக்குள் பரிசுத்த ஆலயமாக எழும்புகிறது. அவர்மேல் நீங்களும் ஆவியினாலே தேவனுடைய வாசஸ்தலமாகக் கூட்டிக் கட்டப்பட்டு வருகிறீர்கள்” (எபேசியர் 2:21-22).
வெளிப்படுத்துதல் 21-ம் அதிகாரத்தில் நமக்கு முன் இருக்கும் பரலோகத்தின் காட்சி அற்புதமானது மற்றும் மகிமை வாய்ந்தது. “பின்பு, நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும் கண்டேன்; முந்தின வானமும் முந்தின பூமியும் ஒழிந்துபோயின; சமுத்திரமும் இல்லாமற்போயிற்று. யோவானாகிய நான், புதிய எருசலேமாகிய பரிசுத்த நகரத்தைத் தேவனிடத்தினின்று பரலோகத்தைவிட்டு இறங்கி வரக்கண்டேன்; அது தன் புருஷனுக்காக அலங்கரிக்கப்பட்ட மணவாட்டியைப் போல ஆயத்தமாக்கப்பட்டிருந்தது. மேலும், பரலோகத்திலிருந்து உண்டான ஒரு பெருஞ்சத்தத்தைக் கேட்டேன்; அது: இதோ, மனுஷர்களிடத்திலே தேவனுடைய வாசஸ்தலமிருக்கிறது, அவர்களிடத்திலே அவர் வாசமாயிருப்பார்; அவர்களும் அவருடைய ஜனங்களாயிருப்பார்கள், தேவன்தாமே அவர்களோடேகூட இருந்து அவர்களுடைய தேவனாயிருப்பார்” (வெளிப்படுத்தல் 21:1-3).
செப்பனியா 3:17-ல் உள்ள இந்த வார்த்தை ஆச்சரியமாக இருக்கிறது: “உன் தேவனாகிய கர்த்தர் உன் நடுவில் இருக்கிறார்; அவர் வல்லமையுள்ளவர், அவர் இரட்சிப்பார்; அவர் உன்பேரில் சந்தோஷமாய் மகிழ்ந்து, தம்முடைய அன்பினிமித்தம் அமர்ந்திருப்பார்; அவர் உன்பேரில் கெம்பீரமாய்க் களிகூருவார்”. “நான் திருப்தியாக இருக்கிறேன். இங்கே நான் என்றென்றும் வாழ்வேன், என் சந்ததியோடு நான் என்றென்றும் வாசம் செய்வேன். நான் இரட்சித்து மீட்டுக்கொண்ட பாவிகளின் மேல் என் மகிமையை ஊற்றுவேன்” என்று மாபெரும் தேவன் அறிவிக்கிறார். எனவே, சங்கீதக்காரனுடன் நாமும் இணைந்து, “இந்த அறிவு எனக்கு அருமையானது, இது எனக்கு எட்டாத உயரமாயிருக்கிறது” என்று பாடலாம் (சங்கீதம் 139:6).
தேவனுடைய கிருபை, நாம் பெற்ற அழைப்புக்கு ஏற்ற விதமாக நடக்க நமக்கு உதவி செய்வதாக! ஆமென்.
எங்கள் இணைத்தளத்தில் உள்ள கட்டுரைகள் மற்றும் புத்தகங்களைப் வாசகார்களின் வசதிக்காக, BSI இந்திய வேதாகம சங்கத்தாரால் வெளியிடப்பட்ட O.V. தமிழ் வேதாகமத்தின் வசனங்களை பயன்படுத்தியுள்ளோம்.
© 2026. தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்.